Skip to Content

06. இறைவன் என் தலைவன்

6. இறைவன் என் தலைவன்

சிருஷ்டிக்கு அப்பாலுள்ளவன் இறைவன். உலகத்தையும், பிரபஞ்சத்தையும், தெய்வங்களையும் சிருஷ்டித்தவன் இறைவன். அப்பாலுக்கப்பாலாய் என அவனை வர்ணிக்கின்றோம். இறைவனுடைய அம்சங்களை தவசிகள் பலவாறாய் உணர்கிறார்கள். Infinity, Eternity, Immortality, Silence, Peace, Light, Love, Power, Bliss அனந்தம், நித்தியத்துவம், மரணமின்மை, மௌனம், சாந்தி, ஜோதி, தெய்வீக அன்பு, சக்தி, ஆனந்தம் போன்றவை அவ்வம்சங்களாகும்.

சிருஷ்டி என்பது –Matter, Life, Mind, Supermind, Satchidanandam, ஜடம், வாழ்வு, மனம், விஞ்ஞானம், சச்சிதானந்தம் ஆகியவற்றால் அடங்கியது. இறைவன் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவன்.

தெய்வ தரிசனம் என்பது பல நிலைகளில் உள்ளது. தெய்வத்தின் ஓர் அம்சத்தை (உதாரணமாக ஜோதி அல்லது அனந்தம்) தன் தவப்பயனாய் அடைந்தாலும் அதுவும் தெய்வ தரிசனமே. யோக மார்க்கத்தின் சிறப்பைப் பொறுத்தும், யோகியின் உயர்வைப் பொறுத்தும் தரிசனம் அமையும். ஓர் அம்சத்தையோ, சில அம்சங்களையோ, பல அம்சங்களையோ, அல்லது எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையையோ தரிசனம் செய்யலாம்.

பிரம்மம், புருஷன், ஈஸ்வரன் என்ற நிலைகளிலும் தெய்வ தரிசனம் அமைய இவற்றிற்கு அடுத்தாற்போல் சிவன், விஷ்ணுவாகவும் தெய்வம் தரிசனம் தருவதுண்டு. இவர்கள் இறைவனால் சிருஷ்டிக்கப்பட்ட தெய்வங்களில் தலைசிறந்தவர்கள்.

ஞானத்தின் உறைவிடமாகவும், அன்பின் பிழம்பாகவும், செயலில் உற்பத்தி ஸ்தானமாகவும் இறைவனைத் தரிசிக்கலாம். இக்கட்டுரையில் இறைவனை செயலின் தலைவனாக (–Master of work) தரிசிப்பதெப்படி என்பதை விளக்குவோம்.

செயல்களைக் கர்மம் என்கிறோம். கர்மத்தையே யோகமாகக் கொண்டவன் கர்மயோகி. பவித்திரமாக கர்மத்தைச் செய்யும்பொழுது, பலன் கருதாமல் கர்மத்தை மேற்கொள்ளும்பொழுது நிஷ்காம்ய கர்மம் யோகிக்கு கர்மபலனிலிருந்து விடுதலை அளித்து மோட்சத்தை அளிக்கிறது. மோட்சம் பெற்ற யோகி, இறைவனின் பூரணத்தில் ஐக்கியமாகிறான். பலன் மீதுள்ள ஆசையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவனுக்கு, பிறவியிலிருந்து விடுதலை கிடைக்கிறது. கர்மயோகத்தின் மூலம் பூரணயோகத்தைப் பயிலும் சாதகனுக்கு இந்த லட்சியம் பயன் தராது. இறைவனைக் கர்மங்களின் உற்பத்தி ஸ்தானமாகக் கண்டு அவனது திருவுள்ளத்தை (Divine will) புரிந்துகொண்டு, அது உலகில் தன் மூலம் நிறைவேற தன்னை யோகக் கருவியாக மாற்றிக் கொள்வதே சாதகனின் குறிக்கோளாகும். ஆகவே இந்த லட்சியம் பூர்த்தியடைய, கர்மத்தை கருவியாகக் கொண்டாலும், பூரணயோகத்தின் ஞானம் அடிப்படையாக அமைதல் தேவை. பூரணயோகத்தின் ஞான அஸ்திவாரம், ‘இருப்பதெல்லாம் அவனே’ என்பதாகும்.

