Skip to Content

03. பகுதி - 3

தம்பி - ஏன் அன்னை நம்மைத் தேடி வருகிறார்?

அண்ணன் - பிரம்மம் Self என்பதும், தெய்வலோகக் கடவுள்களும் அவரவர் உள்ள இடத்திலேயே இருப்பவர்கள் (typal beings). உலகில் வாழும் மனிதனுக்கும் அவர்கட்கும் சம்பந்தமில்லை. நெய்வேலி என்பது மின் உற்பத்தி நிலையம். அருகிலுள்ள கிராமங்கட்கு NLC சேவை செய்யக் கடமைப்பட்டதன்று. கிராமத்தார் கேட்டுக் கொண்டால் ஒரு பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி NLC ஏற்படுத்தினால் அது NLC கடமையன்று. அவர்களால் முடியும். கேட்டதனால் செய்கிறார்கள். அதுபோல் கடவுள்கட்கு மனிதனிடம் கடமை என்பதில்லை. மனிதன் பிரார்த்தனை அவர்களை எட்டினால் அனுக்கிரஹம் செய்கிறார்கள். உலகம் கடவுளை, இறைவனை மறந்துவிட்டதால் அதை நினைவுபடுத்த அன்னை அவதாரம் எடுத்தவர்கள். அதனால் அன்னை நம்மைத் தேடி வருகிறார்கள். நம்மைத் தேடி வர அவதாரம் எடுத்தவர் அன்னை.

தம்பி - தெய்வலோகக் கடவுள்கள், க்ஷர, அக்ஷரப் பிரம்மம், புருஷோத்தமன் ஆகிய அனைத்தும், இப்படிப் பார்த்தால், பிரம்மத்தின் (Absolute) பகுதிகள். அன்னை பிரம்மத்தின் முழுமை. பகுதி, அடுத்த பகுதியை நாடாது. பகுதி முழுமையை நாடும். முழுமை பகுதியை நாட வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் நாட முடியும்.

அண்ணன் - பிரம்மம் (Absolute) தன்னைச் சிருஷ்டியில் இழந்தபின், தன்னைத் தான் காண முயல்கிறது. அதுவே லீலை. லீலையைப் பூர்த்தி செய்ய பிரம்மம் எடுக்கும் முயற்சியே அன்னையின் அவதாரம். தன்னை மறந்த பிரம்மம் தன்னை உணர அன்னை உலகில் வந்து மனிதனுக்கு இறைவனை நினைவூட்டுகிறார். அதையே இறைவனின் பெருந்தியாகம் holocaust என்கிறார் பகவான். இந்த அம்சம் தெய்வங்கட்கில்லை.

தம்பி - ஆன்ம விழிப்பு என்பது தெளிவாக இல்லை.

அண்ணன் - சுயநலமானவனுக்குக் குடும்ப நலன் புரியாது. ஆபீசில் காசு வாங்குபவனுக்கு நேர்மை விளங்காது. ஆசையைப் பூர்த்தி செய்பவனுக்கு ஆன்மா விளங்காது.

தம்பி - ஆசையும், அறிவும் எதிராக இருப்பதை நாம் அறிவது போல் ஆன்மாவும், வாழ்வும் எதிராக அல்லது மாறியிருப்பதைக் கூற முடியுமா?

அண்ணன் - குடும்பஸ்தன் சூன்யம் வைக்கும் மந்திரம் கற்றுக் கொள்வதில்லை. கற்றுக் கொண்டால் வைப்பதில்லை.

அப்படிச் செய்தால் அவன் குழந்தை ரத்த வாந்தி எடுக்கும். சூன்யம் வைப்பது ஆன்மாவுக்குக் கெடுதல். ஆன்மாவில் இருளடைந்தவன்தான் அதைச் செய்வான். சூன்யம் பெரிய தப்பு. கோபம், எரிச்சல், போட்டி, பொறாமை அகந்தைக்குரியன. சாந்தம், நிதானம், பொறுமை, உதவி மனப்பான்மை ஆன்மாவுக்குரியன. இவை ஆன்மாவின் அம்சங்கள். இவையிருந்தால் ஆன்ம விழிப்பிருப்பதாகப் பொருள். ஆன்ம விழிப்பிருப்பது மேல்.

தம்பி - அன்னை எல்லா இடங்களிலும் ஒரு சிறப்பைச் சேர்ப்பார்களே. அதுபோல் இங்கு அன்னை என்ன செய்திருக்கிறார்கள்?

அண்ணன் - அச்சிறப்பே அன்னை செய்த யோகம். அதன் நிலைகளை ஏராளமாக Agendaவில் விவரித்திருக்கிறார்கள். மேலும், இதுவரை யாரும் செய்யாத யோகம் அது எனவும் கூறுகிறார்கள்.

நமக்கு உடல், உணர்வு, மனம், ஆன்மா என்ற வரிசை தெரியும். மேலே போகப் போக உயர்வு. இதற்கு உதாரணம் தேவையில்லை.

தம்பி - இருந்தாலும், சொன்னால் பயன் உண்டு.

அண்ணன் - கூலிக்காரன், சிந்திக்க முடியாதவன், உணர்வு - சொரணையில்லாதவன், உடலால் ஆனவன்.

கூலிக்காரனை மேய்ப்பவன், சிந்தனையில்லாவிட்டாலும், சொரணையுள்ளவன், ரோஷக்காரன் உணர்வாலான மனிதன். சிந்திப்பவன், சிந்தனையால் செயல்படுபவன், மனத்தாலான மனிதன். பிரகாசம், நிதானம், சாந்தம், பொறுமையுடையவன் ஆன்ம விழிப்புடையவன்.

தம்பி - இதற்கு மேல் என்னயிருக்க முடியும்?

அண்ணன் - ஆன்மா (descent) கீழே இறங்கி வந்து மனத்தில் வெளிப்படுவது, உணர்வில் வெளிப்படுவது, உடலில் வெளிப்படுவது அடுத்த உயர்ந்த கட்டங்கள்.

தம்பி - அதை நாம் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்?

அண்ணன் - ஆன்மா மனத்தில் வெளிப்பட்டால் மேதை பிறக்கிறான் (ஐன்ஸ்டீன்). உணர்வில் ஆன்மா வெளிப்பட்டால் நேரு போன்ற புனிதன் வருகிறான். உடலில் ஆன்மா வெளிப்பட்டால் அவதாரப் புருஷன் பிறக்கிறான்.

தம்பி - இவையெல்லாம் நமக்குச் சம்பந்தமில்லாத விஷயங்கள்.

அண்ணன் - நாம் unconscious கண்மூடியாக இருந்தாலும், நம் அளவில் அருள் இதுபோல் எல்லா நிலைகளிலும் செயல்படுகிறது. நாம் அதன் பலனை மட்டும் கருதுகிறோம். Mother's Grace என்கிறோம். உட்பொருளை அறிவதில்லை.

தம்பி - உதாரணமாகச் சொல்ல எதுவுமில்லையா?

அண்ணன் - மனம் விழிப்பாகவுள்ளவர் ஒருவர் அன்னையிடம் வந்தார். ஈடுபாடாக இருந்தார். அவர் மனம் விசாலமடைந்ததையும், அதனுள் உற்பத்தியான பெரிய கருத்துகளையும் அவர் அறியவில்லை. பிற்காலத்தில் மேதை எனப் பெயர் பெற்றவர் அவரைத் தேடி வந்து அவருடைய கருத்தின் மேன்மையைப் பாராட்டினார். அதன் விளைவாக உலகுக்கு ஸ்ரீ அரவிந்தத்தின் அடிப்படையில் புதிய தத்துவம் எழுந்தது. இது ஆன்மா மனத்தில் விழிப்படைந்ததன் பலன்.

தம்பி - ஒரு பெரிய புதிய தத்துவம் எழுவது மேதாவிலாசம்தான்.

அண்ணன் - உணர்வில் ஆன்மா வெளிப்பட்டால் வீரன், மாவீரன் ஜனிப்பான். அதுவும் நடந்தது. அன்னையை உணர்வில் வெளிப்படுத்தியவர் உலகச் சமாதானத்திற்கு உழைத்தார். அவர் முயற்சியால் நல்ல பலன் ஏற்பட்டது. நேரடியாக அது அவரால் நடந்ததை அவரைச் சுற்றியுள்ள சிலரே அறிவார்கள். சூட்சுமத்தில் உலகச் சமாதானம் உயர்ந்த கட்டத்தில் பூர்த்தியாயிற்று. ஆயுதத் தளவாடங்களைக் குறைக்க வல்லரசுகள் ஒத்துக் கொண்டன. விபரம் தெரிந்தவர் புரிந்து கொள்ளலாம். மற்றவர்க்கு விளக்க முடியாது.

தம்பி - நமக்கு இப்படி ஒரு விஷயம் நடந்தது என்று தெரிந்தால் போதும். நாம் எவரையும் நம்ப முயல வேண்டியதில்லை.

அண்ணன் - உடலில் ஆன்ம விழிப்பு ஏற்பட்டால், அவதாரப்புருஷன் பிறப்பான் என்பது ஸ்ரீ அரவிந்த அவதாரத்தின் சிறப்பு. அன்னை அந்த யோகம் செய்ததை விவரித்துள்ளார்.

தம்பி - எளிய பக்தருக்கு ஒன்றுமில்லையா?

அண்ணன் - இதுவரை யாருக்கும் தோன்றாத உயர்ந்த யோசனை பக்தர்கட்குத் தோன்றியது, உனக்குத் தெரியாதா? பக்தர்களே அதைப் பொருட்படுத்துவதில்லை என்பதால் அது பலன் தரும்வரை எவரும் பின்பற்றுவதில்லை. நிறைய பக்தர்கட்கு இதுவரை தோன்றாத எண்ணம் தோன்றுகிறது. அது மனத்தால் ஆன்ம விழிப்பாகும். பாஸ் செய்ய முடியாத பையன் முதல் மார்க் வாங்குவது அது போன்றதாகும். வேலை போய்விட்டால், மனிதன் நடுங்குவான். பக்தர் ஒருவருக்கு வேலை போய்விட்டது. இலாக்கா டைரக்டர் அந்த உத்தரவைப் பிறப்பித்தார். இதுபோல் வேலை போனால் வருவது கடினம். கடினமென்றாலும் பக்தருக்கு வேலை வந்தது. அவரது ஆன்மா உணர்வில் விழித்தது. அருள் செயல்பட்டது. அதற்கப்புறம் நடந்தது ஆச்சரியம். போன வேலை வந்தால், வேலையை எடுத்தவருக்குத் தண்டனை என்பதில்லை. அப்பீலில் ஜெயிக்கலாம், தண்டனை அளித்தவரை ஒன்றும் செய்யமுடியாது. பக்தரை நீக்கிய டைரக்டருக்குத் தண்டனை கிடைத்தது. நாம் இதை அருள் என அறிகிறோம். அரசன் சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டாலும், ஜட்ஜ் தவறாகக் கொலைத் தண்டனை விதித்தாலும், அப்பீல் செய்து, கருணை கோரி விடுதலை பெறலாம். அதுவே உலக நீதி. அரசனுக்கோ, ஜட்ஜுக்கோ தண்டனையில்லை. ஆன்மா உணர்வில் எழுந்தால், அதைத் துன்புறுத்துபவருக்குத் தண்டனை விதிக்கும் திறன் அதற்குண்டு. வேலையை இழந்தவர் எதுவும் செய்யவில்லை. தானே டைரக்டருக்குத் தண்டனை கிடைத்தது உணர்வில் ஆன்மா விழித்து சரித்திரத்திலில்லாததை நடத்தியதாகும்.

தம்பி - உடலுக்கும் உதாரணம் உண்டா?

அண்ணன் - உடலுக்குரிய உதாரணம் ஸ்ரீ அரவிந்தர், அன்னைதான். எளிய பக்தர் அவதாரமான உதாரணமில்லை. வேண்டுமானால் உடல் என்பதை உழைப்பு வருமானம் எனக் கொண்டால், உதாரணம் சொல்லிப் பார்க்கலாம். வருமானத்தை அளவுகடந்து அதிகரிப்பது முடியாத காரியம். உடலில் ஆன்மா விழித்தால் அதுவும் நடக்கும். ஏராளமான ஏழை மக்களின் வருமானத்தை 10 மடங்கு அதிகரிக்க முயன்றபொழுது 1000 மடங்கு வருமானம் அதிகரித்ததை நாம் அறிவோம். அதை உடலுக்கு உதாரணமாகக் கூறலாம். ஏனெனில் உடலின் உழைப்பே வருமானமாகும்.

தம்பி - அஜெண்டாவில் அன்னை என்ன சொல்கிறார்?

அண்ணன் - யோகம் என்பது மேலே போவது, பூரண யோகம் மேலும், கீழும் போவதல்லவா?

தம்பி - வாழ்வை ஏற்பதைத்தானே கீழே போவது என்று கூறுகிறீர்கள்?

அண்ணன் - ஆமாம். இதுவரை செய்த யோகமெல்லாம் மேல் மனத்தின் யோகம். பூரணயோகத்தை மேல் மனத்தினின்று செய்ய முடியாது. உள்ளே போய் செய்ய வேண்டும். உள்ளே (subliminal, அடி மனம்) போவதை descent கீழே போவது என்கிறார். இதுவரை யோகம் அகந்தையின் சாதனை. இனி அகந்தையை அழிப்பதே சாதனை.

தம்பி - கீழே போவது என்றால்

 1. வாழ்வை ஏற்பது
 2. அகந்தையை அழிப்பது
 3. அடிமனத்தை அடைவது
 4. திருவுருமாற்றம் செய்வது என்று கூறலாம். 

அண்ணன் - அது சரி. நடைமுறையைக் கூறினால்தான் புரியும். ஒரு யோகி மோட்சமடைந்தால் அவருக்கோ, அவர் வாழ்வுக்கோ, உலகத்திற்கோ என்ன பலன்? 

 • அவர் ஆன்மா ஜீவனிலிருந்து பிரிந்து ஆண்டவனை அடைகிறது.
 • உலகுக்கு அவர் ஓர் உதாரணம். அதற்கு மேல் கூறப் பலன் எதுவுமில்லை. அதே சமயம் பூரணயோகி மோட்சத் தகுதி பெற்றால் அவர் அகந்தை அழியும். உள்ளே செல்வார். உலகத்துடன் தொடர்பு கொள்வார். அவருடன் தொடர்பு கொள்பவரெல்லாம் அவர் பெற்றதைப் பெற முடியும். மேலும் அவர் வாழ்விலிருந்தால், அவர் செய்யும் காரியங்கள் உலகில் பரவும். வேலையில்லாதவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தால், அவன் போன்ற பலருக்கும் -அநேகமாக அனைவருக்கும் வேலை தானே கிடைக்கும். உலகம் தானே அவர் மாறுவதுபோல் மாறும்.
 • விழிப்புற்ற ஆன்மா இனி உலகிலிருக்க சட்டமில்லை என்பது மரபு.
 • விழிப்புற்ற ஆன்மா உலகுக்கு வந்து மனத்திலும், உணர்விலும், உடலிலும் சேவை செய்யும் என்பது ஸ்ரீ அரவிந்தம். 

