Skip to Content

Chapter 12 கடிதத்தை படிக்கும் எலிசபெத்

 

எந்த எண்ணங்களுடனும், ஆழ்ந்த யோசனைகளுடனும் எலிசபெத் கண் அயர்ந்தாளோ, அதே எண்ணங்களுடனும், யோசனைகளுடனும் மறுநாள் காலை கண் விழித்தாள். நடந்த விஷயத்தினால், அடைந்த ஆச்சரியத்திலிருந்து அவளால் இன்னும் மீள முடியவில்லை; வேறு எதைப்பற்றியும் நினைக்க முடியவில்லை; வேறெந்த வேலையும் செய்வதற்குரிய நிலைமையில் இல்லாததால், காலைச் சிற்றுண்டிக்கு பிறகு காற்றோட்டமாகவும், உடலுக்கு சற்று பயிற்சி அளிக்கும் வகையிலும் நடந்துவிட்டு வரலாம் என்று தீர்மானித்தாள். வழக்கமாக நடந்து செல்லும் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது, டார்சி சில நேரங்களில் அங்கு வருவான் என்பது ஞாபகத்திற்கு வந்ததும், பூங்காவில் நுழைவதற்குப் பதிலாக, சுங்கச் சாவடி இருக்கும் தெருவிலிருந்து இன்னும் சற்று தள்ளி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லும் சந்தில் திரும்பினாள். அந்த பூங்காவின் வேலிதான் இன்னமும் ஒரு பக்க எல்லையாக இருந்தது. விரைவில் அவள் ஒரு நுழைவாயிலைத் தாண்டி திறந்தவெளி மைதானத்திற்குச் சென்றாள்.
 
அந்த பகுதியில் இரண்டு, மூன்று முறை நடந்த பிறகு, காலைப் பொழுதின் இனிமை, அவளை அந்த நுழைவாயில்முன் நின்று, அந்த பூங்காவினுள் பார்க்கத் தூண்டியது. கென்டில் தங்கியிருந்த இந்த ஐந்து வாரங்களில் அவ்வூரில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன, ஒவ்வொரு நாளும் அங்கிருந்த பழைய மரங்களின் பசுமை அதிகரித்துக் கொண்டே வந்ததுபோல் இருந்தது. தொடர்ந்து நடக்கலாம் என்று நினைத்திருந்த பொழுது பூங்காவின் அருகில் இருந்த தோப்பு போன்ற ஒரு பகுதியில், ஒரு நபரின் க்ஷணத்தோற்றம் அவளுக்குக் கிடைத்தது; அந்நபர் அந்த பக்கமாக வந்து கொண்டிருந்தான்; அது டார்சியாக இருக்கலாம் என்று பயந்த அவள், உடனே பின் வாங்கினாள். ஆனால் வந்து கொண்டிருந்த நபரோ, அவளைப் பார்க்கக் கூடிய அருகாமைக்கு வந்து விட்டபடியால், ஆவலுடன் முன்னே வந்து, அவள் பெயரை உச்சரித்தான். அவள் திரும்பிவிட்டிருந்தாள், தன்னை கூப்பிடும் சத்தம் கேட்டு, அக்குரல் டார்சியினுடையதுதான் என்று தெரிந்திருந்தாலும் அவள் நுழைவாயிலை நோக்கி மீண்டும் சென்றாள். அவனும் அதே சமயம் அங்கு வந்து சேர்ந்துவிட்டிருந்தான். அவன் நீட்டிய கடிதத்தை மிகவும் இயல்பாக வாங்கிக் கொண்டாள். இறுமாப்புடன் கூடிய நிதானத்துடன் பார்த்த அவன், ‘நான் சிறிது நேரமாக, உன்னை சந்திப்பேன் என்ற நம்பிக்கையில், இந்த தோப்பில் நடந்து கொண்டிருந்தேன். இந்த கடிதத்தைப் படித்து என்னை கௌரவிப்பாயா?‘--என்று கேட்டுவிட்டு லேசாக தலை தாழ்த்தி விடைபெற்று, அந்த தோப்பிற்குள் சென்று, மறைந்தான்.
