Skip to Content

02. சாஸ்திர ஞானம்

2. சாஸ்திர ஞானம்

தத்துவ ஞானமான சாஸ்திரமும், மனித முயற்சியின் புனித உருவமான உற்சாகமும், சாதகனின் பயிற்சியை யோகானுபவமாக்கும் குருவின் அருளும், இவற்றையெல்லாம் பூர்த்தி செய்யும் காலத்தின் கதியும் ஒருங்கிணைந்து யோக சித்தியை உருவாக்குகின்றன.

சிந்தனைக்குரிய மனித ஜீவனின் ஹிருதயத்தில் வேத இரகஸ்யம் எனும் பத்மம் மொட்டாக முளைத்துள்ளது. பரமனின் கடாட்சம் பத்மத்தின் மீது பட்டவுடன் இதழ் இதழாக மொட்டு கட்டவிழ்கிறது. பரமனே பத்மத்தின் பிதா, பரம்பொருளின் திருவுள்ளமே மனித உள்ளத்தின் மலர்ச்சி. திருவுள்ளமின்றி இதழ் அவிழ்வதில்லை. திருவுள்ளத்தால் தீண்டப்பெற்றால் மலர்வதைத் தடை செய்ய ஒருவரில்லை.

ஆன்மாவுக்கு ஆசிரியன் என்றொருவன் ஏற்படவில்லை. ஞானம் என்னும் மலருடைய மணம் உள்ளிருந்து வரும் உயர்ந்த நறுமணமே. என் இருதய பொக்கிஷத்தை எடுத்து இரகஸ்யத்தை வெளியிட்டபொழுது உன்னைக் கண்டுகொண்டேன். நீயே நான் என்றுணர்ந்தேன். நானாக இருக்கும் உன்னை நாம் மலர்ந்து மணம் வீசி உணர்ந்து உயர்வதே யோக வாழ்வின் சித்தி என அறிந்தேன்.

திருக்கதவம் திறக்க வானுலக அசரீரி அடியெடுத்துக் கொடுப்பது வழக்கம். வையகத்தின் குரல் வானுலகத்தின் குரலாக ஒலிப்பதும் உண்டு. இருதய பீடத்திலிருந்தே இக்குரல் எழுவதுண்டு. இது அரிது. கிருஷ்ண பரமாத்மாவாவும், பரமஹம்சரும் குருவை நாடிப் போனது தெய்வத்தின் குரலைக் கேட்கவே. அவதார புருஷர்களாகிய அவர்கள் கேட்ட குரலே முழு அனுக்கிரஹத்தையும் கொடுத்தது. பரம்பரையாக வந்த பயிற்சி சாதாரண சாதகனுக்குப் பலிக்க நாளாகும். நீண்ட பாதையானாலும், நெறி தவறாத ஒன்றாகும் அது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆண்டு அனுபவித்து சோதனை செய்த சிறப்புடையது தவறாத நெறி எனப்பட்டது. பயமின்றி பயிற்சி செய்யக் கூடியது. பூரண ஞானத்தைத் தேடும் சாதகனுக்கு உன்னதமான சாத்திரங்களும் முற்காலத்தவை என்பதனால் முடிவானதொன்றாய் இருக்க முடியாது. எழுத்திலுள்ள அனைத்து சாத்திரங்களும் எட்டமுடியாத பூரணனை நாடுபவனே பூரணயோக சாதகன். உன்னதமான உபநிஷதங்களும், மஹோன்னதமான கீதையும், மகுடமான வேதமும் அவனை ஆன்ம வாயிலுக்கு அழைத்துச் செல்லலாம். வாயிலைத் தாண்டி, சாஸ்திரங்களைக் கடந்த நிலையிலே அவன் தேடும் ஞானம் இருக்கின்றது. பரம்பொருளே அவனது சாஸ்த்திரம், பரமனே அவனுடைய யோகம்.

வகுக்கப்பட்ட வழியும், வழிவழி வந்த பழக்கமுமே சாஸ்த்திரம் என வழங்குகிறது. சித்தியடைந்த குரு வகுத்ததே வழி. அதனின்று பிறழ்வது தவறு. புதிய கருத்தைத் தெரிவித்தால் சாஸ்திரத்திலில்லையே என்பது வழக்கம். புதிய யோக அனுபவத்தைத் தடைசெய்யும் நியதி என்று ஒன்றில்லை. யுகாந்திர காலமாக சோதனை செய்த பெருவழி சிஷ்யனுக்குத் தெய்வீக பொக்கிஷம். அதன் பயன் அளவற்றது. ஆனால் அதை மாற்றவும், சிறப்பாக உயர்த்தவும் முடியும். பதஞ்சலியின் மார்க்கத்தை விட்டு வேறுவழியாக இராஜ யோகத்தையும் பயில முடியும். பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், கர்ம மார்க்கமாகியவற்றை பல்வேறு பாதைகளிலும் காணலாம். பொதுவான யோக அடிப்படை ஒன்றே எனினும், மார்க்கங்களும், மற்றவையும் மாறுவது தவறில்லை.

பூரணயோகமென ஆரம்பித்தால், சட்டதிட்டங்களுக்கு அது கட்டுப்பட முடியாது. கடந்த கால ஞானம் உயர்ந்ததானாலும், எதிர்காலத்திற்கு தேவையானதை புறக்கணிக்க முடியாது. தான் மலர்ந்து பூரணம் பெற, முழுச்சுதந்திரம் தேவை. கண்ட காட்சிகளை கடந்த கால நியதிக்கு உட்படுத்த இயலாது. வானுலக மோட்சமே குறியில்லாது, பூவுலக வாழ்வை யோகம் பூரணமாக அரவணைக்கும் பொழுது, அதற்குரிய பாதையை செப்பனிடுதலே அவசியம். பெரியோராயினும், பெருமையுடைய பெரிய பாதையாயினும், வேகமாகப் பயணத்தை முடிப்பது குறிக்கோள் அல்ல என்பதால் அவர்களைப் பின்பற்றி அவர் வகுத்தவழி செல்வதை இரண்டாம் பட்சமாக்கி, பூவுலகில் பூரணனைத் தேட புதுப்பாதையை ஏற்படுத்துவது அவசியம்.

