Skip to Content

09. ஆத்ம சமர்ப்பணம் (யோகம்)

9. ஆத்ம சமர்ப்பணம் (யோகம்)

ஸ்ரீ அரவிந்தர் எல்லா தபஸ்விகளைப் போலவும் முக்தியடைய யோகத்தை நாடவில்லை. அவர் ஒரு அரசியல் தலைவர். அவருக்கு இரவு பகலாக இதயத்தை ஆட்கொண்ட இலட்சியம் தாய் நாட்டின் சுதந்திரம். நாக சன்னியாசி ஒரு மந்திரத்தை ஜெபித்து கத்தியால் ஒரு கிண்ணம் தண்ணீரில் கீறி அந்த நீரைத் தன் தம்பிக்குக் கொடுத்து அவனுகிருந்த கொடூரமான ஜுரத்தை க்ஷண நேரத்தில் போக்கியதைப் பார்த்த ஸ்ரீ அரவிந்தர், ‘இது என்ன மந்திரம்? இதற்கு உள்ளது என்ன சக்தி, இந்தியா விடுதலையடைய இதுபோன்ற ஒரு சக்தியைக் கண்டுபிடிக்க முடியுமா?’ என்று சிந்தனை செய்து அந்த குறிக்கோளுக்காக யோகத்தை நாடினார். பல யோகிகளை நாடினார். எல்லா யோக முறைகளையும் சோதனை செய்து பார்த்தார். அவரது குறிக்கோளை இறைவன் நிறைவேற்றியதை உணர்ந்தார். அதன்பின் ஸ்ரீ அரவிந்தருக்கு யோகம் தேவைப்படவில்லை. இறைவனுக்கு ஸ்ரீ அரவிந்தர் தேவைப்பட்டார். “இந்தியா சுதந்திரம் அடைவது திண்ணம். அதைப்பற்றி நீ இனி கவலைப்படாதே. உனக்கு வேறு ஒரு கடமையை நான் கொடுத்திருக்கிறேன். நீ அதைச் செய்ய வேண்டும்” என இறைவன் அவரைப் பணித்தார். அதன்பின் ஸ்ரீ அரவிந்தர் மனிதகுருவை நாடவில்லை. தன்னுள் உள்ள இறைவனையே குருவாக ஏற்றுக்கொண்டார். அதனால் ஸ்ரீ அரவிந்தரது யோகம், மோட்சத்தை நாடும் நம் மரபிலிருந்து விலகி, இறைவனுக்கு தன்னைப் பூரணமாக அர்ப்பணித்துகொண்டு இறைவன் தன் திருவுள்ளத்தை பூவுலகில் பூர்த்திசெய்து கொள்ளக்கூடிய கருவியாக தன்னை மாற்றிக்கொள்வதில் முனைந்தது. ஸ்ரீ அரவிந்தர் அவ்வாறு செய்த அர்ப்பணம் ஆத்ம சமர்ப்பணம். ஆத்மாவை இறைவனுக்குச் செய்த சமர்ப்பணம்.

ஆத்ம சமர்ப்பணம் எல்லா யோகங்களுக்கும் முக்யமான பகுதி. ஆனால் ஸ்ரீ அரவிந்தர் யோகத்திற்கு புதிய இலட்சியம் கொடுத்ததைப்போல் ஆத்ம சமர்ப்பணத்திற்கும் புதிய விளக்கம் கொடுக்கிறார். ஒருவகையில் தன் யோகத்தின் முழுக் கருவையும் இந்தக் கருத்தை விளக்குவதன் மூலம் அவர் தெரிவிக்கின்றார்.

யோகத்தை மேற்கொள்ளுதல் லட்சத்திலொருவராகும். அரசியல் லட்சியம், சமூக சேவை போன்றவற்றை எடுத்துக்கொள்வதுபோல் யோகத்தை மேற்கொள்ள முடியாது. ஆண்டவனின் அழைப்பு தேவை. ஓர் உயர்ந்த புஸ்தகத்தைப் படித்துவிட்டு, ஒரு சிறந்த நண்பனின் சுவடைப் பின்பற்றி யோகத்தை ஏற்றுக்கொள்ளுதல் சரியில்லை, முடியவும் முடியாது. அவையெல்லாம் கடைசி வரை நீடிக்காது. கீதை உயர்ந்த புஸ்தகம். Life Divine நமக்கு வேதம் போன்றது. உபநிஷதங்கள் உன்னதமானவை. ஆனால் அவைகளைப் பயின்ற காரணத்தால் யோகத்தை ஆரம்பிக்க முடியாது. நாமும், நம் வாழ்வின் அந்தரங்கங்களும், உயிரும், உடலும் யோகத்தை மேற்கொள்ள இடையறாது விழைந்தால், யோகம் மட்டுமே நம் இலட்சியமானால் அவன் யோகத்தை மேற்கொள்ளலாம். ஆத்ம சமர்ப்பணத்தின் அம்சங்கள் அவனுக்கு மட்டுமே வழிகாட்டியாக அமையும். மற்றவர்கட்கு இந்த விளக்கம் ஒரு சொற்பொழிவாகவே அமையும்.