எல்லா ஜீவன்களும் இறைவனே. எல்லா கர்மங்களும் இறைவனே. அவனது திருமுகங்களாகவே கர்மங்கள் காட்சியளிக்கின்றன என்ற ஞானம், பூரண யோகத்தின் அடிப்படை. இந்த ஞானத்தை முதலில் மனம் லட்சியமாக ஏற்றுக்கொண்டால், கர்மயோகத்தின் மூலம் மோட்சக் கதவு திறந்து ஆத்மா இறைவனை அடைவதற்குப் பதிலாக, கர்மயோகம் பூர்த்தியாகும் நிலையில், கர்மத்திற்கெல்லாம் உறைவிடம் இறைவனாகிய பரம்பொருளே என்னும் ஞானம் சித்திக்கும். அதுவே பூரண யோகத்தின் குறிக்கோளைப் பூர்த்தி செய்ய உதவும்.

இந்த லட்சியத்தை அடைய பூரணயோகம் நமக்கு அளிக்கும் மார்க்கம் சரணாகதி. நாம் இறைவனை சரண் அடைந்தால் பூரணயோக இலட்சியம் பூர்த்தியாகும் என்பது உண்மை. இறைவன் எல்லா நிலைகளிலும் இரு கூறாக இருக்கின்றான். இறைவனாகவும், சக்தியாகவும் உள்ளவன் இறைவன். நாம் இறைவனைச் சரணடையும் பொழுது அவனது அனந்தத்தில் கலந்து நித்தியத்தை அடைவோம். அது சிறந்தது. ஆனால் நம் முன் உள்ள குறிக்கோள் இறைவனை கர்மங்களின் தலைவனாக தரிசனம் செய்வது. இறைவனது கர்மங்களை அவன் சார்பாகச் செய்வது அவனது சக்தி. எனவே நாம் சக்தியை சரணடைந்தால்தான் நாம் கொண்ட குறிக்கோள் பூர்த்தியாகும். நம் சரணாகதிக்கு உரியவர் சக்தியே.

சரணாகதி மார்க்கமானால் அது பூர்த்தியடைய இரண்டு நிபந்தனைகள் உண்டு. ஒன்று முழுமையான சிரத்தை எனும் நம்பிக்கை; மற்றது அசைக்கமுடியாத பொறுமை. இவையிரண்டுமே சரணாகதியின் இலட்சியத்தைப் பூர்த்தி செய்யும். நம்பிக்கை எந்தக் காரியத்தைச் செய்வதற்கும் தேவைப்படுகிறது. எல்லா யோகங்களுக்கும் அஸ்திவாரமாக அமைவது நம்பிக்கை. அப்படியிருக்க பகவான் ஸ்ரீ அரவிந்தர் இங்கு நம்பிக்கை தேவை என்று சுட்டிக்காட்டுவது எதனால் என ஒரு கேள்வி மனதில் எழலாம்.