மனித வாழ்வை வானுலக வாழ்வாக்கி வாழ்ந்த வேத காலத்து ரிஷிகள் தூரத்து நட்சத்திரங்கள். அவர்களுடைய வேத வாக்கு வேத இரகஸ்யமாயிருக்கிறது. அவர்களுடைய சொல் வழக்கில் இல்லை. யுகங்கள் கடந்தால், யுகதர்மம் மாறி விடுகிறது. வேத ரிஷிகளுடைய இலட்சியத்தை இன்றைய உலகுக்கு புரியும் வகையில் புதிய பாதை அமைப்பதே, யோக சாதகனின் பணி.

பரமனை மட்டுமே விழையும் சாதகன் பக்திக் குரலெழுப்பி பரமபதமடைய விழையவில்லை. தவத்தின் சிறப்பால் வையகத்தைத் திறந்து இறைவன் திருவடியைத் தீண்டி சித்தி பெற்று மகிழும் நிலையிலில்லை சாதகன். பரமனை அழைத்து உன் திருக்கதவம் தாள் திறந்து நானிருக்கும் இடம் நீ வந்து, மனித வாழ்வில் உன்னை மலரச் செய்து, பூலோக வாழ்வை, புனித யோக வாழ்வாக மாற்ற வரமருள்வாய் என்று தவக்குரல் எழுப்புவது பூரணயோகம். தனி மனிதன் தன் ஆன்மாவை யோக சித்தியால் கண்டு பிரபஞ்சத்தின் பிரதிநிதி தான் என அந்த ஆன்மாவையுணர்ந்து பரம்பொருளின் ஏகபோக பிரதிநிதியாகவும் தன் ஆன்மா இருப்பதை உணர்வதே பூரண யோகத்தில் சித்தி எனக் கருதப்படும்.

அனந்தனை அடைய அமைத்த பாதையில் ஆயிரம் பேர் நடக்கலாம். ஆன்மிக பெருமக்கள் நடந்ததால் அந்த இராஜ பாட்டை உன்னதம் பெறலாம். ஆனால் அது அகன்ற பாதையில்லை. ஓர் ஆத்மா மற்றதன் பின் செல்லும் ஒழுங்கான பாதை. அதனால் சிறிய பாதை. பரமனை பூவுலகுக்கு அழைக்க குறுகிய பாதையைப் போட முடியாது. நாம் மேலே போகப் போடப்பட்ட பாதை வழியாக அவன் திருநடம் புரிந்து திரும்பி வர வேண்டுமென்பதால், பூவுலகம் முழுவதும் அவன் திருக்கோயிலாகவும், பூவுலக வாழ்வு முழுவதும் அவனுக்குரிய பாதையாகவுமாக வேண்டுமானால், பூரண யோக சாதகன் ஒவ்வொருவரும் தனக்கென ஒரு புதிய பாதையை அமைத்துக் கொள்ள வேண்டும். அவன் முழுவதுமாக தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது ஒரே ஒரு சட்டத்திற்கே. அதுவே பூரண சுதந்திரமாகும்.

பூரணன் மலர்ந்த பூவுலக வாழ்வே மனித இலட்சியத்தின் மகோன்னதச் சிகரம்.

உத்சாகம்:

உணர்ந்ததை உடைமையாக்குவது உத்சாகமே. மனதால் புரிந்துகொண்டதை வாழ்வில் பெற உடல் உழைப்பு எப்படி தேவையோ அதேபோல் அந்த உழைப்பை நல்க உள்ளத்தின் உத்சாகம் அவசியம். வேத ரகஸ்யமே சாஸ்த்திர ஞானம் என முழுமையாக உணர்ந்த சாதகன் தான் வேத ரகஸ்யத்தின் பிடிப்பில் இல்லை; தன் பிடியிலும் அந்த இரகஸ்யம் இல்லை என்பதை அறிந்த பின், தானிருப்பது வாழ்க்கையின் கிடுக்கிப் பிடியில் என்று கண்டு கொள்கிறான். பக்குவமிருந்தும் இதைக் கண்டு கொள்ளாத பக்தனை இறைவன் தடுத்தாட்கொள்கிறான். பூரண யோகத்தின் முதற்படிகள் அநேகம். அவற்றில் ஒன்று சாதகன் தன்னைத்தானே வாழ்க்கையின் பாதையிலிருந்து தடுத்து, இறைவனின் பாதைக்குச் செல்ல ஆட்கொள்வதாகும். இறைவனே வாழ்வில் செய்யும் ஒரு காரியத்தைப் பூரணயோக சாதகன் தானே இறைவனின் கடமையை ஏற்றுக்கொண்டு செயல்படுகிறான்.

