Skip to Content

03. Reality Omnipresent - 3

4. எங்கும் நிறை பரம்பொருள்

ஜடமும், ஆத்மாவும் மனிதனுக்குரியவை என நாம் உணர்ந்துவிட்டோம். அவற்றை இனி நம்முள் இணைக்க வேண்டும். நாத்திகன், பகுத்தறிவுவாதி என்பவர்கள் ஜடத்தின் பிரதிநிதிகள். ஆத்மா துறவிக்குரியது. இதுவரை இவர்கள் எதிரிகளாக இருக்கின்றனர். அவர்கள் சந்திக்க முடியும், சந்திக்க வேண்டும், அதற்குரிய உபாயமுண்டு, நமக்கு ஏற்புடைய எண்ணமாக அது அமையும் என நாம் காண வேண்டும். நடைமுறை வாழ்வில் அது சாத்தியம் எனவும் நிரூபிக்க வேண்டும். ஜடமும் ஆன்மாவும் சத்தியத்தின் பிரதிநிதிகள். அவை பிரம்ம சத்தியம். ஆனால் அவை பிரிந்து, விலகி தீவிர எதிரிகளாக முயல்கின்றன.எதிர்ப்புகளும், குறைகளும் விலக்கப்பட வேண்டியவை. அவற்றை விலக்கி உண்மையை உள்ளபடி எடுத்துரைக்க வேண்டும். ஏராளமான மூட நம்பிக்கை என்ற குவியலுக்குள் பிரம்மாண்டமான சத்தியம் புதைந்துள்ளது. வாதம் தீவிரவாதமாகிறது. வாதம் தீவிரமானதால், அனைவரும் அதைக் கவனிக்கின்றனர், ஏற்க நினைக்கின்றனர். நாம் அவற்றைப் புறக்கணிக்க முடியாது. அதிகமாகக் கவனிக்க வேண்டும். புறக்கணித்தால் அவை பழிவாங்கும் தன்மையுடையவை. இதுவரை ஆத்மாவையும் ஜடத்தையும் இணைக்கப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. திருப்தியான முடிவு ஏற்படவில்லை. வேகம், தீவிரம், தாம் மட்டும் சரி மற்றவையெல்லாம் தவறு என்ற அம்சங்கள் அவை இணைய தடையாக உள்ளன. வழக்கு என்பது உரிமைப் பிரச்சினை.உரிமையும், வசதியும் முரண்படுவதால் வழக்கேற்படுகிறது. சமாதானம் செய்ய சொந்த ஆதாயம் முன் வருகிறது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சமாதானமாவது வழக்கம். இருவரும் இணைய விட்டுக் கொடுத்தால் போதாது. ஒருவர் அடித்துக் கேட்டு அடுத்தவர் தேவையைப் பூர்த்தி செய்வதுண்டு. இதுவே உண்மை. அது போன்ற இடங்களைக் கண்டு சேர்த்தால் இணைய முடியும். முடிவாக இணைவது ஐக்கியத்தில் முடியும். மனிதனின் அகவாழ்வு ஆத்மாவுக்குரியது. புறவாழ்வு ஜடமானது. வாழ்வு மலர அகமும், புறமும் இணைந்து மலர வேண்டும். அதாவது ஜடமும் ஆத்மாவும் இணைய வேண்டும், சமாதானமானால் போதாது.

சென்ற அத்தியாயத்தில், ‘ஜடமும் ஆன்மாவும் பிரபஞ்சத்தில் சந்திக்கின்றன, அங்கு ஒன்றோடொன்று இணைகின்றன’ என்று கண்டோம். ஜடம் ஆன்மாவின் உண்மையைக் காண்பதாலும் ஆன்மா ஜடம் உண்மை என்பதைக் காண்பதாலும் அவை உண்மையிலேயே இணைகின்றன. அகங்காரம் தான் அவற்றைப் பிரிக்கின்றது. வாழ்வில் அவற்றிடையே பிணக்கேற்படுகிறது. பிரபஞ்சத்தில் அவை விரிவதில்லை, பிணக்கெழுவதில்லை. பிரபஞ்சத்தின் மனமும், வாழ்வும் அவற்றிடையே – ஆன்மா, ஜடம் – உள்ள பாலமாக,அவற்றை இணைக்க உதவும் கருவிகளாகச் செயல்படுகின்றன. பிரம்மம் என்ற அகண்டத்தின் இருமுனைகள் ஜடமும், ஆன்மாவுமாகும். இங்கு – பிரபஞ்சத்தில் – மனத்திற்கு ஒரு ஞானம் உதயமாகிறது. பாரமாத்மாவிற்கும், ஜீவாத்மாவிற்கும் உள்ள சத்தியம் மனத்திற்கு இங்குப் புலப்படுகிறது. ஜடம் எப்படி ஆன்மாவுடன் இணைந்து செயல்பட முடியும், அதற்குரிய சட்டங்கள் எவை எனவும் மனம் அறிகிறது. ஏன் இந்தப் பிணக்கு எழுந்தது எனவும் புரிகிறது. பிரபஞ்சத்தை எட்டிய பின் உலகில் மனத்திற்கு ஏற்படாத தெளிவு ஏற்படுகிறது. தெய்வத்தில் எழும் சுமுகம் தன்னுள் எழும் பிணக்கை கரைப்பதையும் மனம் இங்கு உணருகிறது. எனவே மனம் திருப்தி அடைகிறது. தெளிவு பெற்ற மனம் ஜடத்தையும், ஆன்மாவையும் இணைக்கும் கருவியாகச் செயல்பட முன் வருகிறது.

