Skip to Content

07. யோக சித்திகள் மூன்று

7. யோக சித்திகள் மூன்று

பூரணயோகம் கைக்கொண்ட இலட்சியம் இதுவரை இருந்த யோக மரபிலிருந்து மாறியதாக உள்ளது. யோகத்தின் மூலம் வாழ்க்கையை புனிதப்படுத்த வேண்டி மோட்சம் பெற்ற யோகி அதை ஏற்றுக்கொள்ளாமல் தன் அக வாழ்வை மெய்யின் ரூபமாக மாற்றி, தன் அகவாழ்வை மெய்யின் ரூபமாக மாற்றி, தன் புறவாழ்வை அதன் வெளிப்பாடாகச் செய்து, மரணத்தை வென்று மனிதனுக்கு அடுத்த சிருஷ்டியான (supramental being) சத்திய ஜீவனை உற்பத்தி செய்யும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதேயாகும். அந்த இலட்சியம் பூர்த்தியடைய தேவையான யோகசித்திகள் மூன்று.

இதயக் குகையில் உள்ள ஆத்மா (psychic being) சைத்திய புருஷன் எனப்படுவது. யோக முதிர்ச்சியால் சைத்திய புருஷன் வெளிப்பட்டு ஆணவப்பிடியில் உள்ள மனிதனை தன் ஆட்சிக்குள் கொண்டுவந்து அவன் வாழ்வை இறைவனை நோக்கி திருப்புவது முதல் சித்தி.

சைத்திய புருஷனால் நேர்பட்டு, நெறியாக வாழும் சாதகனுடைய ஜீவாத்மா அவனுள் துலங்கி அவனது கரணங்களை எல்லாம் - மனம், உடல் - அமைதியாலும், ஒளியாலும், ஆனந்தத்தாலும் நிரப்புவது இரண்டாம் சித்தி.

சைத்திய புருஷன் தலைமையில் இருளை ஒழித்து அருள்நெறி வழிவந்த யோகியின் வாழ்வு, ஜீவாத்மாவின் அருளால் ஜோதி மயமாகி அன்புருவாகி, ஆனந்தமயமாகிய பின்னும் அவன் மனிதனாகவே இருக்கின்றான். உயர்வும், சிறப்பும் சிகரமாக இருந்தாலும், யோகியின் அடிப்படைத் தத்துவப்படி அவன் மனிதனே. ஜீவாத்மாவின் முழு ஆற்றலைப் பெற்றாலும் யோகியால், தன் உடலை சத்திய ஜீவனாகச் செய்துகொள்ள முடியாது. இறைவனுக்குத் தன்னை கருவியாகச் செய்ய முடியாது. அதையும் அடைய உடலில் உள்ள இருளை, இருளின் உறைவிடமான செயல்களை, அச்செயல்களிடம் உள்ள நீக்க முடியாத பற்றை அகற்ற வேண்டும். இன்று இருளின் கருவியான உடல் மாறி ஒளியின் கருவியாகவும், அதற்கேற்ற சுபாவத்தையும் பெற வேண்டுமானால், அவ்விருளின் அஸ்திவாரத்தில் அதற்கும் அடியில் உள்ள பரம்பொருளும், அவனது ஒளியும் அசைந்து, வெளியே வந்து உடலில் ஆதிக்கம் செலுத்த வேண்டும். அதுவே மூன்றாவது சித்தியாகும்.

தவத்தாலும், யோக முதிர்ச்சியாலும் தொன்று தொட்டு மனிதன் தன்னுள் உறையும் ஆத்மாவை உணர முயன்று வெற்றி கண்டுள்ளான். இதற்கு அவன் நாடிய உபாயங்கள் பலவகையானவை. அவை ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம், தந்திர மார்க்கம், திரி மார்க்கம், அத்துவைதம், ராஜயோகம் எனவும், பிறவுமாகிய பல உபாயங்களாக உள்ளன. யோகி ஒரு மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்து, நெடுநாள் தவமிருந்து பலன்பெறும் பொழுது தன்னுள் உள்ள புருஷனை - அன்னமய புருஷன், பிராணமய புருஷன், மனோமய புருஷன், சைத்திய புருஷன் ஆகியவற்றில் ஒன்றை - உணர்ந்து அதன் மூலம் ஜீவாத்மாவை அடைந்து ஜீவன் முக்தனாகி, பழுத்த பழம் கிளையிலிருந்து தானே விண்டு தரையில் விழும் வரை உலகிலேயே வாழ்ந்து, நேரம் வந்த காலை பரமாத்மாவை அடைந்து சமாதியாகிறான். இப்படிப்பட்ட மனிதன் உலகுக்கு சுவாமி, ரிஷி, பகவான், மகராஜ் எனப்படுகிறான். அவர்களுக்கெல்லாம் உண்டான பொதுப் பெயர் (spiritual man) ஆத்மிக மனிதனாகும். இன்றுவரை உலகம் எட்டிப் பிடித்த சிகரம் இதுவே. இதையே முடிவானதாகவும் உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஸ்ரீ அரவிந்தர் நமக்கு வேறு ஓர் இலட்சியத்தைக் காட்டுகிறார். ஆத்மிக மனிதன் இன்றுவரை சிருஷ்டியின் சிகரமேயானாலும், அதற்கடுத்த சிகரம் இன்று உலகில் இல்லையென்றாலும், அதைச் சிருஷ்டிப்பது சிருஷ்டியின் இலட்சியம். இறைவனின் திருவுள்ளம். அதையறிந்து நாம் அந்த இலட்சியத்தை மேற்கொண்டு, யோகத்தை மோட்ச தகுதி பெற்ற பின்னும் தொடர்ந்தால், ஆத்மிக மனிதன் குறையாக விட்டுப்போன உடலின் இருளை அகற்றலாம். உடலையும் மற்றெல்லா கரணங்களையும் சத்தியத்தின் பிழம்பாகச் செய்யலாம். சத்தியத்தை நாடி சத்திய லோகத்திற்கும், சிருஷ்டிக்கு அப்பாலுள்ள பரம்பொருளையும் நாடிச் சென்று அங்கேயே நிலையாக உறைவதற்குப் பதிலாக அங்கு சென்றபின் சத்தியத்தின் பழமான பரம்பொருளை பூவுலகுக்குக் கொண்டு வரலாம். அதன் மூலம் உலகின் பொய்மையை நிரந்தரமாக ஒழிக்கலாம். இவையெல்லாம் செய்யும் திறனுள்ள சத்திய ஜீவனாக யோகி தன் தவப்பயனால் மாறலாம் என ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். ஆத்மிக மனிதனுடன் சிருஷ்டி முடியவில்லை. அதற்கடுத்த கட்டமாகிய சத்திய ஜீவன் அவதரிப்பான் என்கிறார்.