தம்பி - நான் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்பது அதுதானே?

அண்ணன் - இதுவரை அது சொல்லாகவே இருந்தது, ஸ்ரீ அரவிந்தம் அதைச் செயல்படுத்தியது. யோகம் எனில் ஆன்மா ஆண்டவனை அடைவது, ஆண்டவனிடமிருந்து ஆன்மா எதுவும் பெறுவதில்லை. அது பெறுவது விடுதலை.

தம்பி - என்ன பெற முடியும்?

அண்ணன் - ஆன்மாவின் 12 அம்சங்களையும் உயர்ந்த நிலையில் பெறலாம். ஆன்மாவின் மௌனம் பெரியது. அதே மௌனம் ஆண்டவனின் மௌனமானால் முடிவானதன்றோ?

 • மரபில் ஆன்மா ஆண்டவனிடமிருந்து அதுபோல் எதையும் பெறுவதாகத் தெரிவதில்லை.
 • அன்னை ஆன்மா அதுபோல் ஆண்டவனிடமிருந்து அனைத்தையும் பெறுகிறது.
 • அது ஆன்மாவுடன் நிற்கவில்லை.
 • மனத்திற்கும் வருகிறது. உடல்வரைக்கும் வருகிறது.
 • இதற்கடுத்த நிலையை அன்னை விவரிப்பது அற்புதங்களின் சிகரம். 

நாம் பெறும் பரிசுகள், விருதுகள், பட்டங்கள் ஸ்தாபனங்கள் மூலமாக, நம் அந்தஸ்திற்காக, நம் செல்வம் அல்லது செல்வாக்கு அல்லது படிப்புக்காகப் பெறுகிறோம். இவையின்றி பெறுவது இயலாத காரியம். இராதாகிருஷ்ணன் தாம் பெற்ற படிப்புக்காக ஜனாதிபதி ஆனார். அதே இராதாகிருஷ்ணனுக்கு அதே அறிவிருந்தாலும், அப்பட்டங்களில்லாவிட்டால் ஜனாதிபதி பதவி வந்திருக்காது. எவரும் அவரைக் கண்டு கொள்ளப்போவதில்லை. அவர் பெற்றதைப் பட்டம் மூலம் பெற்றார். பெர்னாட்ஷா பெற்ற நோபல் பரிசு பட்டத்திற்காகக் கொடுக்கப்பட்டதில்லை. அறிவுக்காகக் கொடுக்கப்பட்டது. அது உயர்வு.

அன்னையின் உடல் இறைவனிடமிருந்து ஆன்மா மூலம், சைத்தியப் புருஷன் மூலம் ஆரம்பித்தது. முடிவில் நேரடியாகவே பெற்றது என்கிறார் அன்னை. இது யோக மரபில் இல்லாத சித்தி. யோக மரபில் எந்தக் கரணமும் எதையும் பெறுவதில்லை. அன்னை பெறுகிறார். இடையே ஆன்மாவுமில்லாமல் நேரடியாகப் பெறுகிறார்.

தம்பி - அன்னை விஷயம் பெரியது. நமக்குப் புரியாது.

அண்ணன் - மாணவன் புத்தகத்திலுள்ள அறிவை ஆசிரியர் மூலம் பெறுகிறான். அடுத்த நிலையில் நேரே புத்தகத்திலிருந்து பெறுகிறான்.

புத்தகமில்லாமல் நேரே பெற முடிந்தால் அவன் மேதையாகிறான்.

சாவித்திரி ஆங்கிலப் பேராசிரியர்கட்குப் புரிவதில்லை. சரியாக ஆங்கிலம் தெரியாத பெண் பிரார்த்தனை செய்தபின் படித்தால் புரிகிறது என்றார். இவரால் படிக்கவே முடியாது. பல பக்கங்கள் படித்தார். புரிந்தது. இது படிப்பேயில்லாதவருக்கு ஞானம் நேரடியாக வருவது.

தம்பி - இதுபோன்று ஏராளமானவை பக்தர்கட்கு நடக்கின்றனவே. நாம் அதை அருள் எனப் பொதுவாக அறிகிறோம். என்ன நடக்கிறது எனப் புரிந்து கொள்வதில்லை. அன்னை இறைவனிடமிருந்து நேரடியாகப் பெற்றால், நாம் அன்னையிடமிருந்து நேரடியாகப் பெறுகிறோம். இந்த விளக்கமும் போதாது.

அண்ணன் - விளக்கம் எப்பொழுதும் போதாது. பக்குவம் வந்தால் பிறகு புரியும். இந்தியருடலில் ஒளியிருக்கிறது என்று அன்னை கூறுவதை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம்?

தம்பி - ஒளியிருக்கிறது என்று புரிந்து கொள்கிறோம்.

அண்ணன் - நாட்டில் ஏராளமான மேதைகள் ஒளிந்திருக்கிறார்கள் என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தம்பி - இந்தியாவிலா? சீனுவாச இராமானுஜம் போலவா?

அண்ணன் - அவர் எப்படி வந்தார்? அதன் ஆரம்பம் என்ன? அது போல் மேல்நாட்டில் மேதைகள் - கணிதம், விஞ்ஞானம் போன்றவற்றில் - பிறந்திருக்கின்றனரா? ரெய்மன் என்ற ஜெர்மானிய கணித நிபுணர் அவர் போன்றவர். ஜெர்மனி தத்துவம் பிறந்த நாடு, இந்தியா ஆன்மீகம் பிறந்த நாடு. ஒளி உடலிலிருக்கிறது எனில், ஆன்மீகம் மனத்துள் மேதாவிலாசமாக மக்களிடையே ஒளிந்துள்ளது எனப் பொருள்.

தம்பி - அப்படியானால் பல ராமானுஜர்கள் இருப்பார்களா?

அண்ணன் - இருக்கிறார்கள். நாம் கண்டுபிடிக்க முடியும், நம்பிக்கை வேண்டும். மேதையாக உருவாகக்கூடியவர்கள் ஆயிரமாயிரம் பேர் நாட்டிலிருக்கிறார்கள் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தம்பி - அவர்களைக் கண்டுபிடிக்க முடியுமா?

அண்ணன் - அதை நம்பினால் கண்டுபிடிக்க வழியுண்டு. நாட்டில் அதுபோன்ற நம்பிக்கையேயில்லையே. மேல்நாட்டுத் திறமை, பழக்கம் ஆகியவை 400 அல்லது 500 வருஷத்தில் ஏற்பட்டது. நமக்கு அது தேவை. அதை உடனே பெற முடியாது. ஆனால் அவசியமாகப் பெற வேண்டும். 50 ஆண்டுச் சுதந்திரத்தில் நாம் அதைப் பெற்றிருக்கலாம். பெறவில்லை. நம் நாட்டு ஆன்மீகம் அவர்கள் திறமையைவிட உயர்ந்தது. அது அவர்கட்குத் தேவை. எளிதில் பெற முடியாது.

தம்பி - வேறு வழியில்லையா?

அண்ணன் - அவர்கள் திறமையின் பெருமையும், அவசியமும், அது ஏற்பட்ட வகையும் நாமறிந்து, ஆழ்ந்து அதை விரும்பினால் பெற வழியுண்டு.

தம்பி - என்ன வழி?

அண்ணன் - நாம் எப்படி நம் ஆன்மீகத்தையும், பண்பையும் பெற்றோமோ அதுபோல் மேல்நாட்டுத் திறமையை நாட வேண்டும். உலகம் பலவற்றை நாடுகிறது. ஆன்மீகம், தத்துவம், ஞானம், விஞ்ஞானம், பண்பு, மானம், சூட்சுமம், தொழில் நுணுக்கம் போன்ற பலவற்றை நாடுகிறது. ஒவ்வொன்றையும் ஓர் இடத்தில் வளர்க்கிறது. நேரம் வந்தபொழுதெல்லாம் ஒன்று சேர வேண்டும். அனைவரும் அனைத்தையும் பெறவேண்டும்.

தம்பி - மனித யத்தனத்தால் இது முடியுமா?

அண்ணன் - தெய்வம் இதைப் பூர்த்தி செய்யக் காத்திருக்கிறது. மனிதன் தன் முயற்சியைப் பூர்த்தி செய்துவிட்டால், மீதியைத் தெய்வம் க்ஷணத்தில் பூர்த்தி செய்யும். நம் ஆன்மீக உயர்வை நாம் முதலில் உணர வேண்டும்.

தம்பி - அமெரிக்கா அதை ஏற்றுக்கொண்டால்தான், நாம் அதைப் பாராட்டுவோம்.

அண்ணன் - சீனுவாச இராமானுஜம், வால்மீகி, வசிஷ்டர், சி.வி.ராமன், காந்திஜி, நேரு, பாரதி, ஸ்ரீ அரவிந்தர், திலகர், பரமஹம்சர், வள்ளலார் போன்றவர் ஒருவர் இருந்தால் என்ன அர்த்தம்? மார்க்கட்டில் ஒரு மாம்பழம் வந்தால் சீசன் வந்துவிட்டது எனப் பொருள். ஒரு பழத்தின் பின்னால் ஓராயிரம், ஒரு லட்சம் இருக்கிறது எனப் பொருள்.

தம்பி - 100 ராமானுஜம் இருப்பார்களா?

அண்ணன் - நாமறிந்த பெரியவர்களில் எத்தனை பேர் சிறுவயதில் பெரிய ஆத்மா என தம்மை அறிவார்கள்? ஆத்மா பெரியதாக இருந்தால் மட்டும் போதாது. அது மலர நாடு அவர்கட்குச் சந்தர்ப்பம் தர வேண்டும். ராமானுஜம் இன்ஸ்டிடூட் என்று ஒன்றுள்ளது. ராமானுஜத்தின் பரம்பரையை அவர்கள் தேடினால் 100 பேர் அல்ல 1000 பேர் கிடைப்பார்கள். அவர்கள் அனைவரும் நாட்டின் சொத்து. அவர்கள் மேதாவிலாசம் வெளிவர துணை செய்யவேண்டும். தம்பி - எப்படிக் கண்டுபிடிப்பது?

அண்ணன் - அறிவைக் கருதாமல், ஆன்மாவின் சின்னங்களைத் தேடினால் தெரியும். அன்னையிடம் அதற்கு வழியுண்டு. மேல்நாட்டு முறைகள் சிறப்பாகிவிட்டால், அதன் மூலமும் காணமுடியும். முயற்சி எழுந்தால் வழிகள் உள்ளன. ஆன்மீக விழிப்பு ஏற்பட்டுவிட்டால், மேதாவிலாசத்திற்குரிய பல ஆயிரம் மேதைகளை நாம் காண முடியும் என்பது என் அபிப்பிராயம். Life Divineஐப் புரிந்து கொண்டால் மேதாவிலாசம் வரும். நாடு ஆன்மீகச் சித்திக்குத் தயாராக இருக்கும்பொழுது மேதாவிலாசம் அடுத்ததுதானே? இது சிறியது என்பதால் எளிதாகப் பெறலாம்.

தம்பி - அது நடக்கும் என்பதற்கு அறிகுறிகள் உண்டா?

அண்ணன் - மடையனை மேதையாகத் திருவுருமாற்றும் திறனுடையது அருள். பாஸ் செய்ய முடியாதவன் பாஸ் செய்தால் அது பிரார்த்தனை பலித்ததாகும். அவன் முதல் மார்க் வாங்கினால் அது திருவுருமாற்றம். ஆயிரம் ஏழைகள் உழைத்து ஏழ்மையைப் போக்குவது கடினம். அவர்கள் பெரும் பணம் சம்பாதிப்பது திருவுருமாற்றம். அன்னையின் வாழ்வில் நடந்தவை அனைத்தும் திருவுருமாற்றம். நமக்குத் தெரிந்தவை கொஞ்சம். Industry உலகத் தொழில் சரித்திரத்தில் அதிகபட்சக் கடன்பட்ட கம்பெனி தேறுமா? தேறுவது ஆச்சரியம். அருளின் கடைக்கண் பார்வை என்ன செய்தது? கடனுக்குச் சமமான இருப்பு சேர்ந்தது. அது திருவுருமாற்றம். ஒரு வகையில் அன்னையிடம் பெற்றனவெல்லாம் திருவுருமாற்றங்களே. நாடு அதை உணருமா? அயோக்கியன் மாறுவது இல்லை. மாறினால் ஆச்சரியம். அயோக்கியனுக்கு நாணயஸ்தன் என விருது படைப்பது போன்றது திருவுருமாற்றம்.

நாட்டில் ஆயிரமாயிரம் மேதைகளின் வித்துண்டு.

அருள், மடையனையும் மேதையாக மாற்றும். நாடு தன் சிறப்பான ஸ்ரீ அரவிந்தத்தை அறிந்து போற்ற வேண்டும்.

200 வருஷத்திற்கு நாகரீகமேயில்லாத நாட்டில் இன்று அனைவரும் காரில் போவதைக் காண்கிறோம். இது மனித முயற்சி. அருள் இந்தியாவை மேதைகள் நாடாக்கும் என நம்பக்கூடாதா?

 • இந்தியா ரிஷிகள் வாழ்ந்த நாடு.
 • இந்தியா மேதைகள் வாழுமிடம் என ஆகும் என்பதே ஸ்ரீ அரவிந்தம் தரும்   இலட்சியம்.
 • வறுமை ஒழிப்பு என்பதில்லை. நாடு சீக்கிரம் செல்வம் கொழிக்கும்.

நாடு தயார். மனிதன் தயாரா என்பதே கேள்வி?

பொய்யை விட்டு நாடு மெய்யை ஏற்குமா?

மெய்யை மட்டும் கைக் கொள்ளுமா?

அது நடந்தால் மீதி அனைத்தும் தானே வரும்.

தம்பி - 2000 ADக்கு உரிய இலட்சியம் இது. தேசீயச் சர்க்கார் அமைத்து, அவசரச் சட்டம் (administrative emergency) போட்டு, பெருஞ்செல்வம் உற்பத்தி செய்து, அருளை நம்பி, சத்தியமாகச் செயல்பட்டால் இந்தியா மேதைகள் நாடாகும் என்பதில் ஐயமில்லை.

அண்ணன் - நாம் பேசக்கூடாது. நாமே அதைச் செய்ய முன்வர வேண்டும். நீ என்ன செய்வாய், நான் என்ன செய்ய வேண்டும் என்பது முக்கியம். உலகுக்குச் சொல்வது அப்புறம்.

தம்பி - நாம் சொல்வது பெரிய விஷயம். பலர் ஏன் அன்னையிடம் வந்தோம் என வருத்தப்படுகின்றனர்.

அண்ணன் - விஷயம் என வந்துவிட்டால், அதுதான் முதற் கேள்வி.

ஏன் அன்னை என்றும் போலிருக்கக்கூடாதா என மனம் நினைக்கிறது. அதற்கு விலக்கானவரை நான் அறியேன்.

