Skip to Content

Chapter 14 ஹன்ஸ்போர்டில் தங்குவது முடிவடைதல்

 

அவ்விரு ஆடவரும் மறுநாள் காலை ரோஸிங்ஸைவிட்டு கிளம்பினர். அவர்கள் கிளம்பும் பொழுது, அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டி, அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு அருகே நின்றிருந்த காலின்ஸால், ரோஸிங்ஸில் நடந்த வருத்தம் தோய்ந்த விடைபெறுதல் காட்சிக்குப் பிறகு அவர்கள் எவ்வளவு உற்சாகமாக இருக்க முடியுமோ அவ்வளவு உற்சாகமாகவும், நலமாகவும் காட்சியளித்தனர் என்ற சந்தோஷமான செய்தியை தன்னுடைய இல்லத்தில் இருப்பவர்களுக்கு சொல்ல முடிந்தது. லேடி காதரினையும், அவளது மகளையும் சமாதானப்படுத்த அவன் ரோஸிங்ஸிற்கு விரைந்து சென்றான். திரும்பி வரும் பொழுது, லேடி காதரின் மிகவும் மனச்சோர்வுற்று இருந்ததினால் அனைவரும் விருந்துக்கு அங்கு வர வேண்டும் என்று ஆவலாக இருக்கிறாள் என்ற செய்தியை மிகுந்த திருப்தியுடன் கொண்டு வந்தான்.
 
தான் விரும்பியிருந்தால், இந்நேரம் தன்னை லேடி காதரினுடைய வருங்கால மருமகளாக அறிவித்திருக்க முடியும் என்ற எண்ணம் தோன்றாமல் அவளை, எலிசபெத்தால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. மேலும் அவளுடைய கோபம் என்னவாக இருந்திருக்கும் என்பதையும் நினைத்துப் பார்க்கும் பொழுது அவளால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அவள் என்ன சொல்லியிருப்பாள்?--எப்படி நடந்து கொண்டிருப்பாள்?‘ என்ற கேள்விகளால் எலிசபெத் சந்தோஷமடைந்தாள்.
 
ரோஸிங்ஸில் உள்ள நபர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்பதுதான் அவர்கள் பேசிய முதல் விஷயமாக இருந்தது--எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று நான் உங்களுக்குச் சொல்வது உண்மை. என் நண்பர்களின் இழப்பை எண்ணி நான் வருத்தப்படுவதுபோல் வேறு யாரும் வருத்தப்பட மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் நான் இவ்விரு இளைஞர்களிடம் அதிக பற்றுதல் கொண்டிருந்தேன்; அவர்களும் என்மேல் அதே அளவு பற்றுதல் கொண்டிருந்தார்கள் என்று எனக்குத் தெரியும்!--அவர்களுக்கு போவதற்கே விருப்பம் இல்லை. அவர்கள் எப்பொழுதுமே அப்படித்தான். கர்னல் தன்னுடைய உற்சாகத்தை இழக்காமல் இருந்தான். இறுதியில்தான் அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் டார்சியால்தான் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை, போன வருடத்தைவிட இந்த வருடம் அவன் அதிக வருத்தம் அடைந்தான். ரோஸிங்ஸில் இவன் வைத்திருக்கும் பற்றுதல், நிச்சயம் அதிகரிக்கின்றதுஎன்று லேடி காதரின் கூறினாள்.
 
இந்த இடத்தில் காலின்ஸ் ஒரு பாராட்டையும், ஜாடையாக ஏதோ ஒன்றையும் சொன்னதை தாயும், மகளும் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டனர்.
 
மிஸ். பென்னட் உற்சாகமிழந்து இருந்ததை விருந்து முடிந்த பிறகு கவனித்த லேடி காதரின் அவளுக்கு இவ்வளவு சீக்கிரமாக வீட்டிற்குத் திரும்புவதில் விருப்பம் இல்லைபோல் இருக்கிறது என்று உடனேயே தானே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு, ‘அப்படியெனில் மேலும் சில நாட்கள் இங்கு தங்குவதற்கு சம்மதம் கேட்டு உன்னுடைய தாயாருக்கு நீ கடிதம் எழுத வேண்டும். திருமதி. காலின்ஸ் நீ அவளுடன் இருப்பதை மிகவும் விரும்புவாள் என்பதில் எனக்கு சந்தேகமில்லைஎன்றாள்.
 
உங்களுடைய அன்பான அழைப்புக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். ஆனால் அதை ஏற்று கொள்வது என் கையில் இல்லை--நான் அடுத்த சனிக்கிழமை லண்டனில் இருக்க வேண்டும்என்று எலிசபெத் பதிலளித்தாள்.
 
