Skip to Content

பொன்னொளி

பொன்னொளி

கர்மயோகி

 

மதர்ஸ் சர்வீஸ் சொஸைட்டி

5, புதுவை சிவம் தெரு

வெங்கட நகர் விரிவு

பாண்டிச்சேரி 605011

 

********

முகவுரை

பகவான் ஸ்ரீ அரவிந்தர், அன்னை ஆகியோரை ‘அமுத சுரபி’ மாத இதழ் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. அவர்கள் அவதார புருஷர்கள். அவர்களை வணங்குவதால் இறைவனின் அனுக்கிரஹத்தை பூரணமாகப் பெறலாம் என்ற அளவிலேயே அக்கட்டுரைகள் எழுதப்பட்டன.

அவர்களுக்குரிய சிறப்பு பொதுவான அனுக்கிரஹம் செய்வதைவிட மேலானது. அவர்கள் வாழ்ந்த தமிழ்நாடு, இதுவரை அவர்களை அறியாத போதிலும், தானும் ஒரு சிறப்பைப் பெற்றுள்ளது. அவர்கள் தமிழ்நாட்டை நாடி வந்ததும் அதுவும் தொண்டை நாடு சான்றோருடைத்து என்ற தொண்டை நாட்டில் வந்து தங்கியதும் தமிழர்க்குரிய பெருமை. அதன் பலனைப் பெற அவர்கள் செய்த யோகத்தை அறிவது அவசியம்.

உலகம் மரணத்தின் பிடியிலிருந்து விலக யோகம் செய்தவர் பகவான். தனி மனிதன் காயகல்பம் தேடியதுண்டு. மரணமே அழிய வேண்டும் என்று பேசியவர்கூட உலகில் இல்லை. பகவான் மரணத்தை அழிக்கும் யோகத்தை மேற்கொண்டார். யோகத்தைப் பற்றி தீவிர ஆர்வமுள்ளவர்களுக்குப் பயன்படும் அறிமுக நூலாக ‘பொன்னொளி’யை வெளியிடுகிறோம். பிரார்த்தனை பலித்தால் போதும் என்ற பக்தர்களுக்கு இந்நூல் முழுப் பயன் தராது. யோக சித்தாந்தங்கள் சிக்கலாகத் தெரியும். அவர்கள் படித்தால் பகவானுடைய யோக சக்தி அவர்கள் பிரச்சனையைத் தீர்க்கும். தத்துவம் தெளிவாக வேண்டுமானால் யோகத்தில் ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும்.

ஸ்ரீ அரவிந்தர் யோகம் விளங்காது. அவர் எழுதியவை கடுமையானவை, விளங்காது என்று பரவலாக அபிப்பிராயம் உள்ளது. தான் எழுதியதை இதுவரை எவரும் புரிந்து கொள்ளவில்லை என அவரே சொல்லியிருக்கிறார். இது உண்மை. யோக சித்தி பெறுவதற்குரிய அளவு தெளிவு ஏற்படும் வகையில் அவர் நூல்கள் புரிவது கடினம் என்பது உண்மை. பக்தியும் நம்பிக்கையும் உள்ள அனைவருக்கும் விளங்கும் வகையில் அவரது பூரண யோகத்தை எழுத முனைந்ததால் உருவான கட்டுரையே ‘பொன்னொளி’. அதையே நூலுக்குத் தலைப்பாக அமைத்துள்ளோம். அவருடைய யோகத்தில் எந்தப் பரிச்சியமுமில்லாத பெண் அவர் யோக நூலைப் பயில ஆரம்பித்து, தன் ஐயங்களைப் போக்கிக் கொள்ள முனைந்தபோது, அவருக்குத் தேவையான விளக்கங்களைத் திருப்திபடும் அளவுக்குச் சொல்லிய பின் அக்கருத்துக்களைத் திரட்டி கட்டுரையாக எழுதியது “சாஸ்திர ஞானமும் குருவும்” என்பது.

