Skip to Content

Chapter 13 ஹன்ஸ்போர்டிலிருந்து டார்சி கிளம்புதல்

 

டார்சி அக்கடிதத்தை தன்னிடம் கொடுத்த பொழுது, அதில் அவனது திருமண வேண்டுகோளை மறுபடியும் புதுப்பித்திருப்பான் என்று எலிசபெத் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அதிலிருந்த விஷயம் அவள் சற்றும் எதிர்பார்க்காத ஒன்றுதான். இருந்த போதிலும், அவள் எவ்வளவு ஆர்வமாகப் படித்தாள் என்பதும், எவ்வளவு வேறுபட்ட உணர்வுகளை அவை உண்டாக்கின என்பதும் நன்கு அறியக் கூடியதே. அவள், அதை படிக்கும் பொழுது, அவளுக்கு எழுந்த உணர்ச்சிகளை விவரிக்க முடியாது. மன்னிப்பு கேட்கும் தன்மை அவனிடம் இருக்கிறது என அவன் நம்பியது அவளுக்கு வியப்பாக இருந்தது. வெட்கப்படாமல் இந்த விளக்கத்தை அவனால் தந்திருக்க முடியாது என அவள் திடமாக நம்பினாள். அவன் சொல்லப் போவதை அனைத்தையும் ஒரு தவறான அபிப்பிராயத்துடனேயே பார்க்க ஆரம்பித்த அவள், நெதர்பீல்டில் நடந்த விஷயத்தைப்பற்றி அவனுடைய விளக்கத்தை படிக்க ஆரம்பித்தாள். புரிந்து கொள்ளும் தன்மையை இழக்கச் செய்யும் அளவிற்கு ஆவலாக படித்த அவள், அடுத்த வரியில் என்ன வரப் போகிறது என்று அறிந்து கொள்வதற்கு பொறுமை இழந்து, தன் கண்முன்னே உள்ள வரியின் விளக்கத்தைப் புரிந்து கொள்ளும் திறனை இழந்தாள். அவளுடைய சகோதரி, அவளுடைய உணர்ச்சிகளை வெளியில் வெளிப்படையாகக் காண்பித்துக் கொள்ளவில்லை என்ற அவனுடைய நம்பிக்கையை அவள் உடனே உண்மையல்ல என்று தீர்மானித்தாள். அவன் கூறிய உண்மைகள், அந்த ஜோடிப் பொருத்தத்திற்குக் காட்டிய கடுமையான எதிர்ப்புகள் அவளை மிகவும் கோபம் அடையச் செய்ததால் அவனுக்கு எந்த வகையிலும் நியாயம் வழங்கக் கூடாது என தீர்மானித்தாள். அவன் செய்த தவற்றுக்கு, அவளுக்குத் திருப்தியாக எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. மேலும் அக்கடிதம், செய்த பிழைக்கு மன்னிப்பு கேட்டு எழுதப்படவில்லை. மாறாக, மிகவும் அகந்தையுடன் எழுதப்பட்டிருந்தது. அவனுடைய கர்வத்தையும், பிறரை மதிக்காத இயல்பையும் அது பிரதிபலித்தது.
 
ஆனால் இதனை தொடர்ந்து அவன் விக்காமைப்பற்றி கூறியதை அவள் இன்னும் கவனமாகப் படிக்க ஆரம்பித்தாள். அவனைப்பற்றி விவரித்த நிகழ்ச்சிகள் எல்லாம் உண்மையாக இருக்கும் எனில், அவன்மேல் வைத்திருந்த மதிக்கத்தக்க கருத்துக்கள் எல்லாம் தூக்கி எறியப்பட வேண்டும். டார்சி கூறியவையும், விக்காம் கூறியவையும் ஒன்றாக இருந்தன. அதனால் -அவளுடைய உணர்வுகள் மிகவும் வேதனைப்பட்டது, விளக்குவதற்கு கடினமாக இருந்தன. வியப்பு, பயம் மேலும் பயங்கரமான அதிர்ச்சி அவளை துன்புறுத்தியது. அவள் அதை முழுவதுமாக நம்புவதற்கு விருப்பமில்லாமல், மீண்டும் மீண்டும் இது பொய்யாகத்தான் இருக்க வேண்டும்! இப்படி இருக்க முடியாது! இது இருப்பதிலேயே மிகப் பெரிய பொய்!என்று சொல்லிக் கொண்டிருந்தாள். அக்கடிதத்தை முழுவதுமாகப் பார்த்த பிறகு, கடைசி இரண்டு பக்கங்களில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளாமலேயே அதை தான் பொருட்படுத்தப் போவதில்லை என்று கூறி, இனி தான் அதைப் பார்க்கவும் போவதில்லை என்று அக்கடிதத்தை அவசரமாக அப்புறப்படுத்தினாள்.
 
