Skip to Content

Chapter 10 டார்சியைப்பற்றிய இரகசியத்தை பிட்ஸ்வில்லியம் கூறுதல்

 

எலிசபெத் பூங்காவில் அலைந்து திரிந்து கொண்டிருந்த பொழுது, ஒரு முறைக்கு மேலேயே டார்சியை எதிர்பாராதவிதமாக அங்கு சந்தித்தாள். வேறு எவருமே வர நேரிடாத இடத்திற்கு இவன் தொடர்ந்து வருவது துரதிர்ஷ்டம் என்று நினைத்ததால், இது மீண்டும் நடப்பதைத் தடுக்க, இது அவள் விரும்பிச் செல்லும் இடம் என்பதை அக்கறையுடன் முதலிலேயே அவனுக்குத் தெரிவித்திருந்தாள். அதனால் இரண்டாவது முறையும் இது எப்படி ஏற்பட்டது என்பதுதான் வினோதமாக இருந்தது!--ஆனால் இரண்டாவது முறை, மூன்றாவது முறையும் இச்சந்திப்பு நிகழ்ந்தது, வேண்டுமென்றே செய்த செயலாகத் தோன்றியது அல்லது தானாகவே ஏற்படுத்திக் கொண்ட தண்டனைபோல் இருந்தது. ஏனெனில் இம்மாதிரி சந்தர்ப்பங்களில், ஒரு சில உபசாரமான விசாரணைகள், தர்மசங்கடமான தயக்கத்துடன் நின்றுவிட்டு பிறகு கிளம்பிச் செல்லாமல் திரும்பி வந்து அவள் கூடவே நடக்க வேண்டும் என்பதை அவசியம் என அவன் நினைத்தான். அவன் அதிகமாக எதுவும் பேசவில்லை, அவளும், பேசுவதற்கும், பேச்சைக் கேட்டுக் கொள்வதற்கும் அதிக சிரமம் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மூன்றாவது முறையாக சந்தித்த பொழுது, அவன் சில விநோதமான, சம்பந்தமில்லாத சில கேள்விகள் கேட்டான் என அவளுக்குத் தோன்றியது. ஹன்ஸ்போர்டில் இருப்பது அவளுக்கு மகிழ்ச்சியா, தனியாக நடப்பதில் உள்ள அவளது விருப்பம், காலின்ஸ் தம்பதியரின் சந்தோஷத்தைப்பற்றி அவளுடைய கருத்து என்று சில கேள்விகளைக் கேட்டான். ரோஸிங்ஸைப்பற்றி பேசுகையில் அவள் அந்த வீட்டைப்பற்றி சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று கூறினான். அவள் மறுபடியும் கென்டிற்கு வரும்பொழுதெல்லாம், அவள் அங்கும் தங்க வேண்டும் என அவன் எதிர்பார்ப்பதுபோல் தோன்றியது. அவனது பேச்சு இதைத்தான் குறிப்பாக உணர்த்தியதுபோல் தோன்றியது. அவன் மனதில் ஒருவேளை பிட்ஸ்வில்லியம் இருக்கிறாரா? அவன் சொல்வதில் ஏதேனும் அர்த்தமிருந்தால், அந்தப் பக்கத்தில் நடக்கும் விஷயத்தைத்தான் ஜாடையாகச் சொல்கிறான் என அவளுக்குத் தோன்றியது. அது அவளை சற்று சங்கடப்படுத்தியது. பார்ஸனேஜிற்கு எதிரில் இருக்கும் வேலியில் உள்ள நுழைவாயிலின்முன் வந்து சேர்ந்தது அவளுக்கு மிக்க சந்தோஷத்தை அளித்தது.
 
