Skip to Content

Chapter 16 ஜேனும், எலிசபெத்தும் வீடு திரும்புதல்

மே மாதம் இரண்டாம் வாரத்தில் அம்மூன்று இளம்பெண்களும் கிரேஸ் சர்ச் தெருவிலிருந்து ஹர்ட்போர்ட்ஷயரிலுள்ள ஒரு ஊருக்குப் புறப்பட்டனர். அவர்கள் தாங்கள் சந்திக்க குறிப்பிட்டிருந்த விடுதியை நெருங்கியவுடன், திரு. பென்னட்டுடைய குதிரை வண்டியைப் பார்த்து, ஓட்டுநரின் நேரம் தவறாமை காரணமாக கிட்டியும், லிடியாவும் மாடியில் உள்ள ஓர் உணவு அறையிலிருந்து வெளியே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டனர்.  அவ்விரு பெண்களும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவ்விடத்தின் எதிரேயுள்ள, பெண்கள் தலையில் அணியும் அலங்காரப் பொருட்கள் செய்பவரை சந்திப்பதிலும், காவல் புரியும் அதிகாரியை கவனிப்பதிலும், உணவுப் பண்டங்களைத் தயாரிப்பதிலும் நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுடைய சகோதரிகளை வரவேற்றபின், விடுதியில் கிடைக்கக் கூடிய உணவுப் பண்டங்கள் அலங்கரிக்கப்பட்டு வைத்திருக்கும் மேஜையை பெருமிதத்துடன் காண்பித்து விட்டு ‘இது நன்றாக இருக்கிறது இல்லையா? இது ஓர் இனிய ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?‘ எனக் கேட்டனர்.

‘உங்கள் எல்லோருக்கும் விருந்து கொடுக்கப் போகிறோம்‘ என்ற லிடியா ‘ஆனால் நீங்கள் எங்களுக்குப் பணம் கொடுத்து உதவி செய்ய வேண்டும். ஏனெனில் எங்களிடம் இருந்ததை, அதோ எதிரேயுள்ள கடையில் செலவழித்து விட்டோம்‘ என்று கூறி தாங்கள் வாங்கிய பொருள்களைக் காண்பித்தனர். ‘இங்கே பாருங்கள், நான் இந்த தொப்பி வாங்கியிருக்கிறேன். இது மிகவும் அழகாக இருக்கிறது என்று நான் நினைக்கவில்லை, ஆனாலும் இதை வாங்கி விடலாம் என்று நினைத்தேன். வீட்டிற்குப் போனபின் இதை தனித்தனியாகப் பிரித்து விட்டு, இன்னும் அழகாக செய்ய முடியுமா என்று பார்க்கிறேன்‘ என்றாள்.

அது பார்ப்பதற்கு மிகவும் மோசமாக இருக்கிறது என சகோதரிகள் திட்டிய  பொழுது அதை சிறிதும் லட்சியம் செய்யாமல் ‘ஓ! இதைவிட மோசமாக இரண்டு, மூன்று தொப்பிகள் அந்தக் கடையில் இருந்தன. நான் அழகான நிறம் கொண்ட பட்டுத் துணி வாங்கி அதை ஓரங்களில் வைத்து தைத்து புதிதாக்கினால், பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் படைப்பிரிவு மெரிடனைவிட்டுச் சென்ற பிறகு, இன்னும் பதினைந்து நாட்களில் கிளம்பிவிடுவார்கள், அதற்கு பிறகு இந்த கோடையில் யார் என்ன போட்டு கொள்கிறார்கள் என்பது ஒரு முக்கியமே அல்ல‘ என்றாள்

‘அப்படியா?‘ பெரும் திருப்தியுடன் எலிசபெத் கேட்டாள்.

