Skip to Content

Chapter 11 எலிசபெத்திற்கு, டார்சி விடுக்கும் திருமண வேண்டுகோள்

 

அவர்கள் எல்லோரும் சென்ற பிறகு, டார்சி மீது இருக்கும் கோபத்தை மேலும் அதிகமாக்கிக் கொள்ளும் உத்தேசத்தில், தான் கென்டிற்கு வந்ததிலிருந்து ஜேனிடமிருந்து வந்த கடிதங்களையெல்லாம் எடுத்து ஆராய ஆரம்பித்தாள். அதில் அவள் எதையும் குறை கூறி எழுதவில்லை, நடந்து முடிந்த விஷயங்களுக்கு உயிர் கொடுக்கவுமில்லை, தற்போதைய துயரங்களைப்பற்றியும் எழுதவில்லை. அவளுடைய சாந்தமான குணமும், எல்லோரைப்பற்றியும் நல்லவிதமாகவே நினைக்கும் மனமும், அவளுடைய உற்சாகத்தை என்றும் குறைத்ததில்லை. ஆனால் எல்லா கடிதங்களிலும் ஏறத்தாழ ஒவ்வொரு வரியிலும், வழக்கமாக உற்சாகமாக எழுதும் அவளது பாணியில் எழுதப்படவில்லை எனத் தெரிந்தது.
 
முதலில் படித்த பொழுது தெரியாதது இப்பொழுது கூர்ந்து படித்தவுடன் ஒவ்வொரு வாக்கியத்திலும் ஒரு அமைதியின்மை தெரிந்ததை எலிசபெத் கவனித்தாள். டார்சியால், அவனுடைய வெட்கம் கெட்ட ஜம்பத்தின் விளைவாக ஜேனிற்கு என்ன துயரத்தை தண்டனையாக அவனால் கொடுக்க முடிந்தது என்பதை அறிந்த எலிசபெத்திற்கு, தன்னுடைய சகோதரியின் துயரத்தை மேலும் கூர்மையாக உணர முடிந்தது. நாளை மறுநாளுடன் ரோஸிங்ஸில் அவனது வருகை முடிந்துவிடும் என்று நினைப்பது அவளுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. இதைவிட மேலாக இன்னும் பதினைந்து நாட்களில் தான் மறுபடியும் ஜேனுடன் இருக்கலாம் என்பதையும், அவளுடைய உற்சாகத்தை புதுப்பிக்க தன்னால் இயன்றதை, தன் அன்பால் செய்யலாம் என்பதையும், நினைத்து ஆறுதல் அடைந்தாள்.
 
டார்சி கென்டைவிட்டுச் செல்லும் பொழுது, அவனுடைய சகோதரனும் அவனுடன் செல்வான் என்பதை நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஆனால் தனக்கு அம்மாதிரி ஒரு எண்ணமே இல்லையென்று கர்னல் பிட்ஸ்வில்லியம் தெளிவாக்கிவிட்டார். அதனால் அவர் இனிமையானவராக இருந்தாலும் அவர் செல்வதினால் தான் வருத்தப்பட வேண்டாம் என முடிவு செய்தாள்.
 
