Skip to Content

பகுதி 3

11. ஆனந்தம் - கேள்வி 

பிரம்மம் என்பதையோ, சத் என்று கூறுவதையோ நாம் சிருஷ்டிக்கு ஆரம்பம் எனக் கொள்வோம். பிரம்மத்தையே முடிவு எனவும், அனைத்தும் எனவும் கூறலாம். பிரம்மம் என்றால் தன்னை அறிந்தது எனப் பொருள். தன்னையறிவது ஜீவியம். இந்த ஜீவியம், அதன் ஜீவனிலிருந்து பிரிந்ததன்று. பிரிக்க முடியாதது. பிரம்மம் ஜீவியத்தின் சலனத்தால், சக்தியாக வெளிவருகிறது. இது சிருஷ்டித் திறனுள்ளது. சக்தி, ரூபம், உலகங்களைச் சிருஷ்டிக்கவல்லது. இவற்றையெல்லாம் நாம் ஏற்றுக் கொண்டாலும், ஒரு கேள்வி பாக்கியாக இருக்கிறது. அதற்கு விடை தேவை. ஏன் பிரம்மம் சக்தியாக வெளிப்பட வேண்டும்? ஏன் இந்த ஜீவிய சக்தி ரூபங்களாலான உலகை சிருஷ்டிக்க வேண்டும்? பிரபலமான பதில் ஒன்றுண்டு. அது சக்தியின் இயல்பு என்பது அப்பதில். சலனம் இருப்பதால் சிருஷ்டிக்கின்றது. உருவகம் உருவத்தை உண்டு பண்ணுகிறது என்கின்றனர். ஏற்கனவே நாம் இப்பதிலை மறுத்துவிட்டோம். பிரம்மத்திற்குச் சலனம் உண்டு, உருவகம் உண்டு என்பது உண்மை. ஆனால் அவற்றால் பிரம்மத்தைக் கட்டாயப்படுத்த முடியாது. பிரம்மம் சுதந்திரமானது. அதற்கு அசையும் உரிமையுண்டு என்பதுபோல் அசையாமலிருக்கவும் உரிமையுண்டு. ரூபங்களை உற்பத்தி செய்வது பிரம்மத்தின் உரிமை என்பதுபோல், அந்த உரிமையைச் செயல்படுத்தாமலிருக்கவும் பிரம்மத்திற்குச் சுதந்திரம் உண்டு. அதுவே உண்மையானால் சலனம், ரூபம் இரு குணங்களைத் தன் இஷ்டப்படி வெளிப்படுத்துகிறது. அதற்குக் காரணம் என்று ஒன்று இருந்தால் அது ஆனந்தமாகவே இருக்க முடியும்..

வேதாந்தம் சத் என்பதைக் கண்டது. சத் என்பதே ஆரம்பம், ஆதி. அது வறண்டதன்று. அதற்கு ஜீவியமுமில்லை. ஜீவியம் முரட்டு சக்தி உடையதும் இல்லை. சத் என்பது ஜீவியமுள்ள ஜீவன். அது ஆனந்தமயம் ஆனது. இது பிரம்மமான சத் என்பதால், சூன்யம் என்பதற்கு வழியில்லை. ஜீவியமற்ற இருளுக்கும் வழியில்லை. குறை என்பதில்லை. திறனில்லை என்பதில்லை. ஆனந்தமில்லை என்பதுமில்லை. சூன்யம், ஜீவியமற்ற நிலை, ஆனந்தமற்ற நிலைகளில் எது இருந்தாலும், அது பிரம்மமாகாது. ஜீவியம் உள்ள சத்தின் பிரம்மம் என்பது அளவிறந்த ஆனந்தமயமான ஜீவியமுள்ள சத்தாகும். சத் என்பதும், ஜீவியம் என்பதும், ஆனந்தம் என்பதும் ஒன்றின் மறு பெயர்கள். அளவில்லை என்பது ஆனந்தம். முடிவில்லை என்பதும் ஆனந்தம். பிரம்மம் என்பதே ஆனந்தம். மனிதனின் சிறு வாழ்விற்கும் இந்த அனுபவம் உண்டு. அதிருப்தி என்பது அளவு, தடை. இல்லை என்பதைப் பெறுவது திருப்தி. அளவைக் கடப்பது சந்தோஷம். தடையை உடைப்பது ஆனந்தம். இந்த அம்சம் இருப்பதற்குக் காரணம் நம் ஜீவனின் ஆதி பிரம்மம். அந்த ஜீவனுக்கு முடிவற்றது சொந்தம். சுய ஜீவியமும், சுயமான சக்தியும் அதற்கு அளவில்லாமல் உண்டு. சுயமான ஆட்சி அதற்குண்டு. சுயமான ஆட்சிக்கு சுயமான ஆனந்தம் எனப் பெயர். சிருஷ்டி சுயமான ஆட்சியை ஸ்பர்சித்தால் அந்த அளவில் அதற்கு ஆனந்தமுண்டு. அதுவே சிருஷ்டிக்குரிய திருப்தி. தன் ஜீவனை பிரம்மம் சுயமாக அறியும். சுயமாக அறிவது பிரம்மம் ஆனது. அசைவோ, சலனமோ இல்லாத ஆட்சி மட்டும் பிரம்மத்தின் சுய ஆனந்தமில்லை. அதன் ஜீவிய சக்திக்கு முடிவற்ற ரூபங்களை சிருஷ்டிக்க முடியும். ரூபங்கள் மாறும். மாறுவதற்கு அளவில்லை. ஆனந்தம் அதனுடை- யது. அது சுய ஆனந்தம். அதற்குச் சலனமுண்டு. அவ்வானந்தமும் மாறும்.