அப்படியெனில், நீ இங்கு தங்குவது ஆறு வாரங்களுக்கு மட்டுமேதான் இருக்கும். நீ இங்கு இரண்டு மாதங்கள் தங்குவாய் என நான் எதிர்பார்த்தேன். நீ வருவதற்குமுன் திருமதி. காலின்ஸிடமும் இதைத்தான் சொன்னேன். இவ்வளவு சீக்கிரம் நீ போக வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இன்னும் இரண்டு வாரங்களுக்கு நிச்சயம் திருமதி. பென்னட் உனக்கு அனுமதியளிப்பாள்.
 
ஆனால் என் தகப்பனாரால் நான் இல்லாமல் இருக்க முடியாது--அவர் சென்ற வாரம், என்னை விரைவில் திரும்பும்படி எழுதியிருந்தார்.
 
ஓ! நீ இன்றி உன் தாயாரால் இருக்க முடியும் என்றால், உன் தந்தையாலும் நிச்சயம் முடியும். பெண்கள், தகப்பனார்களுக்கு எப்பொழுதும் ஒரு விஷயமே இல்லை. மேலும் நீ இங்கு ஒரு மாதம் முழுவதுமாக தங்கினால், நான் உங்களில் ஒருவரை லண்டனிற்கு அழைத்துச் செல்ல முடியும். ஏனெனில் ஜுன் மாத தொடக்கத்தில், ஒரு வாரத்திற்காக அங்கு செல்லப் போகிறேன், டாஸன் பெரிய குதிரை வண்டிக்கு ஆட்சேபம் தெரிவிக்க மாட்டார் என்பதால், உங்களில் ஒருத்திக்கு அதில் தாராளமாக இடம் இருக்கும், கால நிலையும் இனிமையாக சில்லென்று இருந்தால், உங்கள் இருவரையுமே அழைத்துச் செல்வதற்கு நான் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்க மாட்டேன், ஏனெனில் நீங்கள் இருவருமே பருமன் அல்ல.
 
நீங்கள் மிகவும் அன்பு வடிவமாக இருக்கிறீர்கள்; ஆனால் நாங்கள் ஏற்கனவே போட்ட திட்டப்படி கிளம்ப வேண்டும் என்று நினைக்கிறேன்.
 
லேடி காதரின் அதை ஏற்றுக் கொண்டதாகத் தெரிந்தது.
 
காலின்ஸ், நீ அவர்களுடன் ஒரு பணியாளை அனுப்ப வேண்டும். நான் எப்பொழுதுமே என் மனதில் இருப்பதைத்தான் பேசுவேன் என்று உனக்குத் தெரியும். இரண்டு பெண்கள் தனியாக பிரயாணம் செய்வது என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அது முற்றிலும் சரி கிடையாது. யாரையாவது கூட அனுப்புவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அம்மாதிரி விஷயத்தை நான் மிகவும் வெறுக்கிறேன்--இளம் பெண்கள் வாழ்க்கையில் அவர்கள் இருக்கும் நிலைக்கு ஏற்றவாறு எப்பொழுதும் ஒழுங்காக பாதுகாக்கப்பட வேண்டும், கவனிக்கப்பட வேண்டும். என்னுடைய மருமகள் ஜார்ஜியானா போன கோடைகாலம் ராம்ஸ்கேட்டிற்கு போனபொழுது, இரண்டு பணியாளர்கள் அவளுடன் போக வேண்டும் என்பதை நான் வலியுறுத்தினேன். பிம்பெர்லியைச் சேர்ந்த திரு டார்சியின் மகளான, மிஸ். டார்சியும், லேடி ஆன்-உம், வேறு எந்தவிதமாக பிரயாணம் செய்திருந்தாலும் அது ஒழுங்காக காட்சியளித்திருக்க முடியாது--இவை எல்லாவற்றிலும் நான் மிகவும் கவனம் செலுத்துவேன். திருமதி. காலின்ஸ் இவர்களுடன் நீ ஜானை அனுப்ப வேண்டும். நல்லவேளை இதை எனக்குச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது; ஏனெனில் அவர்களைத் தனியாக அனுப்பினால் அது உனக்கு மரியாதையாக இருக்காது.
 
என்னுடைய மாமா, எங்களுக்காக ஒரு பணியாளரை அனுப்ப இருக்கிறார்.
 