மேற்சொன்ன வகையில் யோகத்தை நாடிய சாதகருக்கு முதல்படி என்ன? வாழ்க்கைக்குப் புதிய இலட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டது போல் புதிய செயல் முறையும், அதை நடத்துவதற்கு புதிய கருவியும் தேவை. நாம் எண்ணத்தால் செயல்படுகிறோம். அதற்கு மனம் கருவி. பலர் உணர்ச்சியால் செயல்படுகின்றனர். அதன் கருவி நெஞ்சம். மனமும், நெஞ்சமும், உடலும் ஜீவனின் பகுதிகள். ஒரு பகுதியான ஒரு கரணத்தின் உதவியால் வாழ்க்கையை நடத்துவதே இயல்பு. யோக மார்க்கங்களும் அதைப் போன்றே அமைந்துள்ளன. ஞான யோகம் மனத்தைக் கருவியாகப் பயன்படுத்துகிறது. பக்தியோகம் உணர்ச்சியைக் கருவியாகப் பயன்படுத்துகிறது. ஸ்ரீ அரவிந்தரின் யோகம் பூரணயோகம் என்பதால், எல்லா கருவிகளையும் ஒருமித்துப் பயன்படுத்துவது அவசியம். மனமும், உணர்ச்சியும், இதயத்திற்குப்பின் உள்ள குகையில் சந்திக்கின்றன. அந்தக் குகையை மையமாகக் கொண்டு வாழ்க்கையில் செயல்பட்டால், யோகத்தை மேற்கொண்டால் அதுவே பூரண யோகத்திற்கு ஏற்ற கருவியாகும். அங்குஸ்தம், கட்டை விரல் பிரமாணம் என்று சொல்லக்கூடிய அளவில் அந்த இதயக் குகையில் ஒளிமிகுந்த ஆத்மா இருக்கின்றது. அது வெளிப்படும் பொழுது பல வடிவங்களில் காணப்படும். அவற்றுள் ஒன்று கோடி சூர்யப்பிரகாசம் பொருந்திய ஒளி. அவ்வொளியே பூரண யோகத்தின் கருவி. அதன் முழுப் பொலிவு முதலில் நமக்குப் புலப்படாவிட்டாலும், அவ்வொளியை மையமாக கருதுவதே முறை. வேத ரகஸ்யம் எனப்படுவது அந்த ஜோதிவடிவான புருஷனையேயாகும். யோகங்களின் முடிவில் சித்திக்கும் அந்த ஜோதி பூரண யோகத்தை ஆரம்பிக்க தேவையான முதல் கருவியாகும். நமது சமர்ப்பணத்தை ஏற்றுக்கொள்ளும் தலைவன் அவனே. அவனைக் கண்டுபிடித்து நம் நெஞ்சில் பிரதிஷ்டை செய்த பின்னரே சமர்ப்பணம் பூரணமடையும்.

நவ நாகரிக மனிதன் என நாம் கருதுபவர் மனத்தைப் பொறுத்தவரையில் ஆதிகால மனிதனாகவே இருக்கின்றான் என்பது உண்மை. காட்டில் வாழ்ந்த மனிதனின் கொடுமையும், மடமையும் இன்றும் மனித மனத்தின் ஆழத்தில் பூரணமாக இருக்கின்றன. புற வாழ்வில் மனிதன் பெற்ற பண்பையும், நாகரிகத்தையும், அகவாழ்வில் பெற்ற பின்னரே உள்ளத் தூய்மை ஏற்படும். புதைந்து கிடக்கும் இருள் நிறைந்த இந்த அம்சங்களை எடுத்து இதயத்திலுள்ள ஒளிக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும். அதை நிறைவேற்ற சாதகன் மேற்கொள்ளும் தியானம் சிறப்பானது, பூரணமானதும் கூட. புலன்களை அவித்து பத்மாசனம் பூண்டு, ஜடாமுடி தரித்து, காட்டில் நிஷ்டையில் உள்ள முனிவர் மீது செல்லும், புற்றும் வளர்ந்து மறைத்துக் கொண்டாலும், அவரது நிஷ்டை களைவதில்லை. அத்தகைய தவம் மகத்தானது. இறைவனிடம் நம்மைச் சேர்க்க வல்லது. பூரணயோகத்தின் பாதை வேறு. புலன்களை அழிப்பது அதன் நோக்கமில்லை. புலன்களைத் தூய்மைபடுத்துவதே இங்குள்ள முறை. புலன்கள் கருவிகளே. மனித சுபாவத்தின் அடியில் உறைவது உயர்ந்த பண்புள்ள உள்ளமல்ல. காட்டு விலங்கின் உணர்ச்சியும், கடுமை நிறைந்த செயலுடைய சுபாவமும் அங்கு குடிகொண்டுள்ளன. அவையெல்லாம், இன்று நம் கண்ணுக்குப் புலப்படாத அளவுக்கு நம்மிடமிருந்து மறைந்துள்ளன. அவற்றை மறைத்ததே நம் நாகரிகம். பூரணயோகம் அவற்றையெல்லாம் இருக்குமிடத்திலிருந்து கிளப்பி புனிதப்படுத்த வேண்டுமெனக் கோருகிறது. அந்தக் கொடூரங்கள் இருக்குமிடத்திலிருந்து அசைந்தவுடன், யோகி தன் நிலையிழந்து அவற்றை வெளிப்படுத்த ஆரம்பிப்பான். அந்த நிலையைத் தவிர்க்கவே, அவற்றைக் கிளறுமுன் நெஞ்சில் ஜோதியை ஸ்தாபிக்க வேண்டும் என்றது. அந்த ஜோதிக்கு மட்டுமே அவை கட்டுப்படும்.