ஆனந்தம் அளவற்று அசையும். அசைவும் மாறக்கூடியது. இவை கோடிக் கணக்கான பிரபஞ்சங்கள். இது லீலை. அதனின்று முடிவற்ற சலனம் முழுமாற்றத்துடன் எழும். அவை ஆனந்த ரூபங்கள், அளவிறந்து மாறுபவை. ஆனந்தத்தை அனுபவிப்பது இலட்சியம். சக்தியின் லீலை பரந்தது, சிருஷ்டித்திறனுள்ளது.

சச்சிதானந்தம் சத்-சித்-ஆனந்தம். அவை வெவ்வேறான மூன்றல்ல.

ஒன்றின் மூன்று அம்சங்கள். அதன் ஜீவியம் சிருஷ்டிக்கும். தன்னை வெளிப்படுத்தும் சக்தி அது. முடிவற்ற நிகழ்ச்சிகளாகும் தன்மையுடையது. அதன் ரூபங்கள் சுயஜீவிய ஜீவனுடையவை. முடிவற்ற மாற்றம் அதன் தன்மை. மாறும் ஆனந்தத்தை சச்சிதானந்தம் அனுபவிக்கிறது. சச்சிதா- னந்தம் தவிர உலகில் மற்றவையில்லை. அவை சத்தின் மறு ரூபங்கள் அல்லது ஜீவியத்தின் வேறு உருவங்கள். நாம் காணும் மாறுபடும் ரூபங்கள் அந்த மாறாத ஒன்றின் மாற்று உருவங்கள். பெரியது ஒன்று, அது அகண்டம், அனந்தம். அது அளவற்ற கண்டமாக, அந்தமாக, சிறியதாக மாறும். சச்சிதானந்தம் மாறாதது எனவும், அனைத்தையும் தன்னுட் கொண்டது எனவும் நாமறிவோம். சச்சிதானந்தம் என்பது ஆனந்தம். சத்தின் சுய ஆனந்த ரூபம். உலகில் நாமறிவனவெல்லாம் ஒன்றின் மாறிய ரூபங்கள். ஜீவனுள்ள சக்தி அவற்றுள் உறைகிறது. ஒவ்வொன்றிலும் அது உறைகிறது. நாம் ஒன்றை அதுவாக அறிவது அதனுள் ஜீவனுள்ள சக்தி உறைவதால் தான். மாம்பழத்தை நாம் மாம்பழமாக அறிவதற்குக் காரணம் அதனுள் ஆத்மா இருப்பதால்தான். அதேபோல் உலகில் உள்ள அனைத்தும் ஆனந்த மயமானது. வைரம் வைரமாக இருப்பதற்கு அதனுள் உறையும் ஆனந்தமே காரணம்.

இதுவே வேதாந்தம் கூறும் சிருஷ்டியின் தத்துவம். மனம் உடனே இரு கேள்விகளை எழுப்புகிறது. அவை பலமான இரு முரண்பாடுகள். உணர்வும் உடலும் பெறும் வலி ஒன்று. அடுத்தது தவறு, தீமை, கொடுமை என்ற தர்ம நியாயம். உலகம் சச்சிதானந்தம் என்கிறோம். அப்படியானால், சத் என்பது ஜீவியம். அதேபோல் சத் என்பது ஆனந்தமாகிறது. வலி, கவலை, துன்பம் உலகெங்கும் மலிந்துள்ளது. அவற்றை எப்படிப் புரிந்துகொள்வது? இவ்வுலகைத் துன்ப லோகமாகக் காண்கிறோம். நம் தத்துவம் இதை ஆனந்த லோகமாக்கக் கூறுகிறது. அதனால் தவறு அல்லது மிகைப்படுத்திக் கூறுதல் உளது. பார்வையில் தவறுள்ளது. நாம் உலகை உணர்விலிருந்து விடுபட்டு