பெற்ற ஞானம் பெரியதான வேத இரகஸ்யம். வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும் கடந்து, பரமனாகவேயுள்ள பூரண ஞானம், பூரண யோகத்திற்குரிய ஞானம். ஞானம் யோக சித்தியை அளிக்க மனித முயற்சியான உத்ஸாகம் தேவை. பெரிய ஞானத்தை வாழ்வில் பலிக்கச் செய்யும் உத்ஸாகம் பூரணமானதாக இருக்க வேண்டும். மன, மொழி, மெய்யின் திறனனைத்தும் வெளிப்பட்டு, திரண்டு, விரைவடைந்து, வீறுகொண்ட ஒன்றாக ஆகும் நிலையில்தான் யோகசித்தி கை வர உத்சாகம் உபயோகப்படும். உத்சாகத்தின் தீவிரம் உண்மை நிலையை நிர்ணயிக்கும். ஆர்வத்தின் தீவிரம், மனநிலையின் திட்பம், செயல்திறனின் வேகம், முயற்சியின் முதிர்ந்த நிலை, குறிக்கோளையடைய வேண்டி நிற்கும் நெறி ஆகியவை சேர்ந்து என்னைத்தினிய இருந்தது என் நெஞ்சு என்ற நிலையை எய்தினால், உத்சாகம் அதற்குரிய இலக்கணத்துடனிருக்கிறது என்று பொருள். அகந்தையின் அமைப்பு அனைத்து செயல்களுக்கும் பரவி தன் சாம்ராஜ்யத்தின் வெற்றிக் கொடியை எங்கணும் நாட்டியிருப்பதால், மனிதன் தன் போக்கைத் திருப்பி, உள்ளுறை இறைவனை அடைய சூறாவளியாகச் செல்லும் பொழுது அகந்தையின் வெற்றிக் கொடிகள், அரண்கள், அமைப்புகள், அத்தனையும் சிதறுகின்றன. சிற்றூரின் வெற்று மதில்கள் சரிந்தபின், எல்லையில்லா சாம்ராஜ்யத்தின் பெருவெளி தெரிகின்றது. உடைந்த அரண்கள், அனந்தன் உள்ளேவர வழிவகுக்கின்றன. இதுவரை ஆணவத்திற்குக் கப்பம் செலுத்தியவன், அனந்தனின் வாரிசு எனக் கண்டு கொள்கிறான்.

அன்னைக்கு ஒரு விஷயமாகப் பிரார்த்தனை செய்தால், பிரார்த்தனை அதற்குரிய இலக்கணத்துடன் அமைந்தால், அன்னை பிரார்த்தனையை பலவிதமாகப் பூர்த்தி செய்வார். அவற்றுள் ஒன்று, முடிவான பலனை முதலிலேயே கொடுப்பது. உலகத்திலில்லாத ஒன்று இந்த முறை. ஒரு காலேஜில் சேர ஏராளமான போட்டியிருந்தால், இடம் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனைக்குப் பலன் இடம் கிடைப்பதுவே. காலேஜில் பட்டம் பெற்று பின்னர் அடைய வேண்டிய பலனை எப்படிச் சேரும் பொழுதே கொடுக்க முடியும் என்பது நமது ஐயம். இலட்ச ரூபாய் முதலிட்டு, 5 வருஷங்களுக்குப் பின் ஆண்டுக்கு 1,30,000 வருமானம் வரும் எனக் கணக்கிட்டு ஆரம்பித்த திட்டம் பலித்தால் அதை அதிர்ஷ்டம் என்போம். அதில் பாதி முதலுக்கு 1¼ மடங்கு திட்டம் முதல் ஆண்டிலேயே வருமானத்துடன் அமைந்து 5-ஆம் வருஷம் இட்ட முதல் 20 மடங்கு மதிப்பைப் பெற்றது அன்பர் அனுபவம். இது எப்படி நடக்கும் என்பது அடிப்படை ஐயம். அன்னையின் யோகத்தின் ஆரம்ப நிலையில் சாயுஜ்யம் அமைய வேண்டும் என்கிறார். அனந்தனுக்கு வாரிசானால் அந்த உரிமையைப் பெற 3 கட்டங்களுக்கு முதற்கட்டம் ஆணவத்தை நீக்கி, அவனுடன் ஒன்றி ஓரளவு சாயுஜ்ய நிலை ஏற்பட வேண்டும். அடுத்த கட்டத்தில் அவனுடைய பிரதிநிதியாகவும், கடைசியில் அவனேயாகவும் நாம் செயல்பட வேண்டும் என்கிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர். யோகம் சித்தி பெற்ற நிலையில் கிடைக்கும் சாயுஜ்ய நிலை, பூரண யோகத்தின் முதல் நிலையிலுள்ள 3 கட்டத்தில் முதற் கட்டத்தில் கிடைக்கிறது என்றால், அன்னை அதைச் சாதகனுக்கு வழங்குகிறார். அந்த அமைப்பு இந்த யோகத்திற்கிருப்பதால், முடிவான பலனை முதலிலேயே பெற முடிகிறது. பூரண யோகத்தில் ஒரு பலனைப் பெற அதற்குரிய மனநிலை இருந்தால் போதும் என்பது அடிப்படைக் கருத்து. முடிவான நிலைக்குரிய மனநிலை முதலிலேயே இருந்தால், முடிவான பலனைக் கொடுக்கும் திறன் உலகில் இல்லை. பூரண யோகம் அந்தத் திறனை உலகுக்குக் கொண்டு வந்துள்ளது.

சாயுஜ்யம் என்பது பரமனோடு ஒன்றிய நிலை. ஓரளவு அந்நிலை வராமல் அவன் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்ய முடியாது. சாயுஜ்யம் பலித்த அளவில் நம் முயற்சிக்கு வேலையில்லை. பலிக்காதவரை நம் சொந்த முயற்சி தேவை.

ஒரு சர்க்கார் செலவு செய்யும் அவ்வளவு பணமும் மக்களிடம் வசூலிக்கப்பட்டதே. சர்க்காருக்காகச் சொந்தமான வருமானம் என்று ஒன்றில்லை. அதுபோல் பூவுலகில் நடைபெறும் செயல்கள் அனைத்தும் இறைவனுடைய செயல்களே. செயல்களின் பிறப்பிடம், உறைவிடம் அவனே. அவனே செயல்களின் சிற்பி, தலைவன். தான் எனும் உணர்வை அகம்பாவம், ஆணவம், அகந்தை என்று குறிப்பிடுகிறோம். உலக நிகழ்ச்சிகளிலும், மனித முயற்சிகளிலும் ஆணவம் வராத இடமில்லை. வந்து ஆக்கிரமித்துக் கொள்ளாத அலுவலில்லை. இறைவன் செயலை, தன் செயலாக சுவீகாரம் செய்வதே அகந்தையின் இயல்பு. உண்மையில் அகந்தையின் பங்கு உபத்திரவமே. எல்லா செயல்களும் அவனிடமிருந்து பிறப்பதுபோல், உபத்திரவங்கள் மட்டுமே ஆணவத்தின் பங்காக அமைந்துள்ளது. அதற்கு கதிமோட்சமில்லை. சேவை செய்ய அதனால் இயலாது. விலகி நிற்பதே அதன் சேவை. தன் உண்மை நிலையையுணர்ந்து, நிரந்தரமாக உலக மேடையினின்று விலக முன்வந்து, தன்னை அழித்து, தன் உருவைக் கரைத்து, மறைவதே ஆணவம் இறைவனுக்குச் செய்யும் சேவையாகும். அழிவே அதன் ஆத்மானுபவப் பூர்த்தி. கரைந்து மறைவதே ஆணவத்தின் கடைசி கடமை.