தம்பி - காரியம் ஜெயிக்கிறது என அன்னையிடம் வந்தவர்கள்தாம் அப்படிப் பேசுவார்கள்.

அண்ணன் - பொதுவாக நீ சொல்வது உண்மை. ஆனால் மனிதனுக்குச் சுபாவம் என்று ஒன்றுண்டு. முதலில் அன்னை நம் சுபாவத்தையொட்டி செயல்படுகிறார்கள். அடுத்த கட்டத்தில் சுபாவத்தை மாற்றாமல் பலனிருக்காது. அந்த நேரம் அன்னை வேண்டாம் என்று கூறாதவரில்லை.

தம்பி - நிலைமை எக்கச்சக்கமாக தர்மச்சங்கடமாக வரும்பொழுது மனிதன் அன்னை வேண்டாம் என்பதைப் பார்த்திருக்கிறேன். சில சமயங்களில் எப்படியும் போகமுடியாது. அதாவது அன்னையை ஏற்கவும் முடியாது. ஏற்காமலிருக்கவும் முடியாது.

அண்ணன் - நாம் அன்னையை மையமாக வைத்துப் பேசுவதால் அன்னை வேண்டாம் என்கிறார்கள். இதுதான் வாழ்வின் இரகஸ்யம். குடும்பம் பிளவுபடுவது இதனால்தான். கணவன் மனைவி சண்டை இதனால்தான். மனிதன் விரக்தியடைவதே இதனால்தான்.

தம்பி - நீங்கள் சொல்வது "எனக்கு ஆதாயம் மட்டும் வேண்டும்'' என்று ஆரம்பித்து கடமையைச் செய்ய வேண்டி வரும்பொழுது மனிதன் கசங்குவதைக் கூறுகின்றீர்கள்.

அண்ணன் - இங்கு பாரத்தை அன்னை மேல் போட்டுப் பேசுகிறார்கள். தம் கடமையை தாம் ஏற்க மறுப்பவர் நிலையிது. வெளிநாட்டில் போய் எவ்வளவு நாள் வசதியாகத் தங்கினாலும், வயதாக ஆக தாய் நாட்டை உடல் நினைத்து ஏங்கும். அதுபோல் மனிதன் தான் விட்டு விலகி வந்த வாழ்வை நாடி ஏங்குகிறான். அன்னை மீது வெறுப்பு வருகிறது.

தம்பி - நம்மால் நியாயமாக வாழ முடியவில்லை. யாரையாவது குறை கூறுகிறோம். பக்தர்கள் ஒரு நேரம் அன்னையைக் குறை கூறுகிறார்கள். நாம் பிறரைச் சொல்லக்கூடாது. நம் வீடு அப்படித்தானே இருக்கிறது. அன்னையிடம் வருமுன் நாம் எங்கிருந்தோம்? மாதம் 250/-செலவு செய்தோம். இன்று 25,000/-போதவில்லை. யாராவது நம் வீட்டில் இதெல்லாம் அன்னையால் வந்தது என ஏற்பார்களா? நம் வீட்டில் ஒருவர்கூட அதை ஏற்கமாட்டார்கள். மேலும் அன்னையை ஏற்காவிட்டால், உள்ளதும் போய்விடும் என்றால், ஏற்கமுடியாமல் திட்டுவார்கள். ஆரம்பத்தில் மனிதர்களைத் திட்டுவார்கள். முடிவில் அன்னையைத் திட்டுவார்கள்.

அண்ணன் - அன்னை இவற்றையெல்லாம் சொல்லியிருக்கிறார்களா?

தம்பி - நேரடியாகச் சொல்லவில்லை.

அண்ணன் - நேரடியாகவும் சொல்லியிருக்கிறார்கள். எல்லாம் எழுத்தில் - அச்சில் - இருக்கிறது. நாம் படிப்பதில்லை. படித்தால் அதைப் பொருட்படுத்துவதில்லை.

தம்பி - இனி முடியாது என்ற நேரமாவது அன்னையை நம்ப வேண்டும்.

அண்ணன் - அதைச் செய்தால் கஷ்டம் விலகும். முடியும் என்ற நேரம் அன்னையை நம்பினால் அதிர்ஷ்டம் வரும்.

தம்பி - யாருக்கும் அதிர்ஷ்டம் தேவையில்லை. அவர்களை மாறச் சொல்லக்கூடாது. அதுதான் முக்கியம். நாம் மாறிக் கொள்ளலாம். பிறருக்குச் சொல்ல முடியாது. மனிதன் தானுள்ள வாழ்வை ஆழ்ந்து அனுபவித்து ரசிக்கிறான். அதை விட்டு மாறி உயர்ந்ததை ஏற்க மனிதன் முன் வருவதில்லை. இறைவன் மனிதனைக் கட்டாயப்படுத்துவதில்லை. அதை விரும்பி அன்னையை நாடுபவர்கட்கு யோகத்தில் திருவுருமாற்றமும், வாழ்வில் அதிர்ஷ்டமும் உண்டு. ஏராளமான பேர் அன்னையை நாடி வந்து பல்வேறு பலன்கள் பெற்றுள்ளனர். யோகத்திற்காக எவரும் அவரை நாடி வரவில்லை. வாழ்விலும் திருவுருமாற்றத்தை எவரும் நாடியதாக இதுவரை நான் கேள்விப்படவில்லை.

பணம் எப்படி உற்பத்தியாகிறது?

தம்பி - பணம் என்பதைப் பற்றி மேலும் பேச விரும்புகிறேன். ஆதியிலிருந்து புரிந்து கொள்ள விரும்புகிறேன்.

அண்ணன் - உழைப்பால் பணம் உற்பத்தியாகிறது. அதேபோல் ஒத்துழைப்பாலும், அறிவாலும் பணம் ஏற்படுகிறது.

தம்பி - அறிவால் உழைப்பு அதிகம் சம்பாதிக்கும் என்று கொள்ளலாம். ஒரு வீட்டில் அனைவரும் ஒத்துழைத்தால் சண்டை போடுவதைவிட அதிகம் சம்பாதிக்கலாம்.

அண்ணன் - இதுவரை புரிந்தால் போதும். ஆனால் உழைப்பு சம்பாதிப்பதைப்போல் அறிவு மட்டும் பணம் ஈட்டும். அதேபோல் ஒத்துழைப்பு மட்டும் பணம் சம்பாதிக்கும் என்பது சட்டம்.

தம்பி - அறிவு சம்பாதிக்கும் எனப் புரிகிறது. ஒத்துழைப்பு மட்டும் எப்படிச் சம்பாதிக்க முடியும்?

அண்ணன் - நிலம் கரம்பாக இருக்கிறது. அண்ணன், தம்பி சண்டை போட்டுக் கொண்டு நிலத்தைக் கரம்பாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒத்துழைப்பால் விளைச்சல் எழும். சட்டம் புரியாவிட்டாலும், ஏற்றுக் கொள்ள முடியுமா?

தம்பி - பலர் ஒத்துழைத்தால் பணம் எழும் எனத் தெரிகிறது. சரி, நான் ஏற்றுக் கொள்கிறேன்.

அண்ணன் - நிலத்தில் பணம் உற்பத்தியாகிறது. பாக்டரியில் பணம் வருகிறது. அதேபோல் நிலமும், பாக்டரியுமில்லாமல் service sectorஇல் டெய்லர், எலக்ட்ரீஷியன், ஆசிரியர், வக்கீல் போன்றவர் சேவையால் பணம் உற்பத்தியாகிறது. அடுத்த கட்டத்தில் மனத்தின் அறிவால், திறனால் பணம் உற்பத்தியாகும். அதற்கும் அடுத்தது ஆன்மா. ஆன்மாவாலும் எதையும் உற்பத்தி செய்ய முடியும். பணத்தை அதனால் ஏராளமாக உற்பத்தி செய்ய முடியும்.

தம்பி - அறிவு, அதாவது மனம் தீவிரமாகச் செயல்பட்டால் நிலம் அதிக உற்பத்தி செய்யும், பாக்டரி அதிக உற்பத்தி செய்யும், சர்வீஸ் அதிகமாக உற்பத்தி செய்யும் என்பது சரி. மனம் மட்டுமே பணத்தை உற்பத்தி செய்யுமா?

அண்ணன் - நிலம் மட்டுமே பணத்தை உற்பத்தி செய்வதைப் போல் மனம் மட்டுமே பணம் உற்பத்தி செய்யும் திறனுடையது. அதை ஏற்பது நல்லது. அது முடியாவிட்டால், மனத்தின் அறிவு பணம் உற்பத்தியாகுமிடத்தில் அதிகம் உற்பத்தி செய்ய உதவும் என ஏற்றாலும் போதும்.

தம்பி - நான் ஏற்றுக்கொள்கிறேன். மேலும் சற்று விளக்கமாகச் சொன்னால் தேவலை.

அண்ணன் - பணம் என்பது நம்பிக்கையால் எழுவது. நம்பிக்கை பணம்.

தம்பி - சரி.

அண்ணன் - மார்க்கெட்டுக்குக் கம்பனி மீது நம்பிக்கையிருந்தால் கம்பனிக்கு மேலும் பணம் வருகிறது.

தம்பி - கம்பனியும், மார்க்கெட்டும் இல்லாமலே பணம் வரும் என்று கூறுகிறீர்களே.

அண்ணன் - எல்லாக் கோவில் ஸ்தல புராணங்களிலும் வில்வமரத்து இலையைப் பவுனாகப் பறித்தார்கள் என்பதுண்டு. சாமியார்கள் கையை நீட்டினால் லிங்கம் வருகிறது. அதுபோல் பணமும் வரும். அவற்றையெல்லாம் நான் கூறவில்லை.

தம்பி - அதை விடுங்கள். உலகத்தை மனம் உற்பத்தி செய்தது. ஆதியில் பணத்தை மனம் உற்பத்தி செய்தது. அதனால் இன்று மனத்தால் பணம் உற்பத்தி செய்ய முடியும் என நம்பலாம். ஒரு கருவி இடையேயில்லாமல் எப்படி உற்பத்தி செய்வது?

அண்ணன் - கருவி மூலம் மனம் அறிவு அதிகமாகப் பணம் உற்பத்தி செய்ய முடியும் என்று ஆரம்பிப்போம். தவணை முறை வந்த பிறகு பணம் பெருகியது.

தம்பி - 10 மடங்கு பெருகியது. கடன், அடைமானம் இல்லையென்றால் பணம் சுருங்கும்.

அண்ணன் - தவணை முறை, கடன், ஈடு, கைமாற்று இல்லையென்றால் குடும்பம் நடக்காது. 1/100 பாகம்கூடப் பணப் புழக்கமிருக்காது. அதாவது கடன், தவணை, அடைமானம் பணத்தை 100 மடங்கு அதிகப்படுத்தியுள்ளது.

தம்பி - அது சரி. இதை ஏற்றுக் கொள்ளலாம்.

அண்ணன் - மேலும் பணம் உற்பத்தி செய்யும் சாதனங்கள் நம்மிடம் இன்றுள்ளதைப்போல் 1000 மடங்குள்ளது என்பதை உலகம் அறியாது. மேல்நாடுகளில் பணம் நகரும் வேகம் 3 என்றால் இந்தியாவில் 1½ என்கிறார்கள். கம்ப்யூட்டர் வந்தபின் 3 மேலும் அதிகரித்துவிட்டது. இந்தியாவில் இன்றுள்ள பணம் மேல்நாட்டு வேகத்தில் நடமாடினால், இரு மடங்காகும் அல்லவா?

தம்பி - ஆமாம், ஆச்சரியமாக இருக்கிறதே. நம்ப முடியவில்லையே. யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். வியாபாரிக்கு முதல் 6 மாதம் ஒரு முறை புரண்டு வருவது 3 மாதம் ஒரு முறை புரண்டால் இலாபம் 2 மடங்கு என்றாகுமல்லவா?

அண்ணன் - இதுபோல் பணத்தை அதிகரிக்க 10 முதல் 20 வழிகள் உண்டு. நாம் மேல்நாட்டார் பழக்கத்தில் எதை எதைப் பின்பற்ற முடியுமோ அவற்றையெல்லாம் பின்பற்றினால் மட்டும் நம் பணம் 3 or 5 மடங்கு அதிகரிக்கும்.

தம்பி - புதியதாகப் பணம் உற்பத்தியாகுமா? உள்ளது அதிகமாகப் பயன்படுமா?

அண்ணன் - உள்ளது 5 மடங்கு பயன்படும். இரண்டும் ஒன்றுதானே?

தம்பி - குடும்ப உதாரணம் சொன்னால் புரியும்.

அண்ணன் - அது முடியாது. தவணை முறையால் அதிகப் பொருளை வாங்குவதைத்தான் சொல்ல முடியும். மாதம் ரூ. 5000 மளிகை, ஷாப் சாமான் வாங்கும் குடும்பம் 1) விரயத்தை விலக்கி 2) இருப்பதையே வாங்குவதைத் தவிர்த்து 3) தேவையில்லாததை வாங்குவதை விலக்கித் திட்டமிட்டுச் செலவு செய்தால் நாளாவட்டத்தில் 5000 ரூபாய் செலவு 4500 எனவும், 4000முமாகும். அதனால் ரூ. 500 அல்லது 1000 ரூபாயை "உற்பத்தி" செய்ததாகும். இதன் விளைவாகப் புதிய பணவரவு ஏற்படும். குடும்பம் சிறிய இடம். அதன் மூலம் பணம் உற்பத்தி செய்வதை விளக்குவது கடினம்.

தம்பி - புதியதாகப் பணம் எப்படி உற்பத்தியாகும் என்று சொல்ல முடியுமா?

அண்ணன் - மனத்தின் திறமை 5 or 10 மடங்கு அதிகப்படுத்த முடியுமல்லவா? அப்படிச் செய்தால் 5 or 10 மடங்கு பணத்தை உற்பத்தி செய்யும் திறனை மனம் பெறுமல்லவா?

தம்பி - அது சரி. உத்தியோகம் செய்பவனுக்கு யாரும் 5 அல்லது 10 மடங்கு சம்பளம் தரப்போவதில்லை.

அண்ணன் - மனத்தின் திறன் எவ்வளவு உயர்கிறதோ அதற்குரிய வாய்ப்பை அன்னை கொடுத்துவிடுவார். அன்னையைப் போல சமூகமும் கொடுக்கவல்லது. தன் திறன் உயர்ந்தால் மனமே நேரே பெறவல்லது.

தம்பி - 100 மடங்கு, 1000 மடங்கு போகட்டும். மனத்தின் திறமையை 10 மடங்கு உயர்த்தலாம். அது வருமானத்தை 10 மடங்கு உயர்த்தும். 10 மடங்கு மனம் உயர்ந்தால் அன்னை அதைப்போல 10 மடங்கு பலன் தருவார். பணம் ஈட்டும் திறனை 10 மடங்கு அல்லது 50 மடங்கு உயர்த்த வழி சொல்லுங்கள்.

அண்ணன் - உலகில் சாதித்தது அனைத்தும் மனமே. புத்தர் உலகை வென்றது மனத்தின் திறத்தால்.

