Skip to Content

Chapter 01 ஜேனுடைய ஏமாற்றம்

 

மிஸ். பிங்கிலியிடமிருந்து வந்த கடிதம் எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. அக்கடிதத்தின் முதல் வாக்கியத்திலேயே, குளிர் காலத்திற்காக அவர்கள் அனைவரும் லண்டனில் சுகமாக இருப்பதாகத் தொடங்கி, ஹர்ட்போர்ட்ஷயரில் உள்ள தன் அனைத்து நண்பர்களிடமும் சரிவர விடைபெற நேரமில்லாததைக் குறித்து அவளுடைய சகோதரன் வருத்தப்படுவதாக முடிந்திருந்தது.
 
அத்துடன் எல்லா நம்பிக்கைகளும் தகர்ந்தன. அக்கடிதத்தின் எஞ்சிய பகுதிகள் மிஸ். பிங்கிலியின் அன்பை வெளிப்படுத்துவதாக இருந்ததே தவிர, அது எந்த வகையிலும் ஜேனுக்கு ஆறுதல் தருவதாக இல்லை. மிஸ். டார்சியை மெச்சுவதே அதன் முக்கிய அம்சமாக இருந்தது. அவளுடைய பெருமைகளை விவரித்த கரோலின் தனக்கும், மிஸ். டார்சிக்கும் இடையேயான நெருக்கம் வளர்ந்து கொண்டு வருவதைப் பறைசாற்றியதுடன் தன் முந்தைய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த எதிர்பார்ப்புகள் எல்லாம், நிறைவேறக் கூடிய வாய்ப்புகள் என இக்கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்தாள். மேலும் திரு. டார்சியின் வீட்டிலேயே தன் சகோதரன் தங்கியிருப்பதையும், வீட்டிற்குத் தேவையான நாற்காலி, மேசை முதலியன வாங்குவது குறித்த அவனுடைய திட்டங்கள் பற்றியும் அவள் மகிழ்ச்சியோடும், பரவசத்தோடும் எழுதியிருந்தாள்.
 
இக்கடிதத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து ஜேன், எலிசபெத்திடம் விவரித்த பொழுது அவள் அதை அமைதியாக, வெறுப்புடன் கூடிய கோபத்துடன் கேட்டுக் கொண்டாள். அவள் மனதில் தன் சகோதரியின்மேல் பரிவும், மற்றவர்கள்மேல் வெறுப்பும் பிறந்தது. தன் சகோதரன் மிஸ். டார்சியிடம் பரிவு கொண்டுள்ளதாக கரோலின் குறிப்பிட்டிருந்ததை அவள் பொருட்படுத்தவில்லை. அவன் ஜேன்மீது கொண்டுள்ள அன்பைக் குறித்து அவளுக்கு சிறிதும் ஐயமில்லை. தனக்கு அவனை பிடித்திருந்தாலும், அவனுடைய வலுவில்லாத சுபாவத்தினால், தனக்காகவே ஒரு சரியான தீர்மானம் எடுக்கத் தெரியாமல், தனக்காகத் திட்டமிடும் நண்பர்களின் போக்கிற்கு அடிமையாக மாறி, தன் சொந்த மகிழ்ச்சியைப்பற்றிக் கவலையின்றி வாழும் அவன்மீது மிகுந்த கோபமும், வெறுப்பும் பிறந்தது. தன்னுடைய சொந்த சந்தோஷத்தை மட்டுமே தியாகம் செய்வதாக இருந்திருந்தால், அவன் அதை எவ்வாறு செய்வதாக நினைத்திருந்தானோ அவ்வாறே செய்ய அனுமதித்திருக்கலாம். ஆனால் அதில் அவளுடைய சகோதரியுடையதும் இணைந்திருப்பதால் அவன் விவேகத்துடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். இதைப்பற்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எண்ணிப் பார்க்கலாம், ஆனாலும் விரும்பிய பலன் கிடைக்காது. அவளால் வேறெதைப்பற்றியும் சிந்திக்க முடியவில்லை. உண்மையிலேயே பிங்கிலியின் அன்பு மறைந்து விட்டதா, அல்லது அவனது நண்பர்களின் தலையீட்டால் அடக்கி வைக்கப்பட்டிருக்கிறதா அல்லது ஜேன் அவனிடம் கொண்டுள்ள ஈடுபாடு குறித்து அவன் உணரவில்லையா அல்லது அதை அவன் கவனிக்கத் தவறிவிட்டானா, காரணம் எதுவாக இருப்பினும் அவனைப்பற்றிய அவளுடைய அபிப்பிராயத்தில் எந்த மாற்றம் நிகழ்ந்தாலும், அவளது சகோதரியின் நிலைமையில் எவ்வித மாற்றமும் இல்லாததுடன், அவளது மன அமைதியும் குலைந்தது.
 
