Skip to Content

08. சத்திய ஜீவன்

8. சத்திய ஜீவன்

மரணம் என்பது சிருஷ்டி ஏற்பட்ட நாளாக உள்ளது. அது சிருஷ்டியின் பகுதி என்பது போல் இயற்கையின் நியதியுமாகும். இயற்கையின் நியதிகளை மனிதன் பல்வேறு வழிகளில் தன் அறிவால் தனக்கு சௌகரியமாக மாற்றிக் கொண்டிருந்த போதிலும், அடிப்படையில் அந்நியதியை மாற்ற முயன்றதில்லை. விஞ்ஞானத்தின் மூலம் இயற்கையின் சக்திகளை - மின்சாரம், காந்தம் போன்றவை - தன் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்து அதனால் பெரும் பலன் அடைந்துள்ளான் மனிதன்.

தொன்று தொட்டு தவத்தை நாடிய மனிதன் இயற்கையின் நியதியான வாழ்க்கையைப் புறக்கணித்து இறைவனை அடைந்து மோட்ச பலனை அநுபவிக்க முயன்று வெற்றி கண்டான். தவசி மோட்சமடைவது ஒருவகையில் வாழ்க்கையை வென்றதாகப் பொருள். இன்னொருவகையில் தொடர்ந்து வரும் பிறவியைக் கொடுக்கும் இயற்கையின் நியதியை வென்றதாகவும் கொள்ளலாம். அல்லது நியதியை மீறிப் புறக்கணித்ததாகவும் கருதலாம். ஸ்ரீ அரவிந்தரின் யோகம் இதற்கடுத்த இலட்சியத்தை இலக்காகக் கொள்கிறது. புல்லாகிப் பூண்டாகி பல்விதமாகி, மனிதன் பிறந்தான் என்ற இந்துமத மரபை அடிப்படையாகக் கொண்டு மனிதனுக்கு அடுத்த சிருஷ்டியை யோக லட்சியமாகக் கொள்ள பூரணயோகம் விழைகிறது. இன்று கலியுகத்தில் மனிதன் பொய்யும் மெய்யும் கலந்த வாழ்க்கையை நடத்தினால், இனிவரும் எதிர்காலத்தில் மனிதனுக்கு அடுத்த சிருஷ்டி ஏற்படும்பொழுது பொய்யை முழுதும் விலக்கி, மெய்யையே முழுமையாக உள்ளும் புறமும் உணர்ந்து வாழும் ஜீவன் ஏற்படுவான் என்பதே அக்கொள்கையாகும். சத்தியத்தை முழுதுமாக வாழும் ஜீவன் ஏற்பட்டால் ஸ்ரீ அரவிந்தரது பூரணயோகம் பலிக்கும். அந்த ஜீவனை அவர் supramental being என அழைக்கிறார். அவனது ஜீவிய சக்தி supramental worldலிருந்து வருவதாகச் சொல்கிறார். அந்த இலட்சியம் நிறைவேற பூரணயோகி இயற்கையின் நியதியான மரணத்தை வெல்ல வேண்டும். மரணத்தை வென்று, பொய்யை மெய்யாக மாற்றி, யோகி மனிதனுக்கு அடுத்த சிருஷ்டியாக தன்னைப் புனர்ஜென்மம் எடுக்கச் செய்தால் சத்திய உலகின் ஜீவன் அவனுள் பிறப்பான்.

இறைவன் என்று பரம்பொருளாகிய பரமாத்மாவைக் குறிக்கின்றோம். அவன் சிருஷ்டிக்கு அப்பாற்பட்டவன். சிருஷ்டி அவனில் ஒரு பகுதி. சிருஷ்டியில் உள்ளது ஜடப்பொருள், உணர்ச்சி, அறிவு ஆகியவை கூடிய மனிதன். உடல், உணர்வு, மனம் இவற்றைக் குறிக்கும். இவை சிருஷ்டியின் ஆரம்பத்திலுள்ளவை. சிருஷ்டியின் உயர்ந்த நிலையில் சச்சிதானந்தம் உள்ளது. சத்து, சித்து, ஆனந்தம் ஆகியவை சச்சிதானந்தம். உபநிஷதங்கள் 5 கோசங்களைச் சொல்கின்றன. உடலை அன்னமய கோசம் என்றும், அங்குள்ள ஆத்மனை அன்னமய புருஷன் எனவும், உயிரை பிராணமய கோசம் எனவும், அந்த ஆத்மனை பிராணமய புருஷன் எனவும், மனோமய கோசம், மனோமய புருஷன், விஞ்ஞானமய கோசம், விஞ்ஞானமய புருஷன், ஆனந்தமய கோசம், ஆனந்தமய புருஷன் என விளக்குகின்றது.