அந்த அவதாரம் பிறக்க ஒரு முக்கியமான மாற்றம் தேவை. தாவரங்கள் தங்களைக காத்துக் கொள்ள பெரு முயற்சி செய்கின்றன. நீரையும், உணவையும் நாடி அவற்றின் வேர் பல நூறு அடி செல்வதுண்டு. விலங்குகளும் தாவரங்களைப்போல் உணவை நாடிப் பெருமுயற்சி செய்வதுடன் தங்கள் உயிரைப் பிறவிலங்குகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளவும் பெருமுயற்சி செய்கின்றன. தாவரங்களையும், விலங்குகளையும் அப்படிச் செயல்பட நிர்ப்பந்தம் செய்வது அவற்றின் உயிர். உயிர் தன் ஆதிக்கத்தைச் செலுத்தி உயிரைக் காப்பாற்ற கடைசிவரை பாடுபட வேண்டிய நிலையை ஏற்படுத்திக் கொண்டால் உடலும், உயிரும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்ட பின்னும் மனிதன் செயல்படத் துடிக்கிறான். கலையையும், இரையையும், பக்தியையும், மொழியையும், இலக்கியத்தையும் மனிதன் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வளர்த்துள்ளான். இவை அவனது உடலுக்கும், உயிருக்கும் அத்தியாவசியமானவை இல்லை. மனிதனுடைய வாழ்வில் தன் ஆதிக்கத்தை நிலைபெறச் செய்து, அதைத் தொடர்ந்து செலுத்துவது மனம். எனவே மனத்தின் திறன் வெளிப்படும்படி, இலக்கியத்தையும் கலையையும் அவன் பெருக்கியுள்ளான். இலக்கியம், கலை பெருக எப்படி மனத்தின் ஆதிக்கம் நிலைபெற்று, மனித வாழ்வில் தொடர்ந்து செயல்பட வேண்டுமோ, அதுபோல சத்திய ஜீவன் அவதரிக்க வேண்டுமானால், மனித வாழ்வில் ஆத்மா தன் ஆதிக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஏற்பட்ட ஆதிக்கம் நிலைபெற வேண்டும். நிலைபெற்ற ஆதிக்கம் வெளிப்பட்டு மிளிர வேண்டும். இன்றைய நிலையில் ஆத்மாவை உணர்ந்த முனிவர் வாழ்வைத் துறந்து தன் பாதையில் போவதால் அவருடைய ஆத்மஞானம் உலகின் வாழ்க்கையில் ஆத்மா மிளிரப் பயன்படாது.

மேலும், வாழ்க்கையில் ஆதிக்கத்தை ஏற்படுத்திய ஆத்மா, கட்டுரையின் ஆரம்பத்தில் கூறிய மூன்று யோக சித்திகளைப் பெற்று சிறப்படைய வேண்டும். இவையிரண்டும் ஏற்பட்டபின், சத்திய ஜீவனுடைய அவதாரம் ஏற்பட வழியுண்டு.

இதயக் குகையில் உள்ள ஆத்மா எனப்படும் ஆத்மாவின் பிரதிநிதியை ஸ்ரீ அரவிந்தரும், வேதாந்த கால ரிஷிகளும் சைத்திய புருஷன் என்கின்றனர். சைத்திய புருஷன் அழிவற்றது, கறைபடாதது. உலகில் செயல்படும் பொழுது தீமையாலும், விகாரத்தாலும் களங்கப்படாதது. சத்தியத்தை உணரும் தன்மையுடையது. நன்மையும், பெருமையும், அழகும் எங்கு காணப்பட்டாலும் அதை பூரணமாக உணரக் கூடிய திறனுடையது.