‘பிரைட்டனுக்கு அருகில் அவர்கள் முகாமிட போகிறார்கள். அப்பா, நம் எல்லோரையும் கோடையில் அங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்! இது ஒரு இனிய ஏற்பாடாக இருக்கும், அதற்கு அதிக செலவும் ஆகாது. அம்மாவிற்கும் எல்லாவற்றையும்விட இங்கு போவதற்குப் பிடிக்கும்! இல்லையெனில் இந்த கோடைகாலம் எவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைத்துப் பார்.‘

‘ஆமாம், அது உண்மையிலேயே ஒரு இனிய ஏற்பாடாகத்தான் இருக்கும், நமக்கு எல்லாமே முடிந்துவிடும். ஏற்கனவே ஒரு சாதாரண படைப்பிரிவும், மாதாமாதம் மெரிடனில் நடந்த நடனங்களும் நமக்கு அளவுக்கு மிஞ்சி இருந்தது, இப்பொழுது கடவுளே! பிரைட்டனில் ஒரு முகாம் முழுவதும் படை வீரர்களா‘ என்று எலிசபெத் நினைத்தாள்.

‘இப்பொழுது உனக்குச் சொல்ல என்னிடம் ஒரு செய்தி இருக்கிறது‘ என்று மேஜையில் அமரும் பொழுது கூறிய லிடியா ‘நீ என்ன நினைக்கிறாய்? இது ஒரு பிரமாதமான செய்தி, முக்கியமான செய்தி, நம் எல்லோருக்கும் பிடித்த ஒரு நபரை பற்றியது‘ என்றாள்.

ஜேனும், எலிசபெத்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர், விடுதி பணியாளரிடம், அங்கு இருக்க வேண்டாம் என்று சொல்லப்பட்டது. லிடியா சிரித்துக் கொண்டே,

‘ஏய், நீங்கள்  முன்ஜாக்கிரதையாகவும், முறைப்படியும் நடந்து கொள்கிறீர்கள், நீங்கள், அந்த பணியாளர் நாம் பேசுவதைக் கேட்கக் கூடாது என்று நினைத்தீர்கள், அவனுக்கு இதில் என்ன அக்கறை இருக்கிறது! இப்பொழுது நான் சொல்லப் போவதைவிட மிக மோசமான செய்திகளை அவன் கேட்டிருப்பான். பார்ப்பதற்கே மிகவும் அசிங்கமாக இருக்கிறான்! அவன் போனது எனக்கு சந்தோஷம்தான். இவ்வளவு நீண்ட தாடையை நான் எனது வாழ்க்கையில் பார்த்ததேயில்லை. சரி, இப்பொழுது செய்திக்கு வருவோம். இது அருமை விக்காமைப்பற்றியது. அந்தப் பணியாளருக்கு இது ஒரு தேவையில்லாத செய்தி, இல்லையா? மேரி கிங்-ஐ விக்காம் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. இதுதான் விஷயம்! லிவர்பூலில் இருக்கும் தனது மாமாவின் வீட்டிற்குத் தங்கச் சென்றிருக்கிறாள். விக்காம் தப்பித்தான்.‘

‘மேரி கிங் தப்பித்தாள்!‘ என்ற எலிசபெத் ‘சொத்துக்காக அலைந்த விவேகமற்ற தொடர்பிலிருந்து தப்பினாள்‘ என்றாள்.

‘அவள் அவனை விரும்பினாள் என்றால், அவனை விட்டு சென்றது பெரிய முட்டாள்தனம்.‘

‘இருவருக்குமே பெரிய ஈடுபாடு இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்‘ என்றாள் ஜேன்.

‘அவன் பக்கத்திலிருந்து ஈடுபாடு இல்லை என்று எனக்கு நன்கு தெரியும். நான் சொல்கிறேன், அவன் அவளை புல்போல் மதித்தான். யார்தான் பார்ப்பதற்கு இவ்வளவு மோசமாக இருக்கும் ஒரு பெண்ணை விரும்புவர்?‘

இவ்வளவு முரட்டுத்தனமாக தன்னால் பேச முடியாது என்றாலும், தானும் இதையேதான் முன்பு நினைத்திருந்தோம். தான் நினைத்தது சரி என்றும் நம்பியிருந்தோம். அதே முரட்டுத்தனமான உணர்வுகள்தான் இது என்பதை புரிந்து கொண்ட எலிசபெத் அதிர்ச்சியடைந்தாள்.

