Skip to Content

Chapter 03 மேரிகிங் மீது விக்காமின் கவனம்

எலிசபெத்துடன் தனியாகப் பேசக் கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே திருமதி. கார்டினர் நேரத்தை வீணடிக்காமல் அன்புடன் அவளை எச்சரித்தாள். தான் நினைத்ததை உண்மையாக கூறிய பிறகு, மேலும் தொடர்ந்தாள்:
 
நீ மிகவும் புத்திசாலி லிசி, உன்னை எச்சரிக்கிறேன் என்பதற்காகவே நீ காதல் வலையில் விழமாட்டாய், ஆதலால் நான் உன்னிடம் வெளிப்படையாகப் பேசுவதற்கு பயப்படவில்லை. நீ, உண்மையிலேயே அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். பணமில்லாமல் எழும் காதல் விவேகமற்றது என்பதால் நீ இதில் உன்னை ஈடுபடுத்திக் கொள்ளாதே, அவனையும் ஈடுபடுத்தாதே. அவனுக்கு எதிராக சொல்வதற்கு எனக்கு ஒன்றுமில்லை. அவன் ஒரு சுவாரசியமான மனிதன்தான், அவனுக்கு இருக்க வேண்டிய அளவு சொத்து இருந்திருந்தால் நீ செய்வது சரியாக இருக்கும். ஆனால் இன்று இருக்கும் நிலைமையில்--உன் கற்பனையை வளர்த்துக் கொள்ளாதே. நீ புத்திசாலி, நீ அதன்படி நடந்து கொள்வாய் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். உன்னுடைய தீர்மானங்களிலும் நன்னடத்தையிலும், உனது தகப்பனார் பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கிறார் என எனக்கு நன்றாகத் தெரியும். உன்னுடைய தந்தைக்கு நீ ஏமாற்றம் அளிக்கக் கூடாது.
 
எனதருமை அத்தையே, இது மிகவும் தீவிரமான விஷயமாக இருக்கிறதே.
 
ஆமாம். நீயும் இதுபோல் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன்.
 
மிக்க நன்று, உங்களுக்கு எந்தவித பயமும் வேண்டாம். நான் என்னைப் பார்த்துக் கொள்கிறேன். விக்காமையும் கவனித்துக் கொள்கிறேன். என்னால் தடுக்க முடியும் என்றால், அவன் என்னைக் காதலிக்க முடியாது.
 
எலிசபெத் இப்பொழுது நீ விளையாட்டாகப் பேசுகிறாய்.
 
மன்னிக்கவும். நான் மீண்டும் முயற்சி செய்கிறேன். தற்சமயம் நான் விக்காமை காதலிக்கவில்லை, இல்லை, நிச்சயமாக இல்லை. ஆனால் யாருடனும் ஒப்பிட முடியாத அளவிற்கு நான் பார்த்ததிலேயே அவன் மிகவும் இனிமையானவன் --என்னை அவனுக்கு உண்மையிலேயே பிடித்துவிட்டால்--ஆனால் அப்படி இல்லாமல் இருப்பது நல்லது என நான் நினைக்கிறேன். அதில் ஒரு புத்திசாலித்தனம் இல்லை எனத் தெரிகிறது. ஓ! அந்த வெறுக்கத்தக்க டார்சி!--எனது தந்தை என்மீது கொண்டுள்ள அபிப்பிராயம், எனக்கும் பெருமையாக உள்ளது. அதை இழக்க நான் தயாராக இல்லை. இருந்தாலும் எனது தகப்பனார் விக்காமிடம் பச்சாதாபத்துடன்தான் நடந்து கொள்கிறார். சுருக்கமாகச் சொன்னால், எனதருமை அத்தையே, உங்களில் ஒருவரைகூட எந்தவிதத்திலாவது கஷ்டப்படுத்தினால், நான் அதற்காக மன்னிப்புக் கேட்டு கொள்ள வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினர் ஒருவரை ஒருவர் விரும்பினால், தாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்தால் பணம் ஒரு தடையாக இருப்பதில்லை, இதுதான் இன்று நாம் பார்ப்பது. எனக்கும் இம்மாதிரி ஒரு நிலைமை வந்தால், நான் மட்டும் எப்படி இவர்களைவிட புத்திசாலியாக நடந்து கொள்வேன் என உறுதி கூற முடியும், அல்லது இதனை தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம் என நான் எப்படி தெரிந்து கொள்வது? நான் அவசரப்பட மாட்டேன் என்று மட்டும் சத்தியம் செய்ய முடியும். அவன் என்னை காதலிக்கிறான் என்று நம்புவதிலும் நான் அவசரப்பட மாட்டேன். நான் அவனுடன் இருக்கும் பொழுதும் எனக்கு எந்த ஆசையும் எழாது. நான் என்னால் முடிந்த அளவு முயற்சி செய்கிறேன்.
 