குகைக்குள் புதைந்திருந்தாலும் மனிதனுக்கு அவ்வப்பொழுது தன் கருத்து வெளிப்படுமாறு சூட்சுமமாக சைத்திய புருஷன் அவன் காதில் பேசுவதுண்டு. சகுணங்களாலும், புற அறிகுறிகளாலும், உணரக்கூடிய மன நிலைகள் மூலமும் சைத்திய புருஷன் மனிதன் செயல்பட வேண்டிய பாதையைச் சுட்டிக் காட்டுவதுண்டு. தெளிவான மனிதன் அத்தகைய அறிகுறிகளைக் கண்டுகொள்வான். தன் திறமையில் மட்டும் நம்பிக்கையுள்ள மனிதனும், தன் அறிவின் சிறப்பைத் தானே வியக்கும் தெளிவான மனிதனும் அத்தகைய அறிகுறிகளைக் காண்பதில்லை. சைத்திய புருஷனின் அந்தரங்கக் குரல் அவர்கள் காதில் விழுவதில்லை. மனிதன் தன் நீண்ட நெடிய வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான அனுபவங்களைப் பெறுகிறான். ஒரு பிறவியில் உள்ள அனுபவங்களின் முழுப்பலன் அடுத்த பிறவியில் தான் அவனுக்குக் கிடைக்கும். இப்பிறவியிலுள்ள அனுபவங்களின் சாராம்சத்தை சைத்திய புருஷன் சேகரிக்கின்றது. அடுத்த பிறவியில் அவற்றைச் செயல்படுத்துகின்றது. அனுபவத்தைப் பெறுவது மனிதன். அதன் ரகஸ்யத்தை சேகரிப்பது அவனுள் உறையும் சைத்திய புருஷன். மனிதனுக்குத் தெரியாமல் சூட்சுமமாக சைத்திய புருஷன் இதைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது. இறக்கும் தருவாயில் சைத்திய புருஷன் வெளிப்பட்டு தன் முழுப் பிறவியையும் க்ஷண நேரத்தில் விமர்சனம் செய்யும், அந்த நிலையில் தான் மனிதன் திரையில் காண்பதுபோல் தன் முழு வாழ்க்கையையும் காட்சிகளாகவும், நினைவாகவும் உணருகிறான். அந்த விமர்சனம் முடியும் பொழுது அடுத்த பிறவியில் எங்கு ஜனிப்பது என்று சைத்திய புருஷன் முடிவு செய்து மீண்டும் உள்ளே சென்று மறைந்துவிடும்.

சைத்திய புருஷன் நம் மனத்தின் பின்னால் உள்ள ஜீவனில் உறைகிறான். அவன் மேலே கிளம்பி வந்து செயல்படும்பொழுது இயல்பாக அவனால் அழகையும், நன்மையையும், சத்தியத்தையும் உணர முடியும். தன்னைப் பொறுத்தவரையில் சைத்திய புருஷன் களங்கமற்றவன், கறைபடாதவன். அவன் இருப்பிடத்திலிருந்து நம் புற வாழ்வில் செயல்பட புறப்பட்டு வரும்பொழுது அவனுடன் இணைந்து வரும் மற்றவையெல்லாம் களங்கமற்றவையில்லை. அவற்றிற்கு கறையுண்டு.

சைத்திய புருஷனின் மூலம் ஆத்மா. அதுவே அதன் உற்பத்தி ஸ்தானம், ஆதியுமாகும். ஆத்மா அழிவற்றவன், அகண்டமானவன். பிறப்பினால் ஆத்மா மாறுவதில்லை. வளருவது இல்லை, குறைவதும் இல்லை. சாட்சியாக அவன் மனித வாழ்வின் பின்னணியில் தலைவனாக வீற்றிருக்கிறான். சைத்திய புருஷன் ஆத்மாவின் பிரதிநிதி. மனிதனுடைய ஒவ்வொரு பிறப்பிலும் அவன் பெறும் எல்லா அனுபவங்களின் சாராம்சத்தைக் கிரகிப்பவன், சேர்த்துக் கொள்பவன். சைத்திய புருஷன் பொறியாகப் பிறந்து, ஒவ்வொரு பிறவியிலும் மனிதனுடைய வாழ்வின் அனுபவ சாரத்தை ஆத்ம ஞானமாக மாற்றி தன்னகத்தே புதைத்து உருவம் பெற்று சிறிய ஜீவனாகி, தொடர்ந்து வளர்ந்து, பெரிய சைத்திய புருஷனாகி முடிவில் குகையிலிருந்து வெளிவந்து மனித வாழ்வை தன் ஆட்சிக்குட்படுத்தி, மனிதனை இறைவனை நோக்கிச் செலுத்துகிறான். குகையிலிருந்து சைத்திய புருஷன் வெளியே வந்து மனிதனுடைய மூலத்தோடுள்ள தொடர்பு அறுந்து போவதைக் காண்கிறான். இது தவிர்க்க முடியாத ஒன்று. கொஞ்சம் கொஞ்சமாக அறுந்து போன தொடர்பை மீண்டும் சைத்திய புருஷன் ஏற்படுத்திக்கொண்டு மூலமாகிய ஆத்மாவின் பிரதிநிதியாக மீண்டும் செயல்படுகிறான்.