மனத்தின் திறன் அறிவு. அறிவின் சிறப்பு அனுபவத்தைப் பொருத்தது. தனக்கு அனுபவமில்லாத விஷயத்தில் மனத்திற்கு அறிவிருக்காது. அனுபவத்தின் மூலமாகத்தான் அறிவைப் பெறுவது மனித மனம். அதன் புத்தி. அறிவு இழுத்த கோட்டைத் தாண்டி புத்தியோ, மனமோ செல்வதில்லை; சென்று செயல்படுவதில்லை. ஏதோ ஒரு சமயம், அனுபவத்திலில்லாத ஒரு காரியத்தைச் செய்ய வேண்டி வருவதுண்டு. பலரும் அதைத் தவிர்ப்பார்கள். ஒரு சிலர் அப்படிப்பட்ட செயலையும் செய்ய முற்படுவதுண்டு. சிங்கப்பூர் செல்லும் குடும்பம் தாங்கள் 10 ஆண்டு கழித்து திரும்ப வரும் வரை தங்கள் 15 ஏக்கர் நிலத்தை யாராவது ஒருவரிடம் விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அனுபவம் அச்சுறுத்துகிறது. யாரிடம் நிலத்தை விட்டுச் சென்றாலும் மீண்டும் தங்கள் கைக்கு அது திரும்பி வராது என்றே அறிவு சொல்கிறது. அனுபவமில்லா விஷயமாதலால் தவிப்பு. ‘எங்கள் தகப்பனார் சொல்வதுண்டு, நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களை நம்பலாம் என்று. எனினும் பயம் கூடவே வருகிறது. நம்பிக்கை ஒருபுறம் இருக்கிறது’ என நம்பிக்கையின் மீது பாரத்தைப் போட்டு ஒரு நல்ல குடும்பத்திடம் நிலங்களை ஒப்படைத்து விட்டுப்போய் 10 ஆண்டு கழித்துத் திரும்பினார். நம்பிக்கை வீண் போகவில்லை. நிலம் திரும்பியது. தனக்கு அனுபவபூர்வமான அறிவு இல்லாதபொழுது தகப்பனார் சொல்லில் உள்ள அறிவை நம்ப முன்வந்தார் அவர். மனத்திற்கு (புத்திக்கு) இல்லாத அறிவு ஆத்மாவுக்கு உண்டு. ஆத்ம ஒளி, ஆத்மீக அறிவு புத்தியில் பிரதிபலிப்பதுண்டு. அத்தகைய பிரதிபலிப்பையே நம்பிக்கை (faith) சிரத்தை என்கிறோம். புத்திக்கு புலப்படாவிட்டாலும், அறிவுக்கு அனுபவமில்லாவிட்டாலும் ஆத்மாவின் ஞானம் புத்தியில் பிரதிபலித்தால் மனிதனுக்கு நம்பிக்கை ஒளி ஏற்படுகிறது. யோக மார்க்கத்தில் உள்ள எந்த இலட்சியமும் ஆத்மீக இலட்சியம் என்பதால் நம்பிக்கை (சிரத்தை)யால் மட்டுமே இந்த இலட்சியத்தை அடைய முடியும். நம்பிக்கையில்லாமல் எந்த யோகத்தையும் ஆரம்பிக்கக் கூட முடியாது.

பகவானுடைய யோகம் பூரண யோகம். ஜீவனின் எல்லா கரணங்களும் - மனம், நாதம், உடல் - புனிதப்பட வேண்டிய யோகம். இதை ஆரம்பிக்க நம்பிக்கை அவசியம். ஆனால், சாதாரண நம்பிக்கை போதாது. பூரணமான நம்பிக்கை வேண்டும். ஆத்மிக ஒளி மனதில் பிரதிபலித்தால் மனத்திற்கு நம்பிக்கை ஏற்படுகிறது. அதே ஒளி உணர்விலும், உடலிலும் நம்மையறியாமல் பிரதிபலித்தால் பூரண நம்பிக்கை ஏற்படுகிறது. டாக்டர் ‘இந்த நோயாளியை வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள். உறவினர்களுக்கு சொல்லுங்கள்’ என்று சொல்லியபின், ‘நான் சாக மாட்டேன்’ என்று நம்பிக்கையுடன் இருந்து டாக்டர் சொல்லைப் பொய்யாக்கி உயிர் பிழைத்தவருண்டு. அது உடலுடைய நம்பிக்கை. ‘மனைவி இறந்து விட்டாள்’ என்ற தந்தியைப் படித்தபின் அதை நம்ப மறுத்து, நம்பிக்கை வாழ்க்கையில் செயல்பட்டு மனைவியை உயிரோடு சந்தித்துத் தந்தியை தவறாக்கியவருடைய நம்பிக்கை, உணர்ச்சியில் ஏற்பட்ட நம்பிக்கை. அறிவிலும், உணர்விலும் ஆத்மிக ஒளி ஒரே சமயத்தில் பிரதிபலிப்பதால் ஏற்படும் நம்பிக்கையே பூரணமான நம்பிக்கை. பூரணயோக இலட்சியம் எதை நிறைவேற்ற வேண்டுமானாலும் பூரண நம்பிக்கை வேண்டும். இக்கருத்தை சுட்டிக் காட்டுவதன் நோக்கம் இதுவே.