நம் மரபில் முனிவர், ரிஷி, யோகி என்பவர்களை நாம் அறிவோம். அவர்கள் தவ நிலைகளைப் பாகுபாடு செய்து பகவான் எழுதியிருப்பதால், தெய்வங்களையும், கிருஷ்ணாவதாரத்தின் நீல நிறத்தையும் உலகம் அறிவதாலும், பகவான் சமாதியடைந்த பொழுது பொன்னிற ஒளி அவர் உடலில் தங்கியிருந்ததை நாம் அறிவதாலும், பகவானுடைய யோக நிலைகளை விளக்க உதவியாக இருந்தது. தத்துவங்கள் மூலமாக யோகத்தை விளக்குவதற்குப் பதிலாக மரபில் உள்ள வழக்கு மூலமாக யோகத்தை விளக்கியுள்ளேன்.

அன்னை அன்பர்கள் ஆத்ம சமர்ப்பணம் என்ற சொல்லை அறிவார்கள். அன்னையிடம் நம் பிரச்சனைகளை முறையிடுவதையும், அன்னையை நினைத்து காரியங்களைச் செய்வதையுமே இச்சொல் குறிப்பதாக நான் எழுதுவது வழக்கம். பிரச்சனை தீர இது போதும். ஆத்ம சமர்ப்பணம் மனிதனை திருவுருமாற்றம் அடையச் செய்வது. எண்ணம் சமர்ப்பணமானவுடன் மனம் மௌனத்தால் நிறைந்து அடுத்த க்ஷணம் அது செயலாகப் பூர்த்தியாகும் திறனுடையது. யோகத்தில் ஆத்ம சமர்ப்பணத்திற்கு இந்த நிலையுண்டு. ஆத்ம சமர்ப்பணம் யோகம்) என்ற கட்டுரை அதை விளக்குவது.

இது வரை என்னிடம் நெருங்கி வந்த எவரும் யோகத்தைப் பற்றி என்னை எதுவும் கேட்பதில்லை.அன்னையின் வரலாறு, கோட்பாடு, சொந்தப் பிரச்சனைகளுடன் பேச்சு முடிவடையும். ஒருவர் தொடர்ந்து யோகத்தைப்பற்றி அறிய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டதால் முதற் கட்டமாகவும், அஸ்திவாரமாகவும், அமைந்ததை ஒரு நீண்ட கட்டுரையாக எழுதினேன். வேதாந்த ஞானம், தெய்வீக வாழ்வு, ஈஸ்வர சக்தி, அம்ஸ ஸநாதனம், நம்பிக்கையால் வெளிப்படும் ஈஸ்வரி ஆகிய கட்டுரைகள், அந்தப் பக்தரின் தொடர்ந்த ஆர்வத்தைப் பூர்த்திச் செய்வதற்காக எழுதப்பட்டவை.

நம்பிக்கை, பக்தி, சரணாகதி, பலன் கருதாமல் செய்யும் வேலை ஆகியவை பொதுவான மன வளர்ச்சிக்கும் எல்லா யோகங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் அத்தியாவசியமாகத் தேவை. அவற்றை இங்கு குறிப்பிட்டாலும், அவை பூர்த்தி செய்யும் இலட்சியங்கள் வேறு. அவை செயல்படும் வழியும் பல சமயம் வேறுப்பட்டிருக்கும். இவை எந்த யோகத்தையும் பூர்த்தி செய்து மோட்சமடைய உதவுபவை. இங்கு மோட்ச தகுதி கிடைத்தபின் மோட்சத்தை ஏற்காமல், இறைவன் திருவுள்ளத்தை உலகில் பூர்த்தி செய்வதையே இலட்சியம்.