அவன் அடிக்கடி இங்கு வருவதை நீ ஊக்குவிக்காமல் இருந்தால், ஒருவேளை அதுவே போதும். அல்லது அவனை இங்கு அழைப்பதற்கு உன் தாயாரிடம் ஞாபகப்படுத்தாமல் இருந்தால் அதுவே போதும்.
 
நான் அன்று செய்தது போலஎன்று அச்சம்பவம் ஞாபகத்திற்கு வந்ததினால் ஒரு சிரிப்புடன் கூறிய எலிசபெத் உண்மைதான், நான் அவ்வாறு செய்வதைத் தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம். ஆனால் அவன் அடிக்கடி இங்குதான் இருக்கிறான் என நினைத்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்காகத்தான் அவனை இங்கு அடிக்கடி அழைத்தோம். தன்னுடைய நண்பர்களுடன் எப்பொழுதும் யாராவதுகூட இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தாயாரின் எண்ணம். இது உங்களுக்குத் தெரியும். ஆனால் உண்மையாகவே என்மேல் ஆணையிட்டு சொல்கிறேன், எது புத்திசாலித்தனம் என நினைக்கிறேனோ அதை மட்டும் செய்ய முயற்சி எடுக்கிறேன். இப்பொழுது உங்களுக்குத் திருப்தி என நம்புகிறேன்.
 
அவள் அத்தை தன்னுடைய மனதிருப்தியை தெரிவித்தாள். அவளுடைய அன்பான அறிவுரைக்கு எலிசபெத் நன்றி கூறிய பிறகு, இருவரும் பிரிந்தனர். எந்தவிதமான கோபத்தையும் கிளறாமல் அந்த ஒரு விஷயத்திற்காகக் கொடுக்கப்பட்ட அற்புதமான அறிவுரை.
 
கார்டினர் குடும்பத்தினரும், ஜேனும் ஹர்ட்போர்ட்ஷயரை விட்டு கிளம்பியவுடன்காலின்ஸ் அங்கு வந்தான். லூகாஸ் குடும்பத்துடன் தங்கிக் கொண்டதால் திருமதி. பென்னட்டிற்கு எந்தவித அசௌகரியமும் ஏற்படவில்லை. அவனது திருமணம் நெருங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைக்க ஆரம்பித்தாள், சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன் என்று கடுமையாக மீண்டும் மீண்டும் கூறவும் ஆரம்பித்தாள்.வியாழனன்று திருமணம் நடப்பதாக இருந்தது, அதனால் புதனன்று மிஸ். லூகாஸ் அவர்களிடம் விடை பெற வந்தாள். அவள் புறப்பட தயாரான பொழுது, தன்னுடைய தாயாரின் பண்பற்ற, வேண்டா வெறுப்பாக கூறிய வாழ்த்துக்களைக் கண்டு அவமானமடைந்த எலிசபெத், தானும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால் அவள் கூடவே அறையை விட்டு வெளியே வந்தாள். மாடிப்படியில் ஒன்றாக கீழே இறங்கிய பொழுது சார்லெட் உன்னிடமிருந்து தகவல்களை நான் அடிக்கடி எதிர்பார்ப்பேன், எலிசாஎன்று கூறினாள்.
 