மூன்று கட்டங்களையும் நிதானமாகவும் முறையாகக் கடந்து செயல்வதே நல்லது. அவசரம் கருதி அவற்றின் அவசியத்தைப் புறக்கணித்தல் கூடாது. கடைசி கட்டம் முதலிலேயே கைவரப் போதுமான சூழ்நிலையிருந்தாலும், மனித சுபாவத்தின் தன்மையையுணர்ந்து படிப்படியாக முன்னேறுதல் நல்லது. பரம்பொருளை புத்தி பூரணமாக அறிந்து கொண்டாலும் அது அறிவின் ஆற்றலாகுமே தவிர சுபாவத்தின் பக்குவத்தால் பெறும் சித்தியை அளிக்க வல்லதல்ல. பக்குவம் பலித்தாலும், பரமனின் கருவியே நாம் என்று முடிவாக உணர்ந்தால் அது ஆபத்திற்கு வித்தாகும். பக்குவம் பலித்த நிலையிலிருந்து சித்தி கைவரப் பெறும் வரை உள்ள தூரம் அதிகம். இடையே செய்யக்கூடிய கடமைகள் அதிகம். பக்குவம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தபின் இலட்சியத்தை அடைவதற்குள் உள்ளது நீண்ட யாத்திரை. ஒளிக்கே உரிய பாத்திரமாகும்வரை நம்முள் ஒளிந்து கொண்டு நம் உணர்வையும், உயிரையும் சுவைப்படுத்தும் இருளின் சுழல்களிலிருந்து நிரந்தரமாக விலகும் முயற்சியை பூரணமாகச் செய்து முடிக்க வேண்டும். அதனால் படிப்படியாகச் செல்வது அவசியம்.

நம் உடலிலுள்ள எல்லா சக்திகளும் அகந்தையின் முழுப்பிடியில் இருக்கின்றன. இவற்றை எல்லாம் ஒன்று ஒன்றாய் எடுத்து அதன் பிடியை விட்டு விலக்கி, ஒளியின் பாதைக்குத் திருப்புவது அவசியம். அதன்பின் அகந்தையை மறுத்து, ஒளியை மட்டும் ஏற்றுக் கொள்ளும் பயிற்சியை நாம் அவற்றுக்கு அளிக்க வேண்டும். அடுத்த கட்டத்தில் நாம் இறைவனின் பிரதிநிதியாகச் செயல்பட முனைந்து வெற்றி பெற வேண்டும். அகந்தையின் பிடியினின்று திரும்பிய முதல் நிலையைத் தாண்டி, பிரதிநிதியான இரண்டாம் நிலையைக் கடந்துவர நாம் நம்மை இறைவனே என உணரவேண்டும். நம் சக்திகளை தவறான பாதையிலிருந்து இறைவன் பக்கம் திருப்பினோம், இறைவனின் பிரதிநிதியாக அவன் திருவுள்ளத்தைப் பூர்த்தி செய்தோம். இனி, கடைசி கட்டத்தில், நாம் பிரதிநிதி மட்டுமல்ல, நாமும் இறைவனும் ஒன்றே என்ற நிலை ஏற்பட்டு, நமக்கும் இறைவனுக்கும் உள்ள இடைவெளி மறைந்து நம் செயல் இறைவன் செயலாக நடைபெற வேண்டும்.

ஜகத்குரு:

சாஸ்த்திர ஞானம் நம்முள் உறைவதைப் போல, இருதயக் குகைக்குள் இருக்கும் ஜகத்குருவே சாதகனுக்குக் குருவாகும். அவனுடைய ஆத்ம ஜோதியில் மனிதப் பிறப்பின் காரிருள் கரைகிறது. காலத்தாலும், கர்மத்தாலும் கட்டுப்படுவது மனித வாழ்வு. காலத்தையும், கர்மத்தையும் கடந்த சுதந்திரம் ஆத்ம ஜோதிக்குரியது. ஆனந்தம் அவன் பிறப்புரிமை. பரமனையும் அவனது சிருஷ்டியையும் இணைக்கும் தெய்வீக அன்புக்கு பிறப்பிடம் அவனே. ஜகத்குரு அழிவற்றவன். ஜகத்குருவின் சுபாவம் இவையெல்லாம் அடங்கியவை. பூவுலக வாழ்வை தன் சுபாவத்திற்குரியதாக மாற்றுபவன் அவன். ஆன்மா சாயுஜ்ய பதவியடைய வேண்டி தன் கருணா கடாட்சத்தால் ஆன்மாவை அணைத்துக் கொள்கிறான்.

