Skip to Content

03. VI Man in the Universe

6. மனிதனும் பிரபஞ்சமும்

(சுருக்கம்)

நம் முன்னோர்கள் ஆன்மீகத்தால் அனைத்தையும் அறிந்தவர்கள். பிரம்மம் முதல் ஜடம்வரை ஆன்மீகத்தை அறிந்தவர்கள். மனத்தின் ஞானத்தால் விவரமாக அறிந்தவர்கள். தாங்கள் அறியாததையும் கூறியுள்ளனர்.

உலகம் சிருஷ்டிக்கப்பட்ட வகை எது

என்பதை ரிஷிகள் அறியவில்லை, அதை அறிய மனிதனுக்கு உரிமையில்லை எனவும் கூறுகின்றனர். வேதம் முதல் கீதைவரை ரிஷிகள் தேடியது மோட்சம். இன்றுவரை ஆன்மீகப் பரம்பரை இதுவே. பிரபஞ்சத்தை ரிஷிகள் நன்கு அறிந்திருந்தாலும், மனிதன் பெறும் மோட்சத்தில் பிரபஞ்சத்திற்கு ரிஷிகள் இடம் தரவில்லை.

மனிதன் பிரபஞ்சத்தின் மூலம் பரமாத்மாவை
அடைந்தால்தான் சிருஷ்டியின் இலட்சியம்
பூர்த்தியாகும் என்பது ஸ்ரீ அரவிந்தம்.

பிரபஞ்சத்தை விலக்கிப் பெறும் மோட்சம் ஜீவாத்மாவின் சுயநலமாகும் என்றும் பகவான் கூறுகிறார். பிரபஞ்சமே ஜீவாத்மாவைச் சிருஷ்டித்தது. ஜீவாத்மாவில்தான் பிரபஞ்சம் பூர்த்தியடையும், ஜீவாத்மா பிரபஞ்சத்தால்தான் பூர்த்தியடையும் என்பதால் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று இன்றியமை யாதவை. பரமாத்மா சிருஷ்டியில் ஜீவாத்மா மூலமே தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார் என்பதால் ஜீவாத்மா முக்கியம் பெறுகிறது. இவ்உண்மையைக் கண்டறிய நாம் மேல்மனத்திலிருந்து செயல்படமுடியாது. மேல் மனத்தைவிட்டு ஆழ்மனத்தை எட்டினால் இவ்வுண்மை புரியும் என்று இவ்வத்தியாயம் கூறுகிறது.

நாம் மேலும் கருத வேண்டியது ஒன்றுண்டு. சிருஷ்டி என்பது லீலை. பிரம்மம் தன் உரிமையைப் பயன்படுத்தி இதுவரை அனுபவிக்காத ஆனந்தத்தை அனுபவிக்க சிருஷ்டித்தது. மறைந்ததைக் காண்பதே இன்பம். அவ்வின்பத்தை உயர்த்த பிரம்மம் தன்னையே மறைக்க முடிவு செய்தது. தன்னை வேறெதி லுள்ளும் மறைக்க முடியாது என்பதால், தன்னுள்ளேயே மறைத்து, மறைத்ததை மறந்தபின், தேடிக் காணும் இன்பத்தை நாடி ஞானத்தை அதனுள் மறைத்து அஞ்ஞானமாக்கியது. இதைச் சாதிக்க காலம், அகந்தை, மனம், அறியாமை, மேல் மனம் தேவைப்பட்டன. முடிவில் மேல் மனத்தில் பிரம்மம் அறியாமையைச் சிருஷ்டித்து, அதனுள் மறைந்திருக்கும் பிரம்மமாகிய தன்னைக் காணும் முயற்சியே சிருஷ்டி. அதன் பகுதியே மனித வாழ்வு. ஜீவாத்மாவும், பிரபஞ்சமும் இக்காரியத்தைச் சாதிக்க பரமாத்மா சிருஷ்டித்தது. தான் தேடும் பேரின்பத்தைக் காண, மனிதன் ஆழ்மனத்திற்குப் போவது அவசியம்.

ஆழ்மனத்தை அடைந்தால் அங்கு ஜடமும் பிரம்மமும் ஒன்று என்று காண்போம். பிரபஞ்சத்தின் துன்பம், இருள் மறையும், பிரம்மம் தேடும் இன்பம் அதன் மூலம் அதற்குக் கிடைக்கும் என்பதே அத்தியாயத்தின் சுருக்கம்.

(முழு விளக்கம்)

பிரபஞ்சத்திற்கோர் இலட்சியம் உண்டு. அதை ஒரு காரணத்திற்காக பிரபஞ்சம் நாடுகிறது. தற்செயலாக பிரபஞ்சம் தானே உற்பத்தியாகவில்லை. பரமாத்மா ஜோதிமயமானது. பரமாத்மா படிப்படியாகத் தன்னைச் சிருஷ்டியாக வெளிப்படுத்துகிறது. அப்படிச் சிருஷ்டிக்கப்பட்டவை அனந்தம். அவற்றுள் பலவற்றை நாம் காண்கிறோம். மற்றவற்றை நாம் காண்பதில்லை. சத்தியம் தன்னை சிருஷ்டியாக மாற்ற உதவும் கருவி பிரபஞ்சம். சத்தியம் சிருஷ்டியாக வெளிப்பட பிரபஞ்சம் தன்னை ஓர் அரங்கமாக்கிக் கொள்கிறது. அத்துடன் சிருஷ்டிக்குரிய நிபந்தனைகளையும் பிரபஞ்சம் விதிக்கின்றது. பிரபஞ்சம் உண்மையில்லை, மாயை என்பாருண்டு. பிரபஞ்சம் மனத்தின் பிரமை. மனம் மனிதனை ஏமாற்றுகிறது. நாம் முதலில் கூறியது இம்மாயவாதத்தை ஏற்கவில்லை. மற்றொரு கொள்கையுண்டு. தானே தன்னை பிரபஞ்சம் உற்பத்திசெய்து கொண்டது. எவரும் சிருஷ்டிக்கவில்லை என்ற கொள்கை அது. கண்மூடித் தனமான ஏராளமான நிகழ்ச்சிகள் சேர்ந்து பிரபஞ்சமாயிற்று. இந்நிகழ்ச்சிகள் சேர்ந்தும், முரண்பட்டும் இருக்கின்றன. யுகாந்த காலமாக அது நீடிக்கின்றது. தானே உற்பத்தி செய்து கொண்டது. எந்த இலக்குமின்றி, எந்தக் கொள்கையு மின்றி, அறியாமையால் உந்தப்பட்டுச் செயல்படுவது பிரபஞ்சம். பிரபஞ்சத்தினுள் இரகஸ்யமாக பொதிந்துள்ள ஞானமில்லை, என்பவை இக்கொள்கை. இதையும் ஸ்ரீ அரவிந்தர் ஏற்கவில்லை. தன்னை தான் முழுவதும் அறிந்த சத்தியம் பிரபஞ்சம் என்பது ஸ்ரீ அரவிந்தம். தன்னை அறிவதால் அது தன்னாட்சிக்கு மட்டுமே உட்பட்டதாகும். உலகம் அதன் சிருஷ்டி. நிகழ்ச்சிகள் அதனுடையவை. மேலும் தானும் அந்நிகழ்ச்சிகளில் பொதிந்துள்ளது. தன்னை வெளிப்படுத்த அது ரூபத்தை உற்பத்தி செய்கிறது. ஜீவாத்மாவில் மட்டுமே அச்சத்தியம் தன்னை முழுமையாக வெளிப்படுத்துகிறது.