எல்லோரும் உணவு அருந்தியபின், மூத்த சகோதரிகள் அதற்குரிய பணத்தைக் கொடுத்த பிறகு வண்டி வரவழைக்கப்பட்டு, சிறிது நேரம் திட்டமிட்ட பிறகு, எல்லோரும் அவர்களது பெட்டிகள், கைப்பைகள், கட்டப்பட்ட சாமான்கள், கிட்டியும், லிடியாவும் வாங்கிய தேவையற்ற பொருள்கள் உட்பட எல்லாவற்றுடனும் வண்டியினுள் ஏறி அமர்ந்தனர்.

‘நாம் எல்லோரும் எவ்வளவு அழகாக அடைபட்டு உட்கார்ந்திருக்கிறோம். தொப்பி வாங்கியதற்கு நான் சந்தோஷப்படுகிறேன், தொப்பி வைத்திருக்கும் பெட்டி கிடைத்தது என்பதற்காக இருந்தாலும் சரி! சரி நாம் இப்பொழுது சௌகரியமாக, குளிருக்கு  அடக்கமாக, உட்கார்ந்து பேசிக் கொண்டே வீ“ட்டிற்குப் போகலாம். முதலில், நீங்கள் சென்ற பிறகு, என்னவெல்லாம் நடந்தது என்று சொல்லுங்கள் பார்க்கலாம். இனிய நபர் எவரையேனும் சந்தித்தீர்களா? அவர்களுடன் சந்தோஷமாக இருக்க முடிந்ததா? நீங்கள் திரும்பி வருவதற்கு முன் உங்களில் ஒருவருக்கு ஒரு கணவன் கிடைத்திருப்பான் என்ற நம்பிக்கையில் நான் இருந்தேன். விரைவில் ஜேன், கல்யாணமாகாத கன்னி ஆகிவிடுவாள் என்று நான் சொல்கிறேன். அவளுக்கு வயது ஏறத்தாழ இருபத்தி மூன்று ஆகிறது. இருபத்தி மூன்று வயதிற்குள் எனக்கு திருமணம் ஆகியிருக்காவிட்டால் கடவுளே, எனக்கு அவமானமாக இருக்கும்! நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு உங்களுக்கு கணவன்மார்கள் கிடைக்க வேண்டும் என்று நமது சித்தி பிலிப்ஸ் விருப்பப்படுகிறார். காலின்ஸையே ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்று சித்தி சொல்கிறார். ஆனால் அதில் எந்த சந்தோஷமும் இருந்திருக்காது என்று நான் நினைக்கிறேன். கடவுளே! உங்களுக்கு முன்னால் எனக்கு திருமணம் நடந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்; பிறகு, நடக்கும் நடனங்களுக்கெல்லாம் நான் உங்களுக்குத் துணையாக வருவேன். அன்றொரு நாள் கர்னல் பார்ஸ்டர் இல்லத்தில் எங்களுக்கு பெருத்த மகிழ்ச்சி கிடைத்தது. நானும், கிட்டியும் அங்கு ஒரு நாள் தங்குவதாக இருந்தோம். திருமதி. பார்ஸ்டர் மாலையில் ஒரு நடனம் ஏற்பாடு செய்வதாக வாக்களித்திருந்தார். (நானும், திருமதி. பார்ஸ்டரும் நெருங்கிய நண்பர்கள்) அதனால் அவள் ஹாரிங்டன் குடும்பத்திலிருந்து இருவரையும் அழைத்திருந்தாள். ஆனால் ஹாரியட்டிற்கு உடம்பு சரியில்லாமல் இருந்ததினால் பென் மட்டும் தனியாக வரும்படியாயிற்று. பிறகு நாங்கள் என்ன செய்தோம் என்று நினைக்கிறீர்கள்? எல்லோரும் பெண் என்று எண்ணட்டும் என்றெண்ணி, நாங்கள் சேம்பர்லீனிற்கு பெண் வேடமிட்டோம்-- எவ்வளவு வேடிக்கையாக இருந்திருக்கும் என்று நினைத்துப்பார்! கர்னல், திருமதி. பார்ஸ்டர், கிட்டி மற்றும் என்னை தவிர வேறு யாருக்கும் தெரியாது. சித்தியிடம் ஒரு உடையை கடன் வாங்கியதால் அவருக்கு மட்டும் தெரியும். அவன் பார்ப்பதற்கு எவ்வளவு நன்றாக இருந்தான் என்று உன்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது! டென்னி, விக்காம், ப்ராட் மேலும் இரண்டு மூன்று ஆண்கள் உள்ளே நுழைந்த பொழுது அவர்களால் சிறிதளவும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடவுளே! நான் எப்படி சிரித்தேன்! திருமதி. பார்ஸ்டருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. நான் இறந்தே போய்விடுவேன் என்று நினைத்தேன். இதனால் ஆண்களுக்கு விஷயம் ஏதோ இருக்கிறது என்று சந்தேகம் வந்து விரைவில் என்ன விஷயம் என்று கண்டுபிடித்து விட்டனர்.‘

