Skip to Content

06. பகுதி - 6

தம்பி - இது எப்படி நடக்கிறது?

அண்ணன் - நாம் காசிக்குத் தந்தி அனுப்பினால் போய்ச் சேருகிறது. எப்படி? போஸ்ட்டாபீஸ், தந்தி என்பது சர்க்கார் ஸ்தாபனம். தந்தியை வாங்கி, அனுப்ப ஏற்பட்டது. அதற்குக் கடமைப்பட்டது. அதனால் அனுப்பிய தந்தி விலாசத்திற்குப் போகிறது. ரயில்வேயில் தந்தியுண்டு. நம் தந்தியை வாங்கவோ, அனுப்பவோ, கொண்டு போய்க் கொடுக்கவோ கடமைப்பட்டவரில்லை. இஷ்டப்பட்டால் செய்யலாம். போஸ்ட்டாபீஸ் ஸ்தாபனம், கடமைப்பட்ட ஸ்தாபனம். ரயில்வே நமக்குக் கடமைப்பட்டதன்று. சூட்சும உலகம் என ஒன்றுண்டு. அதில் உலகமே அடக்கம். அன்னை அவ்வுலகில் வசிக்கிறார். குருஷேத்திரத்தில் பாட்டி கொடுத்த குரல் சூட்சும உலகில் அன்னைக்குக் கேட்கிறது. அன்னை அதன் மூலம் பாட்டிக்கு உதவக்கூடியவரைத் தேடி அவருக்கு உத்தரவு போடுகிறார். சூட்சும ஸ்தாபனம் இது. அன்னை போட்ட உத்தரவு குருக்ஷேத்திரத்தில் உள்ள தமிழ் பேசுபவர்கட்குக் கேட்டது. பாட்டி அவர்களை சந்தித்தார். பத்திரமாக வீடு வந்து சேர்ந்தார்.

தம்பி - மற்ற கடவுள்கட்கு இந்தச் சூட்சும ஸ்தாபனமில்லையா?

அண்ணன் - நாம் மற்ற தெய்வங்கள் இப்படி நடப்பதாகக் கேள்விப்படவில்லை. தெய்வ லோகத்திற்கு (overmental world) இந்த சக்தியிருப்பதாகத் தெரியவில்லை.

தம்பி - சங்ராச்சாரியாருக்கு காஷ்மீர் ராஜா இறந்துவிட்டார் எனக் காசியில் அப்படித்தான் தெரிந்ததா?

அண்ணன் - சங்ராச்சாரியார் அவதாரப் புருஷர், விபூதி என்கிறார் பகவான். அவருக்கு நடப்பது நமக்கு நடக்குமா? விழுப்புரம் போன பணக்காரப் பாட்டி பர்ஸைத் தொலைத்து விட்டார். பஸ்ஸுக்குப் பணமில்லை. டாக்ஸி ஸ்டாண்டிற்குப் போனார். டாக்ஸிகாரனிடம் "நான் பர்ஸைத் தொலைத்துவிட்டேன். என்னைப் பாண்டிக்குக் கொண்டு போய்விடு. பணம் வீட்டில் தருகிறேன்'' என்றார். டாக்ஸி டிரைவர் பாட்டி கழுத்தில் 100 பவுன் நகையைப் பார்த்தான். கொண்டு வந்து விட்டுவிட்டுப் பணம் வாங்கிக் கொண்டு போனான். இல்லாதவருக்கு நடக்குமா?

தம்பி - சூட்சும ஸ்தாபனமில்லாமலும் இது நடக்குமா?

அண்ணன் - நீ குருக்ஷேத்திரம் போய் வழி தெரியாவிட்டால் என்ன செய்வாய்? போலீஸ் உதவியை நாடலாம். அந்த ஊரில் உள்ள பெரிய கம்பனி ஒன்றிற்கு நம் ஊரில் கிளையிருந்தால், அவர்களை நம்மூர்க் கிளையுடன் போனில் பேசச் சொல்லலாம். உள்ளூர்காரருக்கு உன்னை அடையாளம் காண முடியுமானால், வீட்டிலிருந்து தந்தி மணியார்டர் வரலாம். இவையெல்லாம் எல்லா இடங்களிலும் முடியாது. எல்லாருக்கும் முடியாது. ஆனால் வசதியுள்ளவர்க்கு, திறமையுள்ளவர்க்கு, சாதுர்யச்சாலிக்குப் பலிக்கும் நேரம் உண்டு. சரி, குருக்ஷேத்திரத்தில் பாட்டி கொடுத்த குரல் அன்னைக்குக் கேட்டுப் பதில் வந்தது, அன்னை சூட்சும ஸ்தாபனம். அன்னைக்கு இந்த சக்தியுண்டு என்றால் நம்ப முடியுமா? சிலர் நம்புவார்கள், வேறு சிலர் நம்பமாட்டார்கள்.

தம்பி - நம்பினாலும் அடுத்த முறை பிரச்சினை வரும்பொழுது "அன்னைக்கு இந்த சக்தியுண்டு. நான் அன்னையை அழைக்கப் போகிறேன்" என்று நம்புவது அரிது. அதைத்தான் அன்னையை அறியவேண்டும், நம்ப வேண்டும் என்கிறீர்களா?

அண்ணன் - 1994இல் சர்வதேசக் கமிஷன் ஒன்றில் அன்பர், உலகம் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க வழியுண்டு எனப் பேசினார். ரிப்போர்ட்டில் எழுதினார். ஐரோப்பாவில் வேலையில்லாத் திண்டாட்டம் 10% முதல் 12% வரையுள்ளது. அமெரிக்காவில் ஆள் கிடைக்கவில்லை. ஹாலந்தில் இந்தச் சதவீதம் 1½%க்கு வந்துவிட்டது. இங்கு அன்னை செயல்பட்டார் என நாம் கூறினால் யார் புரிந்து கொள்வார்கள்? புரிந்து கொண்டாலும் எப்படி எனப் புரியும். அதை எத்தனை அன்பர்கள் உணர்வால் ஏற்றுக் கொள்வார்கள்?

தம்பி - ஏன் அமெரிக்காவிலும், ஹாலந்திலும் இப்படி என்று கேட்பார்களே?

அண்ணன் - இக்கமிஷனில் 3 அன்பர்களிருந்தார்கள். அவர்களில் இருவர் அமெரிக்காவிலும், ஒருவர் ஹாலந்திலும் இருக்கிறார் என்றால், எத்தனைப் பேருக்கு அது பயன்படும்?

தம்பி - இக்கருத்தை ஏற்பது சுலபமன்று. அதற்குப் பெரிய நம்பிக்கை வேண்டும்.

அண்ணன் - இவை போன்ற நிகழ்ச்சிகள் 100க்கு மேல் எழுதப்பட்டுள்ளன. இப்பெற்றோர் அவற்றை எடுத்து, ஆராய்ந்து, அங்கெல்லாம் அன்னை சக்தி செயல்பட்டுள்ளது, எப்படிச் செயல்பட்டது என அறிய முன்வருவார்களா? வந்தபின் அதை ஏற்பார்களா? அதை ஏற்கும் நம்பிக்கையிருந்தால் அது குழந்தைக்கு உலகப் பிரசித்தி பெற்றுத் தரும்.

தம்பி - இவற்றை எல்லாம் நாம் பிறரிடம் சொல்வதே கஷ்டம். ஒருவர் சொல்லி அடுத்தவர் ஏற்கும் விஷயம் இது அன்று. தானே மனதில்பட வேண்டும். அப்படிப்பட்ட நம்பிக்கைக்கு ஆள் தேறாது.

அண்ணன் - இப்பெற்றோர் படித்தவர்கள், விவரம் தெரிந்தவர்கள், அன்பர்கள். ஆனால் இவையெல்லாம் தானே புரியுமா? சொன்னால் ஏற்பார்களா? நடக்கும் அளவுக்கு ஏற்பார்களா? அது நடக்க உதவுமா? என்பவை கேள்விகள்.

தம்பி - அன்னையைப் பெரும்பாலோர் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்பது இப்பொழுது தெரிகிறது. மழை வேண்டும் என்றால் பெய்கிறது என்று எத்தனைப் பேர் பார்க்கவில்லை? பணம் வேண்டும் என்றால் வரும் என அவர்கள் நம்புவார்களா?

அண்ணன் - ஓர் அன்பர் சொன்னார், "அன்னைக்கு சக்தியிருப்பது சரி. மழை கேட்டால் தருகிறார்கள். வேறு பல விஷயங்களிலும் பலிக்கிறது. பணம் மட்டும் வரமாட்டேன் என்கிறது" என்றார். இவர் பணத்தைச் சரியாகச் செலவு செய்வதில்லை. அதனால் வருவதில்லை. பணத்தில் சிரத்தையாக உள்ள அன்பர்களைக் கேட்டால், "மதர் எது கொடுக்கிறார்களோ இல்லையோ, இன்று ரூ.8000 கட்டவேண்டும் என்றால், அது எங்கிருந்துதான் வருமோ, தெரியாது, வந்துவிடும்" என்கிறார்கள். யார் எந்த விஷயத்தில் சிரத்தையாக, முறையாக இருக்கிறார்களோ அந்த விஷயம் அபரிமிதமாகப் பலிக்கும்.

தம்பி - ஒரு விஷயத்தில் பலிக்கவில்லை என்றால், அந்த விஷயத்தில் அவர் சரியில்லை எனப் பொருள்.

அண்ணன் - முரட்டுக் குணமுள்ள தாயார், "என் பெண்ணைத் தவிர எனக்கு எல்லாம் பலிக்கும்" என்கிறார். பெண் விஷயத்தில் பலிக்கவில்லை எனில் தாயாருக்கு அதே குணம். அது மாறினால் பலிக்கும். வேறு சிலர், "அன்னை பலிப்பார்கள், ஆனால் நீங்கள் சொல்வது போல் ஓஹோ! என்றிருக்காது" என்கிறார்கள். அவர்கள் குணம் ஓஹோ! என்றிருந்தால் பணம் அதுபோல் வரும்.

தம்பி - குணம் தடையாக இருந்தால் பேச வேண்டிய அவசியமில்லை.

அண்ணன் - அது மட்டும் போதாது. மலரும் மனம் (expansive) தேவை. மலர்ந்த உணர்ச்சி காரியத்தைப் பெருக வைக்கும். இறுக்கமான குணமிருந்தால் எதுவும் மலராது.

தம்பி - அப்படியானால், அன்னையாகப் பலிக்கமாட்டார்களா? நம்மைப் பொருத்துத்தான் பலனிருக்குமா?

அண்ணன் - தானே எல்லோருக்கும் பலிக்கும். அதற்கு அளவுண்டு. மலரும் மனம், பரந்த இலட்சியம் உள்ளவருக்கு அபரிமிதமாகப் பலிக்கும்.

தம்பி - 100 விஷயங்களை இப்பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும் என்றீர்களே, சில உதாரணங்கள் வேண்டும்.

அண்ணன் -

  1. 35ஆம் வயதில் குள்ளமானவர் வளர ஆசைப்பட்டார், 12” வளர்ந்தார்.
  2. மார்க்கட் விலைக்கு விலை போகாத நிலம் 3 மடங்கு விலைக்குப் போயிற்று.
  3. நின்றுபோன பேச்சுத் திரும்ப வந்தது.
  4. சர்வதேசக் கமிஷன் கொள்கையால் பெர்லின் சுவர் அழிந்தது.
  5. மெக்ஸிகோவில் தொலைந்த பர்ஸ் கிடைத்தது.
  6. புதுச்சட்டம் வந்து உதவியது.
  7. பாலைவனத்தில் பேரூற்று எழுந்தது.

நாமே சொல்லலாம், விளக்கம் தரலாம். அவர்களே புத்தகங்களைப் படித்து - சுமார் 500க்கு மேற்பட்டவை வெளியாகியுள்ளன - இவற்றை சேகரம் செய்து, ஏற்றுக்கொண்டு, பிறகு விபரம் கேட்கவேண்டும். 

தம்பி - இதைப் பற்றி தனியாகக் கட்டுரையிருக்கிறதா?

அண்ணன் - தனிக் கட்டுரையில்லை. படித்துச் சேகரம் செய்ய வேண்டும்.

தம்பி - வேறு ஏதாவது இது சம்பந்தமாகச் சொல்லக் கூடியதுண்டா?

அண்ணன் - தினசரி வாழ்வு அன்னை வாழ்வாக வேண்டும். It must be full of energy and surprises. வளரும் தெம்பும், ஆச்சரியமும் கலந்ததாக வாழ்வு மாறினால் அன்னையை ஏற்றுக்கொண்டோம் என அறியலாம்.

தம்பி - அன்னை நம் வாழ்விலிருந்தால் நாம் செய்யும் காரியங்கள் பல மடங்கு பெருக வேண்டும். அதுவே அன்னையிருப்பதற்கு அடையாளம்.

அண்ணன் - வாழ்வு பல நிலைகளில் (layers) அமைந்துள்ளது. ஒரு நிலையில் வேலை செய்து அது பூரணமானால், அடுத்த நிலைக்குப் போகலாம். ஆபீஸ் பிரமோஷன் அதுபோலுள்ளது. குத்தகைக்காரன் நிலம் வாங்குவது, டிரைவர் கார் வாங்குவது உடனே நடப்பதில்லை. பல ஆண்டு வேலை செய்தால் நூறில் ஒருவருக்குப் பலிக்கும். இன்று சமூக நிலை மாறியுள்ளது. டாக்ஸி டிரைவர் கார் வாங்கத் திட்டம் உண்டு. வேலையில் சேர்ந்தவுடன் வீடு கட்டத் திட்டம் உண்டு. தாலுக்காபீஸ் குமாஸ்தா திறமைசாலியானால் டிப்டி தாசில்தார் பரீட்சை எழுதலாம், டிப்டி கலைக்டர் பரீட்சை எழுதலாம்.