உள்ளுறையும் ஜகத்குருவை முழுமையாகக் கண்டு அறிந்து அதன்படி நடப்பது பூரண யோகத்திற்கு முழு முதற்காரியமாகும். அவன் எங்கு வெளிப்படுகிறான், எப்படி வெளிப்படுகிறான்? இயற்கையின் எல்லா செயல்களிலும் வெளிப்படுவது அவனே. வாழ்வின் வழி அவன் வழி. இயற்கையின் இன்றியமையாத நியதிகள் அவன் தன்னை மனிதனுக்கு அளிக்கும் முறைகள். செடியை சிறியது எனவும், மரத்தை பெரியது எனவும் நாம் கருதுகிறோம். வெற்றியை உயர்ந்ததாகவும், தோல்வியை தாழ்ந்ததாகவும் நாம் நினைக்கின்றோம். மனிதனுக்கே வெற்றி, தோல்வி என்பது; உயர்ந்தவை, தாழ்ந்தவை என்றுண்டு. தான் எனும் அகந்தையுள்ளவரை நல்லது, கெட்டது; வெற்றி, தோல்வி என்ற பாகுபாடுண்டு. இவை அகந்தையின் அறிவு நிலைக்கேற்றவை. ஆணவ மலம் கரைந்த இடத்து ஆண்டவன் நிற்கிறான். நாம் வெற்றியாகக் கண்டதும், தோல்வியாக நினைத்ததும் இறைவனைப் பொறுத்தவரை இரு செயல்களாம். நமக்குள்ள பெருமையும், சிறுமையும் பரமனுக்கில்லை. நடப்பவை அவன் செயல்கள். இயற்கையின் செயலாற்றும் அமைப்பு அவன் தொழிற்படும் முறை. தோல்வியைத் தன் குறையாக மனிதன் நினைத்தாலும், அகந்தையுள்ளவரையே அப்படி நினைக்கின்றான். அகந்தையொழிந்து, அவனை ஏற்றுக்கொண்ட நிலையில், செயல்கள் அவனுடையவை என்றால், குறைக்கு இடம் ஏது? குறைக்கும் உரிமையுடையவன் அவன் அல்லவா? என்னை ஆட்கொண்டபோதே என் உடமையெல்லாம் கொண்டாயல்லவா? இனி என் செயலுக்கு நாயகன் நீயல்லவா? எனக்குப் பிழையேது? பொறுப்பேது? நானெங்கேயிருக்கிறேன்? என் பிழைகளுக்கெல்லாம் நீயேயல்லவா பொறுப்பு; என்ற நிலையிலே, யோகம் பூரணமடைகிறது.

முழு முயற்சி செய்து அவனைக் காண முனைந்தால், முனைவது நாம் என்ற உருவில் அகந்தையேயாகும். அது சுறுசுறுப்பு அடைந்தபின் நான் காண்பது அனந்தனில்லை, அகந்தையே. முயற்சியின் வேகம் பலனைப் பெறத் தடையாக இருக்கும் விந்தையைக் காண்போம். குழப்பம் தெளிந்து, முயற்சியின் சூடு தணிந்து, அமைதியுற்று தெளிவடைந்தபொழுது உள்ளொளி பெருகி வருவது தெரியும். இடறி விழுந்தவையெல்லாம் உரிய இடத்திற்கு வருவதற்காகத்தான் என்ற அறிவு ஏற்படும். வளைந்து, நெளிந்து சென்ற பாதையெல்லாம் இறைவன் நமக்காக, நம் சுபாவத்தின் தனிச்சிறப்புக்காக அமைத்த இலட்சியப் பாதை என அறிவோம். இதைவிட விரைவாக வந்திருக்க முடியாது எனப் புலப்படும். தோல்வி என்று கண்டு நாம் துவண்டு போன நிகழ்ச்சிகள் நம் லட்சியத்தையடைய செய்த சிறப்பான சேவையை உணருவோம். அந்த தோல்வி அன்று ஏற்பட்டிராவிட்டால், இன்று பரமன் உள்ள பதவிக்கு வந்திருக்க முடியாது என்று புலன்களுக்கும் புலப்படும். அன்று தோல்வியாக நாம் உணர்ந்தது இன்றைய வெற்றிக்கு இன்றியமையாத அஸ்திவாரம். வெண்கலம் போன்ற இன்றைய உடல் திறம் ஏற்பட அன்று தாயார் இட்ட கசப்பு மருந்துகள் வழிவகுத்தன. மருந்து சாப்பிட கூச்சலிட்ட குழந்தை இன்று தன் உடல் நலத்தின் உயர்வைப் பெருமையாக உணர்கிறது.

பரமன் இன்று நம் புத்தியில் புலப்படுகிறான். நம் எண்ணத்திற்கு உரு அளிப்பவன் இறைவனே. செயலுக்கு நம்மை உந்தும் சக்தி அவனுடையதே. இறைவனின் அன்பே இதயத்தின் எழுச்சியாக பெருகுகின்றது. தலைவனாகவும், நண்பனாகவும், குருவாகவும், காதலனாகவும் நாம் காண்பது இறைவனையே. நம் ஆன்மாவில் சேர்ந்து வரும் புனித ஊற்றும், அது பரவும் தெய்வீக வாழ்வும், அற்புதமாக மிளிரும் ஆயிரம் நிகழ்ச்சிகளும் நம் செயல் அல்ல. பூரணத்திற்குரிய புனிதனுடைய திருவுள்ளமே அவை. ஞானியின் ஈஸ்வரனும், நாத்திகனின் பகுத்தறிவும், யோகத்தின் தலைவனும் இறைவனே.

அவனை ஞானக் கண்ணால் கண்டு, சூட்சும புலன்காளலறிந்து, ஜீவனால் அவனுடன் ஐக்கியமாகி, புற நிகழ்ச்சிகளை அவனது விஸ்வரூபமென தெளிந்து இறைவனாக இப்பிறப்பில், இவ்வுடலில் மாறி திருவுருமாற்றம் அடைவதே மனிதனுக்குப் பிறவியின் பெரும் பயனாகும். அவனுடைமையான நாம் அவனை நம் சொந்தத் தனியுடைமையாக்குவதே நம் சாம்ராஜ்யத்தின் வெற்றிக்கொடி. கனவிலும் நனவிலும், விரைந்த செயலிலும், அயர்ந்த நித்திரையிலும், இரண்டறக் கலந்த நிலையிலும், பிரிந்து நின்ற பிறப்பிலும், இறைவனின் அரவணைப்பைப் புல்லரிக்க உணர்வதே ஜீவன் முக்தி. பூரண யோகத்தின் முழுநிலை இதுவே. பிரகிருதி எனும் இயற்கை தன்னுள் பொதிந்துள்ள இறைவனின் இரகஸ்யத்தை நம்முள் வெளிப்படுத்தும் விந்தையே பூரண யோகத்திற்குரிய தவம். மனித வாழ்க்கை இறைவனின் அருளாட்சி செய்யும் ஆன்மிக வாழ்க்கையாக மாறும் பாதை இது.

