Skip to Content

16. பூரணயோகத்தின் பொதுப்படையான அஸ்திவாரம் போன்ற கருத்துகள்

16. பூரணயோகத்தின் பொதுப்படையான அஸ்திவாரம் போன்ற கருத்துகள்

ஜீவன் முழுவதும் - மனம், நெஞ்சம், உடல், ஆன்மா - இறைவன் மயமாகி, இறைவனின் சுபாவத்தை மேற்கொண்டு, இறைவனின் திருவுள்ளம் சிருஷ்டியில் பூர்த்தியாக ஜீவன் தன்னை கருவியாக்கிக்கொள்ளும் யோகம் பூரண யோகமாகும்.

இறைவன் (Transcendent, Absolute). பரம்பொருள், ஆதி (origin) என்று நாம் குறிப்பிடுவது உலகத்தையும், ஜீவராசிகளையும், தெய்வங்களையும் சிருஷ்டித்த சக்தியையே. உலகத்தை சிருஷ்டித்த இறைவன் பல்லாயிரக்கணக்கான ஆன்மா (soul) வையும் சிருஷ்டித்தான். ஒவ்வோர் ஆன்மாவும் உலகில் ஒரு உடலைத் தாங்கி செயல்பட்டது. ஓர் உடலில் ஏற்படும் அனுபவம் முடிந்தபின் மற்றோர் உடலை அடுத்த பிறவியாக எடுத்து புதிய அனுபவங்களையும் பெறுகிறது. சிறந்த ஆன்மா இந்த பிறவிச் சூழலை விரும்பவில்லை. உடல் இருளால் கவிழ்ந்து கொண்டுள்ளது. வாழ்க்கை பொய்யின் பிடியில் இருக்கிறது. மனம் அறியாமையில் உழல்கிறது. எனவே சிறந்த ஆன்மா இவற்றை உதறித் தள்ளி இவற்றின் பிடியிலிருந்து விடுதலை தேடி, தவம், யோகம் செய்து மோட்சமடைந்து தன் பிறப்பிடமான இறைவனை அடைந்து பேரின்பம் எய்துகிறது. இதுவே தொன்று தொட்டு நம் முன்னோர் செய்த யோகங்களின் குறிக்கோள், அடிப்படை.