ஒரு நாள் அவள் நடந்து செல்கையில், ஜேன் கடைசியாக எழுதிய கடிதத்தை மறுபடியும் படித்துக் கொண்டிருந்தாள், சில பகுதிகளை ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கையில், ஜேன் உற்சாகத்துடன் அதை எழுதவில்லை என்பதை அக்கடிதம் உணர்த்தியது. அப்பொழுது டார்சி மீண்டும் வந்து ஆச்சரியப்படுத்துவான் என்பதற்கு பதிலாக அவள் நிமிர்ந்து பார்த்த பொழுது, கர்னல் பிட்ஸ்வில்லியம் தன்னை சந்திக்க வருவதைக் கண்டாள். கடிதத்தை உடனே அப்புறப்படுத்திவிட்டு, வலுக்கட்டாயமாக ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு,
 
இந்த வழியாக நீங்கள் நடப்பீர்கள் என்று நான் இதற்கு முன்பு அறிந்திருக்கவில்லையேஎன்று கூறினாள்.
 
எல்லா வருடமும் செய்வதுபோல் நான் இங்கு பூங்காவைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன், பார்ஸனேஜில் வந்து உங்களை சந்தித்து விட்டுப் போகலாம் என்றிருந்தேன்என்று கூறிய அவர் நீ இன்னும் அதிக தூரம் போகப் போகிறாயா?‘ என்று கேட்டார்.
 
இல்லை. நான் ஒரு நொடியில் திரும்புவதாக இருந்தேன்.
 
அதன்படி அவள் திரும்பினாள். இருவரும் ஒன்றாக பார்ஸனேஜிற்குத் திரும்பினர்.
 
நீங்கள் சனிக்கிழமையன்று கென்ட்டை விட்டுப் போவது நிச்சயம்தானா?‘ என்று கேட்டாள்.
 
ஆமாம்--டார்சி அதை மறுபடியும் தள்ளிப் போடாமல் இருந்தால். ஆனால் அவனுடைய முடிவுக்கு நான் கட்டுப்பட்டிருக்கிறேன். அவன் விரும்பியவாறு அவன் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்வான்.
 
ஏதாவது ஏற்பாடுகளில் அவனுக்கு திருப்தி இல்லையெனில், அவன் விரும்பியவாறு தேர்ந்தெடுப்பதற்குரிய அதிகாரம் இருப்பதில் அவனுக்கு சந்தோஷமாவது இருக்கிறது. டார்சியைப்போல் தான் விரும்பியவாறு செய்வதில் மகிழ்ச்சியடைபவர் வேறு எவரையும் எனக்குத் தெரியாது.
 
தனக்கென்று ஒரு வழி இருப்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். நாம் எல்லோருமே அப்படித்தான். ஆனால் பல பேர்களைவிட அவனுக்கு தன் விருப்பம்போல் செய்வது இன்னமும் சுலபம், ஏனெனில் அவன் பணக்காரன், மற்றவர்கள் ஏழை. நான் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறேன். ஒரு இளைய மகன், தனக்கு வேண்டியதை விட்டுக் கொடுத்தல், மற்றவர்களை சார்ந்திருப்பது, ஆகியவற்றிற்குப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்என்று கர்னல் பிட்ஸ்வில்லியம் பதிலளித்தார்.
 
என்னுடைய கருத்துப்படி, ஒரு பிரபுவின் இளைய மகனுக்கு இவை இரண்டைப்பற்றியும் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விட்டுக் கொடுப்பதுபற்றியும், சார்ந்து இருப்பதுபற்றியும் உண்மையாகவே உங்களுக்கு என்ன தெரியும்? பணம் இல்லாத காரணத்தினால் நீங்கள் போக விரும்பிய இடத்திற்குப் போகாமல் இருந்திருக்கிறீர்களா அல்லது விருப்பப்பட்ட ஒன்றை வாங்க முடியாமல் போயிற்றா?‘
 
இவையெல்லாம் சாதாரணமாகக் கேட்கக் கூடிய கேள்விகள்--இம்மாதிரியான கஷ்டங்களை எல்லாம் நான் அனுபவித்தது கிடையாது. ஆனால் இதைவிட முக்கியமான விஷயங்களில் பணம் இல்லாத காரணத்தினால் நான் அவதிப்படலாம். இளைய மகன்கள், அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் திருமணம் செய்து கொள்ள முடியாது.
 