மனிதனுடைய ஜீவன் ஒரு வகைப்பட்டதில்லை. பலதிறப்பட்டது. பல பகுதி - மனம், உடல் - களைக் கொண்டது. ஒவ்வொரு பகுதியும் பல நிலைகளை உடையது. மனம் என்பது இருபகுதிகளாலானது. நாமறிவது நம் மனமே என்றாலும், (inner mental) உள்மனம் என்றொன்று நம்மையறியாமல் மனத்தினடியே இருந்து செயல்படும். அதேபோல் பிராணனுக்கும் ஒரு பகுதியுண்டு, (inner vital) எனப்படும் இதை உள் பிராணன் எனலாம். அகவாழ்வின் பகுதியாக மனமும், பிராணனும், உடலும் மறைந்துள்ள பகுதிகளையுடையன. இவற்றுக்கெல்லாம் செயல் திறன் அதிகமென்றாலும், ஆத்மிக சக்தியில்லை. சைத்திய புருஷன் வெளிப்படும் நிலை மனிதனுக்கு ஏற்பட்டவுடன், அகவாழ்வின் பகுதிகளான இவையெல்லாம் அவனுருவைத் தாங்கி முன்வந்து நடித்து ஏமாற்றும் திறனுடையவை இவை. இறந்து போனவர்களுடைய ஆவியும் சைத்திய புருஷனாக வந்து நடிக்கவல்லது. சாதகன் தெளிவற்றவனாக இருந்தால் அற்புதமான இந்த நேரத்தில் நடிக்கும் ஜீவன்களை அவன் நம்பிவிட்டால் யோக சித்தியை இழக்க நேரிடும்.

அகவாழ்வின் பகுதிகளான மேற்சொன்ன மனம், பிராணன், உடல் இவற்றின் மறைந்துள்ள பகுதிகள் வெளிவரும் பொழுது மனிதனின் வாழ்வு குழப்பத்தால் நிரம்பப்பெறும். ஒவ்வொன்றும் ஒரு திசையில் செயல்படும். மாறுபட்டும், வேறுபட்டும் சக்திமிக்க இப்பகுதிகள் செயல்பட்டு தங்கள் தங்கள் ஆதிக்கத்திற்குள் மனித வாழ்வைக் கொண்டு வர முயற்சித்தால் மனிதன் குழப்பமடைந்து, பிரமித்து, திகைப்பான். ஓரளவுக்குத்தான் மனிதனால் இவைகளைச் சமாளிக்க முடியும். உண்மையான புருஷன், சைத்திய புருஷனே. அவனே ஆத்ம சக்தி பெற்றவன். அவனே உண்மையான தலைவன். எந்தப் பெயரிட்டு நாம் அழைத்தாலும், அவனே நம் தலைவன். அவன் வெளியே வந்து தன் ஆட்சியை ஏற்படுத்தும் வரை, சாதகன், நிலைமை தன்னை மீறிப் போவதைக் காண்பான்.

