Skip to Content

14. யோகசித்தியின் ஆறு அம்சங்கள்

14. யோகசித்தியின் ஆறு அம்சங்கள்

இறைவனையடைந்து, இரண்டறக் கலப்பதை யோக சித்தி என்பார்கள். யோகம் என்ற சொல்லுக்கே ஐக்கியம் என்று பொருள். இறைவனோடு ஐக்கியமாவதை யோகம் என்போம். அதுவே பிறப்பறுக்கும் மார்க்கம். யோக முயற்சியால் இறைவனையடைந்து, அவனுடன் இரண்டறக் கலக்கும் பேற்றைத் தியாகம் செய்து, தன் ஜீவனின் பவித்திரம் நிறைந்த சத்தியத்தை இறைவனால் நிரப்பி, அதன் வழியாக இறைவனைப் பூவுலக வாழ்வுக்கழைத்து வந்து, மனித வாழ்வில் செயல்பட வைத்து பூலோகத்தை இறைவன் வாழும் உலகமாக்கி, மனித வாழ்வை, இறைவனின் திருவுள்ளம் நிறையும் தெய்வீக வாழ்வாக, மாற்றி, இறைவனை அவனுலகத்தைத் துறக்கச் செய்து, நம்மிடையே வந்து, மனிதனுடன் ஐக்கியமாக்கும் இலட்சியக் கருவியாகத் தன் பிறப்பை மாற்றிக்கொள்வது ஸ்ரீ அரவிந்தரின் பரிபூரண யோகத்தில் சித்தி எனக் கருதப்படும். நம் உருவைத் திரு நிறையும் உருவாக மாற்றும் இப்பாதையை திருவுருமாற்றம் என்கிறார்.

இந்த சித்தியின் அம்சங்கள் ஆறு. மனித வாழ்வு விருப்பு வெறுப்புகளாலானது. அகந்தை மனித வாழ்வின் தலைவன். அவன் செயல்பட விருப்பு, வெறுப்பு; உயர்வு, தாழ்வு; சிறியது, பெரியது ஆகிய ஏற்றத் தாழ்வுகள் அவசியம். சத்வ, ரஜோ, தமோ குணக்கலப்பே மனிதப்பிறப்பு. அவையின்றி மனிதனில்லை. அவையிருந்தால் இறைவனில்லை. அகந்தை ஆவேசமாகச் செயல்படுவது. ஆவேசமுள்ள இடத்தில் ஆண்டவனில்லை. நாம் சுவாசிக்கும் காற்றை நம்முடையது என்று சொந்தம் பாராட்டுவதில்லை. ஆயிரம் முறை நடந்து போனாலும் வீதியை நாம் நம்முடையது எனக் கருதுவதில்லை. ஆனால் பரந்து விரிந்துள்ள பூமா தேவியை நாலு காணிக் கல் நட்டு அதனிடையே உள்ள இடத்தை நமக்குரியது என்கிறோம். பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளது மனம். அது நம்மைத் தொட்டுச் செயல்படும் க்ஷண நேரத்தில் அதை நம் மனம் என்று கருதுகிறோம். உலகத்தின் ஆர்வம் அலையாகப் பெருகி நம் உணர்வைத் தொட்ட நேரம் அதை நம்முணர்வு என்று உரிமை பாராட்டுகிறோம். உரிமையைப் பாராட்டுவது அகந்தை. இறைவன் எனும் சமுத்திரத்தில் மனிதன் என்ற சிறு ஜடத்தால் ஆன தீவை எல்லையிட்டு நிர்மாணித்தது அகந்தை. அதன் ஆட்சியில் இருக்கும் வரை சமுத்திரம் நமக்கு எதிரியாகிறது. அகந்தையின் எல்லை அழிந்தால் நாம் அகன்ற சமுத்திரமாகிறோம். அகந்தையும், ஏற்றத்தாழ்வுகளும், குண விசேஷங்களும் இருக்கும்வரை மனித வாழ்வு போராட்டம் நிறைந்ததாகிறது. அமைதி அற்றுப் போகிறது. அகந்தையொழிந்த அமைதியே சமத்துவமாகும். அகந்தையற்ற நிலையில் மனித ஜீவியம் பிரபஞ்சத்துடன் கலக்க முடியும். பிரபஞ்சத்துடன் அகன்று கலக்க அடிப்படையான தேவை அகந்தையொழிந்த அமைதியாகும். இதையே கீதை சமத்துவம் என்கிறது. சமத்துவத்தை நிலைநாட்டுவதே சித்தியின் முதல் அம்சம். அஸ்திவாரமான அம்சம்கூட. எல்லா ஆன்மிக சித்திகளுக்கும் அடிப்படையாக விளங்குவன சாந்தி, மௌனம், சமத்துவமாகும். அகந்தை அழியும் யோகமாதலால் இங்கு சமத்துவம் வலியுறுத்தப்படுகிறது. அகந்தை முழுவதும் அழியாமல் சாந்தி அல்லது மௌனம் கிடைக்கலாம். அகந்தை எல்லா நிலைகளிலும் அழியாமல் சமத்துவம் நிலைபெறாது. சமத்துவத்தை விளக்கும் வாயிலாக பகவான் சொல்கிறார் ‘காலத்தைக் கடந்த அனந்தத்தின் அமைதியை நம் ஜீவனிலும் சுபாவத்திலும் நிலைபெறச் செய்வதே சமத்துவம் எனப்படுவது‘.