ஆரிய முன்னோர்கள் இதை அறிவர். அதை உதயம் என்றனர். ஜோதிமயமான ஒளிப்பிழம்பு உதயமாவதை வழிபட்டனர். அந்த ஜோதியின் சிறந்த உருவமே விஷ்ணு. உலகத்தினுள் ஊடுருவிப் பரவுவது அது. அதை ஞானக் கண்ணாகக் கண்டனர். மோட்ச லோகத்தையும் அந்த ஞானதிருஷ்டி எட்டியது. சர்வத்தையும் வெளிப்படுத்தும் சத்தியம் அது. அனைத்துக்கும் வழிகாட்டி. உலகத்தைக் கண்காணிப்பதாகும். அழியும் மனிதனைக் கவரும் அழியாச் சத்தியம் அது. தன்னையறியாத மனிதனையும் கவர்வது அஜ்ஜோதி. படிப்படியாக மனிதன் விழிப்புறுகிறான். விழிப்புற்றுத் தன்னை அறிகிறான். அவனது ஜீவன் விரிகிறது. தெய்வத்தை நாடி உயரும் யாத்திரை அப்படித் தொடங்குகிறது. அதைத் தியானம் என்கிறோம். அதுவே கர்மங்களில் சிறந்த கர்மம். தெய்வீக வாழ்வை நோக்கிப் போகும் மனித வாழ்வின் பயணம் அது. அதுவே மனிதனுக்குரியது. உலகில் அவன் உற்பத்தியானதன் பயன் இதுவே. இவ்விலட்சியமில்லாவிட்டால் மனிதன் புழுவுக்குச் சமமாவான். பிரபஞ்சம் பிரம்மாண்டமானது. சிறிது மண்ணும், ஒரு துளி நீரும் சேர்ந்து க்ஷணம் வாழும் ஈசல் உற்பத்தியாகிறது. இலட்சியமில்லா விட்டால் மனிதன் இவற்றுள் ஒன்றாவான்.

பொருள்களாலும் நிகழ்ச்சிகளாலும் நிறைந்தது இவ்வுலகம். இந்நிகழ்ச்சி களின் கூட்டம் முரண்பாட்டின் திரட்சி. என்றாலும் இது ஆனந்தத்தின் சத்தியம். தன்னையறியும் சத்தியமே இவ்வானந்தம், காலத்தாலும், இடத்தாலும் கட்டுப்படாத ஆனந்தமிது. காலத்தைக் கடந்த நிலையிலும் இது மாறாத ஆனந்தம். எல்லா நிகழ்ச்சிகட்குப் பின்னும் இவ்வானந்தம் தன்னையறியும் தீவிர நிகழ்ச்சிகளுண்டு. அவற்றின் திரட்சி பெரியது. சத்தியம் முடிவற்றது. எவ்வகையிலும் இந்த ஆனந்தத்தை அளவுக்குள் அமைக்க முடியாது. தானே சுயமாக எழுந்ததால் புறக்கட்டுப்பாடில்லை. தான் வெளிப்படுத்தும் பொருள்களாலும் இது கட்டுப்படாது. வெளிப்படுவது சத்தியம். வெளிப்படும் சிருஷ்டியால் சத்தியம் முடிகிறது. தனக்கு மட்டுமே அதன் உண்மை வெளிப்படும். ரூபங்களில் அதைக் காணலாம். ரூபங்கள் சத்தியத்தை உட்கொண்டன. தன்னையேயறியும் தன்மையுடையது. திருஷ்டியும், அனுபவமுமுடையது. தன்னையறிவதால் அது உலகமாகிறது. உலகமாவதால் தன்னை அறிகிறது. தன்னை தன்னாட்சிக்குள் காப்பது. சச்சிதானந்தத்தின் ஆனந்தத்தைத் தாங்கி நிற்பது. தன் ரூபங்கட்கும் சுபாவத்திற்கும் தன் ஆனந்தத்தை அளிப்பது. எனவே தானே தன்னை ஆனந்தமாய் அனுபவிப்பது. ஜீவாத்மா இவ்வகையாகத் தன்னைப் பூர்த்தி செய்து கொள்கிறது. ஆனந்தம் ஜீவியம், சத்தியம் இவ்வழி ஜீவனின் மனம், உயிர், உடல்களில் வெளிப்படுகிறது. சத்தியம் தன்னுள் தன்னைக் கண்டது. ஜீவாத்மா மூலம் புறவெளிப்பாட்டில் சத்தியம் உலவுகின்றது.

பிரம்மம் தன்னை சச்சிதானந்தமாக அறிகின்றது. வேதாந்தம் கண்ட பெரிய முடிவு இது. மற்றவை அனைத்தும் இதனுள் அடக்கம். அனைத்தும் சச்சிதானந்தத்தை நம்பியுள்ளது. தோற்றம் பல. அவற்றின் புற உருவங்களும், வண்ணங்களும் பலப்பல. அவற்றை இருவழிகளில் அகற்றலாம். மறைமுகமாகவும், நேரடியாகவும் அவற்றை அகற்றமுடியும். தோற்றத்தினுள் சத்தியம் உண்டு. சத்தியத்திற்கு ரூபம் உண்டு. தோற்றத்தை விலக்கி சத்தியத்தைக் காணலாம். தோற்றமழிந்தபின் நிற்பது ஆத்மானுபவமே. அது சச்சிதானந்தம். மனித ஜீவியம் பூரணத்தைத் தேடுகிறது. சில சமயங்களில் மனித ஜீவியம் தன்னைக் கடக்கவும் முயல்கிறது. புனிதம், சாந்தம், ஆத்ம சுதந்திரம் இலட்சியமாகலாம். அல்லது திறன், சந்தோஷம், பூரணம் இலட்சியமாகலாம். இரண்டிற்கும் மனிதன் சச்சிதானந்தத்தை நாடுகிறான். சச்சிதானந்தம் அறியமுடியாதது, எல்லாம் வல்லது. அது அவசியம்.