இந்த பிரச்சினையை சரி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது வாசலில் அடித்த அழைப்பு மணியின் சத்தம் அவளை திடீரென தட்டி எழுப்பியது. முன்பு ஒரு நாள் மாலையில் நெடுநேரம் கழித்து வந்த கர்னல் பிட்ஸ்வில்லியம்தான் தன்னைப்பற்றி விசாரிக்க வந்திருப்பார் என்று நினைக்கையில் அவளது உற்சாகம் சற்று சிறகடித்துப் பறந்தது. அவள் பெரிதும் வியப்படையும்படி, டார்சி அறைக்குள் நுழைவதைப் பார்த்த அவள் விரைவில் இந்த எண்ணத்தை அகற்றினாள், அவளது உற்சாகமும் வேறு விதமாக பாதிக்கப்பட்டது. மிகுந்த அவசரத்துடன், அவன் உடனே அவள் உடல் நலத்தைப்பற்றி விசாரித்தான். தன்னுடைய வருகைக்கு காரணம் அவள் நலம் என்று கேட்க விரும்பியதுதான் என்றான். அவள் ஒருவித உணர்ச்சியுமில்லாமல், ஆனால் மரியாதையுடன் பதிலளித்தாள். அவன் சில நொடிகள் அமர்ந்துவிட்டு, பிறகு எழுந்து அறையில் அங்குமிங்குமாக நடக்க ஆரம்பித்தான். எலிசபெத் ஆச்சரியப்பட்டாலும், ஒரு வார்த்தைகூட பேசவில்லை. பல நிமிட மௌனத்திற்குப் பிறகு அவன் அவளிடம் வந்து பதட்டத்துடன் பேச ஆரம்பித்தான்,
 
நான் பயனில்லாமல் போராடியிருக்கிறேன். இனி இது முடியாது. என்னுடைய உணர்வுகளை அடக்க முடியவில்லை. நான் எவ்வளவு மனப்பூர்வமாக உன்னைக் காதலிக்கிறேன், விரும்புகிறேன் என சொல்வதற்கு நீ என்னை அனுமதிக்க வேண்டும்.
 
எலிசபெத்திற்கு சொல்லொண்ணா ஆச்சரியம் உண்டாயிற்று. நாணத்தால் முகம் சிவந்து, நம்ப முடியாமல், அவனை உற்று நோக்கியவாறு மௌனமாக இருந்தாள். இது அவனுக்குப் போதுமான அளவிற்கு தைரியத்தை அளித்தது. அவன் என்னவெல்லாம் நினைத்தானோ அதைப்பற்றியும் அவள்மேல் கொண்டிருந்த உணர்வுகளைப்பற்றியும் ஒளிவு மறைவின்றி ஒப்புக் கொண்டான். அவன் பேசியது சிறப்பாக இருந்தது, ஆனால் விவரமாக சொல்வதற்கு அவனுடைய மனத்தின் உணர்வுகளைத் தவிர வேறு பல உணர்வுகளும் அவனுக்கு இருந்தன. வீண்பெருமையுடன் பேசுவதுதான் அவனுக்குத் தெரிந்திருந்ததே தவிர மென்மையாக பேசுவதற்குரிய சொல்லாற்றல் அவனிடம் இல்லை. அவளுடைய தாழ்ந்த நிலையைப்பற்றி அவனுடைய நினைப்பு, தன்னுடைய தகுதிக்கு கீழே இறங்கி வருகிறோமோ என்ற எண்ணம்--அவளுடைய குடும்பம் ஒரு தடையாக இருப்பதும்--இவை எல்லாவற்றையும் மதிப்பீடு செய்த பொழுது, தீர்ப்பு அவனுடைய விருப்பத்திற்கு எதிராகவே இருந்தது. இதனால் அவனுடைய அந்தஸ்து பெரிதும் பாதிக்கப்படுவதால், அதனை ஈடுகட்டும் வகையில் இவை எல்லாவற்றையும்பற்றி ஆர்வமாகப் பேசினான். ஆனால் இவ்வாறு பேசுவது அவனை இத்திருமணத்திற்கு சிபாரிசு செய்யவில்லை.
 