அசைவற்ற பொறுமையும் அதனுடன் தேவை என்கிறார். பூரணயோகத்திற்கு அடிப்படையாக வேண்டியவை சமத்துவம், பூரண நம்பிக்கை என்று தன் யோக நூலில் பகவான் குறிப்பிடுகிறார். கீதையில் சொல்லும் சமத்துவம் சிறந்தது. சமத்துவத்தின் சிறப்பை விளக்க கீதை சமத்துவமே யோகம் என்கிறது. அனந்தத்திலுள்ள சாந்தியை அளவிறந்து பெற்றபின் கிடைப்பதே சமத்துவமாகும் என்கிறார். பூரண நம்பிக்கை பூரணமாகச் செயல்பட சமத்துவத்தின் அஸ்திவாரம் தேவை. அசைவற்ற பொறுமை சமத்துவத்தின் அறிகுறி. எனவே அசைக்க முடியாத, அசைவில்லாத பொறுமையை பூரண நம்பிக்கையுடன் சேர்ந்து பெறவேண்டும் என்று கூறுகிறார் பகவான். பூரண நம்பிக்கையும், அசைக்க முடியாத பொறுமையும் சரணாகதியைப் பூர்த்தி செய்ய மேலும் ஒன்று வேண்டும். தளராத நெஞ்சம் அவசியம்.

இலட்சியம் உயர்ந்தது. மார்க்கம் சிறந்தது. நம்பிக்கை பூரணமானது. நெஞ்சம் தளர்ச்சியற்றது. பொறுமை அசைவில்லாதது. எனவே பலனை நாம் எவ்வளவு சீக்கிரம் அடையமுடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பெற வேண்டும் என்பது உன்னதமான நோக்கமாகும். முயன்றால் அது முடியும். எனவே க்ஷண நேரம் தாமதமின்றிப் பலனைப் பெற நினைத்தல் இயல்பு. இக்கட்டத்தில் பகவான் மேலும் ஒரு நிபந்தனை விதிக்கின்றார். இறைவன் நம்முள் நிதானமாகவே செயல்படுகின்றார். அவருக்கு அவசரம் என்பதில்லை. நம் சுபாவம் எப்படி அமைந்துள்ளதோ அதன் வழியே இறைவன் நம்முள் தன்னை மலரச் செய்கின்றார். சுபாவத்தை ஒதுக்கி வைத்து, விரைவில் பலனைப் பெற இறைவன் முயல்வதில்லை. எனவே அவன் வழி, நம் வழி எனக் கொண்டு, நம் யோக முயற்சியை நம் சுபாவத்தை ஒட்டியே செலுத்துதல் அவசியம் என உணர்த்துகின்றார். இதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு.

இலட்சியம், மார்க்கம், கருவி, திறன் ஆகியவை சிறப்பானவையாக அமைந்துவிட்ட காரணத்தால், சுபாவத்தைப் புறக்கணித்து, பலனை சீக்கிரமாகப் பெற நம்மால் முடியும் என்பது தெளிவு. இருப்பினும் அதைச் செய்யலாகாது என்று ஏன் ஸ்ரீ அரவிந்தர் கூறவேண்டும்?

தன் மகன் திறமைசாலியாக வேண்டும், பெரும் செல்வம் திரட்ட வேண்டும், முதல் மார்க் பெற வேண்டும் என்பன போன்ற இலட்சியங்களை, கண்டிப்பாலும், அதிகாரத்தாலும், கடுமையாலும் நிறைவேற்றலாம். கண்டிப்பும், கடுமையும் அதிகமானால் பலன் அதிகமாகும். தன் மகன் பெரிய இலட்சியவாதியாக வேண்டும், அவனுள் (Genius) மேதை பிறக்க வேண்டும், சிருஷ்டி கர்த்தாவான பாடகனாக வேண்டும், கற்பனையூற்று பெருக்கெடுத்தோடும் கவியாக வேண்டும் என்பன போன்ற பலனை எதிர்பார்க்கும் பொழுது கண்டிப்பு, அதிகாரம், கடுமை பலன் தராது. எதிர்மாறான பலனளிக்கும். இவை மனிதன் மலர்வதால் கிடைக்கும் பலன்கள். அன்பு, வாத்சல்யம், சுதந்தரம், இனிமை, நிரந்தரமான சந்தோஷம் ஆகியவையே இப்பெரும் பலன்களைப் பெற்றுத்தரும். அதுபோல் யோகி, உடலைப் புறக்கணித்து மோட்சம் தேடினால், அறிவைப் புறக்கணித்து லயத்தை நாடினால், ஒரு சித்து அடையப் பயின்றால், சுபாவத்தை சுருட்டி மடக்கி ஒதுக்கி வைத்துவிட்டுச் செயல்படலாம். பலன் உடன் வரும். பூரண யோகத்தில் ஆத்மிக மலர்ச்சியை எல்லாக் கரணங்களிலும் பெறுதல் அவசியம். கரணங்கள் சுபாவத்தால் கட்டுண்டவை. கட்டை உடைத்து மலரும்படி ஆணையிட்டுப் பலனடைய முடியாது. சுபாவத்தின் கட்டு சிக்கல்கள் நிறைந்தவை. சிக்கல்களைத் தேடி, ஒவ்வொன்றாய் களைந்து, கட்டுகளை உடைக்காமல் அவிழ்த்து, கடைசியில் பெறும் விடுதலையே, கரணங்களை மலரச் செய்யும். இக்காரணத்தாலேயே சுபாவத்தையொட்டி யோகத்தைப் பயில வேண்டும் என்று பகவான் நிர்ணயிக்கின்றார்.

