Skip to Content

01. பகுதி - 1

அண்ணன் - நம் காம்பவுண்டு ஓர் அடி ரோட்டினுளிருப்பதால் அதை இடிக்கச் சொல்லி நோட்டீஸ் வந்திருக்கிறது.

தம்பி - சட்டப்படி எதுவுண்டோ அதை செய்வது சரிதானே.

அண்ணன் - காம்பவுண்டு கட்டும்பொழுது இது தெரியாமல் நடந்துவிட்டதா? தெரிந்து நடந்ததா?

தம்பி - நாம் அன்னை பக்தர்கள். நமக்கு இடிப்பதும் பிரச்சினையில்லை. இடிக்காமலிருப்பதும் பிரச்சினையில்லை. எது வேண்டும் என நாமே முடிவு செய்து கொள்ளலாம்.

அண்ணன் - இடித்துவிடுவது சரி. இடிக்காமல் பிரார்த்தனை செய்தால், இடிக்க வேண்டும் என அடுத்த உத்தரவு வரும். அது தவறாமல் நடக்கும்.

தம்பி - இது என் அனுபவமும் கூட. ஆனால் அது எப்படி நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.

அண்ணன் - உடலில் தெம்பிருந்தால் ஊரில் பரவும் வியாதி நம்மைத் தீண்டுவதில்லை. ஊரில் அந்தஸ்திருந்தால், நம் வீட்டார் செய்யும் தவறுகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை. உபரி வருமானமிருந்தால், வீண் செலவு வீட்டைப் பாதிப்பதில்லை என்பதுபோல், அன்னை மீது நம்பிக்கை உபரியாக ஆரோக்கியத்தையும், அந்தஸ்தையும், வருமானத்தையும் இவற்றையெல்லாம் தரும் ஜீவியத்தையும் தருகிறது. ஜீவியம் உயர்ந்திருந்தால், நம் குறைகள் நம்மை பாதிப்பதில்லை. சட்டம், நியாயம், உத்தரவு எல்லாம் நாம் கேட்காமல் நமக்கு சாதகமாகும்.

தம்பி - நம்மவர்கள் காலமும் நேரமும் சரியாயிருந்தால் எல்லாம் சரியாகும், எதுவும் பாதிக்காது என்கிறார்கள்.

அண்ணன் - அன்னையைப் பொருத்தவரை அதுவும் உண்மை. நாம் இன்று எப்படி நடந்து கொள்கிறோமோ அதுபோல் நம் எதிர்காலம் அமையும். அதனால் நமக்கு வேண்டியதை - சரியோ, தப்போ - செய்துவிட்டு அது பலிக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதைவிட, அன்னைக்கு எது பிடிக்குமோ அதைச் செய்வதே மேல். இந்தக் கோணத்தில் நமக்குத் தெரிந்த விஷயங்களை நினைத்துப் பார்த்தால் அங்கு அன்னையின் விசேஷம் தெரியும்.

தம்பி - பரீட்சை எழுதாமல் M.A. பட்டம் பெற்றவர் நினைவு வருகிறது. இதுபோல்தான் அவருக்கு M.A. பட்டம் கிடைத்தது. அதையே சௌகரியமாக நினைத்ததால் Ph.D. முடித்தும் thesis எழுத முடியாமற் போய் விட்டதல்லவா?

அண்ணன் - 60 பக்கம் எழுத வேண்டிய பரீட்சைகளில் 7, 8 பக்கம் எழுதிவிட்டு வந்து september பரீட்சைக்கு படித்துக் கொண்டிருக்கும்பொழுது அவருக்கு II கிளாஸ் பாஸ் வந்து கல்லூரி ஆசிரியரானார் என்று தெரியும். அவர் என்ன செய்திருக்க முடியும் என்று நினைக்கிறாய்?

தம்பி - அவர் SSLC, இன்டர்மீடியட், B.A.யில் இங்கிலீஷில் பெயிலானவர். M.A. சேர பயப்பட்டார். தகப்பனாரால் சேர்ந்தார். ஒரு பக்தருடைய ஆதரவால் அவருக்கு கல்லூரியில் மிகப்பெரிய புத்திசாலி எனப் பெயர் வந்தது!

அண்ணன் - அவர் நண்பர் ஒரு பக்தர். எந்த திறமையுமில்லாத இவருக்கு பிறரை அறியும் திறமையிருந்தது. அதன் மூலம் இவர் பிரபலமானார். இவருக்கு படிப்பு கசப்பு, எழுத வராது. கல்லூரியில் பிரபலமானபின் பக்தரைக் கலந்து ஆலோசித்தார். இவர் மக்கு. பக்தர் எழுதும் பயிற்சியை மேற்கொள்ளும்படிச் சொன்னார். இவர் செய்யவில்லை. பக்தருடைய ஆதரவால் II class பாஸ் வந்து கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியரானார். அதன் பின்னும் எழுதும் பயிற்சியைப் பெறவில்லை. அத்துடன் பக்தரிடம் பொறாமையாகவும் நடந்து கொண்டார். பக்தரோடுள்ள தொடர்பையும் துண்டித்துவிட்டார். அமெரிக்கா போய் Ph.D. படித்தார். Thesis எழுத முடியவில்லை.

தம்பி - விசேஷம் தெரிகிறதா? எழுத்துப் பயிற்சி பெறாமல் அன்னை பாஸ் கொடுத்தார். அது பாக்கியாக இருந்தது. Ph.D.இல் எழுத முடியவில்லை. நாம் எது செய்யத் தவறினாலும் அன்னை ஜீவியம் அபரிமிதமான ஆதரவு தருவதால் முதலில் காரியம் நடந்துவிடுகிறது. இவர் எழுதப் பயின்றிருக்க வேண்டும். அல்லது பக்தரோடு தொடர்பை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் பக்தர் மீது நல்லெண்ணமாவது இருந்திருக்க வேண்டும். இவருக்கும் அன்னைக்கும் சம்பந்தமில்லை. எதுவுமில்லாமல் இந்த அளவு உயர்ந்ததை அவர் வீட்டார் யாரும் நம்பவில்லை.

அண்ணன் - அவரே தம் நிலையை நம்ப முடியவில்லை என்று சொன்னாரே. இவர் பக்தரில்லை. நமக்கு பக்தர்களைப் பற்றி மட்டுமே கவலை. பக்தர்கள் அன்னை சொல்வது போல் தொடர்ந்த முன்னேற்றம் பெற முயல்வது சரி. செய்யாமலிருப்பது சரியில்லை. நமக்கு நோட்டீஸ் ஏன் வந்தது? நாம் செட்டியாரிடம் வீடு வாங்கினோம். அவர் காம்பவுண்டை இப்படிக் கட்டியிருக்கிறார். தெரிந்துதான் கட்டினாரா?

தம்பி - இப்பொழுது நாம் ஒன்று செய்யலாம். நமக்கு நோட்டீஸ் வந்த காரணத்தைக் கண்டுபிடிக்கலாம். அது தெரிந்தால், அதை அகற்றலாம்.

அண்ணன் - உடனே அதைச் செய்வது நல்லது. எதற்கும் கவனம் வேண்டும். கவனம் குறைந்த உடன் பிரச்சினை வரும்.

தம்பி - நெடுநாளாக நமக்கு எல்லாக் காரியங்களும் நல்லபடியாக முடிவதால், பல விஷயங்களில் அலட்சியம் வந்துவிடுகிறது. ஓர் ஆபீசில் லீவு போட்டுவிட்டு வந்து ஆசிரமம் போன்ற இடத்தில் வேலை செய்வது என்றால் அது சாமானியமானதா? உங்கள் எதிர் வீட்டுக்காரருக்கு 4 வருஷமாக இந்த லீவு சாங்ஷனானது அந்த ஆபீசில் அனைவருக்கும் ஆச்சரியம். 3 மாதத்திற்கொரு முறை extension  வேண்டும். இதுவரை இவர் ஒரு முறைகூடப் போகாமல் 12 முறை லீவு சாங்ஷனானது அந்த ஆபீசிலேயே நம்ப முடியவில்லை. இவர் அலட்சியம் செய்ய ஆரம்பித்தார். உடனே ஒருவர் பிரச்சினையை கிளப்பி உடனே வேலையில் சேரும்படி தந்தி வந்தது. பிரச்சினை வந்ததும் மீண்டும் உஷாரானார். நேரடியாகப் போனார். தலைமை ஆபீசரைப் பார்த்தார். "உங்களைப் போல் நானிருந்தால், நானும் இதைத்தான் செய்வேன். நீங்கள் அதிர்ஷ்டம் செய்ததால் இதுபோன்ற இடத்திலிருக்கிறீர்கள்,” என்றார். அத்துடன் நிலைமை மாறியது. இதுவரை அந்த ஆபீசில் எவருக்கும் கிடைக்காத சலுகையை இவருக்குக் கொடுத்து அந்த ஆர்டர் இவர் கேட்டபடியே போட்டுக் கொடுத்தார்.

அண்ணன் - நமக்கு மட்டும் அன்னை முதன்மையாகிவிட்டால், நடப்பதே வேறு. நாம் அங்கு குறை வைத்து விடுகிறோம். அல்லது கவனத்தை வேலையில் குறைத்து விடுகிறோம். அந்தக் குறைகள் வந்தபின் எதுவும் சரிவர நடப்பதில்லை.

தம்பி - அந்தக் குறைகள் வராதவரை விஷயம் நன்றாக நடக்கும். நாம் அனைத்தையும் மறந்து விடுகிறோம். இந்த நோட்டீஸ் வந்தால் அதற்குரிய காரணத்தைக் கண்டு, அதை வாய்ப்பாக மாற்ற முடியாதா?

அண்ணன் - முடியும். நமக்கு தெரியாது என்பதில்லை. செய்வதில்லை. அப்படி செய்தால் என்ன நடக்கும் தெரியுமா?

தம்பி - எனக்கு நினைவிருக்கிறது. நமக்கு உரிமையில்லாததை நம்மைத் தேடிவந்து கொடுத்தார்களே, புறம்போக்கு நிலம், நன்றாக நினைவிருக்கிறது.

அண்ணன் - ஒரு ஜனாதிபதி எலக்க்ஷனில் அன்னை தேர்ந்தெடுத்தவரை அவரோடிருந்தவர் எவரும் ஏற்கவில்லை. அவர் ஓய்வு பெற்ற ICS. ஆபீசர். தெலுங்கர். மத்திய மந்திரியாக இருந்தவர். சிந்தாமணி தேஷ்முக் எனப் பெயர். இவரே இந்தியாவின் பெருமையை நிலைநாட்டுவார் என்று அன்னை கூறியபின் அங்கிருந்த சாதகர் பலரும் இவருக்கு 10 ஓட்டும் வாராது என்றனர்.

தம்பி - அன்னை தேர்ந்தெடுத்ததால் அவர் ஜெயிப்பார் என்ற நம்பிக்கை அந்தச் சாதகர்கட்கில்லை.

அண்ணன் - அன்னைக்கு V.V.கிரியைப் பிடிக்காது. சஞ்சீவ ரெட்டியை நல்லவர் என்றார். ஆனால் கிரி தேர்ந்தெடுக்கப்பட்டார். ரெட்டி 10 வருஷம் கழித்து ஜனாதிபதியானார்.

தம்பி - கிரி ஆசீர்வாதம் கேட்டு, பிரசாதம் வந்தபின் வாங்கி கண்ணில் ஒற்றிக்கொண்டார். ரெட்டியிடம் பிரசாதம் போனபொழுது இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை என்றார்.

அண்ணன் - அன்னைக்குப் பிடிக்காது என்றாலும், பிரசாதம் பெற்றவர் ஜெயித்தார். பிடிக்கும் எனினும் பிரசாதத்தை மறுத்தவர் தோற்றார். தேர்ந்தெடுக்கப்பட்டவர் எனினும் அன்னையை அறியாதவர் எதுவும் பெறவில்லை.

தம்பி - தேஷ்முக் எப்படி ஜெயிக்க முடியும்? அவருக்குக் கட்சி பலமில்லையே.

அண்ணன் - அந்தச்சாதகர்கள்போல், நம்மால் அன்னை சொல்லின் சத்தியத்தை ஏற்கமுடிவதில்லை. அன்னை சொல்லிவிட்டார், அதனால் நடக்கும் என்ற நம்பிக்கை நமக்குண்டா?

தம்பி - அதுபோல் நம்பினால் நடக்குமா?

அண்ணன் - டிபார்ட்மெண்ட் சரித்திரத்தையே மாற்றி செக்ரட்டிரி, டைரக்டர் உத்தரவை ரத்து செய்தார் ஒருமுறை. அது அன்னை செயல். அப்படி நடந்ததே. நீ உன் வாழ்வில் அதைப் பார்த்ததில்லையா?

தம்பி - பார்த்திருக்கிறேன். ஆனால் அடுத்த முறை நம்பிக்கை வருவதில்லை. அன்னையோடு 50 வருஷமிருந்தவர்க்கே அந்த நம்பிக்கையில்லை என்றால் நமக்கு எப்படி வரும்?

அண்ணன் - சாதாரண பக்தர்கட்கு அந்த நம்பிக்கையுண்டு. பலிப்பதுண்டு. நெருங்கியவர்கட்கும் அந்த நம்பிக்கையிருப்பதில்லை.

தம்பி - ஏன்?

அண்ணன் - நம்பிக்கை என்றிருந்தால் அது குறையாது. பலனை மட்டும் ஏற்பது நம்பிக்கையாகாது. பலனைப் பார்ப்பவர்கட்கும் நம்பிக்கைக்கும் சம்பந்தமில்லை.

தம்பி - அன்னை சொல் அழியாத சத்தியம் என்று நம்பியவுடன் ஏராளமான தெம்பு வருகிறது என்பது உண்மைதான். அன்னை சொல் தவறுவதில்லை என்று தெரியும். என்றாலும் நம்பிக்கை குறைகிறது.

அண்ணன் - உனக்கு அன்னை ஒரு முறையும் தவறியதில்லை. உனக்கு நம்பிக்கை உண்டு. உண்டு என உனக்குப் புரியவில்லை. you are unconscious.

தம்பி - எப்படிச் சொல்கிறீர்கள்?

அண்ணன் - மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் உன் எதிரி உனக்குச் சாதகமாகச் சொல்லவில்லையா? அது உன் நம்பிக்கையால் நடந்தது.

தம்பி - என் நம்பிக்கையால் நான் என்ன செய்யமுடியும்?

அண்ணன் - ஏன் அது? இதுவரை நடந்ததேயிருக்கிறதே. சட்டம் மாறிவந்து உன் காரியம் 4, 5 முறை நடந்திருக்கிறதே. நம்பிக்கையில்லாமல் அது நடந்திருக்காதே. அன்னையைச் சாதகர்கள் ஆட்சேபித்ததால், தேஷ்முக்கை அன்னை விட்டுவிட்டார்கள். ஆட்சேபித்திருக்காவிட்டால் தேஷ்முக்தான் ஜெயித்திருப்பார்.