 
அக்கடிதத்தைப் படிப்பதால் மகிழ்ச்சி உண்டாகும் என்ற எதிர்பார்ப்பு இல்லை என்றாலும் என்ன எழுதியிருக்கிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தீவிர ஆர்வத்தில், எலிசபெத் கடிதத்தைப் பிரித்தாள். அவளுடைய வியப்பு மேலும் அதிகரிக்கும் வகையில் அதனுள் நெருக்கமான எழுத்துக்களால் எழுதப்பட்ட இரண்டு தாள்களுடைய கடிதத்தைப் பார்த்தாள்--கடிதம் இருந்த உறையே நிறைந்திருந்தது--அவள் அந்த பாதை வழியே நடந்து கொண்டே அக்கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தாள். ரோஸிங்ஸில் அன்று காலை எட்டு மணிக்கு எழுதப்பட்டிருந்த அக்கடிதம், இவ்வாறாக இருந்தது:-
 
இக்கடிதம் கிடைத்தபின், கடந்த இரவு உனக்கு அதிகமாக வெறுப்பை உண்டாக்கிய உணர்வுகளைப்பற்றி மீண்டும் சொல்லவோ, அல்லது எனது வேண்டுகோளை புதுப்பிக்கவோ எழுதப்பட்டிருப்பதாக நினைத்து, நீ பயப்பட வேண்டாம். நான் நேற்று தெரிவித்த என்னுடைய விருப்பங்களைப்பற்றி மீண்டும் கூறி என்னை மேலும் எளியவனாக்கிக் காட்டவோ அல்லது உன்னை வேதனைப்படுத்த வேண்டும் என்ற நோக்கமோ எதுவுமில்லை. நம் இருவருடைய சந்தோஷத்திற்காக இவை விரைவில் மறக்கப்பட்டால்தான் நல்லது. ஆனால் என்னுடைய குணம் மட்டும் இக்கடிதத்தை எழுதத் தூண்டாமல் இருந்திருந்தால் இக்கடித்ததை எழுத வேண்டும் என்ற அவசியமும் எனக்கு எழுந்திருக்காது, நீ அதைப் படிக்க வேண்டும் என்ற அவசியமும் எழுந்திருக்காது. ஆதலால், நீ இதற்கு ஒரு கவனம் கொடுக்க வேண்டும், கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று கேட்கும் சுதந்திரத்தை எடுத்து கொள்வதற்கு என்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன், உன்னுடைய உணர்வுகள் அதற்கு இடம் கொடுக்காது என்று எனக்குத் தெரியும். ஆனால் உன்னிடம் நியாயத்தை எதிர்பார்க்கிறேன்,
 
நேற்று இரவு, நீ மாறுபட்ட தன்மையையுடைய இரு குற்றங்களை என்மேல் சுமர்த்தினாய், இரண்டும் வெவ்வேறு அளவில் இருந்தன. முதல் குற்றம், பிங்கிலியை உனது சகோதரியிடமிருந்து, அவர்கள் இருவருடைய உணர்வுகளை கருத்தில் கொள்ளாமல், பிரித்து விட்டேன் என்பது--அடுத்தது, நான் பல்வேறு உரிமைகள், கௌரவம், மனித நேயம் இவைகளை எல்லாவற்றையும் கருத்தில் கொள்ளாது, இவற்றிற்கு எதிராக நடந்து கொண்டு விக்காமினுடைய செல்வ வளத்தினையும், எதிர்கால வெற்றி வாய்ப்புகளையும் அழித்து விட்டேன் என்பது. என் தந்தையால் அதிகம் விரும்பப்பட்ட, எங்களுடைய ஆதரவின்றி, வேறெந்த ஆதரவும் இல்லாத, ஒரு இளைஞன், எங்களுடைய உதவி தொடர்ந்து கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் வளர்ந்து வந்த என்னுடைய இளமைக்கால நண்பனை, நான் வேண்டும் என்றே விருப்பப்பட்டு தூக்கி எறிந்து விட்டேன் என்றால் அது பாவத்திற்குரிய செயலாகும். அதனோடு, சில வாரங்களின் பரிச்சியத்தால் மட்டுமே ஏற்பட்ட மனப்பற்றுடைய இரு இளவயதினர் பிரிவதை, ஒப்பிடவே முடியாது. ஆனால் கடந்த இரவு என்மேல் தாராளமாக சுமத்தப்பட்ட பழியின் தீவிரம், நான் கீழே தொடர்ந்து எழுதப் போகும் என்னுடைய செய்கை மற்றும் நோக்கங்களுக்கான காரணங்களை நீ படித்து முடித்தபின் குறையும் என்று நான் எண்ணுகிறேன். இதனை நான் விளக்கும் பொழுது, உன்னைப் புண்படுத்துவதுபோல் ஏதாவது