மனிதன் அன்னம், பிராணன், மனத்தாலானவன். சிருஷ்டியின் உயர்ந்த நிலை சத்லோகம், சித்லோகம், ஆனந்த லோகங்களாலானவை. இவற்றிடையேயுள்ளதை விஞ்ஞானமய லோகம் (supramental world) என கூறுவார். மனத்தை மட்டும் கூர்ந்து பார்த்தால், மனத்தில் ஆத்மிக சக்தி வெளிப்பட ஆரம்பித்த பின் மனிதன் முனிவனாகிறான். அதற்கடுத்த நிலையில் ரிஷியாகவும், பின்னர் யோகியாகவும் உயர்ந்து ஆத்மிகப் பலத்தைப் பெறுகிறான். இவற்றை ஸ்ரீ அரவிந்தர் higher mind, illumined mind, intuitive mind எனக் கூறுகிறார். அதற்கடுத்த நிலையை overmind, எனக் கூறுகிறார். அந்த லோகம் தெய்வங்களாகிய, சிவன், விஷ்ணு போன்றவர்கள் உறையும் சுவர்க்க லோகம். கிருஷ்ணனாக அவதரித்த விஷ்ணு, நீல நிறம் தாங்கி வந்ததால் அவரை நீல மேக சியாமள வர்ணன் என்பார். நீலம் தெய்வலோகத்திற்கு உரிய ஒளி. தெய்வ லோகத்திற்கும், சிருஷ்டியின் உயர் தனிச்சிறப்புள்ள ஆனந்த லோகத்திற்கும் இடையேயுள்ளதை உபநிஷதங்கள் விஞ்ஞான லோகம் எனக் கூறுகின்றன. இதை சத்திய லோகம் என்றும் கூறுவர். இந்த லோகத்தின் ஒளி பொன்னொளி. இந்த லோகத்தின் சக்திக்கு மரணத்தை வெல்லும் திறனுண்டு. பொய்யை மாற்றி மெய்யாக்கும் ஆற்றலுண்டு. யோகி தன் தவத்தால் இந்த லோகத்தை அடைந்தால் இப்பலன்களைப் பெறலாம். பூரண யோகம் இந்த யோகத்தின் ஆத்மிக சக்தியை அவனிக்குக் கொணர்ந்து அங்குள்ள மரணம், பொய், வறுமை, துன்பம் ஆகியவற்றை அறவே நிரந்தரமாக ஒழிக்க முயல்கிறது. பூரண யோகியின் லட்சியம் சத்திய லோகத்தின் வாழ்வை பூமிக்குக் கொணர்வதாகும். அதற்கு சத்திய ஜீவன் அவதரிக்க வேண்டும். பூரணயோகம் தவசிக்குப் பலித்தால் அவனே சத்திய ஜீவனாக (supramental being) புனர்ஜென்மமெடுப்பான். அவனே அத்தகைய அவதாரப் புருஷனாவான்.

சத்திய லோகம் பூமியின் வாழ்வில் செயல்பட முடிவு செய்தால் அது உடனடியாகவோ, அல்லது நேரடியாகவோ செயல்படுவதில்லை. தனக்குக் கீழேயுள்ள தெய்வ லோக சக்தியை முதலில் பூமிக்கு அனுப்புகிறது. தெய்வலோக சக்தி செயல்படும்பொழுது பொய்யை விலக்கி மெய்யெல்லாம் திரட்டி அவற்றைப் பொய்யினால் பாதிக்கப்படாதவாறு பாதுகாத்து, மெய்யின் திறத்தால் செயல்படுகிறது.

சத்தியலோக சக்தி செயல்படும்பொழுது அது பொய்மையால் பாதிக்கப்படுவதில்லை. அது பொய்யை விலக்குவது இல்லை. பொய்மையினுள்ளும் புகுந்து செயல்படும் திறனுடையது. சிருஷ்டியின் அடிப்படை மெய்யாகிய சத்தியம். பொய்யும் உயிர் வாழ வேண்டுமானால் அதற்கும் வித்தாக ஓரளவு உண்மை வேண்டும். எல்லா பொய்மைகளும் மெய்யின் அஸ்திவாரத்தாலேயே நிலைத்து நிற்கின்றன. சத்திய லோக சக்தி, உலகில் செயல்பட ஆரம்பித்தவுடன் அஸ்திவாரமாகிய மெய்யை அடைந்து, தன் லட்சிய சேவைக்கு அடிப்படையாக வழங்குகிறது. இதுவே சத்திய லோக சக்தியின் சிறப்பாகும்.

இதன் செயல் புவியில் பூர்த்தியானால் சத்திய ஜீவன் அவதாரமெடுப்பான். அதாவது பூரணயோகி சத்திய ஜீவனாக புனிதப்படுவான். பூர்த்தியாகும் இலட்சியம் பலிக்கும் சிகரம் இது. இதற்குக் கீழே தெய்வ லோக சக்தியின் அவதாரமும், அதற்குக் கீழே யோக ஞான லோகமாகிய யோகியின் உலகின் அவதாரமும் ஏற்படும்.

மனிதன் பூரணயோகத்தின் மூலம் சத்திய ஜீவனாக மாறும்போது, அவன் பிரபஞ்சத்தின் ஆத்மாவாகவும் பரம்பொருளின் ஆத்மாவாகவும் விளங்குவான். தானே பரம்பொருளாக தன்னைக் காண்பான். தானே பிரபஞ்சத்தின் ஆத்மாவும், வாழ்வும் என உணருவான். கொல்ல வரும் புலியை மனிதன் கண்டு நடுங்கும்பொழுது, சத்திய ஜீவன் அந்தச் செயலை பரம்பொருள் பணித்திருப்பதன் உட்கருத்தை உணருவான். மனிதனுக்குக் கோட்டானின் குரல் கர்ண கடூரமாயிருக்கிறது. சத்திய ஜீவன் அக்கடுங்குரலில் இறைவனின் இதய ஒலியைக் கேட்டு கீதம் போல் ரசிப்பான். மனிதனுக்கு இருள் வடிவாய்க் காட்சியளிக்கும் உலகம், சத்திய ஜீவனுக்கு அருள்வடிவாய்த் தோன்றுகிறது. எல்லா ஒலியையும், இனிய கீதமாகவும், எல்லாக் காட்சிகளையும், அற்புதக் காட்சிகளாகவும், எல்லா நிகழ்ச்சிகளையும், ஆச்சரியத்தின் மலர்ச்சிகளாகவும் காணும் அகக்கண் அவனுக்குண்டு.