இரண்டாம் அம்சமாக நம்பிக்கையின் அடிப்படையில் செயல் அமைய வேண்டும் என்கிறார். நம்பிக்கையை சிரத்தை என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். அதைப் பெற அதற்குமுன் 3 கட்டங்களைத் தாண்டிவர வேண்டும். முதற்கட்டமாக சக்தியையும் இரண்டாம் கட்டமாக வீரியத்தையும் மூன்றாம் கட்டமாக தெய்வப் பிரகிருதியையும் கூறுகிறார். மனிதன் தெய்வ நம்பிக்கை பெற வேண்டும் என்றுதான் நாமறிவோம். பகவான் மறைமுகமாக தன் சக்தியிலும், வீரியத்திலும், தெய்வப் பிரகிருதியிலும் நம்பிக்கை இழந்த பின்னர்தான் முழு நம்பிக்கை பிறக்கும் என்கிறார் போலும். சித்தியின் அடிப்படைகளில் ஒன்று செயல் சிறப்படைவது (perfect action). செயலுக்குத் தேவை திறன் எனப்படும் சக்தி. மனிதன் செயலைச் சிறப்புறச் செய்ய வேண்டுமானால் தன் திறனை உச்ச கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். மனிதன் இயல்பாக செயல்படுவதொன்று. ஒரு நேரத்தில் வீரியத்துடன் செயல்படுவதுண்டு. சாதாரணமாக சைக்கிளில் போகும் மனிதன், ஒருவனை துரத்திப் பிடிக்க வேண்டுமானால் அதிவேகமாகச் செல்கிறான். அவனுக்கு ஆத்திரம், கோபம் வந்து வீரியத்துடன் துரத்துகிறான். இச்செயலை வீரியம் என்றழைக்கின்றார். வழக்கமான சக்தியைவிட தன் குணத்தின் வேகத்தால் செயல்படும் பொழுது மனிதனுக்கு வீரியம் ஏற்படுகிறது. சக்தியும், வீரியமும் மனிதனுடைய திறன். மனிதன் தன் செயலை தெய்வத்திற்கு அர்ப்பணித்தால், தன் குணத்தை தெய்வத்திற்கு அர்ப்பணித்தால் இயற்கை, பிரகிருதி என நாம் அறிவது தெய்வ பிரகிருதியாகிறது. அதாவது மனிதன் தன் திறனை உச்சகட்டத்திற்கு உயர்த்தி, தன் குணச் சிறப்பால் வீரியத்தைக் கொடுத்து அவற்றை சமர்ப்பணத்தால் - அதாவது மனிதனுடைய இயற்கை - தெய்வப் பிரகிருதியாகிறது. அதனால் செயல் 3 கட்டங்கள் உயர்கிறது. தெய்வப் பிரகிருதியாயினும் அதுவும் ஒருவகை பிரகிருதியே. அதாவது இயற்கையே. அதையும் தாண்டிய காலத்தே இரண்டாம் அம்சம் பூர்த்தி பெறும். நம்பிக்கை - சிரத்தை - எனப்படுவது மனம் ஆன்ம ஞானத்தைப் பிரதிபலித்தலாகும். செயல் நம்பிக்கையால் நிகழ ஆன்ம ஞானத்தால் அது நடக்க வேண்டும். ஏரோப்பிளேனிலிருந்து கீழே குதிக்கும் படையாளுக்கு பயத்தைவிட அதிகமான நம்பிக்கையிருந்தால்தான் முடியும். அதேபோல் நம் செயல்களை நம்பிக்கையால் மட்டும் செய்யும் பொழுது செயலின் நிலை உயர்ந்துவிடுகிறது.