என்னதான் அவளுக்கு ஆழ்ந்த வெறுப்பிருந்தாலும், இப்படிப்பட்ட மனிதனின் அன்பு, தனக்கு ஒரு பாராட்டாகக் கிடைத்திருப்பதை அவளால் மதிக்காமல் இருக்க முடியவில்லை. அவளுடைய எண்ணம் ஒரு க்ஷணம்கூட மாறவில்லை என்றாலும் அவன் அடையப்போகும் வேதனையை நினைத்து முதலில் அவளுக்கு வருத்தமாக இருந்தது. ஆனால், பின்னால் தொடர்ந்த அவனுடைய வார்த்தைகளால் ஆத்திரம் அடைந்த அவள், கோபத்தினால் அவன் மேலுள்ள எல்லா அனுதாபங்களையும் இழந்தாள். அவன் பேசி முடித்தவுடன் தன்னை அமைதிப்படுத்திக் கொண்டு அவனுக்குப் பொறுமையாக பதில் சொல்ல வேண்டும் என்பதற்கு அவள் முயற்சி எடுத்தாள். எவ்வளவோ முயன்றும் தன்னால் அடக்கி ஆள முடியாத அளவிற்கு அவள்மேல் உள்ள காதலைப்பற்றி எடுத்துரைத்து, தன்னை ஏற்றுக் கொள்வதன் மூலம் அவள் தனக்கு கைம்மாறு செய்வாள் என்று தன்னுடைய நம்பிக்கையை அவன் வெளிப்படுத்தினான். இதை அவன் சொல்லுகையில், ஒரு நல்ல சாதகமான பதில் கிடைக்கும் என்பதில் அவனுக்கு சற்றும் சந்தேகமில்லை என்பதுபோல் அவன் இருந்ததை அவள் சுலபமாகப் புரிந்து கொண்டாள். அவனுடைய பேச்சு கவலையையும், பயத்தையும் வெளிப்படுத்தியது, ஆனால் அவனது முகமோ தீர்மானமாக, ஒரு சாதகமான பதில் கிடைக்கும் என்று அவன் நினைப்பதை உணர்த்தியது. இந்த மாதிரியான ஒரு சூழ்நிலை கோபத்தை மேலும் அதிகமாகத்தான் ஆக்கும். அவன் பேசி முடித்தவுடன் கோபத்தால் முகம் சிவந்த அவள்,
 
இதுபோன்ற சந்தர்ப்பத்தில் நடைமுறை வழக்கம் என்னவென்றால், திருமணம் செய்து கொள்கிறாயா என ஒருவர் கேட்டால் அதற்கு மற்றவர் நன்றியுணர்ச்சியை வெளிக்காட்ட வேண்டும். உதவி செய்தால் அதற்கு நன்றியுள்ளவராக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது இயற்கைதான், நன்றியுணர்ச்சி எனக்கு இருந்திருந்தால், நான் இப்பொழுது உனக்கு நன்றி கூறியிருப்பேன். ஆனால் என்னால் முடியாது--உன்னுடைய நல்ல அபிப்பிராயத்திற்கு நான் என்றுமே ஏங்கியது கிடையாது, அதை நீ விருப்பமில்லாமல்தான் எனக்கு கொடுத்திருக்கிறாய். யாரையாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அது தன் நினைவில்லாமல்தான் செய்யப்பட்டதாக இருக்கும். மேலும் அது சிறிது நேரத்திற்குத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். என்னை விரும்பியதை ஒத்துக் கொள்வதற்கு எந்த உணர்ச்சிகளெல்லாம் தடுத்தது என்று நீ கூறினாயோ அவை எல்லாம், என்னுடைய இந்த விளக்கத்தைக் கேட்ட பிறகு, நீ கூறும் உன்னுடைய உணர்ச்சிகளை வெல்வதற்கு உனக்கு சிறிதும் கஷ்டமாக இருக்காது.
 
அடுப்பின் மேல்தட்டில் சாய்ந்த வண்ணம், அவளை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த டார்சி, அவளுடைய வார்த்தைகளைக் கேட்டு எவ்வளவு கோபம் அடைந்தானோ அவ்வளவு ஆச்சரியமும்பட்டான். கோபத்தால் அவன் முகம் வெளிறியது, அவனது மன உளைச்சல் முகத்தின் எல்லா அம்சங்களிலும் தெரிந்தது. அமைதியாக இருக்க அவன் பாடுபட்டான். வாயைத் திறக்கவில்லை, தன்னிடம் அமைதியை வரவழைத்துக் கொண்டதாக அவன் நம்பினான். அந்த இடைவெளி, எலிசபெத்திற்கு பயங்கரமானதாக இருந்தது. இறுதியில் கட்டாயப்படுத்தி வரவழைத்துக் கொண்ட அமைதியான குரலில் அவன்,
 
