Skip to Content

Chapter 15 ஹன்ஸ்போர்டிலிருந்து எலிசபெத் கிளம்புதல்

 

சனிக்கிழமை காலை, எலிசபெத்தும், காலின்ஸும், மற்றவர்கள் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சிற்றுண்டிக்காகச் சந்தித்துக் கொண்டனர். அவர்கள் கிளம்புவதற்கு முன், செலுத்த வேண்டிய மரியாதைகள் எல்லாம் மிகவும் அவசியம் என்று காலின்ஸ் நினைத்ததினால், அச்சந்தர்ப்பத்தை அதற்கு பயன்படுத்திக் கொண்டான்.
 
மிஸ். எலிசபெத் நீ எங்கள் இல்லத்திற்கு அன்புடன் வந்ததற்கு திருமதி. காலின்ஸ் நன்றி தெரிவித்தாளா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவளிடமிருந்து நன்றி பெறாமல் நீ இந்த வீட்டைவிட்டு போக மாட்டாய் என்பது நிச்சயம். உன்னுடன் சேர்ந்து இருந்தது, எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுடைய எளிய இல்லத்திற்கு வரத் தூண்டும்படி, எங்களிடம் எதுவும் இல்லை என எங்களுக்குத் தெரியும். எங்களுடைய எளிமையான வாழ்க்கை முறை, சிறிய அறைகள், குறைந்த வேலையாட்கள், வெளி வாழ்க்கையை நாங்கள் அதிகம் பார்க்காதது, இவையெல்லாம் உன்னைப் போன்ற இளம் பெண்ணிற்கு ஹன்ஸ்போர்ட் ஒரு சுவாரசியமற்ற இடமாகத் தோன்றும். உன்னுடைய பரிவுக்கு நாங்கள் நன்றி கடன் பட்டிருக்கிறோம் என்பதை நீ நம்புவாய் என நினைக்கிறேன், மேலும் உன்னுடைய நேரத்தை நீ மகிழ்ச்சியாக கழிக்க எங்களால் முடிந்த அளவிற்கு எல்லாம் செய்தோம்என்றான்.
 
எலிசபெத் தனது நன்றியை தெரிவிக்க ஆவலாக இருந்தாள், சந்தோஷமாக இருந்ததாக உறுதியளித்தாள். ஆறு வாரங்கள், அவள் மிகவும் சந்தோஷமாகக் கழித்தாள், சார்லெட்டுடன் சேர்ந்து இருந்த சந்தோஷத்திற்கும், அன்பான கவனிப்பு அவளுக்கு கிடைத்ததற்கும் அவள்தான் நன்றி கடன் பட்டிருக்க வேண்டும். திரு. காலின்ஸிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது, மேலும் அதிக புன்னகையுடன் சிரத்தையுடன் பதிலளித்தான்,
 
உனக்குப் பிடித்தமான முறையில் நீ இங்கு நேரத்தை செலவழித்தாய் என்று கேட்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களால் முடிந்த அளவிற்கு நாங்கள் எல்லாம் சிறப்பாகவே செய்தோம். மிகப் பெரிய இடத்தை எங்களால் உனக்கு அறிமுகம் செய்து வைக்க முடிந்தது, மிகப் பெரிய அதிர்ஷ்டம்தான். மேலும் ரோஸிங்ஸுடன் எங்களுக்கு இருக்கும் தொடர்பினால், இந்த எளிய இல்லத்திலேயே இருக்காமல் மாறுதலாக வேறு இடத்திற்கும் சென்றது, உனக்கு ஹன்ஸ்போர்ட் வருகை முற்றிலும் சோர்வாக இருந்திருக்காது என்று சொன்னால் மிகையாகாது. லேடி காதரின் குடும்பத்துடன் எங்களுக்கு இருக்கும் சம்பந்தம் மிகப் பெரிய அனுகூலமான விஷயம், கடவுளின் கருணை என்றும் சொல்லலாம், மிகச் சிலருக்கே இந்தப் பெருமை கிடைக்கும். எங்களுடைய ஸ்தானம் எப்படிப்பட்டது என்பதைப்பார். தொடர்ந்து எங்களுக்கு அங்கு அழைப்பு இருந்ததை நீ பார்த்தாய். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இந்த எளிய இல்லத்தில் எவ்வளவுதான் குறை இருந்தாலும், இங்கு நிரந்தரமாக வசிப்பவர் எவரும் ரோஸிங்ஸுடன் இருக்கும் எங்களுடைய நெருக்கமான நட்பில் பங்கு போட்டுக் கொள்வதால், இரக்கத்திற்குரியவர்களே அல்ல.
 