அறியலாம். சரியாக அறிய முயலலாம். அது நம் கண்ணோட்டமாக இருக்கலாம். உணர்ச்சியை விட்டு விலகி அறிந்ததாக இருக்கலாம். அப்படிப் பார்க்கும்பொழுது உலகில் துன்பத்தைவிட இன்பம் அதிகமாக இருக்கிறது என்று தெரியும். உலகின் இன்பங்களைத் தொகுக்கலாம். துன்பங்களையும் தொகைப்படுத்தலாம். இன்பத்தின் தொகை, துன்பத்தின் தொகுப்பைவிட அதிகம் எனத் தெரியும். தனிப்பட்டவர் சிலர் வாழ்வில் துன்பம், இன்பத்தை விட அதிகமாக இருக்கலாம். நம் இயல்பான சுபாவம் சுறுசுறுப்பானதும், அமைதியானதுமாகும். அது மேலே அல்லது உள்ளேயிருக்கும். என்றாலும் அத்தனையும் இன்ப அனுபவங்களே. வலி என்றும் உள்ளதன்று. அது விலக்கு. நமது இயல்பான நிலை இல்லாவிட்டால் வலி எழும். இயல்பான வாழ்வுக்கு மேலேயுள்ளது அது. இன்பத்தைவிட துன்பம் நம்மை பாதிப்பதற்குக் காரணம், வலி எப்பொழுதாவது வருவதேயாகும். இன்பத் தொகுப்பு நமக்கு அதிக அனுபவமாகும். வலி நமக்குச் சிறிய அனுபவம். என்றோ எழும் வலி இயல்பான சந்தோஷத்தை விட அதிகமாகப் பாதிப்பது இயற்கையன்றோ! நாம் அனுதினமும் அனுபவிக்கும் இன்பம் கண்ணில் படுவதில்லை. அதை நாம் பொக்கிஷமாகக் கருதுவதில்லை. உடல் இன்பம் தீவிரமாகி சந்தோஷமாகும். அப்படி உயரும் உணர்வு நமக்குத் தெரிகிறது. அந்நிலையில் அது பூரிப்பாகும். நாம் அதை ஆனந்தம் என்கிறோம். அதனால் ஆனந்தத்தை நாடுகிறோம். நாம் வாழ்வில் காணும் திருப்தி நடுநிலைக்குரியது. வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளினூடே நம் திருப்தி நிலவுகிறது. அதற்குக் குறிப்பிட்ட நிகழ்ச்சியோ, பொருளோ தேவையில்லை. நடுநிலையான வாழ்வு இன்பமோ, துன்பமோ தருவதில்லை. அதுபோன்ற வாழ்வு யதார்த்தம். அவ்வாழ்வு உயிரைக் காப்பாற்றும். அது பொது. பிரபஞ்சம் முழுவதும் பரவியது. நாம் அதை நாடுவதில்லை. நமக்கு இன்ப, துன்பங்களுக்குரிய வரவு, செலவு கணக்குண்டு. இன்பம் வரவு, துன்பம் செலவு. உள்ளமும், உடலும் உணரும் வரவும் செலவுமாகும் அந்தக் கணக்கு. என்றும் உள்ள நிரந்தரமான நிலை அக்கணக்கில் எழுதப்படுவதில்லை. நாம் உணரும் தீவிர இன்பங்களும், உடலை வருத்தும் வேதனையும் உண்டு. அவற்றை மட்டும் கணக்கில் எழுதுவோம். வலி வழக்கத்திற்கு மாறானது என்பதால் நாம் அதைக் கணக்கில் சேர்த்துக்கொள்கிறோம். நமக்கு வலி பொறுக்க முடியாதது. நம் வாழ்வுக்கு வலி துரோக உணர்வு. நம் வாழ்வின் அடிப்படைக்கு அது எதிர். வலி நம்மைத் தாக்குவதாக அறிகிறோம்.

நாம் பேசுவது தத்துவம். என்றோ ஒரு நாள் அனுபவிப்பதால் தத்துவத்தை விளக்க முடியாது. ஏற்றமும், தாழ்வும், என்றும் உள்ளதைப் பாதிக்காது. ஏதோ ஒரு சமயம் வருவதும் கணக்கில் சேராது. கூடவா, குறைவா, இருப்பதே கேள்வி. அதற்கு விளக்கம் தேவை. அனைத்தும் சச்சிதானந்தமானால், வலி எப்படி எழும்? வேதனை எங்கிருந்து உற்பத்தி ஆகிறது? இதுவே கேள்வி. தர்மம் வரும்பொழுது குழப்பம் வருகிறது. அது பொய்யான பிரச்சினை. கடவுளை நாம் நம் போன்ற ஒருவராகக் கருதுவதால், வலி கேள்வியாகிறது. உலகைக் கடந்தவர் கடவுள் என்றால் பிரச்சினை, சிக்கலாகிறது. இது பகுதியான கேள்வி.