பகவான் ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் இந்த இலட்சியத்தை மேற்கொள்ளவில்லை. மோட்சத்தைத் தேடவில்லை. பிறவியை விலக்கவில்லை. வாழ்க்கையைத் துறக்கவில்லை. உடலை இருளின் கருவியாக இருப்பதால் உதறித் தள்ளவில்லை. இறைவன் பல்லாயிரம் ஆன்மாக்களை ஏற்படுத்தியது பூமியில் இறைவனின் சத்திய ஆட்சியை நிலைப்படுத்த என்று அறிந்தார்கள். உலகில் உதறித்தள்ளப்பட வேண்டியது உடலும், வாழ்வும் அல்ல, பொய்மையும், இருளையுமே உதறித்தள்ள வேண்டும் என்றார்கள். சிறந்த ஆன்மா விடுதலையடைந்து மோட்சம் எய்தினால், உலகைப் பிறகு யார் இருளிலிருந்து காப்பாற்ற முடியும்? விடுதலையடைந்த ஆன்மா, மோட்சத்தை நாடக் கூடாது. பூமியிலேயே தங்க வேண்டும். மனம் அறியாமையின் கருவியானால், அதை மாற்றி அறிவின் கருவியாக்கச் செய்ய வேண்டும். வாழ்வு பொய்யின் பிடியிலிருந்தால், அதை விடுவித்து, மெய்யின் பிடியில் வாழ்வைக் கொண்டு வர வேண்டும். உடல் இருளின் கருவியானால், அதை மாற்றி ஒளியின் கருவியாக்க வேண்டும். அப்படிச் செய்தால் மரணத்தை வெல்லலாம், துன்பத்தைப் பூமியிலிருந்து அடியோடு போக்கலாம், நோயை அழிக்கலாம், மனித வாழ்வை தெய்வீக வாழ்வாக்கலாம் (Life Divine). இதுவே இறைவனின் திருவுள்ளம். அவனது திருவுள்ளம் நிறைவேற சிறந்த ஆன்மாக்கள் தங்களையும், தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவனது கருவியாக மாற்ற வேண்டும். ஒரு 12 பேர் அது போன்ற சாதனையைச் செய்தால், இறைவனே உலகுக்கு வருவான். மரணம், மூப்பு, நோய், இருள், வறுமை ஆகியவை அடியோடு அழிந்துவிடும். அதுவே பூரண யோகத்தின் இலட்சியம். பூரணயோகி இதை மேற்கொள்ள வேண்டுமென்றால், உடலைப் புறக்கணிக்கக் கூடாது. வாழ்வைத் துறக்கக் கூடாது. மோட்சத்தை நாடக்கூடாது. ஞான யோகியைப்போல் புத்தியை மட்டும் துலக்கி கருவியாகப் பயன்படுத்தினால் பூரண யோகம் பலிக்காது. ஹடயோக இலட்சியமான மோட்சத்தை அடைய உடலை விளக்கம் செய்தால் போதும். பூரண யோகத்திற்கு அது போதாது. பக்தன் நெஞ்சின் உணர்வைத் தூய்மைப்படுத்தி, அதில் லயித்து, மோட்சமடைகிறான். அதுவும் பூரணயோகிக்குப் போதுமான கருவியில்லை. எல்லா கருவிகளையும் தூய்மைப்படுத்த வேண்டும். எல்லா கரணங்களும் விழிப்படைய வேண்டும். ஜீவன் பூரணமாக விழிப்படைந்து, தூய்மைப்பட்டு, இறைவனை நாடி, இறைவனைத் தங்களுக்குள் அழைத்து, தன்னை இறை வெளிப்பாட்டின் கருவியாக மாற்றி உலகை உய்விக்க வேண்டும். இந்த மாபெரும் இலட்சியத்தை மந்திரம், தந்திரம், ஆசனம், தியானம், தவம், நிஷ்டை ஆகியவற்றால் அடைய முடியாது. பூரண சரணாகதி மட்டுமே இந்த இலட்சியத்தைப் பெற்றுத்தரும். இதுவே பூரண யோகத்தின் தவமுயற்சியாகும். சிருஷ்டியின் அடிப்படை ஜடமான பூமி அங்கு வாழ்வு உற்பத்தியாகி, மனத்திற்குரிய ஜீவன் பிறக்கிறான். முனிவன் சிறந்த மனிதன். ரிஷி உயர்ந்தவன். யோகி அவனைவிட உயர்ந்த மனத்தையுடையவன். அவனுக்கும் மேலே தெய்வங்கள் உறைகின்றன. அதற்கடுத்த உயர்ந்த நிலையில் சத்திய லோகம் எனப்படும் விஞ்ஞான லோகம் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக சச்சிதானந்த லோகமுண்டு. ஜடத்திலிருந்து, சச்சிதானந்தம் வரை சிருஷ்டி. அதற்கப்பால் இறைவன். ஜடம், மனிதன், தெய்வம், சச்சிதானந்தம் என்ற பல நிலைகளில் சிருஷ்டியுள்ளது. மனிதன் பல நிலைகளில் இருக்கின்றான். மனிதன், முனிவன், ரிஷி, யோகி ஆகிய நிலைகளில் மனிதன் வாழ்கின்றான். அதற்கடுத்த உலகத்தில் இறைவனால் சிருஷ்டிக்கப்பட்ட தெய்வங்கள் நீல ஒளி நிறைந்த தெய்வ லோகத்தில் வாழ்கின்றன. தெய்வ லோகத்திற்கும், சச்சிதானந்தத்திற்கும் இடைப்பட்டது சத்திய லோகம். இதை விஞ்ஞானம் எனவும் கூறுவர். இந்த லோகத்தின் ஒளி பொன்னொளி. இந்த லோகத்தை பகவான் ஸ்ரீ அரவிந்தர் supermind என்கிறார். தெய்வ லோகம் உட்பட சிருஷ்டியின் எல்லா நிலைகளிலும் அறியாமை (ignorance) ஓரளவுக்கு கலந்திருக்கும். சத்திய லோகம் வரும்பொழுது அறியாமை முழுவதுமாக கரைந்து, சத்தியத்தின் பூரணப் பொலிவு இருக்கும்.