பணக்கார பெண்ணை விரும்பினால் திருமணம் செய்து கொள்ள முடியும்--இதைத்தான் அவர்கள் அடிக்கடி செய்கிறார்கள் என நினைக்கிறேன்.
 
எங்களுடைய வாழ்க்கை முறை, அதிகம் மற்றவர்களைச் சார்ந்து இருக்கும்படி ஆக்கிவிடுகிறது. பணத்திற்கு சிறிது மதிப்பு கொடுக்காமல், திருமணம் செய்து கொள்வதற்கு, என்னை போன்ற நிலையில் இருப்பவர்கள் பலரால் முடியாது.
 
இது எனக்காகச் சொல்லப்பட்டதாஎன்று நினைத்த எலிசபெத்தின் முகம் மாறியது, ஆனால் சுதாரித்துக் கொண்டு கலகலப்பாகப் பேச ஆரம்பித்தாள்.ஒரு பிரபுவின் இளைய மகனுக்கு சாதாரணமாக என்ன விலை? மூத்த சகோதரன் மிகவும் உடல்நலம் குன்றியவனாக இருந்தாலொழிய, 50,000 பவுனிற்குமேல் கேட்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
 
அவரும் அதே பாணியில் அவளுக்கு பதிலளித்தார், பிறகு அந்த விஷயத்தைப்பற்றி பேசுவதை நிறுத்தினர். நடந்ததைப்பற்றி நினைத்து அவர் சங்கடப்படுகிறாரோ என நினைத்த அவள், மௌனத்தைக் கலைக்கும் வண்ணம் விரைவில் மேலும் பேசலானாள்.
 
அவன் சொல்வதையெல்லாம் நீங்கள் கேட்பீர்கள் என்பதற்காகத்தான் உங்களுடைய சகோதரன் உங்களை இங்கு அழைத்து வந்திருக்கிறான் என நான் நினைக்கிறேன். இதுபோல ஒரு சௌகரியத்திற்காக, அவன் திருமணம் செய்து கொள்ள மாட்டான் என நம்புகிறேன். ஆனால் இப்போதைக்கு அவனுடைய ஏவலுக்கு அவன் தங்கை நன்றாகவே ஒத்துழைக்கிறாள் போலிருக்கிறது. அவனுடைய முழு பாதுகாப்பில்தான் அவள் இருப்பதால், அவளை, தன் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
 
முடியாது. அந்தப் பொறுப்பை அவன் என்னுடன் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும். நானும், அவனும் சேர்ந்துதான் மிஸ். டார்சியின் பாதுகாவலராக இருக்கிறோம்.
 
நீங்களுமா? எந்த மாதிரியான பாதுகாவலராக நீங்கள் இருவரும் இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? இந்த பொறுப்பு உங்களுக்கு மிகவும் சிரமத்தைக் கொடுக்கிறதா? அவளைப்போல இளவயது பெண்களை சமாளிப்பது சில சமயங்களில் மிகவும் கஷ்டமாக இருக்கும், அவளும் டார்சியைப்போலவே தைரியசாலியாக இருந்தால் அவளும், தான் விரும்பியபடியே செயல்படுவாள்.
 
அவள் பேசிக் கொண்டிருந்த பொழுது, அவர் தன்னை உன்னிப்பாக பார்ப்பதைக் கவனித்தாள். ஏன் மிஸ். டார்சி, அவர்களுக்கு ஏதாவது சங்கடத்தைத் தருவாள் என அவள் நினைக்கிறாள் என்று அவர் கேட்ட விதம், அவள் ஏறத்தாழ உண்மையையேதான் கூறியிருக்கிறாள் என்பதை நம்பச் செய்தது. அவள் நேரடியாக பதிலளித்தாள்,
 
நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அவளைப்பற்றி கெடுதலாக எதுவும் நான் கேள்விப்படவில்லை. இந்த உலகத்திலேயே மிகவும் சாதுவான பெண்களில் அவளும் ஒருத்தி என என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். எனக்கு நன்கு தெரிந்த பெண்மணிகளான திருமதி. ஹர்ஸ்ட் மற்றும் மிஸ். பிங்கிலிக்கு மிகவும் பிடித்தமானவள். உங்களுக்கு அவர்களைத் தெரியும் என்று நீங்கள் சொல்லி நான் கேட்டிருப்பதாக நினைக்கிறேன்.
 
எனக்கு அவர்களைக் கொஞ்சம் தெரியும். அவர்களுடைய சகோதரன் இனிமையான, நற்பண்புகளையுடைய மனிதன்--டார்சியின் சிறந்த நண்பன்.
 
ஓ! ஆமாம்,‘ என்று வரண்ட குரலில் பேசிய எலிசபெத்--திரு. டார்சி, பிங்கிலியிடம் அதிக அன்பு வைத்திருக்கிறான், அதிகமாக அக்கறை எடுத்து கொள்கிறான்.
 
அவன்மேல் கரிசனமா!--எந்தெந்த இடங்களில் அவனுக்கு அதிக அக்கறை தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் டார்சி அவன்மேல் அக்கறை எடுத்து கொள்கிறான் என நான் உண்மையில் நம்புகிறேன். நாங்கள் இங்கு பயணம் செய்த பொழுது அவன் கூறிய ஏதோ ஒரு விஷயத்திலிருந்து, பிங்கிலி அவனுக்கு மிகவும் நன்றிக் கடன்பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைப்பதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. பிங்கிலியை மனதில் வைத்து கொண்டுதான் பேசியிருக்கிறான் என்று நினைப்பதற்கு எனக்கு உரிமையில்லாததால், நான் அவனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும். அதெல்லாம் ஒரு அனுமானம்தான்.
 
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?‘
 
இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது என டார்சி விரும்புவான். ஏனெனில் அது அப்பெண்மணியின் குடும்பத்திற்குத் தெரிய வந்தால், நன்றாக இருக்காது.
 
நான் அதைப்பற்றி பேச மாட்டேன், நீங்கள் என்னை நம்பலாம்.
 
அது பிங்கிலியாகத்தான் இருக்கும் என்பதற்கு என்னிடம் வேண்டும் அளவிற்கு காரணம் எதுவும் இல்லை என்பதை நீ ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். பெயரும் மற்ற விவரங்கள் எதுவும் சொல்லாமல், ஒரு நண்பனை ஒரு விவேகமற்ற திருமணத்திலிருந்து, சமீபத்தில் காப்பாற்றியதற்காக தன்னைத்தானே வாழ்த்திக் கொண்டான் என்பதுதான் அவன் என்னிடம் கூறியது. இம்மாதிரியான இக்கட்டில் மாட்டிக் கொள்ளும் குணம் உள்ள இளைஞன் பிங்கிலியாகத்தான் இருக்கும் என்று நம்பியதாலும், மேலும் அவர்கள் கோடை முழுவதும் ஒன்றாக இருந்தது தெரிய வந்ததாலும், அது அவனாகத்தான் இருக்கும் என்று சந்தேகித்தேன்.
 
இந்த குறுக்கீட்டிற்கு, டார்சி ஏதாவது காரணம் சொன்னானா?‘
 
அந்த பெண்மணிக்கு எதிராக பலமான ஆட்சேபணை ஏதோ இருந்தது எனத் தெரிகிறது.
 
அவர்களைப் பிரிக்க அவன் என்ன செய்தான்?‘
 
அவன், தான் என்ன செய்தான் என்பதுபற்றி என்னிடம் பேசவில்லை, நான் உன்னிடம் இப்பொழுது என்ன கூறினேனோ, அதைத்தான் என்னிடமும் கூறினான்என்றார் பிட்ஸ்வில்லியம் சிரித்தவாறு.
 