சச்சிதானந்தம் கடவுள். சச்சிதானந்தம் தன்னையறியும் புருஷன். அதுவே சிருஷ்டிக்கர்த்தா. அவருடைய உலகில் அவர் படைத்த மனிதனுக்கு எப்படி வேதனையை அவரால் சிருஷ்டிக்க முடியும்? கொடுமைக்கு உத்தரவு அளிக்க முடியும்? கடவுள் நல்லவர் எனில் தீமையைப் படைத்தவர் யார்? வலிசோதனை என்றாலும், வேதனை என்றாலும் தர்மத்திற்குப் பதில் கிடைக்காது. அதை ஏற்றால் கடவுளுக்குத் தர்மமில்லை. அல்லது கடவுள் தர்மத்தைக் கடந்தவர் என்றாகும். உலகை நடத்தும் என்ஜினீயராகவோ, அல்லது சித்ரவதையைக் கண்டுபிடித்தவராகவோ கடவுள் ஆவார். அன்பும், நன்மையும் உருவானவராகமாட்டார். கடவுள் பலம் பொருந்தியவராவார். அவர் சட்டத்திற்குக் கீழ்ப்படியலாம், அல்லது அவரைத் துதிக்கலாம். கடவுள் கொடுமையை வதை செய்ய உற்பத்தி செய்தவரானால், அவர் கொடுமை ஆனவர். அவருக்கு உணர்வோ, கருணையோயில்லை. கடவுள் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவரெனில், அவர் மனிதர்களைவிட மட்டமானவர். மனிதர்களில் சிறந்தவரைவிட மட்டமானவர் என்பது உண்மை. வலி அநியாயத்தின் பரிசு என்று நாம் கூற முடிவு செய்வோம். இயற்கையான தண்டனை என்கிறோம். அப்படிக் கூறினாலும், அதன் மூலத்திற்குப் பதில் இல்லை. யார் வலியை ஏற்படுத்தியது? ஏன் ஏற்படுத்தினார்கள்? தண்டிக்க வேண்டிய அநியாயம் எங்கிருந்து வந்தது? இந்த பதில்கள் வாழ்க்கை அனுபவத்திருந்து பார்த்தால் சரியாக இல்லை. போன ஜென்ம பாவத்திற்குத் தண்டனை

என்றால் விளக்கம் சரி. அநியாயம் மனத்தின் வியாதி அல்லது அறியாமை. மனம் வியாதியுற்றால், சித்ரவதை எப்படிக் குணப்படுத்தும்? தண்டனை மிக அதிகமாகவும், கொடுங்கோலாகவும் காண்கிறது. கடவுள் தெய்வம் எனவும், உயர்ந்தவர் எனவும் கூறுகிறோம். கர்மம் தவிர்க்க முடியாதது. இவை இரண்டும் ஒத்துவாரா. எனவே புத்தர் கர்மமில்லை என்றார். அவர் கடவுளை ஏற்கவில்லை. கடவுள் சுதந்திரமானவர் என்றோ உலகை ஆள்பவரென்றோ புத்தர் ஏற்கவில்லை. சுபாவம் அறியாமை என்றார். எனவே கர்மம் கட்டுப்படுத்துகின்றது எனவும் புத்தர் கூறினார்.

கடவுள் நல்லவர், அன்புருவானவர். உலகைக் கடந்த கடவுள் என்ற கருத்தை ஆராய்வோம். அவர் உலகமல்லர். அவர் நன்மை தீமையைப் படைத்தார். அவர் படைப்பான மக்கள் வலியை அனுபவிக்கின்றனர். அவர் எட்ட இருக்கின்றார். அத்துன்பம் அவரைப் பாதிப்பதில்லை. அவர் உலகைக் கண்காணிக்கிறார், ஆட்சி செய்கிறார், அவர் ஆணை செல்கிறது, அல்லது ஆணை செல்லவில்லை. வேதனையில் உழலும், போராடும் உலகுக்காக இத்தனையும் கடவுள் செய்கிறார். உலகைத் தம் சட்டப்படி ஆள்கிறார். அவர் உலகுக்கு உதவுவதில்லை. அக்கடவுள் எல்லாம் வல்லவரில்லை, அன்புருவானவரில்லை, நன்மையே உருவானவருமில்லை. இப்படி நாம் கருதுவது பிரச்சினையைத் தீவிரமாக்குகிறது. உலகைக் கடந்தவர் கடவுள் என்ற தத்துவம் கொடுமையையும் துன்பத்தையும் விளக்க இயலாது. பேச்சு சாதுர்யமாக இருக்கலாம். அது பிரச்சினைக்குரிய பதில் தாராது. அப்பதில் திருப்தியாக இருக்காது. நாம் நேரடியாகப் பதில் கூறவேண்டும். அல்லது கடவுளையும் அவர் செயல்களும் சரி எனக்கொண்டு, அவர் குறைகளைப் பாராட்டக் கூடாது. அது கடவுளாகாது, அசுரனாகும். அது வேதாந்தம் கூறும் சச்சிதானந்தமில்லை. சச்சிதானந்தம் ஏகன், அடுத்தது இல்லை என்கிறது வேதாந்தம். அது அப்படிப்பட்ட சத். இருப்பதெல்லாம் அவனே. கொடுமையிருந்தால் அவன் படைத்த ஜீவராசிகளில் அக்கொடுமையை அனுபவிப்பவன் அவனே. ஜீவராசிகளுள் உள்ளவன் அவனே. ஜீவராசிகளின் துன்பத்தை அவனே அனுபவிக்க வேண்டும். இது பிரச்சினையை மாற்றிக் கூறுவதாகும். கொடுமையும், துன்பமும் அன்புக்கும் நன்மைக்கும் எதிர் ஆனவை. இப்படிக் கருதினால் பிரச்சினை வேறு. எப்படிக் கடவுள் கொடுமையை சிருஷ்டித்தார்? எப்படி அவர் மட்டும் அதிலிருந்து தப்பினார் என்பது கேள்வியில்லை. ஆனந்தமயமான ஆண்டவன் ஆனந்தமற்றதை - கொடுமையை  எப்படி அனுமதித்தார் என்பது கேள்வி.