கண்டிப்பாக
 
நான் மற்றொரு உதவியும் கேட்கப் போகிறேன். நீ என்னை வந்து பார்ப்பாயா?‘
 
நாம் அடிக்கடி ஹர்ட்போர்ட்ஷயரில் சந்திப்போம் என நம்புகிறேன்.
 
கென்டை விட்டு நான் சிறிது காலத்திற்கு எங்கும் வெளியே செல்ல மாட்டேன். ஆகையால் நீ ஹன்ஸ்போர்டுக்கு வருவாய் என வாக்கு கொடு.
 
அதில் எலிசபெத்திற்கு எந்த சந்தோஷமும் இல்லையென்றாலும், அவளால் மறுக்க முடியவில்லை.
 
எனது தகப்பனாரும், மரியாவும் மார்ச் மாதம் என்னைப் பார்க்க வருவார்கள், நீயும் அவர்களுடன் வர சம்மதிப்பாய் என நினைக்கிறேன். அவர்களை எதிர்பார்ப்பது போலவே நீ வருவதும் எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கும்என்று சார்லெட் கூறினாள்.
 
திருமணம் நடந்தேறியது, மணமக்கள் சர்ச்சிலிருந்து நேராக கென்டிற்குப் புறப்பட்டனர். எப்பொழுதும்போல் எல்லோருக்கும் இதைப்பற்றி பேச, கேட்க நிறைய விஷயங்கள் இருந்தன. எலிசபெத்திற்கு தன்னுடைய தோழியிடமிருந்து விரைவில் கடிதம் வந்தது. அவர்கள் இருவரும் எப்பொழுதும் இருந்ததுபோல் காலந்தாழ்த்தாமல், அடிக்கடி எழுதிக் கொண்டனர். ஆனால் மனம்விட்டு எழுதிக் கொள்ள முடியவில்லை. தங்களிடையே இருந்த நெருக்கம் எல்லாம் முடிந்து விட்டது என்ற நினைப்பு இல்லாமல் எலிசபெத்தால் கடிதம் எழுத முடியவில்லை. ஆனாலும் தற்சமயம் இருக்கும் நட்பை கருதாமல், முன்பு தங்களுக்குள் இருந்த நட்பை கருதி கடிதம் எழுத வேண்டும், கடிதம் எழுதுவதைக் குறைத்துவிட வேண்டாம் என்பதில் தீர்மானமாக இருந்தாள். அவளுடைய புதிய வீட்டைப்பற்றியும், லேடி காதரினை, அவளுக்கு எவ்வாறு பிடித்துள்ளது என்பதைப்பற்றியும், அவள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாள் என்பதைப்பற்றியும் இவையெல்லாவற்றைபற்றியும் தெரிந்துக் கொள்ளும் ஆவலில் சார்லெட்டின் ஆரம்பக் கடிதங்கள் மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் கடிதங்கள் படிக்கப்பட்ட பொழுது, ஒவ்வொரு விஷயத்தைப்பற்றியும் தான் எதிர்பார்த்தது போலவே சார்லெட் எழுதியிருப்பதை உணர்ந்தாள். அவள் கடிதங்கள் சந்தோஷமாக எழுதப்பட்டிருந்தது, சௌகரியமாக இருப்பதை தெரிவித்தது, அவள் புகழாத விஷயங்களே இல்லை. வீடு, மரச்சாமான்கள், அருகில் வசிப்பவர்கள், தெருக்கள் எல்லாம் அவளுடைய ரசனையை ஒத்திருந்தது, லேடி காதரின் மிகவும் அன்பாகவும், உதவிபுரிபவளாகவும் இருந்ததைக் குறிப்பிட்டிருந்தாள். காலின்ஸைப்பற்றியும், ரோஸிங்ஸைப்பற்றியும் மிதமாக எழுதியிருந்தாள், மற்றவைகளைப்பற்றி தான் நேரில் சென்று பார்க்கும்வரை காத்திருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டாள்.
 