நான் எதிர்பார்க்கக் கூடிய பதில் இதுதானா! மரியாதைகாட்ட இவ்வளவு சிறிய முயற்சி எடுத்துக் கொண்டு என்னை இவ்வாறு நிராகரித்தது ஏன் என எனக்குத் தெரிய வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் இது அவ்வளவு முக்கியமல்லஎன்றான்.
 
ஏன் இவ்வளவு வெளிப்படையாகவே, என்னைப் புண்படுத்த வேண்டும், அவமானப்படுத்த வேண்டும் என்று திட்டம் தீட்டி, என்னை, உன்னுடைய மனதிற்கு எதிராக, உன்னுடைய விருப்பத்திற்கு எதிராக, உன்னுடைய குணத்திற்கும் எதிராக பிடித்திருக்கிறது என்று சொல்கிறாய் என நான் கேட்கலாமா? எனக்கு மரியாதை தெரியவில்லை என்று நீ கூறினால், நீ நடந்து கொள்வது இதற்கு ஒரு காரணம் ஆகாதா? ஆனால் எனக்கு வேறு சில கோபமூட்டக் கூடிய விஷயங்கள் உள்ளன என உனக்குத் தெரியும். உனக்கு எதிராக என்னுடைய உணர்வுகள் தீர்மானம் செய்தாலும், எந்தவித அக்கறையும் காண்பிக்காமல் இருந்தாலும் அல்லது உனக்கு சாதகமாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் என்னுடைய அன்பு சகோதரியின் சந்தோஷத்தைக் கெடுத்த மனிதனை, ஒருவேளை நிரந்தரமாகவும் கெடுத்திருக்கலாம், அப்படிப்பட்டவனை நான் ஏற்றுக் கொள்ள ஏதாவது இரக்கம் என்னைத் தூண்டும் என நீ நினைக்கிறாயா?‘
 
அவள் இதைச் சொல்லும் பொழுது, டார்சியின் முகம் மாறியது, ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அவள் தொடர்ந்து பேசும் பொழுது, குறுக்கிடுவதற்கு முயற்சி செய்யாமல், அவள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தான்.
 
உன்னைப்பற்றி மோசமாக நினைக்க இந்த உலகத்திலுள்ள எல்லா காரணங்களும் எனக்கு இருக்கிறது. நீ அங்கு, அநியாயமாகவும், இரக்கமில்லாமலும் நடந்து கொண்டதற்கு நோக்கம் எதுவாக இருந்தாலும் அதை மன்னிக்க முடியாது. அவர்கள் இருவரையும் பிரிப்பதில் முக்கிய பங்கு வகித்தவன் நீதான் என்பதை நீ மறுக்க முடியாது, மறுப்பதற்கு முயற்சியும் செய்ய முடியாது. அவர்களை பிரித்ததோடு அல்லாமல், ஒருவரை சபல புத்தியும், நிலையற்ற தன்மையுடையவராக இந்த உலகத்தின் கண்டனத்திற்கும், மற்றொருவரது நம்பிக்கை நிராசையானது என்ற ஏளனத்திற்கும் ஆளாக்கினாய். மேலும் இருவரையும் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்தி விட்டாய்.
 
சிறிது நேரம் பேச்சை நிறுத்திய அவளுக்கு, தான் செய்த தவறுக்கு எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அவன் நின்று கொண்டு கேட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் மேலும் கோபம் உண்டாயிற்று. அவள் கூறுவதை அவன் நம்பவில்லை என்பது போன்ற ஒரு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
 
நீ அதை செய்யவில்லை என உன்னால் கூற முடியுமா?‘ என அவள் மீண்டும் கேட்டாள்.
 