மனதின் அமைதி குலைந்த நிலையில், எண்ணங்களை வேறு எதிலும் ஈடுபடுத்த முடியாமல், அவள் நடக்கத் தொடங்கினாள், ஆனால் முடியவில்லை. அரை நிமிடத்திற்குள் அக்கடிதம் மறுபடியும் பிரிக்கப்பட்டது, தன்னை சுதாகரித்துக் கொண்டு, விக்காமைப்பற்றி இழிவான தகவல்களை மீண்டும் பரிசீலனை செய்ய ஆரம்பித்தாள். அதை படிப்பதற்கே அவளுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஒவ்வொரு வாக்கியத்தின் பொருளையும் ஆராய முற்பட்டாள். பிம்பெர்லி குடும்பத்துடன் அவனுக்கு இருந்த தொடர்பைப்பற்றி கூறியது, அவன் தெரிவித்தது போலவே இருந்தது; திரு. டார்சியினுடைய பரிவும், அதன் அளவு இதற்கு முன்பு அவளுக்கு தெரியாதிருப்பினும், அவன் கூறியதை ஒத்தே இருந்தது. இதுவரை எழுதியவைகள் எல்லாம் மற்றவர் சொன்னதை உறுதிப்படுத்தியது; ஆனால் உயிலைப்பற்றி படித்த பொழுது, வித்தியாசம் மிகப் பெரிய அளவில் இருந்தது. அவனுக்கு அளிக்கப் போவதாக இருந்த உதவியைப்பற்றி விக்காம் கூறியவை அனைத்தும் அப்படியே நினைவு கூர்ந்து பார்க்கையில் ஏதோ ஒரு பக்கத்தில், மிகுந்த வஞ்சகம் இருந்தது என்பதை உணராமல் இருக்க முடியவில்லை. ஒரு சில வினாடிகளுக்கு, அவள் விரும்பியது தவறில்லை என தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள். ஆனால் அக்கடிதத்தைப் படித்த பொழுது, அதை மறுபடியும் அதிக கவனத்துடன் படித்த பொழுது, அவனுக்கு சேர வேண்டிய உரிமைகள் அனைத்தையும், வேண்டாம் என்றபின் நடந்தவை, அதற்கு பதிலாக மிகப் பெரிய தொகையான மூவாயிம் பவுன்களைப் பெற்றுக் கொண்டது, இவையாவும் அவளுக்கு தயக்கத்தைக் கொடுத்தது. அவள் அக்கடிதத்தை கீழே வைத்துவிட்டு, நடுநிலைமையோடுதான் எல்லாவற்றையும் பார்க்கிறோம் என்று நினைத்துக் கொண்டு, சொல்லப்பட்ட ஒவ்வொரு விஷயமும் நடந்திருக்க வாய்ப்புண்டு என்று நினைக்க விரும்பினாலும், அது முடியாத காரியமாக இருந்தது. இரண்டு பக்கமும், அது வலியுறுத்தலாகவே இருந்தது. மறுபடியும் படிக்கலானாள். ஆனால் இந்த விவகாரத்தைப்பற்றி யார் எப்படி எடுத்துக் கூறினாலும் அது டார்சியைத்தான் மோசமானவன் என்று காண்பித்திருக்க முடியும் என்று இவ்வளவு நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் ஒவ்வொரு வாக்கியமும், நடந்தவைகள் அனைத்திலும் டார்சி குற்றமற்றவன் என்பதை மிகத் தெளிவாகவே நிரூபித்தது.
 