உணர்வுகளைப்பற்றி நான் கூற வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன் என்றால், என்னை மன்னித்துவிடு என்று மட்டுமே என்னால் கூற முடியும்--இது அவசியம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்--மேலும் மேலும் மன்னிப்பு கேட்பது என்பது பைத்தியக்காரத்தனமாக இருக்கும்--ஹர்ட்போர்ட்ஷயருக்கு வந்த சில நாட்களிலேயே, அவ்வூரில் இருந்த மற்ற எந்த பெண்களையும்விட, உன் மூத்த சகோதரியை, பிங்கிலி விரும்பினான் என்பதைத் தெரிந்து கொண்டேன்--ஆனால் நெதர்பீல்டில் மாலையில் நடந்த நடனத்தன்றுதான் அவன் அவள்மேல் தீவிரமாகப் பற்று வைத்திருந்தான் என்று உணர முடிந்தது--நான் இதற்கு முன்பு அடிக்கடி அவன் காதலில் விழுந்ததைப் பார்த்திருக்கிறேன்--அந்த நடனத்தில், நான் உன்னுடன் நடனமாடும் கௌரவத்தைப் பெற்ற பொழுது, பிங்கிலி, உன் சகோதரியின்மேல் காட்டிய கவனத்தால் அவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடும் என்ற பொதுவான எதிர்பார்ப்பு இருந்ததாக, சர் வில்லியம் லூகாஸினுடைய தற்செயலான தகவல் மூலம், முதலில் தெரிந்து கொண்டேன். அது ஒரு தீர்மானமான சம்பவமாக, தேதி மட்டும் குறிப்பிடப்படாததுபோல் பேசினார். அந்த விநாடியிலிருந்து, நான் என் நண்பனைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன், இதுவரை அவனிடம் பார்த்திராத அளவுக்கு அவன் மிஸ். பென்னட்டை விரும்புகிறான் என்பதை நான் புரிந்து கொண்டேன். உனது சகோதரியையும் கவனித்தேன்--அவளுடைய பார்வையும், நடத்தையும் எப்பொழுதும்போல் வெளிப்படையாகவும், கலகலப்பாகவும், மனத்தைக் கவரும் வண்ணம் இருந்தன. ஆனால் பிரத்யேகமான அக்கறை இருந்ததற்கு எந்த அறிகுறியும் இல்லை. மாலை நேரம் அவளை கவனித்ததிலிருந்து, அவள் அவனுடைய தனிப்பட்ட கவனத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டாலும், அதை எந்த மன எழுச்சியும் இல்லாமல்தான் வரவேற்றாள்--இந்த இடத்தில் நீ கூறியது தவறு இல்லை என்றால், நான்தான் தவறு செய்திருப்பேன். உன்னுடைய சகோதரியைப்பற்றி உனக்குத்தான் அதிகம் தெரியும் என்பதால், நான் தவறாக இருக்கலாம்--இக்காரணத்தினால் நான் உன் சகோதரியை புண்படுத்தியிருப்பேன் என்றால், நீ என்மேல் கோபம் கொண்டது நியாயமானதுதான். உன்னுடைய சகோதரியின் முகத்தில் நிலவுகின்ற அமைதியும், அவள் நடந்து கொள்ளும் விதமும், கூர்ந்து கவனிக்கும் ஒருவருக்கு, எவ்வளவுதான் இனிய இயல்புடையவளாக இருந்தாலும், அவள் மனதை எளிதில் தொட்டுவிட முடியாது என்ற திடநம்பிக்கையை கொடுக்கும் என்று உறுதியாக சொல்வதற்கு நான் தயங்க மாட்டேன்--அவள் சிரத்தையில்லாமல் இருக்கிறாள் என நம்புவதில் நான் ஆவலாக இருந்தேன் என்பது உண்மைதான், ஆனால் என்னுடைய ஆய்வுகளும், முடிவுகளும் என்னுடைய எதிர்பார்ப்பாலும், பயத்தாலும் வழக்கமாக பாதிக்கப்படாது என தைரியமாகச் சொல்வேன். நான் எதிர்பார்த்தேன் என்பதால், அவள் அலட்சியமாக இருக்கிறாள் என்று நான் நம்பவில்லை. அவள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினாலும் நடுநிலைமையோடு பார்க்கும் பொழுது அதுதான் உண்மை என்று தெரிந்தது. நான் நேற்று சில ஆட்சேபணைகளைத் தெரிவித்திருந்தேன். மிக