Skip to Content

04. வேதாந்த ஞானம்

4. வேதாந்த ஞானம்

வேதம் உயர்ந்தது. அந்த ஞானத்திற்கு இணையில்லை. அதன் சிறப்பையும் உயர்த்தியது வேதாந்தம். வேத ரிஷிகள் உலகை பிரம்மமாகக் கண்டவர்கள். தன்னை பிரம்மமாக உணர்ந்தவர்கள். வேதாந்த ஞானம் என்னும் பகுதியில் ஸ்ரீ அரவிந்தர் வேத ரிஷிகள் பிரம்மத்தை உணர்ந்த முறையை விவரிக்கின்றார்.

நாம் நம்மை உடலாக அறிகிறோம். உடலின் பகுதிகளான புலன்கள் நமக்கு உலகை உணர்த்துகின்றன. உடல் ஜடமானது. அதன் புலன்களால் ஜடத்தை மட்டுமே காண முடியும். அதை மட்டுமே மனிதன் அறிந்து அவ்வறிவு புலனறிவை விட உயர்ந்தது என்று கண்டு கொண்டதே மனிதனுடைய சிறப்பு.

புலன்களை முழுவதும் விலக்கி, சிந்தனையால் மட்டுமே உண்மையைக் கண்டறியமுடியும். அது தத்துவ ஞானமாகும். தத்துவ ஞானம் உயர்ந்ததெனினும், அனுபவத்திற்கு எட்டாதது, தன்னால் உணர்ந்து அனுபவித்தறியும் ஞானத்தையே மனிதன் நாடுகிறான். தத்துவ ஞானத்தைவிட தன்னால் அனுபவித்தறியும் ஞானத்தையே மனிதன் விரும்புகிறான்.

தான் உணர்ந்ததே ஞானம் எனப்படும். ஒரு மைலுக்கு அப்பாலுள்ள பள்ளத்தை யானையின் அடி உணர்த்துகிறது. வெகுதூரத்திலுள்ள தண்ணீரை ஒட்டகம் அறிந்ததுண்டு. தான் என்ற உணர்வேற்பட்டு, அகங்காரம், அகந்தை என்று உருப்பெற்ற பின் அவை சுயநலம் என்பதை ஏற்படுத்தி, சூழ்நிலையிலிருந்து மனிதனைப் பிரித்துவிட்டன. அதன் பின் நேரடியாக சூழ்நிலையையறியும் திறன் குறைந்து, புலன்களையும், சிந்தனையையும் மனிதன் அதிகமாக நம்பினான்.

என்றாலும் இந்த நேரடியான உணர்வு முழுவதும் அழியவில்லை. மந்திர சக்தியால் வயப்பட்டவன் மந்திரவாதியின் எண்ணத்தை ஏற்றுக்கொண்டு சூழ்நிலையை நேரடியாக அறிகிறான். தபஸ்விக்கு நிஷ்டையில் இந்த ஞானம் ஏற்படுகிறது. விழிப்பான நேரத்தில் இந்த நேரடியான உணர்வு ஏற்பட முடியாது என்பதல்ல. ஏற்படுவது எளிதல்ல.

இன்று நமக்கில்லாத புலன் உணர்வுகளையும் மனிதன் ஏற்படுத்திக்கொள்ள முடியும். கையில் எடுத்த பொருளின் எடையை அறியமுடியும். இதுபோன்ற புலன் உணர்வுகளை வளர்ப்பதெப்படி என்பதை விட்டுவிட்டு ஆத்ம ஞானத்திற்குரியவற்றை மட்டும் கவனிப்போம்.

இந்த ஞானத்தை மனிதன் பெற முடியுமென்றால், அதற்குரிய அறிவுத்திறன் நம்மிடம் இருக்க வேண்டும். உதாரணமாக நாம் உயிரோடு இருக்கின்றோம் என்று எப்படி நாம் அறிகிறோம். புலன்கள் காட்சிகளையும், சப்தத்தையும், அறிவதைப்போல், உடல் தனக்கு உயிர் இருப்பதை அறிகிறது. அதேபோல் ஆன்மாவின் தன்னுணர்வு தானிருப்பதை உணர்த்துகிறது. அதற்கு விளக்கம் தேவையில்லை. அது நேரடியான உணர்வு, தன்னைத்தான் அறியும் திறன், யோக ஞானம் எனப்படும். ஞானம் என்றே நாம் குறிக்கலாம்.