தம்பி - அதுவும் நடக்கும் என்று நம்புவது நம்பிக்கை. அதுபோல் ஒன்றைச் செய்ய நான் விரும்புகிறேன்.

அண்ணன் - தானே விஷயம் எழும்பொழுது அதைச் செய்யவேண்டும். நாமே முனைந்து செய்தால் சரி வாராது. அப்படிச் செய்வதென்றால் அதைப்பற்றிப் பேசக்கூடாது. விஷயம் தானே வரவேண்டும். அதை வெளியில் சொல்லக்கூடாது. நம்பிக்கையாகச் செயல்பட வேண்டும். தவறாது நடக்கும்.

தம்பி - ஆமாம். சோதனை செய்வது நம்பிக்கையில்லையே. யோசனை செய்தால் இதுபோல் எவ்வளவோ நடந்திருக்கிறது. நாம் கவனித்தவுடன் சூழல் மாறி சப்பென்றாகி விடுகிறது. பேசுவதென்றால் நாள் கழித்துப் பேசலாம் போலிருக்கிறது.

அண்ணன் - 3 மாதமாக ராவ் என்னை சந்திப்பதில்லை என முடிவு செய்திருக்கிறார். எனக்கு அவரிடம் முக்கிய வேலையிருக்கிறது. நானே போனால் நடக்காது. அவரே வந்தால் முடியும். அது தெரிந்து அவர் வரக்கூடாது என்றிருக்கிறார். இதை நான் வக்கீலிடம் சொன்னேன். அவர் ராவிடம் பேசி அனுப்புவதாகச் சொன்னார். அப்படிப் போனால் காரியம் முடியாது. "உங்களால் அன்னையிடம் சொல்ல முடியுமா?' என்றேன். ஒத்துக்கொண்டார். அன்று மாலை ராவ் வந்தார். விஷயம் முடிந்துவிட்டது. வரக்கூடாது என்ற ஒருவருடைய வைராக்கியத்தை அருள் உடைக்கிறது என்றால், அதனால் எதுவும் முடியும்.

தம்பி - எதுவும் முடியும் என்றால் நமக்கு 1 கோடி பெரிய தொகை. அதைக் கொண்டு வரமுடியுமா?

அண்ணன் - ரூ. 5000சம்பளம் ரூ.50,000ஆனதைப் பார்த்தும் கேட்டால் என்ன சொல்வது?

தம்பி - நம்பாமல் கேட்கவில்லை. நம்பவில்லை என்றால் ஏன் கேட்கிறேன்? நம்புவதால்தான் கேட்கிறேன்.

அண்ணன் - இது நடந்தால் என்ன சொல்வார்கள்? உனக்கு அதிர்ஷ்டம் என்பார்கள். இதனால் உனக்கு மட்டும் நம்பிக்கை வரப்போகிறதா? பல காரியங்களைப் பார்த்தும் நம்பிக்கையில்லை என்கிறாயே. விஷயம் நீ மாறுவதிலிருக்கிறது. unconsciousஆக இருக்கிறாய். consciousஆக மாறவேண்டும். நான் உனக்குச் சொல்கிறேன். நானும் உன்னைப்போல்தானிருக்கிறேன்.

தம்பி - சரி, அதிருக்கட்டும். இந்தத் தொகை வருமா?

அண்ணன் - இதுவும் வரும், இதைவிடப் பெரியதும் வரும். உடனேயும் வரும். நம் மன நிலைக்கு வாராது. மனம் மாற வேண்டும். எப்படி மாற வேண்டும் என எனக்குத் தெரியும். சொல்லத் தெரியும். நான் செய்வதில்லை. செய்ய முடிவதில்லை.

தம்பி - காதால் கேட்கலாமே, சொல்லுங்கள்.

அண்ணன் - காதால் கேட்டால், அதனாலேயே பிறகு நடப்பது தடைபடும்.

தம்பி - அப்படி என்றால்?

அண்ணன் - தடைபடும் என்பது சட்டம். சட்டத்தை மீறி நடக்கும் என்பதும் சட்டம். எல்லாம் நம்மைப் பொருத்தது. சோதனை செய்யக் கூடாது. செய்வதானால், முதலில் எதிர்பார்க்கும் மனமிருக்கக் கூடாது. அதாவது மனம் நிதானமடைய வேண்டும்.

தம்பி - பக்குவம் வேண்டும் என்று சொல்லுங்கள். பக்குவம் வந்தால் பிறகு பணம் எதற்கு?

அண்ணன் - பக்குவம் வாராமல் பணம் வாராது. எதுவும் வாராது. பக்குவம் வந்தால் பணமும் வரும், எல்லாம் வரும். இந்த விதிக்கு மாற்றில்லை. எப்படிப் பக்குவம் வரும் என்று வேண்டுமானால் சொல்கிறேன். பிரார்த்தனை ஒரு சமயம் பலிக்கும். பக்குவம் நிரந்தரமாகப் பலிக்கும். ஏராளமாக எதுவும் வரும்.

தம்பி - வாழ்க்கையிலேயே அப்படித்தானே. ஒரு வித்தியாசம். இதற்கெல்லாம் வாழ்க்கையில் வழியில்லை. அன்னையிடம் வழியிருக்கிறது. அதுதான் விசேஷம். அன்னையை அனைவருக்கும் அறிமுகப்படுத்த நினைப்பது சரியா?

அண்ணன் - எதையும் செய்யும் மனநிலை சரியாக இருந்தால் செய்யலாம். ஆசைப்பட்டுச் செய்தால் தவறாகிவிடும். அன்னையைப் பின்பற்றுவதே கஷ்டம். பிறருக்கு அறிமுகப்படுத்த முடியாது. அவர்களே தயாராக இல்லாமல் நாமே சொல்ல முடியாது. நீ நினைப்பதைப் போல் ஒரு பெரிய காரியம் நடந்துவிட்டால் அனைவரும் நம்புவார்கள் என்பது சரியில்லை.

தம்பி - கண்ணால் பார்த்தபின் ஏன் நம்பமுடிவதில்லை? என்னாலும் முடியவில்லையே.

அண்ணன் - இந்த விளக்கம் எல்லாம் சொல்லலாம். செய்வது சிரமம். மனிதன் நல்லது என்பதால் மட்டும் செய்யமாட்டான். இலாபமிருக்கிறதா என்று கேட்பான். இலாபமிருந்தால் மட்டும் செய்வான் என நிலையில்லை. மரியாதை வேண்டும் என்பான். மரியாதை வருவதால் மட்டும் செய்யமாட்டான். செய்யாவிட்டால் உள்ள மரியாதை போய்விடும் என்றால் செய்வான்.

தம்பி - அதுதான் பக்குவமோ?

அண்ணன் - ஆத்மீகப் பக்குவம் பெற சமூகப் பக்குவம் வேண்டும் போலிருக்கிறது. The social man needs social sanction to accept spiritual grace. சமூகம் முழுவதும் பக்குவப்பட்டால்தான் ஒருவர் முன்வருவார்.

தம்பி - நாமே கொடுக்க முயன்றால் ஏன் முடியவில்லை என இப்பொழுது புரிகிறது. சரி பக்குவத்தைப் பற்றிச் சொல்லுங்கள். நான் என் வரையில் செய்துபார்க்கிறேன்.

அண்ணன் - பிறருக்குச் சொல்ல வேண்டும் என்ற ஓர் இடம் தவிர உனக்குப் பக்குவம் உண்டு. நமக்கு நினைப்பவை பல நடக்கின்றன. பல நடப்பதில்லை. ஒன்று தவறாமல் நடந்தால் பக்குவம் வந்ததாக அர்த்தம்.

தம்பி - கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தக் கூடாதா?

அண்ணன் - விஷயமில்லாவிட்டால் ஓரளவு வந்து நின்றுவிடும். அப்புறம் நகராது.

தம்பி - இந்த விஷயம் அப்படித்தானே நிற்கிறது.

அண்ணன் - பணம்தான் சுலபம். எந்தத் தொகை வேண்டுமானாலும், அதைப் பெறும் தகுதியை மனதால் பெற்றுவிட்டால் அது வந்துவிடும்.

தம்பி - பெரும் பணக்காரனுக்கெல்லாம் அத்தகுதியிருக்கிறதா?

அண்ணன் - அது வேறே பணம். பெட்டிக்கடைக்காரன் மாதம் 25,000 சம்பாதிப்பதும், கலெக்டர் 25,000 சம்பாதிப்பதும் ஒன்றாகுமா? அன்பர் சம்பாதிப்பதானால் அவர் நல்லவராக இருக்க வேண்டும். ஏராளமாகப் பணம் சம்பாதித்தவர்கள், பணமே குறியாக இருப்பார்கள். முக்கியமாக அவர்களுடைய கட்டுப்பாட்டிலுள்ள எவரையும் சம்பாதிக்க அனுமதிக்க மாட்டார்கள். தாம் சம்பாதிப்பதைவிட பிறர் சம்பாதிக்கக்கூடாது என்பதே பணக்காரன் கொள்கை. அன்பர் சம்பாதிக்க அனைவரும் சம்பாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மை வேண்டும். இது கஷ்டம். இப்படி நினைத்தால், அன்பருடனுள்ள எவர் மனமும் அன்பர் சம்பாதிக்க அனுமதிக்காது. அதை மீறிப் பணம் சம்பாதிக்க சாதாரணமாக முடியாது.

தம்பி - அப்படியானால், முடியாது என்றுதான் அர்த்தமோ?

அண்ணன் - முடியாது, வெகு சிரமம் என்று பொருளன்று. இன்றில்லாதது எனப் பொருள். ஏதோ முடியாததைக் கேட்கிறோம் என்று நினைப்பது வழக்கம். சைக்கிள் புதியதாக வந்தபொழுது அதை விடுவதை ஒரு வித்தையாக நினைத்தார்கள். இன்று அனைவரும் எளிதாக, சைக்கிள் விடுகிறார்கள். உலகம் மாறி அன்னையை அனைவரும் ஏற்றுக்கொண்டால், இன்று பகீரதப் பிரயத்தனம் அன்று எளிதாகத் தோன்றும். ஒரு கோடி பணம் வேண்டுமானால், அப்பணத்தைப் பெறும் தகுதியை மனத்தால் பெற்றபின் எந்தத் தொழிலைச் செய்தாலும், அத்தொகை வெகு விரைவில் அன்பரை நாடி வரும் என்பது ஆன்மீக உண்மை. இதை எடுத்துரைப்பது எளிதன்று. செய்து காண்பித்தாலும் நம்பிக்கை ஏற்படாது.

தம்பி - முக்கிய அம்சங்களை மட்டும் சொல்லுங்கள்.

அண்ணன் - பணத்திற்கும், மற்ற எந்தக் காரியத்தைச் செய்யவும் தகுதி ஒன்றே.

தம்பி - பணத்திற்கு மட்டும் சொல்லுங்கள்.

அண்ணன் - 1) தொகைக்குரிய தகுதியை மனம் பெற வேண்டும். 2) முக்கியமானது ஒன்றுண்டு. இதே தொகையை அடுத்தவர் பெற்றால் மனம் நாம் பெற்றதுபோல் மகிழ வேண்டும். 3) தகுதி என்றால் நிதானம், பொறுமை, தொழிலுக்குரிய அறிவு.

தம்பி - இவை எளிமையாகத் தோன்றுகின்றனவே. 2ஆம் நிபந்தனையில் ஏராளமான பேர் அடிபட்டுவிடுவார்கள். அது நமக்குக் கவலையில்லை. மற்றவை எளிமையாகத் தோன்றுகின்றனவே.

அண்ணன் - நீ சொல்வது உண்மை. உனக்குப் பலிக்காததற்கு வேறு ஒரு காரணம் உண்டு. நீ தகுதியற்றவர் பெற வேண்டும். நாதனுக்கு வேண்டும் என நினைப்பாய். நாதன் சோம்பேறி, பொறாமைக்காரன். அது பலிக்காது. அந்த எண்ணம் விலக்கப்பட்டால் உனக்குப் பலிக்கும். 1 கோடிக்கும், 100 கோடிக்கும் சட்டம் ஒன்றே.

தம்பி - அன்னை அருளால் பொறாமைக்காரர், சுயநலமி பெறுவதைக் கண்டுள்ளேன். அது எப்படி?

அண்ணன் - உழைப்புக்குப் பலனுண்டு. உழைப்புள்ளவனுக்கு அருள் துணை செய்யும். பொறாமையை மீறி துணை செய்யும்.

தம்பி - சுயநலம், பொறாமையை விடுவோம். மனம் தகுதி பெற்றால் பலனுண்டு எனில் சுலபமாகத் தெரிகிறதே. சிலர் வாழ்க்கையைச் சிந்தித்துப் பார்ப்போம். எஸ்டேட் மானேஜர் பேர் உழைப்பாளியாயிற்றே. ஏன் அவருக்குப் பலிக்கவில்லை?

அண்ணன் - 1 லட்ச ரூபாய்க்கு வாங்கிய எஸ்டேட் 10 கோடி விலைக்கு உயர்ந்தது. உழைப்புக்குப் பெரும்பலன் உண்டாயிற்று.

தம்பி - அவருக்கு வரவில்லையே!

அண்ணன் - அருள் உழைப்புக்குப் பலனைக் கொடுத்துவிட்டது. அவர் அன்னையை ஏற்றுக்கொண்டு கர்வத்தைக் கரைத்திருந்தால் அவருக்கே பலிக்கும். அவர் தகப்பனார் பிறர் சம்பளத்தில் கமிஷன் பெற்ற கங்காணி. அதனால் இவர் உழைப்பின் பலன் அடுத்தவருக்குப் போயிற்று.

தம்பி - இவருக்கு அன்னையைப் பிடிக்கவில்லை. போய்விட்டார் அல்லவா! நீங்கள் சொல்வதுபோல் நல்லவர் ஒருவர் நினைவுக்கு வரவில்லை. கடத்தல், கள்ளமார்க்கட்காரர்கள்தான் நினைவு வருகிறது.

அண்ணன் - இதில் ஒரு ரகஸ்யம் உண்டு. நல்லவர் வந்தால் அவருக்கு ஏராளமாக பணம் வருகிறது. உடனே அன்னையைவிட்டுப் போய்விடுகிறார்கள். ஏனென்றால், அவ்வளவுதான் நல்லது இருந்தது போலும்!

தம்பி - அன்னை சேவைக்குக் கோடிக்கணக்காய் பணம் வந்தது. அதாவது கொடுப்பதாகச் சொல்லியது தெரியும். கையில் வந்ததாகத் தெரியவில்லை.

அண்ணன் - சொத்தாக வருவது முடியும். சேவைக்கு வருவது கடினம்.

தம்பி - எனக்கு 1 கோடி வேண்டும். நான் செய்கிறேன்.