தம்பி - வாழ்வு நிலைகளை நிதானமாகவே கடப்பது வழக்கமானாலும், உடனே தாண்டும் சந்தர்ப்பமும் உண்டு.

அண்ணன் - அன்பர் கிளார்க் உத்தியோகத்திற்கு விண்ணப்பித்தால், ஆபீசராக செலக்ட் ஆகிறார். ஒரே வருஷத்தில் 3 பிரமோஷன்கள் வருகின்றன. எல்லா நிலைகளிலும் (layers) அடுத்த நிலை ஒட்டிக்கொண்டிருக்கிறது. அவை உடனுக்குடன் தொடர்ந்து கிடைப்பது அருள் செயல்படுவதற்கு அடையாளம்.

தம்பி - அருள் செயல்பட நாம், "காரியத்தைவிட அன்னையை முக்கியமாக மனதில் ஏற்று ஆத்மாவில் சந்தோஷப்பட வேண்டும்".

அண்ணன் - காரியத்தைச் சிறப்பாகச் செய்ய வேண்டும். ஆனால் மனதில் அன்னை மட்டுமேயிருக்க வேண்டும் (Care-free attitude & causeless joy).

தம்பி - அதைத்தான் soul’s freshness ஆத்மாவின் அற்புதம் என்று கூறுகிறார்களா? Freshness, spontaneity, opening, sincerity, receptivity, விழிப்பு, இயல்பாக இருப்பது, உண்மை, அன்னையை ஏற்கும் பாங்கு இவை முக்கியம்.

அண்ணன் - உணர்வால், மனதால் வாழாமல், ஆத்மாவால் வாழ வேண்டும். காரியத்தையும், பலனையும்விட கடமையையும், சிறப்பையும் கருதவேண்டும். குழந்தையுள்ளமும், குணச் சிறப்பும் தேவை.

தம்பி - வயது முதிர்ந்த அனுபவமும், திறந்த வெள்ளை மனதும் தேவை. உயர்ந்த அனுபவமும், சிறிய குழந்தை மனசும் சேர்ந்திருக்க வேண்டும்.

அண்ணன் - நல்லது மட்டும் இருந்தால், அற்புதம் மட்டும் நடக்கும். ஆத்ம விழிப்புக்கு ஆனந்தம் மட்டுமே பரிசு.

தம்பி - என்னுடைய நாளை (24 மணி) எப்படி அமைத்துக் கொண்டால் நல்லது எனக் கூறவேண்டும்.

அண்ணன் - எப்படிப் பார்த்தாலும் நாள் முழுவதும் அன்னையுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்புள்ளபடி அமைக்கவேண்டும் என்பது சட்டம்.

தம்பி - நடக்காதன எல்லாம் பேசினால், அது பேச்சோடு போய்விடும். என்னால் முடியக்கூடியதாகச் சொன்னால் நல்லது.

அண்ணன் - இது முடியும். அவசியம். இதற்குக் கீழே போனால் அன்னை தரிசனச் சமயங்களில்தான் நினைவு வரும். சாதாரண மனிதன் கோயிலுக்குப் போவதுபோல் முடியும். அன்னையைச் சற்று நேரம் தீவிரமாகவும், முக்கிய விஷயங்களில் முக்கியமாகவும், பொதுவான விஷயத்தில் பின்னணியாகவும், எதுவும் முடியாத நேரத்தில், "இங்கு எனக்கு அன்னை மறந்துவிட்டது" எனவும் கொள்ளமுடியும்.

தம்பி - Negative memory மறந்துவிட்டோம் என அறிவதும் அன்னையை நினைவு கூர்வதாகும். சரி சொல்லுங்கள்.

அண்ணன் -

  1. First waking thought, விழித்தவுடன் வரும் நினைவு, before sleeping நாள் முடிவில் அன்னையை நினைத்துத் தூங்கப் போவது.
    இப்படிச் செய்வதால் இரவு முழுவதும் ஏதோ ஓரளவில் நம்முடன் அன்னை நினைவு இருக்கும்.
  2. காலையில் வேலைக்குப் போகுமுன் - அரை மணி நேரம் அல்லது 10 நிமிஷம் - அன்றைய எல்லா வேலைகளையும் அன்னையிடம் உணர்வுபூர்வமாகச் சொல்லுதல்.
  3. எல்லோருக்கும் மிக முக்கியமான வேலை என இருக்கும். மாணவனுக்குப் பரீட்சை, பெண்ணுக்குத் திருமணம், வியாபாரிக்கு ஆர்டர் என எவருக்கும் மனதில் நிரந்தரமான விஷயம் என்றிருக்கும். அதை 2 அல்லது 3 முறை மனதில் ½ நிமிஷம் கொண்டுவந்து சமர்ப்பணம் செய்வது.
    • இதன் பெரும் பலன் வேண்டுமானால் நேரம் குறிக்கப்பட்டு நிமிஷம் தவறாமல் உதாரணமாக காலை 7½ மணி, இரவு 8.15, மத்தியானம் 1.15 எனக் குறிப்பிட்டு அந்த நிமிஷத்தில் செய்வது அவசியம்.
    • அது முடியாதவர் 2 அல்லது 3 முறை 1 நாளில் சமர்ப்பணம் செய்யவேண்டும்.
  4. அவசரமான வேலை, அவசியமான வேலை, கழுத்துக்குக் கத்தி எனச் சில சமயங்களில் ஒரு வேலை இருப்பதுண்டு. எலக்ஷன், தொலைந்து போன குழந்தை, கோர்ட் கேஸ், வந்த நல்ல வரன் நல்ல முடிவு சொல்வது என விஷயமிருப்பதுண்டு. அதை hourly consecration மணிக்கொருமுறை சமர்ப்பணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். இதையும் மேற்சொன்னதுபோல் குறிப்பிட்ட நிமிஷத்திலாவது, அல்லது மணிக்கு ஒரு முறையாவது செய்ய வேண்டும்.
  5. எந்த வேலை செய்தாலும் சமர்ப்பணம் செய்து ஆரம்பிக்கவேண்டும். இல்லையெனில் சமர்ப்பணம் தவறிவிட்டது என்றாவது கவனிக்கவேண்டும்.
  6. சாவித்திரி தினமும் 1/2 பக்கம் முதல் 5 பக்கம் வரை ஏதாவது ஒரு நேரம் படிக்கவேண்டும். முடியாவிட்டால் வாரத்தில் 1 நாளாவது மேற்கொள்ளவேண்டும்.
  7. அரை நிமிஷம் தாமதிக்காமல் நடந்தால் நல்லது என சில சமயங்களில் பிரச்சினைகளிருக்கும். கேட்ட பெரிய கடன் வருவது, வடக்கே போன மகன் இந்த வாரம் வருவான் என்பது படபடப்பாகிவிட்டது, வேண்டாத விருந்தாளி வந்து 52 நாள் ஆகியும் போகவில்லை (உ.ம். மாமியார், நாத்தனார், தூரத்து உறவினர்), போன் கனெக்ஷன் வரும் என எதிர்பார்ப்பது போன்றவை "எப்பொழுது முடியும்" என முள் மேல் நிற்பது போலிருக்கும். அதுபோன்ற பிரச்சினை இருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு செய்யலாம். அரை நிமிஷத்தில் மிகத் திருப்தியாக முடியக்கூடிய முறையை a) எனவும் மற்றவற்றை பிறகும் எழுதியுள்ளேன்.
    1. பெரு முயற்சி செய்து அப்பிரச்சினை முழுவதையும் மறப்பதே அம்முறை. அது பலித்தால் அடிக்கடி தவறும். தவறும்பொழுது ஒரு க்ஷணம் நிதானித்து மனத்துள் நுழைந்த எண்ணத்தை அப்புறப்படுத்த வேண்டும்.
    2. மணிக்கொரு முறை சமர்ப்பணம் செய்தல்.
    3. தியானம் ஆரம்பிக்கும்முன் அப்பிரார்த்தனையை மேற்கொள்வது.
    4. அப்பிரச்சினையைப் பற்றிப் பேசக்கூடாது என்ற முடிவு.
    5. அது விஷயமாக மனதில் குறை எழக்கூடாது என்ற தீர்மானம்.
    6. நடக்கிறபொழுது நடக்கட்டும் என தீர்மானமாக விட்டுவிடுதல்.
    7. முடிந்ததை முடிந்தபொழுது செய்வது.
    8. அந்நினைவு வந்தால் அன்னையை நினைக்க முயல்வது. முடியாவிட்டால் மனத்துள் ஓர் புன்னகையை வரவழைப்பது.
    9. யாராவது அதை எழுப்பினால் react செய்யாமலிருப்பது.
    10. ஏதோ நல்ல காரணத்திற்காக தாமதம் ஆவதாகப் புரிந்துகொள்வது.
  8. வாழ்க்கைக்கு முக்கியமான நெடுநாளையத் திட்டம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வேறு வேலையில்லாத பொழுது அதைப் பற்றிய விவரங்களைச் சேகரம் செய்வது, சிந்தனை செய்வது, அன்னை வழியில் அதற்கு முக்கியமானது என்ன என்று தேடுவது.
  9. வேலையில்லாத நேரத்தில் கடந்த காலக் குறைகளுக்காக வருத்தப்படாமலிருப்பது.
  10. முடிந்தால் அவற்றை past consecration கடந்த காலச் சமர்ப்பணத்திற்கு உட்படுத்துவது.

இந்த 10 தலைப்புகளில் ஒருவர் தன்னை உட்படுத்திக்கொண்டால், அவர் எந்த நிலையிலுள்ள அன்பரானாலும், அவருக்கு downfall அதற்குக் கீழே போகவேண்டிய அவசியமிருக்காது. வாழ்க்கை ஒழுங்காக, நிதானமாக, ஏதோ ஓரளவில் குறையின்றி ஓடிக்கொண்டிருக்கும். 

தம்பி - இப்படியெல்லாமிருந்தால், புதுப் பிரச்சினைகள் எழுவதைத் தடை செய்யுமா?

அண்ணன் - விதிவிலக்கான விஷயங்கள் தவிர, புதுப் பிரச்சினைகள் எழா.

தம்பி - ஏதோ சுலபமாகச் சொல்வீர்கள் என நினைத்தேன்.

அண்ணன் - இதைவிடச் சுலபமாக வேண்டுமானால், அம்முறை கஷ்டம் வருவதை விலக்காது.

தம்பி - அது முக்கியம்.

அண்ணன் - பொதுவாகப் பரபர என இருப்பவர்கள் லாட்டரி எதிர்பார்ப்பார்கள். பெருமுயற்சியை மேற்கொண்டு திணறுவார்கள். நாளுக்கு நாள் ஒரு சொத்து விற்றுக் குடும்பம் நடக்கும். நான் அன்பர்களைப் பற்றிச் சொல்லவில்லை. வாழ்வு இதுபோல் பல விதத்தின. அவர்களில் ஒரு விதத்தினர், இருப்பதைக் காப்பாற்றினால் போதும் என்பவர்கள். அவர்கள் வாழ்வில் செய்வதை நான் அன்பர்கட்கு - அவர்களுடைய உயர்ந்த நிலைக்குப் பொருந்துமாறு - சொல்லிய விதம் இது.

தம்பி - கைக்கு மெய்யாக இருப்பதைப் பார் என்பது பரவலான எண்ணம்.

அண்ணன் - இருப்பதைவிட்டு, பறப்பதை நாடுவதுபோல் என்பது "விவேகம்”.

தம்பி - அன்னை நேர் எதிராக அல்லவோ கூறுகிறார்கள்? "கைக்கு மெய்யாக இருப்பதே உண்மை”.

ஆனால் இன்று வரும் "பலாக்காயைவிட நாளைவரும் களாக்காய் மேல்” என்பதே அன்னையின் சட்டம்.

அண்ணன் - நாளைய பலாக்காய் கூடாது, இன்றைய களாக்காய் வேண்டும் என்பது நம் நடைமுறை.

தம்பி - அன்னை முறையை விளக்க, உதாரணத்துடன் சொல்லுங்கள்.

அண்ணன் - பாக்டரியின் மேனேஜராக வருபவனுக்குக் கால் பங்கு இலாபம் தர வந்த முதலாளியிடம் "கால் பங்கு வேண்டாம். 4, 5 வருஷம் சம்பளம் கொடுங்கள். பிறகு பாக்டரியே எனக்கு வேண்டும்'' என்றவன் இந்த பாக்டரியுமில்லாமல், எந்த வேலையுமில்லாமல், 7 வருஷம் அலைக்கழிந்து முடிவில் சொந்தத் தொழிலில் டைரக்டரானபொழுது அவன் மேனேஜிங் டைரக்டர், "இந்த பேப்பரில் கையெழுத்து போடு. எல்லாப் பணத்தையும் நான் எடுத்துக்கொள்கிறேன். நீயே பாங்க்கிற்குக் கட்டு" என்பதைக் கேட்டு தரையில் புரண்டு அழுததை நான் 100 முறை கூறியிருக்கிறேன்.

தம்பி - அதேபோல் மானேஜராக ரூ.450 சம்பளத்தில் 30 வருஷத்திற்கு முன் போனவர் முதலாளிக்கு நிறைய சம்பாதித்துக் கொடுத்தபொழுது 5% இலாபப் பங்கு தருவதாகச் சொன்ன முதலாளி 10% தந்தார். அது அன்று ரூ.40,000. மானேஜர் 5% போதும் என்றார். 2½ வருஷத்தில் மானேஜர், மானேஜிங் டைரக்டரானார் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.

அண்ணன் - இதைவிடப் பெரிய "பலாக்காய்" வேண்டுமா?

தம்பி - மேலும் உதாரணம் வேண்டும். விளக்கமில்லையா?