ஓரிரு நாட்களுக்குப் பிறகே ஜேனுக்கு தன் உணர்ச்சிகளைக் குறித்து எலிசபெத்திடம் பேச தைரியம் பிறந்தது. நெதர்பீல்ட் மற்றும் அதன் உரிமையாளர் குறித்து திருமதி. பென்னட் வழக்கத்தைவிட அதிகமாகப் பேசித் தீர்த்தபின் கிடைத்த தனிமையில் அவளால் பேசாமல் இருக்க முடியவில்லை.
 
ஓ! நமது அன்புத் தாயாருக்கு, தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள தெரிந்திருக்கலாம். தொடர்ந்து அவனைப்பற்றி பேசிக் கொண்டிருப்பதால் அவள் எனக்கு எந்த அளவிற்கு வேதனை தருகிறாள் என்பதை அவள் உணரவில்லை. ஆனால் நான் வருத்தமடைய மாட்டேன். இது நிலைக்காது. அவனை மறந்துவிட்டு நாம் அனைவரும் முன்பு எப்படி இருந்தோமோ அப்படியே இருப்போம்.
 
எலிசபெத் தன் சகோதரியை அளவு கடந்த வாஞ்சையுடன் நோக்கினாளே தவிர வேறு ஒன்றும் பேசவில்லை.
 
இதனால் சற்று வெட்கமடைந்த ஜேன் நீ என்னை நம்பவில்லை. அதற்கு உனக்கு எந்த ஆதாரமும் இல்லை. நான் பழகியவர்களிலேயே மிகச் சிறந்த மனிதனாக அவன் என் நினைவுகளில் இருப்பான், அவ்வளவுதான். எனக்கு எதைக் குறித்தும் நம்பிக்கையோ, பயமோ இல்லை. அவனை கடிந்து கொள்ளவும் எந்த காரணமுமில்லை. எனக்கு அந்த வலி இல்லாததற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்னும் சிறிது காலம் - அதன்பின் இந்நிலைமையிலிருந்து சற்று தெளிவு பெற நான் முயற்சி செய்வேன்என்றாள். சற்றே உறுதியான குரலில் மீண்டும் தொடர்ந்தாள். இது என் கற்பனையினால் ஏற்பட்ட ஒரு தவறு என்பதுடன், என்னைத்தவிர வேறு யாருக்கும் இதனால் பாதிப்பு இல்லை என்பதும் எனக்கு தற்சமயம் நல்ல ஆறுதலை தருவதாக உள்ளதுஎன்றாள்.
 
இதனால் ஆச்சரியமடைந்த எலிசபெத் எனதருமை ஜேன்! நீ மிகவும் நல்லவள். உனது இனிமையான குணமும், பற்றற்ற தன்மையும் தெய்வீகமானது. உனக்கு என்ன சொல்வது என எனக்குத் தெரியவில்லை. நான் உன்னிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லையோ அல்லது உன் தகுதிக்கேற்ப உன்னிடம் சரிவர அன்பு செலுத்தவில்லையோ என உணர்கிறேன்என்றாள்.
 
தன்னைப்பற்றி கூறிய புகழ்ச்சிகளை ஏற்க மறுத்த மிஸ். பென்னட் தன் சகோதரி தன்மீது காட்டிய பரிவை புகழ்ந்தாள்.
 