அமைதியை மேற்கொண்டவனாக அவன் பிறகு பதிலளித்தான். என்னுடைய நண்பனை உன்னுடைய சகோதரியிடமிருந்து பிரிப்பதற்கு என்னால் முடிந்த அளவிற்கு வேண்டிய அனைத்தையும் செய்தேன் அல்லது என்னுடைய வெற்றியில் எனக்கு மகிழ்ச்சி என்பதை மறுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. என்மேல் எனக்கு இருக்கும் அக்கறையைவிட அவன்மேல் அதிக அக்கறை காட்டியிருக்கிறேன்.
 
மரியாதையாக இருப்பதுபோல் பிரதிபலித்த அப்பதிலின் தோற்றத்தைக் கண்ட எலிசபெத் அதை அலட்சியம் செய்தாள். ஆனால் அதனுடைய பொருள் மாறவில்லை, அது அவளை சமாதானப்படுத்தவுமில்லை.
 
என்னுடைய வெறுப்பிற்கு காரணம் இந்த விவகாரம் மாத்திரம் அல்ல. இது நடப்பதற்கு முன்பாகவே உன் மேலுள்ள என்னுடைய கருத்து தீர்மானிக்கப்பட்டு விட்டது. பல மாதங்களுக்கு முன்பாகவே திரு. விக்காம் கூறியவற்றிலிருந்து உன்னுடைய குணம் வெளிவந்தது. இந்த விஷயத்தைப்பற்றி உனக்கு என்ன சொல்ல முடியும்? எந்த கற்பனையான நட்பின் பேரில், நீ உன்னை தற்காத்துக் கொள்ளப் போகிறாய்? அல்லது என்ன தவறான அறிவிப்பின் அடிப்படையில், மற்றவர்மேல் பழி சுமத்தப் போகிறாய்?‘
 
அந்நபரின் விஷயத்தில் நீ அதிகமாக ஆர்வம் காட்டுகிறாய்என்று அமைதி குறைந்த குரலில் பதிலளித்த டார்சியின் முகம் கோபத்தால் சிவந்தது.
 
யாருக்கு அவனுடைய துரதிர்ஷ்டத்தைப்பற்றி தெரிந்திருக்கிறதோ அவரால் அவன்மேல் ஆர்வம் காட்டாமல் இருக்க முடியாது?‘
 
அவனுடைய துரதிர்ஷ்டங்கள்!அலட்சியமாக அதை திருப்பிக் கூறிய டார்சி ஆம், அவனுடைய துரதிர்ஷ்டங்கள் மிகப் பெரியதாகவே இருந்தனஎன்றான்.
 
உன்னுடைய துன்புறுத்தலும்வேகத்துடன் பேசிய எலிசபெத் அவனை இப்பொழுது, தற்பொழுது உள்ள வறுமை நிலைக்கு நீ ஆளாக்கியிருக்கிறாய், ஒப்பிட்டுப் பார்த்தால் வறுமை நிலைதான். அவனுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்க வேண்டுமோ அதனை அவனிடமிருந்து நீ பறித்து விட்டாய். அவனுடைய வாழ்க்கையின் சிறப்பான பெரும் பகுதியை அவனுக்கு மறுத்து விட்டாய், அவனுக்குச் சேர வேண்டிய சுதந்திரத்தையும் அவனை இழக்கச் செய்து விட்டாய், நீ இவை எல்லாவற்றையும் செய்திருக்கிறாய்! இருந்தும் அவனுடைய துரதிர்ஷ்டத்தைப்பற்றி கூறியதை கேலியாகவும், வெறுப்பாகவும் நினைக்க முடிகிறதுஎன்றாள்.
 