தீவிரமான காதல் இருந்தால் மட்டுமே அதுபோன்ற கடுமையான ஆட்சேபணைகளை ஒதுக்கி வைக்க முடியும். ஆனால் அவை மட்டுமே இத்திருமணத்தை நிறுத்த காரணங்கள் இல்லை. தாழ்ந்த சம்பந்தங்கள் என் நண்பனுக்கு எனக்கு இருப்பதுபோல் பெரிய தீங்காக இருக்காது. ஆனால் மிகவும் வெறுப்பூட்டுகின்ற வேறு சில காரணங்கள் இருந்தன;--அந்த காரணங்கள் இன்னமும் இருந்தாலும், இரண்டு பேர் விஷயத்திலும் அக்காரணங்கள் ஒரே அளவில் இருக்கும். அது என் கண் முன்னே இல்லை என்பதால் நான் அதனை மறக்க பெரு முயற்சி செய்தேன்--இக்காரணங்களை நான் சுருக்கமாகச் சொல்லியே ஆக வேண்டும்--ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பினை எப்பொழுதுமே ஒரே சீராக ஏமாற்றும் உனது தாயாரையும், உனது மூன்று இளைய சகோதரிகளையும், சில சமயம் உனது தகப்பனாரையும், நினைக்கும் பொழுது, ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தாலும் உனது தாயாரின் குடும்ப நிலை எவ்வளவோ தேவலாம் என்று ஆக்கிவிடுகிறது--என்னை மன்னித்துவிடு--உன்னை நோகடிக்கச் செய்வது வேதனையாகத்தான் இருக்கிறது. உன்னுடைய குடும்பத்தினரிடம் இவ்வளவு குறைகள் இருப்பதில் உனக்கு இருக்கும் அக்கறைக்கும், அதைப்பற்றி நான் சொல்வதில் உனக்கு ஏற்படும் வருத்தத்திற்கும் நடுவே இருக்கும் ஒரே ஒரு ஆறுதல் நீயும், உனது மூத்த சகோதரியும், அவர்களைப் போலல்லாமல் இருப்பதுதான். அன்று மாலை நடந்த சம்பவங்களிலிருந்து அங்கு இருப்பவர் அனைவரைப்பற்றிய என் கருத்து ஊர்ஜிதமாயிற்று, என்னுடைய நண்பனை மோசமான சம்பந்தத்திலிருந்து காப்பாற்ற அது என்னை மேலும் தூண்டியது--மறுநாள் அவன் நெதர்பீல்டிலிருந்து லண்டனுக்கு கிளம்பினான். சீக்கிரம் திரும்பி வந்துவிட வேண்டும் என்ற திட்டத்தில்தான் கிளம்பினான் என்று உனக்கு ஞாபகம் இருக்கும் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்--நான் வகித்த பங்கை, இப்பொழுது விளக்கியாக வேண்டும். அவனது சகோதரிகளின் சங்கடமும், என்னுடைய உணர்வுகளைப் போல்தான் இருந்தன. நாங்கள் அனைவரும் ஒன்றாகத்தான் நினைக்கிறோம் என்பது விரைவில் கண்டுபிடிக்கப்பட்டது; அவர்களது சகோதரனை ஜேனிடமிருந்து பிரிப்பதில் நேரத்தை ஒரு சிறிதும் வீணாக்கக் கூடாது என முடிவெடுத்தோம். அவனுடன் நேராக லண்டனில் சேர்ந்து கொள்ள வேண்டும் என தீர்மானித்தோம்--அதன்படி அங்கு சென்றோம்--அங்கு, நான் அவனுடைய விருப்பத்தில் உள்ள தீமைகளைப்பற்றி எடுத்துரைக்க உடனடியாக செயல்பட துவங்கினேன்--அவனுக்கு விளக்கி, மனப்பூர்வமாக செயல்படுத்தினேன் --ஆனால் நான் உன்னுடைய சகோதரியின் சிரத்தையற்ற மனோபாவத்தைப்பற்றி உறுதியாக தயங்காமல் எடுத்து சொல்லி இருக்காவிடின், இம்மாதிரி குறைகளை எடுத்துச் சொன்னது அவனுடைய தீர்மானத்தை தடுமாற வைத்திருக்கலாம், அல்லது தள்ளிப் போட்டிருக்கலாம், ஆனால் திருமணத்தை தடுத்து நிறுத்தியிருக்கும் என நான் நம்பவில்லை. தன்னுடைய அளவிற்கு இல்லையெனினும், தன்னுடைய காதலை அவள் உண்மையாக ஏற்றுக் கொள்வாள் என அவன் முதலில் நம்பியிருந்தான்--ஆனால் பிங்கிலிக்கு இயற்கையாகவே மிக அடக்கமான குணம் உண்டு, அவனுடையதைவிட என்னுடைய மதிப்பீடுகளில் அவனுக்கு மிகவும் நம்பிக்கையுண்டு. அதனால் அவன் ஏமாற்றப்பட்டு