இல்லை, இது நியாயமில்லைஎன்ற எலிசபெத் இந்த உலகம் எல்லாம் சிறந்தது என எண்ண நீ விருப்பப்படுகிறாய். அதனால் நான் யாரைப்பற்றியாவது குறை கூறினால் உன் மனம் வேதனைப்படுகிறது. நீ மிகவும் சிறந்தவள் என நினைக்க விரும்புகிறேன். நீ அதற்கு மாறாக நினைக்கிறாய். உன் உலகளாவிய நல்லெண்ணத்திற்கு நான் இடையூறாகவோ, தலையீடாகவோ இருப்பேன் என எண்ணி பயப்படாதே. அதற்கு அவசியமில்லை. ஒரு சிலரை மட்டுமே நான் உண்மையாக நேசிக்கிறேன், அதிலும் மிகச் சிலரை குறித்து மட்டுமே உயர்வாக எண்ணுகிறேன். இந்த உலகை நான் எந்த அளவு புரிந்து கொள்கிறேனோ, அதைவிட அதிகமாக அதன்மேல் எனக்கு திருப்தியின்மை ஏற்படுகிறது. மனித இயல்புகளின் நிலையற்ற தன்மை குறித்த என் கருத்தையும் அனுதினமும் உறுதி செய்கிறது. நற்குணங்கள், அல்லது அறிவின் வெளித்தோற்றத்தை நம்ப இயலாது என்பதையும் ஒவ்வொரு நாளும் உறுதி செய்கிறது. இரண்டு சம்பவங்கள் சமீபத்தில் நடந்தன; ஒன்றினைப்பற்றி நான் கூற மாட்டேன்; மற்றது சார்லெட்டின் திருமணம். அது காரணமற்றது! எல்லா வகையிலும் அது காரணமற்றது!என்றாள்.
 
எனதருமை லிசி! இதுபோன்ற உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதே. அவை உன் சந்தோஷத்தைக் கெடுக்கும். சூழ்நிலைக்கும், சுபாவத்திற்கும் உள்ள வேறுபாட்டை நீ உணரவில்லை. திரு. காலின்ஸின் கண்ணியத்தையும், சார்லெட்டின் விவேகமான உறுதியான குணாதிசயத்தையும் சற்றே கருத்தில் கொள். அவளுடைய குடும்பம் மிகப் பெரியது என்பதை நினைவில் கொள். செல்வரீதியாக அது ஒரு மிகச் சிறந்த பொருத்தம். அனைவருக்காகவும் அவள் நம் சகோதரன்மீது மரியாதையோ அல்லது அக்கறையோ கொள்வாள் என நம்பத் தயாராகு.
 
உன்னைத் திருப்திப்படுத்த நான் எதை வேண்டுமானாலும் நம்பத் தயாராக இருக்கிறேன். ஆனால் இவ்விதமான நம்பிக்கையினால் வேறு யாருக்குமே பலனிருக்காது. சார்லெட்டிற்கு உண்மையிலேயே அவன்மீது மரியாதை உண்டென்று நம்ப வேண்டிய கட்டாயத்திற்கு நான் ஆளானால், அவள் மனதின் செயல்பாட்டைவிட, அவளது புரிந்து கொள்ளும் தன்மை மிக பலவீனமானது என்றுதான் எண்ணுவேன். எனதருமை ஜேன், திரு. காலின்ஸ், அகந்தை, ஆடம்பரம் மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்ட ஒரு முட்டாள் என்பதை நீயும் அறிவாய், நானும் அறிவேன். அவனை மணந்து கொள்ளும் எந்த ஒரு பெண்ணிற்கும் சரியான வழியில் சிந்திக்க முடியாது என்பதை நான் உணர்ந்தது போலவே நீயும் உணர வேண்டும். எனவே அப்பெண் சார்லெட் லூகாஸாக இருந்தாலும், நீ அவளுக்காகப் பரிந்து வாதாடாதே. ஒரு தனி மனிதனுக்காக கொள்கை மற்றும் நேர்மையின் அர்த்தத்தை மாற்றக் கூடாது. எக்காரணத்தைக் கொண்டும் சுயநலத்தை விவேகம் என்றோ, ஆபத்து குறித்து உணராமல் இருப்பது, மகிழ்ச்சிக்கான உத்திரவாதம் என்றோ நீயும் நம்ப முயலக் கூடாது, என்னையும் நம்ப வைக்க முயற்சி செய்யக் கூடாது.
 