விக்காமினுடைய ஊதாரித்தனத்தைப்பற்றியும், அவனுடைய தீய பழக்கங்களைப்பற்றியும் அவன்மேல் சிறிதும் தயங்காமல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது உண்மையல்ல என்று சொல்வதற்கு அவளிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. லண்டனில் எதேச்சையாக சந்தித்த தன்னுடைய ஒரு முன்னாள் நண்பனின் வற்புறுத்தலினால், படைப்பிரிவில் அவன் சேருவதற்குமுன் அவனைப்பற்றி அவள் கேள்விப்பட்டதே இல்லை. அவன் தன்னைப்பற்றி கூறியதை தவிர, ஹர்ட்போர்ட்ஷயருக்கு வருவதற்குமுன் அவனுடைய வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தது என எவருக்கும் தெரியாது. அவனுடைய உண்மையான குணத்தை அறிய கூடிய சந்தர்ப்பம் இருந்திருந்தாலும், அவளுக்கு விசாரிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவேயில்லை. அவனுடைய முகம், அவனது நடத்தை, அவனுடைய குரல் அனைத்தும் அவனை பார்த்த உடனேயே எல்லா நற்குணங்களையும் உடையவன் என்பதை உறுதி செய்தது. டார்சியினுடைய தாக்குதலிலிருந்து அவனை காப்பாற்ற எண்ணி, அவன் நல்லவனாக நடந்து கொண்ட தருணங்கள் நன்னடத்தை அல்லது நல்லெண்ணத்தின் குறிப்பிடத்தக்க விசேஷமான குணம் அவனிடம் உள்ளதா என்று நினைத்துப் பார்த்தாள்; ஏதாவது ஒரு மேன்மையான நற்குணம் மூலம் டார்சி விவரித்திருக்கும் அவனுடைய சோம்பேறித்தனமான வாழ்க்கை, பல வருடங்களாக இருக்கும் தீய பழக்கங்கள் என இவைகளுக்கு பிராயசித்தமாக ஏதாவது செய்திருக்கிறானா என எண்ணிப் பார்த்தாள். ஆனால் எந்தவித நினைப்பும் அவள் ஞாபகத்திற்கு வரவில்லை.
 
கலகலப்பிலும், பேசுவதிலும் அவனுக்கிருந்த வசீகரத்தை மட்டுமே அவளால் பார்க்க முடிந்தது. அந்த பகுதி மக்களின் பொதுவான பாராட்டை தவிர வேறு எந்தவித கணிசமான நல்லதும் அவளுக்கு ஞாபகத்திற்கு வரவில்லை. அவன் நடந்து கொள்ளும் திறன் அவனுடைய படைப்பிரிவில் அவனுக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இந்த விஷயத்தில் அதிக நேரம் யோசித்துப் பார்த்தபின், அவள் மீண்டும் கடிதத்தைப் படிப்பதைத் தொடர்ந்தாள். ஆனால் ஐயகோ! பிட்ஸ்வில்லியமிற்கும், அவளுக்கும் முன்தினம் காலையில் நடந்த உரையாடல், அவன் மிஸ். டார்சியை வைத்து தீட்டிய திட்டத்தைப்பற்றி சிறிது உறுதிப்படுத்தியது. இறுதியில், எல்லா விவரங்களின் உண்மையைப்பற்றி தெரிந்து கொள்ள கர்னல் பிட்ஸ்வில்லியமையே கேட்டறிந்து கொள்ளுமாறு டார்சி கூறியிருந்தான். தன்னுடைய சகோதரனின் எல்லா விவகாரங்களிலும் அவனுக்கும் அக்கறை இருப்பதை அவளுக்கு அவன் முன்பே கூறியிருந்தான், அவனைப்பற்றிய சந்தேகம் அவளுக்கு எள்ளளவும் இல்லை. ஒரு கட்டத்தில் அவனை கேட்டுவிடுவது என்ற தீர்மானத்திற்கே வந்துவிட்டிருந்தாள். ஆனால் எப்படி கேட்பது என்று தர்மசங்கடமாக இருந்ததினால், மேலும் தன்னுடைய சகோதரன் அதை ஊர்ஜிதம் செய்வார் என்ற திடநம்பிக்கை இல்லாமல் இவ்வளவு ஆபத்தான ஒரு எண்ணத்தை டார்சி வெளியிட்டிருக்கமாட்டான் என்று நம்பியதால், அவ்வெண்ணத்தை முற்றிலும் கைவிட்டாள்.
 