லண்டனிற்கு சௌகரியமாகப் போய் சேர்ந்ததைப்பற்றி ஜேன் முன்பே எழுதியிருந்தாள். மறுபடியும் அவள் எழுதும் பொழுது, பிங்கிலி குடும்பத்தினரைப்பற்றி ஏதேனும் அவளால் எழுத முடியும் என எலிசபெத் எதிர்பார்த்தாள்.
 
பொறுமையாக இல்லாமல் இருப்பதற்கு என்ன பலன் கிடைக்குமோ அந்த பலன்தான், இரண்டாவது கடிதத்திற்கு பொறுமையிழந்து காத்து இருந்ததற்கு கிடைத்தது. ஜேன் ஒரு வாரமாக லண்டனில் இருந்தும், கரோலினைப் பார்க்கவுமில்லை, அவளிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை, லாங்பர்னிலிருந்து தான் தன்னுடைய தோழிக்கு எழுதிய கடைசி கடிதம் தவறுதலாகத் தொலைந்து போயிருக்கலாம் என இதற்கு காரணமாகக் கூறினாள்.
 
நாளை லண்டனிலுள்ள அந்தப் பகுதிக்கு அத்தை போகப் போகிறார், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு க்ரோஸ்வெனர் தெருவிலுள்ள அவர்களைச் சந்திக்கச் செல்கிறேன்.
 
அங்கு சென்றுவிட்டு வந்தவுடன், ஜேன் மறுபடியும் ஒரு கடிதம் எழுதினாள். மிஸ். பிங்கிலியை சந்தித்திருக்கிறாள். கரோலின் அவ்வளவு உற்சாகமாக இல்லை என்று நான் நினைக்கிறேன். ஆனால் என்னை சந்தித்ததில் அவளுக்கு மிக்க மகிழ்ச்சி, நான் லண்டனிற்கு வருவதைப்பற்றி ஏன் அவளிடம் சொல்லவில்லை என என்னைக் கடிந்துக் கொண்டாள். என்னுடைய கடைசி கடிதம் அவளுக்குப் போய் சேரவில்லை என நான் நினைத்தது சரி. அவர்களுடைய சகோதரனைப்பற்றி கேட்கத்தான் செய்தேன். அவன் நன்றாக இருக்கிறான். டார்சியுடன் மும்முரமாக இருப்பதால் தாங்களே அவனைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது என்றனர். மிஸ். டார்சி இரவு விருந்துக்கு வரப்போவதை அறிந்தேன். அவளை பார்க்க வேண்டும் என்று ஆசைதான். கரோலினும், திருமதி. ஹர்ஸ்டும் வெளியே போக வேண்டியிருந்ததால் நான் அதிக நேரம் தங்க முடியவில்லை. அவர்களை இங்கு விரைவில் பார்ப்பேன்.
 
கடிதத்தைப் படித்து முடித்தபின், எலிசபெத் தனது மாறுபட்ட கருத்தினால் தலையை அசைத்தாள். தனது சகோதரி லண்டனில் இருப்பதை, எதிர்பாராத ஏதாவது ஒரு சந்தர்ப்பம் மூலம்தான் திரு. பிங்கிலிக்குத் தெரிய வரும் வாய்ப்புள்ளது எனப் புரிந்து கொண்டாள்.
 
நான்கு வாரங்கள் முடிந்தும் ஜேன் அவனைப் பார்க்க முடியவில்லை. அதனால் அவள் வருத்தம் அடையவில்லை என தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள முயற்சி செய்தாலும், மிஸ். பிங்கிலி தன்னைக் கவனிக்காததை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. பதினைந்து நாட்களாக தினம் காலை மிஸ். பிங்கிலியை எதிர்பார்த்துக் காத்திருந்து, அவள் வராததற்கு தினம் மாலை ஒரு காரணத்தைக் கற்பனை செய்து கொண்டு காத்திருந்தாள். இறுதியாக அவள் வந்தாள், ஆனால் மிகக் குறைவான நேரமே அங்கு இருந்ததையும், அவளுடைய நடத்தையில் உள்ள வித்தியாசத்தையும் ஜேன் கவனித்தாள். தன்னை இனியும் ஏமாற்றிக் கொள்ள தயாராக இல்லை. இதைப்பற்றி அவள் தனது சகோதரிக்கு எழுதிய கடிதமும் அதை உறுதி செய்தது.
 