இருவரைப்பற்றியும் நீ கூறுவது சற்றே கடுமையானது என எண்ணுகிறேன்என பதிலளித்த ஜேன்,‘ அவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வதைப் பார்த்த பிறகாவது நீ நம்புவாய் எனக் கருதுகிறேன். இதற்குமேல் இதைப்பற்றி பேச வேண்டாம். நீ வேறு ஏதோ ஒன்றினைப்பற்றி குறிப்பிட்டிருந்தாய். இரண்டு சம்பவங்களைப்பற்றி கூறினாய். நான் உன்னை தவறாகப் புரிந்து கொள்ள மாட்டேன், ஆனால் உன்னை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், எனதருமை லிசி, அந்த நபர்மீது தவறு இருப்பதாகவும், உன் கணிப்பில் அவன் தாழ்ந்து போனதாகவும் கூறி என் மனதைப் புண்படுத்தாதே. வேண்டுமென்றே நமக்கு தவறிழைக்கப்பட்டுள்ளதாக கற்பனை செய்து கொள்வதற்கு நாம் தயாராக இருக்கக் கூடாது. ஒரு கலகலப்பான சுபாவமுள்ள இளைஞன் எப்பொழுதும் எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கக் கூடாது. நமது தற்பெருமைதான் நம்மை பெரும்பாலும் ஏமாற்றுகிறது. தன்னை மற்றவர்கள் பாராட்டுவதை பெண்கள் அதிகமாக கருத்தில் கொள்கின்றனர்என்றாள்.
 
அப்படி செய்ய வேண்டும் என்பதில் ஆண்களும் முனைப்புடன் உள்ளனர்.
 
அது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டால், அவர்களின் செயல் நியாயமற்றது. ஆனால் சிலர் நினைப்பதுபோல் அப்படிப்பட்ட திட்டமிட்ட உள்நோக்கம் இவ்வுலகில் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை.
 
திரு. பிங்கிலியின் நடத்தையில் திட்டமிட்ட உள்நோக்கம் இருப்பதாக நான் கூறவில்லை. ஆனால் திட்டமிடாமல் பிறருக்கு தீங்கிழைப்பதற்கும், துன்பம் விளைவிப்பதற்கும் பின்னால் ஏதாவது தவறு இருக்கலாம் அல்லது துன்பம் இருக்கலாம். முன்யோசனையின்றி மற்றவர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமை மற்றும் உறுதியின்மையே இதற்கு உண்மையான காரணமாகும்.
 
இவ்விரண்டில் ஏதாவது ஒன்றுதான் இதற்கு காரணம் என்கிறாயா?‘
 
உறுதியாக. ஆனால் இதைப்பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால், நீ உயர்வாக கருதுபவர்களைப்பற்றிய என் கணிப்பைக் கூறி உனக்கு மனவருத்தத்தை உண்டாக்கிவிடுவேன். எனவே உன்னால் முடியும் எனில் என்னை தடுத்து நிறுத்து.
 
அப்படியானால், அவனுடைய சகோதரிகள் அவனை தன் வழிப்படுத்துகிறார்கள் என்பதில் நீ உறுதியாக இருக்கிறாய்.
           
ஆம். அவனுடைய நண்பனுடன் இணைந்து.
 
என்னால் நம்ப முடியவில்லை. அவர்கள் ஏன் அவனை தன்வழிப்படுத்த முயல வேண்டும்? அவனுடைய மகிழ்ச்சி ஒன்றே அவர்களது விருப்பமாக இருக்கும். அவன் உண்மையிலேயே என்மீது அன்பு கொண்டிருந்தால், வேறு எந்தப் பெண்ணாலும் அவனது அன்பைப் பெற இயலாது.
 