அண்ணன் - வேலையில்லாதவனுக்கு அமெரிக்காவில் வேலை வந்தது. அதனால் வீட்டிற்கு மரியாதை வந்தது. வீடு எதைப் பாராட்டுகிறது? அமெரிக்கா வேலையைப் பாராட்டி அமைதியாக இருக்கலாம். இன்றைய "மரியாதை"யைப் பாராட்டி டமாரம் அடித்தது.

தம்பி - இங்கே பேசாமலிருக்க பொதுவாக முடியாது. டமாரம் அமெரிக்க வேலையை இல்லை என்றாக்கியது தெரியுமே.

அண்ணன் - நாளைய பெரிய நல்ல பலனை எதிர்பார்ப்பது பரந்த மனம். கைக்கு மெய்யாய் ஆர்ப்பாட்டம் செய்வது சின்ன புத்தி. பெரிய மனசுக்குப் பெரியது வருகிறது. சுலபமான விளக்கமாயிற்றே.

தம்பி - பெரிய மனசு வேண்டும் என்பதுதான் விளக்கமா?

அண்ணன் - அடக்கமான மருமகள், பெரிய இடத்து நட்பு, பல்கலைக்கழகப் பேராசிரியருடைய அடக்கம் எளிமையானவரிடமிருந்தும் அவர் கற்றுக்கொள்ளும் பாங்கு அரிது. அன்பர்கட்கு அது கிடைத்தால் மாமியார் உடனே கொட்டமடிக்கிறார். பெரிய இடத்து நட்பை பெருமையாகப் பேசுவது, அடக்கமானவரை மட்டம் தட்டுவது போன்றவற்றைச் செய்யாத அன்பருக்குப் பெரிய இடமே வந்துவிடும். எளிமையானவருக்குப் பேராசிரியர் பதவியே வரும்.

தம்பி - அந்தப் பொறுமை எப்படி வரும்?

அண்ணன் - அதிர்ஷ்டம் பெற அப்பொறுமை வேண்டும். அவசியம் வேண்டும். எலக்ஷனில் அடக்கமானவன் ஜெயிப்பதைக் காண்கிறோம் அல்லவா?

தம்பி - எலக்ஷன் நமக்கு அடக்கத்தை உணர்த்தவே வந்தது போலிருக்கிறது. இன்றைய மாமியார் அன்றைய மருமகள்போல் நடத்தப்படுகிறார். தானே மாமியாருக்கு அந்த அடக்கம் வந்தால் மருமகள் அன்றைய மருமகளாகிவிடுவாள்.

அண்ணன் - அடக்கம் உண்மையாக வந்தால் அதற்கு அதிர்ஷ்டம் எனப் பெயர். அடக்கம் வந்து, அது உண்மையாக இருந்து, அதிர்ஷ்டம் வாராதவர் ஒருவரைச் சொல்ல முடியுமா?

தம்பி - அது சரி. அதிர்ஷ்டம் நிச்சயம் வருகிறது. உண்மையான அடக்கம் சின்ன மனிதனுக்கு வரும்பொழுது அவனுக்கு அழகாக நடக்கத் தெரியவில்லை. தன்னையே அசிங்கம் செய்துகொள்கிறான். கை கூப்பி வணக்கம் சொல்லவேண்டிய இடத்தில் காலில் விழுந்து நமஸ்காரம் செய்துவிடுகிறான்.

அண்ணன் - அடக்கம் வந்தது உண்மையானால், அது அழகான உருவம் பெறவே ஒரு தலைமுறையாகும். அடக்கத்துடன் அமைதி வர நாளாகும்.

தம்பி - அன்னை அமைதியை அனைவருக்கும் தருகிறார். நாமே அடக்கத்தைப் பெற்றால், அமைதி அதை அழகான பக்குவமாக்குகிறது. நம்மவர் பயந்துதான் அடங்குவார்கள்.

அண்ணன் - பயந்து அடங்கினாலும், அடக்கத்திற்குப் பலனுண்டு. பயந்த மாமியார். ஆர்ப்பாட்டமான மருமகள் வந்தாள். பையன் பெண்டாட்டி பேச்சைக் கேட்பவன். மாமியார் பயந்தவர், அன்பர். மருமகள் திட்டுவாள், அதிகாரம் செய்தாள், மாமியாரைப் பட்டினிப் போட்டாள், பலர் எதிரே கேசெய்தாள், கொடுமை செய்தாள். மாமியாருக்கு வசதி அதிகம். மகனுடைய வசதியே மாமியாருடையதுதான். ஒரு வார்த்தை அவள் பேசினால் மருமகள் கொட்டம் அடங்கிவிடும். மாமியாருக்கு மாதம் 70,000 வருமானம். மகனுக்கு ரூ.3200 சம்பளம். "நீ தனிக்குடித்தனம் போ'' என மாமியார் மகனிடம் சொன்னால் எரிவதை இழுத்ததைப் போலாகும். மாமியார் அதைச் செய்யாமல் கேலிக்கும், அதிகாரத்திற்கும் ஆளானார். மருமகள் எது செய்தாலும் "மதர், மதர்....." என்பாள்.

தம்பி - என்ன ஆயிற்று?

அண்ணன் - பெண்ணின் தகப்பனாருக்கு "மரியாதை” முக்கியமாயிற்று. பெண்ணைத் தனிக்குடித்தனம் வைக்கச் சொன்னார். பெண் அவரை மீற முடியவில்லை. அவர் வசதியற்ற பெரிய குடும்பக்காரர் - பெரிய குடும்பம் என்றால் 11 பேருள்ள குடும்பம் - 6000 ரூபாயில் வாழ்பவர். அத்துடன் "மாமியாரிடம் ஒரு பைசா வாங்கக்கூடாது. உங்கள் வீட்டுப் பக்கம் மாமியார் காலடி எடுத்து வைக்கக்கூடாது” என உத்தரவு போட்டுவிட்டார்.

தம்பி - ஆச்சரியமாக இருக்கிறதே. பெரிய விடுதலையாயிற்றே?

அண்ணன் - மாமியார் பக்தி பலித்தது. அவர் தம் பயத்தை தைரியமாக மாற்றியிருந்தால், பெண் தம்போல் அடக்கமாகியிருப்பாள்.

தம்பி - எப்படி மாற்றுவது?

அண்ணன் - மருமகள் ஆர்ப்பாட்டத்திற்குப் பயந்து அடங்குவதற்குப் பதிலாக உண்மையாகவே மனம் அடக்கத்தை மேற்கொண்டால் பயம் மாறி தைரியமாகும். அத்தோடு, பயம் தரித்திரம், தைரியம் அதிர்ஷ்டம். அப்படிச் செய்திருந்தால் வருமானம் பெருகும்.

தம்பி - என்ன இலட்ச ரூபாயாகியிருக்குமோ?

அண்ணன் - 70,000 ரூபாய் சம்பாதித்த பயந்தாங்கொள்ளி, அதுபோல் மாறியதால் 20 லட்சமானது உனக்குத் தெரியுமா?

தம்பி - பயத்திற்கும் பணத்திற்கும் என்ன சம்பந்தம்?

அண்ணன் - தைரியத்திற்குத் தைரியலக்ஷ்மி எனப் பேராயிற்றே.

தம்பி - ஆமாம். தைரியலக்ஷ்மியிருந்தால் மற்ற ஏழு லட்சுமியும் வரும் என்று ஒரு கதையுண்டு.

அண்ணன் - தைரியமாக இருக்க பொய் சொல்லக் கூடாது. உண்மை பேசத் தைரியம் வேண்டும்.

தம்பி - அதை யாரிடமும் சொல்ல முடியாது.

அண்ணன் - அந்தப் பரீட்சை பாஸாகாதவர்க்கு இரண்டாம் கட்டம் இல்லவேயில்லை.

தம்பி - மறைத்தால்தான் பிழைக்கலாம். எப்படி உள்ளதை வெளியில் சொல்வது?

அண்ணன் - மறைக்கக்கூடாததை, சொல்லவேண்டிய தைரியம் அவசியம். அது இல்லாதவனைப் பற்றிப் பேச்சில்லை.

தம்பி - இந்தக் கதை – Pride & Prejudiceஇல் - நாம் தெரிந்துகொள்ளக் கூடியவை மேலும் இருந்தால் சொல்லுங்கள்.

அண்ணன் - நாம் எப்படி அருளை விலக்குகிறோம். அருள் வரும்பொழுது பாராமுகமாக இருக்கிறோம் என்று அறிய இரண்டாம் பெண் எலிசபெத்தை நோக்கி, கர்வி டார்சி அருளாக வருவதாகப் பார்த்தால் தெரியும்.

தம்பி - நான் சொல்கிறேன். எனக்குத் தெரியும்.

முதன்முதலாக

1) டார்சி எலிசபெத்தை நோக்கி வந்தது, "அவள் அழகியில்லை'' என்று டான்ஸில் சொல்லியது, எலிசபெத் காதில் அது விழுந்தது. அவளுக்கு அது அருளாகத் தெரியவில்லை. தெரிய முடியாது. அனைவரிடமும் அதைக் கூறிச் சிரிக்கிறாள்.

அண்ணன் - வரும் அருள் எலிசபெத்தைக் கேலி செய்ய வைக்கிறது.

தம்பி -

2) டார்சி மனம் மாறி, நேரடியாக அவளிடம் வந்து டான்ஸ் ஆடும்படிக் கேட்கிறான். இது நேரடியாக அருள் அவளை நாடி வருவதாகும்.

அண்ணன் - அருள் வந்தாலும், ஏற்கனவே அழகியில்லை என்று கேட்டதே நினைவிருப்பதால் டான்ஸ் ஆட மறுக்கிறாள்.

தம்பி - அருளை நேரடியாக எலிசபெத் மறுக்கிறாள்.

3) சார்லேட் என்பவள் எலிசபெத்திடம் வந்து டார்சி உன்னையே பார்க்கிறான். அவனுக்கு உன் மேல் ஆசை. அழகன் விக்காம் நினைவில் டார்சியை அலட்சியம் செய்யாதே. இது பெரியது என்கிறாள். அருளை வாழ்வு எலிசபெத்திற்கு எடுத்துக் கூறுகிறது. காதில் ஏறவில்லை.

அண்ணன் - டார்சியாக அருள் எலிசபெத்தை நோக்கி வரும் பொழுது எலிசபெத் தறுதலை அழகனை மனத்தால் நாடுகிறாள். மனம் அருளிலிருந்து விலகி மருளை விரும்புகிறது.

தம்பி -

4) எலிசபெத் டார்சியான அருளை விட்டு கண்மூடித்தனமாக விலகுவதால், என்ன வருகிறது? அருவருப்பான காலின்ஸ் வருகிறது. அதையும் மறுக்கிறாள். டார்சியை அருளாகக் காண முடியாதவள், காலின்ஸை எப்படி அருளாகக் காண முடியும்?

அண்ணன் - காலின்ஸ் எலிசபெத்திற்கு அருள், தத்துவரீதியாக எல்லாமே அருள்தானே. காலின்ஸ் எலிசபெத்தை மறுத்ததால், சார்லேட்டைத் திருமணம் செய்துகொண்டு, ஹன்ஸ் போர்ட் - சார்லேட் வீட்டிற்கு எலிசபெத்தை அழைத்துப் போகிறார்கள். டார்சியும், எலிசபெத்தும் அங்கே சந்திக்கிறார்கள்.

தம்பி -

5) எலிசபெத் - proposalஐ - அருளைத் திட்டுகிறாள். அருள் அவள் கண்ணுக்குத் தெரியவில்லை. ஜேன் திருமணம் கெட்டுப்போனது தெரிகிறது. விக்காம் சொன்ன பொய்க் கதைகள் தெரிகின்றன. Proposal அருளாகத் தெரியவில்லை. அருளான proposal எரிச்சலாகத் தெரிகிறது.

6) டார்சி கடிதத்தைப் பார்த்து தன் குடும்ப நிலையை அறிந்து வெட்கப்பட்டு மனம் புழுங்கி மாறுகிறாள்.

அண்ணன் - இந்த மனமாற்றமே முதலில் டார்சியைத் திருமணம் செய்துகொள்ளச் செய்கிறது. மனமாற்றமில்லாமல், கதை வேறு வகையாக முடிந்திருக்கும். மனம் மாறிய பின் பெம்பர்லியை எலிசபெத் பார்த்துச் சந்தோஷப்பட்டு, "இந்த இடத்து எஜமானியாகியிருக்கலாம்" என்று தோன்றுகிறது.

தம்பி - டார்சி தனக்கு இல்லை என்பதால் எலிசபெத் கோபமாகவும், பராமுகமாகவுமிருந்தாள் என்பதும் உண்மை.

அண்ணன் - கிடைக்காது, எட்டாது என்பதால் வேண்டாம் என்ற மனநிலை அது. Proposal வந்த பின் பெம்பர்லியைப் பார்த்த பின் எலிசபெத் மனம் மாறுகிறாள்.

தம்பி - அவள் மனம் மாறிய அதே நேரம் டார்சியைப் பெம்பர்லிக்கு வெளியே சந்திக்கின்றாள்.

அண்ணன் - Life responseக்கு நேரம் தேவையில்லை. உடனே நடைபெறும் என்கிறோம்.

தம்பி - எலிசபெத் மனம் மாறுகிறாள். டார்சியைச் சந்திக்கின்றாள். தங்கை ஜார்ஜியானாவை அறிமுகம் செய்கிறான். "நமக்கு டார்சி உண்டு" என்று அவளுக்குத் தோன்றும்பொழுது லிடியா ஓடிப்போன செய்தி ஏன் வருகிறது?

அண்ணன் - டார்சி, எலிசபெத் உறவு சுமுகமானதானால், இந்தக் குறை வந்திருக்காது. அவள் மனம் மாறிவிட்டாள். இதுவரை அவளை வெறுத்தது, கோபமாகத் திட்டியது, டார்சிக்கும் எதிரான விக்காம் நல்லவன் எனப் பாராட்டியவை வெடித்து ஓடிப்போன செய்தி வருகிறது.