நம் மரபில் யோகம் செய்யும் தவசி தான் பிறவியிலிருந்து விடுபட்டு சச்சிதானந்த பிரம்மத்தையோ, இறைவனையோ, சொர்க்கலோகத்தையோ அடைந்து பேரின்பம் எய்துகிறான். பூரண யோகி மோட்சத்தை நாடவில்லை. உலகை மரணத்திலிருந்தும், பொய்யிலிருந்தும் விடுவிக்க தான் இறைவனின் கருவியாக மாற யோகத்தை மேற்கொள்கிறான். தன் கரணங்களை - உடல், மனம் - தூய்மைப்படுத்துவதால் அவனை நாடி மோட்சம் வருகிறது. அவன் அதை ஏற்றுக்கொள்வதில்லை. தன் உடல் முழுவதும் உள்பட எல்லாக் கரணங்களையும் பூரணமாகத் தூய்மைப்படுத்துவதால் பூரண யோகிக்கு, மற்ற யோகிகளுக்கு ஏற்படாத ஓர் அனுபவம் ஏற்படுகிறது. மற்ற யோகிகள் தபோ வலிமையால் தான் உயர்ந்து மேலே போய் மோட்சம் அடைகிறார்கள். அவர்களுடைய மற்ற கரணங்கள் தூய்மையாக இல்லாத காரணத்தால் அவர்கள் பெற்ற தூய்மை மற்ற ஜீவனின் பகுதியை அடைவதில்லை.

ஞானியின் மனம் புனிதமானது. ஆனால் அவன் உடல் தூய்மைப்படுத்தபடவில்லை. அவன் பெற்ற ஞானம், அவனுடைய உடலுக்கு ஒளியைப் பெற்றுத் தருவதில்லை. ஆனால் பூரணயோகி தன்னை முனிவர் நிலைக்கு உயர்த்தியவுடன் அந்நிலையின் தூய்மை அவனது நெஞ்சம், உடல் ஆகிய பகுதிகளில் பாய்ந்து நிறைகிறது. தவத்தால் மேலே சென்ற யோகி, தூய்மையால் மேலேயுள்ள ஞானத்தை தன்னுள் கொண்டு வருகிறான். யோகம் பூரணமடைகிறது. அதேபோல் தெய்வநிலையை அவன் மனம் தொடும் பொழுது (ascent) தெய்வத்தின் முழுத்திறனும், ஞானமும், தூய்மையும் அவனுடைய நாதம் (வாழ்வு), உடல் ஆகியவற்றில் பொழிந்து (descent) நிரப்புகின்றன. தெய்வலோக சக்தியிலும் ஓரளவு அறியாமை கலந்திருப்பதால் உலகத்தின் இருளைப் போக்கும் திறன் அதற்கில்லை. பூரண யோகி மேலும் உயர்ந்து, சத்திய லோகத்தைத் தன் தவமுயற்சியால் அடையும் பொழுது சத்திய லோக சக்தி தன் பொன்னொளியுடன் அவனது தூய்மைப்பட்ட மனம், நாடி, உடலையடைந்து அவனை விளக்கம் பெறச் செய்கிறது. அவனைப் போல் பன்னிருவர் இருந்தால் அவர்களது தூய்மையான ஜீவன் மூலம் உலகத்தை முழுவதும் அப்பொன்னொளியால் நிரப்ப முடியும். மரணத்தை அழிக்க முடியும், புதிய மனிதனை சிருஷ்டிக்க முடியும் (supramental being). இதுவே பூரண யோகத்தின் பொதுவான விளக்கம். இதையடைய உதவும் ஒரே கருவி சரணாகதி, பூரண சரணாகதி. இந்தச் சாதனையை அவனுடைய மனத்தால் சாதிக்க முடியாது. உடலாலும் முடியாது. சொல்லப் போனால் அவனது ஆன்மாவாலும் முடியாது. ஆன்மா இறைவனின் பகுதி. சைத்திய புருஷன் (psychic being) எனப்படும் ஆன்மாவின் பிரதிநிதி ஹிருதய குகையில் வசிக்கின்றான். மனம், உள்ளம், உடல் ஆகிய பகுதிகளின் அனுபவங்களின் சாரத்தை ஆன்மாவின் சார்பில் சைத்திய புருஷன் பெறுகிறான். அவன் மட்டுமே இந்த யோகத்தை நடத்த முடியும். ஆன்மா இறைவனின் பகுதி. சிருஷ்டிக்குள் வந்துள்ளது. ஆனால் சிருஷ்டி மாறுவது போல், மாறக் கூடியது அல்ல. வளரக்கூடியது அல்ல. சொல்லப் போனால் அழிவற்ற தன்மையுடைய ஆன்மா, மாற்றமடையாத (unchanging) தன்மையையும் உடையது. அதன் பிரதிநிதி psychic being சைத்திய புருஷன். ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து வருவது சைத்திய புருஷனே. ஒரு பிறவியில் ஏற்பட்ட அனுபவ சாரத்தை அடுத்த பிறவியில் வெளிப்படுத்துவது. இது சத்தியத்தின் பிழம்பு. பொய் கலப்பில்லாதது. குகையிலிருந்து வெளிப்பட்டு பூரண யோகத்தை நடத்தவல்லது. அந்த வெளிப்பாடு நிகழுவதே பூரண யோகத்தில் முக்கியமான கட்டம். பிரகிருதி - இயற்கை - யின் பிடியில் உள்ள மனம், உடல் ஆகியவை தங்கள் ஆணவத்தை (ego) விட்டு இறைவனை சரணாகதியடைய விரும்பினால் சைத்திய புருஷன் வெளிவர உதவியாகும். சாதாரண மனிதன் அகந்தையின் பிடியில் இருக்கின்றான். அகந்தையை ஒழித்து பூரண சரணாகதி மூலம் இறைவனையடைய சாதகன் செய்யும் முயற்சிக்கு சைத்திய புருஷனின் வெளிப்பாடு அறிகுறியாகும். சைத்திய புருஷன் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து தன் ஆட்சியை மனத்தில் நிலைநாட்டினால் மனத்தின் அகந்தை (mental ego) கரையும். அதைப் போல் vital ego பிராணனின் அகந்தையும், physical ego உடலின் அகந்தையும் கரைந்தால் சைத்திய புருஷன் சாதகனின் தலைவனாகிறான். இதை திருவுருமாற்றத்தின் முதற்கட்டம் phychic transformation என்கிறார் பகவான். ஜீவனின் கரணங்கள் மூன்று உடல், நாதம், மனம். ஆன்மா இவற்றின் தலைவன்.