உலகில் மனிதன் மனிதனாகவே வாழ்கிறான். தன்னை ஆத்மாவாக உணரும் காலை மோட்சமடைகிறான். யோகம் சித்தி பெற்று ஒருவன் தன்னை பிரபஞ்சத்தின் ஆத்மா என உணர்ந்தாலும் அந்த யோக சித்தியும், தனிமனிதன் பெற்ற யோக சித்தியும் ஓரளவு முரண்பாடுடையனவாகவுள்ளன. மோட்சமடைந்து பரம்பொருளையடைந்த பின்னும், யோகி பிரபஞ்சத்தின் ஆத்மாவை அரவணைப்பதில்லை. விலக்கியே செயல்படுகிறான். சத்திய ஜீவனின் சிருஷ்டியில் உள்ள விசேஷம் இந்த முரண்பாடுகளெல்லாம் அவனிடையே காணப்படா. தானே அந்த மூன்று நிலைகளையும் உணர்ந்தாலும், அவற்றுக்குள்ள முரண்பாடுகளை களைய முற்பட்டதாலும் அந்த மூன்று உயர்ந்த யோக சித்திகளும், முரண்பாடில்லாதவை என்பதுடனில்லாமல், ஒன்றோடொன்று ஒருங்கிணைந்து சிறந்து செயல்படும் தன்மையையுடையவன் அவன். நம் வாழ்க்கையிலுள்ள முரண்பாடுகளும் குறைபாடுகளும் சத்திய ஜீவனுக்கில்லை. பிரபஞ்சத்தைப் பற்றி நமக்கில்லாத ஞானம் அவனுக்குண்டு என்பதாலும், நம்மை அடக்கி ஆளும் அகந்தை அவனுக்கில்லை என்பதாலும், நமக்குள்ள முரண்பாடுகள் அவனுக்கில்லை.

சத்திய ஜீவனின் வாழ்க்கை தெய்வீக சுபாவத்தால் கட்டுண்டது. பிரபஞ்சமே அவனது உடலும் வாழ்வுமாகும். அவன் மூலம் பிரபஞ்சம் தன்னை சிருஷ்டித்துக் கொள்கிறது. அவன் வாழ்வே பிரபஞ்சத்தின் சிருஷ்டிமயமான வாழ்வாகிறது.

பரம்பொருளின் ஆத்மிக சிருஷ்டியின் உணர்வு பேரின்ப சுவை தருவதாகும். அதுவே சத்திய ஜீவனின் அன்றாட வாழ்க்கை உணர்ச்சியாகும்.

வாழ்வும், செயலும், அசைவும் ஆத்மிக முழுமையையுடையதாக அவன் இருப்பான். அகண்ட ஜீவியம் உள்ளது அவன் வாழ்வு. மற்றப் பொருள்களைப் பார்க்கும் பொழுது அவற்றுடன் இரண்டறக் கலந்து தானே அதுவாய், அதுவே தானாகி விடும் தன்மையையுடையது அவன் ஜீவன். மற்றப் பொருள்களை புலன்களால் அறிந்து அவன் புரிந்து கொள்வதில்லை. அவற்றுடன் ஒன்றிப் போவதால் தன்னையுணர்வது போலவே அவற்றையும் அவனால் உணர முடியும். பொருள்களின் வேறுபட்ட தன்மையும், மாறுபட்ட குணமும் மனிதனுக்கு விருப்பு வெறுப்புகளை உண்டு பண்ணுகின்றன. சத்திய ஜீவன், மாறுபட்ட பொருளைப் பார்க்கும்பொழுது இறைவனின் சிறப்பை வெளியிட இது மேலும் ஒரு சந்தர்ப்பம் என அறிந்து, மாறுபடும் தன்மையின் சிருஷ்டிச் சிறப்பை உணருவதால் உள்ள உயர்ந்த இன்பமாகிய பேரின்பத்தை நுகருகிறான். ஒவ்வொரு சிறு பொருளைப் பார்க்கும் பொழுதும் அவை பெரும் பொருளாகிய பரம்பொருளின் விளக்கங்களாகக் கண்டு பரம்பொருளின் தன்மையை நுணுகி உணரும் வாய்ப்பாக அவற்றை ஏற்று மகிழ்கின்றான்.

மனிதன் சத்திய ஜீவனாகும்பொழுது, புற நிகழ்ச்சிகளின் அடிமையான அவன் வாழ்வும் உணர்வும், அக நிகழ்ச்சிகளின் சிகரங்களாக மாறுகின்றன. மனிதனாக இருக்கும்பொழுது புறநிகழ்ச்சிகள் அவன் வாழ்வை நிர்ணயித்தன, அவனது உணர்வை உருவாக்கின. சத்திய ஜீவனாகிய பின் அவன் அகநிலை, புறநிகழ்ச்சிகளை நிர்ணயிக்கின்றன. அவனது உள்ளுணர்வு புற நிகழ்ச்சிகளின் போக்கையும், வேகத்தையும் நிர்ணயிக்கின்றது. முதல் கட்டமாக இது அவனது வாழ்வில் மட்டும் நிகழ்கிறது. அடுத்த கட்டத்தில் அவன் அகவாழ்வு, உலகத்தின் புற வாழ்வை நிர்ணயிக்கும் திறன் பெறுகிறது.

இயல்பாக மனித வாழ்க்கைக்குண்டான, அக வாழ்க்கைக்கும் புற வாழ்க்கைக்கும் உண்டான முரண்பாடு அவனுக்கில்லை. அறியாமையிலுள்ள மனிதர்களுடன் அவன் தொடர்பு கொள்ளும்பொழுது அவனது அரவணைப்பு அவனுக்கு அறியாமையின் கறையைக் கொடுப்பதில்லை. அறியாமையால் பாதிக்கப்படாமல் அவர்களை அன்புடன் தழுவ அவனால் முடியும்.