சிருஷ்டியில் மனிதன் சிறப்பான நிலையிலிருக்கிறான். அவன் ஜீவனில் பல பகுதிகளுண்டு. ஒவ்வொரு பகுதிக்கும் பல உட்பிரிவுகளும், மாறுபட்ட நிலைகளும் உள்ளன. உதாரணமாக மனம் என்பது ஒரு பகுதி. மனத்திற்கு பின்னால் ஒரு பகுதியுண்டு (subliminal mind) மனத்தின் அடியில் மனத்திற்கு உட்பட்ட நிலையில் மனம் தெரிந்து கொள்ள முடியாத ஒரு முக்கிய பகுதியிதற்குண்டு (subconscious mind). சூட்சுமமான மற்றொரு பகுதியும் உண்டு (subtle mind). இவையெல்லாம் தவிர உட்பகுதியாக ஒரு மனமும் உண்டு (inner mind). இதே போல் பிராணனுக்கும், உடலுக்கும் பல்வேறு பகுதிகள் உள்ளன. அதனால் மனிதனுடைய வளர்ச்சி பல திறப்பட்டதாகும். ஆனால் இவற்றையெல்லாம் மீறி செயல்பட்டு தன் ஆதிக்கத்தை வலியுறுத்தும் திறன் உடலுக்குண்டு. உடலின் தனித்தன்மை தான் செய்ததைத் திரும்பத் திரும்பச் செய்வதாகும். அதுவே அதன் திறனுமாகும். நடத்தல், பேசுதல், உண்ணுதல், உறங்குதல் போன்ற பல முக்ய செயல்களை உடல் ஏற்றுக்கொண்டுள்ளது. அவற்றை எல்லாம் தான் ஒரு பழக்கத்தின் பிடியில் கொண்டு வந்துள்ளது. உடல், தினமும் நம் வாழ்க்கையில் இத்தகைய செயல் முக்கியமானவை. ஒரு நாள் தூக்கமில்லாமலிருக்க முடியாதல்லவா? அவையெல்லாம் தானே இயங்கும் அளவுக்கு உடல் அப்பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளது. அதனால் நாம் வாழ முடிகிறது. இவையெல்லாம் பழக்கமாக இல்லாமல் தினமும் புதியதாகப் பேச முயல வேண்டும். சாப்பிடப் பயில வேண்டுமென்றால் வாழ்க்கையே நடக்காது. உடலுக்குரிய இத்திறன் வாழ்க்கைக்குரிய பெரிய பலம். ஆனால் அதுவே, அந்தப் பலமே பூரண யோகத்திற்குத் தடையாகும். உடல் முறையாக, பலமாக, நீண்ட நெடுங்காலம் தன் இச்சையின்படி செயல்பட்டால், அது ஆரோக்கியத்திற்கு நல்லது. கிரகஸ்தனுக்கு உதவியாயிருக்கும். வேறு யோகங்களை மேற்கொண்டாலும் அது உதவியாக இருக்கலாம். பூரண யோகத்தில் உடலும் இறைவனின் ஒளியைப் பெற வேண்டும். பெற்று புதிய வாழ்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். இருளில் உள்ள பழைய வாழ்வை விட்டு, புதிய வாழ்வான ஒளிமயமான செயலை ஏற்றுப் பிரகாசமாக ஒளிவிட வேண்டுமானால், உடல் பழக்கத்தின் அடிமையாக இருக்க முடியாது. அதை மாற்றுவது மிகக் கடினம். உடலிலும் சூட்சும பகுதி ஒன்று இருப்பதால், அதன் மூலம் மெல்ல மெல்ல இந்த மாற்றத்தைக் கொண்டு வர முயன்று பார்க்கலாம். பிராணன் என்பது நாதம். நரம்பு மூலமாகச் செயல்படுவது. எளிய மொழியில் சொல்வதென்றால் ஆசைகளுக்கு இருப்பிடமானது. உணர்ச்சிகளுக்கு உறைவிடம். நாம் அன்றாட வாழ்க்கையில் “எனக்குப் புத்தகம் என்றால் உயிர்” என்று சொல்லும்பொழுது உயிர் எனக் குறிப்பிடுவது நாதத்தையே. கட்டுக்கே அடங்காத பிடாரி இது. ஆனால் பகுத்தறிவின் கட்டளைக்கு உட்படும் தன்மையையுடையது.

யோகத்தை மேற்கொண்டபின், சைத்திய புருஷன் வெளிவரும்முன் ஏற்படும் குழப்பங்களை விளைவிப்பதில் முக்கியமான பொறுப்பு கட்டுக்கடங்காத பிராணனுக்கும், செய்ததையே பிடிவாதமாக திரும்பத் திரும்பச் செய்ய அடம்பிடிக்கும் உடலுக்கும் உண்டு.

மனம் ஜீவனுடைய மூன்று பகுதிகளில் ஒன்று. தலைமையான பகுதி என்றாலும் இது ஒரு பகுதியே, முழுமையுடையதல்ல. குழப்பம் ஏற்பட்ட காலை, அங்கு ஒழுங்கை நிலைநாட்டும் உரிமையும், திறனும் தலைவனாகிய சைத்திய புருஷனுக்கேயுண்டு. மனம் ஒரு பகுதி என்பதால் அதற்கு அந்த உரிமையும் இல்லை. முழுத்திறனுமில்லை. குழப்பத்தை விலக்கி தெளிவாகச் செயல்பட வேண்டுமென்று மனம் முனைந்தால், ஓரளவு பலன் கிடைக்கும். மனத்திற்கு இது விஷயத்தில் பிராணனுக்கு இருப்பதைவிட, உடலுக்கு இருப்பதைவிட அதிக அளவுத் திறனுண்டு.

உலகம் இறைவனால் சிருஷ்டிக்கப்பட்டது. தன் உடலின் ஒரு பகுதியாக உலகத்தை சிருஷ்டித்தான் இறைவன். அவனன்றி ஓரணுவும் அசையாது. அணுவெல்லாம் அவனே, என்பது ஆத்மிக உண்மை. மனிதன் தன் புலன்களால் வெளியுலகத்தை உணர்வதால், புலன்கள் எந்த அளவுக்கு விளக்கம் பெற்றுள்ளனவோ அந்த அளவிற்கே அவனால் உலகத்தை உணரமுடியும். அறிவில்லாதவன் ஒருவனுடைய நிலையை அவனுடைய உடையைக் கொண்டே நிர்ணயிப்பதுபோல், ஆத்மாவாகிய மலரை வியாபாரி விலைபொருளாக மதிக்கிறான். கணித மேதை ராமானுஜத்தை போர்ட் ஆபீஸில் உடனிருந்தவர்கள் குமாஸ்தாவாகவே புரிந்துகொண்டார்கள். அது போல் ஆத்ம விளக்கமற்ற புலன்களின் மூலம் செயல்படும் மனிதன் மரத்தை மரமாகவும், புலியைக் கொடூர ஜந்துவாகவும், ஜீவன் முக்தனை பிச்சைக்காரனாகவும், உணர முடியுமே தவிர மரத்தை பூமாதேவியின் ஆர்வத்தை வானளாவும் வண்ணக்கையாகப் புரிந்துகொள்ள முடியாது. பிச்சைக்காரனனை முக்தி அடைந்த முனிவரென உணர முடியாது. சைத்திய புருஷன் முழுமையாக வெளி வந்து புறவாழ்வில் செயல்பட்டால், ஆத்மா பரம்பொருளுடன் நேரடியான தொடர்பை நிரந்தரமாகப் பெறும். அந்த நிலையிலுள்ளவன் பூ வியாபாரம் செய்தால் மலரை ஜீவனாக உணருவான். ஜீவன் முக்தனான பிச்சைக்காரனையும் ஜீவன் என அறிவான். அவனுடைய ஜீவன் புலன் வழி வெளிப்பட்டு விட்டதால், மற்ற ஜடப்பொருள்களிலும், மனிதர்களிடையேயும், அவன் ஜீவனையே காண்பான்.