அகந்தையால் ஆட்கொள்ளப்பட்ட மனிதன் தன் யோக முயற்சியால் அகந்தையை விலக்கி, பொய்யை ஒழித்து, இருளை அழித்து, சரணாகதியை மேற்கொண்டால் சைத்திய புருஷன் ஹிருதய குகையிலிருந்து வெளிவந்து அகந்தை விட்டகன்ற ஆட்சிபீடத்தை ஏற்றுக்கொண்டு ஜீவனை முழுவதுமாக தன் ஆட்சிக்குள் கொண்டுவருதல் phychic transformation சைத்திய புருஷனின் திருவுருமாற்றம் எனப்படும். இதை முதற்கட்டம் என்றார்.

ஜீவனில் எந்தப் பகுதியிலும் பொய், இருள் இல்லை என்ற நிலை ஏற்பட்டவுடன், தலைக்கு மேல் உள்ள சகஸ்ரதளத்தின் வழியாக ஆன்மா, (soul, jivatma) ஜீவனுள் எட்டிப் பார்க்கின்றது. இதை central being, soul, jivatman, ஆன்மா என்றெல்லாம் பகவான் குறிப்பிடுகிறார் இது அழிவில்லாதது, மாற்றமில்லாதது, இறைவனின் பகுதி. இதன் அம்சங்கள் மௌனம், சாந்தம், ஜோதி, அன்பு, ஆனந்தம், சக்தி, மரணமின்மை, அனந்தம், நித்தியத்துவம், சைத்திய புருஷனுடைய ஆட்சியால் மனிதன் புனிதப்பட்ட நிலையில், முதல் நிலை திருவுருமாற்றத்தை அடைந்தபின், இரண்டாம் நிலை திருவுருமாற்றம் (spiritual transformation) ஏற்பட, ஆன்மிக திருவுருமாற்றம் ஏற்பட மனிதன் தகுதியுள்ளவனாகிறான். சகஸ்ரதளத்தின் வழியாக ஆன்மா தன் அம்சங்களை மனிதனுள் பொழிகிறது. யோக சித்திக்கு அஸ்திவாரமான மௌனம், சாந்தம் இரண்டும் மனிதனுள் புகுந்து பின்னால் வரும் பெரிய பேறுகளைத் தாங்கும் சக்தியை அவனுக்கு அளிக்கின்றன. ஆன்மா, மனிதனுள் புகுந்து அவன் புத்தி மூலம் வெளிப்பட்டால் மனம் ஜோதியால் நிறைகிறது. இருதயத்தில் ஆன்ம வெளிப்பாடு நடந்தால் மனித உணர்ச்சியான பாசம், தெய்வீக அன்பு (divine love) ஆக மாறும். பிராணனை ஆன்மா தொட்டால் அதன் உணர்ச்சி ஆனந்த (delight) மயமாகிறது. உடலையும் ஆன்மா எட்டினால், உடல் தெய்வத்திறன் (power) உறையுமிடமாகிறது. இந்தத் திருவுருமாற்றத்தை ஆன்மிக மாற்றம், ஆன்மிகத் திருவுருமாற்றம் என்கிறார். இது திருவுருமாற்றத்தின் இரண்டாம் கட்டம். சரணாகதியை முழுமையாக ஏற்றுக்கொண்ட மனிதன், அகந்தையைக் களைந்தால், நல்லது கெட்டது என்ற இரண்டின் பிடியிலிருந்த மனிதன் சைத்திய புருஷனின் வெளிப்பாட்டால் கெட்டதை முழுமையாக விலக்கி, நல்லதின் முழுப் பிடிப்பில் வந்துவிட்டான். இது