உச்சத்தில் இருந்த அவனுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த அவனிடம் வார்த்தைகளே போதுமானதாக இல்லை. அதனால் அவன் அறையில் நடக்க வேண்டியதாயிற்று. அப்பொழுது உபசாரமாகவும், உண்மையையும் இணைத்து எலிசபெத் ஒரு சில வாக்கியங்கள் சொல்ல முயற்சி செய்தாள்.
 
எங்களைப்பற்றி நல்லவிதமான செய்தியை, நீ ஹர்ட்போர்ட்ஷயருக்கு எடுத்துப் போவாய், எனதருமை சகோதரியே. உன்னால் அப்படிப்பட்ட செய்தியை தர முடியும் என்று எனக்கு நானே பெருமைப்பட்டுக் கொள்கிறேன். திருமதி. காலின்ஸிற்கு லேடி காதரின் எப்படிப்பட்ட கவனம் கொடுத்தாள் என்பதை நீயே தினமும் பார்த்தாய். உன்னுடைய தோழி ஒரு துரதிர்ஷ்டமான.......வேண்டாம், இந்த விஷயத்தில் பேசாமல் இருப்பதே நல்லது. உன்னிடம் இதை மட்டும் நிச்சயமாக சொல்ல விரும்புகிறேன். இதேபோன்ற மகிழ்ச்சி உனக்கும் உன் திருமணத்தில் கிடைக்க வேண்டும் என்று மனமுவந்து வாழ்த்துகிறேன். எனதருமை சார்லெட்டிற்கும் எனக்கும் இருப்பது ஒரே மாதிரியான மனமும், எண்ணங்களும். எங்கள் இருவரிடத்திலும் ஆச்சரியப்படும் வகையில் ஒரே மாதிரியான குணமும், கருத்துக்களும் இருக்கின்றன. நாங்கள் இருவரும் ஒருவருக்காகவே ஒருவர் எனப் பிறந்துள்ளோம்.
 
அப்படி இருக்கும் என்றால், அது மிகவும் மகிழ்ச்சிக்குரியதுஎன எலிசபெத்தால் சௌகரியமாக சொல்ல முடிந்தது. அவனுடைய இல்லற வாழ்க்கை சுகமாக இருப்பதில் உள்ள அவளுடைய நம்பிக்கையையும், சந்தோஷத்தையும் மனப்பூர்வமாக அவளால் கூற முடிந்தது. யாரைப்பற்றி பேசிக் கொண்டிருந்தனரோ அந்த பெண்மணி உள்ளே வந்ததால் அப்பேச்சு தடைப்பட்டது, ஆனால் இதனால் எலிசபெத் வருத்தப்படவில்லை. பாவம் சார்லெட்!--இப்படிப்பட்ட ஒரு இடத்தில் அவளை விட்டு செல்வது கஷ்டமாக இருந்தது. ஆனால் இது அவளாகவேதான் தேர்ந்தெடுத்து இருக்கிறாள். விருந்தினர்கள் கிளம்புவது அவளுக்கு வருத்தத்தை அளித்தது என்பது வெளிப்படையாகவே தெரிந்தது என்றாலும் அவள் எந்த அனுதாபத்தையும் எதிர்பார்க்கவில்லை. அந்த வீடு, வீட்டின் வேலைகள், சர்ச் பணிகள், அவளுடைய கோழிப்பண்ணை, அது சம்பந்தப்பட்ட பல வேலைகளும் இன்னும் அவளுடைய சுவாரசியத்தை தங்க வைத்துக் கொண்டிருந்தன.
 
இறுதியில் வண்டி வந்தது, பெட்டிகள் எல்லாம் கட்டப்பட்டன, சாமான்களை எல்லாம் உள்ளே வைத்தபின், கிளம்புவதற்கு தயார் என்று அறிவிக்கப்பட்டது. நண்பர்களின் பிரியாவிடைக்குப் பிறகு, காலின்ஸ் வண்டிவரை எலிசபெத்துடன் சென்றான். தோட்டத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது, அவளுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் தன் மரியாதையை தெரிவிக்குமாறு கூறினான், குளிர்காலத்தில் லாங்க்பர்னில் தனக்கு கிடைத்த அன்புக்கு நன்றி சொல்ல மறக்கவில்லை, திரு. கார்டினர் தம்பதிகளுக்கு, அவர்களை பரிச்சயம் இல்லாவிடினும் தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு கூறினான். பிறகு அவளை வண்டியுனுள் ஏற்றினான். மரியாவும் பின் தொடர்ந்தாள். கதவு மூடப் போகும் சமயத்தில், தன்னை ஒருமுனைப்படுத்திக் கொண்டு அவர்கள், ரோஸிங்ஸில் உள்ள பெண்மணிகளுக்கு ஏதாவது ஒரு செய்தியை சொல்ல மறந்து விட்டார்களா என திடீரென்று அவர்களுக்கு ஞாபகப்படுத்தினான்.
 