உன்னுடைய முதல் கருத்து தவறானது. அவனுடைய மகிழ்ச்சியை மட்டுமின்றி வேறு பலதும் அவர்கள் விரும்பலாம். அவனுடைய செல்வம், மற்றும் வளமான வாழ்க்கை ஓங்க வேண்டும் என விரும்பலாம், செல்வம், செல்வாக்கு மற்றும் பெருமையாகப் பேசப்படும் ஒரு பெண்ணை அவன் மணக்க வேண்டும் என விரும்பலாம்.
 
அவன் மிஸ். டார்சியையே மணமுடிக்க தேர்வு செய்ய வேண்டும் என்பதே அவர்கள் விருப்பம் என்பதில் சிறிதுகூட சந்தேகமில்லைஎன்றாள் ஜேன். ஆனால் அவ்விருப்பமானது, நீ நினைப்பது போலல்லாமல் வேறு சில நல்ல உணர்வுகளின் வெளிப்பாடாக இருக்கலாம். என்னுடன் ஏற்பட்ட அறிமுகத்திற்கு முன்னரே அவர்கள் அவளை அறிந்திருந்தனர். எனவே அவளை சற்று அதிகமாக நேசிப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் அவர்களின் விருப்பங்கள் எதுவாக இருப்பினும், அவர்கள் தங்கள் சகோதரனின் விருப்பத்திற்கு விரோதமாக நடந்து கொள்ள மாட்டார்கள். உண்மையிலேயே ஆட்சேபத்திற்குரியதாக இருந்தாலன்றி, எந்த சகோதரியால் இவ்வளவு உரிமையை எடுத்துக் கொள்ள முடியும்? அவனுக்கு என்மேல் ஈர்ப்பு இருப்பதாக அவர்கள் நம்பினால், அவர்கள் எங்களைப் பிரிக்க முயலமாட்டார்கள். அவன் அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அவர்களது முயற்சியும் பலிக்காது. நீ அப்படிப்பட்ட ஒரு அன்பு இருப்பதாக கருதி கொண்டு, மற்றவர்களை இயற்கைக்குப் புறம்பாகவும், தவறாகவும் நடந்து கொள்ளும்படி செய்வதுடன், என்னையும் வேதனையில் ஆழ்த்துகிறாய். இதுபோன்ற எண்ணத்தால் என்னை துன்புறுத்தாதே. நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதற்காக வெட்கப்படவில்லை. நான் அவனையோ அல்லது அவனுடைய சகோதரிகளையோ தவறாக கருதினால், அதனுடன் ஒப்பிடும் பொழுது இந்த அவமானம் சாதாரணமாகும். இதை எந்த சரியான முறையில் அணுக வேண்டுமோ, அவ்வாறே புரிந்து கொள்கிறேன்.
 
ஜேனின் இந்த விருப்பத்திற்கு மறுப்புக் கூற எலிசபெத்தால் முடியவில்லை. அன்றிலிருந்து அவர்கள் இருவரும் பிங்கிலியின் பெயரை பிரஸ்தாபிக்கவில்லை.
 
பிங்கிலி மீண்டும் வராததை எண்ணி தொடர்ந்து ஆச்சரியப்பட்ட திருமதி. பென்னட் மிகுந்த அதிருப்தியுடன் இருந்தாள். அதற்கான சரியான காரணத்தைத் தெளிவாக, எலிசபெத் தினமும் கூறினாலும், இவ்விஷயத்தை சற்றே குழப்பமான மன நிலையிலிருந்து மட்டுமே திருமதி. பென்னட்டால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. ஜேன்மீது பிங்கிலி காட்டிய கவனம் ஒரு சாதாரண தற்காலிக ஈர்ப்பாக இருந்ததால், அவன் அவளைப் பிரிந்தபின் அந்த ஈர்ப்பும் மறைந்துவிட்டதாக எலிசபெத் தன் தாயாரை சமாதானப்படுத்தினாள். தன்னுடைய இந்த சமாதானத்தை அவளாலேயே நம்ப முடியவில்லை. இது அந்த நேரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், இதையே தினமும் கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கோடைக்காலத்தைக் கழிக்க திரு. பிங்கிலி மீண்டும் வருவான் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே திருமதி. பென்னட்டிற்கு சிறந்த ஆறுதலைத் தருவதாக இருந்தது.
 