விருந்துகளில் நடந்த இதுபோன்ற கதைகளினாலும், ஹாஸ்யமான நிகழ்ச்சிகளினாலும், அவ்வப்போது கிட்டி தரும் குறிப்புகளும், கூடுதல் தகவல்களின் உதவியால் லிடியா, லாங்க்பர்ன் போகும்வரை எல்லோரையும் சந்தோஷப்படுத்த முற்பட்டாள். எலிசபெத் அதிகம் கேட்டுக் கொள்ள முன்வரவில்லை. ஆனால் விக்காமின் பெயரைச் சொல்லும் பொழுதெல்லாம் அவள் காதில் அது விழத் தவறவே இல்லை.

வீட்டில் அவர்களை எல்லோரும் அன்புடன் வரவேற்றனர். ஜேனுடைய அழகு குறையாமல் இருந்ததைப் பார்த்து திருமதி. பென்னட் மிகவும் சந்தோஷமடைந்தாள்; இரவு உணவு உண்ணும் பொழுது எலிசபெத்திடம் திரு. பென்னட் ஒரு முறைக்கு மேலேயே,

‘லிசி, நீ திரும்பி வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி‘ என்றார்.

லூகாஸ் குடும்பத்தினர் அனைவரும் மரியாவைச் சந்தித்து, விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்காக வந்ததினால் உணவு உண்ணும் அறையில் கூட்டம் அதிகமாக இருந்தது, அவர்களுக்குப் பேச பல்வேறு விஷயங்கள் இருந்தன; தன்னுடைய மூத்த மகளின் நலனைப்பற்றியும், அவளுடைய கோழிப்பண்ணையை பற்றியும் மேஜையின் எதிர்ப்புறம் அமர்ந்திருந்த மரியாவிடம் லேடி லூகாஸ் விசாரித்துக் கொண்டிருந்தாள். திருமதி. பென்னட் இரண்டு வித வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தாள். மேஜையின் கடைசியில் அமர்ந்திருந்த ஜேனிடமிருந்து தற்பொழுதுள்ள நாகரீகத்தைப்பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு, அதனை லூகாஸ் குடும்பத்தின் இளைய மகள்களுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தாள். லிடியா, மற்றவர்களைக் காட்டிலும் உரத்த குரலில், தன்னுடைய பேச்சை கேட்க விரும்பும் அனைவருக்கும், காலையில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளைப்பற்றி விவரித்துக் கொண்டிருந்தாள்.

‘ஓ! மேரி, நீயும் எங்களுடன் வந்திருக்கலாம், ஏனெனில் நாங்கள் அவ்வளவு குதூகலமாக இருந்தோம். நாங்கள் வண்டியில் போகும் பொழுது உள்ளே யாரும் இல்லை என்பதுபோல் எல்லா திரைச் சீலைகளையும் இழுத்துவிட்டு விட்டோம், கிட்டி மாத்திரம் உடல்  நலமில்லாமல் இருக்கவில்லை என்றால் பிரயாணம் முழுவதும் அப்படியே சென்றிருப்போம். நாங்கள் ஜார்ஜ் போய் சேர்ந்தவுடன், மிகவும் அழகாக நடந்து கொண்டோம் என்று நினைக்கிறேன், ஏனெனில் நாங்கள் மற்ற மூவருக்கும், உலகத்திலேயே சிறந்த உணவு வழங்கினோம், நீயும் வந்திருந்தால், உனக்கும் அளித்திருப்போம். நாங்கள் திரும்பி வந்த பொழுது அவ்வளவு வேடிக்கையாக இருந்தது! நாங்கள் வண்டிக்குள் ஏறியே இருக்கக் கூடாது என்று நினைத்தோம். நான் சிரித்து சிரித்தே இறந்திருப்பேன். வீடு திரும்பும்வரை அவ்வளவு சந்தோஷமாக இருந்தோம்! நாங்கள் அவ்வளவு உரக்கப் பேசினோம், சிரித்தோம், பத்து மைல்களுக்கு அப்பால் உள்ள எவருக்கும் கேட்டிருக்கக் கூடும்!‘