புலன்களால் கட்டுப்பட்ட மனம் புலன்கள் அளிக்கும் செய்திகளை மட்டுமே உணரமுடியும், புலன்களை விட்டு அகன்ற மனமே தன்னையறிய முடியும். புலனாட்சியிலிருந்து விடுபட்ட அறிவுக்கு மனத்தின் உயர்வுண்டு. அதனால் மனத்தை தன்னையே அறியும்படிச் செய்ய முடியும். புலன்களிலிருந்து விலகி வந்த மனம் தன்னை அறியும்போது தன்னை பிரம்மமாக அறிகிறது. தன்னை அறிந்ததுபோல் மற்றவர்களையுடும் மனம் அறிய முடிகிறது. பிறரையும், பிரம்மமாக உணர்கிறது. உலகத்தையும் பிரம்மமாகக் காண்கிறது.

உலகத்தின் உண்மையை அறிய வேதாந்த ஞானம் மனத்தையும் மனத்திற்குத் தன்னையறியும் திறனையும் நாடுகிறது. மனத் முதலில் விடுபட்டு தன்னை உணர்ந்த பின், அதன் மூலம் உலகத்தை உணர்கிறது. உலகம் பிரம்மம் என்ற உண்மை மனத்திற்குத் தெளிவாகிறது.

மனம் உண்மையைப் பிரதிபலிக்கும் தன்மையுடையது. உண்மையை முழுமையாக மனத்தால் ஆட்கொள்ள முடியாது என்பதால் மனம் அறிந்ததை நாம் முடிவாக ஏற்றுக்கொள்ள முடியாது. முடிவானது எது? முடிவானதாகத் தன்னையறிந்தது எது? முடிவானதாகவும் முழுமையாகவும் தன்னையறிந்த ஒன்றை நாம் நாட வேண்டும். எனவே பகுத்தறிவையும், மனத்தையும் கடந்து செல்ல வேண்டியது அவசியம். உயர்ந்து நிற்கும் ஆன்மிகம் அதன் நிலையில் முழுமையானது. இருண்ட நிலையில் அரைக் கண் திறந்த நிலையில் அலைமோதும் பூவுலக ஜீவன் தன் ஆட்சி செலுத்துமிடத்தில் தவறு செய்வதில்லை. காற்றும், வெளியும், மரமும், செடியும் தங்கள் திட்டப்படி தவறாமல் செயல்படுகின்றன. அதேபோல் உயர்ந்து நிற்கும் ஆன்மிகமும் தவறு செய்வதில்லை. எனவே அவையிரண்டும் முழுமையுடையவை. இடையில் உள்ள மனிதன் தன் செயலில் பல தவறுவதைப் பார்க்கிறான். மனிதன் முழுமையுடையவனில்லை என்பதால் அவனுக்குக் குறையேற்படுகிறது. தவறு நேருகிறது என்றாலும் மேலுள்ள முழுமைக்கும், கீழேயுள்ள முழுமைக்கும் இடையே மனிதனும் மனமும், பகுத்தறியும் பாலமாக அமைகின்றன.

கீழேயுள்ள முழுமைக்கு வாழ்வு முக்கியமானது. வாழ்வில் முக்கியமானது செயல். பூவுலக வாழ்வில் செயல்கள் வழுவறியா. ஆற்றின் ஓட்டம், விலங்கினத்தின் பெருக்கம், காற்றின் நடமாட்டம், செடி கொடிகளின் வளர்ச்சி ஆகியவை பூரணமான திட்டத்திற்குக் கட்டுப்பட்டவை. அவற்றை நிகழ்த்தும் செயல்களில் அறிவு பொதிந்துள்ளது. சர்க்கரையை நாடும் எறும்பின் செயல் தவறுவதில்லை. நீருற்றைத் தேடும் வேரின் செயல் தவறையறியாதது. மனிதன் நீரை நாடினால் பல இடங்களில் தேடிப்பார்க்கிறான். வேர் தவறின்றி நேரடியாக நீரை நாடிச் செல்கிறது. தவறின்றி செயல்படும் அறிவு ஞானமாகும். வாழ்வின் செயல்களுக்குள் ஞானம் மறைந்துள்ளது. ஞானத்தின் பிறப்பிடம் ஜோதி. ஜோதி ஆன்மிகத்தில் மறைந்துள்ளது. ஆன்மிகத்தில் மறைந்துள்ள ஜோதி மேலேயும், வாழ்வின் செயல்களில் மறைந்துள்ள ஞானம் கீழேயும் இருப்பதை மனித மனம் அறிவால் இணைக்க முற்படுகிறது. அவை இணைந்தால் பூரண ஒருமை, பூரண முழுமை ஏற்படும்.