அண்ணன் - 1 கோடி பணமுள்ளவனுடைய திறமை - நிர்வாகம், நிதானம், பொறுமை - உனக்குண்டு. பிறரை நீ சம்பந்தப்படுத்தாவிட்டால் உன் முயற்சி பலிக்கும். எளிதன்று. ஆனால் பலிக்கும்.

தம்பி - மீண்டும் ஒருமுறை நிபந்தனைகளைக் கூறவும்.

அண்ணன் - அஜெண்டாவில் அன்னை நல்லது goodness என்பதைப் பற்றி 6, 7 இடங்களில் கூறுகிறார்கள். அதன் சுருக்கம்:- "நல்லவனாக இருக்கவேண்டும் என்று நேரடியாகக் கூறமுடியவில்லை என்பதால், நான் பல்வேறு வகையாக விளக்க வேண்டியிருக்கிறது”. நல்லவனாகவும், திறமைசாயாலிகவுமிருந்தால் அந்த அளவுக்குள்ள

 • புகழ்,
 • செல்வாக்கு,
 • பதவி,
 • செல்வம்,
 • அருள்

ஒருவனைத் தேடிவரும் என்பதே அன்னை கொள்கையின் சுருக்கம். அருளைப் பெற பிறர் நலம் நாட வேண்டும். சாதாரண மனிதனுக்குத் தான் சம்பாதிப்பதைவிடப் பிறர் கெட்டுப்போவதில் சந்தோஷம் அதிகம். 

தம்பி - எனக்கு ஒரு கண் போனாலும்... என்ற கதை எல்லா நாடுகளிலும் கேள்விப்படுகிறோம். அவர்களை விலக்கினால், மீதி எத்தனை பேரிருப்பார்கள்?

அண்ணன் - எது வேண்டுமானாலும் அதற்குரிய தகுதியைப் பெற்றவுடன் நல்லவனுக்கு உடனே வரும் என்பது அருளின் சரித்திரம். உலகம் பணத்தை முக்கியமாகக் கருதுவதால், நாமும் அதைக் கருதுகிறோம். பணம் மட்டும் முக்கியமில்லை. முக்கியமானவை பல. அவற்றுள் பணம் ஒன்று.

40, 45 வயதில் ஒருவர் இதுவரை உலகிலுள்ள பணக்காரர்களைத் தாண்டும் அளவுக்குச் சம்பாதித்துவிட்டார் எனில் அருளால் அது முடியாது என நினைக்க முடியுமா?

தம்பி - இதுவரை 75 பில்லியன் டாலர் ரிக்கார்ட். Bill Gates 100 $ billion சம்பாதித்துவிட்டார். இது technologyஆல் நடந்தது. அருளின் பல்வேறு பாகங்களில் டெக்னாலஜி ஒன்று. ஒரு பாகத்தால் முடியுமானால், முழுமையால் முடியாது எனக் கூற முடியுமா? நாம் அருளைச் சரிவரப் புரிந்து கொண்டு ஏற்கவில்லை எனப் பொருள்.

சோதனை மனத்திற்குரியது. சோதனை பலித்தால் நாள் முழுவதும் எந்தக் காரியமும் தடையாக இருக்கக் கூடாது. மனதில் கெட்ட எண்ணத்திற்கு இடம் கொடுக்காவிட்டால் காரியம் கெடாது. தகுதியிருந்தால் பலன் வரும்.

அண்ணன் - சோதனை செய்வது தவறு எனக் கூறமுடியாது. ஆனால் இதை நிரூபிக்கும் நிகழ்ச்சிகள் ஏராளமாக இருக்கும்பொழுது ஏன் சோதனை? நேரடியாகப் பலனை நாடமுடியும் என்பதே என் கருத்து.

இந்த நாடார் தம்பி பல நாட்களாக வருவதில்லை. ஒரு புது project வந்தது. அவர் வந்தால் சொல்லலாம் என இருக்கிறேன்.

தம்பி - நான் அவரைக் கூப்பிடட்டுமா?

அண்ணன் - நாமாகக் கூப்பிட்டு projectஐப் பற்றிச் சொன்னால் அது பலிக்காது என்று தெரியுமே.

தம்பி - ஆமாம்.

அண்ணன் - நான் இதை நம் தாசீல்தாரிடம் சொன்னேன். அவர் அன்னையிடம் சொல்வதாகச் சொன்னார். ஒரு ½ மணியில் நாடார் தம்பி வந்தார். ரொம்ப நல்ல மனசு. பொதுவாக அவர் வந்தால் நல்லது நடக்கும். இன்றும் அது போலிருந்தது. நாம் 4 வருஷமாக எதிர்பார்த்த காண்ட்ராக்ட் வந்தது. அத்துடன், வழக்கத்திற்கு மாறாக, அவரே முன்பணம் தருவதாகச் சொன்னார். இதுபோன்ற இடங்களில் அன்னையை நம்மவர் விவரமாக அறிவதில்லை.

தம்பி - நீங்கள் சொல்வது organisation of consciousness அன்னை ஜீவியத்தின் சிறப்பைப் பற்றித்தானே.

அண்ணன் - ஒரு வகையில் இது பெரிய ஆத்ம ஞானம். வேறு வகையாகப் பார்த்தால் எல்லோருக்கும் தெரிந்த எளிய விஷயம்.

தம்பி - சிறியதில் பெரியதை அறிவதுதான் ஆத்ம ஞானம் என்று கூறுகிறாரே, இதையே வேறு வகையாகவும் கூறலாமன்றோ? "எந்த முறை நமக்குப் பெரும்பலன் தருகிறதோ அதை அன்னையிடம் நாம் பின்பற்றினால் போதும்” என்று சொல்லலாமன்றோ?

அண்ணன் - நம் வீட்டில் ஒரு முக்கியக் காரியம் என்றால் - உ.ம்., இப்பொழுது வந்துள்ள காண்ட்ராக்ட் 5 கோடி நமக்குப் பெரியது. யாரும் தாமே அட்வான்ஸ் தருவதில்லை. இவர் 5 லட்சம் தருவதாகச் சொல்கிறார். இது கூடிவர நாம் முதற்காரியமாக இதை எவரிடமும் சொல்வதில்லை. குறிப்பாகக் காண்ட்ராக்ட் சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்வதில்லை. நம் டிரைவர் தம்பி வந்தால் நமக்கு ஒத்து வருவதில்லை என்பதால் இந்த காண்ட்ராக்ட் கையெழுத்தாகும்வரை அவனைச் சேர்ப்பதில்லை. இது நாம் மட்டும் செய்யும் காரியங்களில்லை. காரியம் முக்கியமானால், யாரும் ஜாக்கிரதையாக இருப்பார்கள். இரண்டாம் மனிதரிடம் சொல்லமாட்டார்கள். இதேபோல் அன்னையிடம் நாமிருந்தால் எல்லாக் காரியங்களும் கூடிவரும். அங்கு இந்த ஜாக்கிரதையிருப்பதில்லை. சற்று அலட்சியமாக இருக்கிறோம். காரியம் தவறிவிடுகிறது. "இதெல்லாம் பார்த்தால் முடியுமா?” என நம் காரியத்தில் சொல்வதில்லை. அன்னை விஷயத்தில் சொல்கிறோம்.

தம்பி - நீங்கள் சொல்வது புரியாது. நாடார் தம்பியை வரச்சொல்லி தாசீல்தார் அன்னையிடம் சொன்னார், வந்தார். அதுபோன்ற உதாரணத்து மூலம் சொன்னால் புரியும்.

அண்ணன் - நாடார் தம்பி வருமுன் காண்ட்ராக்ட் சேதி வந்தது. எனக்குச் சந்தோஷம். போனில் தம்பியைக் கூப்பிட்டு "நீங்கள் வந்தீர்கள். நல்லது நடக்கிறது” என்றேன். போனை வைத்தவுடன் பாக்டரியில் குடித்துவிட்டு கலாட்டா என்று ஒரு செய்தி, பகலில் வீட்டில் திருடன் வந்தான் என்று வேறொரு செய்தி. எனக்கு என் பக்கத்திலிருந்து காரணம் தெரியும். ஸ்ரீ அரவிந்தர் நிதானம் equalityயை வற்புறுத்துகிறார். தம்பி வந்தது சரி. அவர் போனபின் அவரிடம் நல்ல செய்தி வந்ததாகக் கூறவேண்டும் என்று ஆசை. கூறினேன். உடனே விஷயம் தலைகீழாகப்போய் கலாட்டா, திருடு வருகிறது.

தம்பி - நல்ல விஷயத்தைச் சொல்லி சந்தோஷப்படுவதும் ஆசை என்ற அளவில் உங்களைப் பாதிக்கிறது. அதெல்லாம் என்னைப் பாதிப்பதில்லை. அதுபோல் சொன்னால் நல்லது நடக்கும். நான் சிறியவன். பாராட்டுவதே எனக்குப் பக்குவம். உங்களுக்கு அன்னை அதையும் அனுமதிக்கவில்லை.

அண்ணன் - கலாட்டா, திருடு இரண்டும் மாறி சூழல் சரியாகும் வரை காண்ட்ராக்ட்டுக்கு ஆபத்து. வீடு கட்டும் பொழுது, பிரமோஷன் வரும்பொழுது நாம் இந்த எச்சரிக்கையுடனிருக்கிறோம். அன்னையிடம் அதே எச்சரிக்கையுடனிருப்பதில்லை.

தம்பி - எச்சரிக்கையாக இருப்பவர்கள் அன்னை விஷயத்திலும் எச்சரிக்கையாக இருந்துவிடுகிறார்கள். இருந்தும் 2 வகைகளில் தப்பு வருகிறது. 1) அன்னையிடம் வேறு சில விஷயங்களும் தேவைப்படுகிறதன்றோ? சந்தோஷமாகப் பாராட்டுவது தவறு என்று சாதாரணமாகத் தெரிவதில்லை இல்லையா? அதனால் தவறு வருகிறது 2) மேலும் அன்னை நமக்கு 5 கோடி பெரிய காண்ட்ராக்ட் என்றால் 50 கோடியை கொடுத்துவிடுகிறார்கள். அது நமக்கு நிலைகொள்வதில்லை. வழக்கமான நிதானம் அங்கு தவறிப் போய்விடுகிறது.

அண்ணன் - வாழ்க்கையில் தவறாத விஷயங்கள், அன்னை தரும் விஷயங்களில் தவறும். அதுவும் புரிவதில்லை.

தம்பி - இது முக்கியம். தெரியவில்லை என்பதற்கு இது ஒரு முக்கியமான காரணம். பெரியசாமி நண்பர்கள் எல்லாம் E.B.இல் கூலி வேலை செய்கிறார்கள். இவன் அங்கு இன்ஜீனீயர். பெரியசாமிக்கு அங்கு சூப்பர்வைசராகும் நிலையும் அந்தஸ்தும் இல்லை. அன்னை சூப்பர்வைசர் கிடைக்க முடியாதவனுக்கு இன்ஜினீயர் பதவியைத் தந்துவிட்டார்.

அண்ணன் - விஷயமே அதுதான். இன்ஜினீயர் வேலை வக்கீல் மகனுக்கு வந்தால் அவன் எல்லாருக்கும் சொல்லி சந்தோஷப்படுகிறான். அது அவனை பாதிப்பதில்லை. பெரியசாமிக்கு இன்ஜினீயர் வேலை வந்தது என்றவுடன் எல்லாருக்கும் அதிர்ச்சி. அது ரத்தாகி விடுகிறது. என்ன தவறு, எல்லாரும் செய்வதைத்தானே நானும் செய்தேன் என்றால் சரி வருமா?

தம்பி - அன்னை கொடுப்பது அவரவர் நிலைக்குப் பெரியது. அதனால் அதிக எச்சரிக்கை வேண்டும். This is ordinary common sense. பொதுவாக எல்லோரும் அறிந்ததுதான். இடம், பொருள், ஏவல் பார்த்து செய்யவேண்டும். இல்லை என்றால் விஷயம் கெட்டுப்போகும். ராமசாமி USAக்கு போகும்பொழுது கடைசிவரை யாருக்கும் தெரியாது. ஊருக்குப் போகும்பொழுது சொல்லிவிட்டுப் போனான். அவன் பெரியப்பா பையன் US ஆர்டர் வந்தவுடனே எல்லாரிடமும் சொன்னான். வருஷம் 2 ஆயிற்று. ஒன்றும் வரவில்லை.

அண்ணன் - ராமசாமிக்கு படிப்புள்ளது. இவனுக்கு எதுவுமில்லை. இவனுக்கு எப்படி US ஆர்டர் வந்தது என நினைப்பார்கள். அதனால் இவன் சொல்லியது தவறாகப் போய்விட்டது.

தம்பி - ராமசாமிக்கு போகணும் என்பது முக்கியம். சொல்லணும் என்பதில்லை. இவனுக்கு போவதைவிட, சொல்ல வேண்டும் என்பது முக்கியம். அதனால் இவன் சொல்வது தவறு.

அண்ணன் - இவனால் சொல்லாமலிருக்க முடியாது. அதனால்தான் தவறுவிடுகிறது.

தம்பி - Discipline அதுதான். சொல்வது சரியா, தப்பா என்பதில்லை. சொல்லும் மனப்பான்மை சரியா, தப்பா என்பதே முக்கியம். இப்படிச் சொன்னால் புரியும்.

அண்ணன் - புரியும் என்பது சரி, புரிந்தால் செய்வார்களா? எப்படிச் சொன்னால் செய்வார்கள் என ஒரு முறையிருக்கிறதா? எல்லாருக்கும் சொல்ல முடியாது. எல்லாவற்றையும் சொல்லமுடியாது. சொல்ல வேண்டும். அவர் பயன்பட வேண்டும் என்று நினைப்பதே சரியில்லை என்றல்லவா பகவான் கூறுகிறார்.