கண்ணால் கண்டதை நம்புவதையே பகுத்தறிவு என நாம் கூறுகிறோம். கண்ணுக்குப் புலப்படாத ஒன்றை நம்புபவனை மேதை என நாம் விவரிப்பதில்லை. மூட நம்பிக்கையுள்ள தற்குறி என உணர்கின்றோம். எனவே சித்து விளையாடும் சுவாமியாரை உலகம் சக்தியுள்ள கடவுளாக எளிதில் ஏற்றுக்கொள்ளும். ரமண மகரிஷியின் மகத்துவம் எவருக்கும் புரியவில்லை. இலண்டனிலிருந்து ஒருவர் வந்து மகரிஷியின் பெருமையைச் சொன்ன பிறகே உள்ளூரில் இருப்பவர்களுக்கு யோசனை ஏற்பட்டது. பரம்பொருளின் செயலும், அற்புதங்களும் பகுத்தறிவுக்குப் புலப்படாத ஒன்று. மனிதனுக்குரிய தலையாய சிறப்பு அவனது புத்தி. இன்று மனிதனுள்ள நிலையில் புத்தி நூற்றுக்கு நூறு பங்கு அகந்தையின் ஆட்சியிலிருக்கிறது. அகந்தை இன்று விலகினால்தான் புத்திக்குத் தன்னிலை விளங்கும். பொய்யை உபயோகித்து மெய்யைத் தேடுவது அகந்தை. அகந்தை ஆனந்தத்தை நாடினால் அவஸ்தையை தன் துணையாகக் கொள்ளும் திறனுடையது. நிறைவை நிரந்தரமாக அடைய குறையைக் கருவியாகக் கொண்டது அகந்தை. அகந்தையின் பார்வை சாளேஸ்திரம். உயர்ந்த ஆரோக்கியத்தைப் பெற மதுவை நாடுபவனைப் போன்றது அவன் செயல். லட்சியப் புருஷனாக வேண்டி லஞ்சம் வாங்குவதைப் போன்றது மனிதனுடைய அகந்தை. அகந்தையொழிந்த பின்னரே புத்திக்கு பூரண சுதந்திரம் ஏற்படும். புத்தியை பகவான் ஸ்ரீ அரவிந்தர் அறியாமையின் கருவி என்கிறார். அகந்தை அர்த்தமற்றதென்றால், புத்திக்கு பூரணமில்லை என்கிறார். அகந்தையை விட்டொழித்தால் நானில்லை என்பது பலர் நிலை. புத்தியைப் பயன்படுத்தவில்லை எனில் பூரண மந்தம் மனதை ஆட்கொள்ளும் எனப் பயப்படுகிறோம். 50 ஆண்டு தவ முயற்சியால் சித்தி பெற்று அடைய முடியாத உச்சகட்ட மௌனத்தை ஸ்ரீ அரவிந்தர் அன்னைக்கும், மற்றொருவருக்கும் அவர்கள் கேட்காமல் கொடுத்து அருளினார். தன் தலையில் ஏதோ அற்புதம் நடப்பதாக அன்னை உணர்ந்தார். தான் படித்த பதினாயிரம் புத்தகங்களுடைய படிப்பு கரைந்து புத்திக்கு விடுதலை அளிப்பதைப் பார்த்தார். இது தெய்வ அனுக்கிரஹம் என்றிருந்தார். அசையாமல் நன்றியுணர்வுடன் உட்கார்ந்திருந்தார். புத்தியின் அஸ்திவாரங்கள் ஆட ஆரம்பித்தன. 10,000 வருஷமாக சிருஷ்டிக்கப்பட்ட மனித மனத்தின் அஸ்திவாரங்கள் ஒவ்வொரு மனிதனுக்கு புத்தியாக அமைந்துள்ளதை அறிந்தவர் அன்னை. அவை வீறல்விட்டன. அன்னை பொறுமையாக இருந்தார். வெடித்து விழுந்தன. அன்னை நன்றி செலுத்தினார். அருள் வெள்ளம் அன்னையின் தலையில் பாய்ந்து சிதறிய கோட்டையின் அரண்களையும், அரண்மனையையும் சுவடு தெரியாமல் அடித்துக்கொண்டு போயின. அன்னையின் புத்தி அதன் அறியாமையிலிருந்து விடுபட்டு, அகண்ட மௌனத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டது. இது இப்படியே என்றென்றும் நிலைக்க வேண்டுமென அன்னை மௌனத்தின் அடித்தளத்திற்கு கீழேயிருந்து கருதினார். அருள் சுரந்து, நினைவிழந்து, அறியாமை அகற்றப்பட்டு, அதன் அஸ்திவாரங்கள் இடிக்கப்பட்டு, அருள் வெள்ளத்தால் அவற்றின் சுவடுகள் அழிக்கப்பட்டு அன்னை அகண்ட மௌத்தின் பூரணப் புதுமையை முழுமையாகப் பெற்றார். பெற்றவர் தரையிலிருந்து எழுந்து சாஷ்டாங்கமாகப் பகவானுக்கு நன்றி கலந்த சரணாகதியை நாதத்தின் கீழிருந்து சமர்ப்பித்தார். பகவான் சரணாகதியின் பூரணத்துவம் மனித ஜீவனில் சிருஷ்டியின் ஆழத்திற்குச் சென்றுள்ளதை முதல் முறையாக அன்னையின் நன்றியுள்ள நமஸ்காரத்தில் கண்டேன் என்றார். தானறியாத, தனக்குக் கேட்கத் தெரியாத பரம்பொருளின் வரப்பிரஸாதமாகிய அகண்ட மௌனத்தைப் பெற்ற அடுத்தவர் தன் மனம் மடைமையின் இருப்பிடமாக அறிந்து வீறென்று குரல் எழுப்பி அறிவை இழந்து இருளில் தள்ளப்படுகிறேன் என்று கூக்குரலிட்டார். பகவான் கொடுத்த அத்தனையும் விலகியது. அவர் முழு திருப்திபடும் அளவுக்கு அவருடைய சொந்த புத்தி திரும்பி வந்தது. ஸ்ரீ அரவிந்தரிடம் நேரடியாக வரம் பெற்ற பேரறிஞர் நிலையிது. சாதாரண மனிதனால் அகந்தையை விட முடிவதில்லை. அதை விட்டாலும் புத்தியை விட்டொழிக்க முடிவதில்லை. அவனால் கண்டதையே நம்ப முடியும். காணாத ஒன்றை ஏற்றுக்கொள்ளும் திறனில்லை அவனுக்கு. பரம்பொருளும், அவன் செயலும், அவனுடைய அன்பு நிறை அற்புதங்களும் மனிதன் கண்ணுக்குப் புலப்படுவதில்லை.