விட்டான் என அவனை நம்ப வைப்பதில் எந்தவித கஷ்டமும் இருக்கவில்லை. அந்த நம்பிக்கையைக் கொடுத்த பிறகு, ஹர்ட்போர்ட்ஷயருக்கு திரும்ப வேண்டாம் என்று அவனை வற்புறுத்துவதற்கு ஒரு வினாடியே போதுமானதாக இருந்தது--இவ்வளவு செய்ததற்கு நான் என்மீதே குற்றம் சாட்டிக் கொள்ள முடியாது. இந்த முழு விவகாரத்திலும் என்னுடைய ஒரு நடத்தையை நினைத்து நான் அதிருப்தியடைகிறேன்; உன்னுடைய சகோதரி லண்டனில் இருக்கிறாள் என்பதை அவனிடமிருந்து மறைக்க ஓர் உபாயத்தை மேற்கொள்ளும் அளவிற்கு தாழ்ந்து போனேன். எனக்குத் தெரியும், மிஸ். பிங்கிலிக்கும் தெரிந்திருந்தது. ஆனால் அவளுடைய சகோதரனுக்கு இன்னமும் தெரியாது--அவர்கள் எந்தவித வேண்டாத விளைவுகளுமின்றி சந்தித்திருக்கலாம்; --ஆனால் அவனுடைய விருப்பம் இன்னும் அணைக்கப்படவில்லை என எனக்குத் தெரிந்தது. ஆகையால் அவளைப் பார்ப்பது ஆபத்தில் முடியலாம்--இந்த மறைத்தல் என் தகுதிக்குத் தாழ்ந்ததாக இருக்கலாம்--ஆனால் அது செய்யப்பட்டது, இருப்பினும் அது நன்மைக்கே செய்யப்பட்டது--இந்த விஷயத்தைப்பற்றி எனக்கு இனி சொல்வதற்கு வேறொன்றுமில்லை, கேட்பதற்கு எந்த மன்னிப்பும் இல்லை--நான் உனது சகோதரியின் மனதைப் புண்படுத்தியிருந்தால், அது தெரியாமல் செய்யப்பட்ட ஒன்று; இச்செயலை செய்வதற்கான என்னுடைய நோக்கம் உனக்கு இயல்பாகவே போதுமானதாக இருக்காது. நான் அதனை கண்டனம் செய்வதற்கு இன்னும் கற்றுக் கொள்ளவில்லை--மற்றதைப்பற்றி கூற வேண்டும் எனில், மேலும் தீவிரமான குற்றச்சாட்டு, விக்காமைப் புண்படுத்தியிருக்கிறேன் என்பதை தவறு என்று நிரூபிக்க வேண்டும் எனில் என்னுடைய குடும்பத்துடன் அவனுக்கிருந்த தொடர்பைப்பற்றி முழுமையாக கூறியாக வேண்டும். அவன் குறிப்பாக என்மேல் என்ன குற்றம் சாட்டினான் என்பதுபற்றி எனக்குத் தெரியாது; ஆனால் நான் இப்பொழுது கூறப் போவது உண்மை என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட உண்மையான சாட்சிகளை கொண்டுவர முடியும். பிம்பெர்லி எஸ்டேட்டை பல வருடங்களாக நிர்வாகம் செய்தவரும், ஒப்படைத்த வேலையை செயலாற்றுவதில் நன்னடத்தை உடையவருமான ஒரு கௌரவமான மனிதருடைய மகன்தான் விக்காம். அதனால் அவருக்கும், அவருடைய மகனான ஜார்ஜ் விக்காமிற்கும் கைமாறு செய்ய வேண்டும் என்று இயல்பாகவே எனது தகப்பனாருக்குத் தோன்றியது. அதனால் அவருடைய உதவியை தாராளமாக வழங்கினார். என்னுடைய தகப்பனார் அவன் பள்ளிக்குச் செல்ல உதவினார். பிறகு முக்கியமான உதவியான கேம்பிரிட்ஜ் சென்று படிக்கவும் உதவினார். அவனுடைய தந்தை, தன்னுடைய மனைவியின் ஊதாரித்தனமான செலவினால், எப்பொழுதுமே ஏழையாக இருந்ததால், ஒரு நல்ல கண்ணியமான படிப்பினை அவனுக்குத் தந்திருக்க முடியாது. வசீகரமான நடத்தையுடைய அவனது துணை எனது தகப்பனாருக்கு பிடித்ததோடு அல்லாமல், அவனைப்பற்றி உயர்வாகவும் நினைத்திருந்தார், சர்ச்சில் பணியாற்றுவதுதான் அவனுடைய உத்தியோகமாக இருக்க வேண்டும் என்று நினைத்து, அதை அவனுக்கு அளிப்பதாக இருந்தார். என்னைப்பற்றி சொல்ல வேண்டுமேயானால், நான் பல வருடங்களுக்கு முன்பாகவே, முதலில் அவனைப்பற்றி வேறுவிதமாக நினைக்கத் தொடங்கினேன். துஷ்ட மனோபாவங்கள்--அவனுடைய உற்ற நண்பரிடமிருந்து