அந்த அறையினுள் வேகமாக நடந்து கொண்டிருந்த டார்சி, ‘இதுதான் என்னைப்பற்றிய உன் அபிப்பிராயமா! இதுதான் நீ என்மேல் வைத்திருக்கும் மதிப்பா! இதை முழுவதுமாக விளக்கியதற்கு நான் நன்றி சொல்கிறேன். இந்த கணக்குப்படி என்னுடைய தவறுகள் அதிகம்தான்! ஆனால் ஒரு வேளைநடப்பதை நிறுத்தி அவளை நோக்கி திரும்பி, ‘உன்னிடம் வந்து என் விருப்பத்தைத் தெரிவிக்க எது என்னை இவ்வளவு நாட்கள் தடுத்தது என்பதை நான் உண்மையாக உன்னிடம் ஒத்துக் கொண்டேன். அவ்வாறு செய்ததினால் உன்னுடைய கர்வம் அடிபட்டிருக்கிறது. அவ்வாறு உன் கர்வம் அடிபட்டிருக்காமல் இருந்திருந்தால் நீ என்னுடைய குறைகளை மன்னித்திருப்பாய். என்னுடைய உள்மனது போராட்டங்களை எல்லாம் மறைத்து எந்தவித நிபந்தனை இல்லாமலும், மனப்பூர்வமாகவும், விவேகமாகவும், எல்லாவிதத்திலும் யோசித்து, மற்ற எல்லா காரணங்களினாலும் நான் உன்னை விரும்புகிறேன் என்று உன்னை முகஸ்துதி செய்திருந்தால் நீ இவ்வளவு கடுமையாக என்னைத் தாக்கி இருக்க மாட்டாய். ஆனால் எனக்கு போலியாக நடிக்கப் பிடிக்காது. நான் கூறியவற்றிற்காக நான் வெட்கப்படவில்லை. அவை இயல்பாகவும் கூறப்பட்டது, உண்மையும்கூட. உன்னுடைய தாழ்ந்த சம்பந்தங்களை நினைத்து நான் சந்தோஷப்படுவேன் என்று நீ எதிர்பார்க்கிறாயா? என்னுடைய அந்தஸ்திற்குக் கீழான நிலைமையில் உள்ளவர்களின் சம்பந்தத்திற்காக நான் என்னையே பாராட்டிக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறாயா?‘ என்றான்.
 
ஒவ்வொரு வினாடியும் தன்னுடைய கோபம் அதிகரித்துக் கொண்டு வருவதை எலிசபெத் உணர்ந்தாள். ஆனாலும் மிகவும் பொறுமையாகப் பேசுவதற்கு பெரும் முயற்சி எடுத்து பேச முற்பட்டாள்.
 
ஆனால் நீ அறிவித்த விதம் என்னை வேறு எந்த விதத்திலாவது பாதித்திருக்கலாம் என்று நீ நினைத்திருந்தால் டார்சி, அது தவறு. நற்குணம் உடைய மனிதனைப்போல் நடந்து கொண்டிருந்தால் உன்னை நிராகரித்ததற்கு நான் வருத்தப்பட்டிருப்பேன். ஆனால் நீ நடந்து கொண்ட விதம் எனக்கு எந்தவித வருத்தத்தையும் இப்பொழுது அளிக்கவில்லை.
 
இதைக் கேட்டு அவன் திடுக்கிட்டதை கவனித்தாள். ஆனால் அவன் எதுவும் சொல்லவில்லை, அவள் தொடர்ந்து பேசலானாள்,
 
உன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி நீ விடுக்கும் வேண்டுகோளை, நான் ஏற்றுக் கொள்ளத் தூண்டும் விதத்தில் நீ என்னை கேட்டிருக்கவே முடியாது.
 
மீண்டும் அவனுடைய வியப்பு வெளிப்படையாகவே தெரிந்தது; மேலும் அவனுடைய பார்வையில் சந்தேகமும், வருத்தமும் இருந்தது. அவள் தனது பேச்சைத் தொடர்ந்தாள்.
 
