Skip to Content

13. நம்பிக்கையால் வெளிப்படும் ஈஸ்வரி

13. நம்பிக்கையால் வெளிப்படும் ஈஸ்வரி

கீதை வாக்கியம் ஒன்றைப் பரிபூரண யோகத்தின் அடிப்படையாக பகவான் ஏற்றுக்கொண்டுள்ளார். ஒருவன் தான் எதுவாக மாற வேண்டும் என முழு ஆர்வத்துடன் விரும்புகிறானோ, அதுவாக அவன் மாறுவான் என்பதே அக்கருத்து. இது நம்பிக்கையின் ஆழ்ந்த திறனைக் காட்டுகிறது. முழு நம்பிக்கை இருந்தால் முழுப்பலனுண்டு என்று சொல்கிறது இந்த கீதோபதேசம்.

நம்பிக்கைக்கு நேர் எதிரி சந்தேகம். சந்தேகம் ஏற்பட்டபின் நம்பிக்கையில்லை. சந்தேகத்துடன் கலந்துள்ள நம்பிக்கைக்கு மேற்சொன்ன பலன் இருக்காது. எனவே நம்பிக்கையால் பலனடைய விரும்புபவர்கள், சந்தேகத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

தெளிவில்லாத நம்பிக்கை மூட நம்பிக்கை. நம்பிக்கை ஏற்பட சில சமயம் தெளிவு தேவை. அந்தத் தெளிவை நாடும் கேள்விகளையும், சந்தேகம் என்று ஒதுக்க வேண்டுமா என்று தோன்றுகிறது. தெளிவை நாடும் கேள்வி வேறு, நம்பிக்கையில்லாத சந்தேகம் வேறு என்பது தெரியும். தெளிவை நாடும் கேள்விகள் நல்லவை. அவை உதவும். அறிவின் கூர்மையைப் பயன்படுத்தும் அவை நம்பிக்கையை வளர்க்க உதவும். அதனால் அவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.

அறிவில் இல்லாத தெளிவு, ஆன்மாவில் ஏற்பட்டபின் தெளிவில்லாத அறிவுக்கு, ஆன்மாவில் ஏதோ ஒன்று இருக்கிறது ஆனால், அது என்ன என்று புலப்படவில்லை. புலப்படாவிட்டாலும் ஒன்று அங்குள்ளது என்று நிச்சயமாகத் தெரிகிறது என்றால் அதையே மனத்தின் நம்பிக்கை என்போம். ஆன்ம ஞானம், அறிவில் பிரதிபலிப்பதை நம்பிக்கை, சிரத்தை என்போம். இந்த நம்பிக்கைக்குரிய திறன் அதிகம், ஏராளம். அதனால் சாதிக்க முடியாததில்லை. மனத்தில்லாத தெளிவை ஆன்மா பெற்றிருப்பதால், அதுவே மனத்திலில்லாததால், நம்பிக்கையின் பலன் தொடர்ந்து இருப்பதில்லை. நடுவில் சாதனை நின்று விடுவதுண்டு. நெடுநாளைக்குப் பின் தொடர்வதுண்டு. நம்பிக்கையால் நடக்கும் யோக சாதனை இடையில் நீண்ட நாள் அறுபட்டுப் போகும் அனுபவத்தை வேத காலத்து ரிஷிகளும் கண்டுள்ளனர்.

அடிப்படையாக யோக சாதனையை மேற்கொள்ளத் தேவையான நம்பிக்கை அடிப்படையான நம்பிக்கை. அன்றாடக் காரியங்களைப் பூர்த்தி செய்ய நடைமுறையில் நம்பிக்கை தேவை. நடைமுறை நம்பிக்கை தேவை. நடைமுறை நம்பிக்கை அவசியம். அதில்லாமல் எதுவும் நடக்காது. அது அவசியம். அவசியமானாலும், இது தற்காலிகமானதே. நெடுநாளைக்கு முழுவதும் ஏற்றுக்கொண்ட காலத்து, நடைமுறை நம்பிக்கைக்கு வேலையில்லை, கைவிடப்படக் கூடியதேயாகும்.