 1. பணம் பெருகும் வழிகள் அனைத்தும் அறிய வேண்டும்.
 2. அவற்றைப் பூரணமாகப் பின்பற்ற வேண்டும்.
 3. அன்னையை நம்ப வேண்டும்.
 4. மனம் தூய்மையாக இருக்க வேண்டும். இதுவரை செய்தால் 100 மடங்கு பெருகும். 10 மடங்கு நிச்சயம். பெரும் பணம் 

தம்பி - பணம் பெருகும் வழிகளைச் சொல்லுங்கள்.

அண்ணன் - ரூ. 5000 கடைச் சாமான்கள் வாங்கும் வீட்டில் திட்டமிட்டு அதை 4000மாக மாற்ற வேண்டும். அது முடியாது என்றால் அக்கறையில்லை எனப் பொருள். அவர்களுக்கு இது பலிக்காது. நாம் கொடுக்க வேண்டியதை உடனே கொடுத்துவிட வேண்டும். பணத்திற்குக் கவனம் தேவை. எல்லாக் காரியங்களையும் பண நோக்கத்தில் கணக்கிட வேண்டும். இவையெல்லாம் சாதாரண நல்ல முறைகள். பணவரவு இரட்டிக்க உதவும். அது நம்பிக்கையை வளர்க்கும். உண்மையான சக்தி மனத்திலிருக்கும். Mind is infinite மனம் அனந்தமானது, அளவுகடந்து சாதிக்கவல்லது. உலகத்தில் நடந்த அற்புதங்களெல்லாம் மனம் சாதித்தவை. பெரிய மதங்கள், சாம்ராஜ்யங்கள், விஞ்ஞானக் கருத்துகள் அனைத்தும் மனத்தில் உற்பத்தியானவை. பணத்தை ஆதியில் உற்பத்தி செய்ததும் மனமே. மனத்தின் அளவுகடந்த சக்தியை நம்புவதில் நான் சொல்லும் சூட்சுமம் உண்டு.

தம்பி - இவையெல்லாம் எனக்குத் தெரியும். இந்தக் கோணத்தில் நான் சிந்தித்தில்லை. பாங்க் பணம் தரும்பொழுது மனிதனை நம்பித் தருவதில்லை. சொத்தை நம்பித் தருகிறது. சொத்தை மட்டும் நம்பும் பாங்க் மனிதனை மட்டும் நம்பி வற்புறுத்தி பணம் கொடுத்ததை நாமறிவோம். வட்டிக்குக் கொடுப்பவர்களும் சொத்தேயில்லாத நாணயஸ்தருக்கு ஏராளமான பணம் கொடுத்ததை நாம் அறிவோம்.

பிறர் ஒருவன் நாணயத்தை நம்புவதால் பணம் உற்பத்தியாகிறது. நாமே நம் மனத்தின் infinite அளவுகடந்த சக்தியை நம்பினால், உலகில் எதையும் சாதிக்கலாம். அதைக் கருதும்பொழுது பணம் சிறியது. அதைப் பெரிய அளவில் உற்பத்தி செய்யலாம் என்பதை நாம் பலர் வாழ்விலும் பார்க்கிறோம்.

அண்ணன் - அந்த உண்மையை மனம் ஏற்கவேண்டும். சூட்சுமம் அங்குள்ளது. வினோபா கொள்ளைக்காரனை போலீஸில் சரணடையச் சொன்னார். ஏது அவருக்கு அந்த சக்தி? அது அவருடைய மனத்திண்மை. ஆன்மீக சக்தி.

தம்பி - அன்பர்கள் அடாவடிக்காரன் பணிந்து போவதைக் காண்கிறார்கள். அடாவடிக்காரனிடம் கொடுத்த ரூ. 1000 திரும்பி வந்தால், அந்த அன்பரால் பல ஆயிரம் உற்பத்தி செய்ய முடியும். கேட்டும் பணம் வசூலாகா நிலையில் கேளாமல் ரூ. 1000, ரூ. 10000, லட்ச ரூபாய் வருகிறது எனில் அந்த அன்பர் மனம் பல கோடிகளை உற்பத்தி செய்யவல்லது. அன்னை மனதில் குடி கொண்டிருந்தால், அம்மனம் ஏராளமாக எதையும் உற்பத்தி செய்யும். ஏராளமான பணத்தை உற்பத்தி செய்யும்.

அண்ணன் - இது இல்லாமல் நான் சொல்வது நடக்காது. இது இருந்தால் மேற்சொன்ன நிபந்தனைகள், முறைகள் செயல்படும்.

தம்பி - பணத்தை உற்பத்தி செய்யும் சூட்சுமம் இங்கிருந்தால், பணத்தை தடுக்கும் சூட்சுமம், நம் கெட்ட குணத்திலிருக்கிறது. பிறருக்கு வருவது பொறுக்கவில்லை என்றால், நமக்கு வருவது தடைபடும்.

அண்ணன் - சூட்சுமத்தின் நல்லதைப் பெறுவது கடினமன்று. சூட்சுமத்தின் கெட்ட பகுதியை விலக்குவது கடினம்.

தம்பி - நல்லவனுக்கு இது பலிக்கும். நல்லவனாக இருப்பது கடினம். நம் கெட்ட குணம் வெளிப்பட்டால், அன்னை வருவது தடையாகும். பணவரவு நிற்கும்.

அண்ணன் - மனிதனுக்கு இது கடுமையான நிபந்தனை. மாற முயல்பவன் மாறிவிடுவான். அன்பர்கள் பெரும் பணத்தை தங்கள் வாழ்வில் உற்பத்தி செய்ய முடியும் என்பது உண்மை.

தம்பி - ஓஹோ, அதனால்தான் நமக்கு விவரம் தெரியாத நேரம் ஏராளமாகப் பணம் வருகிறது.

அண்ணன் - விவரம் தெரியாதபொழுது, நம் குணம் எழுந்து செயல்படுவதில்லை. விவரம் தெரிந்தவுடன் பணம் நின்றுவிடுகிறது. இதையே யோக பாஷையில் சொல்ல வேண்டும்.

 • நாம் நாலு பேர் போலிருக்கிறோம் (We are a social being).
 • நாலு பேர் சாதாரண மனிதர்கள்.
 • சாதாரண மனிதனுக்கு, அனைவருக்கும் நடப்பது நடக்கும். சம்பளம் வரும்.
 • அவன் அன்னையை அறிகிறான், நம்புகிறான்.ஆன்மீக, அருளின் சூழல் அவனுள் வருகிறது. விவரம் எதுவும் தெரியாததால் ஏராளமாகப் பணம் வருகிறது. ஆயிரம் நல்லவை நடக்கின்றன.
 • இதை மனிதன் கவனிக்கிறான். அவன் மனம் பட்டவுடன் நல்லது நின்றுவிடுகிறது.
 • நாமெல்லாம் சாதாரண மனிதர்கள்தாமே எனில், அவனுக்குள்ளது நடக்கிறது.
 • அன்னையை அறிந்தவன் சாதாரண மனிதனில்லை. அவன் உயர்ந்தவன்.
 • தான் உயர்ந்தவன் எனத் தெரிந்ததும், அவன் உயர்வைக் காப்பாற்றலாம்.
 • அல்லது மற்றவர்கள் போலிருக்கலாம்.
 • உயர்வைக் காப்பாற்ற தான் அறிந்த உயர்வைக் கருதி நாலு பேர் போலிருக்கக்கூடாது என முடிவு செய்ய வேண்டும் (cease to be a social being and become a psychological being).
 • இதைச் செய்பவன் அன்னை அன்பன். அவனுடைய பண வரவு வளர ஆரம்பித்தால் நிற்காது.
 • நாலு பேர்போல் இருக்க விரும்புபவனை நாம் கணக்கில் சேர்க்கக் கூடாது.
 • சமூகம் நம்பாததை, பின்பற்றாததை, நல்லது என அறிவதால், அன்னைக்குரியது என அறிவதால் பின்பற்ற, ஏற்று நடக்க மனம் உறுதி பெற வேண்டும்.
 • அப்படி முக்கியமாக மனிதன் விட வேண்டியவை, - சிறு தெய்வ வழிபாடு, சடங்குகள்
  - விசேஷங்களில் ஆர்வம்
  - சின்ன புத்தி, மட்டமான குணங்கள்
   
 • அப்படி முக்கியமாக மனிதன் ஏற்க வேண்டியவை,
  - பிறர் வாழ்வு மலர்வதில் மனம் மலர வேண்டும்.
  - பொய் சொல்லக்கூடாது.
  - பரந்த மனப்பான்மை வேண்டும். அடக்கம் அதிகமாகத் தேவை.
 • இந்த லட்சணத்துடன் ஓர் அன்பர் இருந்தால் அவர் செய்வன அனைத்தும் பலிக்கும். அவருக்குப் பணம் அருள். ஏராளமாகப் பெருகும்.
 • இந்த அடிப்படைகளிலிருந்தால் பணத்தின் வரலாறு தெரியுமானால் அது பெருகும். பெருகிக் கொண்டேயிருக்கும்.
 • பணத்தின் வரலாறு தெரியுமுன் பணம் குவியும்.
 • பணத்தின் வரலாற்றை எந்தப் பொருளாதாரப் புத்தகத்திலும் படித்துக் கொள்ளலாம்.
 • இம்முறையால் நிம்மதி, சந்தோஷம், வெற்றி ஆகியவற்றைப் பெருவாரியாகப் பெறலாம். 

தம்பி - சூட்சுமம் வளர்கிறதே.

அண்ணன் - நம் நாட்டில் பலர் சமீபத்தில் ஏராளமாகப் பணம் சம்பாதித்துவிட்டார்கள். இவர்கள் எல்லாம் நான் சொன்ன சட்டத்தில் அடிப்படையானவற்றில் சரியானவர்கள். அதாவது உழைப்பு, திறமை, நாணயம், நேர்மை ஆகியவற்றில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டில்லாமல் எவரும் சம்பாதிக்க முடியாது.

தம்பி - வாழ்வில் தவறாகச் சம்பாதிக்கலாம். அது நமக்குத் தேவையில்லை.

அண்ணன் - தவறாகச் சம்பாதிக்கவும் திறமை வேண்டும். திறமையில்லாமல் முடியாது. இவர்கட்கெல்லாம் ஸ்தாபனம் - வியாபாரம், தொழில்- அஸ்திவாரமாக இருக்கும். தொழில் அவர்கட்குக் கருவி, கருவியில்லாமல் பணம் உற்பத்தியாகாது.

தம்பி - ஆகாயத்திலிருந்து பணம் கொட்டாது அல்லவா?

அண்ணன் - ஸ்தாபனம், தொழில் கருவிகள். கருவி அவசியம். கருவியில்லாமல் முடியாது. வலிமை குறைந்தவனுக்குக் கருவி அவசியம். வலிமை அதிகமானவனுக்குக் கருவி அவசியமானாலும், ஓர் அளவுக்கு மேல் கருவி தடையாகும்.

தம்பி - கருவியில்லாமலும் பணம் வருமா?

அண்ணன் - கருவி அவசியம். கருவி மூலம் வரும் பணம் சிறியது. கருவியில்லாமல் வருவது பெரும் பணம். பெரும் பணம் சம்பாதிக்கும் திறமை வந்தபின் அவர்கட்குப் பணத்தில் அக்கறையிருக்காது. இது தத்துவம். நடைமுறையில் பல அம்சங்கள் கலந்திருப்பதால் விவரம் புரியாது. தனியே பிரித்து வாழ்வில் உதாரணம் கூற முடியாது. சுமார் 20 வருஷத்தில் ஒருவர் 100 கோடி வியாபாரம் நடத்துகிறார். இவருக்கு இன்று 40 அல்லது 50 கோடி சொத்திருக்கும். இது போன்றவர் பலர். ஒரு சரக்கு உற்பத்தி செய்து விற்று வியாபாரம் மூலம் இந்தச் சொத்து சேர்ந்துள்ளது. இவர் எளிமையான மனிதர். இந்த வியாபாரமில்லாமல் இவரால் 1000 ரூபாய்கூடச் சம்பாதிக்க முடியாது. வலிமை மன வலிமைமிக்கவர் இதுபோல் சம்பாதித்திருந்தால், அவர் தொழிலைச் சுருக்கிக் கொண்டு சிறிய அளவில் செய்தால், அவர் மனவலிமைக்குக் கருவி தடையாக இருந்தது விலகியவுடன், வருமானம் பெருகியது. அநேகமாக 100 ஆண்டாக பாங்க்குகளை ஆரம்பித்தவர்கள் அப்படிப்பட்டவர்கள். ஸ்தாபனம் சாஸ்திரத்திற்குக் கருவி. ஆனால் அவர்கள் சம்பாதித்த பெருஞ்செல்வமெல்லாம் புதிய ideas கருத்துகளால் என்பது உலகறிந்த விஷயம். இன்ஸுரன்ஸ் முதலில் அப்படி ஏற்பட்டதே. பிற்காலத்தில் பெரியதாகிவிட்டது. Stock-exchangeஉம் இதுபோன்றதே. இவை நூறாண்டாக உலகில் நடைமுறையிலிருக்கின்றன. நம் நாட்டில் பம்பாயில் மட்டும் இது அதிகம்.

தெளிவும், வலுவும் உள்ள மனிதன் தன் ஸ்தாபனத்தால் சம்பாதிப்பதைவிட, தனக்கு மனதில் தோன்றும் புதிய வியாபாரக் கருத்துகள் மூலம் சம்பாதிப்பது ஏராளம். அன்பர்கள் அத்துடன் நேர்மையும், நல்லெண்ணமும் சேர்த்துக் கொண்டால் அவர்கள் மன உரம் எந்த அளவு பணமும் தரும்.

 • மனம் எதையும் சாதிக்கும்.
 • அன்னை அளவில்லாமல் சாதிப்பார்.
 • மனத்திண்மை மூலம் அன்னை சாதிப்பது அதிகம்.
 • சத்தியம், நேர்மையுள்ள திடமான மனம் அன்னை மூலம் பொருளை அருளாகப் பெற அதிக வழிகளுண்டு.

தம்பி - பணம் சுலபமாகச் சம்பாதிக்கலாம் என்றாகிறது.

அண்ணன் - வாழ்வு கடுமையானது. அதில் பரீட்சை பாஸ் செய்வதே சுலபம். வாழ்க்கையில் எழும் பிரச்சினைகள் நமக்குத் தெரியாதவை. அனுபவப்பட்டு, அதாவது நஷ்டப்பட்டு கற்றுக்கொள்ள வேண்டும். பரீட்சையில் வரும் கேள்விகள் எல்லாம் வகுப்பில் கற்றுக் கொடுத்ததேயாகும்.

வாழ்க்கை தெரியாத கேள்விகளை மட்டும் கேட்கும்.

பரீட்சையில் தெரிந்த பாடத்தில் மட்டும் கேள்வி கேட்பார்கள்.

அதனால் பரீட்சை பாஸ் செய்வது மற்ற விஷயங்களைவிடச் சுலபம்.