தம்பி - லிடியா ஓடிவிட்டாள் என்றவுடன் எலிசபெத் டார்சியை மறந்துவிடுகிறாள். ஏற்கனவே டார்சி எலிசபெத் குடும்பத்தை மட்டமாக நினைக்கிறான். இந்தச் செய்தி வந்தபின் டார்சியை மறப்பது அவசியமல்லவா?

அண்ணன் - அது உண்மைதான். மேலும் ஒரு விஷயம் உள்ளது. டார்சி நமக்கில்லை என்று அவள் தீர்மானமாக நினைத்தால், லிடியா விஷயத்தை டார்சியிடம் சொல்லியிருக்கமாட்டாள். உள்ளூர எலிசபெத் உணர்வு வேறு. அது "டார்சிக்கும் எனக்கும் உள்ள உறவு ஆழ்ந்தது. அது லிடியாவால் அறுந்து போகக்கூடியதன்று, உள்ளதை டார்சியிடம் கூறுவது உறவை வலுப்படுத்தும்" என்ற தன்னையறியாத ஆழ்ந்த அறிவு (subconscious understanding) இருப்பதால் உண்மையை அவனிடம் கூறுகிறாள்.

தம்பி - பின்னால் நடந்தவற்றைக் கவனிக்கும்பொழுது நீங்கள் கூறியது சரியெனப்படுகிறதே.

அண்ணன் - வலிய வந்த அருளைத் திட்டி அனுப்பிவிட்டு, இப்பொழுது மறைமுகமாக அதைத் திரும்பப் பெறும் முயற்சியிது.

தம்பி - இப்பொழுது எலிசபெத்திற்கு நன்றியறிதல் தோன்றுகிறது. அருள் முடிவில் பலன் தர இந்த நன்றியறிதல் வித்து.

அண்ணன் - ஏதாவது ஒரு ரூபத்தில் அந்த நன்றியறிதல் இல்லாமல் அருள் செயல்படாதா?

தம்பி - நாம் அருளைப் பெற இந்த நன்றியறிதல் அவசியம். அருளே நம்மை வந்தடைய முயலும்பொழுது இந்த நன்றியறிதலுமின்றிச் செயல்படும்.

அண்ணன் - பெற்றவர் நன்றி தெரிவிக்காவிட்டால், பெற்றவர் சூழ்நிலை அந்த நன்றியைத் தெரிவிக்கும்.

தம்பி - கடைசிப் பெண் லிடியா திருமணமாகி நியூகேசல் போனபின் டார்சி வந்தபொழுது எலிசபெத்திடம் பேசவில்லை என்பதால், "ஏன் இங்கே வரவேண்டும், இனி வரவேண்டாம்” என எலிசபெத் நினைக்கிறாள்.

அண்ணன் - மறுநாள் டார்சி மீண்டும் proposal தர இருக்கும்பொழுது எலிசபெத் டார்சி இனி வர வேண்டாம் என நினைப்பது நாமெல்லாம் அருளை வரவேற்பது போலிருக்கிறதே!

தம்பி - அதுவே அருளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவின் முத்திரை.

அண்ணன் - கடைசிவரை அருள் செயல்படுவதை மனிதன் முயன்று தடை செய்வதற்கு இது நல்ல உதாரணம். அருள் எலிசபெத்தை வந்தடைய பட்டபாடு பெரியது. கேலி, மறுப்பு, எதிரியை நாடுவது, கோபம், வெட்கம், விருப்பம், ஆபத்து, கிராக்கி மூலம் அருள் வந்து சேர்கிறது.

தம்பி - நம் அனுபவம் போலவேயிருக்கிறது எலிசபெத்தின் அனுபவம். முதலில் முயன்று விலகிப் போகிறாள். பிறகு கோபப்படுகிறாள். அறிவு வந்து வெட்கப்பட்டு விரும்பிய பிறகு ஆபத்துதான் வருகிறது. அதன் பிறகும் பெற்றுக்கொள்ள கிராக்கி போகவில்லை. நாம் பொதுவாகச் செய்வதெல்லாம் கதையில் வருகின்றன.

அண்ணன் - எதைக் கூறுகிறாய்?

தம்பி -

  1. உள்ளதை மறைத்து, திருப்பி, அதன் மேலே கட்டடம் எழுப்பி நம் மரியாதையைக் காப்பாற்ற முயல்கிறோம்.
  2. முக்கியமானவரிடம் முக்கியமான விஷயத்தை மறைத்து, நம் காரியத்தைச் சாதிக்க நினைக்கிறோம்.
  3. தானே நடக்கட்டும் என்ற பொறுமையில்லாமல் நாமே அவசரப்பட்டு ஆரம்பிக்கின்றோம்.
  4. மனத்தை மாற்றாமல், பிரார்த்தனையைத் தீவிரமாக்கினால் பலிக்கும் என நினைக்கிறோம்.
  5. நல்லதை மறுத்தால், கெட்டது வரும்.
  6. டார்சியைச் சீண்டினால், காலின்ஸ் வந்து "உன்னை யாரும் மணக்க முன்வரமாட்டார்கள்" என்பான்.
  7. கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க மறுத்தால், பிறகு லிடியாவுக்கும் விக்காமுக்கும் கொடுக்க வேண்டி வரும். 

அண்ணன் - ஜேன் இனிமையானவள் என்பது மட்டும் உண்மையன்று. தாயாரும், மாமாவும் தாழ்ந்தவர்கள், கடைசிப் பெண்கள் ஆபீசர்களைத் தேடி ஓடுகிறார்கள் என்பதை எலிசபெத் அறியவில்லை. அதை மறந்து ஜேனுக்குப் பிங்லி அமையவேண்டும் என உருகினாள். ஜேன் விஷயம் முடியவில்லை. லிடியாவின் சாயம் வெளுக்கிறது.

தம்பி - நம் வாழ்வில் ஆதி நாட்களை நினைத்துப் பார்த்தால் குறைகளை மறைப்பது மட்டுமன்று, குறைகளை நிறைவாக மாற்றப் பெருமுயற்சி செய்கிறோம். இன்றுள்ள கட்டடம் அப்படி எழுப்பப்பட்டதே என அறிவோம்.

அண்ணன் - அந்த உண்மை வெளிவாராமல் அதிர்ஷ்டம் வாராது.

தம்பி - நாமாக அதைக் கடந்த காலச் சமர்ப்பணத்தில் கரைக்காவிட்டால் ஒன்று அதிர்ஷ்டம் வாராது அல்லது விபரீதமாக வெடித்து விஷயம் வெளிவரும். அதுதானே ஜேன் குடும்பத்தில் நடக்கிறது.

அண்ணன் - பிங்லி, ஜேனை மணக்க வேண்டும் எனில் தங்கள் தாழ்ந்த நிலையை மனதால் முதலிலேயே உணர்ந்து அடங்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாததால், தானே வெளியாயிற்று.

தம்பி - லிடியாவைக் காப்பாற்ற பென்னட் குடும்பத்தால் முடியாது. அவளைக் கண்டுபிடிக்கும் வசதியில்லை. கார்டினருக்கு விக்காம் கட்டுப்படமாட்டான். பெரும் பணம் கொடுக்கும் வசதியுமில்லை. டார்சிக்கு விக்காம் உள்ள இடங்கள் தெரியும். டார்சியை அவனால் மீற முடியாது. கடன், கல்யாணம், கமிஷன் ஆகியவற்றிற்குப் பெரும்பணம் கொடுத்தது டார்சி. லிடியாவுக்கு கல்யாணமாயிற்று என அறிந்தவுடன், டார்சியால் நடந்தது எனத் தெரியாமல், "அடடா, டார்சியிடம் ஓடிப்போனதை மறைத்திருக்கலாமல்லவா?” என்று எலிசபெத் நினைக்கிறாள்.

அண்ணன் - யாருக்கு முக்கியமாகச் சொல்ல வேண்டுமோ, அவர்களிடமே மறைப்பது, மறைக்க முயல்வதே நம் பழக்கம்.

இது நம் சாதாரண மனநிலை. இன்று நமக்குத் தீராத பிரச்சினைகளை நினைத்துப் பார்த்தால், இப்படி மறைத்ததால் எழுந்த பிரச்சினையுமிருக்கும். சொல்ல வேண்டியவர்கட்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லாமலிருப்பது நம் பழக்கம்.

கணவன் மனைவியிடம் மறைப்பான்.

குழந்தை பெற்றோரிடம் மறைப்பார்கள்.

தம்பி - இந்தப் பழக்கமில்லாத குடும்பங்கள் குறைவு.

உள்ளதை மறைப்பது பொய். அதைச் செய்தபின் பிரார்த்தனை பலிக்காது. பிங்லி முதலில் தங்கள் ஊருக்கு வந்தவுடன் எலிசபெத்தின் தாயார் கணவனைப் பிங்லியிடம் அனுப்புகிறாள். இது அவள் initiative, வரட்டும் என்றில்லாமல், அவசரப்படுகிறாள். கணவனைப் பிடித்துத் தள்ளி பிங்லி வீட்டுக்கு அனுப்புகிறாள்.

அண்ணன் - என்ன நடந்தது? இனிமேல் இருக்கக்கூடாது என பிங்லி முடிவு செய்து இடத்தைக் காலி செய்துவிட்டான்.

தம்பி - இரண்டாம் முறை பிங்லி வந்தபொழுது பென்னட் போக மறுத்துவிடுகிறார். டார்சியும், பிங்லியும் தாமே வருகிறார்கள்.

அண்ணன் - இரண்டொரு நாளில் இரண்டு கல்யாணங்களும் முடிகின்றன. நாமெல்லாம் Mrs. பென்னட்போல் நடக்கிறோம். ஏன் காரியம் கூடி வரவில்லை என அடித்துக்கொள்கிறோம்.

தம்பி - எதை நாம் ஆரம்பிக்க வேண்டுமோ, அதைத் தவறாது ஆரம்பிக்க வேண்டும். எதை ஆரம்பிக்கக்கூடாதோ, அதை ஆரம்பிக்கவே கூடாது.

அண்ணன் - இப்படிச் செய்தால் பாக்கியான பிரச்சினைகள் தாமே தீருமே.

தம்பி - இது நாம் பிரச்சினை உற்பத்தி செய்யும் வழியாயிற்றே!

அண்ணன் - பிரார்த்தனை பலிக்கிறதைப் பார்த்தபொழுது, எல்லாப் பிரார்த்தனைகளும் பலிக்கும். நாமெப்படியிருந்தாலும், பிரார்த்தனையால் மட்டுமே பலிக்கும் என நினைக்கிறோம், தீவிரமாகப் பிரார்த்திக்கிறோம்.

தம்பி - மனம் மாற வேண்டிய இடத்தில், மனத்தை மாற்றாமல் தீவிரமாகப் பிரார்த்திக்கவே முடியாது. கடனை வருமானமாகக் கருதி அளவுகடந்து வாங்கிவிட்டு, தவற்றை உணராமல், பிரார்த்தனை பலிக்கவில்லை என்று பலர் கூறுகிறார்கள்.

அண்ணன் - எலிசபெத் தன் குடும்பம் மட்டம், தான் செய்தது தவறு என்று உணர்ந்த பிறகுதான் விஷயம் மாற ஆரம்பித்தது. அப்படி நினைத்தபிறகுதான் பெம்பர்லிக்கு அழைப்பு வந்தது.

தம்பி - கதை இந்த விஷயத்தை நன்றாகச் சொல்லாமல் எடுத்துக்காட்டுகிறது. பிங்லியின் தங்கை எலிசபெத்தைப் பற்றி குறை சொல்வதால் டார்சி மனம் மாறும் என நினைக்கிறாள்.

அண்ணன் - ஒவ்வொரு முறை அவள் குத்தலாகக் கேலியாகப் பேசுவதால் விஷயம் தலைகீழே போய், முடிவாக அவள் டார்சியை இழக்கிறாள்.

தம்பி - பல சமயங்களில் நாமென்ன நினைக்கிறோம், "சொன்னால்தானே தெரியும். சொல்வது அவசியமல்லவா?" என்று நினைக்கிறோம்.

அண்ணன் - அப்படிச் செய்தவற்றின் பலன் என்ன என்று நினைத்துப் பார்த்தால் தெரியும். ஒரு விஷயம்கூட நிறைவேறியிருக்காது.

தம்பி - நிறைவேறியிருக்காது என்பதுடன் எதிரான பலன் வந்திருக்கும்.

அண்ணன் - கதையில் அப்படித்தானே நடக்கிறது.

தம்பி - பிங்லியின் தங்கை, மனதை மாற்றிக்கொண்டு எலிசபெத்திடம், டார்சி திருமணத்திற்குப்பின், இரட்டிப்பு மரியாதையுடன் நடந்தாள்.

அண்ணன் - டார்சி அத்தனை டான்ஸ்களில் யாருடனும் ஆடவில்லை. எலிசபெத்தைக் கேட்கிறான். ஒருமுறை பதில் சொல்லத் தெரியாமல் ஏற்றுக்கொள்கிறாள்.

அடுத்த முறை மறுத்துவிடுகிறாள். டார்சி உண்மையானவன், நல்லவன், உயர்ந்தவன். அவனுடன் டான்ஸ் ஆட மறுத்ததன் பலன் என்ன?

தம்பி - காலின்ஸ் proposal தருகிறான். அருவருப்பான மனிதன். நல்லதை மறுத்தால், அசிங்கம் வருகிறது. அத்துடன், "யாரும் உன்னைக் கட்டிக்கொள்ளமாட்டார்கள்” என்றும் கூறுகிறான்.