மூன்றாம் கட்டத்தில் மனிதனை, சத்திய ஜீவனாக (supramental being) உயர்த்த வேண்டும். மனித ஜீவனை சத்திய ஜீவனாக உயர்த்த அவனது மனம், உள்ளம், உணர்வுகளை அதற்கேற்ப முதலில் உயர்த்த வேண்டும். நாம் மனத்தால் சிந்திக்கும்பொழுது நம் சொந்த எண்ணத்தையே உணருகிறோம். அது மற்றவனுடைய எண்ணத்திலிருந்து மாறுபட்டு இருக்கும். வேறுபட்டும் இருக்கலாம். எல்லோருடைய எண்ணத்தையும் உட்கொண்டதாக எண்ணம் இருந்தால் அது உயர்ந்த எண்ணம். ஒரு வகையில் உயர்ந்த எண்ணம் தனி மனிதனிடம் வரும்பொழுது தன் அடிப்படை ஒற்றுமையை இழந்து வேற்றுமையை வெளிப்படுத்துகிறது. ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்குமுள்ள எண்ணங்கள் வேறுபட்டவை. நாட்டின் நலனை மட்டும் கருதும் நேரத்தில் இரு கட்சிகளும் தங்கள் குறுகிய மனப்போக்கை விட்டு நாட்டிற்குப் பொதுவான நம்மையைத் தரும் உயர்ந்த எண்ணத்தை ஏற்றுக்கொள்கின்றன. எண்ணம் உயர்ந்தால், வேற்றுமை விலகி ஒற்றுமை ஏற்படும். சகல ஜீவராசிகளின் ஒருமைப்பாட்டை உணர்த்தும் எண்ணம் உயர்ந்தது. அதே போல் உயர்ந்த உள்ளமும், உயர்ந்த உணர்வையும் மனமும் நெஞ்சமும், நாடியும் மேற்கொள்ள வேண்டும். அடுத்த கட்டத்தில் உடலின் தனிமையையும் தாண்டி சகல ஜீவராசிகளின் உடலும் ஒன்றே என்றுணர வேண்டும். இராமகிருஷ்ண பரமஹம்சர் வீதி வழியே செல்லும் பொழுது ஒருவன் மாட்டை அடித்தான். அந்த அடி அவர் முதுகில் விழுந்தது. பரமஹம்சருடைய உடலும் மாட்டின் உடலும் ஒன்றே என்ற உண்மையை அச்செயல் விளக்குகிறது. நம் மனத்திலுள்ள எண்ணம் மற்ற ஒருவருக்குத் தெரிகிறது. அதனால் (he is able to read your thoughts) நம் மனதிலுள்ளவற்றை அவரால் சொல்ல முடிகிறது. எண்ணங்கள் பொதுவானவை என்பதைக் காட்டுகிறது இது. ஒருவர் கோபப்பட்டால் சம்பந்தமில்லாத மற்றவருக்கும் அதே இடத்தில் கோபம் வருவதைப் பார்க்கிறோம். உணர்வு பொதுவானது என்பதைக் குறிக்கிறது இது. ஆன்மிக அடிப்படையில் எண்ணம், உணர்வு, உடல் அனைவருக்கும் பொதுவானது எனப்படும். அந்த உயர்ந்த அடிப்படையில் செயலை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

யோகிகளுக்கு சித்து விளையாடும் திறன் உடலின் ஆழத்திலிருந்து வருகிறது. நம் உடலைச் சூழ்ந்து ஒரு சூட்சும உடலும், அதையும் தன்னுள் அடக்கிய ஓர் ஆன்மிக உடலும் உண்டு. நம் உடலுக்கும் இவற்றுக்கும் உள்ள தொடர்பைத் திறந்து விட்டால் சித்து விளையாடும் திறன் ஏற்படும். இதைச் செய்ய குந்தளினியை எழுப்புவது வழக்கம். பரிபூரணயோகத்தில் மனிதன் சாதகனில்லை. இறைவனே சாதகன். எனவே மனித உடலின் சக்தியான குந்தளினியைப் பயன்படுத்தி இந்த யோகத்தைச் செய்ய முடியும் என்பதால், தெய்வலோகத்திற்கும் மேலேயுள்ள சத்திய லோக (supermind) சக்தி கனிந்து மேலிருந்து நம்முள் வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும். இதுவே நான்காம் அம்சம்.