யோகத்தின் முதற்படியாக சமர்ப்பணம், பலன் கருதாமல் செயல்படுதல், அகந்தையைக் களைதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். பூரணயோகத்திற்கு அடிப்படையாக அகந்தையை அகற்ற வேண்டுமாதலால், ஞான மார்க்கமாயினும், பக்தி மார்க்கமாயினும், கர்ம மார்க்கமாயினும், பூரண மார்க்கமாயினும், ஒரு கட்டத்தில் அகந்தையைக் கரைத்தல் அவசியமாகிறது. பலன் கருதாமல் செயல்பட வேண்டியது எல்லா யோகங்களுக்கும் பொதுவானதானாலும், இங்கு அகந்தை கரைவதற்கு பலனைக் கருதாமலிருப்பது அவசியமாகிறது. இந்த மூன்று பாகங்களில் முதலாவது சமர்ப்பணம். பூரண யோகத்திற்கு எந்த முறையைக் கைக்கொண்டாலும் சமர்ப்பணம் அதனுடன் இணைந்து வரும். என்றாலும், இங்கு பகவான் சமர்ப்பணத்தைச் சொல்லுவதில் சிறப்புண்டு. மேற்கொள்ளும் வழி ஞானப்பாதையானால், ஆரம்பம் தியானத்திலிருக்கும். பக்தியைக் கைக்கொண்டால், பாதையை (aspiration) ஆர்வத்தோடு ஆரம்பிக்க வேண்டியிருக்கும். ஆர்வத்தில் ஆரம்பித்தால் இறைவனை ஆனந்தமயமாகவும் காணலாம். தியானத்திலாரம்பித்தால் இறைவனை ஜோதிமயமாகவும் காணலாம். கர்மத்தின் தலைவனாக இறைவனை தரிசனம் செய்ய மேற்சொன்ன ஆரம்பங்கள் உதவா. அதனால்தான் சமர்பணத்தால் ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

செயல்களை இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்து, நிஷ்காம்யமாக பலன் கருதாது அவற்றை முடித்து, அகந்தையைக் களைந்து கரைக்க முயலும் பொழுதுதான் அகம் என்பதென்ன, அதைக் களைவது எவ்வளவு சிரமம் எனத் தெரியவருகிறது.