தம்பி - எனக்கு அதுபோல் சொல்வது selflessness பரநலம். உங்கள் disciplineக்கு அது தவறு. பிறர் பயன்பட வேண்டும் என்பதே ஆசை என்பது உங்கள் நிலை. அப்படியானால் சட்டம் எது என்று தெளிவாகச் சொல்ல முடியுமா? நம் அனுபவத்தைப் பார்ப்போம். எத்தனை பேருக்குக் கூடி வந்தது? யார் யாருக்குக் கூடிவரவில்லை என்று பார்த்தால்,

 1. எதுவும் செய்யாத சாமர்த்தியசாலிக்கு 26 award விருது வந்தது. இது நமக்குத் தெரியும் எப்படி வந்தது என்று. இவருக்கு அன்னையைத் தெரியாது. ஆனால் அன்னை சக்தி இவரிடம் பலனாக தவறாமல் வருகிறது. ஏராளமான பொய், திருட்டுத்தனம். அதை மீறி மனிதர் பெரிய பிரபலமடைகிறார். காரணம் என்ன? யாரும் காதில் வாங்கிக் கொள்ளாத இலட்சியத்துக்கு, இவர் முழு ஆதரவு கொடுத்தார். அதன் மூலம் உலகுக்கு அன்னையின் இலட்சியம் பலித்தது. பெரிய சேவையல்லவா? இவருடைய receptivity சேவைக்குத் தரும் ஆதரவு, இவர் பொய், பித்தலாட்டத்தைவிடப் பெரியது என்றாகிறது. இவரே அன்னையிடம் நெருங்கியவரானால், இப்பொய் இவர் வேலையை ரத்து செய்திருக்கும்.
 2. 800 கோடி திட்டம் அமெரிக்கருக்கு முடிவாயிற்று. மகன் மூலமாக வந்தது. அவர் மகனுக்கே உண்மையாயில்லை. இல்லை என்றாயிற்று.
 3. ஆபீஸ் குமாஸ்தாவுக்கு அமெரிக்க ஸ்காலர்ஷிப் வந்தது. விஷயம் முடிவதற்குள் நிலையிழந்து போனார். தவறிவிட்டது.
 4. தொழிலில் இலாபம் 6 மாதத்தில் 10 மடங்காயிற்று. அவர் எல்லாம் தெரிந்திருந்தும் தன்னை அழிக்க விரும்புபவர்கள் பாராட்ட வேண்டும் என்று நினைத்தார். ஆபத்தாயிற்று.
 5. போட்ட முதல் 1½ வருடத்தில் 18 மடங்கு உயர்ந்தது. உதவி செய்தவரையே தூற்ற ஆரம்பித்ததால், பலனில்லாமல் போயிற்று.
 6. கம்பனியை மூட வேண்டிய நிலை வந்தபின், அன்னையிடம் வந்தவரையும், கம்பனியையும் அன்னை காப்பாற்றினார். கொடுத்த வாக்கைப் பூர்த்தி செய்யவில்லை. வேலையும் பூர்த்தியாகாமலிருக்கிறது.
 7. பம்பாய் தொழிலதிபருக்கு ரூ. 2000 கோடி கடனுக்கு ஏற்பாடாயிற்று. கையெழுத்தாக அனைவரும் சந்தித்தனர். எதிரியை அனுமதித்தார். ரத்தாய் விட்டது. 

அண்ணன் - எதிரிக்கு அந்த நேரம் எப்படி விஷயம் தெரிகிறது?

தம்பி - தெரிவது அப்புறமிருக்கட்டும். ஏற்பாடு செய்தவருக்கு இவர் எதிரி, நண்பனாக நடிப்பவர் எனத் தெரியுமல்லவா! அவரைப் பார்க்க மறுக்கக்கூடாதா?

அண்ணன் - கையெழுத்து எங்கோ போடுகிறார்கள். எதிரிக்கு சூட்சுமமாக ஏதோ நடக்கிறது. நாம் போனால் கெடும், எனப் புறப்பட்டு வருகிறார். அது ஏற்பாடு செய்தவருக்குத் தெரிகிறது. எப்படிப் பார்க்க மாட்டேன் என்பது தயக்கம். எவ்வளவு பெரிய விஷயம் கெட்டுவிட்டது? இதென்ன தயக்கம், தப்பில்லையா?

தம்பி - மறுத்திருந்தால் கூடி வந்திருக்குமா? இவர் பார்க்க மாட்டேன் என்பதால் எதிரி கோபப்பட்டால் கெட்டுப் போகாதா?

அண்ணன் - பயந்து மறுத்தால் கோபம் வரும், கெட்டுப்போகும். நிதானமாக மறுத்தால் கெட்டுப் போகாது.

தம்பி - எதிரி வரக்கூடாது. வந்த பிறகு காரியம் வீணாகும்.

அண்ணன் - நிதானமாக மறுத்தால், காரியம் கெடாது.

தம்பி - அப்படியானால் சட்டம் எது? நம் நிலைக்கு 10 மடங்கு, 100 மடங்கு உயர்ந்த வாய்ப்பை அன்னை அளிக்கிறார். எந்தச் சட்டத்தை எப்படிப் பின்பற்றினால், அது கூடி வரும்?

அண்ணன் - முதல் காரியம் நமக்கு நல்லது வருகிறது என்றால், நம்மவர் அனைவரும் (4 பேரானாலும், 10 பேரானாலும்) அதை உளமார வரவேற்க வேண்டும். அந்த முதல் நிபந்தனையே எங்கேயும் பூர்த்தியாவதில்லை.

தம்பி - அது தெரிந்த விஷயம். மனைவிக்கு T.V.இல் பேச்சு வந்தால் கணவனுக்குப் பொறுக்கவில்லை. கணவனுக்குத் தொழில் பெருகினால் மனைவி, "இவர் கையில் பணம் வரக் கூடாது. வந்தால் என்னைக் குப்பையில் போட்டுவிடுவார்”. அண்ணனுக்கு வந்தால் தம்பிக்கு ஆகாது, தம்பிக்கு வர அண்ணன் சம்மதிக்க மாட்டான். அதைக் கடந்து வந்தால்,

அண்ணன் - நமக்குத் தெரிந்தவர்களில், அதைக் கடந்தவருண்டா? ஒருவர் கூட இல்லையே.

தம்பி - இருக்கட்டும். சட்டம் வரை சொல்லுங்கள்.

அண்ணன் - வேலை செய்யச் சுணங்குபவர் விலக்கு, நன்றி கெட்டவர் விலக்கு. இப்படிப் பார்த்தால் யார் தேறுவார்? இது அன்னைமூலம் வருகிறது என்று தெரிய முடியாமல் தூரத்திலிருப்பவர் தம் திறமையால் வருகிறது என்று நினைத்தால், அவர்கட்குப் பலித்துவிடுகிறது. 20 வருஷத்தில் தொழில் 1500 கோடியாயிற்றே அவருக்கு, தாம் செய்த சேவை தெரியுமா?

தம்பி - அந்தச் சேவையை ரத்து செய்ய 4 வருஷமாக முயல்கிறாரே, இவர் தூர இருப்பவர், திறமைசாலி, இவர் நிறுவனம் சேவை செய்வது இவருக்குச் சரிவரத் தெரியாது. சேவை பலனைக் கொடுக்கிறது, இவையெல்லாம் அன்னையால் நடக்கின்றன என்று தெரிந்தால்தானே மனம் வேலை செய்யும். மனம் வேலை செய்தால் காரியம் கெடும்.

அண்ணன் - அப்படியொருவரிருந்தால், அவர் செய்யக்கூடிய முதற்காரியம் ஒன்று 100ஆகப் பெருகுவதைச் சோதனை செய்ய வேண்டும்.

தம்பி - சோதனையே வேண்டாம், நம்புகிறவர்க்கு சொல்லுங்கள்.

அண்ணன் - சொல்கிறேன் கேள். சோதனை என்றால் ஒரு முறை செய்யலாம். அத்தோடு நிறுத்த வேண்டும். செட்டியார் கம்பனியில் சேல்ஸ் ஆபீசரை எடுத்துக்கொள்வோம். இவர் கம்பெனி 4 கோடி கம்பனி, பல ஆபீசர்கள் இருக்கிறார்கள். அந்தச் சேலத்து ஆபீசர் மாதம் 20 லட்சம் விற்கிறார். செட்டியார் இவரிடம் சோதனை செய்தால், கம்பனி, 5 components, organisation, energy, results  ஆகிய அனைத்தையும் புரிந்து கொண்டு மனதால் இந்த சக்தியை நம்ப வேண்டும். நமது விதிப்படி எல்லா முறைகளையும் சரிவரப் பின்பற்றுதல் ஒன்று நூறாகும் என்பதை இவர் அறிவால் புரிந்து, உணர்வால் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தம்பி - செட்டியாரிடம் சொன்னால் செய்வார்?

அண்ணன் - அதைச் செய்தவுடன் தெம்பு 100 மடங்காவது மனதில் தெரியும், அது பலிக்கும் என்பதற்கு அறிகுறி. அதைக் கண்டவுடன் செட்டியார் தனக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது. இதைக் கெடுக்கும் காரியம் எதையும் நான் அனுமதிக்கமாட்டேன் என நாம் முன்பு பேசியதுபோல் முடிவு செய்ய வேண்டும். அதுவே முதல் நிபந்தனை. பணம் சம்பாதித்தவர்களுக்கு அதை விபரமாகச் சொல்லத் தேவையில்லை. அவர்கட்கெல்லாம் தெரியும். புதியவர்கட்குச் சுருக்கமாகச் சொன்னால்,

"இந்த அறிகுறியை மனதில் கண்ட பிறகு இதுவரை உங்களுக்கு ஒத்துவராது, ஆகாது என்ற மனிதர்களையும், செயல்களையும் அறவே புறக்கணிக்க வேண்டும்'' என்பது போதும். இந்த நிபந்தனையிலும் யாரும் கண்டிப்பாக இருக்கமாட்டார்கள். தூரத்து உறவு கருமாதிக்கு எப்படிப் போகாமலிருப்பது, எதிரி வீட்டு birthdayக்கு போனால் தப்பா, 10 முறை வாங்கிய கைமாற்றைத் தாராத மனிதனுக்கு 11வது முறை எப்படியில்லை என்பது எனப் பல பெரிய, சிறிய தவறுகளைச் செய்து விடுவார்கள்.

தம்பி - செட்டியார் அதைச் செய்யவில்லை என்று கொள்வோம்.

அண்ணன் - 20 லட்சம் சரக்கு விற்பவரை எடுத்து நம் consultancy முறைப்படி எல்லா புது முறைகளையும் perfectஆக சொல்லித் தந்து அவர் 1 மாதத்தில் என்ன விற்கிறார் எனப் பார்ப்பதே சோதனை.

மனம் பெற்ற புதுத் தெம்பை விட்டுவிடக் கூடாது.
சேல்ஸ் டிரெய்னிங்கில் குறை வைக்கக் கூடாது.
சூட்சுமத்தில் எதிரான காரியங்களை அனுமதிக்கக் கூடாது.
மனதால் அவருடைய சேல்ஸை அன்னையால் நிரப்பியபடி இருக்க வேண்டும்.

தம்பி - பலன் தெரியுமா?

அண்ணன் - சுமார் 10 முதல் 100 மடங்குவரை சேல்ஸ் உயரும். இந்த ஒரு சேல்ஸ் ஆபீசர் 2 கோடி விற்பார். 20 கோடியும் விற்பார். சந்தேகமில்லை.

தம்பி - இது பலமுறை நடந்திருக்கிறது. முதலாளிகள் அதைச் சௌகரியமாக எடுத்துக்கொள்கிறார்களே தவிர, அருள் எனப் புரிந்து கொள்வதில்லை. 1 மாதத்திற்குப் பின் இது தொடராது. சோதனையால் சக்தி விளங்கியபின் முறையாகக் கம்பனி முழுவதும் இம்முறையைப் பின்பற்ற முன்வரவேண்டும்.

அண்ணன் - குடும்பத்திற்கும் இதுவே சட்டம். எவரும் செய்வதில்லை. இந்த நிதானம் இருப்பதில்லை. ஏன் நாம் செய்யக் கூடாது?

தம்பி - நாம் செய்ய நம் வீடு அனுமதிக்காது.

அண்ணன் - வீட்டுக்கு வீடு அதுதான் நிலைமை. அதை மீறியும் ஒன்று செய்யலாம். வீட்டிலுள்ளவர் அறியாமல் ஒரு வேலை செய்தால் அது பலிக்கும்.

தம்பி - அந்தப் பலன் வீட்டுக்கு வாராது.

அண்ணன் - வீட்டிற்கு நிச்சயம் வாராது. சேவைக்கு உதவும். அது போன்ற மனிதரை இதுவரை நான் கண்டதில்லை. ஆனால் முயற்சியை இன்றுவரை கைவிடவில்லை. அன்னை தெளிவாகச் சொல்கிறார் "நல்ல மனம் வேண்டும்" என்று. அது இருப்பது கடினம். அது உள்ளவர் அது இல்லாதவர் மீது பிரியம் கொண்டால் விஷயம் பலிக்காது. நல்ல மனமுள்ளவர் இது கெட்ட எண்ணமுள்ளவருக்காகப் பலிக்க ஆசைப்படுவதால் நடப்பதில்லை.

தம்பி - இது இனி நடக்க வழியில்லையா?

அண்ணன் - வழியைத் தேடிக்கொண்டிருக்கிறேன். விவேகாநந்தர் சிக்காகோவில் பேசும்பொழுது "இங்கு வந்தபின் என் மனத்தைப் பறிகொடுத்தேன்" என்றார். யார் அந்த அதிர்ஷ்டக்காரப் பெண் எனக் கேட்பவர் வியந்த நிலையில் சுவாமி மேலும் பேசினார் "உங்கள் நாட்டில் organisation வாழ்க்கைச் செயல்முறை அற்புதமாக அமைந்துள்ளது. நான் அதனிடம் என் மனதைப் பறிகொடுத்தேன்" என்றார். அமெரிக்காவைப் பற்றி அன்னை அதையே கூறியுள்ளார்.Practical organisationஇல் அமெரிக்கர் நிபுணர் என்கிறார் அன்னை. இந்தக் கோணத்தில் அன்னையை நாம் அறிய முயல்வது பெரும்பலன் தரும். இது உயர்ந்த தத்துவம். இதை விளக்கினால், விளக்கம் சிறப்பாக இருக்கும். புரிந்தால் உன்னதமாக இருக்கும். 1920இல் ஸ்ரீ அரவிந்தர் சத்தியஜீவன் பிறப்பான், மரணம் அழியும், உலகம் ஆண்டவனில் புனர்ஜென்மமெடுக்கும் என்று கூறியபொழுது அவருடன் இருந்த சாதகர்கள் அதை 'Advent' வைகறை என்றனர், Kingdom of God on Earth புவியில் தெய்வீக வாழ்வு என்றனர், Life Divine என்றனர். அது ஆத்ம விளக்கம். அறிவுக்குக் கலங்கரை விளக்கம். அதுபோல் organisation of consciousness ஜீவியத்தின் சிறப்பு மனத்திற்கு இதமாக இருக்கும். இதைவிட என்ன வேண்டும் என்று தோன்றும். எல்லாம் புரிவதுடன் சரி. நடைமுறையில் எதுவுமிருக்காது.

தம்பி - நடைமுறைக்கு வழியில்லையா?

அண்ணன் - நடைமுறைக்குண்டான வழியைப் பிறரிடம் தேடுவதை விட்டுவிட வேண்டும். அதை நம்மிடம் தேடவேண்டும். தேடினால் வழி பிறக்கும். கீழ்க்கண்ட நம் அனுபவத்தைக் கூர்ந்து யோசனை செய்வது நல்லது.