தன்னுடைய அகவாழ்க்கை அவனுக்குப் பூரணமாக தன் ஆதிக்கத்திலிருப்பதுடன், மற்றவர்களுடைய அக வாழ்க்கையை அவனால் தொட்டுச் செயல்பட முடியும். அதே போல் உலகத்தின் அகவாழ்க்கையை அவன் எட்டி அதன் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும்.

உலகம் என்பது பூமி மட்டுமில்லை. பிரபஞ்சம் மட்டுமில்லை. தெய்வலோகம் இருப்பதைப் போல் ஆவி உலகமும் உண்டு. பெருந் தெய்வங்கள் வாழும் சூட்சும உலகமும், சிறு தெய்வங்கள் சஞ்சாரம் செய்யும் சூட்சும உலகமும் உண்டு. பிரபஞ்சத்திற்கும் சூட்சுமம் உண்டு. அதன் சூட்சும உலகமும் உண்டு. சத்திய ஜீவன் இந்த எல்லா உலகங்களுடன் தெளிவான தொடர்புள்ளவன். அந்தத் தொடர்பு அவனுக்கு நம் உலகில் மெய்ப்பொருள்களின் மேல் சிறந்த ஆதிக்கத்தை அளிக்கிறது. அன்னையின் குருவின் மனைவிக்கு இதுபோன்ற ஒரு திறன் இருந்தது. காலில் செருப்பை மாட்டிக்கொள்ள அவர் விரும்பும்பொழுது செருப்பை நிமிர்ந்து பார்ப்பார். அவரது பார்வை பட்டவுடன் செருப்பு நகர்ந்துவந்து அவர் காலில் தானே மாட்டிக்கொள்ளும்.

சத்திய ஜீவியமே மனிதனின் உயர்தனிச் சிறப்புப் பெற்ற பெறற்கரிய இலட்சியம். அதை அடைந்த பின்னர் இனி அவ்வாழ்வில் அடையக்கூடிய குறிக்கோள் என்று ஒன்று இல்லை. இருப்பதே இலட்சியம். சத்திய ஜீவனாக இருப்பதே இலட்சியம். பூவுலக வாழ்க்கையில் சத்திய ஜீவன் உலவும்பொழுது மற்றைய நிலைகளிலும் மனிதர்கள் இருப்பார்கள் அல்லவா? அறியாமையில் உழலும் மனிதனும், ஆத்மாவை உணர்ந்த ஜீவன் முக்தனும் இருப்பார்கள். சத்திய ஜீவன் அவர்கள் வாழ்வில் புகுந்து நல்ல மாற்றங்களை உண்டு பண்ணுகிறான். அறியாமையில் மனிதன் திறம்பட செயல்பட்டு வெற்றி கண்டு விழா கொண்டாடியபின், தன் வெற்றியே தனக்கு விலங்கானதைக் காண்கிறான். அப்படிப்பட்ட மனிதனை சத்திய ஜீவனின் அரவணைப்பு, அறியாமையிலிருந்து விடுபடுத்தி, ஒளிமயமான முயற்சிகளின் பாதையில் செலுத்துகிறது. இப்பாதையே ஞானத்திலிருந்து உயர்ந்த ஞானத்தை எட்டும் பாதையாகும்.

சத்திய ஜீவனாகும் மாற்றம், அறிவுக்குச் சிறப்பையும், புதிய திறனையும் அளிக்கிறது. அறிவு தெரிந்ததைக் கொண்டு தெரியாததை அறிந்துகொள்ள முயல்வது வழக்கம். சத்திய ஜீவனில் தெரியாதது என்று ஒன்று இல்லை. தெரிந்து தெளிவடைந்ததும், தெரிந்து ஆனால் மறைந்தும் உள்ளனவே இருக்கின்றன. தெரிந்ததை வெளிக்கொணரும் முறையே சத்திய ஜீவனின் புதியபாதை.

அறிவு புலன்களால் செயல்பட்டு, கண்டு, கேட்டு, உற்று, உணர்ந்து, அறிய முயல்கின்றது. சத்திய ஜீவனின் முறை வேறு. ஒருவரை அல்லது ஒரு பொருளை அறிய முற்பட்டால் அப்பொருள் அவனுள் வந்து அடைந்துவிடும். அப்பொருளின் முழுத்தன்மையும் தன்னகத்தே அவன் பெறுவான். பெற்றபின் தன்னை அறிவது போல அப்பொருளை அறிவான். இப்படிக் கிடைப்பது முழுமையான அறிவு. இதில் தவறுக்கு இடமில்லை. பிறரை தன்னகத்தே உள்ளுணர்வால் அறியும் திறன் இது. தன் உள்ளொளியைப் பரப்பும் செயலாக இது முடியும். தன் உள்ளேயுள்ள ஒளியைப் பெருக்கும் வகையில் தன் சூழ்நிலையை அவன் உணருகின்றான்.