சாதகனுடைய சைத்திய புருஷன் வெளிப்பட்டு அவனது புறவாழ்வில் செயல்பட்டால், ஆத்மானுபவத்தை அது தேடுகிறது. மனத்திடையே அது செயல்படும் பொழுது அறிவின் மூலமும், திருஷ்டி மூலமாகவும், யோக ஞானம் (intuition) மூலமாகவும் ஆத்மானுபவத்தை நாடுகிறது. அதைப் பெற்றால் அவனை விவேகி என்றும் ரிஷி என்றும் சொல்லுகிறோம்.

இதைவிட உயர்ந்த முறையும் ஒன்றுண்டு. ஆத்மானுபவம் பெற்ற மனம் தன்னிடத்தை விட்டுப் புறப்பட்டு உயர்ந்து செல்வது இயல்பு. அதன் இயல்பான நோக்கில் அதை விட்டுவிட்டால் பரமாத்மாவை அடையும்வரை அது தன் பயணத்தை நிறுத்தாது. அகண்ட மௌனம் அடையும் வரை அது உயர்ந்து செல்லும். இது ஒரு பெரிய, பெறற்கரிய ஆத்மானுபவம் என்பது உண்மை என்றாலும் பூரண யோகத்தின் இலட்சியமான திருவுருமாற்றமாகாது (transformation).

வேறொரு முறையும் உண்டு. இம்முறையாலும், சாதகன் பரம்பொருளை நேரடியாகத் தொட்டு அனுபவிக்கலாம். இருதயத்தின் மூலம் பரமனை அடையும் வழி இவ்வழி. இம்முறை பூர்த்தியடைந்து, பலன்பெற மனம் உயர்ந்து பரம்பொருளின் பொதுத் தன்மையைக் கடந்து, (impersonality) புருஷோத்தமனாக அவனைக் காண வேண்டும். அந்நிலையிலேயே பக்தியின் பெரும் அம்சம் பூரணமாகப் பலிக்கும். அது பலித்தால் யோகம் சிறந்து உயர்ந்த வெற்றியைப் பெறும். இதுவும் பூரண யோகிக்குத் தன் இலட்சியத்தை அடையப் போதாது.

ஆத்ம சமர்ப்பணம் இதே பலனை ஓர் அளவுக்குக் கொடுக்கும். முதலில் சொல்லியது மனத்தால் செய்வது. அடுத்தது உணர்வால் செய்வது. மனம், உணர்வு, ஆத்ம சமர்ப்பணம் இவை மூன்றாலும் சேர்ந்து செய்யும் முயற்சி சைத்திய புருஷன் வெளிப்பட்டு இயங்க உதவும். இந்த முயற்சி கடைசியாக அப்பலனைப் பெற உதவியான முதற்படியாகும்.

மனம், உணர்வு, ஆத்ம சமர்ப்பணம் ஆகிய மூன்றையும் பயன்படுத்தி இதயக் குகையிலுள்ள சைத்திய புருஷன் சாதகனின் புறவாழ்வில் வெளிவந்து செயல்பட தவ முயற்சி செய்வதற்கு அவசியமான மற்றொன்று உண்டு. புறவாழ்விலிருந்து செயல்படும் சாதகன், அதைவிட்டு தன்னை அகவாழ்வின் ஆழத்திற்கு மாற்றிக்கொள்வதே அந்த நிபந்தனை. சைத்திய புருஷன் வெளிவருமுன், சாதகன் அகவாழ்வுக்குள் சென்று அமைய வேண்டும்.

சைத்திய புருஷன் வெளிவருவதற்கும், சாதகன் தன்னை அகவாழ்விற்குச் செலுத்துவதற்கும் ஒரு தடையுண்டு. அகத்திற்கும், புறத்திற்கும் இடையே பிரகிருதி எனும் இயற்கை மனத்தின் பின்னணியிலுள்ள சக்திகளுடன் இணைந்து இருப்புக் கொண்டிருப்பதால், இயற்கையின் இருள் நிறைந்த செயலும், அச்சக்திகளின் வலுவும், இந்த யோக சித்திக்குத் தடையாக இருக்கின்றன.