 1. "மனிதன் தன்னை மையமாகக் கொண்டு செயல்படுகிறான். இறைவன் தனக்கு ஒரு கருவி என நினைக்கிறான். அதில்லை என்றால் அந்த இறைவன் எனக்கு வேண்டாம் என்கிறான்” என்று அன்னை கூறுகிறார்.
 2. நமது உலகில் பிறர் வாழ மனம் பொறுக்காது. தான் சம்பாதிப்பதைவிட பிறர் சம்பாதிப்பதை தடுப்பதையே லட்சியமாகக் கொண்டது உலகம். நாம் பிறர் வாழ முயல்கிறோம். நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மை அழிக்க முயல்கிறார்கள்.
 3. இருளடைந்தவன், ஏழை, ஒதுக்கப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன், ஊனமுற்றவனை உலகம் ஒதுக்குகிறது. அழிக்க முயல்கிறது. அன்னை அவர்களை மற்றவர்களையும்விட, சிறந்தவர்களையும் விடச் சிறந்தவர்கள் என்கிறார். அவர்கள் திருவுருமாற விரும்பினால் சிறந்தவர்க்கு நிகராகவும், மிச்சமாகவும் உயர்வார்கள் என்கிறார்.
 4. மனிதர்களில் பெரும்பாலோர் கேட்பது என்ன? அவர்கள் வாழும் உலகம் எது? நாம் என்ன கூறுகிறோம்?
  • இன்றைய உலகம் - வீடு, நட்பு உட்பட - உன் முன்னேற்றத்தை விழையவில்லை.
  • உன் முன்னேற்றத்திற்கு உனக்கு வழி தெரியவில்லை. தெரிந்தால் பிரமோஷன் பெறத் தெரியும். உன் உலகம் அதற்குத் தடை. ஓரளவு முதலில் ஆதரவு தரும். அடுத்தாற்போல் எதிர்க்கும். அழிக்கும்.
  • கிளார்க்கு, ஆபீசராக முடியாத உலகத்தில் அன்னை IAS ஆபீசராக வழிகாட்டுகிறார். கிளார்க் IAS வேலை உள்ளூரிலேயே வேண்டும், டிரான்ஸ்பர் கூடாது என்று நினைக்கிறார்.
  • வீடும், நட்பும் உட்பட எவரும் உன் பெரு முன்னேற்றத்தை எதிர்க்கும் இவ்வுலகில் உச்சக்கட்ட முன்னேற்றத்திற்கு அன்னை வழி சொல்லி, உறுதுணையாக இருக்கிறார். மனிதன் தன் பங்கைச் செய்ய மறுக்கிறான். சாப்பாட்டிற்கு வழியில்லாதவனுக்குப் பெரிய விருந்திற்கு ஒருவர் பணம் கொடுத்தால், "நீங்களே சமைத்துப் போடுங்கள்” என்பதுபோல் மனிதன் பேசுகிறான். அதையும் செய்தவரை அந்த விருந்தில் அவமானப்படுத்த ஆர்வமுடையவன் மனிதன்.
  • நாம் - பொதுவாக மனிதர்கள் - இவற்றை அறிவதில்லை, அறிந்தால் பொருட்படுத்துவதில்லை. உடன்பிறந்தவர், கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர், நண்பர்கள் இம்மனநிலையிலிருப்பவரை அறிவதில்லை. அவர்கட்கு அன்னை மூலம் நல்லது வேண்டும் என நினைக்கிறோம், அது நடக்காது.
  • அன்னை மூலம் நல்லது நடக்க வேண்டுமானால், அது நமக்கு நடக்கும், நமக்குமட்டும் நடக்கும், பிறர் - கெட்ட எண்ணமுள்ள பிறர் - பெற வேண்டுமென நாம் நினைக்கும்வரை அதுவும் நடக்காது. அந்த எண்ணம் தவறு. அது பலிக்காது. பலித்தால் பிறர் கெட்ட எண்ணம் வலுப்படும். அங்கு அன்னை தொடர்ந்து செயல்படமாட்டார்.
  • அவர்களைப் பற்றிய நம் எண்ணத்தை நாம் சமர்ப்பணம் செய்வது மட்டுமே முடியும். நாமாக அவர்கட்கு அன்னையை அளிக்க முடியாது. ஸ்ரீ அரவிந்தர் இதைப் பரோபகாரம் என்கிறார். பரோபகாரம் நம் அகந்தையின் வெளிப்பாடு என்கிறார். 

தம்பி - நீங்கள் சொல்வனவற்றை எல்லாம் நானும் அறிவேன். அவர்கள் விஷயத்தில் நாம் என்ன செய்ய?

அண்ணன் - அவர்களாக வந்து உதவி - அன்னை முறையை அறிய உதவி - கேட்டால் கொடுக்கலாம்.

தம்பி - அவர்களாக வரப்போவதில்லை.

அண்ணன் - நாம் உதவ வேண்டும் என்ற கருத்தைச் சமர்ப்பணம் செய்வது மட்டுமே நமக்கு உரிமை.

தம்பி - அது சமர்ப்பணமாவதில்லை.

அண்ணன் - சமர்ப்பணமாகவில்லை எனில், அன்னை ஏற்கவில்லை எனப் பொருள். அன்னை ஏற்காததை நாம் செய்ய முற்படுவது தவறு. சமர்ப்பணமானபின் நடப்பது, அன்னையின் திருவுள்ளம். அத்துடன், பிறருக்கு உதவ முனையும்பொழுது அதன் மூலம் அவன் நம்மை அழிக்க உதவுகிறது. நம் அனுபவம் முழுவதும் அதுபோன்றது.

தம்பி - இதன் தத்துவம் என்ன?

அண்ணன் - பொதுவாக (வீட்டிற்கு வெளியில்) ego மட்டுமே முக்கியமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தம் egoவைப் பாராட்டுகின்றனர். இன்று நாம் நண்பர்களாகப் பழகும் பொழுது பிறர் சொந்த விஷயத்தில் தலையிடுவதில்லை. நட்பு தொடர்கிறது. நண்பர் முன்னேற வேண்டும் என்று நாம் சொல்வதை அவர் "என் ego வளர வேண்டும்'' என்று கொள்கிறார். அதை வேறெங்கும் செயல்படுத்த முடியாது என்பதால் நம்மிடம் செயல்படுத்துகிறார். நம்மை அழிக்க முயல்கிறார். நம் நல்லெண்ணம் அவருக்குத் தேவையில்லை. அவர் ego அவருக்கு முக்கியம். நாம் எத்தனைப் பேருக்கு உதவிக்குப் போயிருக்கிறோம். கிடைத்தது என்ன? தொந்தரவே.

தம்பி - இது சுயநலம் உயர்ந்தது என்றாகிறதே.

அண்ணன் - அப்படியில்லை. நம்மால் முடியாததைச் செய்து வம்பில் மாட்டிக்கொள்வது தவறு என்று கூறுகிறேன்.

தம்பி - பிறருக்கு உதவ நம்மால் முடியாது என்று கூறுகிறீர்களா?

அண்ணன் - நாமே போய் பிறருக்கு உதவ முடியாது என்கிறேன்.

தம்பி - அவர்களாக நம்மை வந்து அன்னையைப் பற்றிக் கேட்கப் போவதில்லை.

அண்ணன் - அவர்களாகக் கேட்காதவரை நாமே அந்த உதவியைச் செய்ய முயல்வது என்பது கூடாது. அது ego என்கிறார் பகவான்.

தம்பி - அந்தச் சமயத்தில் நாம் செய்யக் கூடியதென்ன?

அண்ணன் - சமர்ப்பணம்.

தம்பி - அது முடியவில்லையே.

அண்ணன் - சமர்ப்பணம் இங்கு முடியவில்லை என்றால் நம் ego முனைப்பாக இருக்கிறது என்று பொருள். அப்படியானால் அந்தக் காரியத்தைச் செய்யக்கூடாது.

தம்பி - எந்தக் காரியத்தைச் சமர்ப்பணம் செய்ய முடியவில்லையோ, அதைச் செய்வது egoவை வெளிப்படுத்துவதாகும் என்கிறீர்களா?

அண்ணன் - உலகை ego ஆள்கிறது. அது தன்னை வலுப்படுத்த முயல்கிறது. அது என் ego, உன் ego என்பதில்லை. அது ego. நாம் அன்னை உயர்ந்தவர்கள். அவர்களை உலகுக்கு அளிக்க வேண்டும் எனப் பிறரிடம் முயன்றால், பிறருக்குத் தெரிவதெல்லாம் ஒன்றுதான் தனக்கு - தம் egoவுக்கு - ஒரு வாய்ப்பு வந்துள்ளது என்று கொள்கிறார்கள். இதுவே பஸ்மாசூரன் கதை. நம் வாழ்வில் அதற்கு விதிவிலக்கைக் காணவில்லை.

தம்பி - சற்று யோசனை செய்து பார்த்தால் கடந்த பல வருஷங்களாக வந்த அத்தனை ஆபத்துகளும் நமக்கு இப்படி வந்ததாகத் தெரிகிறது.

அண்ணன் - நாம் அன்னை வேறு, மனிதர்கள் வேறு, ஸ்தாபனம் வேறு என்பதை மறந்து எல்லாம் ஒன்றே என்று நடப்பது அறிவீனம். அன்னை அன்பரானாலும், அன்னை பேரில் ஸ்தாபனம் நடத்துபவரானாலும், அன்னையோடு வாழ்ந்தவரானாலும், அன்னையை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லும் பக்தர், சாதகரானாலும், அவர்கள் நடைமுறையை மட்டும் நாம் கவனித்தால் தவறு வாராது. நாம் அவர்கள் சொல்வதை முடிவாக ஏற்றுக் கொள்வது தவறு. அதனடிப்படையில் நடந்தால், அவர்கள் நம்மை அழிக்க நாமே கருவியானதாக முடிகிறது. இது ஆபத்து.

தம்பி - இப்படிப் பார்த்தால் நமக்கு வந்த அத்தனை ஆபத்திற்கும் நாமே காரணம் என்று புரிகிறது.

அண்ணன் - இது தவிர நமக்கு வாழ்வில் பிரச்சினைகள் ஏதாவது உண்டா?

 • அன்னையிடம் வந்த பின் தீராத பிரச்சினையில்லை என்பதை மாற்றி அன்னையிடம் வந்தபின், வாழ்வில் பிரச்சினைகளே எழவில்லை, நாமே நம் அறியாமையால் எழுப்பியது தவிர வேறு பிரச்சினைகள் இல்லை என்று எனக்குத் தெளிவு. 

தம்பி - சமர்ப்பணம் முக்கியம், சமர்ப்பணம் மட்டுமே முக்கியம். அது முடியவில்லை என்பதால் நாம் ‘சேவை’, ‘பக்தர்’, ‘சாதகர்’ என்பவற்றைக் கருதுகிறோம். நாம் இவர்களுடன் அன்னை மூலமே தொடர்பு கொள்ள வேண்டும், நேரடியாகத் தொடர்புகொள்வது தவறு.

அண்ணன் - ஆசிரமம் ஆரம்பித்த காலத்தில் இரு சாதகர்கள் வேலைக்காகத் தவிர, வேறு விஷயமாகச் சந்திக்கக் கூடாது என்று கண்டிப்புச் செய்திருந்தார் என்றபொழுது, நமக்கு ஏன் அன்னை விலக்கிய அத்தொடர்பு? அவர்கள் வாழ்வை நாமறிய வேண்டும், விமர்சிக்க வேண்டும் என்பது நமக்குத் தேவையில்லாதது. இதே சட்டம் மற்ற பக்தர்களுக்கும் பொருந்தும்.

தம்பி - அன்னை சட்டப்படி உள்ள தொடர்பு சரி. மற்றது சரியில்லை அல்லவா?

அண்ணன் - இந்தச் சட்டத்தை பின்பற்றுபவர்களை யாராவது உனக்குத் தெரியுமா? நாமிருவரும் எந்த அளவுக்குத் தேறுவோம்?

தம்பி - பிறரை விடு, நாம் 10% கூட தேறமாட்டோம் என்று தெரிகிறது. அன்னை சட்டத்தைப் பின்பற்றாமல் நாம் பக்தர் எனக் கூறுவது நமக்குச் சரியில்லை. Mother is an organisation of consciousness என்பதை எப்படி விளக்கமுடியும்?

அண்ணன் - Skill, capacity திறமை என்பவை என்ன? நாம் எழுதுகிறோம். உடை உடுத்துகிறோம், ஆபீஸ் வேலை செய்கிறோம். இதில் என்ன நடக்கிறது? நம் சக்தி energy செலவாகிறது. லீவு நாளில் நம் சக்தி energy விரயமாகிறது. வேலை செய்தால் வேலையில் சக்தி பலன் தருகிறது. பலன் தர சக்தியை energyஐ organise செய்யவேண்டும். Skill and capacity are organisations of physical energy. செயலுக்குள்ள சக்தியை முறைப்படுத்தினால் திறமை வருகிறது.

அழகாகப் பேசுகிறான் ராமன், பலரும் அவனை விரும்புகிறார்கள். அவனை நாடி வருகிறார்கள். எரிந்துவிழுந்தால், முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டால், பாராமுகமாக இருந்தால் எவரும் அருகே வருவதில்லை. பலரும் விரும்புவதால் பலர் சேர்ந்து செயல்பட முடிகிறது. ராமனால் காரியத்தைச் சாதிக்கமுடிகிறது. இது என்ன? This is organisation of vital energy. உணர்வின் சக்தியை முறைப்படுத்தினால் காரியம் கூடிவருகிறது. பொதுவாக (physical organisationயை விட vital organisation) செயலுக்குரியதைவிட உணர்வுக்குரிய முறை 10, 50 மடங்கு பலன் தரவல்லது. தச்சன் செயலுக்குரியவன். வியாபாரி உணர்வுக்குரியவன். தச்சன் என்றும் வியாபாரி போல் சம்பாதிக்க முடியாது. வியாபாரம் பெரியது. உணர்வுக்குரியது. தச்சுவேலை வேலைக்குரியது. ஒரு கம்பனி வைத்து technology டெக்னாலஜி மூலம் சோப்பு, ஷாம்பு, கார்போல பொருள்களை உற்பத்தி செய்து வியாபாரம் செய்வது அறிவுக்குரிய முறை. It is organisation ideas. கம்பனி என்பது ஒரு idea கருத்து. டெக்னாலஜி என்பது ஓர் idea கருத்து. கருத்தை எடுத்து முறைப்படுத்தி செயல்படுத்தினால் அது physical vital, vital capacity செயல், உணர்வு போன்றவற்றைவிட ஆயிரம் மடங்கு பெரியது. Organisation என்பது முறைப்படுத்துவதாகும். அது செயலிலும், உணர்விலும், அறிவிலும் உண்டு. படிப்படியாக உயரக்கூடியது. படிப்படியாக எனில் 1, 10, 100, 1000, என்றபடி உயரும் தன்மையுள்ளது. விசேஷம் organisation  முறையில் உள்ளது. இதற்கடுத்தாற்போல் முனிவர், ரிஷி, யோகி, தெய்வம், சத்தியஜீவியம் கடந்து consciousness ஜீவியம் உள்ளது. Organisationயை அங்கு பார்த்தால் அது அன்னையாகும். Mother is organisation of consciousness. ஒவ்வொரு நிலையாக விளக்கலாம். படிப்படியாகப் புரியும். புரிவது விசேஷமில்லை. செய்வதே முக்கியம்.

