Skip to Content

15. சைத்திய புருஷன்

15. சைத்திய புருஷன்

வேதரிஷிகள் ஆன்மிக வாழ்வு வாழ்ந்தார்கள். அவர்கள் அறிவால் செயல்படவில்லை. ஆன்ம விழிப்புற்றிருந்ததால், நேரடியாக வாழ்வில் ஆன்மாவிலிருந்து செயல்பட்டார்கள். அது ஆன்மிக வாழ்வு. பக்தி மார்க்கம் என்பதும், அதற்குரிய மற்ற லக்ஷணங்களும் கிருஷ்ண பரமாத்மாவின் வாழ்வில் நாம் காண்கிறோம். பக்திக்குரிய ஆன்மா சைத்திய புருஷன் எனப்படும். ஆன்மா அனாதியானது. அனந்தமானது. அதாவது அதன் ஆதியை நாம் அறிய முடியாது. அதன் அளவை நாம் உணர முடியாது. ஆதியேயில்லை என்பதால் அனாதி என்றார்கள். அளவிறந்தது என்பதால் அனந்தம் என்றார்கள். அந்தம் என்றால் முடிவு. முடிவில்லாதது அனந்தம். அத்துடன் மனித வாழ்வில் தலைவனாக அமர்ந்துள்ள ஆன்மா, மனித வாழ்வில் கலந்துகொள்ளாமல் சாட்சியாகவும், மனித வாழ்வால் பாதிக்கப்படாமலும் என்றும்போல் அழிவில்லாமல், மாற்றமில்லாமல், அசைவில்லாமல், முடிவில்லாமல், ஆதியில்லாமல் இருக்கின்றது.

ஆன்மாவிலிருந்து எழுந்து வந்து மனித வாழ்வில் முழுமையாகக் கலந்துகொண்டு, மனித வாழ்வின் அனுபவங்களைப் பெற்று, அனுபவித்து அதன் சாரத்தை மட்டும் தன்னகத்தே சேர்த்து வைக்கும் திறன் உள்ள ஆன்மிகப் பகுதி ஒன்றுள்ளது. ஒரு ஜென்மத்தின் அனுபவப் பயனை அடுத்த ஜென்மத்திற்கு தன்னில் சுமந்து வந்து மனிதப் பிறவிக்கு அளிக்கும் தன்மையுடையது இது. ஒரு பிறவி முடியும் தருவாயில் இது வெளிவந்து அப்பிறவிப்பயனைக் கணக்கிட்டுப் பார்த்து, அடுத்த பிறவியில் அதைத் தொடர எங்கு பிறக்கலாம் என முடிவு செய்து மீண்டும் உள்ளே போய்விடும் பழக்கம் உடையது இது. இறப்பதற்கு முன் எல்லா நினைவும் வருவது இதனால் தான். இதனுடைய பரிமாணம் கட்டை விரல் பெரியது என்பார்கள். இதற்கு இயற்கையாக இறைவனை மட்டும் நோக்கிச் செல்லும் பாங்குண்டு. நல்லதும் கெட்டதும் கலந்திருக்கும் வாழ்க்கையில் நல்லதைமட்டும் தவறாமல் அறியும் திறன், அன்னப்பறவைபோல் இதற்குண்டு. அழகு, சத்தியம், லட்சியம், உயர்வு உள்ள இடத்தை க்ஷணப்பொழுதில் அறியக்கூடியது இது. யோக பரிபாஷையில் இதை சைத்திய புருஷன் என்பார்கள். சிறுவயதில் மேலோச்சியுள்ள இந்த அம்சம், நாளாக நாளாக உள்ளே சென்று புதைந்துவிடும். பரிபூரண யோகத்தை ஆரம்பிக்க, புதையுண்ட சைத்திய புருஷன் வெளிவந்து சாதகனுடைய வாழ்க்கைத் தலைவனாக அமைய வேண்டும். அதுவே முதல் நிபந்தனை.

இயல்பாக தவறு செய்ய முடியாதவர்கள், கனிந்த உள்ளம் படைத்தவர்கள், கொடுமையைக் கண்டு நடுங்குபவர்கள், முரட்டு சுபாவமேயின்றி மிருதுவான சொல்லும், செயலும் உடையவர்கள், சாந்தமாகப் பேசுபவர்கள், பொய்யே ஒரு பொழுதும் சொல்ல முடியாதவர்கள், சொல்லி அறியாதவர்கள், கடுமையை கனவிலும் உணராதவர்கள் சைத்திய புருஷனின் அம்சம் உடையவர்கள்.