ஓ!--உன்னுடைய மாமாவா! அவர் ஒரு ஆண் பணியாளரை வைத்திருக்கிறாரா? இதை எல்லாம் கவனித்துக் கொள்ள உனக்கு ஒருவர் இருக்கிறார் என்பது மிகவும் சந்தோஷம். குதிரைகளை எங்கே மாற்றுவாய்?--ஓ! புரோம்லியில்தான் மாற்றுவாய்--பெல்லில் என்னுடைய பெயரைச் சொன்னால் உங்களுக்கு அங்கு உதவி கிடைக்கும்.
 
அவர்களுடைய பிரயாணத்தைப்பற்றி லேடி காதரினுக்கு கேட்பதற்கு மேலும் பல கேள்விகள் இருந்தன. எல்லா கேள்விகளையும் கேட்டு அதில் பல கேள்விகளுக்கு தானே பதிலையும் அளித்தாள். ஒரு சில கேள்விகளுக்கு எலிசபெத் பதில் கூறும்படி இருந்ததினால் அவள் விழிப்புடன் இருக்க வேண்டியதாயிற்று. இவ்வாறு சற்று கவனமாக இருக்க வேண்டி வந்ததை தன்னுடைய அதிர்ஷ்டம் என்று எண்ணினாள். இல்லையெனில் அவள் மனதில் உள்ள சிந்தனை ஓட்டம் காரணமாக அவள் எங்கிருக்கிறாள் என்பதையே மறந்திருப்பாள். சிந்தனைகள் தனிமையான நேரங்களுக்காகவே ஒதுக்கப்பட வேண்டும், எப்பொழுதெல்லாம் தனிமையில் இருந்தாளோ, அப்பொழுதெல்லாம் அச்சிந்தனைகளுக்கு இணங்குவது பெரிய ஆறுதலாக இருந்தது. ஒரு நாள்கூட தனியாக நடந்து போகாமல் இருக்கவில்லை, அவ்வாறு நடக்கும் பொழுது வருத்தம் அளித்த நினைவுகளில் ஆழ்ந்து போனாள்.
 
டார்சியின் கடிதம் இப்பொழுது அவளுக்கு மனப்பாடமாகிவிட்டது. ஒவ்வொரு வரியையும் ஆராய்ந்தாள்: அதை எழுதியவனைப்பற்றி அவளது உணர்ச்சிகள், சில சமயங்களில் மிகவும் வித்தியாசப்பட்டது. அவன் பேசிய விதம் ஞாபகத்திற்கு வந்த பொழுது, இப்பொழுதும் அவளுக்குக் கோபம் இருந்தது. ஆனால் அவள் எந்த அளவிற்கு அநியாயமாக அவனைக் கண்டித்தாளோ, கடிந்து கொண்டாளோ, அதை நினைக்கும் பொழுது அந்த கோபம் அவள் மேலேயே திரும்பியது. அவனுடைய ஏமாற்றம், இப்பொழுது அவளது அனுதாபத்தைப் பெற்றது. அவனுடைய அன்பு நன்றியுணர்ச்சியை தூண்டியது, அவனுடைய நடத்தை மரியாதையை அளித்தது, இருப்பினும், அவளால் அவனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அவனை நிராகரித்ததற்கு ஒரு வினாடிகூட அவளால் வருத்தப்பட முடியவில்லை, அவனை மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு சிறிதும் எழவில்லை. அவள் முன்பு நடந்து கொண்டவிதம் அவளுக்கு தொடர்ந்து வெறுப்பையும், வருத்தத்தையும் அளித்தது. அவள் குடும்பத்தினருடைய சந்தோஷப்பட முடியாத குறைகள் அவளுக்கு மேலும் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. அதற்கு தீர்வு உண்டு என்ற நம்பிக்கையே இல்லை. அவளுடைய தந்தை, அவர்களைப் பார்த்து சிரிப்பதில் திருப்தியடைந்தவராக, தன்னுடைய இளைய மகள்களின் பெரும் அற்பத்தனமான செயல்களைக் கண்டிக்க ஒருவித முயற்சியும் என்றும் எடுத்ததில்லை. நல்ல பண்புகள் இல்லாத அவள் தாயாரோ அதனால் ஏற்படும் தீங்கை முற்றிலும் உணரவில்லை. எலிசபெத் பல சமயம் ஜேனுடன் சேர்ந்து கொண்டு, காதரின் மற்றும் லிடியாவின் விவேகமற்ற செயல்களை தடுக்க முற்பட்டாள்; ஆனால் அவர்களுடைய தாயும் அவர்களுக்கு இடம் கொடுத்து ஆதரவு அளிக்கும் பொழுது முன்னேற்றத்திற்கு என்ன வாய்ப்பு இருக்க முடியும்? லிடியாவின் வழிகாட்டுதலில் முழுவதுமாக இருந்த, பலவீன குணமுள்ள, எப்பொழுதும் எரிந்துவிழும் சுபாவமுள்ள காதரின், அவர்களுடைய அறிவுரையை எப்பொழுதும் எதிர்த்தாள்; ஆனால் தன் இஷ்டம்போல், அசட்டையாக நடந்து கொள்ளும் லிடியா அதை காதில்கூட வாங்கிக் கொள்ள மாட்டாள். அவர்கள் அறியாமை, சோம்பல் மற்றும் வீண்பெருமை உடையவர்களாகவும், பிரயோஜனமற்றவர்களாகவும் இருந்தனர். மெரிடனில் இராணுவ அதிகாரி இருந்தால், அவனுடன் ஊர் சுற்றுவர்; மெரிடன் லாங்க்பர்னிலிருந்து நடக்கும் தூரத்தில் இருந்ததால், அங்கே எந்நேரமும் சென்று கொண்டிருப்பர்.
 