எனவே கண்ணுக்குப் புலப்படும் ஒன்றை நாடிச் செல்கிறான் மனிதன். அவன் நிலையறிந்து பரம்பொருள் அவதாரமாக அவன் முன் வருகிறார். பலர் அதை ஏற்றுக் கொள்கின்றனர். கிருஷ்ணாகவும், புத்தராகவும் பரம்பொருள் மனிதன் முன் காட்சியளிக்கின்றார். பரமனை அறிய முடியாதவர்களுக்கு கிருஷ்ண லீலை இதமாக இருக்கின்றது. புத்தர் உபதேசம் புரிகிறது. அவர்களைத் தெய்வமாக ஏற்றுக்கொள்ள முடிகிறது. இஷ்ட தேவதையாகவும், காளி என்றும், அம்பாளென்றும், லலிதா என்றும் பரம் மனிதனை நாடி வருகிறான். இஷ்ட தேவதைகள் சிறு தெய்வங்களில்லை. பரமனுடன் நேரடியான தொடர்புள்ளவை. இஷ்ட தேவதைகள் ஆன்மிக முயற்சியின் அகன்ற குறிக்கோளையும், உயர்ந்த உன்னத இலட்சியத்தையும் சேர்ந்து பூர்த்தி செய்யும் திறனுடையவை. அத்திறன் உச்சகட்டத்திலிருந்தாலும், இஷ்ட தேவதை அவற்றை அந்த ஒரு பக்தனுக்கு மட்டுமே வழங்க முடியும். அவன் மூலம் மற்ற ஒருவருக்கோ, உலகத்திற்கோ வழங்க முடியாது. இஷ்ட தேவதையின் நிலை உச்சகட்ட உயர்வுள்ளதென்றாலும், பூரண யோக இலட்சியத்தைப் பூர்த்தி செய்யும் திறனுடையதல்ல.

அடுத்த கட்டத்திலுள்ள மனிதன் உயர்ந்த மனப் பாங்குடையவனெனினும் ஆரம்ப கட்டத்திலுள்ள பாமரன். பாமரன் எனினும் பரமனை அறியும் பக்தித் திறனுடையவன். பக்திக்கு சிறப்பிருந்தாலும், திறமைக்குச் சிறப்பில்லை என்பதால் அவனால் அவதாரத்தையும், இஷ்ட தேவதையையும் நாடி பலன் பெற முடியாது. அருகில் அமர்ந்து, அவர் சொல் கேட்டு, குரு எனச் சொல்லி, கூப்பிட்ட குரலுக்கு குற்றேவல் செய்து, அன்பு செலுத்தி, பாதங்களில் வீழ்ந்து பணிந்து, உள்ளத்தால் உணர்ந்து, மனத்தால் வழிபட்டு, வாழ்க்கையில் விரும்பி ஏற்றுக்கொள்ளக் கூடிய குருவை நாடுபவன் பாமரன். பரமன், குருவாக வந்தும் பக்தனுக்கு அனுக்கிரஹம் செய்கிறார். பூரண யோகத்திற்குடைய குரு உள்ளுறை ஜகத்குருவே என்பதால், சாதகன் கண்ணைத் திறந்து ஜகத்குருவைக் காணும்படிச் செய்வதே இந்த மனித குருவின் கடமை.

பக்தன் பவித்திரமாக எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலிருப்பதால், சொல்லால் சூழப்பட்ட சூத்திரங்களையோ, மறைபொருளான மந்திரங்களையோ அவனுக்குக் கொடுத்து யுகலட்சியத்தை நாடி வந்த சாதகனை உபயோகமற்ற உள்ளூர் சாஸ்திரியாக்கும் தவறை செய்தல் கூடாது. தன் அந்தரங்க சித்தியாலும், அதனால் ஏற்பட்ட அற்புதச் சூழலாலும் (atmosphere) வேத இரகஸ்யத்தை விண்டுரைத்தலாலும், சாதகனின் ஆன்மா விழிப்படைந்து அனந்தனைக் கண்டு, அவனுடன் இணைந்து பூரணயோக ஞானம், உற்சாகத்தால் பூர்த்தியடைய அருள்பவரே உண்மையான மனித குருவாகும்.

காலம்

ஞானம், உற்சாகம், குரு அமைந்தபின் சாதகன் தன் இலட்சியத்தை அடைவது உறுதி. தடை என்பது அவனுக்கில்லை. சறுக்கி விழுந்தாலும் அதுவும் உயர்வடையும் பாதை என்பது விளங்கும். மரணமும் அவனுக்கு நிறைவை மட்டுமே அளிக்கவல்லது, ஆன்மாவின் யுகாந்திர பயணத்தில் பிறப்பும், இறப்பும் இடைப்பட்ட இரு நிலைகளாகும்.