திரு. பிலிப்ஸின் இல்லத்தில் மாலை நேரத்தில் நடந்த முதல் சந்திப்பில், விக்காமிற்கும், தனக்கும் இடையே நடந்த உரையாடல் முழுவதும் அவளுக்குத் தெளிவாக ஞாபகம் இருந்தது. அவன் கூறியவை அவளுக்கு இன்னமும் பசுமையாக ஞாபகத்தில் இருந்தது. முன்பின் தெரியாத ஒருவரிடம் அப்படி பேசுவது மரியாதையில்லை என்று இப்பொழுதுதான் அவளுக்குத் தோன்றியது, முன்னரே எப்படி அவள் கவனத்திலிருந்து தப்பியது என்று யோசித்தாள். அவன் தன்னைத்தானே முன்வைத்து பேசியது ரசிக்கும்படியாக இல்லை என்றும் அவன் பகிங்கரமாக பேசுவதற்கும் அவன் நடந்து கொள்வதற்கும் வித்தியாசம் இருந்தது என்பதையும் கண்டாள். டார்சியை கண்டால் அச்சமில்லை என்றும்--டார்சிதான் ஊரைவிட்டு போக வேண்டும் என்றும் தான் போக வேண்டிய அவசியமில்லை அங்குதான் உறுதியாக இருப்பான் என்றும் பெருமையாகப் பேசியதும் அவள் ஞாபகத்திற்கு வந்தது. இருப்பினும் அடுத்த வாரம் நடந்த நெதர்பீல்ட் நடனத்திற்கு வருவதை அவன் தவிர்த்தான். நெதர்பீல்ட் குடும்பத்தினர், அவ்வூரைவிட்டு கிளம்பும்வரை அவனுடைய கதையை அவன் அவளை தவிர வேறு யாரிடமும் சொல்லவில்லை என்பது அவளுக்கு ஞாபகம் இருந்தது. ஆனால் அவர்கள் கிளம்பிச் சென்றவுடன், அது எல்லா இடங்களிலும் விவாதிக்கப்பட்டது; தகப்பனாரின்மேல் இருக்கும் மரியாதை, மகனை காட்டிக் கொடுப்பதைத் தடுக்கும் என்று உறுதியளித்தாலும், டார்சியின் குணத்தை, ஒழுக்கத்தைப்பற்றி தாழ்த்திப் பேச அவனுக்கு எந்தவித தயக்கமும் இல்லை, மன உறுத்தலும் இல்லை.
 
அவன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் இப்பொழுது எவ்வளவு வித்தியாசமாகத் தோன்றின! மிஸ். கிங்மேல் கொண்டிருந்த கவனம், வெறும் பணத்திற்காக மட்டும் என்று இப்பொழுது புரிந்தது, அது வெறுப்பை ஊட்டியது. தன்னுடைய சொத்தின் சாதாரண நிலை அவனுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு இல்லை எனினும், எதை வேண்டுமானாலும் கைப்பற்றும் அவனுடைய ஆர்வத்தை அது காண்பித்தது. அவன் தன்னிடம் நடந்து கொண்டது எந்தவித நல்லெண்ணத்துடனும் இருந்திருக்காது என்று இப்பொழுது புரிந்து கொண்டாள், தன்னிடம் சொத்து இருக்கிறது என்று நினைத்து ஏமார்ந்து இருக்கலாம், தான் அவனிடம் அஜாக்கிரதையாகக் காண்பித்த ஈடுபாட்டை, அவனுடைய வீண்பெருமையை சந்தோஷப்படுத்துவதற்காக அந்த ஈடுபாட்டை அவன் ஊக்குவித்தான். அவனுக்கு சாதகமாக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து கொண்டே சென்றது. மேலும் டார்சியை நியாயப்படுத்த வேண்டும் எனில் ஜேன் பல நாட்களுக்கு முன்பு பிங்கிலியிடம் கேட்ட பொழுது டார்சி இந்த விஷயத்தில் குற்றமற்றவன் என்று உறுதியாகக் கூறியிருந்தது ஞாபகத்திற்கு வந்தது. டார்சியின் நடத்தை கர்வமாகவும், வெறுப்பூட்டுவதாகவும் இருந்தாலும், அவனை தெரிந்திருந்த நாட்கள் முழுவதிலும், பின்னால் அவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் எழுந்த பொழுது, அவனுடைய பழக்க வழக்கங்களைப்பற்றி அதிகம் அறிய கூடிய வாய்ப்பு கிடைத்ததில் அவள் ஒருபொழுதும் அவன் ஒழுங்கற்றவனாகவோ, அநியாயமாகவோ நடந்து கொண்டு பார்த்ததில்லை, நெறிகெட்டவனாகவும், தீய பழக்கங்கள் உடையவனாகவும் விளங்கியதில்லை. அவனுக்குத் தெரிந்தவர்களிடையே அவன் மிகவும் மதிக்கப்பட்டு வந்தான், முக்கியமானவனாகவும் கருதப்பட்டான்--விக்காமே அவனை ஒரு நல்ல சகோதரனாகப் பார்த்திருக்கிறான். மேலும் டார்சி தன் சகோதரியைப்பற்றி பாசத்துடன் பேசியதை அடிக்கடி அவள் கேட்டது அவனுக்கு இனிமையான உணர்வுகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டாள். விக்காம் கூறியது போலவே அவன் நடந்து கொண்டிருந்தால், நேரான முறையிலிருந்து அத்துமீறி நடப்பது என்பதை உலகத்தின் கண்களிலிருந்து மறைத்திருக்க முடியாது. இப்படிப்பட்ட ஒருவனும், இனிமையான குணமுடைய பிங்கிலியும் எப்படி நண்பர்களாக இருக்க முடியும் என்பதே புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகும்.
 