ஆரம்பத்திலிருந்தே, இன்னும் சொல்லப் போனால் நீ அறிமுகம் ஆன முதல் வினாடியிலிருந்தே, உன்னுடைய நடத்தை, உன்னுடைய இறுமாப்பு, கர்வம், மற்றவர்களின் உணர்ச்சிகளை உன் சுயநலத்திற்காக அலட்சியம் செய்வது இவைகள் எல்லாம் உன்னை நிராகரிப்பதற்கு பலமான அஸ்திவாரமாக முன்பே அமைந்துவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து நடந்த விஷயங்கள் என் வெறுப்பை மேலும் ஸ்திரப்படுத்தியது. உன்னைத் தெரிந்த ஒரு மாதத்திற்குள்ளேயே உன்னை நான், எக்காரணத்திற்காகவும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று நினைக்க ஆரம்பித்து விட்டேன்.
 
நீ அதிகம் பேசிவிட்டாய். உன்னுடைய உணர்வுகளை நான் மிகச் சரியாகப் புரிந்து கொண்டு விட்டேன். என்னுடைய உணர்வுகளை நினைத்து நான் இப்பொழுது வெட்கப்படத்தான் வேண்டும். உன்னுடைய நேரத்தை வீணாக்கியதற்கு மன்னிக்கவும். உன்னுடைய ஆரோக்கியத்திற்கும், சந்தோஷத்திற்கும் எனது வாழ்த்துக்கள்.
 
இதை சொல்லி முடித்தவுடன் , அவ்வறையைவிட்டு அவன் அவசரமாக அகன்றான். அடுத்த விநாடி வாயில் கதவைத் திறந்து, வீட்டைவிட்டு வெளியே சென்றது எலிசபெத்திற்குக் கேட்டது.
 
இப்பொழுது அவளது மனக்குழப்பம் மிகவும் அதிகமாக இருந்தது. அதை எப்படித் தாங்கிக் கொள்வது என்று அவளுக்குப் புரியவில்லை. மிகவும் சோர்வடைந்த அவள் உட்கார்ந்து அரைமணி நேரம் அழுதாள். நடந்ததை எல்லாம் எண்ணிப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவளுடைய திகைப்பு கூடிக் கொண்டே சென்றது. டார்சி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டிருக்கிறான்! அவளை பல மாதங்களாகக் காதலித்துக் கொண்டிருக்கிறான்! தன்னுடைய சகோதரியை, அவனுடைய நண்பன் திருமணம் செய்து கொள்வதற்கு எதையெல்லாம் காரணம் காட்டி ஆட்சேபித்தானோ, அவையெல்லாம் அவனுடைய விஷயத்திலும் அந்த அளவிற்கு இருந்த போதிலும், தன்னை திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு தீவிரமாகக் காதலிக்கிறான் என்பது நம்ப முடியாத ஒன்றாக இருந்தது. தன்னை அறியாமலேயே தான் இவ்வளவு ஆழமான காதலை அவனுக்கு ஏற்படுத்தியது சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனால் அவனுடைய வீண்பெருமை, வெறுக்கத்தக்க வீண்பெருமை ஜேனுக்கு இழைத்த கொடுமையை கூச்சமில்லாமல் ஒப்புக் கொண்டது, அதனை நியாயப்படுத்த முடியாவிட்டாலும், தான்தான் செய்ததாக உறுதிப்படுத்தியது, விக்காமைப்பற்றிய எந்த வித உணர்ச்சியுமில்லாமல் சொன்னது, அவனுக்கிழைத்த கொடுமையை மறுக்க முயலாமல் இருந்தது--இவையாவும், அவன் தன்மேல் வைத்திருந்த காதலை நினைத்து ஒரு க்ஷணம் அவன்மேல் எழுந்த பரிதாபத்தைத் தோற்கடித்தது.
 
மன உளைச்சலில் இருந்த அவள், லேடி காதரினுடைய வண்டி சத்தம் கேட்டு, சார்லெட்டின் பார்வையை எதிர்கொள்வது கடினம் என்று உணர்ந்ததால், அவசரமாகத் தன் அறைக்குள் நுழைந்தாள்.
 
---- 

 



book | by Dr. Radut