ஐந்தாம் அம்சமாக (perfect action) சிறப்பான செயல் கருதப்படுகிறது. மனிதனுடைய செயல் காரண-காரியத்தால் நடைபெறுகிறது. காலத்தால் கட்டுண்டது. அதற்கு இடம், பொருள், ஏவலுண்டு. இன்றைய காரணம் நாளைய காரியமாகிறது. காரணமில்லாமல் காரியமில்லை. அதனால் கர்மத்தை மனித செயல் உற்பத்தி செய்கிறது. செயல் சிறப்பான காலத்தில் அது இறைவனின் திருவுள்ள வெளிப்பாடாக அமையும். அந்தக் காரியத்திற்கு ஒரு காரணம் தேவையில்லை. க்ஷணத்தில் காரணமில்லாமல் நடைபெறும் (spontaneous act). அது கர்மத்தை உற்பத்தி செய்யாது. காலத்தால் கட்டுப்படாதது. இடம், பொருள், ஏவல் என்ற நிபந்தனைக்குட்படாதது. அதுவே பூரண செயல் அல்லது சிறப்பான செயல் எனப்படும்.

தெய்விக அனுபவம் (enjoyment) ஆறாம் கட்டமாகச் சொல்லப்படுகிறது. மனிதச் செயல் புலன்களால் அனுபவிக்கப்படுகிறது. குணங்களையும், உயர்வு தாழ்வுகளையும் வெளிப்படுத்துகிறது. மனிதன் ஆசையை அனுபவிக்கிறான். அபிப்பிராயத்தை அனுபவிக்கிறான். மனிதனுடைய அனுபவம் அவனது அம்சங்களான ஆசை, பற்று, குற்றம், குறை, குணங்களை நிறைவேற்றுகிறது. இறைவன் சிருஷ்டியில் மனிதன் மூலம் வெளிப்படும் பொழுது இறைவனின் அம்சங்கள் மனித ஜீவனில் வெளிப்படுகின்றன. குறுகிய மனித இயல்புகள் விரிந்து உயர்ந்த இறையுணர்வாக வெளிப்படுகிறது. அது இறைவனுடைய அனுபவம். அதையே ஆனந்தமென்போம்.

பிரகிருதி எனும் இயற்கை தன்னியல்பாக செயல்படும் பொழுது சிருஷ்டியின் குறைகளை வெளிப்படுத்துகிறது. மனிதன் மூலம் செயல்படும்பொழுது மனித சுபாவத்தை வெளிப்படுத்துகிறது. பிரகிருதி தன் செயலை ஈஸ்வரனுக்கு அர்ப்பணித்தால் சிருஷ்டியில் இறைவனின் திருவுள்ளம் வெளிப்படுகிறது. அதுவே செயலின் சிறப்புக்கு அறிகுறி.

சித்தியடைந்தவரின் மனம் பிரபஞ்சத்தின் மனத்தின் பகுதியாகும். அதனுடன் இணைந்து தன் தனித்தன்மை இழந்ததாகும். அவருள்ளம் பிரபஞ்சத்தின் உள்ளமாகும். அவருடல் பிரபஞ்சத்தின் உடலோடு ஐக்கியமடைந்ததாகும்.

மனிதப் பிறவியின் சிறப்பின் சிகரம் அதுவே.

பரமாத்மாவின் சுபாவமான அமைதி நிறைந்த சமத்துவத்தை ஜீவாத்மாவில் நிலைபெறச் செய்து, கரணங்களை ஜீவனின் தெய்வ நம்பிக்கையால் மட்டும் செயல்படச் செய்து, எண்ணங்களையும் உணர்வுகளையும் தெய்வ நிலைக்குயர்த்தி, சூட்சும உடலின் யோக ரகஸ்யங்களை வெளிக் கொணர்ந்து, மனிதச் செயலை இறைவனின் திருவுள்ளம் பூர்த்தியடையும் தெய்வச் செயலாக மாற்றி, அதன் வழியே ஆத்ம அனுபவமான ஆனந்தத்தைப் பெற்று, தன் மனம், உள்ளம், உடல் ஆகியவற்றைப் பிரபஞ்சத்தின் மனம், உள்ளம், உடல் ஆகியவற்றுடன் இரண்டறக் கலந்து நிற்பதே இறைவன் மனித ஜீவனில் பிறப்பெடுக்கும் சிறப்பின் சிகரமாகும்.

*********book | by Dr. Radut