அவள் தன்னை நினைத்து மிகவும் வெட்கப்பட்டாள். டார்சியைப்பற்றியோ, விக்காமைப்பற்றியோ நினைக்கும் பொழுது, அவள் எப்படி இந்த அளவிற்கு கண்மூடித்தனமாகவும், ஒருதலைபட்சமாகவும், வீண்பெருமையுடனும், முட்டாளாகவும் இருந்திருக்க முடியும் என்று நினைக்கத் தோன்றியது.
 
நான் எவ்வளவு கீழ்தரமாக நடந்து கொண்டுள்ளேன்என்று நினைத்த அவள் எனக்கு சிறப்பாக மதிப்பிட தெரியும் என்று பெருமைப்பட்ட நான்!--என்னுடைய திறமையில் எனக்கு இருந்த மதிப்பு! என்னுடைய சகோதரியின் தாராளமான நேர்மையான மனப்பான்மையை கண்டித்தவள், தேவையில்லாமலும், தவறான சந்தேகத்தாலும் என்னுடைய வீண்பெருமைக்கு சந்தோஷம் சேர்த்துள்ளேன்--இந்த உண்மை தெரிய வந்தது எவ்வளவு தாழ்மையான உணர்ச்சியை தருகிறது! இருப்பினும், இது எனக்கு நியாயமான அவமானம் தான்..........! நான் காதல் வயப்பட்டிருந்தால், நான் இந்த அளவிற்கு மோசமாக கண்மூடித்தனமாக இருந்திருக்கமாட்டேன். ஆனால் காதல் அல்ல, வீண்பெருமைதான் என்னுடைய தவறு--ஒருவர் விரும்பியதால் மகிழ்ந்து, மற்றொருவர் நிராகரித்ததால் புண்பட்டு, எங்களுடைய அறிமுகம் தொடங்கிய நாள் முதல், அவர்கள் இருவர் விஷயத்திலும், என்னுடைய எண்ணங்களையும், மற்றும் அறியாமையையும் ஆதரித்து, விவேகத்தைப் புறக்கணித்து விட்டேன். இந்த நொடிவரை நான், என்னையே புரிந்துக் கொள்ளவில்லை.
 
அவளுடைய எண்ணங்கள் ஜேனிடமும், ஜேனிடமிருந்து பிங்கிலியிடமும் வரிசையாகச் சென்றன. டார்சியின் விளக்கம் அந்த இடத்தில் போதுமானதாக இல்லை என்பதை நினைவுபடுத்திக் கொண்டு, அதை மீண்டும் படிக்க ஆரம்பித்தாள். இரண்டாவது முறையாக படித்ததின் விளைவு மிகவும் வேறுபட்டது--எப்படி அவளால் அவனது வலியுறுத்தலை ஒரு விஷயத்தில் நம்பாமல் இருக்கவும், மற்றொன்றில் மாறாக நம்பவும் முடியும்?--அவளுடைய சகோதரியின் ஈடுபாட்டைபற்றி அவன் முற்றிலும் சந்தேகமே படவில்லை என்று எழுதியிருந்தான்; --சார்லெட்டின் கருத்து எப்பொழுதும் எவ்வாறு இருந்தது என்பதை அவளால் நினைவு கூறாமல் இருக்க முடியவில்லை--ஜேனைப்பற்றி அவன் விவரித்தது நியாயமானதுதான் என்று அவளால் ஒத்துக் கொள்ள முடிந்தது--ஜேனுடைய உணர்வுகள் தீவிரமானதாக இருந்தாலும்கூட, அவள் அதை வெளியில் காண்பித்து கொண்டதில்லை. அவளுடைய போக்கிலும், நடத்தையிலும் உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக இருக்கும் நிலை இருந்தது. அவளுக்கு விவேகமாகவும் நடந்து கொள்ளத் தெரியவில்லை.
 