எனதருமை லிசி, மிஸ். பிங்கிலி என்மேல் மிக்க அன்பு வைத்திருக்கிறாள் என்று நினைத்து நான் ஏமாந்து விட்டேன் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய கணிப்பு சரி என்ற நினைப்பில் நீ மகிழ்ச்சி அடைய மாட்டாய் என எனக்குத் தெரியும். எனதருமை சகோதரியே, இச்சம்பவம் நீ நினைத்தது சரி என்று ஊர்ஜிதப்படுத்தினாலும், அவள் நடந்து கொண்ட விதத்தைக் கருத்தில் எடுத்துக் கொண்டாலும், என்னுடைய தன்னம்பிக்கை, உன்னுடைய சந்தேகத்தை போன்று இயல்பாக இன்னமும் இருக்கிறது என்று நான் சொன்னால், என்னை பிடிவாதக்காரி என நினைத்துக் கொள்ளாதே. மிஸ். பிங்கிலி எந்த காரணத்திற்காக என்னிடம் நெருக்கமாகப் பழகினாள் எனப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் மீண்டும் என்மேல் கரிசனம் காட்டினால் நான் மறுபடியும் ஏமாந்து போவேன் என எனக்குத் தெரியும். நான் அவளைப் பார்த்துவிட்டு வந்த பிறகு, பதிலுக்கு நேற்றுவரை அவள் என்னை சந்திக்க வரவில்லை, ஒரு செய்தியும், ஒரு வரிகூட அவளிடமிருந்து எதுவும் எனக்கு கிடைக்கவில்லை. அவள் வந்த பொழுதும், அவளுக்கு அதில் சந்தோஷமே இல்லை எனத் தெளிவாகத் தெரிந்தது. முன்பே வராததற்கு பொதுவாக ஒரு மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். மறுபடியும் பார்க்க விரும்புகிறேன் என்றும் கூறவில்லை, எல்லாவிதத்திலும் வித்தியாசமாக நடந்து கொண்டாள், அவள் கிளம்பிச் சென்ற பிறகு, இந்நட்பை இனியும் தொடர வேண்டாம் எனத் தீர்மானித்தேன். மனத்திற்கு வருத்தமாக இருந்தாலும், அவளைக் குற்றம் சாட்டாமல் இருக்க முடியவில்லை. தனிப்பட்ட முறையில் என்மேல் காட்டிய கரிசனம் அவள் செய்த தவறு. அவளாகவேதான் என்னிடம் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தாள். அவ்வாறு என்னிடம் நடந்து கொள்வது தவறு என அவள் உணர ஆரம்பித்திருப்பாள், இதற்குக் காரணம் தன் சகோதரன்மேல் இருக்கும் அக்கறைதான். ஆதலால் அவளைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. மேலும் நான் புரிய வைக்க வேண்டாம், இந்தக் கவலை தேவையே இல்லாதது என நமக்குத் தெரிந்திருந்தாலும், ஆனாலும் அவள் அப்படி நினைத்தால், அவள் என்னிடம் நடந்து கொண்டதற்கு காரணம் இதுதான் எனத் தெளிவாகிறது. தன் சகோதரிகளிடம் அவன் அதிகம் பாசம் வைத்திருப்பதால் அவனிடம் அவர்கள் காட்டும் அக்கறை நியாயமானது, விரும்பத்தக்கது. அவளுக்கு என்னை நினைத்து, இவ்விஷயத்தில் உள்ள பயத்தை நினைத்தால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் அவனுக்கு என்மேல் கரிசனம் இருந்திருந்தால், நாங்கள் எப்பொழுதோ சந்தித்துக் கொண்டிருப்போம். நான் லண்டனில் இருக்கிறேன் என அவனுக்குத் தெரியும். இது நிச்சயம், ஏனெனில் அவளே ஏதோ இதைப்பற்றி சொன்னாள்; ஆனாலும் அவள் பேசிய விதத்தைப் பார்த்தால், அவன் உண்மையிலேயே மிஸ். டார்சியை விரும்புகிறான் என தன்னையே நம்பச் செய்வதுபோல் இருந்தது. இது எனக்குப் புரியவில்லை. நான் கடுமையாக மதிப்பிடுவதற்கு பயப்படவில்லை என்றால், இவை எல்லாவற்றிலும் ஒரு பலமான பொய்மையின் தோற்றம் இருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஆனால் நான் வருத்தம் தரக்கூடிய எல்லா எண்ணங்களையும் துரத்திவிட்டு, என்னை சந்தோஷப்படுத்தும் விஷயங்களைப்பற்றியும், உன்னுடைய அன்பு, பாசம், மாமா, அத்தை இவர்களுடைய மாறாத அன்பைப்பற்றியும் மட்டுமே நினைத்துக் கொள்ள வேண்டும். உன்னிடமிருந்து விரைவில் பதிலை எதிர்பார்க்கிறேன். இனி நெதர்பீல்டிற்கு பிங்கிலி வரவே மாட்டான் என்று ஏதோ கூறினாள். வீட்டை விற்றுவிடப் போவதாகவும் சொன்னாள், ஆனால் தீர்மானமாகச் சொல்லவில்லை. இதைப்பற்றி இனி மற்ற எவரிடமும் பேச வேண்டாம். ஹன்ஸ்போர்டில் உள்ள நமது நண்பர்களிடமிருந்து உனக்கு நல்ல செய்திகள் வந்தது பற்றி எனக்கு மிக்க சந்தோஷம். சர் வில்லியம், மரியாவுடன்கூட நீயும் சென்று சார்லெட்டைப் பார்த்துவிட்டு வா. நீ அங்கு மிகவும் சௌகரியமாக இருக்க முடியும் என நான் நம்புகிறேன்.
 