அக, புற வாழ்வுக்களுக்கிடையேயுள்ள இருண்டதிரை தடை செய்தாலும், ஆவேசமான ஆர்வத்துடன் சாதகன் தான் உள்ளே சென்று சைத்திய புருஷனை வெளியே கொண்டு வர முயன்றால், தடை உடையும். தடையை உடைத்து விடலாம் என்றாலும் இது விரும்பத்தக்க முறையல்ல. மனத்தின்பின் உள்ளவையும், மனத்தின் அடியில் உள்ள சக்திகளும், சூட்சும உலக ஜீவன்களும் கண்காணிப்பாக உலவிவரும் உலகம் இது. அவை சாதகனுக்குப் பாதகம் விளைவிக்க முயன்றால் அவனது ஆவேசமான ஆர்வம் அவைகள் விரும்பும் சந்தர்ப்பத்தைக் கொடுத்துவிடும். ஆகையால் இம்முறையைத் தவிர்ப்பது நல்லது. சாதகன் ஆணவ மலத்திலிருந்து முழுதுமாக விடுபட்டவனாக இருந்து, இறைவன் திருவுள்ளத்தைத் தவிர வேறு எதையும் இச்சிக்காத பவித்திரமான நோக்கம் உடையவனாக இருந்தால், ஆவேசமான ஆர்வம் முறை தவறியது என்றாலும், இடையேயுள்ள சக்திகளால் அவனுக்குத் தீங்கிழைக்க முடியாது. பவித்திரம் அவனைப் பத்திரப்படுத்திவிடும்.

புருஷனை, பிரகிருதியிலிருந்து பிரிக்கும் யோக முறை உயர்ந்த முறையாகும். மனத்திலும், நாதத்திலும், உடலிலும் உள்ள பிரகிருதியிலிருந்து புருஷனைப் பிரித்துவிட்டால், புறவாழ்வில் உள்ள சாதகன் தானே அக வாழ்வின் பிடியில் தள்ளப்படுவான். இந்த யோக முறையையும் சமர்ப்பணமாக மாற்றிச் செய்வது சிறந்தது.

அக, புற வாழ்வுக்கிடையேயுள்ள தடையை உடைத்தவுடன், சைத்திய புருஷன் வெளிப்பட்டுவிடுவான். அப்படி அவன் வெளிவந்தவுடன் முதற்காரியமாக சாதகனின் வாழ்விலுள்ள எல்லா முரண்பாடுகளையும் தன் சக்தியால் களைவான்.

அடுத்தபடியாக சைத்திய புருஷன் வெளிப்பட்டதன் விளைவாக, சாதகனுக்கு ஈஸ்வரானுபவம் ஏற்படும். அவனது கரணங்கள் ஒளிமயமாகும். பரம்பொருளாகி நித்திய சத்தியத்தை நிரந்தரமாக இடைவிடாது உணர்ந்து செயல்படும் நிலை ஏற்பட்டு நிலைக்கும்.

இந்த மாறுதல்களில் சில உள்மனம் விழிப்புறுவதாலும் ஏற்படுவதுண்டு. அப்படி ஏற்பட்ட மாறுதல்கள் தெளிவாக இருப்பதில்லை.

இவ்வளவும் ஏற்பட்டு முடிந்தபின்னும், இலட்சிய நோக்கோடு ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரு பகுதியே முடிந்திருப்பது தெரியும். மனத்தின்மீது பொன் ஒளிமயமான ஒரு பெரிய மூடியுண்டு. இந்த மூடியைத் திரை என்றும் சொல்வதுண்டு. ஆத்மா இந்த மூடியை உடைத்துக் கொண்டு தெய்வலோக சக்திகளையும், சத்தியலோக சக்திகளையும் ஜீவனுள் அனுமதிக்கும் பொழுதே, குறையாக உள்ள யோகம் பூர்த்தியாகி, முதிர்ச்சியடைந்த சைத்திய புருஷன் முழுமையாக வெளியேறி, தன் ஆட்சியை பூரணமாக நிலை நாட்டுவான்.

மனம் மீதுள்ள மூடி உடைந்தால், நித்திய புருஷனின் அனந்தமாகிய வெளி நிதர்சனமாகத் தெரியும். தெய்வ அருளால் தானே இந்தத் திரை விலகுவதற்குப் பதிலாக, யோகியின் தவப்பலத்தால் மூடியுடையும் பொழுது அவனது ஆழத்திலுள்ள இருண்ட பகுதிகள் தானே விழிப்படையும்.

திரையை விலக்கி மேலே செல்லும் முயற்சி நிலைத்து விடுமானால், மேலிருந்து கீழே வரும் தெய்விக சக்திகள் தங்கள் அருள் மழையையும் நிலையாகப் பொழியும். தவத்தால் தானுயரும் யோகி, அருளால் இருளை நோக்கிப் பொழியும் தெய்வ மழை ஆகிய இரண்டும் நிரந்தரமாகும் பொழுது ஆத்மீக திருவுருமாற்றம் முழுமையடைகிறது.