தர்மசங்கடம் பாதி போய்விடும். தர்மசங்கடத்திற்குப் பதில்லை. இனி அக்கேள்வி எழாது. கடவுள் நம்மைக் கொடுமைக்கு ஆளாக்கினார். அவர் விலகிவிட்டார் என்கிறோம். கடவுள் மனிதனின் தலைவிதியில் பங்கு கொண்டாலும், விலகி நின்றாலும், இது உண்மை. கடவுள் தனக்கே கொடுமை இழைத்துக்கொள்கிறார் என்பது ஓர் அபிப்பிராயம். எப்படிக் கூறினாலும், தர்மம் சங்கடமாகவே இருக்கிறது. இதை வேறு வழியாகக் கூறலாம். ஆனந்தமயமான ஆண்டவன் நன்மையின் நல்லுருவம். அன்பின் திருவுருவம். கொடுமையும், வேதனையும் சச்சிதானந்தத்திற்கேது? கடவுள் யந்திரமில்லை. ஆண்டவன் புருஷன், ஜீவன். கொடுமையை மறுக்கவும், கண்டிக்கும் உரிமையும் உண்டு. இங்கு அடிப்படையான தவறுள்ளது. நாம் பகுதியின் சட்டத்தை முழுமைக்குரியதாக்கினால் தவறு வரும். நாம் அன்பையும் நல்லதையும் ஏற்கிறோம். அதை ஆனந்தத்திற்கும் எடுத்துச் செல்கிறோம். நம் எண்ணங்கள் பிரிவினையில் எழுந்தவை, அவை இரு பகுதிகளாலானவை. ஒருவர் மற்றவரிடம் கொள்ளும் தொடர்புக்கு இந்தச் சட்டங்கள் சரி. இந்தச் சட்டத்தை ஏகனான பரமாத்மாவுக்கும் நாம் செலுத்துகிறோம். பரமாத்மா என்பது எல்லாம். பிரச்சினை எப்படி எழுகிறது எனக் காண்போம். அடிப்படையில் தூய்மையாக பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும். அது பகுதியின் முழுமை, கண்டமான அகண்டம். அது ஒருமை, ஐக்கியமன்று. அதன்படி பகுதியை விளக்கலாம், அவற்றின் வளர்ச்சியை விளக்கலாம். ஒருவர் மற்றவருடன் கொள்ளும் தொடர்பு பிரிவினை, வெறுப்பு, விருப்பு என்பவற்றாலானது..

நாம் முழுமையைக் காண்போம். மனிதப் பிரச்சினை, மனித முன்னேற்றமே நமக்கு முடிவன்று. நாம் தார்மீக உலகில் வாழவில்லை என்று அறிவோம். தர்மம் மனிதன் ஏற்படுத்தியது. இயற்கையை நம் கண்ணோடு பார்க்கிறோம். நம்முடைய தர்ம நியாயப்படி இயற்கையைக் கணிப்பது தவறு,

பிடிவாதமான அறிவீனம் என்கிறார் பகவான். அது குழப்பத்தை விரும்பி நாடுவதாகும். நமக்குப் பழக்கம் முக்கியம். நம் அனுபவப்படி இயற்கையை அறிய முயல்வது தவறு. மனிதச் சுபாவம் அவன் பிறப்பைப் பொருத்தது. அது எப்படி இயற்கைக்குப் பொருத்தம்? அது அவனுக்குச் சரியான கண்- ணோட்டமாகாது. தன்னையறியவோ, ஞானம் பெறவோ அது உதவாது. அதிகபட்சம் அது அறிவுக்குத் தடையாக இருக்கும். ஜடமான பிரகிருதிக்குத் தர்மமில்லை. அதற்குரிய சட்டம் உண்டு. நம் பழக்கப்படி அது செயல்படும். அதற்கு நல்லது கெட்டதில்லை. சிருஷ்டிக்கும் சக்திகள் அதற்கு முக்கியம். வேறொரு சக்தி இவற்றை ஏற்பாடு செய்து, இருப்பதைக் காக்கிறது. அழிவுச் சக்திகளுண்டு. அழிவுக்குப் பாரபட்சமில்லை. அவற்றிற்குத் தர்மமோ, நியாயமோ இல்லை. அவற்றுள் உள்ள இரகஸ்யப்படி அவை நடக்கின்றன. அதற்குள்ள திருப்தி ஊமையின் திருப்தி. அப்படி அவை ரூபம் பெறுகின்றன, அல்லது அழிகின்றன. மிருகங்களுடைய சுபாவத்திற்கும் தர்மமில்லை. மனிதன் பரிணாமத்தால் எழவேண்டிய அஸ்திவாரம் அவர்களுடையது. அதனின்று எழும் உயர்ந்த விலங்கான மனிதனுக்கு தர்மமும், தர்ம உணர்வும் வளர்கின்றன. புலி மானைக் கொன்று தின்பது நமக்குத் தவறன்று. புயல் அழிப்பதையும் நாம் குறை கூறுவதில்லை. நெருப்பு எரிக்கிறது, வதைக்கிறது. அதையும் நாம் கண்டிப்பதில்லை. குறையே தர்மத்தின் ஆரம்பம். நம்மையே நாம் கண்டிப்பதும், குறை கூறுவதும் அது போன்றதே. பிறரைக் குறை கூறுகிறோம். அதே சட்டப்படி நாம் நடப்பதில்லை. இது உண்மையான தர்மமில்லை. சில விஷயங்கள் நம்மைப் பாதிக்கின்றன. அது நமக்குப் பிடிக்கவில்லை. அதனினின்று நாம் விலகுகிறோம். இது நம் தர்மம். இவையனைத்தும் நம் உணர்ச்சி வயப்பட்டவை.