இதற்கு மேரி சுவாரசியமில்லாமல் ஒரு பதிலளித்தாள், ‘இதுபோன்ற சந்தோஷங்களுக்கு நான் மதிப்புக் கொடுத்ததில்லை, இதற்கும் எனக்கும் வெகுதூரம். பெண்களுக்குப் பொதுவாக இவை உகந்ததாக இருக்கும் என்பதில் சந்தேமில்லை. ஆனால் இதில் எனக்கு எந்தவித ஈடுபாடும் கிடையாது என்பதை ஒத்துக் கொள்கிறேன். இதைவிட கண்டிப்பாக புத்தகம் படிப்பதையே விரும்புவேன்.‘

ஆனால் இந்த பதிலில் ஒரு வார்த்தைகூட லிடியாவின் காதில் விழவில்லை. யார் பேசினாலும் அவள் அரை நிமிடத்திற்குமேல் காது கொடுத்துக் கேட்க மாட்டாள், மேரி சொல்வதைக் கேட்கவே மாட்டாள்.

பிற்பகலில் மற்ற பெண்களுடன் மெரிடன்வரை சென்று அங்கு எல்லோரும் எப்படியிருக்கின்றனர் என்று பார்த்து வர லிடியா அவசரப்பட்டாள், ஆனால் இந்த ஏற்பாட்டை எலிசபெத் எதிர்த்த வண்ணம் இருந்தாள். இராணுவ அதிகாரிகளின் பின்னால் போகாமல் ஒரு அரை நாள்கூட பென்னட் குடும்பத்து பெண்களால் இருக்க முடியாது என்று எவரும் பேசக் கூடாது என்பதினால் எலிசபெத்திற்கு அங்கு செல்வது பிடிக்கவில்லை. எதிர்ப்பதற்கு மற்றொரு காரணமும் அவளுக்கு இருந்தது. மறுபடியும் விக்காமை அங்கு பார்க்க வேண்டி வருமோ என்ற பயமும் இருந்தது. எவ்வளவு தூரம் தவிர்க்க முடியுமோ அவ்வளவு தூரம் தவிர்க்க வேண்டும் என தீர்மானித்தாள். படைப்பிரிவு அங்கிருந்து கிளம்பிச் செல்வது அவளுக்கு சொல்லொண்ணா ஆறுதலை அளித்தது. இரண்டு வாரங்களில் அவர்கள் அங்கிருந்து கிளம்ப இருந்தனர், கிளம்பிச் சென்றவுடன், அவன் விஷயமாக அவளைத் துன்புறுத்துவதற்கு வேறு எதுவும் இருக்காது என்ற நம்பிக்கையில் இருந்தாள்.

லிடியா விடுதியில் கூறியிருந்த, பிரைட்டனுக்குப் போக வேண்டும் என்கிற திட்டத்தைப்பற்றி, அவர்களது பெற்றோர்கள் அடிக்கடி விவாதித்துக் கொண்டிருந்தனர் என்று வீட்டிற்கு வந்த சில மணி நேரங்களிலேயே தெரிந்து கொண்டாள். அவளுடைய தந்தைக்கு அதற்கு இணங்க சிறிதளவும் எண்ணம் இல்லை என்பதை எலிசபெத் நேரடியாகப் பார்த்தாள். ஆனால் அவருடைய பதில்களோ, தெளிவற்றதாகவும், இருபொருள் அளிப்பது போலவும் இருந்தன. தாயார் அடிக்கடி மனச்சோர்வு அடைந்தாலும், இறுதியாக வெற்றியடைவோம் என்ற நம்பிக்கையை இழக்கவேயில்லை.
 

------



book | by Dr. Radut