வாழ்வு வளர முயல்கிறது. வெற்றி, ஆதிக்கம், திருப்தி, சிருஷ்டி, அன்பு, சந்தோஷம் பெற இடையறாது வாழ்வு தன்னை துரிதப்படுத்திக் கொள்கிறது. சத்திய ஜீவனின் வளர்ச்சி உள்ளேயுள்ள ஒளியின் வளர்ச்சி. வெற்றி அவ்வொளிக்குக் கிடைக்கும் வெற்றியேயாகும். ஆதிக்கம் அதன் ஆதிக்கம் நம்மீது வளருவதேயாம். திருப்தியும் அது பெரும் திருப்தியே. சிருஷ்டி அதன் மலர்ச்சியே. அன்பும், சந்தோஷமும் அது அடையும் பலனே. வாழ்வும், சத்திய ஜீவியமும் பெற்றுள்ள குறிக்கோள்கள் ஒன்றே. வாழ்வில் மனிதனும், சத்திய ஜீவியத்தில் ஆத்மாவும் அக்குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்கின்றன. எல்லாமாய், ஒன்றாய், ஒருமையாய் உள்ளவன் இறைவன். பல பொருட்களிலும் தோன்றும் ஒன்று அதுவே. அந்த மாபெரும் ஒருமையையுடைய ஒன்றை பலமுகங்களின் வாயிலாக சிருஷ்டித்து லீலையை நடத்துவதே சத்திய ஜீவனின் வாழ்வாகும். சக்தி, ஒளி, அழகு, சத்தியம் ஆகியவற்றைப் பல பெரும் உருவங்களாகத் தோன்றச் செய்வதே சிருஷ்டியாகும்.

வாழ்வின் இலட்சியங்களை ஆத்மாவே பூரணமாக அடைவதால், ஜீவனின் அமைப்பே தலைகீழே மாறுகிறது. அந்த மாற்றத்தால் உடலுக்கும் ஆத்மாவுக்கும் உள்ள தொடர்பு மாறி சிறக்கின்றது. மனிதனின் உடல் ஒரு திசையிலும், ஆத்மா அதற்கு எதிர்த்திசையிலும் செல்வதே இயல்பு. ஆத்மாவுக்குள்ள நியதிகள் வேறு. உடலுக்குள்ள நியதிகள் வேறு, வேறு என்பதுடன் எதிர்மாறானவையும் கூட. ஆத்மா அழிவற்றது, உடல் அழியக்கூடியது. இந்நிலை மாறி ஆத்ம வழியில் செல்ல உடல் உடன்படுகிறது. சத்திய ஜீவன் வாழ்க்கையில், ஆத்மா ஒளிமயமானது என்றால் உடல் இருள்மயமானது. புதிய நோக்கத்தை ஏற்றுக்கொண்ட உடல் உடலின் இருளில் ஒளி மறைந்திருப்பதைத் தேடிக் கண்டுபிடிக்க முன்வருகிறது. உடலின் வாழ்வில் ஒளிவீசும் அழகு தோன்றச் செய்வதே அதனுள் ஒளிந்துள்ள ஒளியின் லட்சியம்.

இருண்ட உணர்ச்சிகட்கு அடிமையானது உடல், இவ்வுணர்ச்சிகள் இருளின் பிடியிலிருந்து விடுபட்டு தங்கள் நினைவும் உணர்வும் தானே பூர்த்தி செய்து கொள்ளும் திறன் பெறும் வகையில் மாறி மிளிர்வதே ஜீவனில் ஏற்படும் மாற்றம். இம்மாற்றம் உடலுக்கு சிறப்பைக் கொடுக்கும். சிறப்பெய்துவதுடன், பூரணத்துவம் பெறவும் உதவும். ஜீவன் முழுவதும் ஆத்மிக சக்தியால் நிரம்பப் பெற்று மென்மையும் சுமுகமும் நிறைந்ததாகும். இதனால் சத்திய ஜீவனைச் சுற்றியுள்ள வாழ்க்கை அவனது அக, புற உணர்ச்சிகளை ஒத்து, ஒன்றிப் போகும்.

வாழ்க்கையும், உடலும் எப்பொழுதும் அறிவின் ஆட்சிக்கு இணைந்து வரா. மனதில் ஆத்ம சக்தி வளரும்பொழுது வாழ்வு அதற்குக் கட்டுப்படுகிறது. இருண்ட உடலும் அந்த ஆதிக்கத்திற்குள் வந்துவிடுகிறது. உணர்ச்சியையும், உடலையும் கட்டுப்படுத்தும் திறன் மேலும் வளரும் பொழுது வலியை ஆனந்தமாக மாற்றும் திறனாக அது உயர்ந்துவிடுகிறது. சத்திய ஜீவன் மனித ஜீவியத்தை முழுமையாக மாற்றும் திறனைப் பெறுகிறான்.

இறைவனை அடையும் ஆர்வம் எல்லா ஜீவராசிக்கும் பிறப்பிலேயே உண்டு. சத்திய ஜீவனில் இந்த ஆர்வம் பேரின்பப் பெருக்காகி ஜீவனின் எல்லாப் பகுதிகளையும் நிரப்பி அவனை ஆனந்தத்தால் திளைக்க வைக்கின்றன.

சத்திய ஜீவனுக்கு அடுத்த கட்டத்தை சிருஷ்டி எட்டுமானால் ஆனந்த ஜீவன் பிறப்பான். அவனுடைய பேரானந்த வித்துக்கள் சத்திய ஜீவனில் ஏற்கனவே காணப்படுகின்றன.

பேரின்பம் துய்க்கும் ஆன்மா ஆனந்தப் பெருக்கை அடைவதுண்டு. யோக ஆரம்பத்தில் இந்த அனுபவம் பெரிய அனுபவமாகும். யோகிக்கு அமைதி கிட்டுமானால் அது ஆனந்தப் பெருக்கைவிட உயர்ந்ததாகும். சத்திய ஜீவன் உள்ள நிலை சிறந்த நிலையாதலால், அவனுக்கு ஏற்படும் ஆனந்தப் பெருக்கு தானே அமைதி (peace) யாக மாறுகிறது. அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் உள்ள பொதுத் தன்மை சத்திய ஜீவனில் வாழ்க்கையால் வெளிப்படுகிறது. அமைதியானாலும், ஆனந்தப் பெருக்கானாலும் அவன் வாழ்க்கையைத் தொட்டபின் அவை தங்களுக்கே உரிய பெரும் சிறப்பை அடையும்வரை உயர்ந்துவிடும். அச்சிறப்பால் அவை பரமானந்தமாக மாறி, பரமனாகவேயும் மாறிவிடுகின்றன.