பிரபஞ்சம் சச்சிதானந்தத்தின் ஓர் உருவம். அடுத்தது ஜீவாத்மா. இரண்டும் அவசியம். பிரம்மம் இவை இரண்டையும் நாடுகிறது. எனவே நாம் பிரம்மத்தை யறிய பிரபஞ்சத்தையும், ஜீவாத்மாவையும் நாடுகிறோம். இவையிரண்டும் தவிர வேறு பல நிகழ்ச்சிகளும், நிலைகளுமுள்ளன. ஜீவாத்மாவும் பிரபஞ்சமும் இணைந்து செயல்படுவதால் எழுந்தவை அவை. இடைப்பட்டவையேயவை. பிரம்மம் உலகினுள் இறங்கி வந்தது. அப்படி வருவதால் பிரம்மம் தன்னை மறைத்துக் கொள்கிறது. இறங்கி வருதலில் பலப்பல படிகளுள்ளன. அப்படிகள் அந்நிலைக்குரிய திரைகளாகின்றன. பிரம்மம் இறங்கி வந்தால், மனிதன் உயர்ந்து ஏறுகிறான். ஏறும் நிலையில் திரை விலகி பிரம்மம் வெளிப்படுகிறது. ஏற்றமும், வெளிப்பாடும் படிப்படியானவை. பிரம்மம் படிப்படியாக இறங்கி வருகிறது. மனிதன் படிப்படியாக உயருகின்றான். பிரம்மம் இறங்கும் ஒவ்வொரு படியும் மனிதன் உயரும் ஒரு படியாகும். பல திரைகளால் கடவுள் மறைக்கப்பட்டிருக்கிறார். எனவே கடவுளை அறிய முடியவில்லை. பக்தன் ஒவ்வொரு திரையாக விலக்கி, கடவுளைக் காண்கிறான். இத்திரைகள் மனிதன் கடவுளைக் காணும் கருவிகளாகப் பயன்படுகின்றன. ஜடமான பிரகிருதி அயர்ந்த நித்திரையிலிருக்கின்றது. உறக்கத்தின் உணர்வு ஆன்மாவை மறக்கச் செய்கிறது. ஆன்மாவின் ஞானம் இயற்கையை நடத்திச் செல்கிறது. மயக்கமாக உள்ள நிலையிலும் இயற்கைக்கு சக்தியுண்டு. இயற்கையின் மயக்கம் பயங்கரமானது, ஊமையாக மௌனம் பூண்டது. உலகம் வாழ்வை நாடுகிறது. வாழ்வு விரைவும், வேகமும் உடையது. அதன் நிலைகள் பல. பல நிலைகளும் விரைந்து அலங்கோலமாக இருக்கின்றன. தன்னையறிய வாழ்வு பெரு முயற்சி எடுக்கின்றது. வாழ்வு, தன்னையறிய, உயர்ந்து மனத்தை எட்டுகிறது. இதனால் விழிப்பு எழுகிறது. விழிப்புற்ற வாழ்வு உலகைக் கவனிக்கிறது. இவ்விழிப்பு பிரபஞ்சத்திற்குரிய கருவியாகிறது. இதன் பலனாக தன்னையறியும் ஜீவன் ஏற்படுகிறது. மனம் வேலையைத் தொடர்கிறது. அதனால் வேலையை முடிக்க முடியாது. மனம் உழைக்கும். தீவிர புத்திசாலித்தன முடையது மனம் எனினும் அதன் புத்திசாலித்தனத்திற்கு அளவுண்டு. வாழ்வின் கூறுகள் குழப்பமானவை, வேறுபட்டவை, ஒழுங்கிற்குக் கட்டுப்படாதவை. மனம் அவற்றை ஏற்று, மாற்றி, உயர்த்துகிறது. அதைப் பூர்த்தி செய்ய தன்னால் முடியாது என்பதால், பூர்த்தி செய்பவரிடம் ஒப்படைக்கிறது. மனிதன் தெய்வமாக வேண்டிய காரியம் அப்படிப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதைச் செய்வது சத்தியஜீவியம். சத்தியஜீவியமே சிருஷ்டிக் கலைஞன். சத்தியஜீவியமே சத்தியஜீவன். இது உயர்ந்த நிலை, உயர்ந்த சட்டம். இதன் திறன் உயர்ந்தது. இங்கு ஜீவாத்மாவும், பிரபஞ்சமும் ஒன்றாக இணைகின்றன. ஒன்றை மற்றது அறியமுடியும். ஒன்றை மற்றது சொந்தமாக்கிக் கொள்ள முடியும். ஒன்று தன்னை மற்றதற்கு விளக்க முடியும். இங்கு அவை சுமுகமாக இணைகின்றன.

மனமும் வாழ்வும் அலங்கோலம் நிறைந்தவை. இங்குள்ள ஒழுங்கு ஜட உலகைச் சேர்ந்தது. இதைவிட உயர்ந்த ஒழுங்கொன்றுண்டு. அந்த இரகஸ்யத்தை நாம் காணமுடியும், அதைக் கண்டால் ஒழுங்கீனம் மறையும். ஜடம், மனம், வாழ்வுக்குக் கீழேயுள்ளது. அளவிடமுடியாத சக்தியைத் தன்னுட்கொண்டது வாழ்வு. சாந்திமயமான சிறப்பான அமைப்பொன்றுண்டு. இவற்றிடையே ஜடம் செயல்பட்டு நிலைப்படுத்துகிறது. இந்நிலை ஜடத்தினுளிருந்தாலும், இது ஜடத்திற்குக் கட்டுப்பட்டதன்று. மந்தமான, இருண்ட தமஸ் போன்றது இந்நிலை. தன்னையறியாத கண்மூடித்தனமான உறக்கம் அது. மயக்கமருந்து சாப்பிட்டது போலவும், ஜீவியம் சிறைப்பட்டதைப் போலவும் உள்ள நித்திரை அது. ஜடத்தின் ஆன்மா சக்தியாகும். இச்சக்தி ஜடத்தின் போக்கை விரைவுபடுத்துகிறது. ஆனால் ஜடத்தால் அச்சக்தியின் செயலை அறிய முடியவில்லை. ஜடத்தின் பெருஞ் சக்திகள் சுமுகமானவை. அச்சக்தியின் சுமுகமான செயல் தரும் சந்தோஷத்தை ஜடம் இன்னும் அறியவில்லை.