எலிசபெத் பதில் ஏதும் கூறாமல் நடந்தாள். அவள் உள்ளம் கோபத்தால் விம்மியது. அவளை சற்று நேரம் கவனித்த பிட்ஸ்வில்லியம், ஏன் அவள் அவ்வளவு யோசனையில் இருக்கிறாள் எனக் கேட்டார்.
 
நீங்கள் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்ததைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய சகோதரனுடைய நடத்தை என் உணர்வுகளுக்கு ஒத்துவரவில்லை. அவன் ஏன் நியாயம் வழங்க வேண்டும்?‘
 
அவனுடைய குறுக்கீடு வேண்டாத செயல் என்று நீ சொல்ல வருகிறாயா?‘
 
தன்னுடைய நண்பனுடைய விருப்பங்கள் சரியா, தவறா என்பதை முடிவு செய்வதற்கு டார்சிக்கு என்ன உரிமை இருக்கிறது என எனக்குத் தெரியவில்லை. அவன் ஏன் தன்னுடைய கருத்துபடி தன் நண்பன் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்க வேண்டும், வழி நடத்த வேண்டும்ஆனால் நமக்கு விவரங்கள் எதுவும் தெரியாததால் ஏன் அவனை நிந்திக்க வேண்டும். இந்த விஷயத்தில் அதிக ஈடுபாடு இருக்கிறது என்று நம்ப முடியாது.
 
இது தவறான யூகம் அல்லஎன்ற பிட்ஸ்வில்லியம் ஆனால் இது என்னுடைய சகோதரனின் வெற்றிப் பெருமிதத்தை மிக மோசமாக குறைக்கிறதுஎன்றார்.
இது விளையாட்டாகப் பேசப்பட்டாலும், அது டார்சியின் குணத்தை அப்படியே படம் பிடித்துக் காண்பிப்பதுபோல் அவளுக்கு இருந்ததால், பதில் ஏதும் கூற விரும்பாமல், சட்டென்று பேச்சை மாற்றி, பார்ஸனேஜிற்குப் போய் சேரும்வரை யாரையும் பாதிக்காத விஷயங்களைப்பற்றி பேசினாள். விருந்தினர் சென்றவுடன், அவள் உடனேயே தன் அறைக்குச் சென்று தாழிட்டு, தான் கேட்ட எல்லாவற்றையும் எந்தவித குறுக்கீடும் இல்லாமல் யோசித்துப் பார்க்க ஆரம்பித்தாள். தன்னுடன் தொடர்பு உடையவர்களைப்பற்றியே அன்றி வேறு யாரைப்பற்றியும் அது குறிப்பிடப்படவில்லை என்பதைப் புரிந்து கொண்டாள். டார்சி, இவ்வளவு அளவு கடந்த செல்வாக்கினை வைத்திருக்கும்படியாக இரண்டு நபர்கள் இவ்வுலகில் இருக்க முடியாது. பிங்கிலியையும், ஜேனையும் பிரிக்கும் முயற்சியில் அவன் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்வான் என்று சிறிதும் அவள் சந்தேகப்பட்டதில்லை. ஆனால் எப்பொழுதும் இதற்கு திட்டம் தீட்டுவதிலும், ஏற்பாடு செய்வதிலும் மிஸ். பிங்கிலிக்குத்தான் முக்கிய பங்குண்டு என காரணம் கற்பித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய வீண்பெருமை, அவனை தவறாக வழி நடத்தவில்லையெனில் அவன்தான் இதற்கு காரணம். ஜேன் அடைந்த கஷ்டங்களுக்கும், இப்பொழுதும் துயரப்படுவதற்கும் அவனுடைய கர்வமும், யோசிக்காமல் நடந்து கொண்டதும்தான் காரணம். உலகத்திலேயே மிகவும் அன்பான, பெருந்தன்மையான உள்ளம் கொண்ட ஒருத்தியை சில காலத்திற்கு எந்தவித மகிழ்ச்சியும் இல்லாமல் நாசமாக்கியவன் அவன், எந்த அளவிற்கு நிரந்தரமான ஒரு கெடுதலை அவன் செய்திருக்கிறான் என யாராலும் கூற முடியாது.
 