அண்ணன் - கடமையை ஏற்று, அதை நிறைவேற்றுபவர்கள் இல்லை. பிரியத்திற்காகச் செய்வார்கள். டார்சி எஸ்டேட் நிர்வாகத்தில் உயர்ந்த முறையில் நடந்திருந்தால், விக்காமுக்கும், லிடியாவுக்கும் கொடுக்க வேண்டியிருந்திருக்காது. லிடியா மட்டம் என்று எலிசபெத்திடம் சொல்லியிருக்க வேண்டியதில்லை. டார்சிக்குப் பிடிக்காவிட்டால் proposal தர வேண்டாம். "நீ மட்டம், உன் தங்கை மட்டம்” என்று கூறி, "இருந்தாலும் நான் உன்னை மணக்க விரும்புகிறேன்” என்று கூற வேண்டிய அவசியமில்லை.

தம்பி - யாரை அவசியமில்லாமல் மட்டம் என்று டார்சி கூறினாரோ, அவள் செலவை டார்சி செய்ய வேண்டியதாயிற்று.

அண்ணன் - சொன்னது அவசியமில்லை, அதேபோல் லிடியாவுக்கு நிர்பந்தமில்லாமல் தானே செய்ய வேண்டியதாயிற்று.

தம்பி - இதையே truism of life வாழ்வின் சட்டம் என்று கூறுகிறோம். நல்லெண்ணத்தின் சக்தியைக் கதை நன்றாக வெளிப்படுத்துகிறது.

நல்லெண்ணம்

அண்ணன் - அன்னை நல்லெண்ணத்தின் மூலம் அபரிமிதமாகச் செயல்படுவதை நாம் அறிவோம். இந்தக் கதையில் சார்லேட்டிற்குள்ள நல்லெண்ணம் பெரியது.

தம்பி - எலிசபெத்திற்கும் பொதுவாக நல்லெண்ணமுண்டு. சார்லேட்டிடம் குறிப்பாக நல்லெண்ணம் உண்டு.

அண்ணன் - அதுதான் சார்லேட்டிற்கு £ 2000 எஸ்டேட் கிடைத்தது.

தம்பி - சார்லேட்டின் நல்லெண்ணம் £ 10000 எலிசபெத்திற்கு வந்தது.

சார்லேட்டின் நல்லெண்ணம் உயர்ந்தது. தனக்குத் திருமணமாகாதபொழுது எலிசபெத்திற்கு டார்சி வேண்டும் என நினைப்பது நல்லெண்ணம் மட்டுமன்று, உயர்ந்த நல்லெண்ணம்.

அண்ணன் - இது பிறர் வாழப் பொறுக்காத உலகம். எனக்கு 50 கோடியிருந்தாலும் உனக்கு 20,000 ரூ. வர என் மனம் தாங்காது. என்னால் முடிந்தால் தடுப்பேன் என்பதே இவ்வுலகம். இந்த உலகில்,

எனக்கு எதுவுமில்லாதபொழுது உனக்கு

எல்லாம் வரவேண்டும் என்று விரும்பும்

சார்லேட் மனம் உயர்ந்தது, உன்னதமானது.

தம்பி - பணம் பெருகும், மனம் பணத்தை உற்பத்தி செய்யும் என்று நாம் கூறும்பொழுது மனம் சார்லேட் மனம் போலிருக்க வேண்டும் என்கிறோம்.

அண்ணன் - அப்படிப்பட்ட மனமிருந்தாலும் உலகில் அதற்கு என்ன வரும்? சார்லேட் போல் £ 2000 எஸ்டேட் வரும். வருவது காலின்ஸாக வரும்.

தம்பி - சார்லேட் மனம் அன்பருக்கிருந்தால் அவருக்கு அதிர்ஷ்டம் வாராது. அருள் வரும். அவர் மனம் அளவுகடந்த பணத்தை உற்பத்தி செய்யும். பணம் உற்பத்தி செய்யும் மனத்தின் ரகஸ்யம் அதுவாகும். அதன் பெயர் நல்லெண்ணம்.

அண்ணன் - நாம் சொல்லும் எந்தச் சட்டமும் பிறர் வாழப் பொறுக்காதவனுக்கில்லை.

தம்பி - Mrs. பென்னட்டிற்கு எலிசபெத்தைப் பிடிக்காது. லிடியாவைத்தான் பிடிக்கும். பிங்லி வந்தவுடன் லிடியாவுடன் டான்ஸ் ஆட வேண்டும் என விரும்பினாள். பெற்றோருக்குப் பிள்ளைகளிடம் பாரபட்சம் கூடாது. பாரபட்சமிருந்தால் எதிர்மாறான பலன் வரும்.

அண்ணன் - கதை அதைத்தானே சொல்லுகிறது. பிடிக்காத மகள் எலிசபெத், அவளுக்குத்தானே பிங்லியைவிட உயர்ந்த டார்சி கிடைக்கிறான். இது என்ன சட்டம்? ஏன் இப்படிப் பலன் மாறி வருகிறது?

தம்பி - மனம் வேண்டாதவர்களை, வேண்டியவர்களைவிட அதிகமாக நினைக்கிறது. அதனால் energy சக்தி முழுவதும் அங்கே போய் பலன் வேண்டாத இடத்தில் வருகிறது.

அண்ணன் - விக்காம், லிடியா, Mrs.பென்னட் 3 பேருக்கும் ஓடியது வெட்கமில்லை, கல்யாணமானது சந்தோஷம்.

தம்பி - லிடியாவுக்கு ஏன் சூதாடுபவன் கணவனாக அமைந்தான் என்று விளக்க முடியுமா?

அண்ணன் - லிடியா Mrs.பென்னட்டிற்குச் செல்லம். Mrs.பென்னட் படபடப்பானவர். சூதாட்டம் படபடப்புக்குரியது. படபடப்பான தாயார் தம் பரிசாகச் சூதாடியைப் பெண்ணுக்கு அளித்தார்.

தம்பி - பிறர் மனத்தை அறிய வேண்டியது அவசியம் என்பது கதையில் முக்கியமான இடத்தில் வருகிறது.

அண்ணன் - எந்த இடம்?

தம்பி - டார்சி இரண்டாம் முறை proposal செய்ய இரண்டு நாட்களுக்கு முன்னால், எலிசபெத்திற்குக் கோபம் வந்து, "இனி டார்சி, பிங்லியை நான் பார்க்க பிரியப்படவில்லை" என்று நினைக்கிறாள். டார்சி மனத்தை அறிய இவள் முயன்றிருந்தால் நல்லது. Proposal முடிந்தபின் எலிசபெத், "ஏன் அன்று என்னிடம் பேசவில்லை" எனக் கேட்கிறாள்.

அண்ணன் - அது முக்கியமான இடமாயிற்றே. "நெஞ்சு நிறைந்த நேரம் பேச்சு வரவில்லை" என்கிறான். டார்சி அன்பால் நிறைந்த நேரம், அவன் மனத்தை அறியாமல் எலிசபெத் வெறுப்படைகிறாள்.

தம்பி - அழகை நாடும் மனம் கவர்ச்சியை உணரும். பணத்தை நாடும் மனம் பவ்யப்படும். டார்சி அழகையோ, பணத்தையோ நாடவில்லை. எலிசபெத்தை விரும்புகிறான். இது உயர்ந்த அன்பு, அதனால் அது நெஞ்சத்தை நிரப்பியது. இது உயர்ந்த அன்பானாலும் romance காதலாகாது. இதை emotional fullness உணர்வின் நிறைவு எனலாம். காதல் கண் இமைக்கும்முன் செயல்படும். Love at first sight. கண்டதும் காதல் என்கிறோம். அதற்கு நிறைவும், வேகமும், தீவிரமும் உண்டு. டார்சிக்குள்ள நிதானம் காதலுக்கில்லை.

அண்ணன் - அன்னையை அறிய சூட்சும ஞானம் வேண்டும். இந்தியருக்குச் சூட்சும ஞானமுண்டு என்று அன்னை கூறுகிறார். வாழ்வில் சூட்சுமமான நேரங்கள் வரும்பொழுது கவனித்தால் புரியும். ஜார்ஜியானா டார்சியின் தங்கை. அவள் விக்காமுடன் ஓடிப்போக முயன்றவள். எலிசபெத்திற்கு விக்காம் என்றால் உயிர். இருவரும் சந்திக்கிறார்கள். ஒருவரை ஒருவர் அளவுகடந்து விரும்புகிறார்கள். இருவருக்கும் ஒருவரையொருவர் அதிகமாகப் பிடிக்கிறது. இருவரும் விக்காம் மீது பிரியமுள்ளவர்கள் என்பதால், அவ்விஷயத்திலுள்ள ஒற்றுமை, இருவரையும் நெருங்க வைக்கிறது என்பதே இதனுள் உள்ள சூட்சுமம்.

தம்பி - எலிசபெத் பெம்பர்லியில் இருக்கும்பொழுது அனைவருடனும் உட்கார்ந்திருக்கிறாள். டார்சி அங்கே வர வேண்டும். டார்சி வந்துவிடுவானோ என்ற பயம் மேலிடுகிறது. டார்சி வந்தால் தேவலை என்ற உணர்வும் எழுகிறது. எது வேண்டும் என்று மனம் நிலையாகப் பேச முடியவில்லை. இதற்கு என்ன அர்த்தம்?

அண்ணன் - எலிசபெத் தகப்பனாருக்கு £ 2000 வருஷ வருமானம். அது அன்று இங்கிலாந்தில் பெரியது. தகப்பனாருக்குப் பின் எலிசபெத்திற்கு  £ 50தான் வருமானம். அவள் அஸ்திவாரம் 50, அனுபவிப்பது 2000 பவுன், பெம்பர்லி- £ 10,000. வீடு அரண்மனை போலிருக்கிறது. இந்த வீட்டிற்கு எஜமானியாகப் போகிறாள் எலிசபெத். டார்சி முடிவு செய்துவிட்டான். அவள் ஏற்றுக்கொண்டாள். ஆனால் அவ்வரண்மனையை ஆண்டு அனுபவிக்கும் திறன், வலிமை, நிதானம் - strength of nerves & substance - அவளுக்கில்லை. நிதானமில்லாததால் எண்ணம் நிலையற்றுள்ளது. அவளுடைய சஞ்சலம் அதைக் காட்டுகிறது.

தம்பி - பொதுவாக ஏழை நல்லவனாக இருப்பான். பணக்காரன் அநியாயமாக இருப்பான். விக்காம் ஏழை. ஆனால் நல்லவனில்லை. இருந்தும் டார்சி பணம் விக்காமுக்குப் போகிறது. என்ன சட்டம்? என்ன நியாயம்?

அண்ணன் - பிரெஞ்சுப் புரட்சி நடந்த நேரம் இது. பிரான்சில் பணக்காரர்கள் தலைகள் சீவப்பட்டன. அரசன் கொலை செய்யப்பட்டான். வியாபாரிகள் பதவிக்கு வந்தனர். ஜனநாயகம் ஏற்பட்டது. இங்கிலாந்தில் இந்தப் புரட்சியைத் தவிர்க்க பெரும் பணமுள்ளவர் அடுத்த நிலையிலுள்ள வியாபாரிகளுடன் கலந்துகொள்ள முயலும் காலம் இது. அதன் விளைவாக நமக்கு அநியாயமாகத் தோன்றும் "நியாயமான” காரியங்கள் நடக்கின்றன. விக்காம் பெறும் பணம் அது போன்றது.

தம்பி - சட்டமும் புரியவில்லை, நியாயமும் புரியவில்லை. விக்காம் பணம் பெறுவது தவறு என்று புரிகிறது.

அண்ணன் - புரட்சி நடந்தால் டார்சி போன்றவர்கள் தலைகள் சீவப்படும். பெம்பர்லியினுள் அங்கு வேலை செய்பவர் வந்து குடியேறுவார்கள். அதைத் தவிர்க்க நாட்டில் பெரும் பணக்காரர்கள், வியாபாரிகளுடன் நெருங்கி வருகிறார்கள். திருமணம் நெருங்கி வரப் பயன்படுகிறது.

தம்பி - இரு தரத்தாரும் திருமணத்தால் உறவு கொண்டால், புரட்சியைத் தவிர்க்கலாம் என எதிர்பார்க்கின்றனர்.

அண்ணன் - அது போன்ற நேரம் கீழேயுள்ளவர்களில் கெட்டிக்காரர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பெரும்பலன் பெறுவார்களில்லையா? விக்காம் அது போன்ற அழகன், இதமாகப் பேசுபவன், கெட்டிக்காரன்.

தம்பி - விக்காம் தறுதலை. அவனுக்குப் பணம் தருவது அநியாயமில்லையா?

அண்ணன் - விக்காம், ஜார்ஜியானாவை மணப்பதால் டார்சியின் தலை தப்பும் என்றால் விக்காம் பெறும் இலாபம் டார்சிக்குச் சம்மதமாகுமல்லவா?

தம்பி - அப்படிப் போகும் பணம் நல்லவர்கட்கும் போகக்கூடாதா?

அண்ணன் - நிலையில்லாத நேரம் தவறான கெட்டிக்காரனே அடித்துக் கொண்டு போவான். அப்படி அநியாயமாக விக்காம் "அடித்துக் கொண்டு” போவது டார்சிக்கு முடிவில் நல்லது.

தம்பி - இந்த நியாயம் எனக்குப் பிடிக்கவில்லை. மனம் ஏற்காது.

அண்ணன் - தத்துவரீதியாக இரு பெரு நியாயங்கள் உள்ளன. பொறுமையாகக் கேட்டுக் கொண்டால் சொல்கிறேன்.

  1. பணக்காரன் சம்பாதிக்கும் பணம் அனைவருடைய பணம்.
  2. நம் நியாயத்திற்கு "நல்லது” என்பதும், "கெட்டது” என்பதும் சமூகத்திற்குத் தலைகீழாகவுமிருக்கும். 

தம்பி - இது என்ன நியாயம்? பொது உடமையா? ஆன்மீகமா?

அண்ணன் - ஆன்மீகச் சட்டங்கள் இவை. ஸ்ரீ அரவிந்தம் இவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தனிமனிதன் என்பதேயில்லை. அத்தனையும் சமூகமே என்பது அடிப்படைக் கொள்கை.