மனமும், வாழ்வும் இதை அறிய விழிப்புறுகின்றன. தேவையைப் பூர்த்திசெய்ய எடுக்கும் முயற்சி அது. அறியாமையை அறிய முயலும் முயற்சி, சிரமத்தால் திகைத்துப்போன ஆசையாக அது அமைகிறது. தன்னையறிவதிலும், தன்னைப் பூரணப்படுத்துவதிலும் இது முதற்படி. தன்னைப் பூர்த்தி செய்யும் இறைவனின் சாம்ராஜ்யம் எங்கே? தன்னிலையைக் கடந்துயர்வதால் அதை அடையமுடியும். நாம் மனத்தையும், வாழ்வையும் கடக்க வேண்டும். இழந்த நிலையை அதனால் பெற முடியும். தெய்வீக உண்மை ஜடமான இயற்கையில் கரடுமுரடாக வெளிப்படுகிறது. அவ்வுண்மை ஓர் அமைதியாகக் காணப்படுகிறது. அது தமஸல்ல, தன்னிலை இழந்த மயக்கமன்று. சக்தியின் ஆதி செறிந்த நிலையாகும். முழுவதும் தன்னை அறிந்த நிலையிது. கட்டுக்கடங்காத சக்தியின் கணிப்பிலடங்காத செயலாகும். விவரிக்கவொண்ணாத ஆனந்தமாகும். புல்லரிக்கும் புனித உணர்வது. மடைமையின் பெரு முயற்சியல்ல. சாந்தியின் ஆதி தன்னையறிந்து மலைபோல் அசைவற்றிருப்பதாகும். நம் அறியாமை இருண்ட ஒளியாகும். ஒளியின் பகுதியின் பிரதிபலிப்பாகும், இவ்வமைதி அறியாமையை அதன் ஆதியான ஒளியை அடைய உதவும். அது பூரணத்தின் முழுமை. சிதைந்த ஆர்வம் சிறப்பான ஆசையாகியிருக்கின்றது. ஆர்வம் கலங்கி ஜடத்தின் விரச ரூபமானது நம் ஆசை. அவை இருண்ட நிலைகள்.

ஜீவாத்மா பரமாத்மாவை நோக்கிப் போகிறான். பிரபஞ்சமும் அதே பாதையில் எழுகிறது. ஒன்று மற்றதால் உயிர் வாழ்கிறது. ஒன்றால் அடுத்தது பலனடைகிறது. காலத்திலும், இடத்திலும் எங்கும் நிறைந்த பிரம்மம் பரவி நிற்கின்றது. காலத்தில் செறிந்த நிலை ஜீவாத்மா. தன்னையறிந்த முழுமை இறைவன்.

இறைவனின் சொந்த முழுமையை அவன் வெளிப்பாடான பிரபஞ்சத்தில் காண முயல்வதே பிரபஞ்சத்தின் கடமை. பிரபஞ்சத்தால் அம்முழுமையை அறிய முடியும், உணர்ந்து செயல்படுத்த முடியாது. பிரபஞ்சத்தில் சத்தியம் பரந்து விரிந்து ஒன்று பலவாகி ஆயிரம் பொருள்களாகவும், நிகழ்ச்சியாகவும் மாறுகிறது. பலவானாலும் பிரபஞ்சம் ஆதி முதலன்று. முதல் அல்லாவிட்டாலும், முடிவும் அன்று. ஒன்று - ஏகன் - என்பதே ஆதி, பல ஆதியாக, முடிவான நிலையும் ஒன்றே, ஏனெனில் ஒன்று பலவாகி, பல மீண்டும் ஒன்றாகிறது. பிரபஞ்சம் இடைப்பட்டது, ஆனால் முடிவற்றது. ஆதியும் அந்தமுமில்லாத (recurring decimal) தசமப்புள்ளி என்கிறார் பகவான். எனவே பிரபஞ்சம் தன் முடிவான முழுமையை அடையத் தகுந்த நிலையொன்று வேண்டும். அதற்காக ஜீவாத்மாவை பிரபஞ்சம் சிருஷ்டித்தது. ஜீவாத்மா மூலம்தான் பரமாத்மாவை அடைய பிரபஞ்சம் அதை எற்படுத்தியது. எனவே ஜீவாத்மா தன்னையறியும் செறிந்த நிலையாகும்.

ஜீவாத்மா தன்னை அறியாததன்று. முடிவில்லாமல் தன் போக்கில் வளர்வதுமன்று. பிரகிருதி முன்போல் முடிவில்லாமல் வளராமல், தன் பாதை யிலிருந்து திரும்பி புருஷனைக் காண்கிறது. உலகம் தன் இஷ்டப்படிப் போவதை மறுத்து தன் ஆத்மாவை அறிய முற்படுகிறது. கடவுள் இயற்கையானார். ஆனால் இயற்கை தன் பாதையை நாடுகிறது. ஜீவாத்மாவில் இயற்கை பாதையை மாற்றி இறைவனைத் தேடுகிறது.

அத்துடனில்லை. மேலும் விஷயங்களுண்டு. ஜீவாத்மா தன்னை அறிய தான் மட்டும் போதாது, இறைவனின் பரந்த நிலை ஒன்று தேவை. அதுவே பிரபஞ்சம். ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணையவேண்டும். இரு நிலைகளில் இரண்டும் இணையலாம். ஒன்று பிரம்மத்திலுள்ள ஒற்றுமை. இது சிருஷ்டியைக் கடந்த நிலையில் உள்ள தீவிரமான ஆதியின் ஒற்றுமை. அது நம் அறிவுக்கு எட்டாது. எந்தச் சட்டத்திற்கும் உட்படாது. எந்த வரையறையோ, அளவோ, நிபந்தனையோ, சட்டமோ, கொள்கையோ கட்டுப்படுத்தாத ஒற்றுமை அது. ஒற்றுமைக்கும் மற்றொரு நிலையுண்டு. பலவாகப் பிரிந்த ஒன்று அஸ்திவாரத்தில் இணையும் ஒற்றுமை அது. பிரிவு ஏற்பட்ட பின் ஏற்படும் ஒற்றுமையிது. இவ்வொற்றுமையை அடைய ஜீவாத்மா பிரபஞ்சத்தை ஊடுருவவேண்டும், பிரபஞ்சத்தின் எல்லா அம்சங்களுடனும் இணைய வேண்டும், தான் தனி என்பதை இழக்க வேண்டும், தனக்கென ஒரு நிலையுண்டு என்பதை அழிக்க வேண்டும். தனித்தன்மையை இழந்து ஜீவாத்மா பொதுத் தன்மை பெற வேண்டும். எல்லாம் நிறைந்த இறைவனை அவ்வழி வெளிப்படுத்தமுடியும். அனைத்தும் தன்னுட் கொண்ட இறைவனை வெளிப்படுத்தும் பொழுது ஜீவாத்மா தன்னுள் உள்ள சத்தியத்தை - பிரம்மத்தை - வெளிப்படுத்துகிறது. இந்நிலையிலும் கடவுள் என்பதன் அம்சத்தைத் தான் ஓரளவு காக்க வேண்டும் என்பதை ஜீவாத்மா அறிகிறது. அது தன்னையும், உலகையும் கடந்தது, என்றாலும் புதிரானது. இப்புதிரை மனிதன் அகந்தை என அறிகிறான். ஒற்றுமை என்ற இலட்சியத்தை அடைய, மனிதன் தன்னுள் உள்ள இறைவனை மறக்க முடியாது. பரமாத்மா, பிரபஞ்சம், ஜீவாத்மா மூன்றையும் இணைப்பது மனிதனின் கடமை. இவ்விலட்சியத்தை மனிதன் ஏற்றுக் கொண்டுள்ளான். எனவே பிரபஞ்சம் முழுவதும் பரவும் நிலையிலும் மனிதன் பரமாத்மாவினுடைய தொடர்பை விட இயலாது.