முதற்கட்டம். இந்த நிலையில் மனம் நல்ல எண்ணத்தை மட்டுமே கருதும், உள்ளம் நல்ல உணர்ச்சியை மட்டுமே உணரும். இரண்டாம் கட்டத்தில் ஆன்மிக திருவுருமாற்றத்தில் ஏற்படுவது உயர்ந்த மாற்றம். முதற்கட்டத்தில் நல்ல எண்ணம் இருந்தது. இரண்டாம் கட்டத்தில் அந்த எண்ணம், ஆன்மிக திருவுருமாற்றத்தால் ஜோதியாக மாறுகிறது. அதேபோல் நல்ல உணர்வு, தெய்வீக அன்பாகிறது. அடுத்த கட்டமே யோகி நாடுவது. அது supramental transformation சத்திய ஜீவ திருவுருமாற்றம். முதற்கட்டத்தில் மனித எண்ணம், கெட்டதை விட்டொழித்தது. ஆனால் மனித எண்ணமாகவே இருக்கிறது. இரண்டாம் கட்டத்தில் மனித நிலையைத் தாண்டி எண்ணம், ஜோதியாக ஆன்மிக நிலையை அடைகிறது. மூன்றாம் கட்டத்தில் ஜோதி, supramental knowledge சத்திய ஞானமாக மாறும். இரண்டாம் கட்டத்தில் எண்ணம் ஜோதியாக மாறினால் பிரகாசிக்கும். அதற்கு மேற்பட்ட திறன் இல்லை. மூன்றாம் கட்டத்தில் சத்திய ஞானியாக மாறும்பொழுது எண்ணத்திற்கு செயல்திறன் ஏற்பட்டு விடும். அதாவது நினைத்தது நடக்கும். அதேபோல் உள்ளத்தில் மனிதன் கெட்ட உணர்ச்சிகளை விட்டொழித்து சைத்திய புருஷனின் திருவுருமாற்றத்தை அடைந்தால் நல்ல மனித உணர்வு ஏற்படும். இரண்டாம் கட்டத்தில் ஆன்மிகச் சிறப்பால் இந்த நல்ல உணர்வு, தெய்விக அன்பாக மாறும். மூன்றாம் கட்டத்தில் தெய்வீக அன்பு divine bliss தெய்வீக ஆனந்தமாக மாறும். அதேபோல் மற்ற கரணங்களாகிய நாதத்திலும், உடலிலும் மூன்றாம் கட்டமாகிய சத்திய ஜீவ திருவுருமாற்றத்தால், ஆனந்தம் (bliss), power தெய்வீக சக்தி பிறக்கும். இவையெல்லாம் மனிதனை supramental man சத்திய ஜீவனாக மாற்ற உதவும். அதுவே பூரண யோகத்தின் கடைசி இலட்சியம். அத்தகைய சத்திய ஜீவன் 12 பேர் இருந்தால் உலகம் முழுவதும் மரணம், நோய், மூப்பு, துன்பம், வலி, வறுமை சட்டென ஒழிந்து மனிதவாழ்வு, தெய்வீக வாழ்வாக (divine life) மாறும். பகவான் ஸ்ரீ அரவிந்தரும் அன்னையும் பூரண யோகத்தை மேற்கொண்டு தங்கள் தங்கள் வாழ்க்கையில் பூரண யோக சித்தி பெற்று பொன்னொளியைப் பெற்றனர். பன்னிருவர் இல்லாத காரணத்தால், கடைசி கட்டமான பூலோக இலட்சியம் குறையாக நின்றது.