விஸ்வாமித்திரர் பெற்ற சித்தியும், நியூடன் கண்டுபிடித்ததும், Bill Gates சம்பாதித்த பணமும், ஷேக்ஸ்பியர் எழுதிய இலக்கியங்களும் அவரவருடையன என நாம் அறிவோம். ஆன்மீகம் கூறுவது வேறு.

பார்லிமெண்ட் மெம்பரை நாம் நமக்குப் பிரதிநிதியாக அனுப்பியுள்ளதைப்போல் உலகம் தான் ஆன்மீகப் பலன் பெற விஸ்வாமித்திரரை நியமித்து தவம் செய்யச் சொல்கிறது. எனவே அவருடைய தவப்பயன் அனைவருடைய தவப்பயன். அவர் பிரதிநிதியேயின்றி, ஏகபோக உரிமையுள்ளவரில்லை என்பது தத்துவம். உலகம், தான் விஞ்ஞான அறிவு பெற வேண்டி நியூடனில் அதைச் சாதித்தால், அது உலகத்தின் சாதனை, நியூடனுடைய தனிச் சாதனையில்லை. உலகம் பெரும்பணம் உற்பத்தி செய்ய முனைந்தபொழுது அதை Bill Gates மூலம் சம்பாதித்தால், அப்பணம் சமூகத்திற்குரியது, Bill Gatesனுடைய தனி உரிமையில்லை. ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்கள் இங்கிலாந்தின் இலக்கிய வாழ்வின் இயற்கைச் செறிவு என ஆன்மீகம் கருதுகிறது.

ஒரு பெரிய எஸ்டேட் - Pemberley - பெரும்பணம் சம்பாதித்தால் அது எஸ்டேட் முதலாளிக்கு மட்டும் உரியதன்று. அங்கு வேலை செய்பவர்கட்கும் உரியது. அப்பணம் அந்த எஸ்டேட் உள்ள சமூகத்திற்குப் பொதுவாக உரியது என்பது ஸ்ரீ அரவிந்தம். உரியவர்க்கு அவர் உரிமையை, உடமையைத் தாராவிட்டால் புரட்சி ஏற்படும். புரட்சியைத் தவிர்க்க எடுக்கும் முயற்சியில் எதிர் கட்சியிலுள்ளவர் பெறுவது பார்வைக்கு அநியாயமாகப்படும். அவ்வநியாயத்தினுள் சமூகத்தின் பெரிய நியாயம் உண்டு.

2) ஒருவர் நிலத்தைச் சர்க்கார் எடுத்துக் கொள்வது அவர் கண்ணோட்டத்தில் அநியாயமாக இருக்கலாம். அந்நிலம் ரோடு போடத் தேவை எனில், அது சமூக நியாயமாகும். நியாயம் பல வகைப்படும். அவை வேறுபடும். பார்வைக்கு அநியாயமாகவும் தோன்றும். அதுபோல் தனி மனிதனுடைய நியாயம், குடும்பத்துடைய நியாயம், சமூக நியாயம், மனச்சாட்சிக்குரிய நியாயம், யுகதர்மம், ஆன்மீகத்திற்குரிய நியாயம் என்பன நம் கண்ணோட்டத்திலிருந்து பேரளவில் பல சமயங்களில் மாறுபட்டும், அநியாயமாகவும் தோன்றும்.

தம்பி - எலிசபெத் பெம்பர்லியைப் பார்த்தபொழுது "நான் இங்கு எஜமானியாகியிருக்கலாம்'' என்று நினைக்கிறாள். அவள் மனம் மாற ஆரம்பிக்கிறது. அதே நேரம் டார்சி நல்லவன், கர்வம் என்ற சாயலே இல்லாதவன், தங்கையிடம் அன்பானவன் எனவும், விக்காம் தறுதலையாகிவிட்டான் எனவும், கேள்விப்படுகிறாள். மனம் மாறியவுடன் டார்சியைத் தற்செயலாய்ச் சந்திக்க நேருகிறது. இந்த நிகழ்ச்சியை மேலும் விவரமாக எடுத்துச் சொல்ல முடியுமா?

அண்ணன் - இதனுள் சில அனுபவங்கள், உண்மைகள் அடங்கியுள்ளன. அவை,

  1. விவரம் தெரியாமற் பேசும்பொழுது நல்லவர்களைக் கெட்டவர்கள் என்போம்.
  2. அனுபவமில்லாத விஷயத்தைப் பற்றிச் சொல்லும்பொழுது அபிப்பிராயம் தவறாகும்.
  3. அறிவு, அனுபவத்தைத் தர முடியாது.
  4. உணர்வு பெறுவது அனுபவம், மனம் பெறுவது அறிவு.
  5. தோற்றமும், உண்மையும் மாறுபட்டும், வேறுபட்டும், எதிராகவுமிருக்கும்.

எலிசபெத் டார்சியை அலட்சியம் செய்யும்பொழுது பணக்காரனை அலட்சியம் செய்வதாக நாம் எடுத்துக்கொள்கிறோம். பணக்காரன் கர்வமாக இருந்தால், அலட்சியம் செய்வது உயர்ந்த பண்பு என நினைக்கிறோம். அதிலுள்ள உண்மை முழுமையானதன்று. 

எலிசபெத் £ 2000 எஸ்டேட்டில் வளர்ந்தவள் என்றாலும் £ 10,000 எஸ்டேட் என்றால் என்ன என்று அறியாதவள். பெம்பர்லி மாளிகையைக் கண்டவுடன், அதற்கும் லாங்பார்ன் என்ற தன் வீட்டிற்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. பெம்பர்லி- அரண்மனை. தன் வீட்டில் housekeeper ஹில் என்பவளை பெம்பர்லி- housekeeper ரேனால்ய்ஸ் என்பவரோடு ஒப்பிட்டால் ஹில், ரேனால்ய்ஸ் வீட்டு வேலைக்காரி போலிருப்பது தெரிகிறது.

கண்ட காட்சி கற்பனையைக் கடந்தது. உடல் புல்லரித்தது. மனம் மாறியது. டார்சியை நெதர்பீல்ட்டில் பார்க்கும்பொழுது டார்சியின் உண்மைச் செல்வ நிலை தெரியவில்லை. தெரிய முடியாது. மனம் வெறுப்பாக இருந்த சமயம் டார்சியைப் பற்றி விக்காம் சொல்லிய பொய்க் கதை காதில் விழுந்தது. மனம் மாறிய சமயம் டார்சியின் உயர்வு காதில் விழுகிறது. விக்காம் தறுதலை என்ற சொல் கேட்கிறது. அறிவு என்பது மனத்தின் உணர்வைப் பொருத்தது என்ற ஆன்மீக உண்மையை அறிகிறோம்.

டார்சி பார்வைக்குக் கர்வமாகத் தோன்றினாலும், கர்வம் அவனிடம் கொஞ்சமுமில்லை என்று கேள்விப்படுகிறாள். Impression is far from reality. தோற்றம், உண்மையிலிருந்து மாறுபட்டிருக்கும். தோற்றத்தை முடிவாகக் கொள்வது சரியாகாது.

பெம்பர்லியில் ரேனால்ய்ஸ் டார்சியைப் பற்றி "இனிமையானவன், நெகிழ்ந்த நெஞ்சம் உடையவன், 4 வயதிலிருந்து என்னிடம் கடுமையாக ஒரு சொல் சொல்லியதில்லை'' என்றபொழுது எலிசபெத்தை Mrs.கார்டினர் "இது டார்சியா?” என்னும்படி நோக்கினார்.

தம்பி - நெதர்பீல்ட்டில் எலிசபெத் எப்படி டார்சியின் உண்மை நிலையை அறியமுடியும்?

அண்ணன் - எலிசபெத்திற்கு டார்சியைப் பற்றி உண்மை தெரிய முடியாது. அவள் வெறுப்புடனிருந்ததால் வெறுப்புக்குரிய செய்தி வருகிறது. அத்துடன் இரு எதிரான குணங்களும் ஒருவரிடமே இருக்கும் என்பது உண்மை.

தம்பி - அது எப்படி?

அண்ணன் - கணித மேதை என்பதால் அவர் நல்லவர் எனக் கொள்கிறோம். நோபல் பரிசு பெற்றவர் உயர்ந்தவர் என்று வைத்துக்கொள்கிறோம். அறிவுக்கும் பண்பின் உயர்வுக்கும் சம்பந்தமில்லை. அழகுக்கும், உயரத்திற்கும் சம்பந்தமில்லை என்பதுபோல், இரு மாறான, எதிரான குணங்கள் ஒருவரிடமேயிருப்பதை நாம் அறிய வேண்டும்.

தம்பி - இதற்குரிய உதாரணங்கள் உண்டா?

அண்ணன் - உதாரணங்கள் உண்டு. நாம் அறியவேண்டியது மேற்படி உண்மை. உதாரணம் சொல்ல நாம் உயர்ந்தவரின் தாழ்ந்த குணங்களைக் கூறவேண்டும். தாழ்ந்தவரின் உயர்ந்த குணங்களையும் சொல்லவேண்டும். அது நமக்குப் பயன் தாராது. அவசியமானால் கூறலாம்.

தம்பி - ரேனால்ய்ஸ் பேசியதைக் கேட்ட கார்டினர் "இவர்கள் சொல்வது விக்காம் கூறியதற்கு எதிராக இருக்கிறதே" என்கிறார். எலிசபெத் இதையும் கேட்டபின் இதை நம்ப மறுத்து விக்காம் நல்லவன் என மனதால் உறுதிப்படுத்துகிறாள்.

அண்ணன் - கெட்டவனை நல்லவன் என நினைத்தால் மறுநாள் கெட்டவன் கெட்டதைச் செய்துவிட்டான் எனச் செய்தி வருகிறது.

தம்பி - விக்காம் கெட்டவன். மனம் அவனை இதமாக நினைக்கிறது. அதனால் கெட்ட குணம் வலுப்பட்டு, நமக்குக் கெட்டது செய்ய முடிகிறது. லிடியாவுடன் விக்காம் ஓடிவிட்டான் என்ற செய்தி மறுநாள் வருகிறது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டுமா?

அண்ணன் - நம் மனம் இடம் கொடுக்காமல் நமக்கு ஒரு காரியம் நடக்காது என்ற சட்டம் இங்குத் தெரிகிறது. அகம், புறத்தைப் பிரதிபலிக்கிறது.

தம்பி - இந்த ஞானம் நமக்கு நடக்க இருக்கும் தவறுகளைத் தடுக்கப் பயன்படுமா?

அண்ணன் - நம் மனம் தவறான உணர்வுக்கு இடம் கொடுக்காவிட்டால், நமக்குத் தவறு நடக்க முடியாது என்பது ஆன்மீக உண்மை. அன்னை கூறும் உண்மை. நம் அனைவர் அனுபவத்திலும் கண்ட உண்மை.

தம்பி - எலிசபெத் வீட்டில் நடந்த அசம்பாவிதத்திற்கு அவர்கள் இடம் கொடுத்துவிட்டார்கள் என்று பொருளா?

அண்ணன் - எலிசபெத்தைப் பொருத்தவரை விக்காம் மீதுள்ள அளவுகடந்த கனிவுதான் காரணம். தாயறியாத சூலுண்டோ என்பதைப்போல், நம் மனம் இடம் தாராமல் நமக்கு ஒரு காரியம் நடக்காது.

தம்பி - காலின்ஸ் ஏன் இப்படி அளவு கடந்து பேசுகிறார்? அனைவரும் சிரிக்கிறார்களே.

அண்ணன் - புதியதாக நாம் கற்றுக்கொண்டது அடிக்கடி நம்மைப் பேசச் சொல்லும். நம் அறிவுக்கு அதிகமாக நாம் பயின்றால் வாய் ஓயாமல் பேசச் சொல்லும். அளவுக்கு மீறியிருப்பதால் தானே நிரம்பி வழியும்.

காலின்ஸ் தகப்பனார் படிக்காதவர். நாகரீகமில்லாதவர். காலின்ஸ் முதல் தலைமுறையில் படித்தவர். பல்கலைக்கழகத்தில் பயின்றவர். கல்வியை உயர்ந்த முறையில் அவரால் பெற முடியவில்லை. அதன் புறத் தோற்றத்தையே பெற்றார். உயர்ந்த முறையில் பெற்றிருந்தால் அது மனதில் ஊன்றி அறிவுடன் கலந்து உள்ளே உறையும். மூளையும், அறிவும் சிறியன. முதல் தலைமுறை படிப்பு. தாம் பெற்ற கல்வியைப் பெரிதாக நினைக்கிறார். அதனால் அது உள்ளே தங்க முடியாமல் வழிந்து ஓடுகிறது. அவரை மீறி ஓடுகிறது.

தம்பி - புதுப் பணக்காரன் ஆடம்பரமாக வாழ்வதைப் போலிருக்கிறது?

Mr.பென்னட் எப்பொழுதும் நிதானமாகப் பேசுபவர். காலின்ஸ் முதலில் வந்தபொழுது லேடி காதரீனை முகஸ்துதியாக தாம் பேசுவதுண்டு என்று அவர் கூறியபொழுது Mr.பென்னட் "அவற்றை இயல்பாகப் பேசுவீர்களா? முன்கூட்டித் தயார் செய்வீர்களா?” எனக் கேட்கிறார். இது மட்டமான கேள்வி.

அண்ணன் - Mr.பென்னட் கேட்பது Mr.காலின்ஸ்க்குப் புரியவில்லை. எலிசபெத் புரிந்து சிரிக்கிறாள். சிரிப்பை அடக்கிக் கொள்கிறாள். பென்னட் மட்டமாகப் பேசுவது காலின்ஸுக்குப் புரியவில்லை. வாழ்வின் காதில் விழுகிறது. பின்னர் பதிலை அனுப்புகிறது.