ஜீவாத்மாவின் பிரபஞ்சம் எது? அது அவன் வாழ்வு. பிரபஞ்சம் வாழ்வாக அவனை நாடுகிறது. பயங்கரமான நிகழ்ச்சிகள் தீவிரமாகச் சுழலுவது வாழ்வு. எண்ணற்ற செயல்கள் எதிர்த்து மோதும் அரங்கம் வாழ்வு. செயலைத் தீவிரப் படுத்தும் சக்தி நிறைந்த பொக்கிஷம் வாழ்வு. அதன் பின்னணியில் சுமுகமும் ஓர் ஒழுங்கும் உள்ளன. மனிதன் அவ்வுயர்ந்த ஒழுங்கைக் காணவேண்டும். மனித முன்னேற்றம் என்பதன் பொருள் அதுவேயாகும். ஏற்கனவே ஜடத்திற்குரிய ஓர் ஒழுங்கை ஏற்படுத்தியுள்ளது. அதைவிட உயர்ந்த ஒழுங்கமைப்பை நாம் நாடுகிறோம். விலங்கின் வாழ்வு, அதனளவில் பூரண ஒழுங்கமைப்புடனுள்ளது. நாம் நாடுவது உயர்ந்த விலங்கு வாழ்வின் ஒழுங்கன்று. வசதியை அளிக்கும் முறைகள் பல உள. அவை மனத்திற்குப் போதுமான திருப்தி அளிக்கவல்லவை. அதுபோன்ற வசதியளிக்கும் முறைகளை மனிதன் முடிவாக ஏற்றுக் கொண்டிருந்தால், முன்னேற்றம் முடிந்திருக்கும். விலங்கு எளிதில் திருப்தி அடையவல்லது. தேவை பூர்த்தியானால், விலங்குக்கு நிம்மதி பிறக்கும். தெய்வங்கள் ஜோதிமயமானவை. ஜோதியும், ஜொலிப்பும் தெய்வங்கட்குத் திருப்தி அளிக்கின்றன. ஆனால் மனிதன் அப்படியில்லை. தேவைகளோ, ஜொலிப்போ மனிதனைத் திருப்திபடுத்துவதில்லை. பூரணத்தை அவனுள் ஏதோ ஒன்று தேடுகின்றது. பெரிய உயர்ந்த நல்லதை அவன் நாடும்வரை அது அவனை விடாது. அளவில் சிறியவன் என்பதே அவனுக்கு நிர்ப்பந்தமாக அமைந்துள்ளது. அவனது இலட்சியம் தொலைவிலுள்ளது. தெய்வீக உத்வேகமே அதைச் சாதிக்கும். மனிதன் மட்டுமே அவ்வுத்வேகத்தைப் பெற்றுச் சாதிக்க முடியும்.

வாழ்வு மையம் சக்தி நிறைந்த கருவியை நாடுகிறது. உயர்ந்த சக்திகளின் உன்னதமான மையம் மனிதன். அவனே புருஷன். எல்லாப் பொருள்களிலும் கடவுள் உறைகிறான். ஆனால் மனிதன் அதிலும் உயர்ந்தவன், சத்புருஷனானவன். கடவுள் மனிதனில் உறைவதிலும் ஓர் உயர்வுண்டு. இதுவே மனு, சிந்திப்பவன், மனோமயபுருஷன், மனம் எனும் மனிதன். ரிஷிகள் அவனை மனத்தின் ஆத்மா என்றனர். மனிதன் உயர்ந்த விலங்கல்லன். அவனுக்கு பண்புள்ளது உண்மை. ஜடத்தாலான விலங்குடம்பு அது. அடிப்படையில் மனிதன் சிந்தனைக்குரிய ஆத்மா. ரூபத்தைக் கருவியாக அவன் பயன்படுத்த வேண்டும். இவ்வழி மனிதன் ஆன்மீகப் பொருளைப் பயன்படுத்துகிறான். எனவே மனிதன் தன்னை அறிந்த நாமரூபம். நீயூமன் எனக் கூறுவர். விலங்கு வாழ்வு ஜடத்திற் குரியது. மனிதவாழ்வின் தாழ்ந்த அம்சம் அது. எண்ணம், உறுதி, உந்துதல், உணர்வு ஆகியவை சேர்ந்தது மனம் எனப்படும். வாழ்வு சக்தியாலானது. ஜடம் அதற்கும் கீழுள்ளது. மனம் வாழ்வையும் ஜடத்தையும் பற்றிக் கொள்ள முயல்கின்றது. மனம் தன் சட்டத்தை ஜடத்தின் மீது திணிக்க முயல்கிறது. அதனால் ஜடம் திருவுருமாறும். ஆத்மாவுக்கும், ஜடத்திற்கும் இடையில் மனிதன் தன்னை வைக்கின்றான். இது இடைநிலை. திறம்பட செயல்பட மனிதன் மனத்தால் செயல்பட முனைகிறான். மனிதனில் உயர்ந்ததொன்றுண்டு. மனிதன் அதைத் தேடுகிறான். கண்டுபிடித்தால் தன் வாழ்வில் அதை நிலைநிறுத்த முயல்வான். இன்றைய ஆன்மாவைவிட அது உயர்ந்தது. தெய்வீக வாழ்வின் அடிப்படை அவ்வுயர்ந்த அம்சம் ஆட்சி செலுத்துவதாகும்.