பணம் சம்பாதிப்பது அதைவிடச் சுலபம் என்பது பலர் அனுபவம். பரீட்சை பாஸ் செய்ய அறிவு வேண்டும். பணம் சம்பாதிக்க உழைத்தால் போதும். உழைப்பு அறிவைவிடச் சிறியது.

அறிவால் பணம் சம்பாதிக்க முனைபவர் அது எளிது எனக் காண்பார். அன்னை அன்பரானால் மேலும் அக்காரியம் எளிது.

கெட்டவனாக இருக்க சாமர்த்தியம் வேண்டும். நல்லவனாக இருக்க சாமர்த்தியமும் தேவையில்லை. அதனால் உலகில் மிக எளிமையான காரியம் பணம் திரட்டுவது.

எல்லோரும் சமம்

தம்பி - எல்லா மனிதர்களும் சமம் என்ற கருத்தை ஸ்ரீ அரவிந்தர் விளக்கியுள்ளாரா?

அண்ணன் - ஸ்ரீ அரவிந்தர் நேரடியாக விளக்கியதாக எனக்கு ஞாபகமில்லை. நாம் காணும் ஏற்றத்தாழ்வு உண்மை. சமம் என்பதும் உண்மை. இரண்டும் எப்படிச் சரி என விளக்க முடியும்.

தம்பி - ஜனநாயகத்தில் எல்லோர்க்கும் சம உரிமையுண்டு. சாதனையில் ஏற்றத்தாழ்வுள்ளது. அதுபோலவா?

அண்ணன் - நான் கூறுவது சற்று மாறியது. ஒருவர் 100 காணி நிலம் வைத்திருக்கிறார். அடுத்தவர் 12 வீடு உடையவர். மற்றவர் இதே வருமானத்தைத் தொழிலில் பெறுகிறார் எனில் அனைவரும் சமம் என்று கூறலாமல்லவா?

தம்பி - கிராமத்தில் மற்றவர்கட்கு மரியாதையிருக்காது. ஹைகோர்ட்டில் கிராமத்து மிராசுதாரரைச் சட்டை செய்பவரில்லை. பெரிய வக்கீலுக்கு மரியாதை. ஆனால் இந்த 3 பேருக்கும் ஒரு விஷயத்தில் சமமான இடம் உண்டு.

அண்ணன் - சமூகத்தில் பணத்திற்கு மரியாதையுண்டு. படிப்பிற்கில்லை. ஆன்மீகக் கண்ணோட்டத்தில் எல்லா ஆன்மாக்களும் சமம். சமமான முயற்சியை வெவ்வேறு துறைகளில் எடுக்கிறார்கள். பிறப்பில் ஆன்மாக்கள் சமம். முயற்சியில் சமம். பலனில் சமம். தோற்றத்தில் சமமில்லை.

தம்பி - அதனால்தான் ஒருவர் மற்றவர் பெற்றதை முயன்றால் பெறலாம் என்று கூறுகிறீர்களோ?

அண்ணன் - அடிப்படையில் சமமான இரு ஆன்மாக்கள் தோற்றத்தில் வேறுபட்டால் தோற்றத்திலும் சமமாகலாம். டவுனில் உள்ள 12 வீட்டை விற்று கிராமத்தில் 100 காணி நிலம் வாங்கினால் கிராமத்தில் தோற்றம் சரியாகிவிடாதா?

நம்மை ஒத்தவர்கள் சாதித்ததை நாமும் சாதிக்க விரும்பினால், முயற்சி பலன் தரும்.

தம்பி - என் நண்பன் IAS பாஸ் செய்து கவர்னராக ரிடையராகியிருக்கிறான். நான் உள்ளூரில் ஓட்டல் நடத்துகிறேன் எனில் எப்படிச் சமமாக முடியும்?

அண்ணன் - முயன்றால் முடியும். அரசியல் மூலம் அது நடைபெறும். எதுவும் முடியும் என்பது பூரணயோகச் சித்தாந்தம். அதற்காக அப்படியெல்லாம் சோதனை செய்ய வேண்டும் என்று அர்த்தமில்லை. கணவனுடைய தவப்பலன் மனைவிக்குண்டு என்பது அதுபோல் அல்லவா?

தம்பி - தவம் செய்யும் கணவன் தவத்தைவிட மனைவியை அதிகமாக நினைப்பதால் அவளுக்கு பலன் போய்ச் சேருகிறது. திருமணமானவன் மனைவியை நினைக்கிறான். பிரம்மச்சாரி சக்தியை வழிபடுகிறான். இரண்டும் சமம்.

உலகம் புதிய கருத்தை ஏற்பது

தம்பி - ஸ்ரீ அரவிந்தர் 80 ஆண்டுகட்கு முன் எழுதியதை உலகம் இன்றுவரை அறியவில்லை.

அண்ணன் - உலகம் சுலபத்தில் எதையும் ஏற்காது. ஏற்றுப் பலன் பெற்றதையும் ஏற்றதாகச் சுலபமாகச் சொல்லாது. எதிரி ஏற்பது அதனினும் கடினம்.

தம்பி - ஏசுவைக் கொலை செய்ததற்காக யூதர்களை மன்னித்து போப் 2000 வருஷம் கழித்து அறிக்கை விட்டார்.

அண்ணன் - பெர்லின் சுவரை இடிக்க முனைந்தவர் கோர்பசாவ். அது 10 ஆண்டாயிற்று. இப்பொழுதுதான் அவருக்கு பெர்லின் விருது அளித்துள்ளது. "சாவித்திரி" யின் பெருமையை இங்கிலாந்து ஏற்குமா?

தம்பி - நந்தனாரைச் சிதம்பரம் தீஷிதர்கள் இன்றுவரை ஏற்கவில்லையே. கிருஷ்ணன் வளர்ந்த குலம் என்பதால் இடையர் குலம் உயர்ந்ததாயிற்றா? புரட்சி பலன் தரலாம். அக்கருத்துகளை முழுவதும் ஏற்பது எளிதன்று. அதுவும் எதிரி 1000 ஆண்டுகள் பொறுத்திருப்பான். முடிவாக ஏற்பான் எனக் கூறமுடியாது. பக்தர்கள் அன்னையை ஏற்றபின் பழைய சாங்கியங்களைச் சுலபமாக விடுவதில்லை என்பதில் எந்த ஆச்சர்யமுமில்லை.

அண்ணன் - மாற்றம் சிரமம். முழு மாற்றம் காண்பது அரிது. நாம் தேடுவது உருமாற்றம். மேலும் திருவுருமாற்றம் மிகவும் அரிது. ஐன்ஸ்டீன் பெரிய formula சூத்திரத்தைக் கண்டுபிடித்தார். உலகம் ஏற்காது என்பதால் சூத்திரத்திற்கு எதிரானதைச் சூத்திரத்துடன் சேர்த்து எழுதினார். நாளான பின் உலகம் ஏற்றது. ஐன்ஸ்டீன் சூத்திரத்தை மாற்றிவிட்டார். உலகம் சுலபமாக ஏற்காது. உலகம் ஏற்க வேண்டுமென நாம் எதிர்பார்ப்பது அவசியமில்லை.

பிரம்ம ரிஷி

தம்பி - ஐன்ஸ்டீனைப் பிரம்ம ரிஷி என்று கூறலாமா?

அண்ணன் - ரிஷிகள் மேலிருந்து கூறியதை ஐன்ஸ்டீன் கீழிருந்து கண்டுபிடித்தார். கம்பர் இராமாயணம் எழுதினார். நாம் அதைப் படித்துப் புரிந்து கொள்கிறோம். கம்பனும், நாமும் இராமாயணத்தில் சந்திப்பதைப்போல் ரிஷிகளும் ஐன்ஸ்டீனும் ஞானத்தில் சந்திக்கின்றனர்.

தம்பி - நீங்கள் சொன்ன புத்தகத்தில் சீனுவாச இராமானுஜம் இதுவரை பிறந்த கணித நிபுணர்களில் முதன்மையானவர் என்று கூறுகிறது.

அண்ணன் - ராமானுஜம் படுக்கையாக இருந்தார். ஹார்டி என்ற பேராசிரியர் அவரைப் பார்க்க வந்தார். 6 theoremகளை இராமானுஜம் அவரிடம் கூறினார். ஹார்டிக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு theorem எழுத ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதன் முடிவாக வெளி எழுவதே theorem. எப்படி தலையிலிருந்து theorem வருகிறது என ஹார்டி ஆச்சரியப்பட்டார்.

தம்பி - எப்படி ராமானுஜம் சொன்னார்?

அண்ணன் - நாமெல்லாம் ஒருவர் பாடுவதைக் கேட்டுப் பாடுகிறோம். தானே உள்ளிருந்து சிலருக்குப் பாடல் எப்படி எழுதுகிறதோ, அதே போல் theorem எழுகிறது. Theorem என்பது ஜடப் பொருளைப் பற்றிய உண்மை. அதையே formula என்கிறோம். 6" நீளம் 3" அகலமுள்ள நீண்ட சதுரத்தின் பரப்பை 6 X 3 = 18 சதுர அங்குலம் என்கிறோம். நீண்ட சதுரத்தைச் சதுர அங்குலங்களாகப் பிரித்தால் நீளத்தில் 6 சதுர அங்குலங்களும், அகலத்தில் 3உம் இருக்கும். எண்ணிப் பார்த்தால் 18 இருக்கும். நாம் எண்ணிப் பார்த்து அறிவதைச் சூத்திரம் தெரிந்தவன் 6 X 3 = 18 என்பான். அது நமக்கு ஆச்சரியமாக இருக்கும். உள்ளிருந்து பாடல் எழுவதுபோல் ஞானமுள்ளவனுக்குப் பார்த்தவுடன் 18 தெரியும். அது ஞானம். இராமானுஜம் அதேபோல் பெரிய சூத்திரங்களை அறிகிறார். உலகத்துச் சரித்திரம் சூட்சும உலகிலிருக்கிறது என்கிறார் அன்னை. அங்குப் போனால் சரித்திரம் முழுவதும் தெரியும். Mantra of Life வாழ்வின் மந்திரத்தை அன்னை அதுபோல் கண்டார். மனம் தியானத்தால் மேலே போகும். ஞானம் மேலேயிருக்கிறது. மனமும் ஞானமும் சந்தித்தால் சூத்திரம் எழும். முதிர்ந்த ஞானமுடையவனுக்கு இயல்பாகத் தெரிவது மாணவனாக இருப்பவனுக்குக் கணக்குப் போட்டு, ஆராய்ச்சி செய்து அறிய வேண்டியிருக்கிறது. இராமானுஜத்தின் முன் பேராசிரியர்கள் மாணவர்கள் போலிருக்கிறார்கள். இது இந்தியாவின் பெருமை. நாம் இதை இன்றுவரை அறியவில்லை.

தம்பி - விஞ்ஞானிகள் ஐன்ஸ்டீன் சூத்திரத்தைக் கடந்து 6 நிலைகளில் (dimensions) சூத்திரங்களைத் தேடுகிறார்களே, யோகிகள் அதை அறிய முடியுமா?

அண்ணன் - யோகத்தால் அதை அறிய முடியும். ஆனால் விஞ்ஞானி யோகத்தை மேற்கொண்டால்தான் அதை அறிய முடியும். எல்லா யோகிகளாலும் அறிய முடியாது. சூத்திரம் நகை செய்வது போன்றது. ஞானம் பவுன் போன்றது. ஞானி பவுனைச் சம்பாதிக்கிறார். தட்டான் நகை செய்கிறான். நகையைப் பயன்படுத்தலாம். பவுனைப் போட்டுக் கொள்ள முடியாது. இந்திய விஞ்ஞானிகள் யோகத்தை மேற்கொண்டால் அந்தச் சூத்திரம் தெரியும்.

தம்பி - அந்தச் சூத்திரங்களைக் கண்டுபிடிப்பவர் ஐன்ஸ்டீனைக் கடந்தவர்.

அண்ணன் - யோகம் தரும் ஞானம் ஐன்ஸ்டீன், நியூட்டனைக் கடந்தது என்பதை இந்தியர் அறியவில்லை.

தம்பி - உலகில் விஞ்ஞானத்திற்குரிய முக்கியத்துவம் ஆன்மீகத்திற்கும் எழுகிறது. பல்கலைக்கழகங்களில் ஆன்மீகத்தைப் பாடமாகவே சமீப காலமாக வைக்கின்றனர். எதிர்காலத்தில் விஞ்ஞானம் ஆன்மீகத்திற்குப் பதில் சொல்ல மறுக்க முடியாது. இதுவரை விஞ்ஞானம் கண்டுபிடித்தவை எல்லாம் மனத்திற்குரியவை. ஆன்மீகம் அதைக் கடந்தது. Higher mind, Illumined mind,
Intuitive mind, Overmind, Supermind, Sachchidananda, Brahman, முனிவர் மனம், ரிஷி மனம், யோகி மனம், தெய்வலோகம், சத்தியஜீவியம், சச்சிதானந்தம், பிரம்மம் என்பவை அவை. பிரம்ம ரிஷி பிரம்மத்தை எட்டியவர். ஐன்ஸ்டீன், நியூட்டன் கண்டுபிடித்தவை மனத்தைச் சேர்ந்தவை. ராமானுஜம் சொல்லியவை ரிஷி மனத்தைச் சார்ந்தவை.

அண்ணன் - 10,000 சம்பாதிக்கும் குடும்பம் பிள்ளைகளைப் பட்டம் படிக்க வைத்து, வெளிநாட்டுக்கு அனுப்பி, வீடு கட்டி, கல்யாணம் செய்கிறார்கள். கிராமத்தில் 1 ஏக்கரில் ரூ. 10,000 சம்பாதிக்கிறார்கள். இந்த டவுன் வருமானம் 12 ஏக்கரில் வரும். நல்ல பயிர் செய்தால் 1 ஏக்கரில் லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார்கள். 100 ஏக்கர் நிலம் உள்ளவர் நிலத்தைப் பயிரிடாமல், சொல்ப குடும்பம் நடத்துகிறார். "நமக்குப் படிப்பில்லை, அமெரிக்கா இல்லை" என நம்புகிறார் எனில் அது பரிதாபத்திற்குரிய நிலை. அவர் தன்னையும், தான் சம்பாதிக்கக்கூடிய வருமானத்தையும் அறியவில்லை. குறைந்தபட்சம் அவர் மாதம் 80,000 சம்பாதிக்கலாம். அதிகபட்சம் 8 லட்சம் சம்பாதிக்கலாம் எனத் தெரியாதது அறியாமை. இன்று இந்தியர் நிலை அதுவேயாகும்.

புதிய கல்வித் திட்டம்

தம்பி - இதுவரை நாடு அடிமையாக இருந்தது. இனி நாம் லண்டன், நியூயார்க்கை நினைப்பது தவறு. நம்மிடம் உள்ளது பவுனன்று, வைரம். மேல்நாடுகள்போல் நமக்கு ஆயிரம் மடங்கு திறனுள்ளது. அதை அறிய வேண்டும். அறிந்தால் மட்டும் போதாது. அனைவருக்கும் புரியும்படியும், பயன்படும்படியும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

அண்ணன் - படித்தவர் இதை நம்பமாட்டார்கள். படிக்காதவர் சொல்வதை உலகம் ஏற்காது. யாராவது செய்து காண்பித்தால் பிறகு அனைவரும் பின்பற்றுவார்கள்.