யோகம் பூர்த்தியடைந்து சித்திபெறக் குறைவாயுள்ளது காலம் ஒன்றேயாகும். காலம் காலனாக வருகிறான். நாமறிந்த காலம் காலனையே தலைவனாகப் பெற்றது. ஆன்மிக அடிப்படையில் காலத்தின் பூர்வத்தைக் கண்டு கொண்டால், ஆன்மாவுக்கு அமைந்த கருவியாக சிருஷ்டிக்கப்பட்டதே காலம். அடிப்படை நிலை அதுவேயாகும். ஆன்மாவுக்குக் கருவியாக ஆதியில் சிருஷ்டிக்கப்பட்ட காலம் மனிதன் நிலைக்கேற்ப பல உருவங்களைத் தாங்கி அவனை எதிர்கொள்கிறது. அவனுடைய இலட்சியப் பாதையாக அமையும் திறனும் உடையது காலம். நண்பனாகவும், எதிரியாகவும் உருமாற்றம் பெறவல்லது இந்த ஆன்மிகக் கருவியான காலம்.

ஆயிரம் நிகழ்ச்சிகளை அணைத்து ஒரு காரியத்தைப் பூர்த்தி செய்யும் நாடக அரங்கமாகும் காலம், நிகழ்ச்சிகளின் போக்கையும், காரியத்தின் திறனையும் கணிக்க வல்லது. அகந்தைக்கு அது ஒரு கொடுங்கோலன். வழியில் வந்து இடைமறித்த மேருமலையாகும். இறைவனுக்குக் காலம் இணக்கமுள்ள கருவி, இன்றியமையாத கருவியும் கூட. நம் சொந்த முயற்சியால் யோகத்தை மேற்கொண்டால், முயற்சியின் தலைவன் அகந்தை என்பதால், காலம் போர்க்கொடி உயர்த்தி, போர் முரசம் கொட்டி, வீரர்களை அணிவகுத்து, அகந்தையின் ஆயிரம் எண்ணங்களுக்கும் எதிரான ஆயிரம் தடைகளைத் திரட்டி, குறுக்கே வந்து கூத்தாடுகின்றது. நம்முடைய முயற்சியும் இறைவனின் தொழிற்பாடும் இணைந்த காலத்து, காலம் தன் கடுமையை விலக்கி, பாதையாக மாறி, செயலின் திறத்தைச் செப்பனிட்டு அமைக்கின்றது. நம் அகந்தையின் முயற்சி ஆண்டவனுடைய அருளில் ஒன்றிப் போனால் காலம், நமக்குக் கருவியாக மாறி, அடிமையின் சேவகத்தை அன்புடன் அளிக்கிறது.

சர்க்காரில் ஒரு பாலம் கட்ட 3 வருஷமாகும். இராணுவத்தில் பாலம் கட்ட வேண்டுமானால் எல்லா வேலைகளையும் ஒரே சமயத்தில் ஆரம்பித்து 3 வாரத்தில் முடித்துவிடுவார்கள். தேவைப்பட்ட எல்லா சக்தியையும் ஆரம்பத்தில் ஒரே சமயத்தில் ஒரேயடியாய் உபயோகித்து வேலையை உடனே முடிப்பது இராணுவத்தின் நடைமுறை. நாம் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமானால் அதைப் பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றாய் ஒன்றன் பின் ஒன்றாய் செய்து முடிப்பது வழக்கம். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சக்தி தேவை. அந்த அளவு சக்தியே நம்மிடம் இருப்பதால், அதை முடித்து அடுத்ததை எடுத்துக் கொள்கிறோம். முழுக்காரியத்தின் எல்லாப் பகுதிகளையும் முடிக்க வேண்டிய அனைத்து சக்தியும் நம்மிடம் இருப்பதில்லை. அப்படி அத்தனை சக்தியும் ஒரே சமயத்திலிருந்தால் அந்தக் காரியம் படிப்படியாய் பூர்த்தியாவதற்குப் பதிலாக முதலிலேயே க்ஷணத்தில் பூர்த்தியாகும்.

நமக்கு அவசரம் உண்டு. அவசரப்பட்டால், நம் சக்தியில் ஒரு பகுதியை அவசரம் தனக்காகப் பெற்றுக் கொள்ளும். அவசரப்படாமலிருப்பது கடினம். அவசரம் குறைந்தால், அதிகச் சக்தி பெருகும். அவசரம் அழிந்தால் மனிதன் சக்தி ரூபமாக, ஜ்வாலையாக இருப்பான். அவசரத்தைக் கைவிட்டுப் பொறுமையைக் கைக்கொண்டால், அந்த அளவுக்குச் சக்தி பெருகும். நேரமில்லை என்பதால் அவசரம் ஏற்படுகிறது. மனநிலையை மாற்றி, மனிதன் தன் மனத்தின் உயர் நிலையை உணர்ந்தால், சாஸ்திரம் ஞானமாக மனதிலுதிக்கிறது. உயிரும் உடலும் உற்சாகத்தால் உணர்ச்சி வேகம் பெறுகின்றன. உள்ளுறை ஜகத்குரு வெளிவந்து, உனக்கு முன் யுகங்கள் காத்திருக்கின்றன, காலம் உன் அடிமை என்பதை தெளிவுபடுத்துகிறார். காலத்தின் நிலையையுணர்ந்தால், அவசரத்திற்கு அவசியமில்லை. பொறுமை மலர்ந்து, புதுயுகம் பூக்கின்றது. இறைவனுக்கேயுரிய எல்லையற்ற பொறுமையை கைக்கொண்டு, அளவில்லாத சக்தியை அமுதசுரபியாக உற்பத்தி செய்யும் மனப்பாங்கு உத்தம சாதகனுக்குரிய இலட்சிய மனநிலை என பகவான் ஸ்ரீ அரவிந்தர், காலத்தின் திறனைக் கணிக்கும் வகையாக விளக்குகின்றார்.

********book | by Dr. Radut