முதலில் மனிதன் தன்னை எளிமையாக உணருகிறான். தன்னைப்பற்றிய பெரிய ஞானத்தை இப்பொழுது அவன் கண்டு கொண்டான். புதிய ஞானத்தைச் சித்தியாக மாற்ற அவனுக்குப் புது சூத்திரம் தேவை. அதன் தோற்றத்தையும் அவன் அறியவேண்டும். இவ்வாராய்ச்சியில் அவன் இரண்டு இருட்டுகளைக் காண்கிறான். தன்னை அவற்றிடையே பார்க்கிறான். இவை மறுப்புகள். இவை இரண்டும் ஒன்றையே - கடவுள் - மறுக்கின்றன. ஒன்று மேலும், மற்றது அவனுக்குக் கீழும் உள்ளன. பரமாத்மா ஜோதிமயமாக மேலேயுள்ளது. அதன் ஜோதி மனிதனின் கண்ணைக் கூசவைப்பதால் அவனால் அதைக் காண முடியவில்லை. எனவே அதை இருட்டு என அறிகிறான். பாதாளம் கீழுள்ளது. அது இயல்பாக இருண்டது. அவையிரண்டும் மனித வாழ்வை மறுக்கின்றன. ஒன்று இன்று அவனுக்கெட்டாதது. அதன் சக்தி அவனைத் தீண்டுவதை மட்டும் அவனால் உணர முடிகிறது. அவன் ஸ்பர்சிப்பது அதன் ஆனந்தம், ஜோதி அல்லது சக்தியாகும். அவன் தீண்டுவது தன்னையறியும் அனந்தமான சத்தியம். அவனால் அதை, அது உள்ளதுபோல் அறியமுடியவில்லை. தன் மனத்திற்கு ஏற்றவாறு அவன் தான் கண்டதை விளக்கிக் கூறுகிறான். அனந்தம், எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன், அமரன், சுதந்திரம், அன்பு, ஆனந்தம், கடவுள் எனப் பலவாறு அதற்குப் பெயரிட்டான் மனிதன். மேலும் கீழும் இருண்டுள்ளபொழுது இடையே மனிதன் காண்பது அது. அதை முழுவதும் அறிய முயல்கிறான். அப்பொழுது அது தன் தோற்றத்தை மாற்றிக் கொள்கிறது. அவன் மனத்திற்கு அது கட்டுப்படுவதில்லை. மேற்சொன்ன அனைத்துச் சொற்களும் சேர்ந்தும் தான் கண்டதை விவரிக்க முடியாது எனக் காண்கிறான். அவற்றுள் எந்த ஒரு சொல்லும் தான் கண்டதை விளக்க முடியாது எனவும் அறிகிறான். கடவுள் எண்ணத்தைக் கடந்தவர். கடவுள் என நாம் அறிவது நாம் அறிந்ததையும் கடந்தது. இங்கு உலகில் தான் கண்டதற்கு எதிரான வற்றையும் மனிதன் காண்கிறான். மரணம் நிலையானது. மனிதன் அளவுக்குட்பட்டவன். அவன் ஜீவனும் அனுபவமும் வலிமையற்றவை. எனவே வலி ஏற்படுகிறது. தீமையின் ஆட்சியில் அவனுள்ளான். தவற்றை அவனால் புறக்கணிக்க முடியவில்லை. தன்னை இழந்து நிற்கிறான். அவனது முயற்சிகள் பலன் தரவில்லை. அதைக் கண்டவன் கடவுள் இல்லை என்கிறான். தெய்வம் என்பது சத்தியம், நித்தியம். நம் கண்ணுக்கு அது புலப்படவில்லை. தோற்றத்துள் அது புதைந்துள்ளது. இதுவே மனிதனின் அபிப்பிராயம்.

மனிதன் மறுப்பது இயற்கை. ஆனால் ஜோதியை மறுப்பது புதிராக உள்ளது. இருளை மறுப்பதில் புதிரில்லை. ஏன் மனிதன் மறுக்கிறான் என நாம் அறிய முடியும். அறிந்தால் புதிர், புதிராகவேயிருக்கிறது. உலகின் தீமையும், குறையும் எப்படி வந்தன; ஏன் எழுந்தன என மனிதனால் அறியமுடியவில்லை. அவை என்ன செய்கின்றன என அறிய முடிகிறது. தன் வாழ்வை அவை பாதிப்பதால் அவனால் உணர முடிகிறது. ஆனால் அவற்றுள் உள்ள சத்தியத்தை, அதன் நித்தியத்தை அவனால் காண முடியவில்லை.

உண்மையிலேயே அவற்றைப் புரிந்து கொள்ள முடியாதா? தெரிந்து கொள்ள முடியாதவையா அவை? அவற்றின் கருவைக் காண முடியாதா? அவற்றிற்குச் சாரமான கரு என ஒன்றில்லையா? அவை மாயையா? அசத் எனவும் நிர்வாணமெனவும் நாம் அவற்றை விட்டு விடலாமா? மேலுள்ள மறுப்பை சூன்யம், நிர்வாணம் என்றனர். உலகில் நாம் மறுப்பதென்ன? தவறு, வலி போன்றவற்றை நாம் எப்படிப் புரிந்துகொள்ளவது? அவற்றின் கருவும் சூன்யமேவா? கடந்த அத்தியாயங்களில் நாம் இக்கருத்தை ஏற்க மறுத்தோம். எனவே, இதையும் மறுப்போம். வாழ்வுக்கு உண்மையேயில்லை என்றும் மனிதன் கூறுகிறான். அல்லது மாயை, ஆபத்தான மாயை எனவும் கூறுகிறான். வாதத்திலிருந்து தப்பும் வழியிது. இப்படிச் செய்தால் நாம் கடமையிலிருந்து வழுவுவோம். நாம் மறுப்பவை சச்சிதானந்தத்திற்கு எதிரானவை. அவை கடவுளை மறுக்கின்றன. ஆனால் வலி, சோகம், தவறு, குறை ஆகியவை உண்மையன்றோ? அவை தற்காலிகமாக இருக்கலாம். ஆனால் தற்காலிக உண்மையன்றோ? இவையே வாழ்வின் கூறுகள். நன்மை, ஞானம், சந்தோஷம், சக்தி, வாழ்வு, பிழைக்கும் வழி, வலிமை ஆகியவை நாம் மறுப்பவற்றிற்கு எதிரானவை. வாழ்வுக்கு இவையும் பகுதிகளாகும்.