மனத்தை ஆறு பகுதிகளாகப் பிரித்துணரலாம். (1) சாதாரண மனம் (mind) (2) மௌனம் அடைந்த முனிவரின் உயர்ந்த மனம் (higher mind) (3) ஞான திருஷ்டியுள்ள ரிஷியின் ஒளிமயமான மனம் (illumined mind) (4) ஆத்ம ஞானத்தை நேரடியாகப் பெறும் யோகியின் யோக ஞானம் நிறைந்த மனம் (intuitive mind) (5) தெய்வங்கள் உறையும் சுவர்க்க லோக சக்தியுள்ள மனம் (overmind) (6) சத்திய லோகத்தின் பொன்னொளியோடுள்ள சத்திய மனம் (supermind).

சைத்திய புருஷன் வெளிவந்தபின், புறவாழ்க்கையிலிருந்து சாதகன் அக வாழ்க்கைக்குச் சென்றபின், அவனது சாதாரண மனத்தில் யோக ஞானமும், தெய்வ ஞானமும் நிறைய ஆரம்பிக்கின்றன.

ஒளி, சக்தி, திறன் ஆகியவை ஆத்மாவிலிருந்து புறப்பட்டு சாதகனுடைய மனம், நாதம், உடலையடைந்து அவனுக்கு புடம் போட்ட புதிய ஜீவனை அளிக்கின்றன. சாவாத நித்தியத்துவம் நித்திய அனுபவமாகக் கிடைக்கிறது. பரமனின் அகண்ட நிலையை இடையறாது உணர முடிகிறது. அப்பாலுக்கப்பாலாயுள்ள இறைவனும் அவனது சிருஷ்டியும் சாதகனுடைய வாழ்வில் இணைந்து பிறப்பெடுக்கின்றன.

சத்திய ஜீவியத்தை நாடும் சாதகனின் ஜீவனிலுள்ள தாழ்ந்த குணங்கள் தங்களை ஒளிமயமாக மாற்றிக்கொள்ள தயாராகிவிட்டது பெரிய காரியமானாலும், அதை ஒரே மூச்சில் செய்யமுடியாது. ஜீவனின் ஒவ்வோர் அம்சத்தையும் தனித்தனியே எடுத்து அதை மட்டும் மாற்றியபின் அடுத்ததை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆர, அமர, விபரமாக, சிறிது சிறிதாகச் செய்ய வேண்டிய வேலை இது. வளரும் வேலை என்பதுடன் சிரமம் மிகுந்த பணி இது. அதனால் சத்தியலோக சக்தி தொடர்ந்து மழைபோல் ஒரே சமயத்தில் வரமுடியாது. இடைவெளி விட்டே அச்சக்தி செயல்பட வேண்டியிருக்கும். ஜீவன், இறைவனின் பாரத்தைத் தாங்கக் கூடியதில்லை. சாதகன், தன்னால் முடியும் என்பதால், விரைந்து செயல்பட்டால், சூளையில் வேகாத பாத்திரம் நீரால் நிரப்பப்பட்டபோது உடைவது போல் அவனது ஜீவன் வீறல் விட்டுவிடும். அத்துடன் தீய சக்திகள் யோகம் நடக்கும் எல்லா இடங்களிலும் விழிப்போடு கண்காணித்து வருவதால், ஒரு சிறிய தவறு ஏற்பட்டாலும் அவை தமக்கு அந்தச் சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விரையும்.

மேலிருந்து வரும் சத்தியலோக சக்தி முறையாக மனம், நாதம், உடல் என வரிசைக் கிரமமாக, ஒவ்வொன்றாக எடுத்து, நிரப்பி அவற்றை முறைப்படுத்தி, முழுமையாக்கி அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும். அவ்விதம் ஏற்படும் பலனே நிலையாக இருக்கும்.

மனமும், வாழ்வும் உடலில் ஏற்படுத்தும் பெரிய நிலையான மாற்றங்கள் சக்தி வாய்ந்தவை. மனத்திலும், வாழ்விலும் ஆத்மா ஏற்படுத்தும் பெரிய மாற்றங்கள்களும் நிலைப்பது பெரிய காரியமே. எனினும் யோக லட்சியம் முழுமையாக, நிரந்தரமாக, பூர்த்தியடைவதற்கு ஒருபடி முன்னதாக இவை நின்றுவிடும்.

கடைசி கட்டம் சத்திய ஜீவனாக மாறவேண்டியதாகும். மனிதனின் இருள் நிறைந்த ஆழத்தில் சத்திய ஜீவனின் பொன்னொளியின் புனித வித்துக்கள் சிருஷ்டிக்கு முன் ஊன்றப்பட்டுள்ளன. சத்தியலோக சக்தியின் திறன் பெரியது. அங்கு நினைவும், செயலும் இணைந்து இருப்பதால் நினைத்தது நடக்கும். அது தானே இயங்கும் பெருமையுடையது. சத்திய லோக பொன்னிற சக்தி சாதகனின் ஆழத்தைத் தொட்டு அங்கு ஆதிகாலத்தில் விதைத்த பொன் வித்துக்களை முளைக்கச் செய்யும்பொழுது, சத்திய ஜீவனாக சாதகன் மாற வேண்டிய கடைசி யோக சித்தி அவனுக்குச் சித்திக்கும்.

*********book | by Dr. Radut