மனிதன் பல ஆயிரம் ஆண்டுகளாக முன்னேறியது (ego) தன் அகத்தில் உள்ள திறனால்தான். விலங்கினத்தினின்று தன்னைக் காப்பாற்றி, வெள்ளம், வறட்சி, புயல், பூகம்பம் ஆகியவற்றில் தப்பி, மனிதகுலம் ஏற்பட்டு, நாகரிகம் வளர உதவியது தனி மனிதனது அகந்தை. பொதுவாக நாம் ஆணவத்தையே அகந்தை என அறிவோம். யோகத்தில் அகந்தை எனக் குறிப்பிடப்படுவது ஆணவம் மட்டுமல்ல. இன்று நாம் திறம்படச் செயல்படுவதற்கு கருவியாக உள்ள எண்ணம், உணர்ச்சி, உழைப்பு ஆகியவற்றை முறைப்படுத்தி அவற்றை நடத்திவரும் கருவியையே அகந்தை என இங்கு குறிப்பிடுகிறோம். பூரண யோகத்தில் இறைவனது திருவுள்ளமும், இயற்கையின் செயல்களும் தவிர மற்றெல்லா மனித அசைவுகளும் அகந்தையினுடையது எனக் கருதப்படும். பொதுவாகத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், தன் நலத்தைப் பேணவும், தன் உணர்ச்சிகளை முக்கியப்படுத்துவதும், கருத்தை நிலை நாட்டுவதும், தன்னைச் சார்ந்த எதையும் காப்பாற்றிக்கொள்ளும் திறனுடைய செயல்கள் எல்லாம் அகந்தையின் செயல்களாகக் கருதப்படும். ஆகையினால் அகந்தையைக் களைய ஏற்கும் எந்த முயற்சியும் பெரும்பாலும் தோல்வியடையும். சாதாரண மனிதன் அகந்தையை விட்டொழித்து எப்படிச் செயல்பட முடியும் எனக் கருதுவான். எனினும், ஏற்றுக்கொண்ட இலட்சியத்திற்காக அகந்தையைக் களைய முயலுவானேயானால், ஒருபுறம் வெற்றி கிட்டினால், மறுபுறம் அது தலையை நீட்டும்.

தமிழ்நாட்டில் சரணாகதி தத்துவத்தைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும் வைஷ்ணவர்கள் இருபிரிவானவர்கள். முதற்பிரிவினர் தங்கள் சரணாகதியைப் புனிதப்படுத்தும் வகையில் 100 பாசுரங்கள் பாடி விஷ்ணுவைத் துதித்தனர். இரண்டாம் பிரிவினர் தங்கள் சரணாகதி அதனினும் சிறப்பானது என்று நிரூபிக்க விஷ்ணுவின் பாதங்களைத் துதித்து 100 பாசுரங்கள் இயற்றினர். முதற்பிரிவினர் பாதுகையைப் பாடினர். போட்டியாக மற்றவர் பாதுகையிலுள்ள தூசியைப் பாடினர். தலையாக கொள்கையாக அகந்தையை சரணம் செய்யும் இருபிரிவினர் போட்டியிட்ட பொழுது தங்கள் தங்கள் அகந்தையே மிஞ்சக் கண்டனர். இதுவே அகந்தையின் திறன். நாம் எந்த மார்க்கத்தை மேற்கொண்டாலும், அகந்தை அதனுள்ளும் தனக்கு திருட்டுத்தனமாக ஓர் இடத்தை ஏற்படுத்திக் கொண்டு, நம் முயற்சியை வெற்றிகரமாகத் தோற்கடிக்க வல்லது. தெளிந்த ஞானமும், நெகிழ்ந்த பக்தியும், விழிப்பு நிறைந்த தூய மனமும் இருக்கும்பொழுதும் அகந்தையைக் களைதல் சுலபமில்லை. கர்மங்கள் இறைவனுடையவை. நான் இறைவனுடைய வேலையாளே எனக் கருதுவது சிறந்ததாகும். அப்படிச் செய்யும்பொழுது மற்றவர்களைவிட நானே சிறந்த வேலை செய்யும் ஆள் என்னும் உருவத்தில் அகந்தை தனக்கொரு இடத்தை ஏற்படுத்திக்கொள்ளும். அதனால் நான் வேலை செய்பவன் என்ற ரூபத்திலும் அகந்தையை வரவிடக் கூடாது. அதற்கடுத்த கட்டத்தில் நான் ஆள்கூட இல்லை. நான் ஒரு கருவியே எனக் கருதுவது அதைவிடச் சிறந்தது. இந்த நிலையிலும் அகந்தை தனக்கென ஒரு வழியை அமைத்துக் கொள்வதுண்டு. நானே சிறந்த கருவி என்ற வழியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அகந்தை முயலும். அதன் பிடியினின்று விடுபடுதல் எளிதல்ல.