விருப்பு, வெறுப்பே தர்மத்தின் ஆரம்பம். வெறுப்பால் ஒதுங்குவது தர்மமாகாது. மான் புலிக்கு அஞ்சுகிறது. வலிமை மிகுந்த புலி எளிய மான் மீது பாய்கிறது. தனிப்பட்ட வாழ்வின் ஆனந்தத்திற்கு இது ஆபத்து. எனவே மான் பயந்து ஒடுங்குகிறது. மனம் வளரும்பொழுது பயம் மென்மையாகி வெறுப்பாகிறது. அதனால் மறுத்து ஒதுங்குகிறது. ஆபத்தால் நாம் மறுப்பதன்மீது வெறுப்பு எழும். மற்றவை நமக்கு திருப்தி தரும். நாம்

அவற்றை ஏற்கிறோம். இவ்வுணர்ச்சிகள் மனதில் நன்மை, தீமையாக உருவாகின்றன. இவை சமூகத்திற்கோ, தனி மனிதனுக்கோ நல்லது. இதிலிருந்து பிறந்ததே தர்மம், நியாயம், நன்மை, தீமை. நாம் இவற்றைக் கொண்டு பிறரைக் கணிக்கிறோம். நமக்கு இவற்றைப் பயன்படுத்துவது இல்லை. ஆனால் எங்கும், எப்பொழுதும் அடிப்படையான சுபாவம் மாறுவது இல்லை. மனிதனுக்குத் தன்னை வெளிப்படுத்த வேண்டும். தான் வளரவேண்டும். சித்-சக்தி அவனுள் இருக்கிறது. அது அவனுக்குத் திருப்தி தரும் செயல். அது முன்னேற்றம். அதுவே மனிதனுக்கு அடிப்படையான ஆனந்தம். எது அவன் வளர்ச்சிக்குத் தடை செய்கிறதோ, தன்னை வெளிப்படுத்துவதற்குத் தடையாக இருக்கிறதோ, தன் திருப்திக்கும், முன்னேற்றத்திற்கும் ஊறு செய்கிறதோ, அது அவனுக்குத் தீமை. எது அவன் செயலை உயர்த்துகிறதோ, உறுதிப்படுத்துகிறதோ, வலுப்படுத்துகிறதோ, உன்னதமாக்குகிறதோ, அது அவனுக்கு நன்மை. முன்னேற்றம் என்பது மாறிக்கொண்டேயிருக்கும் பரந்த இலட்சியமாகும். ஒரு கட்டத்தில் அவனைக் கடந்து செல்லும். அது பிறரையும் தழுவும். முடிவில் அனைத்தையும் தன்னுட்கொள்ளும்.

தர்மம் என்பது பரிணாமத்தின் பல நிலைகளில் ஒன்று. மூன்று நிலைகட்கும் பொதுவானதுண்டு. சச்சிதானந்தம் உலகில் தன்னை வெளிப்படுத்துவது மூன்று நிலைகட்கும் பொது. முதல் நிலையில் இந்த சக்திக்குத் தர்மம் பொருட்டன்று. விலங்கு தர்மத்திற்குக் கீழ்ப்பட்டது. அறிவுள்ள மிருகம் அதர்மமானது. பிறருக்குச் செய்யும் கொடுமை சரி, நமக்குக் கூடாது என்பது அதன் நியாயம். இப்படிப் பார்த்தால் மனிதன் பாதிதான் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவன். நமக்குக் கீழுள்ளவை தர்மத்திற்கும் கீழானவை. நாளாவட்டத்தில் நாம் உயரமுடியும். அப்பொழுது நாம் தர்மத்தைக் கடந்தவர் ஆவோம். அங்கு தர்மம் தேவையில்லை. மனித குலத்திற்கு தர்மம் தலைகாக்கும் என்பது இலட்சியம். மனித குலம் சுமுகமானது, பரந்த நோக்கமுடையது. இது ஜடமான தாழ்ந்த சுமுகம். இந்தச் சுமுகம் சிறு துண்டுகளாக வாழ்வால் சிதறடிக்கப்பட்டுள்ளது. சிதறடிக்கப்பட்டவை பெரிய

சுமுகத்தை உண்டு பண்ணும். அது பிரபஞ்சம் முழுவதும் பரவும். அது வாழ்வில் ஆத்மா புதைந்துள்ளதை அறிவதால் ஏற்படுவது. அங்கு வந்தபின் தர்மம் தேவையில்லை. அங்கு தர்மம் செயல்படமுடியாது. தர்மம் செயல்பட மனித குணம் தேவை. நாம் இதன்படி முடிவான சுமுகத்தை எய்திவிட்டோம். இங்கு மனித குணமும், முரண்பாடும் கரையும்.