இந்த விஷயத்தில் திரு. பென்னட்டின் கருத்து வேறாக இருந்தது. அவர் ஒரு நாள் என்ன லிசி! உன் சகோதரி ஏமாற்றம் கொண்டுள்ளதாக அறிகிறேன். அவளுக்கு என் வாழ்த்துக்கள். திருமணத்திற்கு அடுத்தபடியாக ஒரு பெண் அவ்வப்போது ஏமாந்து போவதையே விரும்புவாள். அது அவளுடைய சக தோழியரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டக்கூடிய ஒன்றாக இருக்கிறது. உன்முறை எப்பொழுது வரும்? ஜேன் உன்னை மிஞ்சுவதை உன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. உனக்கான நேரம் வந்து விட்டது. இங்குள்ள அனைத்து இளம் பெண்களையும் ஏமாற்றக்கூடிய அளவிற்கு மெரிடனில் நிறைய அதிகாரிகள் உள்ளனர். விக்காம் உனக்குரியவனாக இருக்கட்டும். அவன் ஒரு இனிமையான மனிதன். அவன் உன்னை காதலித்துக் கைவிட்டாலும், அதனையும் சிறப்பாகச் செய்வான்.
 
மிக்க நன்றி. ஆனால் அவனைவிட சற்று இணக்கம் குறைந்தவரே எனக்கும் போதும். எல்லோருமே ஜேனைப்போல் அதிர்ஷ்டசாலியாக முடியும் என எதிர்பார்க்க முடியாது.
 
உண்மைதான்என்ற திரு. பென்னட் எப்படிப்பட்ட துணை உனக்கு கிடைத்தாலும், அதை மேலும் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் திறமை உன் அன்பான தாய்க்கு இருப்பது, எனக்கு ஆறுதலைத் தருகிறதுஎன்றார்.
 
சமீப காலமாக லாங்பர்ன் குடும்ப உறுப்பினர்கள் சந்தித்த எதிர்பாராத நிகழ்ச்சிகளின் தாக்கத்திலிருந்து மீள, விக்காமின் தோழமை மிகவும் உதவியாக இருந்தது. அவனை அடிக்கடி சந்தித்தனர். அவன் மேலும் நடந்து கொண்ட விதம், அவன் வெளிப்படையாகப் பழகும் மனிதனாக காண்பித்தது. டார்சியைப்பற்றிய அவனது கருத்துகளும், அவனால் பட்ட இன்னல்கள் பற்றியும்எலிசபெத் ஏற்கனவே கேட்டறிந்திருந்த அனைத்தும் தற்பொழுது வெளிப்படையாகவே உறுதி செய்யப்பட்டதுடன், எல்லோர் மத்தியிலும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதைப்பற்றியெல்லாம் அறிந்து கொள்வதற்கு முன்பே டார்சிமீது வெறுப்புற்றிருந்த அனைவரும், இதனால் திருப்தியடைந்தனர்.
 
ஆனால் குற்றத்தின் அளவைக் குறைக்கக் கூடிய ஹர்ட்போர்ட்ஷயர் மக்கள் அறியாத, ஏதோ ஒரு சூழ்நிலை இருக்கக் கூடும் என எண்ணிய ஒரே நபர் மிஸ். பென்னட் மட்டும்தான். அவளுடைய மென்மையான சுபாவம் எப்பொழுதும், எல்லோருக்கும் சாதகமாகவே நினைக்க வைத்தது. அவன் தவறுகள் செய்திருக்கலாம் என நினைத்தாள்--ஆனால் மற்ற எல்லோராலும் டார்சிதான் இருப்பவர்களிலேயே மிகவும் மோசமான மனிதன் என குற்றம் சாட்டப்பட்டது.
 
------

 



book | by Dr. Radut