ஆனால் நீங்கள் அங்கிருந்த பொழுது உங்களுக்கு காட்டப்பட்ட அன்புக்கு மிக்க நன்றி கூறி உங்களுடைய பணிவு கலந்த மரியாதையை அவர்களுக்கு கண்டிப்பாகத் தெரிவிக்க விரும்புவீர்கள்என்று கூறினான்.
 
எலிசபெத் இதற்கு ஆட்சேபணை எதுவும் தெரிவிக்கவில்லை;- பிறகு கதவு மூடப்பட்டு வண்டி கிளம்பிச் சென்றது.
 
அட கடவுளேஎன்று கூறிய மரியா சிறிது வினாடி மௌனத்திற்குப் பிறகு, ‘நாம் வந்து ஓரிரு நாட்கள்தான் ஆகியிருப்பது போலிருக்கிறது!-- ஆனாலும் எவ்வளவு விஷயங்கள் நடந்துள்ளன.
 
ஆமாம், எவ்வளவோ விஷயங்கள் நடந்துள்ளனஎன்று எலிசபெத் ஒரு பெருமூச்சுடன் கூறினாள்.
 
ரோஸிங்ஸில் நாம் ஒன்பது முறை விருந்துண்டிருக்கிறோம், இரண்டு முறை தேநீர் விருந்துக்குச் சென்றோம்--எனக்கு சொல்ல எவ்வளவு இருக்கின்றன.
 
எலிசபெத் தனக்குள்ளேயே எனக்கு மறைக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவு இருக்கின்றனஎன்றாள்.
 
அவர்களுடைய பயணம் அதிக உரையாடலின்றி, பயமின்றி இருந்தது. ஹன்ஸ்போர்டை விட்டு கிளம்பிய நான்கு மணி நேரத்திற்குள்ளேயே திரு. கார்டினர் வீட்டிற்கு வந்தடைந்தனர், அங்கு அவர்கள் சில நாட்கள் தங்குவதாக இருந்தனர்.
 
ஜேன் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாள், அவர்களுடைய அத்தை அன்புடன் அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்ச்சிகளிடையே, எலிசபெத்திற்கு அவளுடைய மனதை ஆராய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் ஜேன், அவளுடன் வீடு திரும்புவதாக இருந்ததால், நிதானமாக ஆராய்வதற்கு லாங்க்பர்னில் நிறைய நேரம் கிடைக்கும்.
 
லாங்க்பர்ன் போய் சேர்ந்த பிறகு சொல்லலாம் என்று தீர்மானித்து, அதற்காக ஒரு பெரு முயற்சி எடுத்து, டார்சி தன்னை திருமணம் செய்து கொள்ள மன்றாடியதைப்பற்றி ஜேனிடம், லாங்பர்னில் கூறினாள். ஜேனை ஆச்சரியப்படுத்தும் வகையில் விஷயத்தை தன்னால் கூற முடியும் என்பது தெரிந்தாலும், அதே சமயத்தில் தன்னுடைய வீண்பெருமையினால், நடந்த விஷயத்தின் காரணத்தை இன்னும் சரியாகப் புரிந்துக் கொள்ள முடியாததால், எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லிவிட வேண்டும் என்கிற அடக்க முடியாத ஆசை இருந்த போதிலும் எந்த அளவிற்குக் கூற வேண்டும் என்ற முடிவு செய்ய முடியாத நிலையில் இருந்தாள், ஏனென்றால் அதைப்பற்றி அதிகம் பேச முற்பட்டு, அதனால் பிங்கிலியைப்பற்றிய பேச்சு ஏதேனும் எழுந்தால், ஜேனுடைய துயரம் மேலும் அதிகமாகத்தான் ஆகும் என பயந்தாள்.
 
-------

 



book | by Dr. Radut