தம்பி - அப்படி என்ன செய்ய வேண்டும்?

அண்ணன் - நம் யோக ஞானத்திற்கும், இன்றைய படிப்புக்கும் உள்ள தொடர்பை அளவிட்டுக் காட்ட வேண்டும். இன்றைய படிப்பு astro physics உள்பட மனத்தின் அறிவு. சாக்ரடீஸ், நியூட்டன், ஷேக்ஸ்பியர், ஐன்ஸ்டீன் போன்ற மேதைகள் அடுத்த கட்டத்திற்கு வருவார்கள் (Higher mind). வேதம், உபநிஷதம், கீதை எல்லாம் overmind, intuitive mindலிருந்து எழுதப்பட்டவை என்று கூறினால் போதாது. ஒரு கல்லூரி ஆரம்பித்து, இன்றைய படிப்பை நம் முறையில் எப்படிப் பெறலாம் எனக் காட்ட வேண்டும்.

தம்பி - இன்று நம் கல்வித்தரம் மேல்நாடுகளைவிடக் குறைவாயுள்ளதே.

அண்ணன் - அக்குறையுள்ளவரை பேச முடியாது. எல்லோரும் வியாசராக முடியாது. ஆனால் இந்தியப் பரம்பரை வழி எல்லோரும் பெறும் படிப்பில் 15 வயதில் மாணவன் மேல்நாட்டு பேராசிரியர் 60இல் பெறும் அறிவைப் பெறுவான் என்று நடைமுறையில் காட்டினால் ஒருவேளை ஏற்றுக் கொள்வார்கள். இன்று இந்தியாவில் எந்த மேதையும் நம் நாட்டு அறிவின் மேன்மையைப் பேசுவதில்லை. எல்லாக் கெட்டிக்காரப்பிள்ளைகளும் படிக்க வெளிநாடு போகிறார்கள்.

தம்பி - எடுத்துச் சொன்னால் போதும் அல்லவா?

அண்ணன் - சொன்னால் நல்லது. செய்தால் சிறப்பு. ஆசிரமப் பள்ளியில் அதைச் சாதித்திருக்கலாம். ஏனோ நடைபெறவில்லை.

தம்பி - அப்படி என்ன பெரிய மாறுதல்களைச் செய்ய முடியும்?

அண்ணன் - புதிய பள்ளி, புதிய பாடத்திட்டம் ஏற்பட்டால்தான் முடியும். அதற்குரிய ஆசிரியர்கள் ரிஷிகளாக வேண்டும்.

தம்பி - ஆசிரியருக்கு மிகுந்த சம்பளம் கொடுத்தால் ஒருவேளை நடக்கும்.

அண்ணன் - இலட்சியமாக முதல் கல்லூரி நடந்தால் பிறகு தொடர சந்தர்ப்பம் உண்டு.

தம்பி - அடிப்படையில் என்ன மாற்றமிருக்கும் எனக் கூற முடியுமா?

அண்ணன் - நம் படிப்பு மனப்பாடம், மேல்நாட்டில் புரிந்து கொண்டு படிக்கிறார்கள். அவர்கள் தாய்மொழியில் நூல்களிலிருகின்றன. நமக்கு இல்லை. பிற மொழியை கற்க நாளாகிறது. வருஷம் போகிறது.

தம்பி - அக்குறையில்லாவிட்டால் என்ன செய்ய முடியும்?

அண்ணன் - மனப்பாடம் முதல் நிலை, புரிவது இரண்டாம் கட்டம், சிந்திப்பது மூன்றாம் கட்டம், சிந்திக்காமல் புரிவது கடைசிக் கட்டம். (memorisation, understanding, thinking, silent understanding without thinking). முதல் நிலையை அடியோடு விலக்க வேண்டும். இரண்டாம் நிலை மட்டுமே அடிப்படையாக வேண்டும். மூன்றாம் நிலை 14ஆம் வயதில் வரும் என்றும், 7ஆம் வயதில் எழும் எனவும் கூறுகிறார்கள். எந்த வயதில் அது வந்தாலும் அதை ஏற்க வேண்டும். 4ஆம் நிலை அனைவருக்கும் வாராது. வந்தவர்கள் அதை ஏற்க வேண்டும். வந்தவர்கள் அதை ஏற்றால் மேதைகளை நாடு பெருவாரியாக உற்பத்தி செய்யும். மேல்நாட்டுச் சாதனை இரண்டாம் கட்டத்தால் ஏற்பட்டது. 3உம், 4உம் நாம் பயன்படுத்த முடியும்.

தம்பி - கல்வியின் அடிப்படையையே மாற்ற வேண்டும்.

அண்ணன் - நாட்டுக்குரிய கல்வியாக மாற்றினால் இந்தியா மேதைகள் பிறக்கும் நாடாகும்.

தம்பி - யாரும் சேரமாட்டார்கள்.

அண்ணன் - இன்று மேல்நாட்டில் பெறும் கல்வி இதன் பகுதியாக அமைவதால் அனைவரும் எளிதாக ஏற்பார்கள். யார் எடுத்துச் செய்வது? நம் நாட்டில் இந்தப் பொக்கிஷமிருப்பதையே இன்னும் அறியவில்லையே.

தம்பி - இன்று ஒரு தனவந்தர் செய்ய முன்வருவதாகக் கொள்வோம்.

அண்ணன் - தனவந்தரால் கல்வியைப் பரப்ப முடியாது. இந்தக் கல்வியைப் பெற்றவரால்தான் செய்ய முடியும். குறைந்தபட்சம் இக்கல்வியின் பெருமையை உணர்ந்தவரால்தான் முடியும்.

தம்பி - அவருக்குப் பணம் வேண்டும்.

அண்ணன் - பணம் முக்கியம். பணம் வந்தபின் செய்யக்கூடிய காரியமில்லை இது. கல்லூரியை ஏதோ ஓரளவில் ஆரம்பித்தால், பணம் அவரைத் தேடி வரும், அப்படி வந்தால் பலிக்கும்.

தம்பி - இன்று செய்வதானால் நாமே செய்தால்தான் உண்டு. அப்படி என்ன செய்யலாம்?

அண்ணன் - ஆன்ம விழிப்பின் மூலம் அறிவு வளர்ச்சியை நாட வேண்டும். இன்று பள்ளிகளில் 15 வயதில் பெறும் கல்வியை 7 அல்லது 8 வயதில் அளிக்க முடியும். 10 வயதிற்குள் அதை அளிக்க முடியாவிட்டால் அவர்களால் இதைச் சாதிக்க முடியாது. 

 • நாம் பரீட்சைக்கு மாணவனைத் தயார் செய்கிறோம்.
 • மேல்நாட்டில் பரீட்சை நடத்தினாலும், பாடத்திற்கு அவனைத் தயார் செய்கிறார்கள்.
 • அடுத்த கட்டத்தில் பாடத்தைவிட ஆர்வமாகப் பயில்வது முக்கியம் என மாற்றினால் நிரூபமா 11 வயதில் 18 வயது பெண் படிப்பைப் பெற்றதுபோல்
 • பெறலாம்.
 • அதன்பின் படிப்பு மனவளர்ச்சி என்பதற்குப் பதிலாக
 • ஆன்ம விழிப்புக்கு என மாற்ற வேண்டும் (not mental education but spiritual education).  

தம்பி - அறிவு வளர்வதை லட்சியமாகக் கொள்ளாமல், ஆன்மா விழிப்படைவதை இலட்சியமாக்கிப் படிப்பை அமைக்க வேண்டும். ஆன்மாவுக்கு அறிவு உட்பட்டதல்லவா?

அண்ணன் - அந்த மாற்றம் நாட்டில் மேதைகளை உற்பத்தி செய்யும். எந்தக் குழந்தைக்கு மேதாவிலாசம் இருக்கிறது என அப்படிப்பு கண்டுபிடிக்கும்.

தம்பி - இன்றுள்ள படிப்பை 10 வயதில் சிறப்பாகப் பெறுவதே அடிப்படை.

அண்ணன் - 1 பள்ளியில் மட்டும் என்பதால் அது முடியும். நாம் இன்று பார்க்கிறோம், காங்கோவில் 13 பட்டதாரிகள் 1960இல் என்று. மற்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான பட்டம் பெற்றவர் உள்ளபொழுது இது காங்கோவின் நிலை. நம் நாட்டுப் படிப்பை மாற்றி அமைத்தால் நாட்டில் 500 genius மேதைகள் உற்பத்தியாவார்கள். இன்று எவரும் அதை நம்பமாட்டார்கள்.

தம்பி - 1944இல் சென்னை மாகாணத்தில் 7 Ph.D.கள் கணிதத்திலிருந்தனர். இன்று USஇல் 30,000 Ph.D.கள் வருஷம்தோறும் பட்டம் பெறுகின்றனர். தமிழ்நாட்டில் கணிதத்தில் 70 Ph.D. இருந்தால் ஆச்சரியமில்லை. '44இல் அது ஆச்சரியம். புதிய முறை ஏற்பட்டால் 70 genius மேதைகள் தமிழ்நாட்டில் எழுவார்கள்.

அண்ணன் - கல்வித் திட்டத்தால் மேதைகளை உற்பத்தி செய்ய முடியுமா என நினைக்கலாம். நாட்டில் மேதைகள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை அறிவதில்லை. இப்புதிய திட்டம் அவர்களைக் கண்டுபிடிக்க உதவும். நம் உடலில் ஒளி இருப்பதால் இது நடக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். முதலில் இதை நம்ப வேண்டும்.

தம்பி - நாம் 7, 8 வருஷமாக அன்னையை வழிபடுகிறோம். ஏற்பட்ட முன்னேற்றத்திற்கு அளவில்லை. நாம் அன்னையிடம் வருமுன் நம்முடனிருந்தவர் நிலையையும், நம் நிலையையும் ஒப்பிட முடியாத அளவு உயர்ந்துவிட்டது. ஆனாலும், பல முக்கியமான விஷயங்கள் பாக்கியாக இருக்கின்றன. ஆபத்து வீடுவரை வந்து போகிறது. சில சமயங்களில் உள்ளேயே நுழைந்துவிடுகிறது. இவையெல்லாம் முழுவதும் மாற வழியேயில்லையா?

அண்ணன் - நாம் ஆயிரம் முறை பேசியதுதான் இவ்விஷயம். நாமாக, பிறருக்குத் தகுதியில்லாதபொழுது உதவப் போன இடங்களில் மட்டுமே தோல்வி, ஆபத்து வந்திருக்கிறது என்பதே உண்மை.

தம்பி - அது பஸ்மாசூரன் கதை.

அண்ணன் - அதற்கு விலக்கு இருக்கிறதா சொல்லு.

தம்பி - அது உண்மைதான். அதன் காரணம் என்ன?

அண்ணன் - மனிதன் தன்னை முக்கியமானவன், பெரியவன், உயர்ந்தவன், தலைவன் எனக் கருதுகிறான். கூலிக்காரன், பிச்சைக்காரன் உள்பட அப்படித்தான் தன்னைக் கணக்கிடுகிறான். அது அவன் வாழ்வில் ஒரே ஒரு முறையும் பலித்ததில்லை. நாம் அவனை உயர்ந்தவனாக நடத்தினால், உடனே பெரியவனாகிவிடுகிறான். அதன் விளைவே இது.

தம்பி - என்ன செய்யலாம்?

அண்ணன் - பரிதாபம், பச்சாத்தாபம், நியாயம், பெருந்தன்மை, பாசம், நல்லது, என்ற நோக்கங்களை எல்லாம் மாற்றி மற்றவர் போல் நடந்தால், இன்று நம் தோல்வி அனைத்தும் வெற்றியாகும்.

தம்பி - அப்படிச் செய்தால் நாம் வெற்று மனிதர்களாகிவிடுவோமே.

அண்ணன் - மனத்தால் உயர்வும், செயலால் வெறும் மனிதர்களாகவும் இருந்தால் எல்லாத் தோல்விகளும் வெற்றியாகும்.

தம்பி - நான் உயர்வாக நடந்து, பிறர் என்னை ஏமாற்றியது ஏராளம். ஆனால் அன்னையும் வாழ்வும் பெரும் பலன் கொடுத்துவிட்டார்களே.

அண்ணன் - காரியவாதி உன்னை ஏமாற்றினால் காலம் உன்னைக் காப்பாற்றுவது போதும் என்றால் அதுவே சரி.

தம்பி - நீங்கள் சொல்வதுபோல் நடந்தால் காலம் கைவிடாது என்பதுடன், காரியவாதியும் ஏமாற்ற முடியாது என்றாகுமா?

அண்ணன் - ஆமாம். அன்னை இரண்டையும் கலந்து பின்பற்றுவதைக் கண்டதில்லையா?

தம்பி - நாம் திரும்பிப் பார்க்கும்வரை நம் பின்னால் வரும் அன்னை, திரும்பிப் பார்த்தவுடன் மாறிவிடுகிறார்கள். அதன் பிறகு நாம் மட்டுமே அன்னை பின்னால் போக வேண்டும்.

அண்ணன் - அதுவே நமக்குரிய முறை. மனிதன் விழிப்படையும் வரை நாம் இடம் தரலாம். விழித்தபின் இடம் கொடுப்பது தவறு.

தம்பி - சரி. இந்த T.V. கடைக்காரர் 2 வருஷத்திற்குத் திவாலாகியதைத் தடுக்க நாம் பெருமுயற்சி எடுத்தோம். இப்பொழுது இலாபம் வருகிறது. ஆனால் அவர் நாம் சொல்லும் முறையைப் பின்பற்ற செலவாகும் என்பதால், அதைப் பற்றிப் பேசவே மறுக்கிறார்.

அண்ணன் - சரி, உன் அக்கறையை மாற்றிக் கொள். என்ன செய்கிறார் எனப் பார்க்கலாம்.

தம்பி - இவரே ஒரு முறை நாம் மாறியபொழுது மாறிக்கொண்டது நினைவிருக்கிறதே.

அண்ணன் - பழைய அனுபவம் சரி. அதையே ஏற்றுக் கொள்ள வேண்டும். நம் அனுபவத்தில் இது புதிதன்று. நாம் மாறினால் அவர்களும் மாறிவிடுகிறார்கள். நமக்கு மாற சில சமயங்களில் மனம் இடம் கொடுப்பதில்லை. அங்கெல்லாம் தோல்வி.

தம்பி - உலகம் இயல்பாக ஆதாயத்தைக் கருதுகிறது. நாம் மனதால் ஆதாயத்தை நாடாமல், செயலில் நாட வேண்டுமா?