புலன்களின் ஆட்சியிலுள்ளவரை அறிவுக்குத் தெளிவில்லை. தன்னை உணரும் தன்மையில்லை. புலன்களிலிருந்து அறிவு விடுதலை பெற்ற பின்னர், மனம் தன்னையுணர முடிகிறது. பிறரை உணரமுடிகிறது. அதனால் அறிவு ஞானமாக மாறுகிறது. இதன் மூலம் மனமும் உயர்ந்து சத்திய ஜீவனாகிறது. மேலேயுள்ள முழுமையும், கீழேயுள்ள முழுமையும் மனத்தின் உயர்வால் இணைந்து, பூரண ஒருமையும் முழுமையும் அடைந்துவிடுகின்றன.

வேதாந்தம் சச்சிதானந்தத்தைக் கண்டுகொண்டுள்ளது. மனிதன் அதையறியவில்லை. உருவம் பெற்றவற்றையே மனிதன் கண்டுகொண்டான். தன்னுள்ளே சென்று மனிதன் உருவம் மறைவதைக் காண்கிறான். உருவமும், அசைவும் நிறைந்தது உலகம். உருவம் மறைந்த பின்னும் அசைவு மறையாமலிருப்பதைத் தான் உள்ளே சென்ற பின் மனிதன் காண்கிறான். காலத்தாலும், அசைவாலும் தான் கட்டுண்டதை மனிதன் பெரும்பாலும் கண்டபொழுது, ஒரு க்ஷணம் மின்னல்போல் சத்தியம் அவனுக்குக் காட்சியளிக்கிறது. மேலெழுந்த வாரியாக இருந்தவரை தான் அறியாத ஒன்று தன்னுள்ளே சென்றபின் தனக்கு பளிச்சென்று கணப்பொழுது தெரிவதைக் காண்கிறான். மனிதன், அறிவைப் புலன்களிலிருந்து விடுவித்து, தன்னுள்ளே சென்ற காலத்தில், அறிவு ஞானமாகி சச்சிதானந்தத்தை ஒரு கணம் தனக்குணர்த்துவதை மனிதன் கண்டுகொண்டான்.

சச்சிதானந்தத்தை அவனுக்குணர்த்தியது ஞானம். ஞானம் இடையறாது செயல்படுவதில்லை. விழிப்புற்ற நேரத்தில் விலகிவிடக் கூடியது. உள்ளிருந்து மேலே வந்தாலும் மறையக்கூடியது. எனினும், வேதாந்தம் ஞானத்தைப் பற்றிக்கொண்டு, அதன் சுவடுவழியே சென்று இறைவனின் முழுமையை உணர முயன்று வெற்றி பெற்று “நானே அவன்” “நானே பிரம்மம்” என்றறிந்து “உலகமே பிரம்மம்” “ஆன்மாவே பிரம்மம்” “அனைத்தும் பிரம்மம்” என்ற ஞானத்தை அடைந்தது.

வேதாந்த காலத்துத் தர்க்கங்களில் ஒருவர் மற்றவரைப் பார்த்து “நீ என்ன நினைக்கிறாய்” என்று கேட்பதில்லை. “உனக்குத் தெரிவது என்ன?” என்றே கேட்கிறார்கள். தங்கள் அகக்காட்சியில் கண்டதையே முடிவானதாகக் கொண்டவர்கள் அவர்கள். அறிவால் புரிந்ததை முடிவாகக் கொள்ளாமல், ஆன்மிக விளக்கத்தால் கண்டதையே முடிவாகக் கொண்டார்கள்.

*********



book | by Dr. Radut