உனது ஜேன்,
 
இந்தக் கடிதம் எலிசபெத்திற்கு சிறிது வருத்தத்தை அளித்தது. ஆனால் இனியும் ஜேன் அவனுடைய சகோதரியாலாவது ஏமாற்றப்படமாட்டாள் என்று நினைத்ததால் அவளது உற்சாகம் அவளுக்கு மீண்டும் திரும்பியது. சகோதரனிடமிருந்து இனி எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அவன் ஜேன்மேல் கவனம் செலுத்துவதைப் புதுப்பிக்க வேண்டும் என்ற இனி விரும்பக்கூட மாட்டாள். அவனைப்பற்றி ஒவ்வொருமுறை நினைக்கும் பொழுதும், அவன்மேல் இருந்த அபிப்பிராயம் குறைந்து கொண்டே வந்தது. அவனுக்கு தண்டனையாகவும், ஜேனுடைய நன்மைக்காகவும், அவன் விரைவிலேயே மிஸ். டார்சியை திருமணம் செய்து கொள்வான் என அவள் தீவிரமாக நினைத்தாள். விக்காமுடைய கூற்றுப்படி, மிஸ். டார்சி, அவன் இழந்ததை நினைத்து, அவன் மிகவும் வருந்தும்படி நடந்து கொள்வாள்.
 