  எதிரானவை என நாம் காண்பது பிரிக்க முடியாத பகுதிகளாக இருக்கலாம். மாயையாக இருக்க வேண்டியதில்லை. எதிராக உள்ளது என்பது தவறான தொடர்பாக இருக்கலாம். கருத்து தவறாக இருந்தால், முடிவு தவறாக வரும். ஜீவாத்மா, பிரபஞ்சத்தைப் பற்றிய அவர்கள் கருத்து தவறாக இருக்கலாம். தெய்வம், இயற்கை என்பவற்றைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். ஆன்மா, சூழ்நிலையைத் தவறாகப் புரிந்துகொள்ளலாம். மனிதன் கருவில் கடவுளாவான். இன்று உடலைத் தாங்கி உலகில் வாழ்கிறான்.

அவன் உடலும், வாழ்வும் அவனுடைய ஆன்மீக நிலையுடன் சுமுகமாக இல்லை. மனிதன் ஆன்மா, ஆன்மாவாக அவன் முயல்கிறான். ஆன்மாவின் ஆர்வமும் வாழ்வு நிலைகளும் இணையும் சூழ்நிலையில்லை. சுற்றுப்புறத்துடனும் சுமுகமில்லை. எனவே இப்பிணக்குகள் எழுகின்றன. இரகஸ்யமாக உள்ளுறை உண்மையை அவை மறுக்கின்றன. இதுவே உண்மையானால், மனிதன் பாதை யினின்று வழுவிவிட்டான் என்று கூறமுடியாது. கடவுள் கொடுத்த தண்டனை எனவும் நாம் படும் கஷ்டங்களைக் கூறமுடியாது. அவனுடைய முன்னேற்றத்திற் குரிய நிபந்தனைகளாக நாம் முரண்பாடுகளை அறியவேண்டும். மனித முன்னேற்றத்தின் முதற்படி இவை. தெய்வமாக மனிதன் மாற வேண்டும் என்ற கிரீடத்தைப் பெற மனிதனால் முடியும். அதற்குரிய கப்பம் இதுவேயாகும். ஜடம் ஜீவியத்தையடைய முயல்கிறது. குறுகிய சிறுபாதை மூலம் எட்ட முயல்கிறது. இது ஜடத்தின் வலிமை. இதுவே ஜடத்தின் கப்பம். இக்கப்பத்தைக் கட்டி தெய்வீகம் என்ற பரிசை மனிதன் பெற வேண்டும்.

நம் இன்றைய உறவு தவறு என்பது உண்மை. இத்தவறான உறவு மூலம் உண்மையைக் காண வேண்டும். நாம் அறியாமையில் மூழ்கியுள்ளோம். மரணம் நம்மை எதிர்கொள்கிறது. அறியாமையின் உதவியால் நாம் மரணத்தை வெல்ல வேண்டும். வேதம் இதுபோன்ற நிகழ்ச்சியைக் கூறுகிறது. வேதம் விளக்கமாகக் கூறுவதில்லை. மறைபொருளாகச் சுட்டிக்காட்டும். தீமையை நாடும் பெண்கள் உள்ளனர் என வேதம் கூறுகிறது தங்கள் பாதையிலிருந்து விலகி இப்பெண்கள் தங்கள் கணவர்கட்குத் தீங்கிழைக்கின்றனர். அவர்கள் பொய்யானவர்கள். கவலையில் அதனால் மூழ்கியுள்ளனர். இக்கெட்ட பெண்கள் பெரிய சேவை செய்கிறார்கள். பெருஞ் சத்தியத்தை வளர்க்க இவர்கள் உதவுகிறார்கள். அச்சத்தியம் பேரானந்தமாகும். வாழ்விலிருந்து தீமையை அகற்றினால் பலன் வாராது. அறுவை சிகிச்சை போலாகுமிது. வாழ்வை உதறலாம். அதுவும் பலனில்லை. மாறாக மரணத்தைப் புனித வாழ்வாக மாற்ற வேண்டும். வாழ்வின் நிகழ்ச்சிகள் சிறியவை. மனிதன் சிறியவன் என்பதால் நிகழ்ச்சிகள் சிறியவையாக இருக்கின்றன. தெய்வீக வாழ்வில் காரியங்கள் பெரியதாக இருக்கும். தெய்வம் பரந்ததாக இருப்பதால் நிகழ்ச்சிகள் பரந்தவை. நாம் சிறியதைப் பெரியதாக்க வேண்டும், துன்பத்தை ஆனந்தமாக்க வேண்டும், தீமையை நன்மையாக்க வேண்டும், தவற்றையும் பொய்யையும் அவற்றின் சத்தியமாக மாற்றவேண்டும். அதுவே தியாகம். யாத்திரை அதனால் முடியும். சுவர்க்கமும் பூமியும் சமமாகும். பரமனின் ஆனந்தத்தில் அவை இணையும்.

ஒரு கேள்வி எழுகிறது. எப்படி ஒரு பொருள் அதன் எதிரானதுடன் இணைய முடியும்? வாழ்வு என்பது அழியும் மண். எதிர்காலம் தங்கமான தெய்வீகம். எந்த இரஸவாதம் மண்ணை பொன்னாக்கும்? மேலும் ஒரு கேள்வி எழலாம். நாம் எதிரானவை எனக் கருதுபவை எதிரானவையாக இல்லாமல் இருக்கலாம். அவையிரண்டும் ஒரே பொருளால் செய்யப்பட்டவையாக இருக்கலாம், ஒரே சத்தியத்தின் இரு பகுதிகளாக இருக்கலாம். அப்படியானால் ஒன்று மற்றதாக மாற முடியும். மண் பொன்னாகும்.

சூன்யத்தைப் பற்றிக் கருதினோம். மரபுவழி கொள்கையை மறுத்தோம். சூன்யம் என்பதும் சத்தியம் என்றோம், பெரிய சத்தியம் எனவும் கூறினோம். எனவே சூன்யம் விவரிக்கவொண்ணாத ஆனந்தமாகும். புத்தர் நிர்வாணத்தைக் கண்டார். மனித முயற்சியின் புனித உருவம் அது. பௌத்தம் சூன்யத்தை எட்டியது. அங்கேயே தங்கினர். ரிஷிகளின் வாழ்வில் அது ஒரு மைல் கல். சொல்ல முடியாத சந்தோஷமும், அமைதியும் பெற்றவர், அங்கேயே தங்கினர். வெறும் ஆன்மீக விளக்கமாக மட்டும் அது இல்லை. நடைமுறைப் பயனும் இருந்தது. அகந்தை கரைந்தது. அகந்தை எழுப்பிய அனைத்துத் துன்பமும் மறைந்தன. அகந்தையும், அதன் உணர்ச்சிகளும் மறைந்தன. இதை உயர்ந்த நிலை எனக் கூற முடியாவிட்டாலும், தாழ்ந்தது என்று சொல்ல முடியாது. நல்லது எனக் கூறக் கூடியது சொல்லுக்கு அகப்படாத ஆனந்தம். அது அப்படிப்பட்ட சூன்யம். அதனுள் எதுவுமில்லை. மிகத் தெளிவுள்ளது - சூன்யத்தில் - எது எனில் சாந்தியாகும். சூன்யமானாலும் அமைதியும், ஆனந்தமும் தெரியும். அது சத்தியம். எதைக் கண்டும் சந்தோஷப்பட்டு ஆனந்தமடையக் கூடிய நிலை அதனுடையது. இந்த நிர்வாணம் பெரிய சூன்யம். சத்தியம் தன்னை மறக்கக்கூடிய நிலை அதனுடையது. அதுவும் மறையும். இது உண்மையில் சச்சிதானந்தமே. சத், சித், ஆனந்தம் என்பவை தெளிவு மிகுந்தவை என்பதால், நாம் இதை அப்பெயரால் அழைக்கத் தயங்குகிறோம். எல்லா நிபந்தனைகளும் அழிந்த நிலை, எல்லாச் சிந்தனைகளும் கரைந்த நிலை, எதற்குமே அர்த்தமற்ற நிலை.