அத்தகைய உன்னத மாறுதல்கள் அவன் மனத்தில் ஞானமாகவும், ஞானதிருஷ்டியாகவும் வெளிப்படுகின்றன. அவன் இதயத்தில் அவை பரம்பொருளின் மேலேற்பட்ட தீராக் காதலாக மிளிர்கின்றன. செயலில் ஆனந்தமிகு சக்தியாகவும், உடலில் ஆத்மிக வாழ்வாகவும் மாறி காணப்படுகின்றன. பிரபஞ்சத்தினால் அது நித்தியமான ஆனந்தமாக, நித்தியானந்தமாக நிலைக்கின்றது.

புறவாழ்க்கையும் இதுபோன்ற மாறுதலை அடைய வேண்டும். சத்திய ஜீவனின் தெய்வீக சுபாவத்தின் தனித்தன்மையை நாம் அறிந்தால் அந்த மாற்றத்தைத் தெளிவாக விளக்க முடியும்.

ஒருவனுக்கு உள்ள தன்மை தனித்தன்மையாகும். மனித சமுதாயத்திற்கேயுள்ளது பொதுத் தன்மையாகும். மனித வாழ்வில் இவை எதிர்மாறானவை. சுயநலமும், பிறநலமும் மோதுவதுபோல் இவை முரண்பாடாகவே அமைந்துள்ளன. ஆனால் சத்திய ஜீவனில் அதுபோன்ற முரண்பாடில்லை. ஒரே அம்சத்தின் இரு நிலைகளாகவே அவை அமைந்துள்ளன. சத்திய ஜீவனில் அகந்தையற்றுப் போனதால், அந்த முரண்பாடுமில்லை.

பொதுத்தன்மை அடிப்படையானது. சக்தியும் திறனுமிக்கது. தனி மனிதன் பொதுத் தன்மையின் திறனைப் பெற்று தன் தனித் தன்மையை வளர்க்கின்றான். ஜீவனின் சுபாவமே பொதுத் தன்மை என்பது. வீரம் என்பது ஒன்று இருந்தாலும் ஒரு வீரனின் தைரியம் அவனது தனி சுபாவத்தைப் பொறுத்தது. தனித் தன்மைக்கும், பொதுத் தன்மைக்கும் உள்ள முரண்பாடும் ஒற்றுமையும் ஒரு புதிர். சத்திய ஜீவன் பரம்பொருளின் சுபாவத்தையுடையவனாதலால், அவனிடமும் இந்தப் புதிரை நாம் காண்கிறோம்.

சத்திய ஜீவன் ஓர் ஆத்மிக புருஷன். ஒவ்வொருவரிடையேயும் ஜீவனில் இரு பகுதிகள் உள்ளன. ஒன்று அவனுடைய வாழ்க்கையை நடத்துகின்ற திறன் பெற்று வடிவம் பெற்றுள்ளது. அடுத்த பகுதி அவ்வாறு திறன் பெறாமல் வடிவம் பெறாமல் இருப்பதாகும்.

வடிவம் பெற்றதும், வடிவம் பெறாததுமான மனிதத் திறமைகளுக்குப் பின்னால் புருஷன் உறைகிறான். அவனது பிரதிபலிப்பாகவும், சாயலாகவும் இருப்பதே மனிதனுடைய தனித்தன்மை (personality) என்பது. சத்திய ஜீவன் ஒளியின் பிரவாகம், வரையற்ற சக்தியின் கடல் என்றாலும் அவனுக்கு வரையரையிட்ட உருவமில்லை. ஏனெனில் அவன் புருஷனாகவுமிருக்கின்றான்.

சத்திய ஜீவன் அகண்ட பிரபஞ்சத்தின் ஆத்மா, அழிவற்ற நித்திய ஜீவனைத் தான் பெற்றுள்ள உருவத்தின் மூலம் வெளிப்படுத்துகிறான். அதைச் செய்யும் தனித் தன்மை அவனது ஜீவனை குறிப்பாக உணர்த்துகிறதே தவிர, அதுவே முழு ஜீவனுமாகாது. அவனது ஜீவியம் அகண்ட ஜீவியம்.

தன் சுபாவத்தின் மூலம் தன்னுடன் பிறந்த ஆத்மிக உண்மையை இயல்பாக வெளிப்படுத்துகிறான்.

சத்தியத்தின் அடிப்படையில் சத்தியத்தை வெளிப்படுத்த ஏற்பட்டவனே சத்திய ஜீவன். மனிதன் நல்லதைச் செய்து, மற்றதைப் புறக்கணிக்க வேண்டும். அதற்காக தன்னை அந்த நியதிக்கு மனிதன் உட்படுத்திக் கொள்ள வேண்டும். சத்திய ஜீவனுக்கு நல்லது, கெட்டது என்று இரண்டில்லை. அவன் அவற்றைக் கடந்தவன். ஒன்றைச் செய்யக் கூடாது, மற்றதைச் செய்ய வேண்டும் என்ற நியதி அவனைக் கட்டுப்படுத்தாது. அவன் செய்யும் காரியங்கள் அவனால் செய்யப்பட்டவை என்ற ஒரே காரணத்திற்காக நல்ல காரியங்களாகும். ஆத்மிக சுபாவம் ஊற்றெடுத்து அவன் மூலம் பெருக்கெடுத்து ஓடுவது அவனுடைய இயல்பாகும்.