அண்ணன் - குழந்தை வளர்ப்பிலும் நாம் இதைப் பின்பற்றுகிறோமல்லவா! பிரியமும் கண்டிப்பும் கலந்துதானிருக்கும். எந்த அளவில் கலக்க வேண்டும் என்பதே பிரச்சினை. நாம் பெருந்தன்மையாக நடக்கிறோம் என்று நினைக்கும்பொழுது, பிறர் நம்மை மடையன் என்று கொள்கிறார்கள்.

தம்பி - உண்மையிலேயே நாம் மடத்தனமாகத்தானிருக்கிறோம்.

அண்ணன் - அது புரியுமிடத்தில் தோல்வியிருக்காது. 99 முறை ஜெயித்தாலும், ஒரு தரம் சற்று மனம் சபலமானால், அங்குத் தோல்வி காத்திருக்கும்.

தம்பி - சட்டம் சட்டப்படி தவறாது நடக்கும். நாம் மாறலாம், சட்டம் மாறாது. இந்தச் சட்டத்தை Being of the Becoming வாழ்வின் ஆன்மா செயல்படுவது எனக் கூறலாமா?

அண்ணன் - Becoming என்பது வாழ்வு, அதன் சட்டம் வலிமையானவனுக்கு வெற்றி. இல்லாதவனுக்கு தோல்வி. வெற்றியும் தோல்வியும் கலந்தது வாழ்வு.

Being என்பது துறவறம். துறவிக்கு வாழ்வேயில்லை. அதனால் வெற்றி, தோல்வி என்ற பிரச்சினையேயில்லை.

Being of the Becoming என்பது ஸ்ரீ அரவிந்தம். வாழ்வில் ஆன்மா செயல்படுவது. இல்லறத்தில் துறவறம். இதில் வெற்றி மட்டுமேயுண்டு. தோல்வியே கிடையாது.

Becoming
வாழ்வு
ஆதாயத்தை
நாடுவது
வெற்றி தோல்வி கலந்தது
Being
துறவறம்
ஆண்டவனை நாடுவது
பிரச்சினையே இல்லை
Being of the Becoming
இல்லறத்தில்
துறவறம்
ஸ்ரீ அரவிந்தம்
வாழ்வில் ஆண்டவனைத் தேடுவது
வெற்றி மட்டும் உண்டு. தோல்வியில்லை
                                                                                                                 ↓

வலிமையான மனத்துடன், ஆதாயத்தை நாடுபவனைப்போல் செயலில் நடப்பது.

இரகஸ்யம் - மனம் ஆண்டவனில்

 • லயிக்கவேண்டும். செயல் வாழ்வில் வலிமையுள்ளவன் போலிருக்க வேண்டும்.
 • நேர்மை மனத்திலுள்ள ஆண்டவனுக்கு நம்மை ஏமாற்ற முயலும் மனிதனிடம் ஏமாறாத வலிமை இருக்க ஆதாயத்தை நாடுபவனைப் போல நடப்பது. மனதாலோ செயலாலோ ஆதாயத்தை நாடாத நிலை. உள்ளே ஒளியும், புறத்தே வலிமையான செயலும் வெற்றியை மட்டும் பெற்றுத் தரும். அங்குத் தோல்வி என்ற பேச்சேயில்லை.

தம்பி - நமக்கு இன்று எங்கெல்லாம் பிரச்சினைகளுள்ளனவோ, அங்கெல்லாம் இம்மாற்றம் வாராமல், நாம் அடுத்த கட்டத்தில் அன்னையின் அருளைப் பெற முடியாது. எனக்கு நெஞ்சுவலி, அது இம்மாற்றத்தால் குணமாக வேண்டும். பட்டம் எடுத்த பையன் சிறிய வேலையிலிருக்கிறான். பெரிய வேலை வந்தது பலிக்கவில்லை. அதுவும் பலித்தால்தான் எனக்குப் பேச உரிமையுண்டு.

அண்ணன் - இந்த இரண்டு மாற்றங்களும் ஏற்பட்டால், இந்தக் கட்டத்தில் உன்னால் முடியாததேயிருக்காது. இதுவரை நான் கூறிய அனைத்தும் உனக்குப் பலிக்கும்.

தம்பி - என் தலைவர் மந்திரியாகிவிட்டார். நானும் மந்திரியாவேனா?

அண்ணன் - நிச்சயமாக நடக்கும். பொதுவாக இரண்டாம் கட்டம் வரத் தகுதிகளைக் கூறுங்களேன். உனக்கு தெரியாவிட்டால் நான் சொல்கிறேன்.

தம்பி - எல்லோரும் எல்லாக் கட்டங்களுக்கும் போகலாம் என்ற தகுதி (potential) உண்டு என்று நீங்கள் சொல்வதுண்டு. யார் வாழ்வில் அன்னை அசாதாரணமாகச் செயல்பட்டுள்ளார்களோ அவர்களுக்கெல்லாம் அத்தகுதியுண்டு.

அண்ணன் - அது எல்லோருக்கும் உண்டு. அந்தத் தகுதிக்கேற்ப நடந்து அடுத்தக் கட்டத்திற்கு அனைவரும் போவதில்லை.

தம்பி - நடக்காதது அன்பருக்கு நடந்தால், அவருக்கு இந்த இடம் உண்டு.

அண்ணன் - எத்தனை விதமாகச் சொன்னாலும் முடிவு எளிமையானதே.

தம்பி - நல்லெண்ணம் வேண்டும் அல்லவா?

அண்ணன் - உழைப்பும், திறமையும் அத்துடன் சேர வேண்டும்.

தம்பி - உலகில் இம்மூன்றும் உள்ளவர் குறைவு என்று பொருளா?

அண்ணன் - அவர்கள் அன்னையை ஏற்றால் இரண்டாம் கட்டம் வருவார் என்பது உறுதி. பொதுவாக அன்பர்கள் பிரச்சினை வரும்பொழுது மட்டும் அன்னையை கூப்பிடுகிறார்கள்.

தம்பி - இடைவிடாது எப்படிக் கூப்பிட முடியும்?

அண்ணன் - இடைவிடாது வாயால் கூப்பிட வேண்டிய அவசியமில்லை. வாயால் கூப்பிடாதபொழுது, மனம் கூப்பிட வேண்டும், மனம் குரல் எழுப்பாதபொழுது நினைவு வைத்திருக்க வேண்டும். ஒரு வேலை செய்து முடித்தவுடன் மனம் அன்னையைக் கூப்பிட்டால் மனம் இடைவிடாது நினைவு வைத்துள்ளது என்று பொருள்.

தம்பி - இடைவிடாது சொல்லும், மனமும் அன்னையிடம் இல்லாதவர்க்கு இரண்டாம் கட்டம் இல்லையா? அப்படியானால் அடுத்த 8 கட்டங்களுக்கு என்ன நிபந்தனை?

அண்ணன் - சிருஷ்டியை 8 நிலைகளாக சத் - சித் - ஆனந்தம் - சத்தியஜீவியம் - மனம் - வாழ்வு - உடல் எனப் பிரித்திருக்கிறார். அழைப்பு படிப்படியாக இந்த 8 நிலைகளுக்கும் உயரும்.

தம்பி - அவையெல்லாம் யோகத்திற்காக.

அண்ணன் - அன்பர்கட்கு யோகமில்லை. யோகத்திற்குரிய வாழ்வு நிலையைத்தான் கூறுகிறேன்.

தம்பி - அந்த 8 நிலைகளையும் கூற முடியுமா?

அண்ணன் - சுமாராகச் சொல்லலாம். அறுதியிட்டுக் கூற முடியாது.

தம்பி - சொல்ல முடிந்தவரை சொல்லுங்களேன்.

வாழ்வின் 8 நிலைகள்

அண்ணன் - 8ஆகப் பிரிப்போம். எல்லா அன்பர்களும் முதல் நிலை. நல்லெண்ணம், நேர்மை, திறமை உள்ள இடைவிடாத நினைவு இரண்டாம் நிலை (present level). இந்த இரண்டாம் கட்டத்தை ஆரம்பமாகக் கொள்வோம். அதற்கடுத்தது நம் திறமைக்குரிய பலன் எனலாம். அடுத்தாற்போல் நம்மவர் இதே திறமைக்குப் பெற்ற பெரிய அளவு. இதே திறமையுடன் எவர் பெற்றதும் நமக்குண்டு. இந்த 4 கட்டங்களும் வாழ்வில் எப்படியும் பெறலாம். அன்னையிடம் நல்ல முறையில் மட்டும் பெற முடியும். வாழ்வில் பெறுவதுபோல் முதல் 4 கட்டங்களும், அன்னையிடம் பெறுவதுபோல் அடுத்த 4 கட்டங்களையும் கூறலாம்.

தம்பி - உதாரணம் சொல்வதற்கில்லையே.

அண்ணன் - விஷயம் உதாரணத்திலில்லை. மேற்சொன்னதையே வேறு வகையாகவும் கூறலாம்.

 • எந்த ஆதாயமும் தேவையில்லை. அன்னை மட்டும் போதும் என்ற பக்குவம் வந்தது உண்மையானால் மேற்சொன்ன நிலைகள் அவரைத் தேடி வரும்.
 • அந்தப் பக்குவம் எனக்கில்லை. நான் கேட்டு, முயன்று பெறுகிறேன் என்பவர்க்கு முயற்சியால் வரும். வாழ்க்கை வளம் பெறுகிறது, முன்னேற்றமடைகிறது என்பதெல்லாம் அன்னை மனத்துள் வளர்கிறார்கள் என்று பொருள். இடைவிடாத நினைவுக்கு ஆழம் உண்டு. இந்த 8 கட்டங்களுக்கும் 8 ஆழம் உண்டு. ஒரு கட்டம் பலிக்க அதற்குரிய ஆழத்திலிருந்து நினைக்க வேண்டும்.

தம்பி - 10 லட்சத்திலுள்ள நிதானம் 1 கோடியிலிருக்காது. பணம், பதவி, உயரும்பொழுது கட்டம் உயருகிறது. நிதானம் வந்தால் பலிக்கிறது. MLA பதவிக்குப் போட்டி, மந்திரி பதவிக்குப் போட்டி மாறுகிறது. போட்டியில்லாமல் MLA பதவியைக் கூப்பிட்டுக் கொடுக்கிறார்கள். அது போட்டியிட்டு மந்திரி பதவி பெறச் சமம் எனலாம் அல்லவா?

அண்ணன் - நான் அதிக நாள்களாகக் கூறுவது ஒன்றுதான். மீண்டும் கூறுகிறேன்.

 • வாழ்க்கை திறமை, நாணயம், நேர்மைக்குப் பலனளிப்பதில்லை. ஏற்கனவே உயர்ந்தவர்க்கும், அடாவடியாக நடப்பவனின் திறமைக்கும் பலன் தரும்.
 • வாழ்க்கையில் எந்தப் பலன் நமக்கில்லையோ அன்னை அதை நமக்குத் தருவார். திறமை, நாணயம், நேர்மை வேண்டும். அப்படி நாம் அன்னையிடம் பெற அளவு, எல்லை, வரையறையில்லை.

இதை நான் பக்தர்கள் வாழ்வில் ஆயிரம் முறை கண்டுள்ளேன். எனக்குச் சந்தேகமில்லை. நான் பிறருக்கு எடுத்துக் கூற முடியாது. எவருக்கும் அன்னையிடம் உரியது இது.

உலகில் புதிய வசதிகள் வருகின்றன. பலர் பயன்படுத்திப் பலன் பெறுகின்றனர். சிலர் முன்வருவதில்லை. சில விஷயங்களைப் பலரும் புறக்கணிக்கிறார்கள். சில விஷயங்களை  ப.ய. போன்றவற்றை  எவரும் புறக்கணிப்பதில்லை. இவற்றையெல்லாம் கடந்த நிலையில் அன்னை ஆன்மீக வசதியைக் கொண்டு வந்துள்ளார். அது இவற்றையெல்லாம் உட்கொண்டது. கடந்ததுமாகும். அனைவருக்கும் உரியது அது. அதைப் பெற வேண்டும், அனைவரும் பெறவேண்டும் என்பதை பல்வேறு வழிகளாகக் கூறுகிறேன்.

தம்பி - உலகத்தில் வந்துள்ள புதிய வசதிகள் கண்ணுக்குத் தெரிகின்றன. அன்னை அளிப்பது புரியவில்லை. பழைய காலத்து மனிதனுக்கு இக்காலத்து வசதி போன்றது இக்காலத்து மனிதனுக்கு அன்னை அளிப்பது.

அண்ணன் - கால்நடையாகப் போனவன் காரில் போவது போன்ற மாற்றம் இன்று அன்னை காரில் போகும் மனிதனுக்கு அளிப்பது. பக்தர்கட்கே புரியவில்லை என்றால் மற்றவர்கட்கு எப்படிப் புரியும்? நாம் பேசுவது மனம், வாழ்வைப் பொருத்தது என்பதால் 1 to 9 என்ற அளவீட்டில் 3 to 6 எடுத்துக்கொண்டு பார்ப்போம்.

 
1
2
3
மனம்
தத்துவ ஞானி
கவிஞர்
திறம்பட
வாழ்பவர்
 
4
5
6
உணர்வு
மனிதர்களைப் புரிந்து
கொள்பவர்
தலைவன்
தொண்டன்
 
 
7
8
9
உடல்
கை வேலை செய்பவன்
கூட்டு வேலை செய்பவன்
ஜடம்
 

பொதுவாகச் சொன்னால் மனிதனை 9 கட்டத்தில் கணிக்கலாம். அவர்களை மேற்கண்டவாறு இங்குக் குறிப்பிட்டுள்ளேன். நாம் வாழ்வை மட்டும் கருதுவதால் 3 முதல் 6 வரை உள்ள நிலைகளையே முக்கியமாகக் கருத வேண்டும். அவை 4 கட்டங்கள். ஒவ்வொன்றையும் இரு பகுதிகளாகக் கருதினால் 8 கட்டங்களாகும். அன்னையை அழைக்கும்பொழுது இந்த எட்டுக் கட்டங்களை வரிசையாகக் கருதினால் அழைப்பின் ஆழம் அதிகமானால் பலன் அதிகரிக்கும். எந்தக் கட்டத்தில் நம் பிரார்த்தனை பலிக்கிறதோ அதற்குட்பட்ட எல்லாப் பிரார்த்தனைகளும் நமக்குப் பலிக்கும் தகுதியுண்டு என்று நாம் அறியலாம். 9ஆம் கட்டம் உடல், ஜடம் என்றேன். டாக்டர் கைவிட்டபின் பிரார்த்தனை பலித்தால் நம் பிரார்த்தனை 9ஆம் கட்டத்தில் பலிக்கிறது. உலகில் ஒரு மருந்தில்லை என்ற வியாதி பிரார்த்தனையால் தீருகிறது எனப் பொருள். 9ஆம் கட்டத்தை மேற்பகுதி, கீழ்ப்பகுதி எனப் பிரித்தால் ஜாதகம் கைவிட்ட நிலை கீழ்ப்பகுதியாகும். அப்படி ஒரு பிரார்த்தனை பலித்தால் அவருக்குப் பலிக்காத பிரார்த்தனையேயில்லை என்று புரிந்து கொள்ளலாம்.