சர்வம் பிரம்மம் என்பது நம் கொள்கை. எதிரானவையோ, எதிரெதிரான பகுதிகள் முரண்படும் நிலையோ இல்லை என்பது நம் நிலை. எதிரானவை யிருந்தால் அவை இரண்டும் ஒன்றின் பகுதிகளேயாகும். எனவே, நமக்குப் பிணக்கில்லை. சூன்யத்தையும் நாம் சச்சிதானந்தம் என்கிறோம். மேலும் கடவுளை அறிவால் அறியமுடியாது என்பதற்கு மாறாக, இச்சூன்யத்தை அறிவும், திருஷ்டியும், உணர்வும் எட்டித் தொடலாம். சச்சிதானந்தத்தைவிட உயர்ந்த நிலை எனினும் மனிதனுக்குப் புலப்படக்கூடியது இது என்பது நம் கொள்கை. கடவுளில்லை எனக் கூறும் உணர்வே, இச்சூன்யத்தை உணரும். ஏனெனில் இதுவரை ரிஷிகள் மனத்தால் செயல்பட்டனர். மனம் நிர்வாணத்தை அறிய முடியாது என்பது உண்மை. ஸ்ரீ அரவிந்தருடைய மனம் சத்திய ஜீவியத்துடன் தன் தொடர்பைப் பெற்றுவிட்டதால், சத்திய ஜீவியம் நிர்வாணத்தை அறிய முடியும். அடிப்படையில் நாம், உடலும் கடவுளை அறிய முடியும் என்கிறோம். அறியாமை தன் அறியாமையை வலியுறுத்தும்வரை மனத்திற்குச் சச்சிதானந்தம், கடவுள், சூன்யம், பிரம்மம் புலப்படாது. மாயை, அவித்தை என்பனவும் மனத்தை தடை செய்கின்றன. மாயையை வலியுறுத்தினால் மனம் வலுவிழந்துவிடும். மாயையை மனம் வலியுறுத்தாவிட்டால், மனத்தால் அனைத்தையும் காணமுடியும். நாம் மாயை என்பது மனம், உணர்வு, உடலுக்குரிய மாயை. அம்மாயையால் இவற்றை மட்டுமே காணமுடியும். மாயை என்பதால் சச்சிதானந்தம், உலகம் ஆகிய இரண்டையும் காணமுடியும். இது மாயையின் உயர்ந்த பகுதி. அம்மாயை தடையில்லை. உலகத்தை மட்டும் அறிவது அவித்தை என உபநிஷதம் கூறுகிறது. அந்த அவித்தையால் நிர்வாணத்தைக் காணமுடியாது. ஸ்ரீ அரவிந்தர், அவித்தை வித்தையின் தொடர்பு, வித்தையே தன்னை அவித்தையாக்கிக் கொண்டது என்கிறார். அக்கருத்துப்படி அவித்தையால் நிர்வாணத்தைக் காணமுடியும். எதிரானவற்றை நாம் இப்படி இணைத்துவிட்டதால் மனிதனுடைய பிரச்சினைக்கு - உலகில் உள்ள தீமையை என்ன செய்வது - நாம் தீர்வு காண முடியும். தர்க்கம் இதை ஏற்க மறுக்கலாம். தத்துவம் ஏற்கத் தயங்கலாம். ஆனால் தெய்வீக வாழ்வை எட்ட இது உதவும். இதை நம் அனுபவம் ஏற்கும். ஏனெனில் நாம் பிரம்மத்தின் வாயிலில் நிற்கிறோம். நம் திருஷ்டி எல்லையைக் கடக்கவில்லை. தர்க்கமும், தத்துவமும் எல்லைவரை போக உதவும். அதைக் கடக்க பயன்படா.

நம் ஜீவன் மேல்மனத்தில் வாழ்வது. நம் வாழ்வு முழுவதும் இங்கேயே யுள்ளது. ஆன்மாவின் வாழ்வு ஆழத்திலுள்ளது. அறியாமைக்கு ஓர் அரங்கம் வேண்டி மேல் மனத்தை காலத்திற்குட்பட்ட நிலையில் அகந்தையை மையமாக்கி மனத்தால் இறைவன் ஏற்படுத்தினார். இதை நாம் சிறியது என்கிறோம். ஆன்மா அகண்டமான அனந்தம். பிரபஞ்சத்தில் மனிதன் என்பது ஜீவனின் ஆழத்திற் குரியது, மேல் மனத்திற்குரியதன்று. எனவே நாம் மேல்மனத்தை விட்டகன்று ஆழத்திற்குப் போக வேண்டும். மனம் மேலேயிருக்கிறது. அதை விரும்புகிறது. இருளில் மறைந்துள்ள பரந்த ஆன்மாவை மேல்மனத்தில் வந்து செயல்படச் செய்வதே மனத்தின் கடமை. மேல் மனத்தை வற்புறுத்தி ஆழத்திற்குப் போகச் செய்து அங்குள்ள அகண்ட ஜீவியத்தை தழுவச் செய்வதும் மனத்தின் வேலை. மேல் மனம் நம் பாஷையை ஏற்படுத்தியது. இம்மொழியால் நாம் கூறும் பெரிய காரியத்தைச் செய்ய முடியாது. ஆனால் திறனற்ற இம்மொழிக்கு வேறொரு திறனுண்டு. ஆழத்தின் அற்புதத்தை சுட்டிக் காட்டவும், சூட்சுமமாக வெளிப்படுத்தவும் முடியும். இறைவனின் திருவுள்ளம் எது என்பதை சூட்சுமம் மேல் மனத்திற்கு நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக அறிவுறுத்த முடியும்.

*******



book | by Dr. Radut