தம்பி - என்ன செய்ய வேண்டும்?

அண்ணன் - தெய்வங்கள் சக்தி வாய்ந்தவை. அவர்களின் பிறப்பிடம் சத்தியஜீவியம். தெய்வங்கட்கும் உலகுக்கும் தொடர்பில்லை . மனிதன் தெய்வத்தை துதித்த துதி அவர்கள் காதில் விழுந்தால், அவர்கள் சக்திமூலம் வரம் தருகிறார்கள். மனிதனைப் பொருத்தவரை தெய்வங்கட்கு கடமையில்லை, தொடர்பும் இல்லை என்று கூறிய பகவான் நாம் அறிந்த வேறு சில விஷயங்களையும் சுட்டிக்காட்டுகிறார்.

மனிதன் தவம் பலித்து மோட்சம் பெற தெய்வங்கள் தடையாகவுமிருக்கும். அன்னை சத்தியஜீவியத்தைக் கடந்த ஜீவியத்தில் உற்பத்தியானவர்கள். நம்மைத் தேடிவரும் தெய்வம். நம் நியாயமான பிரார்த்தனைகளை கேட்டவுடன் கொடுப்பவர்கள். நாம் அன்னையை நிபந்தனையின்றி ஏற்க வேண்டும், அதாவது,

 • நம் சௌகரியத்திற்காக ஏற்பதைவிட, அன்னைக்காகவே ஏற்க வேண்டும்.
 • மனித உறவை அன்னை மூலம் மட்டும் நாடவேண்டும்.
 • மனம் நல்ல எண்ணத்தால் மட்டும் நிரம்பியிருக்க வேண்டும்.
 • அன்னையைப் பிறருக்கு நம் ஆசைக்காகக் கொடுக்க முயலக்கூடாது.
 • சமர்ப்பணத்தை முக்கியமாகக் கருதவேண்டும். சமர்ப்பணத்தை மட்டும் முக்கியமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். 

தம்பி - நானிதைச் செய்ய விருப்பப்படுகிறேன். அறிவுக்கடுத்த நிலைகளையும் விளக்கமாக அறிய விரும்புகிறேன்.

அண்ணன் - அவை அறிவைவிடப் பல ஆயிரம், லட்சம் மடங்கு சக்தி வாய்ந்தவை என்று அறிந்தால் போதும். அறிவைவிட உயர்ந்த நிலைகட்கு உதாரணம் தரமுடியாது என்பதால் பொதுவாகவே பேசமுடியும்.

Bill Gates இன்று $ 100 Billion சம்பாதித்தார் எனில் அது எப்படி? கம்ப்யூட்டர் அறிவை முறைப்படுத்துகிறது organises knowledge. அதைச் செய்ததால் மட்டும் ஒருவர் இவ்வளவு சாதிக்க முடியுமென்றால், சாதாரண மனிதன் தனக்குத் தேவையான அறிவை முறைப்படுத்தி பெருஞ்செல்வம் சம்பாதிக்கலாமல்லவா? அது செய்தால் போதும்.

தம்பி - என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.

அண்ணன் - நான் கூறுவதில் இரண்டு பாகம் உண்டு. ஒன்று கீழிருந்து நாம் செய்ய வேண்டியது organise knowledge from below அறிவை முறை செய்ய வேண்டும். அடுத்தது மேலிருந்து அன்னை செய்ய வேண்டியது. அதற்கு அன்னையைக் கூப்பிட்டால் போதும். நம் பாஷையில் சொன்னால்,

 • நம் அறிவுக்கெட்டியவற்றை எல்லாம் முழுவதும் செய்து முடித்துவிட்டு அன்னையை அழைக்க வேண்டும்.

அப்படிச் செய்தால் செய்பவர் வருமானம் 10 அல்லது 100 மடங்கு உயரும். அதைச் செய்தவர் செய்தபின் கேட்டால் விளக்கங்களை ஏராளமாகக் கூறலாம். 

தம்பி - இதை நாம் பல முறையில்லாவிட்டாலும், சில முறை கண்டிருக்கிறோம். பலன் பெற்றவர் சொல்லாமல் நம்மை விட்டு விலகிவிடுகிறார் என்றும் பார்க்கிறோம். நான் இதை ஏற்றுக் கொள்கிறேன். முடிந்தவரை அடுத்த நிலைகளையும் விளக்க வேண்டும்.

அண்ணன் - மனிதனுடைய அதிர்ஷ்டத்திற்கு mental organisation அறிவின் முறையை விட மேலே போக வேண்டிய அவசியமில்லை. அதன்மூலம் செய்த சாதனை Bill Gatesனுடையது. நம் அறிவுக்குரியனவெல்லாம் நாம் செய்து முடித்தவுடன் அன்னை செயல்பட ஆரம்பிப்பதால், நமக்கு இந்த நிலை என்ன அதிகபட்சம் கிடைக்குமோ அது கிடைத்துவிடுகிறது. முனிவருக்குடையது மௌனம். Silent will மௌனசக்தி அதற்குரியது. அதுவே அதன் முறை. It is the organisation of silence. நம் மனதிலுள்ளதைப் பிறரிடம் கூறாவிட்டால் அவரே அதை நமக்குச் சாதகமாகத் தெரிவிக்கின்றார் என்பதே. இதை ஒருவர் சாதித்தால், உலகில் அவரால் முடியாதது என்றுண்டோ? அது எவ்வளவு பெரிய திறமை. இன்று உலகில் எவரும் பெற்றில்லாத திறமை அது.

அடுத்தது ரிஷியின் நிலை. மௌனத்தைக் கடந்த ஜோதி நிலை. இந்த நிலையில் we organise light. ஜோதியின் முறை மௌனத்தின் முறையை உட்கொண்டது. உலகின் நிகழ்காலம், கடந்த காலம், எதிர்காலம் திருஷ்டியாகத் தெரியும் நிலையிது.

அடுத்தது யோகி. Here man organises direct knowledge. மனம் அறிவால் செய்வதை, முனிவர் மௌனத்தாலும், ரிஷி ஒளியாலும் செய்கிறார். யோகி அறிவு, மௌனம், ஒளி என்ற intermediate instrument கருவிகளின் உதவியின்றி நேரடியாக உலகத்தை ஞானத்தால் அறிகிறார்.

தெய்வநிலை அடுத்தது. தெய்வங்களுக்குள்ள சக்திகளை நாம் அறிவோம். They have the knowledge, need not seek it. யோகி ஞானத்தை நாடவேண்டும். தெய்வம் அதை நாட வேண்டாம். தனக்கே ஞானமுடையது தெய்வம். ஆனால் அறியாமை இங்கும் தொடரும். Gods organise knowledge. They possess it, but it is accompanied, by ignorance. யோகி எதை முறையாகப் பெற வேண்டுமோ அதை தெய்வம் இயல்பாகப் பெற்றுள்ளது.

அடுத்தது சத்தியஜீவியம். Supermind organises nothing. It determines.   சத்திய ஜீவியம் எந்த முறையையும் தேடவேண்டாம். அதுவே முடிவு செய்கிறது. மனிதனும், தவசியும் எந்த முடிவைப் பல்வேறு முறைகளால் தேடுகிறார்களோ, அந்த முடிவை நிர்ணயிப்பது சத்தியஜீவியம். Supermind organises determinations. முடிவை முறை செய்வது சத்தியஜீவியம் எனலாம்.

அடுத்த நிலை ஜீவியம் Consciousness. முடிவை நிர்ணயம் செய்யும் சத்தியஜீவியத்தை உற்பத்தி செய்வது "சித்' என்றும் consciousness எனவும் நாம் கூறும் ஜீவியம். Mother is the organisation of this original consciousness. இந்த ஜீவியத்தின் முறை அன்னை என்பது.

நாம் இதைச் செய்ய முடியாது. இதன் பலனைப் பெற முடியும்.

மனிதன் ஜீவியத்தை முறைப்படுத்தினால் அன்னையாகிறான். அது தத்துவரீதியாக முடியும். இன்று பிரச்சினை அதில்லை. நாம் செய்யும் காரியங்கள் அன்னை செய்வதுபோல் பூர்த்தியாக நாம், நம்மால் முடிந்ததை முடித்துவிட்டு, அன்னையை அழைக்க வேண்டும்.

தம்பி - இந்த விளக்கம் திருப்தியாக இருக்கிறது. நம் நிலையில் என்ன வேண்டும் என்று தெரிகிறது.

அண்ணன் - இதை அறிந்தவர் - செய்பவரில்லை - உண்டா எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்தவரை நான் அறியேன். இதை அறிவதும், செய்வதும், நல்லது.

தம்பி - Mother is infinity அன்னை என்பது அனந்தம், அதிர்ஷ்டம் என்பதை சேல்ஸ் மூலமாகச் சொல்லியது போல், வேறு வழியாகவும் சொல்ல முடியுமா?

அண்ணன் - இந்தப் புதிய Doman method டோமான் முறை பள்ளியைப் பார்த்திருக்கிறாய் அல்லவா? அதில் infinity அனந்தம் தெரியவில்லையா? பார்த்ததைச் சொல்லேன்.

தம்பி - 3 வயதில் பேசாத குழந்தைகளும் உண்டு. கொஞ்சம் பேசும் குழந்தைகளும் உண்டு. இந்த பள்ளியில் 2 முதல் 3 வயது குழந்தைகள் 4 மாதத்தில் ஏராளமாகக் கற்றுக் கொள்கின்றன. இந்தியாவின் 22 மாநிலங்களின் பெயர்கள், நதிகள் பெயர்களை எல்லா குழந்தைகளும் அறியும். இங்கு A, B, C, D சொல்லித் தாராமல் நேரடியாகச் சொற்களைச் சொல்லித் தருகிறார்கள். அம்மா, அப்பா என்ற இரு வார்த்தைகள் மட்டும் பேசிய குழந்தைகள் 3ஆம் மாதம் "Happy hippos live in African swamps” என்பதை சரளமாகப் படிக்கின்றன. 3 வயது 2 மாதமான குழந்தை இதுபோல் 12 வாக்கியங்களைப் படிக்கிறான். 150 ஆங்கில சொற்களை அவன் 4 மாதத்தில் கற்றுக் கொண்டிருக்கிறான். Cushy sofa, snow, spring போன்ற சொற்கள் அவை.

குழந்தைகட்கு இங்கு கட்டுப்பாடில்லை. பாடம் நடத்தும்பொழுது ஒரு குழந்தை எழுந்து சற்று தூரத்தில் போய் விளையாடியது. ஆசிரியர் கண்டிக்கவில்லை. வகுப்பு முடிந்தவுடன் வகுப்பில் நடந்த பாடத்திற்கு மற்ற குழந்தைகள் சொல்லும் பதிலை இக்குழந்தையும் சொல்கிறது. கண்டிக்காவிட்டால் எழுந்து விளையாடப் போன குழந்தையும் பாடத்தைக் கேட்டுக்கொண்டிருந்து கற்றுக்கொள்கிறான். இம்முறையில் படித்த 11 வயதுப் பெண்ணைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். 750 பக்க ஆங்கில நாவலை ஒரே மூச்சாக ஒரே நாளில் படித்துவிட்டாள். எதை வேண்டுமானாலும் கேளுங்கள் சொல்கிறேன் என்கிறாள்.

அண்ணன் - இதில் infinity அனந்தம் தெரியவில்லையா? 14 வருஷம் ஆங்கிலம் பயின்று SSLC முடித்த பிள்ளைகள் ஆங்கிலத்தில் பெறும் அறிவை குழந்தைகள் குறுகிய காலத்தில் பெறுவது அனந்தமல்லவா? இதையே தொடர்ந்தால் 10 வயதில் குழந்தைகட்கு B.A.,M.A., அளவு அறிவு எளிதாக வருமன்றோ?

அன்னை முறையின் தத்துவம் இதுதான். இதன் அம்சங்கள் இரண்டு

 1. Education must be perfectly organised. படிப்பை முறைப்படுத்த வேண்டும்.
 2. The child should learn out of curiosity. நாமே சொல்லிக் கொடுக்காமல் குழந்தை தானே ஆசையாகக் கற்றுக்கொள்ள வேண்டும். 

தம்பி - அதுபோல் நாம் அன்னையிடம் செய்ய வேண்டியது என்ன?

அண்ணன் -

 1. நாம் செய்யும் காரியங்களை முறைப்படுத்தி organise செய்து முடித்துவிட வேண்டும்.
 2. அன்னை மீது ஆர்வத்துடன் நம் செயலில் செயல்படும்படி அழைக்க வேண்டும். 

தம்பி - சொல்வது சரிதான். நானும் ஒரு சில உதாரணங்களைப் பார்த்துள்ளேன். Organisation and sincerity முறையும், உண்மையுமிருந்தால் தொழில் அளவிறந்து பெருகும். இதுபோல் செய்த வேலையில் 1½ ஆண்டில் முதல் 30 மடங்கு பெருகியது. 10ஆம் வகுப்பு பையன் M.A. பையனைவிடச் சிறப்பாக 1 வருஷத்தில் எழுதக் கற்றுக் கொண்டான்.

அண்ணன் - வீடு, ஆபீஸ், தொழில், நட்பு என்பதில்லை. துறை எதுவானாலும் மனம் உண்மையாகவும், செயல் சிறப்பாகவுமிருந்தால் அங்கு அன்னை அளவிறந்து செயல்படுவார். அன்பர்கள் வீடுகள் அனைத்தும் அபரிமிதமான வருமானத்தைப் பெறும் வழி இது. மாதம்தொறும் லட்சக்கணக்காக வரும். இந்த இரண்டும் இருக்குமா?

உண்மை, சிறப்பான செயல்

தம்பி - உண்மையைப் பற்றி நாம் இவ்வளவு பேசுகிறோமே, உண்மையான அதிகாரியிடம் file எடுத்துப் போனால் எரிந்து விழுகிறாரே? ஏன்?

அதிகாரி கேட்ட விஷயங்கள் சரிவரச் சேகரித்துக் கொண்டு, அவரைத் திருப்திப்படுத்தும் எண்ணத்துடன் அவரிடம் போனால் திட்டுகிறாரே? ஏன்?

அண்ணன் - விவரமாகச் சொல், யார் இது?

தம்பி - மந்திரி P.A. எல்லாப் புள்ளிகளையும் ஒன்றுவிடாமல் சேகரம் செய்துகொண்டு கொடுத்தால் சந்தோஷப்படுவார் என்று போனான். திட்டினாராம்.

அண்ணன் - தன்மீது சந்தோஷப்படுவார் என்று போனானா? கேட்டாயா?

தம்பி - ஆமாம் அதுதான்.