யோகப் பயிற்சியாக சைத்திய புருஷனை வெளிக்கொணர அன்னை 10 விதிகளை அளிக்கின்றார். மனம் ஒன்றை அறிந்தால் அதையே பிடித்துக் கொள்ளும். அதை விடமாட்டேன் என்று பிடிவாதம் செய்யும். பிடிவாதம் அறியாமைக்குப் பிறப்பிடம். எனவே முதற்காரியமாக மனத்தை நம்பிச் செயல்படக்கூடாது என்பது முதல் விதி. மனத்தை நம்பாவிட்டால், எதை நம்புவது? ஆன்மாவை நம்ப வேண்டும். மனத்திற்கு குழப்பம் ஏற்பட்டபொழுது, மனத்தை நம்புவதில்லை. அதாவது அறிவை நம்புவதில்லை என்ற முடிவை ஏற்றுக்கொண்டபின், என்ன செய்வது என்று சில சமயம் தெரியாமற் போகும். அதுபோன்ற சமயங்களில் ஆன்மாவைத்தான் நம்பவேண்டும், அறிவை நம்பக் கூடாது என்ற மீண்டும் புதுப்பித்துக் கொண்டு, (common sense) நமக்குத் தெரிந்தவரை எது நல்லதோ அதைச் செய்தால் அது ஆன்மாவை நம்பியதாகும். உதாரணமாக, இன்று சென்னைக்குப் போய் ஓர் ஆபிசில் பணம் கட்டிவிட்டு வர வேண்டும் என்ற காரியம் வந்தவுடன், அறிவு அடுத்த பஸ் 10 மணிக்கு என்று சொல்லும். அதைப் புறக்கணிக்க வேண்டும். அந்நினைவை சமர்ப்பணம் செய்தால், எந்த ஆபீஸுக்குப் போக வேண்டுமோ அந்த ஆபீஸிலிருந்து ஒருவர் வருவார். அவர் உன் பணத்தை வாங்கிக் கொண்டு போவார். அல்லது உனக்கு வந்த கடிதத்தைப் பார்த்து அப்பணத்தை உள்ளூர் பாங்கிலேயே கட்டலாம் என்ற விளக்கம் சொல்லுவார். இதுவே அர்ப்பணத்தின் சிறப்பு. சில சமயம் 10 மணிக்கு அடுத்த பஸ் என்ற எண்ணத்தைப் புறக்கணித்த பின் மனத்தில் ஒன்றுமே தோன்றாது. அப்பொழுது என்ன செய்வது, 10 மணி பஸ்ஸைப் பிடித்து, சென்னை சென்று பணத்தைக் கட்டிவிட்டு வரவேண்டும். அறிவை நம்பக் கூடாது என்ற முடிவே முக்கியம். ஆன்மாவில் தெளிவில்லாதபோது கடமையைப் பூர்த்தி செய்ய அறிவைத் துணைக் கொள்ள வேண்டும்.

அடுத்த சட்டம் கடமையைச் செய்யும் பொழுது நமக்குப் பழக்கமானவற்றைச் செய்யப் பிரியப்படுகிறோம். பழக்கமில்லாதவற்றைச் செய்வது சிரமம் என்பதால் விலக்குகிறோம். சிரமத்தையும், பழக்கத்தையும், ஒதுக்கி கடமையைச் செய்ய முன் வரவேண்டும்.

மூன்றாம் சட்டம் நம் கடமைகளை நிறைவேற்றும் பொழுது ஆர்வத்துடன் செயல்பட வேண்டும் என்பது. அடுத்தது பிறர் மீது குறை கூறக்கூடாது. ஐந்தாம் சட்டம் எந்த நேரமும் அன்னையை நெருங்கிவர மனதில் ஆர்வம் கொள்வது. அடுத்தாற்போல் புற நிகழ்ச்சிகளை அக உணர்வின் பிரதிபலிப்பாக புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்பது, உண்ணும் முன்னும், உறங்குமுன்னும், பேசுமுன்னும், செயல்படுமுன்னும் அன்னையை நினைத்துச் செயல்பட வேண்டும் என்பவை மற்ற சட்டங்கள்.

*********book | by Dr. Radut