ஒவ்வொரு நிகழ்ச்சி மூலமும் நம்முள் புதைந்து கிடக்கும் விலங்குணர்ச்சியை மேலே கொணர்ந்து, அந்த ஆத்ம ஜோதியை நோக்கி அவற்றைச் செலுத்தி அவற்றின் கடும் பிடியிலிருந்து நாம் மீள்வதையே ஆத்ம சமர்ப்பணம் என்கிறார். இதைத் தொடர்ந்து செய்வதன் மூலம் ஜீவனின் அஸ்திவாரங்கள் துலக்கம் பெறுகின்றன. புலன்கள் விளக்கம் அடைகின்றன. இந்த மாபெரும் காரியத்தைச் செய்யும் திறனை நமக்குத் தியானம் அளிக்கிறது. அந்தத் தியானம் பூரணமான தியானமாகும். ஜீவன் முழுவதும் பரவும் பூரண தியானமாகும் (all inclusive concentration).

இத்தகைய தியானத்தை ஏற்றுக்கொண்டு ஆத்ம சமர்ப்பணத்தைப் பயிலும்பொழுது, உலகத்தின் முழு வரலாறும் சுருங்கி, அடங்கிப் பொதிந்துள்ள நம் பிறப்பு அதன் தலைவனான ஜீவன் ஆகிய இரண்டும், கோடி சூர்ய பிரகாசமுள்ள ஜோதியால் ஈர்க்கப்பட்டு, தன் ஆயிரம் வாயில்களையும் திறந்து கொண்டு ஆத்ம ஒளியை வரவேற்கின்றது. இதை ஸ்ரீ அரவிந்தர் wide massive opening, பரந்து விரியும் அகண்ட விழிப்பு என்கிறார்.

ஒருபுறம் இதயக் குகையில் ஆத்மாவின் பிரதிஷ்டை, மறுபுறம் பொய்மையால் நிறைந்த காயத்தின் அகண்ட விழிப்பு. விழிப்புற்ற உடலின் மூலைமுடுக்குகளிலெல்லாம் ஆத்ம ஜோதி சென்று தங்கவேண்டியதே அடுத்த கட்டம்.

தன் மனதில் எழும் எண்ணத்தைப் பேச்சாக வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, ஆத்ம ஜோதிக்கு அர்ப்பணம் செய்து பின் உத்தரவு கிடைக்கும் அளவுக்கே பேச வேண்டும். நெஞ்சில் கிளர்ந்தெழும் உணர்ச்சிகளை நேரடியாக வெளிப்படுத்துவதோ, செயல்படுத்துவதோ நம் இயல்பு. அவற்றை அதற்குப் பதிலாக ஜோதியிடம் சமர்ப்பித்து, புனிதப்படுத்தி, அதன் கட்டளையை மட்டும் நிறைவேற்றும் பக்குவத்தை கைக்கொள்ள வேண்டும். யோகி தன் எண்ணங்கள், உணர்ச்சிகள், செயல்கள் அனைத்தும் ஆத்ம சமர்ப்பணத்திற்கு கட்டுப்படும் வரை இந்தப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

அடுத்தது தியானம். தியானம் பலித்தால் யோகம் பலிக்கும். ஆத்ம சமர்ப்பணம் ஜீவனின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் செல்லும்போது, அதன் சுவட்டைப் பின்பற்றித் தியானமும் அங்கெல்லாம் செல்ல வேண்டும். சமர்ப்பணத்தின் இலட்சியத்தைத் தியானம் பூர்த்தி செய்யும். அதேபோல் தியானத்தின் பலனும் இலட்சியத்தைப் பொறுத்தது.