சாதகன் இந்த நிலையை அடைய கடைப்பிடிக்கும் மார்க்கம் எவை? இந்த யோகம் மனிதனால் செய்யப்படுவது அன்று. மனிதனால் செய்யக் கூடியதும் இல்லை. ஆண்டவனே ஒருவனைத் தேர்ந்தெடுத்தால் கொஞ்ச நாளைக்குப் பின் அவனுக்கு ஆண்டவன்மீது அக்கரை ஏற்படுகிறது. இதை ஆண்டவனின் அழைப்பு (divine call) என்போம். இந்த அழைப்புக்கு உரியவர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளக் கூடிய யோகம் இது. இவர்களிலும் ஆயிரத்தில் ஒருவருக்கே இது பலிக்கும். பலிப்பது கடைசி கட்டமானால், முதற்கட்டமாக ஆரம்பிப்பதற்கு அன்னை ஓர் அறிகுறியைச் சொல்கிறார். இந்த உலகத்தை இயக்குவது ஒரு பெரிய சக்தி, மனிதனில்லை என்று தெளிவாக உணர்ந்த ஒருவர் அந்த சக்தியை அடைய ஆர்வம் கொண்டால் (aspiration) அந்த ஆர்வம் தணியாத கனலாகினால், அவர் இந்த யோகத்தை மேற்கொள்ளலாம் என்கிறார்.

ஆர்வக் கனலால் உந்தப்பட்ட சாதகர் முதலில் உணர்வது என்னவென்றால், தானும், தன் உடலும் வாழ்வும் உலகத்தை இயக்கும் சக்திக்கு உட்பட்டு இயங்கவில்லை என்று அறிகிறார். உலகம் முழுவதும் ஒரு சக்தியால் இயக்கப்படும் பொழுது தானும் அந்தச் சக்தியால் இயக்கப்படுவதே முறை. மாறாக, தான் அந்தச் சக்தியின் ஆட்சிக்கு வெளியில் இருப்பதை உணர்கிறார். அந்தச் சக்தியின் பிரதிநிதியாக தன்னுள் ஏதாவது இருக்கிறதா என பரிசீலனை செய்கிறார். தான் தன் அகந்தையின் பிடியில் இருப்பது அவருக்குப் புலனாகிறது. முதலில் அகந்தையின் பிடியிலிருந்து விடுபட்டு அந்தச் சக்தியுடன் இரண்டறக் கலக்க (surrender) விழைகிறார். இதைச் செய்துமுடிக்க அந்தச் சக்தி தன்னுள் இருக்கிறதா எனப் பரிசீலனை செய்தால், நெஞ்சில் ஜோதியாக அது காட்சி தருகிறது. ஆர்வம் (aspiration) ஏற்பட்ட பின் சரணாகதியடைய (surrender) இடையே ஒரு கட்டம் உண்டு. சாதகன் தன் கரணங்களின் செயலை உள்ளொளிக்கு சமர்ப்பித்த பின்னரே சரணாகதி பூர்த்தியாகும். இறைவனை அடைய ஏற்பட்ட ஆர்வம் முதற்கட்டம். தன் செயல்களை உள்ளொளிக்கு சமர்ப்பிப்பது (consecration) இரண்டாம் கட்டமான ஆத்ம சமர்ப்பணம். அது நிறைவடையும் பொழுது சரணாகதி பூர்த்தியாகிறது.