அண்ணன் - மந்திரி தன்னை மெச்சுவார் என எதிர்பார்த்தால், பலன் தலைகீழே வருவது நம் சட்டப்படி நியாயம்தானே. வேலையைச் சரிவரச் செய்துவிட்டு எதிர்பார்ப்பில்லாமல் போனால், திட்டு வாராது. சந்தோஷப்படுவார். எதிர்பார்ப்பது வேலைக்குரிய அழகன்று. நாம் போகும் பாதை வேறு. அன்னை செயல்படும் பாதை வேறு.

தம்பி - இது நான் அடிக்கடி கேள்விப்படுகிறேன். விவரமாகச் சொல்லுங்கள்.

அண்ணன் - நம் பார்வை நமக்குத் தெரிந்தவற்றிலிருக்கும். நமது பாதை நமக்குத் தெரியாது. அன்னைக்குத் தெரியும். எனவே நாம் முன்னேறுவதற்கு நமக்குத் தெரிந்ததைச் செய்தால், அதே முன்னேற்றத்தை அன்னை நமக்கு நமக்குரிய பாதையில் தருவார்.

தம்பி - உதாரணம் உண்டா?

அண்ணன் - அன்னையின் செலவுக்குத் தேவையான தொகையைத் தாமே சம்பாதித்துத் தர ஒருவர் முன்வந்தார். அவர் முயற்சி நஷ்டமாயிற்று. ஆனால் அவர் எண்ணம் வேறு வகையில் பலித்தது. அவரைச் சார்ந்த ஒருவர் அவர் கொடுக்க முயன்ற தொகையைப்போல் 5 மடங்கு அன்னைக்குக் கொடுத்தார்.

தம்பி - என்ன அர்த்தம்?

அண்ணன் - இந்த உதாரணத்தின் மூலம் சொல்லலாம். பொதுவாகவும் சொல்லலாம். அவருடைய எண்ணம் முழுமையானதால், ஏதோ ஒரு வகையில் அது பலித்துவிட்டது. எண்ணம் சரி. அவருக்கு உடனிருந்தவர் சேவை மனப்பான்மையில்லாதவர் என்பதால் அவர் முயற்சி தோற்றது. அத்துடன் அவர் அடிப்படை முயற்சி மனித சுபாவம் மாற வேண்டும் என்பது. அன்னையை 30 ஆண்டுகளாக அறிந்த தொழிலதிபர் கருமி என்பதால் அன்னைக்கு எந்தக் காணிக்கையையும் தருவதில்லை. இந்தக் கருமி மனம் மாறி பல லட்சம் காணிக்கை கொடுத்தது அவர் முயற்சியின் அடிப்படை வலுவானது எனக் காட்டுகிறது.

தம்பி - வேறு உதாரணமுண்டா?

அண்ணன் - அதை நீதான் சொல்ல வேண்டும். ஓர் அன்னைக் கருத்தை வெளியிட பல உலகப் பிரசித்தி பெற்றவர்களைக் கூட்டி மாநாட்டில் அதை வெளியிட சென்ற ஆண்டு முயன்றது உனக்குத் தெரியும். அங்கு அதை வெளியிட முடியவில்லை. மாநாட்டைக் கூட்டியவர் அதை முடித்துக்கொண்டு தம் தொழில் மாநாட்டுக்குப் போனார். தொழிலுக்கும் அன்னைக்கும் தொடர்பில்லை. இக்கருத்தை அங்குப் பேசினார். வந்திருந்த என்ஜீனீயர்கள் ஆரவாரமாக வரவேற்றார்கள். அடுத்த நாள் மற்றொரு பிரபலமான கூட்டத்திற்கு அவரை அழைத்திருந்தனர். நீண்ட பிரயாணம், ஓய்வில்லாமல் வேலை, நேரமில்லை என மறுத்தார். வற்புறுத்தி அழைத்தனர். "26 மணி விமானப் பிரயாணம், 12½ மணி time change, ஓய்வில்லை எனினும் வந்திருக்கிறார்'' என இவரை அறிமுகப்படுத்தினார்கள். உற்சாகமாகப் பேசினார். அன்னைக்குரிய செய்தியை அங்குச் சொன்னார். ஒரே ஆரவாரம். பலத்த கைதட்டல். மாநாட்டுத் தலைவர் "இவர்கள் அனைவரும் பிரபலமானவர், எவர் பேச்சையும் கைதட்டி வரவேற்பவரில்லை இவர்கள்” என்று கூறினார்.

எந்தச் செய்திக்காக மாநாடு கூட்டினாரோ, அங்கு அதைச் சொல்ல முடியவில்லை. வரமாட்டேன் என்று மறுத்த இடத்தில் அன்னை செய்தி போகிறது. இவர் ஆர்வம் சரியானது. பார்வை மந்தம். எனவே அன்னை தம் போக்கில் தம் செய்தி பரவ வழி செய்கிறார்.

தம்பி - இதை நாம் பல இடங்களிலும் காண்கிறோம். உடல் நலம் குன்றியவரிடம் அன்னையைப் பற்றிப் பேசினால், அவர் வியாதியிருக்கட்டும், அன்னை என் பிரச்சினையைத் தீர்ப்பார்களா எனக் கேட்கிறார். மறுநாள் அவருக்குத் தொழிலில் பெரிய ஆர்டர் வருகிறது. நாம் அவர் வியாதியை முக்கியமாகக் கருதினோம். அவர் தம் பிரச்சினையை முக்கியமாகக் கருதுகிறார். அன்னை தொழிலை முக்கியமாகக் கருதுகிறார்.

ஒரு வக்ரமான முதலாளி. இவருக்கு ஒரு வக்ரமான மானேஜர். வெளிநாட்டார். இவர்களுக்குப் பாசம் என்பதே இருப்பதில்லை. எவரோடும் இந்த மானேஜர் பிரியமாகப் பேசிப் பழகாதவர். முதலாளிக்கு வக்ரமாகச் செய்தி அனுப்பினார். முதலாளி அன்னை முறையைப் பின்பற்றி, நான் கம்பனி விஷயத்தில் வக்ரமாக இருப்பதைப்போல் மானேஜர் என்னிடம் வக்ரமாக இருக்கிறார் என்று எடுத்துக்கொள்கிறேன் என்றார். அடுத்த நாள் மானேஜரிடமிருந்து e-mail வருகிறது. முடிவில் "please come soon. I miss you''. சீக்கிரம் வாருங்கள். உங்களைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று கூறியது. முதலாளி அதைப் படித்துவிட்டு இந்த மனிதன் இச்சொற்களை வாழ்வில் மனைவியுள்பட இதுவரை எவரிடமும் சொல்லியறியாதவர். இது அன்னையின் அதிசயம் என்றார். தொழிலுக்காக முதலாளி மனம் மாறினால் மானேஜர் குணம் அடிப்படையில் மாறுகிறது. இந்தியர்கட்கு ஞானம் உண்டு என அன்னை கூறுகிறார். அந்த ஞானத்தை நாம் புறக்கணிக்கிறோம்.

அண்ணன் - யூவான் சாங் என்ற சீனர் இந்தியாவுக்கு வந்தபொழுது இந்தியா தெய்வீகமான நாடு, எவருமே பொய் சொல்வதில்லை என எழுதியுள்ளார். இன்று நாடு மிகவும் மாறியுள்ளது. கேட்டுப் பெறுவது என்பதை மனிதன் கைவிட்டால், நாடு எப்படியிருக்கும்? மனிதன் அன்னையை எதுவும் கேட்கக் கூடாது என்று நினைப்பது எப்படிப்பட்ட நிலை?

தம்பி - இது உயர்ந்த நிலை என்பதில் ஐயமில்லை. சில உயர்ந்த ஆன்மாக்கள் இதைத் தவறாக எடுத்துக்கொண்டு அன்னையைக் கேட்டுப் பெறும் பாக்கியத்தை இழக்கின்றனர்.

அண்ணன் - இதுபோன்ற உண்மைகளைப் பெற்றோர் குழந்தைகட்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. சொல்லிக் கொடுத்தால் வாராது. குழந்தைகள் பெற்றோர் செய்வதையே செய்யும். மனப்பாடம் செய்வது தவறு எனில், செய்யுளையும் மனப்பாடம் செய்யக்கூடாது என்பதுபோல் தவறு ஏற்படுகிறது. 2000 வரி செய்யுளை மனப்பாடம் செய்வது இலக்கிய ரசனைக்கு அவசியம் என்று ரஸ்ஸல் என்ற மேதை கூறுகிறார்.

தம்பி - கேட்பது குறைவு.

கேட்பது உயர்வு, என்ற இடங்கள் இரண்டும் உயர்ந்தவை என்பதை நடைமுறையில் அனைவரும் அறிவர். என்றாலும் இத்தவறு ஏற்படுகிறது. பொதுவாகக் கேட்பது குறைவு. நெருக்கமான இடத்தில் நெருக்கமானவற்றைக் கேட்டுப் பெற்றால் நெருக்கம் அதிகமாகும் என நாமறிவோம். அங்குக் கேட்காமலிருப்பது நெருக்கத்தைப் பறிக்கும். நண்பர்களை நாம் எப்பொழுது கூப்பிட வேண்டும், எதற்கு நாம் கூப்பிடாமல் அவர்களே வர வேண்டுமென்ற பாகுபாடு நமக்குண்டில்லையா?

அண்ணன் - எத்தனையோ சிறு விஷயங்கள், பெரிய உண்மைகள் அவற்றுள் புதைந்துள்ளன. அங்குச் சிறு மாற்றமேற்பட்டால், பெரியது சிறியதாகிவிடும். பிரசாதம் வருவது நம் மனநிலையைப் பொருத்தது. ஆபீஸ் சுணக்கம் என அறிவது பிரசாதத்தை நம் மனத்திலிருந்து பிரிப்பதாகும். இந்த உண்மைகளை எல்லாம் அறிந்து பின்பற்றாமல் அன்னை வழிபாடு ஜீவனற்றுப் போகும். முறைகள் அவசியம், ஆனால் ஜீவனற்றவை.

தம்பி - ஜீவனோடு அவசியமாகப் பின்பற்ற நமக்கு மனதில் ஜீவன் வேண்டும். ஜீவனற்றவர் தீவிரம்தான் நாம் காணமுடிவது. பொதுவாகத் தீவிரம் இருக்காது. இருந்தால் ஜீவனற்றவர்க்கே அதிருக்கும். அன்னைக்கு அடிப்படையே ஜீவனாயிற்றே. திருடுபோனால் எவ்வளவு நஷ்டம் என நினைக்கலாமா? நம் வீட்டில் சிறு துரும்பும் திருடு போகலாமா? திருடு போனால், அங்கு அன்னையிருப்பாரா? ஜெயிலுக்குப் போவதைப் போலன்றோ திருடு போவது? அன்னையை அறியும் மனிதன் மனிதப்பிறவியில் அற்புதமானவன். அறிமுகமானபின் அன்னையை ஜீவனோடு வழிபடுதல் என்பது எவ்வளவு பெரிய விஷயம்?

அண்ணன் - 18 வால்யூம்களில் அன்னை பேசியவை வெளிவந்துள்ளன. அன்னை நூற்றாண்டு, 1978க்கு முன் இவையில்லை. இந்நூலை வாங்குபவர் குறைவு. வாங்கினாலும் படிப்பவர் குறைவு. இந்தியாவில் எந்த ஆசிரமப் பரம்பரைக்குமில்லாத வசதி, பாக்கியம், நமக்கிருக்கிறது. அனுபவிப்பவர் எத்தனை பேர்?

தம்பி - படிப்பவர்களில் எத்தனை பேர் நுணுக்கத்தை அறிகின்றனர்? ஏற்கனவே தமிழில் புத்தகங்களில்லை. இப்பொழுது பல வந்துள்ளன. படிப்பவர் குறைவு. வாழ்வில் அடிப்படை மாற்றம் வாராமல் அன்னை நம்மிடம் நிரந்தரமாகத் தங்கமாட்டார்.

அண்ணன் - சாதாரண மக்களுக்குப் புத்தகம் பயன்படாது. ஒரு குடும்பம், ஒரு நண்பர் குழாம் இதுபோல் ஜீவனோடிருந்தால் அதைப் பார்த்துத் தெரிந்து கொள்வார்கள். அது போன்ற Mother's Family அன்னை குடும்பமில்லையே. படித்தவர்களே, படித்துப் புரிந்துகொள்வதைவிட, பார்த்துப் புரிந்து கொள்வது அதிகம். ஆசிரமத்தில் அப்பழக்கங்களை நம்மவர்கள் காண்பதில்லை. சொஸைட்டிக்கு வருபவர்கட்கும் கண்ணில் நல்ல பழக்கங்கள் படுவதில்லை. மனிதர்கள் அன்பர்களாக அன்பாயிருப்பதைவிட வக்ரமாக, கர்வமாகப் பராமுகமாக, எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் பழகுகிறார்கள். சண்டை போடுகிறார்கள். பொருள்கள் திருடு போகிறது. பொறுப்பில்லாமலிருக்கிறார்கள். வருபவர்கள் இவற்றையே காண்பதால், அன்னையின் சிறப்பை அறிய வழியில்லை.

தம்பி - ஆபீசிலிருப்பவர்களை கண்டித்தும் இது நடக்காது. சம்பளம் வாங்குபவர்கள் கணக்கில் சேரமாட்டார்கள். அன்பர்களைக் கண்டிக்கக்கூடாது. அப்புறம் என் செய்வது? இந்த நிலையில் சமூகத்தின் பழக்கங்கள் வந்துவிடுகின்றன. பணக்காரன் முக்கியமாகிவிடுகிறான். அது நமக்கு உதவாது.

பணக்காரன் முக்கியமானால், அன்னை அங்கில்லை.

அண்ணன் - அது மட்டுமன்று. நம் சமூகத்தில் வாழ்வுக்குரிய குறைகள் ஏராளம். அவை அன்பர்களிடம் வரக்கூடாது. நம்மிடையேயுள்ள நல்லன ஏராளம். அவையே அன்னைக்கு ஒத்து வாரா. பின் எதுதான் ஒத்து வரும்? எப்படிச் சாதாரண மக்கள் புரிந்து கொள்வார்கள்? படித்துப் புரிந்து கொள்ளலாம். அதைப் பலரும் செய்வதில்லை.

படிப்பாலும் பல விஷயங்கள் புரிவதில்லை. பார்த்துப் புரிந்து கொள்ள உதாரணமில்லை. நம் வீட்டைப் பார்த்து யாராவது இது அன்பர்கள் வீடு என்பார்களா? படங்கள்தானிருக்கின்றன. வேறெந்த அன்னைக்குரிய சுவடு இங்குள்ளன?

இனிமையான சொல், நல்லெண்ணம் நிறைந்த செயல் நம் வீட்டில் காணமுடியுமா?

தம்பி - பல விஷயங்களை நாம் பொருட்படுத்துவதில்லை. தவற விட்டுவிடுகிறோம். அதில் Mother's Joy அன்னையின் ஆனந்தம் ஒன்று. வருத்தமாக இருக்கும்பொழுது அன்னையை அழைத்தால் வருத்தம் குறைந்து மறைகிறது. அதுவே போதும் என்றிருந்துவிடுகிறோம்.