தெளிவைத் தேடி கேட்கும் கேள்விகளும் கட்டிடம் கட்டும் பொழுது இடும் சாரம் போன்றதாகும். கட்டிடம் கிளம்பி, முடிந்து, பொலிவு பெறும்வரை சாரம் அவசியம். அது முடிந்தபின் சாரத்தை எடுத்துவிட வேண்டும் என்பது போல், அடிப்படை (சிரத்தை) நம்பிக்கை முழுமைப் பெற்ற பின், எந்தக் கேள்விக்கும் இடம் இல்லை.

அறிவில் நம்பிக்கை ஏற்பட்டது போல், உணர்விலும், பிராணனிலும் நம்பிக்கை ஏற்பட வேண்டும். பற்றைவிட்டு, கவலையில் தோய்ந்த நிலையை விட்டகன்று, ஆனந்தத்தை நாடும் நம்பிக்கை உணர்வில் உதிக்க வேண்டும். திருவுரு மாற்றத்திற்கு இது அவசியம்.

ஆன்மாவின் யோக ரகஸ்யமானது இந்த நம்பிக்கை. காரியவாதம், சித்து விளையாடுதல், சும்மா இருந்து சுகம் பெறும் ஞானியின் பேரமைதி ஆகியவை இதற்கு ஒவ்வா. ஜீவனின் முழுமையில் ஞானம், செயல் உதித்து, எல்லாத் திசைகளிலும் ஆனந்தப் பெருக்கெடுக்கும் இறைவனின் செயலை நாடும் ஆன்மிக நம்பிக்கை இது. பொதுவான சாதனை இது.

பொதுவான யோகப் பலனை, குறிப்பான செயலில் வெளிப்படுத்த முயலும் பொழுது, நம்பிக்கை வளர ஆரம்பிக்கின்றது. வளரும் நம்பிக்கை கடைசி இலக்கை அடையும்வரை நிற்பதில்லை. ஈஸ்வரன் யோகத்தின் தலைவன். அவன் கையில் நம்மை முழுவதும் ஒப்படைக்கும்வரை இந்த நம்பிக்கை வளர்வதை நிறுத்தாது.

நம்பிக்கை வளரும் பொழுது மனதைத் தாண்டி, உள்ளத்தையும், அதைத் தாண்டி பிராணனையும் தொடுகிறது. அதேபோல் நம்பிக்கையின் தரம் உயரும்பொழுது பொதுவான தெய்வ நம்பிக்கை, ஈஸ்வரனுடைய சக்தியின் மீதுள்ள நம்பிக்கையாகிறது. சக்தியின் அம்சங்களான மஹேஸ்வரி, மஹாலட்சுமி, மஹாகாளி, மஹாசரஸ்வதியின் மீதுள்ள நம்பிக்கையாக உயர்கிறது. நம் ஜீவன் சக்தியையும் அதன் செயலையும் அறிந்து அச்செயலுக்கு தன்னை விருப்பமாக உட்படுத்தி ஏற்றுக்கொள்கிறது. ஜீவனிலும், ஜீவனைச் சூழ்ந்துள்ள நிலையிலும் நடைபெறும் செயல்கள் நம்பிக்கையின் மலர்ச்சியால் உள்ளே வரவேற்கப்பட்டு சாதனையின் முத்திரையைப் பெறுகின்றன. இதுவே சிறப்பின் கடைசி கட்டமான நம்பிக்கை.

சக்தியின் பின்னணியில் ஈஸ்வரன் இருக்கின்றான். நம்பிக்கை ஒளியில் ஈஸ்வரனே தென்படுவது மையமான அடிப்படை நம்பிக்கையின் ஆணிவேராகும். ஈஸ்வரனை செயலில் உணர்வதே உச்ச கட்டம். நம் வாழ்வும் ஜீவனும் ஈஸ்வரனுடையது என்பதைக் காணும் நேரம் அது. ஆன்மீகச் செயல்திறன் நம் ஜீவனிலும், சுபாவத்திலும் தடையின்றி வெளிப்பட இந்த உயர்ந்த நம்பிக்கை உதவும். சத்திய ஜீவ மஹாசக்தி நம்மில் உற்பத்தியாக இந்த அஸ்திவாரம் தேவை.

***********



book | by Dr. Radut