அவளுடைய குடும்பத்தினரைப்பற்றி எழுதியிருந்த பகுதிக்கு வந்த பொழுது, அது இழிவுபடுத்துவதுபோல் எழுதப்பட்டிருந்தது, அது நியாயமானதுதான். அதைப் படித்தவுடன், அவளுடைய அவமானம் மேலும் அதிகரித்தது. அந்த குற்றத்தின் நியாயம் அவள் மறுக்க முடியாத அளவிற்கு வலிமையாக இருந்தது. அவன் குறிப்பாக சொல்லிக் காண்பித்த சந்தர்ப்பங்கள், நெதர்பீல்ட் நடனத்தில் நடந்தவைகள், அவன் முதலில் தெரிவித்த கண்டனங்களையெல்லாம் உறுதிப்படுத்தியது, இவையாவும், அவளைவிட அவனை அதிகம் பாதித்திருக்க முடியாது.
 
அவளைப்பற்றியும், அவளுடைய சகோதரியைப்பற்றியும் பெருமையாகப் பேசியது சந்தோஷத்தை அளித்தது. அது அவளுக்கு ஆறுதலை அளித்தாலும், தன் குடும்பத்தில் உள்ள மற்றவர்களைப்பற்றி அவமரியாதையாகப் பேசியது ஆறுதலாக இல்லை;--நெருங்கிய உறவினர்களான குடும்ப அங்கத்தினர்களாலேயே ஜேன் ஏமாற்றம் அடைய நேரிட்டது என அவள் கருதினாள்; கண்ணியமில்லாத நடத்தையில் எவ்வாறு இருவருடைய நற்பெயரும் கணிசமாக பாதிக்கப்பட்டது என்று நினைத்துப் பார்க்கும் பொழுது, இதுவரை அடையாத அளவிற்கு பெரும் துயரம் அடைந்தாள்.
 
இரண்டு மணி நேரமாக, வெவ்வேறு வகையான எண்ணங்களுடன், நடந்தவைகளை மீண்டும் மனதில் கொண்டுவந்து பரிசீலனை செய்து, நடந்தவைகளைப்பற்றி எண்ணி, திடீரென்று ஏற்பட்ட இந்த முக்கியமான திருப்பத்திற்கு தன்னைத்தானே முயன்ற அளவுக்கு சமாதானப்படுத்திக் கொண்டு அப்பாதையில் அலைந்து கொண்டிருந்தபின் களைப்பு மேலிட்டதாலும், நீண்ட நேரமாக வீட்டில் இல்லாதது ஞாபகத்திற்கு வந்ததாலும், வீடு திரும்பினாள். எப்பொழுதும்போல் சந்தோஷமாக இருப்பதைப்போல் தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வீட்டிற்குள் நுழைந்தாள். தன்னைப் பேசவிடாமல் தடுத்துவிடுமோ என்றெண்ணி அவ்வெண்ணங்களை அடக்க வேண்டும் என்று தீர்மானித்தாள்.
 
அவள் இல்லாத சமயம், ரோஸிங்ஸிலிருந்து அவ்விரு ஆடவர்களும் வந்திருந்தனர் என்ற விஷயம் அவளுக்கு உடனே தெரிவிக்கப்பட்டது. டார்சி, விடை பெறுவதற்காக சில நிமிடங்களே இருந்தான் என்றும்ஆனால் அவள் திரும்பி வருவாள் என்று எண்ணி கர்னல் பிட்ஸ்வில்லியம் அவர்களுடன் ஒருமணி நேரம் வரையிலாவது அமர்ந்திருந்தார் எனத் தெரிந்தது. அவளைத் தேடி அவள் பின்னே செல்லவும் முடிவு செய்திருந்தார். அவரைப் பார்க்க முடியவில்லையே என வருத்தப்படுவதுபோல் காண்பித்தாலும், உண்மையில் அவள் மிகவும் சந்தோஷப்பட்டாள். பிட்ஸ்வில்லியம் இப்பொழுது ஒரு பொருட்டேயல்ல. அந்த கடிதத்தைப்பற்றி மட்டும்தான் நினைக்க முடிந்தது.
 
---------

 



book | by Dr. Radut