ஏனெனில் 9ஆம் கட்டம் ஜாதகம் என்பதைக் கடந்த நிலை உலகில் இல்லை. அதேபோல் 3, 4, 5, 6 நிலைகளை மேற்பகுதி (consciousness), கீழ்ப்பகுதி (substance) எனப் பிரித்து அவற்றிற்குரிய பிரார்த்தனைகளைக் கருதுவோம்.

3 மேற்பகுதி - 3 என்பது மனம். செயலைத் திறனாகச் செய்யும் மனம். முடிவு எடுப்பது. நாம் ஒருவரிடம் போய் அவருடைய முடிவை மாற்றிச் செயல்படச் சொல்வது எளிதன்று. அதுவும் மேலதிகாரி, நமக்குப் பெரியவர், பணம் உள்ளவர், ஊரில் முக்கியஸ்தர், பதவியிலுள்ளவர் முடிவு, முடிவானதே. அது பிரார்த்தனைக்கு மாறுகிறது எனில் நம் வாழ்வில் எவர் முடிவும் நமக்கு நிகரில்லை. நம் முடிவே, முடிவு. அதாவது அன்னைச் சட்டப்படி நாம் எடுக்கும் முடிவுக்கு நம் வாழ்வில் எதிர் இல்லை எனப் பொருள்.

3 கீழ்ப்பகுதி - மேற்பகுதியை decision என்றால் கீழ்ப்பகுதியை determination எனலாம். ஆழ்ந்த முடிவு எனலாம். 3 வருஷத்திற்கு முன் டிரான்ஸ்பர் கொடுக்கக் கூடாது என்ற உத்தரவை மாற்றி நமக்கு முதல் வருஷம் டிரான்ஸ்பர் போடுவது இம்முடிவு பிரார்த்தனையால் மாறுவது. மேற்பகுதியைவிடக் கீழ்ப்பகுதி வலுவானது.

4 மேற்பகுதி - 4 என்பது vital mind உணர்வுக்குரிய மனம். பொதுவாக வக்கிரமாக இருக்கும். பிறரை எளிதில் அறியும் திறனுடையது. உதாரணமாக ஒருவர் எவரையுமே பாராட்டாதவர். நம்மைச் சதா மட்டம் தட்டிப் பேசுபவர் எனில் அவர் வாயால் நம்மைப் பாராட்ட வேண்டிய சந்தர்ப்பம் வந்தால் அருள் வக்கிரத்தை மாற்றிவிட்டது எனப் பொருள்.

4 கீழ்ப்பகுதி -இதுவும் vital mind. ஆனால் வலிமையுள்ளது. அடாவடியாகவே பணம் சம்பாதிப்பவனுடைய நிலையிது. விவரம் தெரியாமல் அவனிடம் நாம் பணம் கொடுத்துவிட்டால் ஊரில் அனைவரும் "இனி அது வாராது" என்பார்கள். அவர்கள் கூறுவது உண்மை. அது பிரார்த்தனையால் வந்தால் அடாவடிக்காரனும் அருளுக்குக் கட்டுப்படுகிறான் எனப் பொருள்.

5 மேற்பகுதி - இதுவும் vital. ஆனால் உணர்வு மையம். இங்குள்ளவர் எவருக்கும் தாமே கட்டுப்படமாட்டார்கள். தெளிவாக இருப்பார்கள். அவர்கட்குச் சுதந்திரம் உள்ள இடத்தில், நியாயம், நல்லது, பரிதாபத்திற்கு இணங்கமாட்டார்கள். நீ கெட்டுப் போக ஒருவர் வேலை செய்தால், கெட்டுப் போனபின் கைதட்டிச் சிரிக்கலாம் என இருந்தால், பிரார்த்தனையால் அவரே உனக்கு உதவ முற்பட்டால், அது பெரிய விஷயம்.

5 கீழ்ப்பகுதி - மேற்பட்டவர்கள் தீர்மானமாக இருக்கக் கூடிய இடம் இது. "மனிதன் என்றால் வேலை செய்யக்கூடாது" என்ற லட்சியத்தை மேற்கொண்டவர் ஒருவர். தாம் வேலை செய்யுமிடத்தில் இதைக் கடைப்பிடித்து வருகிறார். இவர் வேறு வேலையை ஏற்றுத் தாமாகவே முன்வந்து எவரும் உழைக்காததைப்போல் தாம் உழைத்து 100 பேரை அதுபோல் வேலை வாங்கினார். அது அருளின் செயல்.

6 மேற்பகுதி - அடாவடிக்காரன் ஒருவனிடம் பிரார்த்தனை பலிப்பதைப்போல் பலரிடமும் (ஒருவர் தவறாமல்) ஒரு ஸ்தாபனத்தில் ஒருவருக்குப் பலித்தது. அடாவடித்தனம் வணங்குகிறது.

6 கீழ்ப்பகுதி - உலகில் நல்லது செய்பவனுக்கு விருதுண்டு. தவறு செய்பவனுக்கில்லை. தவறு செய்பவனின் தவறு உலகப் பிரசித்தியானபின், அதுவும் எழுத்தில் வந்து வெளியான பின் (gone on record) அவருக்கு உலகப் பரிசு பிரார்த்தனையால் வருகிறது எனில், அருளின் சக்திக்கு உட்படாததேயில்லை எனப்படும்.

3 முதல் 6 வரை மனம், உணர்வுள்ள பகுதிகள். வாழ்வு இதற்குட்பட்டது. இவை போன்ற நிகழ்ச்சிகளைக் காணாத அன்பரில்லை. இவற்றிற்கு மீறிய வாழ்க்கைப் பிரச்சினையில்லை. நான் முன்னே கூறிய முன்னேற்றங்கள் இந்த 3-6 நிலைகளுக்குட்பட்டவை என்பதால் அவை போன்ற முன்னேற்றங்களை பிரார்த்தனையால் பெறலாம், பெற முடியவில்லை எனில் முயற்சி சரியில்லை போதாது எனப்படும்.

நல்லதும் கெட்டதும்

தம்பி - நல்லதிலிருந்து கெட்டது வரும். கெட்டதிலிருந்து நல்லது வரும் என்று பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுவதற்கு விளக்கம் தர வேண்டும்.

அண்ணன் - இவை தத்துவார்த்தமான கருத்துகள். அன்றாட வாழ்வில் பயன்படக்கூடியவற்றைக் கருதுதல் நல்லது. பொதுவாக போர் கெட்டது. எல்லா ஆராய்ச்சிகளை ஆரம்பிப்பதும் போருக்காக. போர் முடிந்தவுடன் அவை வெளிவந்து ஒரு புரட்சியை ஏற்படுத்திவிடுகின்றன. 1950க்குப் பின் உலகம் அளவுகடந்து முன்னேறியதற்கு இரண்டாம் உலகப் போரே காரணமாகும். இன்று உலகை ஆட்டி வைக்கும் கம்ப்யூட்டர் போரால் கண்டுபிடிக்கப்பட்டதாகும். கெட்டதிலிருந்து நல்லது வந்ததற்கு உதாரணம் இது. 1848இல் காரல்மார்க்ஸ் கம்யூனிசத் தத்துவத்தை உலகுக்கு அறிவித்தார். அதன் முக்கியக் கருத்துகள்,

 1. நாட்டில் சர்க்கார் (state must wither away) தானே மறைய வேண்டும்.
 2.   உழைப்புக்குத் தகுந்த ஊதியம் முதலிலும், தேவைக்குத் தகுந்த ஊதியம் முடிவிலும் சர்க்கார் மக்களுக்கு அளிக்க வேண்டும்.

"இன்று உலகை ஆளும் இரு கொள்கைகள் கத்தோலிக்க மதம், கம்யூனிசம்" என அன்று அன்னை கூறினார். 1917இல் லெனின் கம்யூனிசக் கொள்கையை ஏற்றுப் புரட்சி செய்து ஜார் மன்னனைக் கவிழ்த்தார். 70 ஆண்டுகட்குப்பின் ரஷ்யா கண்டதென்ன?

 1. நாட்டில் சர்க்கார் (police govt.) போலீஸ் ராஜ்யம் நடத்துகிறது.
 2. தொழிலாளிகளுக்காக ஏற்பட்ட சர்க்காரும், நாடும் முதலாளித்துவ நாட்டுத் தொழிலாளிகளுக்குள்ள சம்பளம் கொடுக்க முடியவில்லை.
ரஷ்யா கம்யூனிசத்திலிருந்து மீண்டது. நல்லதிலிருந்து கெட்டது புறப்படுவதற்கு இது உதாரணம்.  

உலகப் பிரசித்தி பெற்ற நாவல் ஒன்றில் ஒரு டிராமா வருகிறது. 200 ஆண்டுகட்குமுன் எழுதியதால் அன்று பெண்கள் நடிப்பதில்லை. ஆண்கள் பெண் வேடம் தாங்கி நடிப்பார்கள். பெண்கள் நடித்தால் கணவனுடன் நடிப்பார்கள். அந்த நாடகத்தில் கணவன், கதாநாயகியின் காதலனாக வருகிறான். கதையில் அவள் அவனைக் கத்தியால் குத்திக் கொன்றுவிடுகிறாள். டிராமாவில் குத்துவதாக நடிப்பது வழக்கம். ஒரு நாள் கதாநாயகி உண்மையாக அவனைக் குத்திவிடுகிறாள். அவன் (கணவன்) இறந்து விடுகிறான். கேஸ் கோர்ட்டுக்குப் போயிற்று. கால் இடறியதால் தவறி குத்திவிட்டேன் என்றாள் நடிகை. அவள் விடுதலை செய்யப்பட்டாள். அவள் சிறந்த அழகி. மீண்டும் நாடகத்தில் நடித்தாள். அவள் குத்திய அன்று அவளுக்குச் சிகிச்சை செய்த டாக்டர் அவளை மணக்க விரும்பி வருகிறான். அவள் முன் மண்டியிட்டு "என்னை நீ திருமணம் செய்து கொள்வாயா?" எனக் கேட்கிறான். அவனுக்குப் பதில் சொல்லாமல் அவள் கத்திக் குத்து நிகழ்ந்த நாளைப் பற்றிப் பேசுகிறாள். "நான் கைதவறி என் கணவனைக் குத்தவில்லை. வேண்டுமென்றே குத்திக் கொன்றேன்'' என்று கூறுகிறாள். மணக்க வந்த டாக்டர் பேச்சிழந்தான். திகைத்திருந்தபொழுது மேலும் கூறுகிறாள், "என் கணவருக்கு என் மீது அளவு கடந்த பிரியம். அது எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குக் கணவன் என்ற கருத்தே ஒவ்வாது" என்றாள்.

மனைவி மீது அளவுகடந்த பாசம் நல்லது. அதன் விளைவு உயிர் போயிற்று. இது தத்துவச் சாரம். நல்லதிலிருந்து கெட்டது எழுகிறது.

சிறியதும் பெரியதும்

(Finite & Infinite)

தம்பி - நீங்கள் சொல்வனவெல்லாம் சுருக்கமாக "நாம் அன்னை அன்பர் என்பதை அறியவில்லை" எனக் கூறலாம்.

அண்ணன் - பெட்டிக்கடை வியாபாரி, கண்டக்டர், தெரு மூலையில் பஜ்ஜிக்குப் பேர் போன அய்யர், ஆபீஸ் பியூன், வீட்டு வேலை செய்பவர் பிள்ளைகள் இன்று படித்துப் பட்டம் பெற்று, பேராசிரியர், கலைக்டர், துணைவேந்தர், பாங்க் ஏஜெண்ட், MLA, MP, மந்திரி, IAS ஆபீசராக வருவதைக் காண்கிறோம். இந்தப் புதுப்பதவி வந்தபிறகு அவர்கள் பழைய நிலை மாறி பெருஞ்செல்வாக்கு வருகிறது. அதை அறியாதவருண்டா? அதற்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்ளாதவருண்டா? அன்னையை ஏற்பது இத்தனையையும் கடந்த நிலை என்று அறிபவருண்டா? அதற்கேற்றார்போல் குணத்தை மாற்றிக் கொள்பவருண்டா?

தம்பி - அன்னையை ஏற்பது எனில் என்ன என்ற கேள்வி எழுகிறது.

அண்ணன் - மகாத்மா காந்திஜியைச் சபர்மதி ஆசிரமத்தில் தரிசித்தவர் பலர். அவருள் ஒரு சிலர் வீட்டுக்கு வந்து மனம் மாறி தம்மையும், தம் வாழ்வையும் காங்கிரஸுக்கே சமர்ப்பணம் செய்தனர். அப்படி எழுந்ததே காங்கிரஸ் தலைமை. அன்னையை அது போல் ஏற்பதே ஏற்பது. அது சிறியது பெரியதாக உதவும் (finite into infinite).

அன்னையை முதலில் தரிசித்தாலும், சமாதித் தரிசனம் செய்தாலும், அவர் படத்தைக் கண்டாலும், அவரைப் பற்றிய புத்தகத்தைப் படித்தாலும்,

நம்முள் பேரமைதி தோன்றி, ஜீவன் முழுவதும் பரவி இனி நாம் அன்னைக்கேயுரியவன்

என்ற உணர்வு ஏற்படுகிறது. அவ்வுணர்வைப் போற்றிச் சிதறாமல் மனதால் வளர்ப்பது அன்னையை ஏற்பதாகும். அப்படி ஏற்றால் finite man சிறிய மனிதன் infinite soul அனந்தமான ஆத்மாவாகிறான். அவனால் அதன்பின் அன்னைக்கு ஒவ்வாதவற்றைச் செய்ய முடியாது.

தம்பி - அது பக்தி, நம்பிக்கை. அவனால் IAS ஆபீசர், பாங்க் ஏஜெண்ட், MLA செய்ய முடியாததைச் செய்ய முடியும்.

அண்ணன் - அன்னை அந்நிலையை அனைவருக்கும் தருகிறார். அதை நீடித்துப் பெற்றவர் குறைவு. அந்த பக்தர் நாட்டில் எலக்ஷன் போக்கை மாற்றுவார். வானிலை அறிக்கைக்கு மாறாக மழை பொழிவதையோ, புயலைத் தடுப்பதையோ அவரால் செய்ய முடியும். நாட்டுச் சட்டங்கள் அவர் மனநிலைக்கேற்ப மாறும். சின்ன புத்தி எழுந்தால் அந்த சக்தி விலகி மீண்டும் அவர் சிறிய மனிதனாகிவிடுவார்.

தம்பி - சின்ன புத்தியுள்ளவரை ஆதரித்தாலும் அன்னை சக்தி போகும்.

அண்ணன் - அவர் குடும்பம் தொடர்ந்து உயரும். நாட்டில் முதன்மை பெறும். இது தவறாது எல்லா அன்பர்கட்கும் அன்னை அளிப்பது. பெறுபவர், நீடித்துப் போற்றுபவர் குறைவு.

தம்பி - இல்லை என்றே சொல்லலாம் போலிருக்கிறதே.book | by Dr. Radut