அண்ணன் - Mother's Joy என்பது அதில்லையே. அது வருத்தத்திற்கு எதிரான சந்தோஷம். மனிதனுக்குரியது. அன்னைக்குரியதன்று. வருத்தம் போனபின், வருத்தம் திருவுருமாறி சந்தோஷமாவதே Mother's Joy அன்றோ?

தம்பி - நானும் அதைத்தான் சொல்ல விரும்புகிறேன். நாம் வருத்தம் வரும்பொழுது அது போனால் போதும் என நினைக்கிறோம். தொடர்வதில்லை. எல்லாப் பக்தர்களும் அதை அனுபவித்துள்ளார்கள். அதுதான் இது என அறிவதில்லை. விபரமும் தெரிவதில்லை. பொருட்படுத்துவதுமில்லை.

அண்ணன் - நம் வீட்டில் அன்னை அறையில் சூழலைப் பார்த்தவர் எத்தனைப் பேர் அதைப் பாராட்டியுள்ளனர்? அது போலிருந்தால் தியானம் நன்றாக இருக்கிறது என்றுதான் நான் நினைப்பது வழக்கம். ஒரு "புண்ணியாத்மா'வால் எனக்கு அந்த ஞானம் ஏற்பட்டது. நான் என் பிறந்த நாளைக்கு அன்னையைப் பார்க்கச் சென்றால் கூடவே எதிர் வீட்டு மாமா அந்த நாளில் வருவார். அது தரிசனமாக இருக்காது. சப் என்றிருக்கும். சில சமயங்களில் தொந்தரவும் வரும். அவர் பெரியவர் என்பதால் உதறவில்லை.

தம்பி - உங்களுக்கு ஒரு மாமா. மையம் நடத்துபவருக்குப் பல நண்பர்கள். தரிசனம், தரிசனமாக இருக்காது. ஏதோ கல்யாணத்திற்குப் போவது போலிருக்கும்.

அண்ணன் - எதிர் வீட்டு மாமா தம் சொத்தை அழித்தவர். அவரை அவர் உறவினர்கள் எவரும் சேர்ப்பதில்லை. அவர்கள் வீட்டிற்குப் போனால், சாப்பிடும்வரை உபசாரம் செய்வார்கள். சாப்பாடு முடிந்தவுடன் "வீட்டிற்குப் போய் காரியத்தைக் கவனி. இங்கெல்லாம் வராதே" என்பார்கள். எவரும் அவரைச் சேர்ப்பதில்லை. நம்மை வந்து தொந்தரவு செய்கிறார். இதற்கு அன்னை என்பது சாக்கு.

தம்பி - இதெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாது. இதற்கு மேலே அவருக்கு நல்ல பழக்கம் அதிகம். மனம் நேர்மாறு. கெட்ட எண்ணம், விஷம். அவர்களைச் சேர்ந்தவருக்குத் தெரியும் என்பதால் எங்கேயும் வர அனுமதிப்பதில்லை.

அண்ணன் - ஒரு பிறந்த நாளைக்கு நான் அன்னையைத் தரிசிக்க முடியவில்லை என்பதால் எதிர் வீட்டு மாமா ஊருக்குப் போய்விட்டார். நான் நம் வீட்டிலேயே நாள் முழுவதும் தியானம் செய்தேன். அன்னையின் தங்கமயமான ஜோதியைக் கண்டேன். அன்னையை நேரில் தரிசித்தபொழுதுகூட நான் அதைக் கண்டதில்லை. இது மாமா கொடுத்த பரிசு. இதனால் அன்னையைத் தரிசிப்பதைவிட நம் வீடே உயர்ந்தது என்று கூற முடியுமா? இதிலுள்ள உண்மையை நாம் காண முடிகிறதா? கண்டால் பாராட்ட முடியுமா?

தம்பி - உங்களுக்கு ஒரு மாமா தொந்தரவு செய்தார். இந்த மையம் நடத்துபவருக்கு இதேபோல் தொந்தரவு வந்து ஆசிரமமே போகமுடியவில்லை. அவர் துர்அதிர்ஷ்டம், அவரிடம் பலரும் பழக ஆரம்பித்தனர். இவருக்கு முதலில் புரியவில்லை. அன்னையோடு நெருங்கியவர் இவரிடம் பழக ஆரம்பித்ததைப் பேர்அதிர்ஷ்டமாகக் கொண்டார். ஆனால் விஷயம் வேறு மாதிரியாக இருக்கிறது. அவர்களில் பலர் வீட்டிற்குச் சாப்பாட்டிற்கு அழைத்தனர். இவரால் எங்கும் போக முடியவில்லை. எவர் வீட்டிலும் சாப்பிட முடியவில்லை. இவர்களில் யாருக்கும் அன்னை மீது நம்பிக்கையில்லை எனத் தெரிந்து மனவேதனைப்பட்டார். இவர்கள் அன்னையை ஸ்தாபனத் தலைவராகப் பேசுகிறார்களே தவிர, நமக்கெல்லாம் உள்ள நம்பிக்கையுமில்லை. யாருக்குமே அன்னை அனுபவமில்லை. பிரார்த்தனை பலித்தது என்பதே இவர்களுக்கு குறைவு, இல்லை எனலாம். எவர் முகத்திலும் களையில்லை. சிலர் முகம் கோரமாக இருக்கிறது.

அண்ணன் - மைய நிர்வாகி ஏன் இவர்களை நாடுகிறார்? அது அவசியமில்லையே. சமாதிக்குப் போய் வர வேண்டியது தானே?

தம்பி - அதுதான் இவரால் முடியவில்லை. இவர்கள் தொடர்பை இவர் விட்டாலும், அவர்கள் விடுவதாயில்லை. ஒரு நாள் வீட்டில் தியானம் செய்யும் பொழுது சமாதி தெரிந்தது. சமாதியைச் சுற்றிக் கோர உருவங்கள் வலம் வருகின்றன. இவர் பயந்து போய்விட்டார். இவரைத் தாக்குகின்றன. இவற்றிற்கெல்லாம் என்ன அர்த்தம்? எப்படி நாம் செயல்படுவது என்று தெரியாமல் தவித்தார்.

அண்ணன் - எனக்கும் அந்த அனுபவமுண்டு. மாமா உடன் வரும் பொழுது - அவர் ஒரு நாள் தவறாமல் என்னோடு வருவார் - சமாதிக்குப் போனால் மயக்கம் வருகிறது. அப்படியானால் சமாதி மயக்கம் தருகிறதா? புரியவில்லையே.

தம்பி - எனக்கு இவையெல்லாம் தெரியாதே. அப்புறம் என்ன செய்தீர்கள்?

அண்ணன் - மயக்கம் மாமாவிடமிருந்துதான் வருகிறது என்று எனக்குப் புரிய நாளாயிற்று. புரிந்தபின் மாமா என்னை விட்டுப் போகப் பிரார்த்தனை செய்தேன், போய்விட்டார்.

தம்பி - ஏன் மாமாவிடமிருந்து மயக்கம் வருகிறது?

அண்ணன் - நான் சமாதிக்குப் போவது அவருக்குப் பிடிக்கவில்லை. அந்தக் கெட்ட எண்ணம் எனக்கு மயக்கமாக வருகிறது.

தம்பி - மைய நிர்வாகியால் அது முடியவில்லை. சமாதியைச் சுற்றி இவரை எதிர்பார்த்து பலரிருக்கிறார்கள். அவர்கள் தியானத்தில் கருப்பாகத் தெரிகிறார்கள். இந்த ஆராய்ச்சி எல்லாம் நமக்கெதற்கு? என்று அவர் சமாதிக்குப் போவதில்லை.

அண்ணன் - ஸ்தாபனம் வேறு, அன்னை வேறல்லவா? பெரிய லட்சியங்களை நிலைநிறுத்த ஏற்பட்ட ஸ்தாபனங்கள்  மதம், அரசியல் கட்சி  லட்சியத்திற்கு எதிராகப் போவது சரித்திரம்! எல்லா மத ஸ்தாபனங்களும் அதுபோல் உலகில் கறுப்பு சக்திகட்கிரையாயின என அன்னை கூறுகிறார். அதுவே இங்கும் நடந்தால், நமக்கு ஸ்தாபனத்தோடு தொடர்பு கொள்ள முடியாது. நமக்கு அன்னை வேண்டும். அன்னையைப் பெற ஆசிரமம் செல்வது சரி. ஏதாவது காரணத்தால் அங்கு போக நமக்குத் தடையாக இருக்கிறது என்றால் அன்னையை வீட்டிலிருந்தே வழிபடுவோம். இந்தக் கறுப்பு சக்திகளுக்கு நாம் பலியாகக் கூடாது.

அன்னை அருளாகும். சுற்றியுள்ள கறுப்பு ஆபத்து. அன்னையை வீட்டிலிருந்தே வழிபடுவோம், என்பதே என் முடிவு.

தம்பி - நமக்கு நேர் எதிரிகளையும், அன்னைக்குத் துரோகம் செய்தவர்களையும், அன்னைமீது நம்பிக்கையில்லாதவரையும், முகம் பேயறைந்தது போலுள்ளவரையும் காண்பது ஆபத்து. எக்காரணத்திற்காகவும் அவர்கள் பார்வையில் படுவது ஆபத்து. தவிர்க்க வேண்டும்.

அண்ணன் - அன்னையை அறிந்த புதிதில் நடப்பவை பிறகு நடப்பதில்லை. ஏன் என்று தெரியுமா?

தம்பி - எனக்கு வெகு நாட்களாக அது புரியவில்லை. சமீபத்தில் ஒருவர் அதை எனக்கு எடுத்துச் சொன்னார்.

அண்ணன் - எனக்குப் புரியுமாறு சொல்ல முடியுமா?

தம்பி - Personality, organised personality இரண்டும் புரிந்தால் விளங்கும்.

அண்ணன் - பார்வைக்குக் கம்பீரமானவரை நல்ல personality என்கிறோம்.

தம்பி - அதை ஆங்கிலத்தில் person என்பார்கள். Personality என்பது characterஐவிடப் பெரியது.

அண்ணன் - நடத்தையைத்தானே சொல்கிறாய்?

தம்பி - சுபாவம் என நாம் கூறுவது character எனப்படும். சுபாவம் மாறாதது. திறமை, நாணயம், பொறுமை, நிதானம், (பழக்கம் நடத்தையுள்பட) சேர்ந்தது character.

அண்ணன் - Personalityயும் characterஉம் வேறா? ஒன்றா?

தம்பி - தெரிந்ததைத் திறமையாகச் செய்வது character. தெரியாததைத் தெரிந்ததன் மூலம் சொந்தமாக, புதியதாகச் செய்யும் திறன் personality. ஒரு வியாபாரம் செய்பவன், அதையே வேறிடத்தில் பெரியதாகச் செய்வது character. வியாபாரத்திலிருந்து அரசியலுக்குப் போனால் எல்லோராலும் சமாளிக்க முடியாது. திறமை இரண்டிற்கும் ஒன்றன்றோ? வியாபாரத்தில் பெற்ற திறமையைக் கொண்டு அரசியலை நடத்த முடிவது personality.

அண்ணன் - அன்னைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

தம்பி - அவர் எனக்குச் சொன்னதை நான் திரும்பச் சொல்கிறேன். Character, personality என்பனவெல்லாம் நம் ஜீவனை ஒருவழியாக நிர்ணயித்துவிடுகின்றன. அது organised personality ஆகும். அது fixed மாறாது. அன்னை சக்தி அது வழியாகச் செயல்படாது, படமுடியாது.

அண்ணன் - அன்னை fresh விழிப்பாக இருக்க வேண்டும் என்கிறாரே? ஒரு lineக்கு போய்விட்டால் அது மாற முடியாதன்றோ? எப்படி அங்கு அன்னை செயல்பட முடியும்?

தம்பி - நம் ஜீவனில் பெரும்பகுதி இதுபோல் இறுகிப் போகிறது. மீதியுள்ளது unorganised portion. அன்னையிடம் வந்தவுடன் அன்னை இதன் மூலமாகச் செயல்படுகிறார்கள். பெரும் பலன் வருகிறது.

அண்ணன் - இந்த unorganised portion முடிந்தபின் நாமே முயன்று மாறினால் மட்டுமே அன்னை செயல்படமுடியும். நம்மால் மாற முடிவதில்லை. ஓஹோ, அதனால்தான் மனமாற்றம் வரும்பொழுது பலன் ஏராளமாக இருக்கிறதா? இதுதான் ரகஸ்யமா?

தம்பி - இது புரிந்தவுடன் அன்னை கேட்காமல் கொடுக்கிறார் என்று புரிந்தது. நம் unorganised ஜீவனுக்குக் கேட்கத் தெரியாது. ஆனால் ஆசைப்படத் தெரியும். அதன் மூலம் அன்னை செயல்படுகிறார். பழைய ஆசைகள் பூர்த்தியாகும் முறை இதுதான் என அவர் எனக்கு விளக்குகிறார்.

அண்ணன் - நம்மால் அதிகபட்சம் பெற முடிவதை இந்த organised
portion நிர்ணயிக்கிறது என்பது இப்படித்தானா?

தம்பி - எந்த அளவுக்கு நாம் இயல்பாக நல்லவராக இருக்கிறோமோ அந்த அளவு அன்னை பலிக்கிறார். அதனால் கெட்டதிலிருந்து நல்லதிற்கு மாறுவதே முதல் வேலை. கெட்டதேயில்லை என்றும் பகவான் கூறுகிறாரே?

அண்ணன் - பாஸிட்டிவ், நெகட்டிவ், நல்லது, கெட்டது என்பதை வேண்டியது, வேண்டாதது என்று கொண்டு, தீமை விலக்கப்பட வேண்டும் என்கிறோம். பகவான் தீமை விலக்கப்பட வேண்டியதில்லை, மாற்றப்பட வேண்டியது என்கிறார்.

தம்பி - விலக்கிவிட்டால், மாற்றவேண்டிய அவசியமில்லையே.

அண்ணன் - நாம் தீமையை வேண்டாதது என்கிறோம். தீமை அவசியமான பகுதி, நன்மை பயன்படுத்தக்கூடிய பகுதி. தீமை உடனே பயன்படாது. ஆனால் மாற்றினால் பயன்படும் என்கிறார். அவர் கூறுபவை,

 • நன்மை ஒரு பகுதி.
 • தீமையை விலக்கினால் மற்றொரு பகுதியை இழந்துவிடுகிறோம் என்பதன்று; தீமை நன்மையுடன் மறைவாகக் கலந்திருப்பதால் தீமையை விலக்கினால் நன்மையும் விலகும் என்கிறார்.
 • தீமை பணம் போன்றது; நன்மை பொருள்கள் போன்றன.
 • பணத்தை மாற்றினால் பயன்படும், நேரடியாகப் பயன்படாது.
 • தீமை நன்மையைவிடப் பெரியது. book | by Dr. Radut