சரணாகதி பூர்த்தியாகிய நிலையில் பூரண யோகத்தின் அடிப்படையான முதற் சித்தி கிடைக்கும் (first fundamental siddhi). இந்த சித்திக்கு மூன்று பாகங்களுண்டு. ஒரு பாகம் தன்னை இறைவனாக அறிதல், அடுத்தது உலகத்தை இறைவனாக உணர்தல், மூன்றாவதாக தன்னையும் உலகத்தையும் தாண்டி இறைவன் தன் நிலையில் இருப்பதைக் காணுதல்.

இது முதல் சித்தியானால், கடைசி சித்தி Supramental being சத்திய ஜீவனாக மனிதன் மாறுவதாகும். சாதாரண மனிதன் தன் கருத்தைப் பேசுகிறான். தனக்குப் பிடித்ததை விரும்புகிறான். தனக்குப் பழக்கமானதைச் செய்கிறான். தன் ஆணவத்தின் ஆதிக்கத்திலிருக்கிறான். இவன் நோய், துன்பம், மனவலி, மரணம் இவற்றால் பாதிக்கப்பட்டவன். அதை எதிர்க்கும் சக்தியற்றவன்.

சத்திய ஜீவன் 3 திருவுரு மாற்றங்களை அடைந்து தன் மனத்தை ஜோதி மயமாக்கி பின்னர் சத்திய ஒளியின் வெளிப்பாடாகச் செய்து, மனத்தை ஆனந்த மயமாக்கி, உடலை, தெய்வத் திறன் பெறச் செய்துள்ளதால், அவனால் இறைவனின் திருவுள்ளத்தைத் தன் மனத்தின் மூலம் உலகத்தில் வெளிப்படச் செய்ய முடியும். அவனது ஹிருதயம் இறைவனின் ஆனந்தத்தை உலகத்திற்குக் கொடுக்கும். எந்தக் காரியத்தை இறைவன் செய்ய விரும்புகிறானோ அதைச் செய்யும் திறனுடையது அவனது உடல்.

முதல் சித்தியிலிருந்து கடைசி சித்திவரை அவன் செல்லும் பாதையில் உள்ள முக்கிய கட்டங்கள் எவை என்று பார்ப்போம். அவற்றைச் சுருக்கமாகக் குறிப்பிட முடியும்.

  1. தன் உள்ளே உள்ள வேத ரகஸ்யமான ஜோதியை அறிந்து பூரண சரணாகதி மூலம் தானே அதுவாக மாறி, மோட்சத்திற்குரிய தகுதியைப் பெற்று, மோட்சத்தை ஒதுக்கி; பூவுலகில் இறைவனின் கருவியாக வாழ முடிவு செய்வது முதற்கட்டம்.
  2. இறைவனின் திருவுள்ளம் பூமியில் மட்டும் செயல்பட்டால் போதாது. பிரபஞ்சம் முழுவதும் நிறைவேற வேண்டும். அதனால் தான் பிரபஞ்சத்தின் பிரதிநிதியாகவும் மாற வேண்டும் என உணர்ந்து, பிரபஞ்சத்தின் பிரதிநிதியாக தன்னுள் உள்ள நிலையை அறிந்து அந்தச் சேவைக்குத் தன்னை தயார் செய்து கொள்ளுகிறான்.
  3. இறைவனோடும், பிரபஞ்சத்தோடும் ஆன்மிகத் தொடர்புள்ளதால், தன் ஜீவனின் மூலம் இறைவனின் திருவுள்ளம், பிரபஞ்சத்தில் நிறைவேற தன்னை ஓர் ஆர்வமிக்க கருவியாகச் செய்து கொள்ளுகிறான்.