தர்மம் 3 நிலைகளில் ஒன்றுக்கே உரியது. அது தற்காலிகமானது. நமக்கு அது முக்கியம். தர்மத்தின் மூலம் தர்மத்திற்குக் கீழிருந்து தர்மத்திற்கு மேலே போகிறோம். இது பகுதியின் சட்டம் என்பதால், முழுமைக்கு இது பொருந்தாது. இதை முடிவின் ஒரு பகுதியாகக் கொள்ளலாம். நம் கண்ணோட்டம் தற்காலிகமானது, அரைகுறையானது. நம் அரைகுறை அறிவுக்குப் பின்னால், பிரபஞ்சம் முழுவதும் உண்டு. பரிணாமம் முழுவதும் இதன் பின்னணியில் உள்ளது. நமக்கெட்டாதது, உலகம் 3 நிலையாகப் பிரிகிறது. தர்மமும், அதற்குக் கீழ்ப்பட்டதும், மேம்பட்டதுமாகும் அவை. மூன்றிற்கும் பொதுவானதைக் காண்போம். அதுவே பிரச்சினையைத் தீர்க்கும்.

சித் சக்தி, ஆத்ம சக்தி, ஜீவ சக்தியாகும். அது ரூபம் பெற்றுயர்கிறது. இந்த மாற்றம் அதற்கு ஆனந்த அனுபவம். அதுவே அதற்குத் திருப்தி. இந்த திருப்தியில் எழும் ஆனந்தம் ஆரம்பம். இவ்வானந்தம் சத்தினுடைய ஆனந்தம். இது இதற்கு இயல்பானது. சித் சக்தி இதைப் பற்றிக்கொண்டு இந்த ஆனந்தத்தை அஸ்திவாரமாகக் கொள்கிறது. ஆனால் இதற்கே புது ரூபங்களைத் தேடுகிறது. புதிய ரூபங்கள் எழும் பாதை துன்பமும் வலியும் நிறைந்தது. அவை அடிப்படையான ஆனந்தத்திற்கு எதிரானவை. இதுவே பிரச்சினைக்கு வேர், மூலம்.

இதை எப்படித் தீர்க்கலாம்? சச்சிதானந்தமே ஆதியும், முடிவுமில்லாதது எனலாம். சூன்யம், அசத், நிர்வாணமே முதல் ஆரம்பம் எனக் கூறலாம். சூன்யம் பாரபட்சமற்றது. எல்லாவற்றையும் தன்னுட்கொண்டது. ஜீவியமும், ஜீவனற்றதும், ஆனந்தமும், அதற்கெதிரானதும் சூன்யத்துள் உள்ளன. எல்லாவற்றையும் விளக்க முயன்றாலும், எதையும் விளக்க முடியாது. நாம் அனைத்தையும் பட்டியலாக்கியுள்ளோம். நாம் சூன்யத்தில் முடிகிறோம். இந்த

சூன்யத்துள் எல்லாமிருப்பதாகக் கூறுகிறோம். இது முற்றிலும் முரண்பாடான நிலை. வலி, ஆனந்தமென்ற சிறிய முரண்பாட்டில் ஆரம்பித்து சூன்யத்தில் எல்லாமிருப்பதாகக் கூறும் பெரிய முரண்பாட்டிற்கு வந்துவிட்டோம். அசத் என்பது சூன்யம். அதற்குள் எதுவுமில்லை. வித்தாகவுமிருக்க முடியாது. சூன்யம் பாரபட்சமானது எனில், அதனால் சிருஷ்டிக்க முடியாது என்றால், எல்லாத் திறமைகளும் அதனுள்ளிருக்கின்றன எனில் அது பெருங்குழப்பம். அதாவது சூன்யத்துள் குழப்பமிருக்கிறது என்றாகிறது. எப்படி என நாம் கூறவில்லை. சச்சிதானந்தத்திற்குத் திரும்ப வருவோம். முடிவான தீர்வைத் தேடுவோம்.