தம்பி - லிடியா ஓடிவிட்டவுடன் காலின்ஸ் அதைக் கண்டித்து கடிதம் அனுப்புவது மூலம் வாழ்வு பென்னட்டிற்கு பதில் கூறுகிறது. நாம் மறந்தாலும், எவர் மறந்தாலும், வாழ்வு மறக்காது.

முதல் கடிதம் Mr.காலின்ஸிடமிருந்து வந்தவுடன் Mrs. பென்னட் உயிலை மாற்ற வேண்டும் என்கிறார்.

அண்ணன் - Mrs. பென்னட்டிற்குப் படிப்பில்லை. சட்டம் புரிய படிப்பு வேண்டும். படிப்பில்லாவிட்டால் சட்டத்தை ஏன் மாற்றக்கூடாது என்று நினைப்பார்கள். சட்டம் ஏற்பட்டதே படித்தவன் சட்டத்தின்மூலம் தன்னை ஆள அனுமதித்ததால்தான்.

தம்பி - படிப்புக்கும் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?

அண்ணன் - படிப்பு ஏற்பட்ட பிறகுதான் சட்டத்திற்கு மரியாதை வந்தது. படித்தவன் சட்டத்தை மீறக்கூடாது என்று புரிந்துகொள்வான். சட்டத்திற்கு அதிகாரமுண்டு எனப் படித்தவன் அறிவான். படிக்காதவனுக்கு அது தெரியாது. தன்னிஷ்டம்போல் நடக்கலாம் என நினைப்பான்.Mrs. பென்னட்டுக்கு படிப்பில்லாததால் (entai) உயிலை மாற்ற வேண்டுமென்று பேசுகிறாள். பெண்கள் படித்தவர்கள் என்பதால், அது முடியாது என்று விளக்கம் கூறுகிறார்கள்.

தம்பி - முதல் டான்ஸில் டார்சி எலிசபெத்தை முதலில் கவனிக்கவில்லை. பிறகு அவள்பால் ஈர்க்கப்படுகிறான். அவன் அதை அறியவில்லை.

அண்ணன் - Liking விருப்பம் என்பது மேலெழுந்தவாரியானது. Attraction கவர்ச்சி என்பது ஆழ்ந்தது. கவர்ச்சி என்பதை நாம் மட்டமான கருத்தில் பயன்படுத்துகிறோம். ஆனால் attraction என்பது உயர்ந்தது. வேறு சொல் சொல்ல முடியவில்லை.

டார்சி தன்னையறியாமல் அவள்பால் ஈர்க்கப்பட்டதால் அதனுள் உண்மையுண்டு. அது பல வகையில் பிறகு தெரிகிறது.

  • திருமணத்தில் முடிகிறது.
  • எலிசபெத் திட்டியது டார்சிக்குக் கோபத்தை உண்டு பண்ணவில்லை.
  • அவள் கடுமையாகச் சொல்லியவற்றை உண்மை என ஏற்று மனம் மாறுகிறான்.

தம்பி - இந்தக் கதையைப் பயன்படுத்தி நாம் என்ன அறியலாம்?

அண்ணன் -

  1. மனிதன் வளரும் வழி என்ன?
  2. சமூகம் எப்படி வளர்கிறது?
  3. சாதிப்பதெப்படி?
  4. செல்வம் எப்படி உற்பத்தியாகிறது?
  5. வாழ்வில் சந்தோஷத்தை எப்படி அதிகரிப்பது?
  6. உலகம் அற்புதம் என அறிவது.
  7. The Life Divineஇல் கூறும் தத்துவங்களை அறியலாம். 

தம்பி - கதையின் மையக் கருத்தென்ன?

அண்ணன் – The Life Divine p.239இல் ஜடமே சச்சிதானந்தம் என்று பகவான் விவரிப்பதை, நாமே சச்சிதானந்தம் என அறிய கதை உதவும்.

தம்பி – The Life Divineஇல் என்ன சொல்கிறார்?

அண்ணன் - நாம் ஜடம் என்பது இறைவன் ஒளிந்துள்ள உடல்.

உடலினுள் இறைவனும், ஜீவியமும் ஒளிந்துள்ளன. மேலும் உடலே ஆனந்தம். ஆனந்தமான உடல் மறைந்துள்ள ஜீவியத்தை ஆசைகாட்டி உள்ளுறை இறைவனை வெளிக்கொணர முயல்கிறது என்று The Life Divine கூறுகிறது.

தம்பி - புரியாத தத்துவமாக இருக்கிறதே.

அண்ணன் - தத்துவம் என்றால் புரியாது என்றுதானே அர்த்தம்!

தம்பி - கதையில் தத்துவம் எங்கே வருகிறது?

அண்ணன் - உள்ளுறை இறைவனை மறைந்துள்ள ஜீவியம்மூலம் புறஉருவமான ஆனந்தம் அழைக்கிறது என்பது தத்துவம். இந்தக் கதையில் 4 திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமணமே இவர்களுடைய "இறைவன்".

புற நிகழ்ச்சிகள் உள்ளுறை "திருமணத்தை" இவர்களுடைய குணம் (ஜீவியம்) மூலம் வெளிக் கொணர்கிறது.

தம்பி - திருமணம் கடவுள் என்றீர்கள். அப்படியானால் ஆனந்தமெது? புற நிகழ்ச்சிகளா? ஜீவியம் என்பது குணமா?

அண்ணன் - ஆமாம்.

தம்பி - திருமணம் எப்படி இறைவனாகும்?

அண்ணன் - உள்ளே திருமணத்திற்குரிய குணமிருந்தால் புறத்தே திருமணம் நடைபெறும். உள்ளே உள்ள குணம் மாறும்வரை திருமணம் தள்ளிப் போகிறது. ஜீவியம் மாறிய உடன் திருமணம் நடக்கிறது.

தம்பி - இந்த மாற்றத்தைப் புற நிகழ்ச்சிகள் செய்கின்றனவா?

அண்ணன் - நம் வாழ்வைப் புரிந்துகொண்டால், கதை புரியும், கதை புரிந்தால் நம் வாழ்வு புரியும்.

தம்பி - இப்படிச் சொல்லலாமா?

  • மனிதன் இறைவனைத் தேடுகிறான். அவன் உள்ளேயிருக்கிறான். உடல் ஆனந்தமயமானது. உடல் என்பது புற நிகழ்ச்சிகளாலானது. நம் குணம் இறைவனைக் காண மாறும்படிப் புறநிகழ்ச்சிகள் நிர்ப்பந்தம் செய்கின்றன.
  • பாத்திரங்களுக்குள் மறைந்துள்ள திருமணத்திற்குரிய குணம் எழும்வரை, பாத்திரங்களுடைய சுபாவம் - குணம் - மாறும்படி நிகழ்ச்சிகள் நிர்ப்பந்தம் செய்கின்றன. 

அண்ணன் - ஓரளவு பொருத்தமான விளக்கம். கதையில் டார்சியும், எலிசபெத்தும் உயர்ந்த திருமணத்திற்குரியவர்கள். அவர்கள் மனம் அதை நாடுகிறது. குணம், சுபாவம் இடம் கொடுக்கவில்லை. புற நிகழ்ச்சிகளால் சுபாவம் மாறியவுடன் டார்சி, எலிசபெத்தை மணக்கிறான்.

தம்பி - நமக்கு அதிர்ஷ்டம் என்ற இறைவன் உள்ளேயிருக்கிறான். நம் சுபாவம் அவன் வெளிப்படுவதை அனுமதிக்கவில்லை. லிடியா ஓடிப்போனவுடன் எல்லோர் சுபாவங்களும் மாறுகின்றன. திருமணம், அதிர்ஷ்டம், இறைவன் என்பன உள்ளிருப்பது நமக்குத் தெரிகிறது.

அண்ணன் - நமக்கு நடப்பவை நாம் மாறவேண்டும் என்று கூறுகின்றன. அதை ஏற்று மாறினால் அதிர்ஷ்டம் - இறைவன் - உள்ளேயிருந்து வெளிவருகிறது.

  • இன்று நம் சுபாவம் அதிர்ஷ்டத்திற்குத் தடை.
  • சுபாவத்தை மாற்றினால் அதிர்ஷ்டம் வரும். 

தம்பி - இது புரிகிறது. The Life Divine இதைத்தான் கூறுகிறதா?

மேற்சொன்ன அத்தியாயத்தில் "நம் நோக்கம் view மாறினால் ஜடம் திருவுருமாறும்” என்கிறார். நாம் அதைச் "சுபாவம் மாறினால் அதிர்ஷ்டம் வரும்" என்கிறோம்.

அண்ணன் - டார்சிக்கும், எலிசபெத்திற்கும் சுபாவம் மாறியவுடன் அதிர்ஷ்டம் வருகிறது. அதுபோல்,

  • நாம் இறைவனின் உருவம். நம்முள் இறைவன் ஒளிந்துள்ளான். உலக நிகழ்ச்சிகளால், அவற்றின் ஸ்பர்சத்தால், அவன் வெளி வருகிறான் என நாம் அறிய வேண்டும். அதை நம் வாழ்வுக்குரிய முறையில் சொல்ல வேண்டுமானால்,
  • நம் வாழ்வு எனும் உலகை நிர்ணயிப்பதும், சிருஷ்டிப்பதும் நாமே என்று முடிக்கலாம். 

தம்பி – Pride & Prejudice என்ற கதையை வாழ்வின் உண்மையான பிரதிபலிப்பாகக் கொள்ளலாம் என்று கூறுகிறோமே?

அண்ணன் - ஆமாம். அது பொதுவாக எல்லாக் கதைகளுக்கும் பொருந்தும்.

  • எந்த ஒரு நிகழ்ச்சியும் வாழ்வின் சிறு உருவம் miniature எனக் கூறலாம்.
  • எந்த நிகழ்ச்சியையும் நம் விருப்பு வெறுப்புகட்கு உட்படுத்தக்கூடாது. எலிசபெத்தும், விக்காமும் அதைச் செய்கிறார்கள். அது தவறு.
  • பாத்திரங்களை ஆத்மாவாகக் கருதவேண்டும். தங்களுக்குரிய ஆன்மீக உண்மையைக் கண்டுபிடிக்க அவை முயல்வதைக் காணவேண்டும்.
  • ஒவ்வொரு பாத்திரத்திலும் நம்மைக் காண வேண்டும்.
  • ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் நம் வாழ்வு பிரதிபலிப்பதைக் காண்பது அவசியம். 

தம்பி - Mrs.பென்னட்தான் எதையும் ஆரம்பிக்கின்றார்கள். முதன்முதலில் Mr.பென்னட்டை நெதர்பீல்ட்டுக்குப் போகச் சொல்வதே Mrs.பென்னட்தான்.

அண்ணன் - கடைசிவரை தனக்கு வேண்டும் என்பதை உடனே கேட்டு, வற்புறுத்தி, பெற முயல்வது Mrs.பென்னட்.

தம்பி - அப்படி Mrs.பென்னட் செய்வது எதுவும் கூடி வருவதில்லை. கூடிவந்தாலும் காரியம் தள்ளிப் போகிறது.

அண்ணன் - நாமே ஆரம்பிக்கக் கூடாது (initiative). அதுவும் அவசரப்பட்டு ஆரம்பிக்கக் கூடாது என்பது அன்னைச் சட்டம். ஆரம்பித்ததைத் தியாகம் செய்ய வேண்டும் என்கிறார் அன்னை. Mrs.பென்னட் எதிராக நடக்கிறார்.

தம்பி - முடிவாக Mrs.பென்னட் 3 திருமணத்தை முடிக்கிறாரே. அதை எப்படிப் புரிந்துகொள்வது?

அண்ணன் - Mrs.பென்னட் அளவுகடந்த சக்தியுடையவர் (full of energy). சக்தி காரியத்தை முடிக்கும். பெண்கள் திருமணத்தில் குறியாக இருக்கிறார். தெம்பிருந்து, காரியத்தில் கண்ணாக இருந்தால், காரியம் முடியும். அவசரப்பட்டு நாமே ஆரம்பித்தால் கெடும்.

தம்பி - கணவனை வற்புறுத்தி பிங்லியைப் பார்க்க அனுப்புகிறார் Mrs.பென்னட். ஜேனைக் குதிரை மேல் அனுப்பி, அங்கேயேயிரு என்கிறார். இப்படியெல்லாம் செய்தால் திருமணம் முடியும் என்று செய்கிறார். என்ன நடக்கிறது? நெதர்பீல்ட்டைக் காலி செய்துவிட்டு அனைவரும் போய்விடுகின்றனர்.

அண்ணன் - தந்திரமாக நடப்பது Mrs.பென்னட் வழக்கம். ஜேன் வண்டியில் போனால் திரும்பி வர வேண்டும். குதிரை மீது போனால், மழை பெய்தால், அங்கேயே இருக்க வேண்டும் என்பது அவர் திட்டம். அந்த அளவுக்குத் திட்டம் நிறைவேறுகிறது. அடுத்த கட்டத்தில் காரியம் கெட்டுப் போகிறது.

தம்பி - தந்திரம், யுக்தி, திட்டம் போடுதல் காரியத்தைக் கெடுக்கும் என்கிறார் அன்னை.

அண்ணன் - அது உண்மைதானே. எப்பொழுதும் இவை எதிரான பலனைத்தானே தருகின்றன.

தம்பி - அப்படித்தானே லிடியாவை பிரைட்டனுக்கு அனுப்பிவைக்கிறார் Mrs.பென்னட். அது ஓடிப்போக வசதியாகிவிட்டதல்லவா?

அண்ணன் - யுக்தி எப்பொழுதும் நல்ல பலன் தருவதில்லை.

தம்பி - இரண்டாம் முறை பிங்லி வந்தபொழுது மறுபடியும் Mrs.பென்னட் கணவரைப் போகச் சொல்கிறார். கணவர் மறுத்துவிடுகிறார்.