மனித வாழ்வுக்கும், ஆத்மிக வாழ்வுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. மனிதன் சட்டங்களாலும், நியதிகளாலும், மனச்சாட்சியாலும், சாஸ்திரங்களாலும் கட்டுப்பட்டவன். சுதந்திரம், சுயநிர்ணயம், உள்ளுணர்வு ஆகியவை ஆத்மிக வாழ்வை பெருநெறியில் நடத்திச் செல்லும். ஆத்மாவைக் கட்டுப்படுத்தும் சட்டம் பரிபூர்ணமான சுதந்திரமாகும்.

சத்திய ஜீவனின் ஆத்மிக சுபாவம் பரிபூர்ண சுதந்திரம் உடையது. தானே இயங்க வல்லது. தன் இச்சைப்படி செயல்களை சிருஷ்டிக்கும் திறனுடையது. அவன் எண்ணியது எண்ணியவாறு செயல்படும்.

சத்திய ஜீவனின் செயல்கள் அவனுடைய தனித்தன்மையிலிருந்து எழவில்லை. எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவாகவும், அடிப்படையாகவுமுள்ள பரம்பொருளின் ஒருமை என்னும் அஸ்திவாரத்திலிருந்தே அவன் செயல்கள் எழுகின்றன. ஆகையினால் உலகத்தோடும், மற்ற சத்திய ஜீவன்களுடனும், பரம்பொருளுடனும் அவன் ஒன்றி இணைந்து கலந்து மகிழ்ந்து செயல்படுவான்.

மனம் சிறியது. செயல்பட வேண்டுமானால் மிகக் குறுகிய அளவில்தான் தன்னைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். சிறிய மனம், குறுகி தெளிந்து இறுகிய பின்னரே தைரியமாகச் செயல்பட முடியும். அகண்ட பிரபஞ்சம் முழுவதும் வியாபித்துள்ள சத்தியஜீவன் சுதந்திரமாக பிறந்தவன். பரந்து விரியும் தன்மையுடையவன். தன் நிலையை எளிதில் எந்த உருவத்தையும் ஏற்றுக்கொள்ளும்படி மாற்றிக் கொள்ளும் இயல்புடையவன்.

சத்திய ஜீவனின் அகண்ட ஜீவியத்தில் பிரபஞ்சமும், பரம்பொருளும் முரண்பாடின்றிச் செயல்படுகின்றனர். சத்தியஜீவன் சுயமாக சிருஷ்டிக்கவல்லவன். பிரபஞ்சத்தின் ஆத்மாவாக அவன் செயலாற்றும் பொழுதும், அறியாமையிலுள்ள அனைவரையும் அணைத்துச் செயல்பட்டாலும் அவர்களது அறியாமையும், இருளும் அவனை பாதிப்பதில்லை.

அவன் உயர்ந்து, எழுந்து, சிறந்து மிளிரும் காலை ஈஸ்வரனுடன் ஒன்றிப் போகிறான்.

ஆத்மாவுக்கும், இயற்கைக்கும் உள்ள மாறுபாடும்; புருஷ, பிரகிருதிக்குள்ள வேறுபாடும் அவன் வாழ்க்கையில் இல்லை.

அவனது சுபாவம் புருஷனின் வெளிப்பாடாகும்; அப்புருஷன் பரம்பொருளின் தெய்வ சுபாவத்தைத் தாங்கி வருபவன். அதுவே சத்திய உலகின் ஈஸ்வர அம்சம் பொருந்திய திறன்.

இயற்கை கண்ணைமூடிச் சென்ற பாதையிலே திரும்பத் திரும்பச் செயல்படுகிறது. மனம் அச்செயலுக்கு சட்டங்களியற்றியுள்ளது. சத்தியஜீவன் தன்னுடய ஞானத்தையே அடிப்படையாகக் கொண்டவன். தானே நிர்ணயித்தபடி தன் ஞானத்தைச் செயலாற்றுகின்றான். தெய்வ சுபாவமும், அகண்ட ஜீவியமும் அவனுக்குச் சொந்தமானவை. திட்டப்படி செயல்படுவதில்லை அவன் வழக்கம். நினைத்தபடி, நினைத்த மாத்திரத்தில் செயல்படுவதே அவன் வாழ்வு.

மனிதனிடம் தெளிவு பெறும் அறிவும், செயல்திறனும் தனித்தனியே இருக்கின்றன. சத்திய ஜீவனில் அவை ஒன்றிப் போயிருக்கின்றன. மனிதன் ஒரு காரியத்தைச் செய்வது நல்லது என்று தெளிந்துவிட்டதால், அதைச் செய்யும் தைரியம் அவனுக்குண்டு என்று சொல்ல முடியாது. சத்திய ஜீவனின் நினைப்பும் தைரியமும் கலந்தவை. மனித சுதந்திரம் அவன் ஏற்படுத்திக் கொண்ட எல்லைக்குள் செயல்படும். சுதந்திரமானால் அளவுக்குட்பட்டது. சத்திய ஜீவனுக்கு எல்லையில்லை. வரையறையில்லை. சுதந்திரமே செயல். செயல்படும் அளவே வரையறை. மனிதனுடைய சுதந்திரம் இருள் கலந்ததாகையால் அதற்கு வரையறை தேவை. சத்திய ஜீவனின் சுதந்திரம் ஒளி மயமானது என்பதால் அதற்கு வரையறை தேவையில்லை. உண்மையை அறிய அவன் பிழை செய்து சோதனை செய்யத் தேவையில்லை.