எண்ணத்தின் சிறப்பால் விடுபட முயலலாம். ஏனெனில் எண்ணமே மனிதனின் தலைசிறந்த கருவி. இங்கும் வெற்றி அகந்தைக்குக் கிடைக்குமே தவிர நமக்குக் கிட்டாது. யுகாந்திர காலமாகத் தன்னைப் பண்படுத்தி வந்த அகந்தை மனிதனுடைய சிந்தனையின் ஊற்று ஏற்படும் இடத்தில் தன் ஆணி வேர்களை ஆழமாகப் பதித்துள்ளது. எனவே சிந்தனையின் சிறப்பும் இம்முயற்சியில் மனிதனுக்கு முழுவதும் சாதகமாகப் பயன்படாது. இதற்கிடையில் வேறோர் ஆபத்தும் உள்ளது. எந்த யோகத்தை மேற்கொண்டாலும் (hostile forces) தீயசக்திகள் சாதகனை விழிப்புடன் கண்காணித்து வரும். தீய சக்திகளுடைய திறன் பெரிது, பலவாறானதாகும். அவற்றால் ஒளிமயமான உருவத்தை மேற்கொள்ள முடியும். அப்படிப்பட்ட உருவத்துடன் சாதகனுடைய அகக்கண் முன் தோன்றி, தங்களை இறைவனாகக் கருதும்படி தூண்டும். தங்களுடைய கருவியாகச் செயல்படும்படித் தூண்டும். ஒளிமயமான ஜீவன் இறைவனுடைய உருவாகத் தரிசனம் தந்து தன் கருவியாக இருக்கும்படிக் கேட்டால், சாதகன் எளிதில் ஒப்புக்கொள்வான். தான் இறைவனின் கருவியாக மாறுவதை பெருமையுடன் ஏற்றுக்கொள்வான். இது பேராபத்து. இதைத் தவிர்க்கும் திறன் சாதகனுக்கில்லை. சாதகன் ஏமாந்து விட்டால் அவன் உண்மையிலேயே இருளின் கருவியாக மாறி, யோகத்தை விட்டொழித்து, தடம் பிரண்டு, நிலை குலைந்து சீரழிவான். சாதகனுக்குள்ள எந்தத் திறனும் அவனை இந்த அவல நிலையிலிருந்து காப்பாற்ற முடியாது. அங்கிருந்து தப்பிக்க பகவான் ஒரு உபாயம் சொல்லுகின்றார். அடிப்படையாக ஆரம்பத்தில் சாதகன் ஏற்றுக்கொண்ட ஞானம், ‘எல்லாம் அவனே’ என்பது. ஒளிமயமாக தீய சக்திகள் எதிர்ப்படும் பொழுது, அடிப்படை ஞானத்தை நினைவு கூர்ந்தால், எதிரேயுள்ள சக்தியின் உண்மை சொரூபம் மனதில் தட்டுப்படும். தவறு செய்யும் வாய்ப்பிருக்காது. புத்தி ஏற்றுக்கொண்ட நினைவுக்குக் கொண்டுவந்தால், அந்த ஞானத்தின் தூய்மை மனத்தில் படரும் பொழுது எதிரேயுள்ள ஜீவனின் தன்மை தெளிவாகத் தெரியும். தீய சக்திகளின் வலையில் விழாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