மிகக் கவனமாகப் பாதுகாத்த அவனுடைய கொள்கையற்ற வாழ்க்கை முறை இவையாவும், ஏறக்குறைய அவனுடைய சமவயதுள்ள ஒரு இளைஞனின் பார்வையிலிருந்து தப்ப முடியவில்லை. மேலும் திரு. டார்சியால் பார்த்திருக்க முடியாத அவனுடைய அஜாக்கிரதையான தருணங்களையும் பார்க்கக் கூடிய சந்தர்ப்பங்கள் இந்த இளைஞனுக்கு கிடைத்தன. இங்கு மீண்டும் உனக்கு நான் வேதனையை கொடுக்கப் போகிறேன்--எந்த அளவிற்கு என்று உன்னால் மட்டுமே கூற முடியும். ஆனால் எப்படிப்பட்ட உணர்ச்சியை விக்காம் ஏற்படுத்தியிருந்தாலும், அவை எப்படிப்பட்டது என்ற சந்தேகம், அவனுடைய உண்மையான சொரூபத்தை நான் வெளிப்படுத்துவதைத் தடுக்காது. இதற்கு இன்னொரு நோக்கமும் உண்டு. என்னுடைய அருமையான தகப்பனார் ஐந்து வருடங்களுக்குமுன் காலமானார்; இறுதிவரை அவன்மேல் அவர் கொண்டிருந்த அன்பு மாறாமல் இருந்தது. அவருடைய உயிலில் அவர் எனக்கு குறிப்பாக சிபாரிசு செய்திருந்தார். அவனுடைய உத்தியோகத்தில் எவ்வளவு தூரம் அவனை உயர்த்த முடியுமோ அந்த அளவிற்கு அவன் உயருவதற்கு ஆதரவு அளிக்கும்படியும், அந்த பதவி காலியாகும் பொழுது, அவனுக்குக் கொடுக்கும்படியும், அவ்வுயிலில் எழுதியிருந்தார். மேலும் ஓராயிரம் பவுனும் அளிக்கப்பட வேண்டும் என்றிருந்தது. அவனுடைய தந்தையும், என்னுடைய தந்தைக்கு பிறகு அதிக நாள் வாழவில்லை, இவை நடந்து முடிந்த ஆறு மாதத்திற்குள்விக்காமிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. பாதிரியாராக நியமிக்கப்படும் உத்தரவை வாங்க விருப்பமில்லை என்றும், ஆதலால், அவனுக்கு எந்த இலாபமும் தராத இந்த மேம்பட்ட பதவிக்கு பதிலாக, வேறு பண ரீதியான நன்மையை பெற்றுக் கொள்ள அவன் எதிர்பார்ப்பதை நான் நியாயமற்றது என நினைக்கக் கூடாது என்று எழுதியிருந்தான். மேலும் அவனுக்கு சட்டம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகவும், அதற்கு ஆயிரம் பவுன் போதாது என்பது எனக்குத் தெரிந்திருக்கும் எனவும் எழுதியிருந்தான். அவன் கூறுவது உண்மை என்று நம்பவில்லை எனினும், உண்மையாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். எதுவாக இருந்தாலும் அவன் முன் வைத்த கருத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்தேன். விக்காம் பாதிரியாராக இருப்பதற்குத் தகுதியில்லை என எனக்குத் தெரியும். அதனால் இந்த விஷயம் உடனே தீர்த்து வைக்கப்பட்டது. சர்ச்சில் பணிபுரியும் வாய்ப்பு என எப்பொழுதாவது கிடைத்தால், அதற்கும் உரிமை கோர மாட்டேன் என்றான், அதற்கு பதிலாக மூவாயிரம் பவுன்கள் பெற்றுக் கொண்டான். எங்களிடையே இருந்த எல்லாத் தொடர்புகளும் முடிவடைந்தது போலாயின. எனக்கு அவனைக் கண்டாலே பிடிக்கவில்லை. அதனால் அவனை பிம்பெர்லிக்கு அழைக்கவில்லை, ஊரில் அவனுடன் நட்பு கொள்வதற்கும் விருப்பப்படவில்லை. அவன் லண்டனில்தான் வாழ்ந்தான் என நினைக்கிறேன், சட்டம் படிப்பதாக சொன்னது வெறும் நாடகம்தான், எந்தவித கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக இருந்ததினால், அவன் சோம்பேறியாக வாழ்ந்து வாழ்க்கையை வீணடித்தான். மூன்று வருடங்கள்வரை அவனைப்பற்றி எந்த தகவலும் இல்லை; ஆனால் அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த