அந்த பெண்மணிக்கு எதிராக பலமான ஆட்சேபணை இருந்தனஇவை பிட்ஸ்வில்லியமின் வார்த்தைகளாக இருந்தன. கிராமத்து வழக்கறிஞராக ஒரு சித்தப்பாவும், மற்றொரு மாமா லண்டனில் வியாபாரம் செய்தவருமாக இருந்ததுதான் பலமான எதிர்ப்புகள் போலும்.
 
ஜேன்மேல் எந்தவித ஆட்சேபணையும் இருக்க வாய்ப்பில்லை. அழகும், நற்குணமும் நிறைந்தவள் அவள். அவளுடைய புரிந்து கொள்ளும் திறமை அபாரமாக இருக்கிறது, நல்ல மனதுள்ளவள், அவளுடைய நடத்தை எல்லோரையும் கவரக் கூடியதாக இருக்கிறது. என்னுடைய தந்தைக்கு எதிராக எதுவும் இருக்க முடியாது. வித்தியாசமாக சில விஷயங்கள் இருக்கலாம், ஆனால் அவருக்கு நல்ல திறமைகளும் இருக்கிறது, டார்சி வெறுக்க வேண்டிய அவசியமில்லை, அவருக்கு இருக்கும் மரியாதையை டார்சியால் எட்டக் கூடிய சாத்தியமே இல்லைஎன்று நினைத்த அவள் தன்னுடைய தாயாரைப்பற்றி நினைத்த பொழுது, அவளுடைய தன்னம்பிக்கை சற்று குறைந்து போனது. ஆனால் டார்சிக்கு இது கணக்கில் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு பெரிய எதிர்ப்பாக இருக்காது என நினைத்தாள். புத்திசாலித்தனம் இருக்க வேண்டும் என்பதைவிட, நண்பனுடைய தொடர்புகள் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதைத்தான் அவனுடைய கர்வம் எதிர்பார்க்கும். இல்லையெனில் அது அவனுடைய கர்வத்துக்கு விழுந்த அடியாக இருக்கும் என அவள் நம்பினாள். இறுதியாக மிக மோசமான வீண்பெருமை அவனை ஆட்கொண்டதாலும் தன்னுடைய சகோதரிக்காக பிங்கிலியை தக்க வைத்துக் கொள்ள விரும்பியதாலும் இருக்கும் என்ற தீர்மானத்திற்கு வந்தாள்.
 
இந்த விஷயத்தை நினைத்து மன உளைச்சலுக்கும், அழுகைக்கும் ஆளான அவளுக்கு, அது தலைவலியைத் தேடித் தந்தது. மாலை நேரம் ஆகஆக அது மேலும் தீவிரமானது, டார்சியை சந்திக்க வேண்டாம் என்று தீர்மானித்ததால், தேநீர் விருந்திற்கு ரோஸிங்ஸிற்கு அழைக்கப்பட்டிருந்த அவளது சகோதர, சகோதரிகளுடன் அவள் செல்ல வேண்டாம் எனத் தீர்மானித்தாள். அவளுக்கு உண்மையிலேயே உடல் நலம் சரியில்லை என கண்ட திருமதி. காலின்ஸ் அவளை வரச் சொல்லி வற்புறுத்தவில்லை, தன்னுடைய கணவரையும், வற்புறுத்துவதற்கு அனுமதிக்கவில்லை. அவள் வீட்டில் தங்குவதால் லேடி காதரின் அதிருப்தி அடைவாளோ என்ற பயத்தை காலின்ஸால் மறைக்க முடியவில்லை.
 
---- 

 



book | by Dr. Radut