அண்ணன் - அந்த initiative எடுக்காதபொழுது திருமணம் முடிகிறது.

தம்பி - அருள் காரியத்தை முடிக்க விரும்பும்பொழுது, மனிதன் initiative எடுப்பதை அருளே தடுக்கிறது போலிருக்கிறதே. இந்தக் கதையைக் கொண்டு ACT செயலின் தன்மை, தத்துவம், முறை, பலன், சூட்சுமம் ஆகியவற்றை விளக்க முடியுமா?

அண்ணன் - செய்யலாம். பேரளவுக்குச் சொல்லலாம். முழுத் திருப்தி ஏற்பட வழியில்லை.

  1. எந்தச் செயலும் பிரபஞ்சத்தைத் தன்னுட்கொண்டது.
  2. மனிதனுக்கும், சமூகத்திற்கும், சுபாவம், தன்மை இருப்பதைப்போல் செயலுக்கும் உண்டு. எந்த மனிதன் செயலைச் செய்கிறானோ, அவனுடைய சுபாவம் அவன் செயலுக்குண்டு. எந்தச் சமூகத்தில் ஒரு செயல் எழுகிறதோ அதன் தன்மையும் அச்செயலுக்குண்டு.
  3. சிருஷ்டி, சாதனை: ஒரு செயல் சாதிப்பது சிருஷ்டி சாதிப்பதைப் போன்றது. சிருஷ்டியும் செயலும் ஒன்றே, ஒரே தன்மையுடையவையே.
  4. செயலின் ஜீவியம், மனிதனுக்குள்ள உரிமை: செயலுக்குத் தன்மையும், சுபாவமும் இருப்பதைப் போல் ஜீவியமும் (consciousness) உண்டு. செயலின் பலனை நிர்ணயிப்பது மனிதனே, அவனது பிரியமேயாகும்.
  5. வாழ்வின் எதிரொலிக்குச் செயலே கருவி.
    • டார்சி எலிசபெத்தை விரும்பி, மணக்கும்படிக் கேட்டு, அவள் கோபமாக மறுத்து, அவனும், அவளும் பிறகு மனம் மாறி, லிடியாவால் நிலைமை முழுவதும் மாறி, திருமணம் முடிகிறது. பிரபஞ்சம் என்பது உலகம். உலகம் பரிணாமத்தால் ஞானம் பெறுகிறது. ஞானம் அஞ்ஞானத்திலிருந்து எழுகிறது. இதுவே ஸ்ரீ அரவிந்தம். டார்சிக்கும், எலிசபெத்திற்கும் அவர்கள் வாழ்வே உலகம். கோபம், எரிச்சல், தப்பபிப்பிராயம் ஆகியவற்றுடன் அவர்கள் தொடர்பு ஆரம்பிக்கிறது. பிறகு பிரியம், பாசம், நல்லெண்ணமாக மாறுகின்றன. இது வாழ்வில் பரிணாமம். உலகில் நடப்பதே நம் வாழ்வில் நடப்பதால், நம் செயலினுள் பிரபஞ்சமாகிறது.
    • பொய்யான மனிதன் சொல்வது பொய். விக்காம் சொல்பவை அனைத்தும் பொய். பொய் சொல்பவன் செயல் பொய்யில் முடிகிறது.
    • டார்சி லிடியாவை மீண்டும் வாழ்வுக்குக் கொணர்வது சிருஷ்டிக்குச் சமமான செயல். ஆண்டவன் எப்படி உலகைச் சிருஷ்டிக்கின்றானோ, அதேபோல் டார்சி லிடியாவின் வாழ்வைச் சிருஷ்டிக்கின்றான்.
    • டார்சியை வெறுக்கும் எலிசபெத் பெம்பர்லியைக் கண்டு வெறுப்பை விருப்பாக மாற்றுகிறாள். மாறிய அதே நேரம் எவர்மீது விருப்பம் ஏற்பட்டதோ அவர் எதிரே வருகிறார். இதுவே எதிரொலி Life response என்பது. 

தம்பி - ஆன்மா வாழ்வை நிர்ணயிக்கிறது என்பதைக் கூறுங்கள்.

அண்ணன் - அருளை நாம் எப்படி ஏற்கிறோம்? நன்றியறிதல், பொய்யிலிருந்து மெய் எழுவது மூலம் இவற்றை விளக்கலாம்.

எலிசபெத்திற்கு டார்சி மீதுள்ள கோபம் போய், தன்னைக் காதலிப்பதற்காக நன்றியறிதல் எழுந்த பிறகுதான் நிலைமை மாறுகிறது.

அருளாக வரும் டார்சியை எலிசபெத் புயலாக வரவேற்கிறாள். நம் வாழ்வை நினைவுபடுத்திப் பார்த்தால், நாம் அருள் வரும்பொழுதெல்லாம் கோபமாக, பராமுகமாக, எரிச்சலாக வரவேற்றது தெரியும். ஆன்மா நம் வாழ்வை நிர்ணயிக்க நாம் அருளை விலக்கும் குணங்கள், வரவேற்கும் குணங்களாக மாறும்வரை காத்திருக்கிறது. மாறும்படிப் புற நிகழ்ச்சிகளை உருவாக்குகிறது.

தம்பி - குறுக்கிடுதல், initiative, தவற்றை விரும்பிச் செய்வது போன்றவற்றிற்குப் பலன் என்ன?

அண்ணன் - டார்சிக்கு ஜார்ஜியானா, பிங்லியை மணக்க விருப்பம். அதனால் பிங்லியை ஜேனை விட்டுப் பிரிக்கவேண்டி, ஜேன் இலண்டனுக்கு வந்ததை பிங்லியிடம் கூறவில்லை.

தம்பி - ஜார்ஜியானாவுக்கு £ 30,000 சீதனம் உண்டு. பிங்லியைவிட உயர்ந்தவர்கள் கிடைக்க வாய்ப்புண்டு.

பிங்லி ஜேனை மணந்தால் £ 1000தான் கிடைக்கும். அதிலிருந்து வருஷம் £ 50 வரும். ஜேனை விரும்புவது பிங்லிக்குதான் நஷ்டம். இது எப்படிக் குறுக்கீடு ஆகும்?

அண்ணன் - டார்சி தனக்குப் பிங்லி brother-in-lawஆக வேண்டும் என்று ஜார்ஜியானாவை மணக்க விரும்பினான். வாழ்வு ஜேனை மணப்பதால் brother-in-law ஆக்கியது. பிங்லி ஜேனை ஆர்வமாகக் காதலித்தது டார்சிக்குத் தெரியும். ஆர்வம், பிரியம், காதல் என்பவை சக்தி வாய்ந்தவை. அவற்றுள் தலையிடுவது சரியில்லை. தலையிட்டதால் என்ன ஆயிற்று?

  • செய்ததை மாற்றி பிங்லியிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதாயிற்று.
  • பிங்லியையும் ஜேனையும் பிரித்ததை வாழ்வு அனுமதிக்கவில்லை. அதை ஈடு செய்ய வாழ்வு டார்சியை, "லிடியாவையும், விக்காமுவையும்” சேர்த்து வை எனப் பணித்தது.

மேலும் ஒரு காரணமுண்டு. எந்தக் குடும்பத்தில் பிங்லி மணக்கக் கூடாது என டார்சி கருதினானோ, அதே குடும்பத்தில் தான் மணக்க விரும்பினான். இது double standards. தனக்கு ஒரு நியாயம், எதிரிக்கு வேறு நியாயம். வாழ்வு இதை அனுமதிக்காது. 

தன் நியாயப்படி பிறர் நடக்கவேண்டும் என டார்சி நினைப்பது அறிவுக்குப் பொருத்தமன்று.

தம்பி - லிடியா ஓடிப்போனதில் ஏதாவது விசேஷமுண்டா?

அண்ணன் - சமூகத்தில் லிடியா ஓடிப்போனவள், வெட்கம் கெட்டவள். இது புரட்சிகரமான நேரம். அளவுகடந்த தைரியசாலிகள் அற்புதமான பரிசு பெறும் நேரம். எதுவும் இரு வகைகளாக இருக்கும் என்பதால் பரிசு சேவை மூலமும் வரும், கொள்ளை அடிப்பது மூலமும் வரும். தைரியம், தெம்பு, துணிச்சல் ஆகிய லிடியாவின் குணங்கள் பெரியவை. அவை செயல்பட்டு ஓடிவிடுகிறாள். விக்காம் லிடியாவை இழுத்துக்கொண்டு போய்விட்டான் என்பதைவிட லிடியா விக்காமை இழுத்துக்கொண்டு ஓடினாள் என்பதே பொருந்தும். இதன் விளைவுகளையும், அவற்றின் காரணங்களையும் நாமறிய வேண்டும்.

  1. லிடியா ஓடிப்போனதால் ஜேனும், எலிசபெத்தும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
  2. லிடியா செய்த காரியம் அவளைப் பொருத்தவரை வெற்றியாக முடிகிறது.
  3. திருமணத்தை நினைக்காத விக்காம், திருமணம் செய்துகொள்ள வேண்டி வருகிறது.
  4. விக்காம் சிறுவயது கனவான - டார்சிக்கு brother-in-lawஆக வேண்டும் என்பது லிடியாவால் விக்காமுக்குப் பூர்த்தியாகிறது.
  5. டார்சி வீட்டு கர்மம் - ஓடிப்போவது - லிடியாவால் பென்னட் வீட்டிற்கு வருகிறது. நினைத்ததை எப்படியோ சாதிக்கும் திறமை, இராசி லிடியாவுக்கு உள்ளது.
  6. சமூகப் புரட்சிக் காலத்தில் சமூகத்தை அலட்சியப்படுத்தும் லிடியாவின் எண்ணம் பூர்த்தியாகிறது. நேரம் லிடியாவுக்கு நல்லதாக இருக்கிறது.
  7. ஒருவகையில் பென்னட் குடும்பத்திற்கு லிடியாவே "அதிர்ஷ்டம்” கொண்டு வருகிறாள். 

தம்பி - இதேபோல் எலிசபெத், டார்சியைப் பற்றி சொல்லுங்கள்.

அண்ணன் -

  1. முதலில் டார்சி கர்வமாக, அலட்சியமாக இருக்கிறான். அது அவனுக்கே திரும்ப எலிசபெத் மூலம் வசவாக வருகிறது. விக்காமுடைய பொய்க் கதை எலிசபெத் மேலும் எரிச்சல்பட உதவுகிறது. டார்சி கர்வமாக இல்லாவிட்டால் விக்காம் பொய்யால் டார்சி பாதிக்கப்பட்டிருக்கமாட்டான்.
  2. டார்சி தன்னுடன் டான்ஸ் ஆட மறுத்ததால் எலிசபெத் கோபப்படுகிறாள். செல்வன் அலட்சியப்படுத்துவான் என்பதை எலிசபெத் ஏற்றுக்கொண்டிருந்தால், டார்சிக்கு எலிசபெத் மீது அபிப்பிராயம் ஏற்பட்டிருக்காது. செல்வத்தைப் புறக்கணிக்கும் மனப்பான்மை உயர்ந்தது என்பதால், உயர்ந்தவன் மனம் மாறி உயர்ந்த குணங்களுடன் மீண்டும் அவளை நாடி வருகிறான். உண்மைக்குப் பரிசு; தோற்றத்திற்கன்று.
  3. இது ஒரு பக்கமிருந்தாலும், டார்சியை எலிசபெத்தால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. சார்லேட் டார்சியின் போக்கைக் காட்டியபொழுதும், proposal வந்த பிறகும், எலிசபெத்தால் டார்சியைக் கணவனாக கற்பனையும் செய்ய முடியவில்லை.
    • டார்சியே தன்னை நாடி வந்தும், அதை சார்லேட், காலின்ஸ், கார்டினர் கண்டுகொண்டு சொல்லியபின்னும், எலிசபெத்தால் அது நடக்கும் என நினைக்க முடியவில்லை.
    • அன்னை நம்மை நாடி வந்தும், அருளைக் கேட்காமல் கொடுத்தபொழுதும் நாம் அன்னைக்குத் தேவை என நம்மால் கருத முடியவில்லை.
    • எலிசபெத்திற்கு டார்சியைத் தெரியவில்லை. பெம்பர்லியைத் தெரிகிறது!
    • பெரும்பலனைச் சொன்னால் தெரியாது. கண்ணால் பார்த்தால் தெரியலாம், கையால் தொட்டு உணர்ந்தால் தெரியும்.
  4. எலிசபெத்தும், ஜேனும் தெளிவானவர்கள் (persons of character). அதனால் அவர்களால் முன்னுக்கு வர முடிகிறது. மற்ற பெண்களுக்கு மனம் வளரவில்லை. அதனால் முன்னுக்கு வர நினைக்க முடியவில்லை.
  5. எலிசபெத்தால் டார்சியைக் கணவனாக மனதில் வரிக்க முடியவில்லை. அதேபோல் டார்சியால் எலிசபெத் தன்னை மறுப்பாள் எனக் கருத முடியவில்லை. மனம் மாறி, கர்வமிழந்து, தன்னை ஏற்கமாட்டாளா என ஏங்கும்வரை நிலைமை மாறவில்லை.
  6. டார்சியும், எலிசபெத்தும் ஒருவரையொருவர் கவருகின்றனர். ஒருவர் குறையை நீக்க அடுத்தவர் வல்லவர் என்பதால் இக்கவர்ச்சி எழுகிறது. முடிவாக அக்குறைகள் அடுத்தவரால் விலக்கப்படுகின்றன. 

தம்பி - இந்தக் கதையின் பல அம்சங்களைக் கண்டோம். ஸ்ரீ அரவிந்தருடைய கருத்துப்படியும், தத்துவப்படியும், நாம் முக்கியமாக அறியக்கூடியன இக்கதையில் என்ன என்று மீண்டும் ஒரு முறை சொல்லும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.



book | by Dr. Radut