ஜேனைப்பற்றிய கவலை மற்றொரு பிரச்சினையாக இருந்தது. டார்சியினுடைய விளக்கங்கள், பிங்கிலிமேல், அவள் முதலில் கொண்டிருந்த நல்ல அபிப்பிராயங்களை மீண்டும் புதுப்பித்ததால், ஜேன் இழந்தது எவ்வளவு அதிகம் என்பதை உணர்த்தியது. அவனுடைய அன்பு உண்மையானது, என்பது ஊர்ஜிதமானது, அவனது நடத்தை குற்றமற்றது என நிரூபிக்கப்பட்டது, அவனுடைய நண்பன்மேல் முழு நம்பிக்கை வைத்திருந்தான் என்பதை மட்டுமே வேண்டுமென்றால் குறையாகச் சொல்லலாம். எல்லா விதத்திலும் விரும்பக் கூடிய ஒரு சூழ்நிலையை, நிறைவான நன்மைகள் பயக்கக் கூடிய ஒரு சூழ்நிலையை, மகிழ்ச்சியூட்டக் கூடிய ஒரு சூழ்நிலையை, தன்னுடைய சொந்த குடும்பத்தினரின் முட்டாள்தனத்தாலும், நடத்தை முறையினாலும் ஜேன் இழந்து விட்டாள் என்ற எண்ணம் அதிக துயரத்தைத் தந்தது.
 
இதனுடன் சேர்ந்து விக்காமினுடைய நடத்தையைப்பற்றியும் தெரிந்து கொண்டது, இதுவரை எதனாலும் தளர்ச்சியடையாத அவளது கலகலப்பான உற்சாகம் இப்பொழுது பெரும் அளவில் பாதிக்கப்பட்டு, சந்தோஷமாகக் காட்சி அளிக்க முடியாதபடி மாற்றியிருந்தது.
 
ரோஸிங்ஸில் எப்பொழுதும் எந்த அளவு நிகழ்ச்சிகள் இருந்தனவோ, அதே அளவில்,அவள் அங்கிருந்த கடைசி வாரமும் இருந்தன. கடைசி மாலை வேளையும் அங்குதான் செலவழிக்கப்பட்டது, லேடி காதரின் மறுபடியும் அவர்களுடைய பயணத்தைப்பற்றிய மிகச் சிறிய விவரங்களையும் கேட்டறிந்து சிறந்த முறையில் எவ்வாறு எல்லாவற்றையும் வைத்துக் கொள்வது என்பதுபற்றி அவர்களுக்கு ஆலோசனை வழங்கியதைக் கேட்டு உடுப்புகளை சரியாக அடுக்குவது அவசியம் என நினைத்த மரியா, வீடு திரும்பியதும், காலையில் அடுக்கி வைத்ததை எல்லாம் மாற்றி தன்னுடைய பெட்டியை புதியதாக அடுக்க வேண்டும் என்று தீர்மானித்தாள்.
 
அவர்கள் பிரியும் பொழுது, லேடி காதரின் தன் நிலைக்கு கீழ் இறங்கி வந்து அவர்களது பிரயாணத்திற்கு வாழ்த்து தெரிவித்து, அடுத்த வருடம் மீண்டும் ஹன்ஸ்போர்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தாள். மிஸ். டீ பர்க், அவர்களுக்கு வணக்கம் தெரிவித்து, கை கொடுக்கும் அளவிற்கு ஒரு பெரு முயற்சி எடுத்தாள்.
 
-----

 



book | by Dr. Radut