சத்திய ஜீவியம் அளவற்ற ஞானத்தையுடையது. அளவுக்குட்பட்ட சிருஷ்டியை தன்னுடைய அளவற்ற தன்மையால் உண்டாக்குகிறது. தனித்துச் செயல்படும் ஒவ்வொரு ஜீவராசியையும், பிரபஞ்சத்தின் பொது உண்மையையறிந்து சிருஷ்டிக்கிறது.

மனம் அறியாமையிலிருந்து அறிவை நாடுகிறது. சத்திய ஜீவன் சத்தியத்தை தன்னுள் கொண்டது. அறிவை, ஞானத்தை, சத்தியத்தை அது நாடிப் போக வேண்டியதில்லை. சத்திய ஜீவனின் வாழ்வில் ஒரு பகுதிக்கும், மற்ற பகுதிக்கும் பிணக்கு இருக்க வழியில்லை.

சிறிய அகந்தைக்கும், பெரிய அகந்தைக்கும் உள்ள போராட்டம் சத்திய ஜீவனில் இல்லை. அவனது செயல் திறன் ஈஸ்வரனது செயல் திறனாகும். மனிதன் சுய முயற்சி செய்வதும், இறைவனுக்குப் பணிவதும் வேறுபட்ட இரு செயல்கள். இறைவனது ஆணையும், சுய விருப்பமும் முரணாக இருப்பதுண்டு. சத்திய ஜீவன் பரம்பொருளின் பகுதி என்பதால் இறையருளுக்கும், அவன் செயலுக்கும் முரண்பாடு ஏற்படக்கூடிய அடிப்படையே இல்லை.

அவனது உயர்ந்த தெய்வீக சுபாவத்தின் மூலம் பரம்பொருளின் ஞானமும், சக்தியும் இடையறாது செயல்பட சத்திய ஜீவன் முழுமையாக இணைந்து வருகிறான். அக்காரணத்தாலேயே அவனுக்குப் பரிபூரண சர்வ சுதந்திரம் ஏற்பட்டுள்ளது.

பரம்பொருளுடன் ஒன்றிப்போகும் இயல்பு அவனுக்குத் தடையற்ற செயல்திறனைத் தந்துள்ளது.

மனச்சாட்சியிலிருந்தும், மற்ற நியதிகளிலிருந்தும் அவனுக்களிக்கப்பட்ட சுதந்திரம் இக்காரணத்திற்காகவே கொடுக்கப்பட்டுள்ளது.

மனமும் அறிவும் ஏற்படுத்திய சட்டங்களும், திட்டங்களும் அவன் முன்பு கரைந்துவிட்டன. பிரபஞ்சத்தை தன்னுட் கொண்டமையினால் அவனது சுயநலத்தில் எல்லோர் நலமும் கலந்திருப்பதால், அவனுக்கென்று ஒரு சுயநலம் கிடையாது.

பிரபஞ்சத்தின் ஒருமையும், பரம்பொருளின் அன்பும் அவன் செயல்கள் மூலம் ஊற்றுப்பெருக்காக வெளிப்படுகின்றன.

சத்திய ஜீவியத்தின் மற்றொரு பெரிய உண்மையின்படி அதன் கருவிகளை அது தன் செயலால் புனிதப்படுத்துகிறது.

சத்திய ஜீவியத்தின் உணர்வு ஒளிமயமானது. ஆனந்தத்தால் நிரம்பி வழிவது.

உடன் பிறந்த சொந்த ஞானமும், உணர்வு கலந்த உலக ஞானமும் சத்திய ஜீவனுக்குண்டு.

மனிதன் சத்திய ஜீவனாக மாறும் பாதையில் பல கட்டங்கள் உள்ளன. ஆனால் அவற்றிடையே முரண்பாடுகளிருக்காது. தனித்த சத்திய ஜீவனுக்குச் சொல்லியது போலவே பல சத்திய ஜீவன்கள் சேர்ந்திருந்தாலும், அவை பிணக்கொழிந்த ஒற்றுமையின் அடிப்படையிலே இயங்கும்.

வேறுபாடுகளையும், மாறுபாடுகளையும் பரம்பொருளின் சிறப்பை இன்னொரு வகையாக சிருஷ்டியில் வெளிப்படுத்தும் வாய்ப்பாகக் கருதி வாழ்வனைத்தையும் ஒரே தத்துவத்தால் கட்டுப்படுத்துவது சத்திய ஜீவியம்.

இந்த ஆத்மிக அனுபவம் சிறப்பெய்துவதற்கு இன்றியமையாதது. மனத்தால் உணர முடியாத இந்த இரகஸ்யம், சத்திய ஜீவியத்தில் இயல்பாக ஏற்பட்டுள்ளது.

சத்திய ஜீவன் சாதாரண மனிதனுடன் சேர்ந்து வாழ வேண்டும். உயர்ந்த நிலையின் சக்தியால் தாழ்ந்த நிலையிலுள்ள மனிதனைத் தேற்றி உயர்த்த வேண்டும். சத்திய ஜீவனின் சிறப்பு வாய்ந்த உச்ச கட்டங்கள் சச்சிதானந்தப் பேற்றை நாடும்.

இருளிலிருந்து மீண்டுவரும் மனித சமுதாயம் இருளிலேயே இருந்துவிடுமா என்ற கேள்வியுண்டு.

ஆத்மிக வளர்ச்சி இதுவரை இருந்தது போல் பிணக்கும் வாய்ந்த முயற்சியாக இல்லாமல், இனி ஒளிமயமான பாதையில் போகும் என்பதை மட்டும் நாம் சொல்லலாம்.

********



book | by Dr. Radut