விக்காமைப்பற்றி எலிசபெத் கொடுத்த வாக்குறுதியை திருமதி. கார்டினர் அவளுக்கு இப்பொழுது நினைவுபடுத்தினாள். மேலும் அவனைப்பற்றிய விவரங்கள் கேட்டாள். தனக்கு திருப்தி அளிக்காவிடினும் தனது அத்தையை திருப்திப்படுத்தும் அளவிற்கு அவளால் விவரங்கள் அனுப்ப முடிந்தது. அவன்மேல் இருந்த விருப்பம் குறைந்து போனது, அவனது கவனங்கள் எல்லாம் முடிந்து போனது, அவன் வேறொருவளின் ரசிகனாகிவிட்டான். இதையெல்லாம் தெரிந்து கொள்ளும் அளவிற்கு எலிசபெத் கவனமாக இருந்தாள். ஆனால் எந்தவித வருத்தமும் இல்லாமல் அவளால் பார்க்க முடிந்தது, அதைப்பற்றி எழுதவும் முடிந்தது. தன்னிடம் மட்டும் பணம் இருந்திருந்தால் தன்னைதான் அவன் விரும்பியிருப்பான் என நம்புவதில் அவளது வீண்பெருமைக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது. ஆனால் அவள் அவனை அதிகமாக விரும்பியிருக்கவில்லை. பத்தாயிரம் பவுனிற்கு திடீரென்று அதிபதியானதுதான் ஒரு இளம் பெண்ணின் கவர்ச்சியாக இருந்தது. அப்பெண்ணிடம் அவன் நல்லவனாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். சார்லெட் விஷயத்தில் வெளிப்படையாகத் தெரிந்த உண்மை இவன் விஷயத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனுடைய சுதந்திரத்திலும், அவனுடைய விருப்பத்திலும் தலையிட்டு சண்டை போடவில்லை. இவ்வாறு நடப்பது மிகவும் இயற்கையானதுதான். தன்னை விட்டுவிட ஒரு சில கஷ்டங்கள் அவன் பட்டிருக்க வேண்டும் என நம்பிய அவள் இவ்வாறு நடப்பது இருவருக்குமே நல்லதுதான் என ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தாள். உண்மையாகவே அவனை மனதார வாழ்த்தினாள்.
 
இவை எல்லாமும் திருமதி. கார்டினருக்குத் தெரிவிக்கப்பட்டது. எல்லா விவரங்களையும் கூறிய பிறகுஅவள் மேலும் தொடரலானாள்:- நான் அவனை அதிகம் காதலிக்கவில்லை என இப்பொழுது நம்புகிறேன் எனதருமை அத்தையே; ஏனெனில் நான் அவன்மேல் தூய்மையான, ஆழ்ந்த காதல் கொண்டிருந்திருந்தால், இந்நேரம் அவன் பெயரைக் கேட்டாலே வெறுப்பு வர வேண்டும், அவனுக்கு எல்லாம் தீங்காகவே நடக்க வேண்டும் என விரும்ப வேண்டும். ஆனால் அவனைப்பற்றி நல்லபடியாகவே நினைக்கிறேன். மிஸ். கிங்கிடம் பாரபட்சமின்றி நடந்து கொள்ள முடிகிறது. நான் அவளை வெறுப்பதாகவும், தெரியவில்லை, அவள் ஒரு நல்ல பெண் அல்ல என்று நினைக்கவும் இல்லை. இதில் காதலுக்கே இடமில்லை. நான் ஜாக்கிரதையாக இருந்தது நல்லதாகப் போயிற்று, நான் அவனை காதலித்திருந்தால் எனக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் நான் ஒரு சுவாரசியமான பொருளாக மாறியிருப்பேன். என்னுடைய முக்கியத்துவம் குறைந்து விட்டது என்பதற்காக நான் வருந்தவில்லை என சொல்ல முடியாது. முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் எனில் அதற்கு நான் அதிக விலை கொடுக்க வேண்டும். கிட்டியும், லிடியாவும் அவனுடைய இந்த நடத்தையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதில் இளையவர்களாக இருப்பதினால் அவர்களுக்கு உலக அனுபவம் இல்லை. அழகற்றவர்களைப்போல், அழகான இளைஞர்களுக்கும் இவ்வுலகில் வாழ பணம் தேவைப்படுகிறது என்ற கசப்பான உண்மை அவர்களுக்குத் தெரியவில்லை.
 
---------

 



book | by Dr. Radut