ஒவ்வொரு பிறவியிலும் உனக்கே அடிமை செய்து வாழ்வேன், உன் அடியார்களுக்கே தொண்டு செய்யும் பாக்கியத்தை எனக்கு கொடு. இரவும் பகலும் பிரியாது வணங்குவேன், எப்பொழுதும் உன் திருவடியைக் காணும் பேற்றை எனக்கு வரமாக அருள வேண்டும் என்றெல்லாம் பக்தன் பலவாறாக இறைவனை வேண்டுகிறான். அவன் செய்யும் தியானம், அவன் வேண்டுகோளைப் பூர்த்தி செய்யும்.

பூரண யோகத்தின் குறிக்கோளாக யோகி எந்த இலட்சியத்தை மேற்கொள்வது, வாழ்வனைத்தும் யோகம் என்று கூறிய ஸ்ரீ அரவிந்தர் யோகியின் சமர்ப்பணத்திற்கும் தியானத்திற்கும் அளிக்கும் இலட்சியம் ‘வாழ்வே தெய்வம்‘ என்பது. அவனன்றி ஓரணுவும் அசையாது என நாம் அறிவோம். ஸ்ரீ அரவிந்தர் ஒவ்வோர் அணுவும் அவனே என்கிறார். இந்த லட்சியத்தை மனம் ஏற்றுக்கொண்டு, தியானத்தின் தீவிரத்தை உச்சிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே அடுத்தபடி. தியானம் பலித்தால் ஏற்படும் பலன் மூன்று. தியானத்திற்கு அடிப்படையான இலட்சியமாக யோகி கல்லும், மண்ணும் இறைவனே; தோற்றத்திற்கே கல், மண் என ஏற்றுக்கொண்டான். தியானம் பலித்தபின் தான் அறிவால் ஏற்றுக்கொண்டது ஒரு கருத்தல்ல, பூரண உண்மை என அறிகிறான். கல்லைத் தொட்டுப் பார்த்தால் இறைவனின் உடலைத் தொடுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. சிறையில் ஸ்ரீ அரவிந்தர் கைதிகளை நாராயணனாகக் கண்டார். யோகி எதிரில் வருபவர்களை எல்லாம் ஸ்ரீ அரவிந்தராகக் காண்கிறார். இரண்டாவதாக தன்னைப் பார்த்தால் கை, கால், உடல், உள்ளம், உடை என்பதற்குப் பதிலாக தன்னையே இறைவனாக உணர்கிறான். ஆழ்ந்து நோக்கும் பொழுது தன் எதிரில் உள்ள உலகத்திற்கும், தனக்கும் அப்பாற்பட்டதாக, இறைவன் சிருஷ்டிக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும் நிலையை முழுமையாக தன் அகக் காட்சியில் காண்கிறான். இந்த மூன்று சித்திகளும் பூரண யோகத்தின் அடிப்படையான முதல் சித்தியின் 3 பாகங்களாகும்.

சித்தி பெற்ற யோகி தன் தவமுயற்சி பலன் பெற்ற பாக்கியத்தைக் கருதி இறைவனுக்கு நன்றி உணர்வு கலந்த உள்ளுணர்வைப் பெருக்கி நிற்கும் பொழுது, இறைவன் பக்தனிடம், “இதுவரை உன் முயற்சி. ‘நீ’ இருக்கும்வரை முயற்சி தேவை. ‘நீ’ கரைந்து விட்டால் இனிமேலுள்ளவற்றை நானே செய்து கொள்கிறேன். உன் முயற்சி தேவையில்லை,” என அருள் விளக்கம் அளிக்கின்றார்.

பூரண யோகத்தின் முக்ய அம்சமான ஆத்ம சமர்ப்பணம் அரியமுறை, சிறந்த கருவி. இந்த யோகத்தை முற்பிறப்பில் பக்குவம் அடைந்தவர்கள் மட்டுமே கைக் கொள்ளலாம். வேத ரகஸ்யமான ஒளியை, காயத்திரி ஜபம் வழிபடும் இதய ஜோதியை தலைவராகவும், முதல்வராகவும் நியமித்து, விலங்கு உணர்ச்சிகளை அவ்வொளிக்கு சமர்ப்பித்து, வாழ்வு முழுவதும் இறைவனே என்ற இலட்சிய அடிப்படையில் தியானத்தை மேற்கொண்டு தீவிரப்படுத்தி, தன்னையும் பிரபஞ்சத்தையும் பரம்பொருளாகக் காணும் சாதகனுக்கு சிருஷ்டிக்கு அப்பால் உள்ள இறைவன் ‘நான் இங்கும், இந்த உருவமில்லாத வடிவிலும் இருக்கின்றேன்‘ என உணர்த்துகின்றார்.

********



book | by Dr. Radut