சித்தி பெறுதல், மோட்சமடைதல், ஆண்டவனை அடைதல் போன்ற கருத்துக்கள் நமக்கு பழக்கமானவை. முனிவரும், ரிஷியும், யோகியும் அடைவது சித்தி. ஆன்மிக விளக்கம் பெற்ற மனத்தின் (spiritualised mind) பல நிலைகளில் அடையும் சித்தி இவர்கள் பெற்றது. கர்மத்தைச் சரண் அடைந்து கர்மயோகம் மூலம் அடையும் சித்தி (spiritualised life movement) ஒரு வகையானது. ஆசனம், பிராணாயாமம் மூலம் உடலுக்கு விளக்கம் தந்து (spiritualised body consciousness) பெறும் சித்தி மற்றொரு வகையானது. மனம், நாதம், உடல் என்னும் ஜீவனுடைய கரணங்கள் அவற்றின் உயர்ந்த அம்சங்களில் ஆன்மிக விளக்கம் பெற்று அதனால் அடையும் சித்தியே இவை. மனத்திற்குப் புத்தி உயர்ந்த பகுதியானால் அதன் அஸ்திவாரங்கள் ஜடமான மூளை என்னும் பகுதியாகும். மனமும், புத்தியும் சூட்சுமப் பகுதிகள். மூளை ஸ்தூலமானது, ஜடப்பொருள், நம் கரணங்கள் ஒவ்வொன்றிற்கும் சூட்சுமம், ஸ்தூலம் என்ற இரு பகுதிகள் உண்டு. சூட்சுமமான பகுதி உயர்ந்தது. அதனால் ஆத்மவிளக்கம் பெற முடியும். விளக்கம் பெற்று சித்திபெற முடியும். அப்படிப்பட்ட சித்தியால் மோட்சம் அடைய முடியும். உலகிலேயே தங்கி, இறைவனின் பூரணயோக லட்சியத்தை - மரணத்தை வெல்லும் இலட்சியத்தை - பூர்த்தி செய்ய இந்த சித்தி உதவாது. புத்தியின் ஸ்தூல அஸ்திவாரம் மூளை என்பதைப் போல் நாதத்தின் ஜடமான ஸ்தூல அஸ்திவாரம் நரம்பு, உடலுக்கும் சூட்சுமப் பகுதியுண்டு. ஜடமான, ஸ்தூலப் பகுதியுண்டு. நம் சரணாகதியை இறைவன் ஏற்றுக்கொண்டால் நாம் உலகை விட்டுப் போய் விடுகிறோம். அதனால்தான் நாம் நம் சரணாகதியை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதில்லை. பிரகிருதி இயற்கை என்னும் பகுதி மூளை, நரம்பு, உடல் ஆகியவற்றின் மூலம் செயல்படுகிறது. இங்கு செயல்படுவது இறைவனில்லை. இறைவன் நேரடியாக இங்கு செயலாற்றவில்லை. சக்தியின் மூலம் இங்கு செயல்படுகிறான். ஸ்தூலமான, ஜடமான கரணங்களின் பகுதியானவைகளே - மூளை, நரம்பு, உடல் - நம் ஜீவனின் அஸ்திவாரம். அந்த அஸ்திவாரத்திலேயே இருளும், மரணமும், பொய்யும் உறைந்துள்ளன. மரணத்தை வெல்லும் யோகம் இந்தப் பகுதிகளையே முக்கியமாகக் கருதுகிறது. அந்தப் பகுதிகளை ஆன்மவிளக்கம் செய்வதே பூரண யோகத்தின் குறிக்கோள். அந்தக் குறிக்கோளை நிறைவேற்றவே, நாம் சக்திக்குச் சரண் அடைகிறோம்.

கரணங்களின் உயர்ந்த பகுதிகள் ஆன்ம விளக்கம் பெற்றால் மோட்சம் கிடைக்கும். கரணங்களின் தாழ்ந்த பகுதிகள் ஆன்ம விளக்கம் பெற்றால் மோட்சத்தை விட உயர்ந்த (perfection) சிறப்பெய்தல் என்ற நிலையை அடையலாம். ஜீவனின் தாழ்ந்த பகுதிகளை அவையிருக்கும் இருளில் விட்டுவிட்டு ஆன்மா விடுதலை பெற்று ஆண்டவனை அடைவது மோட்சம். ஜீவனின் தாழ்ந்த பகுதிகளை, அவையிருக்கும் இருளிலிருந்து மீட்பது அவற்றைச் சிறப்புறச் செய்வதாகும். ‡Not only liberation, but perfection is our aim. வெறும் மோட்சத்தை மட்டும் நாடாது, ஜீவன் முழுமைக்கும் ஒளிச்சிறப்பை (perfection) பெற விழைவதே பூரண யோகத்தின் நோக்கம். அச்சிறப்பைப் பெறுவதால் உடல் இறைவனின் கருவியாகிறது. எந்த உடலைக் ‘காயமே இது பொய்யடா’ என்று உதறித் தள்ளினார்களோ அதே உடலை ஒளிமயமாக மாற்றி, இறைவனின் கருவியாக மாற்றி, அக்கருவி மூலம் உலகில் மரணத்தை ஒழிக்க முயல்வது பகவான் ஸ்ரீ அரவிந்தரின் பூரண யோகம்.

**********



book | by Dr. Radut