உலகில் நடைபெறும் அனைத்தும் அவன் செயல் என்பதால், அவனது திருவுள்ளம் தானே உலகில் பூர்த்தியாகிறது எனலாம். குசேலரும், கிருஷ்ணனும் ஒரே ஆசிரியரிடம் பயின்றாலும் வெவ்வேறு பலனை அடைந்தார்கள். இறைவன் அருள் பொதுவாக உலகில் செயல்படுகிறது. அதற்குட்பட்ட மனிதன் தன் திறமைகளால் முன்னேறுகிறான். மனிதன் இறைவனின் அருளைத் தன் வாழ்வில் (super grace) குறிப்பாகச் செயல்பட அனுமதித்தால் தன் திறமையால் முடிவில் பெறும் பலனை, முதலில் பெறுவான் என்கிறார் அன்னை. அதைச் செய்யும் முறையை விளக்குவதே அவர்களுடைய யோக நூல்கள். அதைச் செய்வது பகவானுடைய பூரண யோகம்.

அந்த யோகத்தின் உயர்ந்த கருத்துகள், இலட்சியங்களில் சில.

  • மனிதன் தெய்வத்தைவிட உயர்ந்தவன்.
  • தானே தெய்வமாக முயன்றால் மனிதன் தெய்வ நிலையைத் தாண்டி இறைவனுமாவான், பரம்பொருளாகவே மாறுவான்.
  • உலகம் அலங்கோலமான அர்த்தம் கெட்ட இடமல்ல, ஓர் அற்புதக் காட்சி.
  • ஊனக் கண்ணுக்கு அலங்கோலமாகவும், ஞானதிருஷ்டிக்கு அற்புதமாகவும் தெரியக் கூடியது.
  • மனிதநிலை இருக்கும் வரைதான் பாவம், புண்ணியம், நன்மை, தீமை என்பவை. மனித நிலையைக் கடந்தால் அவையில்லை.
  • மனிதன் தெய்வீக முழுமையை அடைந்தால், நிகழ்ச்சிகளும், செயல்களும், ஜடமும் அவனுக்குக் கட்டுப்படும்.
  • அறிவால் பரப்பிரம்மத்தை எட்டித் தொட்டு அனுபவிக்க முடியும்.

இத்தனை யோக சித்திகளையும் அடைய மனிதன் யோகியாகி சித்தி பெறவேண்டும். அதை மேற்கொண்டு சித்தி பெற்றவர்கள் இருவர், பகவான் ஸ்ரீ அரவிந்தரும், அன்னையுமேயாகும்.

அன்னையை முழு மனதுடன் ஏற்று பக்தியுடன் வழிபட்டு ஈடுபாட்டுடனிருப்பவர்களுக்கு யோகத்தின் முழுப்பலனை அன்னை அவர்கள் ஈடுபாடு முழுமைப்பட்ட நிகழ்ச்சிகளில் அளிக்கின்றார். முடிவான பலனை, முதலிலேயே அளிப்பது (super grace) பேரருள். அதை அடைவதே யோகத்தின் முடிவு. நாம் ஈடுபடும் காரியங்களில் அவற்றை நமக்காகச் செய்யாமல், அன்னைக்குச் சமர்ப்பணமாகச் செய்தால் முடிவான பலன் முதலிலேயே கிடைப்பதைக் காண்கிறோம். அதைப் பெறும் பொழுது நம் வாழ்வு யோக வாழ்வாக மாறுகிறது.

எட்டாத யோக சித்தியையும் ஒரு நிமிஷம் மனிதன் அனுபவிக்க முடியும் என்ற அளவில் செயல் படுவதே அன்னையின் அவதார நோக்கம். அதை இன்றும் பூர்த்தி செய்வது அவர் வழக்கம்.

பூரண யோகத்தை மேற்கொள்ள விரும்பும் மனிதனுடைய வாழ்வு தெய்வீகப் பூரணம் பெறுவது அன்னையின் அருள், அதுவே பேரருளாகும்.

- கர்மயோகி

*********



book | by Dr. Radut