வேலையில் இருந்தவர் இறந்த பிறகு அதை அவனுக்கு வழங்கக் கோரி மீண்டும் என்னை கேட்டு எழுதியிருந்தான். அவனுடைய நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என அவன் எழுதியிருந்தான். அதை நம்புவது எனக்கு கஷ்டமாக இல்லை. சட்டம் என்பது ஒரு லாபமில்லாத படிப்பு என்று நினைத்தான். அவனுக்கு என்று சொல்லப்பட்ட பாதிரியாரின் பொறுப்பை கொடுக்க வேறு ஒருவரும் எனக்கு இல்லை என்பதாலும், எனது மதிப்பிற்குரிய தகப்பனாரின் விருப்பத்தை நான் மறந்திருக்க மாட்டேன் என்று நினைத்ததாலும், அவனுக்குத்தான் நான் இதனை வழங்குவேன் என்று சிறிதும் சந்தேகம் இல்லாமல் நம்பினான். அவ்வாறு நான் அதை அவனுக்கு அளித்தேன் எனில், அப்பொறுப்பில் அவனை நியமித்துக் கொள்வதில் தீர்மானமாக இருந்தான். நான் அவனது கோரிக்கைக்கு இணங்க மறுத்ததிற்கும், அதையே மீண்டும் மீண்டும் எழுதியதை எதிர்த்ததிற்கும், என்மேல் பழி சுமத்த மாட்டாய் என்று எண்ணுகிறேன். அவனுடைய சூழ்நிலை எந்த அளவுக்கு அவனுக்குத் துன்பத்தை கொடுத்ததோ அதே அளவிற்கு அவனுடைய கோபமும் இருந்தது. என்னைப்பற்றி எந்த அளவு வன்மையுடன் மற்றவர்களிடம் அவதூறாகப் பேசினானோ அதே அளவில் என்னை நிந்திக்கவும் செய்தான். இந்தக் கால கட்டத்திற்குப் பிறகு, அவனை பார்க்கவேயில்லை. அவன் எப்படி வாழ்ந்தான் என்று எனக்குத் தெரியாது. ஆனால் போன கோடையில் அவன் மீண்டும் வேதனையளிக்கும் வகையில் என் வழியில் நுழைந்தான். நான் இப்பொழுது ஒரு சம்பவத்தைப்பற்றி சொல்லியாக வேண்டும், நானே அதை மறக்க விரும்புகிறேன், இப்போதிருக்கும் நிலைமையைவிட வேறெந்த நிலைமையும் என்னை எவருக்கும் இந்த சம்பவத்தைப்பற்றி வெளிப்படுத்த தூண்ட முடியாது. இவ்வளவு சொன்ன பிறகு, நீ இதை ரகசியமாக வைத்துக் கொள்வாய் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. என்னைவிட பத்து வயது இளையவளான எனது சகோதரி என்னுடைய தாயின் சகோதரரின் மகனான பிட்ஸ்வில்லியமுடைய பாதுகாப்பிலும், என்னுடைய பாதுகாப்பிலும் ஒப்படைக்கப்பட்டாள். ஒரு வருடத்திற்கு முன்பு, அவளை பள்ளியிலிருந்து வெளியே எடுத்து அவளுக்காக லண்டனில் ஒரு வீடு ஏற்பாடு செய்தோம். அவளை கவனித்துக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பெண்மணியுடன் அவள் போன கோடைக்காலம் ராம்ஸ்கேட்டிற்குச் சென்றாள், சந்தேகத்திற்கிடம் இல்லாமல் ஏதோ ஒரு திட்டத்துடன் விக்காமும் அங்கு சென்றான். நாங்கள் நல்லவள் என்று நினைத்து ஏமார்ந்த திருமதி. யங் என்ற பெண்மணியுடன் அவனுக்கு ஏற்கனவே அறிமுகம் இருந்தது என்பது நிரூபணம் ஆயிற்று. அவளுடைய ரகசியமான உதவியால், தன்னை நல்லவனாக ஜார்ஜியானாவிடம் காண்பித்து கொண்டு அன்பான உள்ளம் கொண்ட அவள், தன்னுடைய குழந்தை பிராயத்தில் அவன் தன்மேல் காட்டிய பரிவை இன்னமும் ஞாபகம் வைத்துக் கொண்டிருந்ததை வைத்து தன்மேல் காதல் இருப்பதாக அவளை நம்ப வைத்து, தன்னுடன் ஓடிப் போகவும் சம்மதிக்க வைத்தான். அவளுக்கு அப்பொழுது வயது பதினைந்து, அவளை மன்னிக்க அது ஒன்றுதான் காரணம். அவளுடைய விவேகமில்லாத அவசரச் செயலை நான் கூறிவிட்டேன், அந்த விஷயத்தைப்பற்றிய விவரங்களையும் அவள் மூலமாகத்தான் நான் அறிந்தேன் என்று சொல்வதில் சந்தோஷமடைகிறேன். ஓடிப் போக