நாம் பிரபஞ்சத்தை ஏற்கிறோம். அது மனித ஜீவியத்திலிருந்து மாறுபட்டது. நம் மனத்தைவிடப் பரந்தது. மனித ஜீவியத்தைவிட உயர்ந்த சாரம் உள்ளது. அதேபோல் பிரபஞ்ச ஆனந்தம் நம் சுக துக்கங்களினின்று மாறுபட்டது. பிரபஞ்ச ஆனந்தம் மனித சுக துக்கங்களைவிட மிகச் சாரம் ஆனது, அகன்றது என்பதை நினைவிலிருத்தவேண்டும். நம் வாழ்வில் சந்தோஷம், ஆனந்தம், மகிழ்ச்சி எப்பொழுதோ வருகிறது. அவை அடிப்படையான வாழ்வின் ஆனந்தத்திலிருந்து பிரிந்து நிற்கின்றது. ஆனந்தம் அளவற்றது, பிரபஞ்சம் முழுவதும் பரவியது. அது சுயமானது. அது மற்ற சந்தர்ப்பங்கள், காரணங்களைப் பற்றியதில்லை. அதுவே அதன் அடிப்படை. சுகமும், துக்கமும் இப்பின்னணிக்கு உரியவை. புருஷனின் ஆனந்தம், பிரகிருதியின் ஆனந்தமாகிறது. சக்தியின் சலனத்திற்குரியது இம்மாற்றம். அதன் ரூபங்கள் பல. சுகம் நமக்குரிய ரூபம். வலி நமக்குப் பிடிக்காத ரூபம். இவ்வானந்தம் ஜடத்தின் ஆழ்மனத்திற்குரியது. இதுவே மேலே பரமாத்மா ஆகும். இவ்வானந்தம் மனம், வாழ்வு, ஜடம் மூலம் வெளிப்பட முயல்கிறது. சக்தியில் சலனம் வேகப்பட்டால், நாம் நம்மை அதிகமாக அறிகிறோம். அங்கு இவ்வானந்தம் தன்னைச் சித்திக்க முயல்கிறது. இதன் முதல் ரூபம் எதிரான இரட்டைகள், தூய்மையற்றது. அது சுகம், துக்கம் என்ற இரு முனைகளின் இடையே செயல்படுகிறது. அதன் இலட்சியம் தூய்மை, சுய ஆனந்தம், சுயம்பிரகாசம். அப்படிப்பட்ட ஆனந்தம் சுயமானது. அது மற்றவற்றைப் பொருத்ததன்று. எந்தக் காரணத்தையும் பொருத்ததன்று. சச்சிதானந்தம்

பிரபஞ்ச வாழ்வைத் தனி மனித வாழ்வாக்குகிறது. ஆத்மா ரூபத்தைக் கடந்தது. அது உடலுக்குரிய ரூபம், மனதிற்குரிய ரூபத்தை நாடுகிறது. இந்த மாற்றத்தின்போது, பிரபஞ்சத்திற்குரிய, சுயமான, அகத்திற்குரிய ஆனந்தம், புறத்திற்குரிய ஆனந்தமாக குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் வெளிப்படுகிறது. பின்னணியிலிருப்பதை நாம் காண்பதில்லை. எதிரில் பொருள்களைக் காண்கிறோம். எனவே நாம் அப்பொருள்களை நாடுகிறோம். நம் சிற்றின்ப திருப்திக்காக அவற்றை நாடுகிறோம். நாம் சுதந்திரமானவர்கள். நாம் ஆத்மாவைப் பெற்றுள்ளோம். நாம் அதைத் தேடவேண்டிய அவசியமில்லை. நாம் அதை ஏற்கனவே பெற்றுள்ளோம். இப்பொருள்கள் ஆனந்தத்தைப் பிரதிபலிக்கின்றன. அவை ஆனந்தத்திற்குரிய காரணமில்லை. இவ்வானந்தம் என்றும் உள்ளது.

மனிதன் அகந்தை, ஜடமான ஓட்டிலிருந்து அவன் வெளிவருகிறான். வாழ்வின் ஆனந்தம் அவனுக்கு சப்பென இருக்கும். அது தெளிவற்றது. அது ஆழ்மனச்சாரலுள்ளது. அது மறைவிலுள்ள வளமான பூமி. அங்கு ஏராளமான களை முளைத்துள்ளது. அதன் புஷ்பம் விஷமானது. வலி, இன்பம் எனப்படுபவை அவை. நம் அகந்தையின் பயிர் அவை. ஆத்மா நம் வாழ்வில் நம்மை அறியாமல் செயல்படுகிறது. அது இவ்விஷ விருட்சத்தை ஜீரணம் செய்யும். இவை பூமியின் செல்வம். தெய்வம் இவற்றை எரிக்கும் என ரிக் வேதம் கூறுகிறது. அவையனைத்தும் இன்ப துன்ப வேராகும். இவற்றின் காரணமே அவைதான். அதன் இரகஸ்யமும் அதுவே. அதன் ஆனந்த சாரம் அவற்றிலுள்ளது. அவை புது ரூபமாக எழும். அது ஆசையாக இருக்காது. அது சுயமான திருப்தியாகும். நம் இன்பம் மனிதனுக்குரியது. இறைவனுக்குரியது அழியாத பூரிப்பு. அது மனிதனை விலக்கிச் செயல்படும். இத்திருவுருமாற்றம் நிச்சயம். உணர்ச்சி இவற்றிலிருந்து எழும். அடிப்படையில் அவை ஜீவனின் ஆனந்தம். வலியின் ஆதி ஆனந்தம். இன்பமும் ஆனந்தத்திலிருந்து வருகிறது. அவை ஆனந்தத்தை வெளிப்படுத்த முயன்று தோல்வியுற்றன. அறியாமை, அகந்தை, கண்டம் தோல்விக்குக் காரணம்.

********



book | by Dr. Radut