பூரண யோகத்தை மேலே சொன்னபடி சுருக்கமாகச் சொன்னால், அந்த நிலைகளை எய்த நாம் கடக்கும் கட்டங்கள் எவை என்ற கேள்வி எழுகிறது. அவையாவன:

  1. மேற்சொன்ன தத்துவத்தின் உண்மையை அறிந்து ஏற்றுக் கொள்ளுதல் முதற்கட்டம்.
  2. கீதையின் இரகஸ்யப்படி, தான் எதுவாக மாற வேண்டி ஒருவன் முயற்சித்தாலும் தான் அதுவாக மாறுவான் என்பதால், தான் இறைவனின் கருவியாக மாறமுடியும் என்று திட்டவட்டமாக அறிதல் அடுத்த கட்டம்.
  3. பூரண யோகத்தைப் பூர்த்தி செய்ய புத்தியை முக்கியமாகப் பயன்படுத்துவதால் அலைபாயும் மனத்தைக் கட்டுப்படுத்தி, ஆற்றலை வெளிப்படுத்தும் திறனையும் அடக்கி, பகுத்தறிவையும் தாண்டிச் சென்று ஜோதி மயமாக புத்தியை கூர்மைப்படுத்திக் கொள்ளுதல் அவசியம்.
  4. ஆன்மா ஆணவம், ஆசை இவற்றின் பிடியில் இருப்பதால் ஆன்மாவை அவற்றிலிருந்து விடுவிக்க வேண்டும்.
  5. இயற்கை எனும் பிரகிருதி (துவந்தம்) விருப்பு, வெறுப்புகளாலும், முக்குணங்களாலும் ஆளப்படுகிறது. பிரகிருதியை அவற்றிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்.
  6. பூரண யோகத்தின் அஸ்திவாரம் சமத்துவம் (equality). ஆதலால் அனந்தனுடைய சமத்துவத்தை ஆன்மாவிலும், வாழ்க்கையிலும் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
  7. பூரண யோகம் பூர்த்தியாக வேண்டிய திறன் சிரத்தை (faith) எனும் நம்பிக்கையில் உற்பத்தியாவதால், பிரபஞ்சத்தை ஆள்வது இறைவனின் சக்தியே, சக்தியை ஆள்வதும் ஈஸ்வரனே என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கையை மாற்றிக் கொள்வது.
  8. இந்த மாற்றங்கள் ஏற்பட்ட பின் மனம், சத்திய ஜீவ மனமாக (supermind) மாறுவதைக் காணலாம்.
  9. புற நிகழ்ச்சிகளை அறிய முற்படும் அறியாமை மாறி, ஞானம் உள்ளேயிருக்கிறது என்ற தெளிவு ஏற்பட்டு, கண் பார்வையை உள்ளே செலுத்தியவுடன் சர்வஞானம் வெளிப்படும் நிலையிலுள்ள சத்திய ஜீவ மனம் மனிதனுள் உதிக்கின்றது.

மீண்டும் ஒரு முறை சொல்ல வேண்டுமானால், சாதகன் தன் இதய ஜோதியை அறிந்து, சரணாகதி மூலம் மோட்ச தகுதி பெற்று, பிரபஞ்சத்தின் பிரதிநிதியாக தன் ஆன்மாவை அறிந்து, இறைவனின் திருவுள்ளத்தை பிரபஞ்சத்தில் தன் ஜீவன் மூலம் செயல்பட வேண்டிய கருவியாக மாற அவன் தன், ஆன்மாவுக்கு அத்திறனுண்டு என்றறிந்து, மனத்தைத் தூய்மைப்படுத்தி, அகந்தையிலிருந்து ஆன்மாவுக்கு விடுதலையளித்து, குணங்களிலிருந்து பிரகிருதியை விடுதலை செய்து, சமத்துவத்தை நிலைநாட்டி, சக்தியுள் உறையும் ஈஸ்வரனின் செயலாக தன் செயலை உணர்ந்த நிலையில் அவனும் அவன் மனமும், உடலும், சத்திய ஜீவனாகவும், சத்திய ஒளியாகவும் சத்திய உடலாகவும் மாறுகின்றன.

*********



book | by Dr. Radut