நினைத்த ஓரிரு நாட்களுக்கு முன்பு, எதிர்பாராதவிதமாக நான் அங்கு போய் சேர்ந்தேன். தந்தையைப்போல் பாவித்த ஒரு சகோதரன் மனம் புண்படும்படியும் அவமானம் அடையும்படியும் நடந்து கொள்ளக் கூடாது என்ற எண்ணத்தில், ஜார்ஜியானா பிறகு எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டாள். நான் என்ன நினைத்திருப்பேன், எப்படி நடந்து கொண்டிருப்பேன் என்று நீயே கற்பனை செய்து பார்க்கலாம். எனது சகோதரியின் பெயர் கெட்டுப் போகாமலிருக்கவும், அவளுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்ததாலும் இதை வெளியில் எல்லோருக்கும் சொல்ல முடியவில்லை. ஆனால் அவ்விடத்தைவிட்டு உடனே சென்றுவிட்ட விக்காமிற்கு ஒரு கடிதம் எழுதினேன். திருமதி. யங் அவளது பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டாள். விக்காமினுடைய முக்கிய குறியே எனது சகோதரியின் சொத்தாகிய முப்பதாயிரம் பவுன்கள்தான். ஆனால் என்னை பழி வாங்குவதுதான் மிகப் பெரிய தூண்டுதலாக இருந்திருக்கும் என்று என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவனுடைய பழிக்குப்பழி வாங்குவது உண்மையாக முழுமை பெற்றிருக்கும். இதுதான் நாம் இருவரும் சம்பந்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு சம்பவங்களைப்பற்றிய உண்மையான விவரங்கள். இது பொய் என்று, நீ முற்றிலும் புறக்கணிக்காமல் இருந்தால், விக்காமிற்கு கொடுமை இழைத்தேன் என்ற குற்றச்சாட்டிலிருந்து இனிமேல் என்னை நீ விடுவிப்பாய் என்று நம்புகிறேன். எந்த முறையில் எந்த பொய்யான வகையில் உன்னை நம்ப வைத்திருக்கிறான் என்று எனக்குத் தெரியாது; ஆனால் அவனுடைய வெற்றியை நினைத்து ஆச்சரியப்பட முடியாது. எங்கள் இருவரைப்பற்றிய எல்லா விவரங்களையும் உனக்கு அறிந்திருக்க வாய்ப்பில்லாததால், அதை கண்டுபிடிப்பது என்பது உன்னால் முடியாத காரியம், சந்தேகப்படுவது என்பது உன் குணமல்ல. ஏன் இவையெல்லாவற்றையும் நேற்று இரவே சொல்லவில்லை என நீ நினைப்பாய். எதைச் சொல்லலாம், எதைச் சொல்லியாக வேண்டும் என்பது எனக்கே புரியாமல் இருந்தது. நான் இங்கு கூறியவைகள் அனைத்தும் உண்மை என்று நிரூபிக்க கர்னல் பிட்ஸ்வில்லியமைத்தான் சாட்சியாக அழைக்க வேண்டும். அவன் எங்களுடைய நெருங்கின உறவினன் என்ற முறையிலும், எப்பொழுதும் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டிருப்பவன் என்ற முறையிலும் மேலும் எனது தந்தையின் உயிலை செயல்படுத்துபவரில் ஒருவன் என்ற காரணத்தினாலும் எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்வது என்பது அவனுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. என்மேல் உள்ள வெறுப்பின் காரணமாக நான் இப்பொழுது வலியுறுத்தியதை நீ நம்பவில்லையெனில், கர்னல் பிட்ஸ்வில்லியமிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம். அவனை கலந்து ஆலோசிக்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படலாம், நான் காலையில் எப்படியாவது இந்தக் கடிதத்தை உன்னிடம் சேர்க்க முயற்சி செய்கிறேன். நான் இதை மட்டும் சொல்ல விரும்புகிறேன். கடவுள் உன்னை ஆசிர்வாதிப்பாராக.
 
பிட்ஸ்வில்லியம் டார்சி.
-----
 

 



book | by Dr. Radut