நாம் பொருள்களை ஜடமாகக் காண்கிறோம், நம் மனத்தில் செயல்படுவது எண்ணம். எண்ணம் பொருள்களால் செயல்படுகிறது. புலனறிவு மனத்தைச் செயல்படுத்தும்பொழுது பொருள்கள் ஜடமாகக் காட்சி அளிக்கின்றன. புலன்களுக்கும் பொருள்கள் ஜீவனற்றுத் தென்படுகின்றன. பொருள்கள் திறனற்று, ஜீவனற்று, செயலற்றுத் தோன்றுகின்றன. மௌனமான எண்ணம் சூட்சுமமானது. அதற்குப் பொருள்கள் ஆத்மாவாகக் காட்சியளிக்கின்றன. ஜடம் ஆன்மாவை அலங்காரம் செய்யும் அற்புத உடல் எனக் காண்கின்றது. ஆத்மா தன்னை ஜடமாக மாற்றியுள்ளது அப்பொழுது தெரிகின்றது. ஆன்மா ரூபம் பெறத் தன்னிலிருந்து எழுந்து வந்தால் ஜடம் ஏற்படுகிறது. ஆன்மா நம் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. உணர்ச்சியாலும் ஆன்மாவை அறிய முடியாது. மனமும், வாழ்வும், பரமாத்மாவின் கருவிகளாகச் செயல்பட ஆர்வமாக வரும்பொழுது, அவை மூலம் ஆன்மா நமக்குப் புலப்படுகிறது. ஆன்மாவாகவும், சத்தியமாகவும் தெரிகின்றன. ஆன்மா ஜடத்தின் கரு, சாரம், உள்ளுறை இரகசியம் என்று தெரிகிறது. ஆன்மாவின் உடல் என ஜடம் தன்னை ஆன்மாவுக்கு விளக்குகிறது. மனம் என்பது எண்ணத்தின் கருவி மட்டுமே என்பது இனி இல்லை. மனமும் வாழ்வும் இப்பொழுது பிரகாசமடைந்துள்ளன. மேலும் அவை பரமாத்மாவின் கருவிகளாகின்றன. நம் பார்வை அதுபோல் இனி மாறுகிறது. மனமும் வாழ்வும் புருஷனின் முத்திரைகளாகின்றன. பிரம்மம் புருஷன் மூலம் பொருள்களில் உருவம் பெறுகின்றது, அப்பொருள்களில் பிரம்மம் உறைகின்றது. அங்கிருந்து சிருஷ்டியில் பல்வேறு இடங்களைப் பிரம்மம் அடைய முயல்கிறது. இதைச் சாதிக்க மனமும் வாழ்வும் கருவிகளாகின்றன. மனம் நமக்குச் சிந்தனையின் கருவி. இவ்வுயர்வு ஏற்பட்ட பின் மனம் உயர்ந்து பூரணம் பெறுகிறது. இங்கு மனம் கண்ணாடி ஆகிறது. ஜீவனின் சத்தியத்தை அது பிரதிபலிக்கிறது.

பரமாத்மா சிருஷ்டியில் அடையாள முத்திரைகளாகப் பரிணமிக்கின்றது. வாழ்வும் அதுபோன்ற திருவுருமாற்றத்தைப் பெறுகிறது. வாழ்வு இறைவனின் சுயமுத்திரை பெற்ற உருவமாகிறது. பிரபஞ்சம் புதுப் புது சொரூபங்களைச் சிருஷ்டிக்கின்றது. இச்சிருஷ்டிக்கு வாழ்வு தன் சக்தியை அர்ப்பணம் செய்கிறது.

இது ஒரு புதுக் கருத்து. இதை ஏற்றால் தெய்வீக வாழ்வை நம்ப முடியும், அது விஞ்ஞானத்திற்குகந்தது. பிரபஞ்சச் சிருஷ்டிக்கு அது ஜீவனளிக்கும், நாமறிந்த இலட்சியத்தை அது பெறும். மனிதனைத் தெய்வமாக்குவது மதங்களின் இலட்சியம். இனி அது முடியும்.

துறவிபரமாத்மா தரிசனம் பெற்று உலகைத் துறந்தான். மேற் சொன்னதுபோல் நாம் தெய்வீக வாழ்வடைந்தால் துறவியின் அனுபவத்தை எப்படிப் புரிந்து கொள்வது? பரமாத்மா அசைவற்றது, தூய்மையானது, சுயமாக இயங்குவது, தானே இன்பம் பெறுவது. அதற்குச் செயல் தேவையில்லை. அதன் ஆனந்தம் உள்ளிருந்து எழுவது. எதையும் நம்பி அது இருக்கவில்லை. தெய்வீகச் சமுகமே இங்கும் நம் சட்டம். எதிரான முரண்பாடுகளை நாம் ஏற்க முடியாது. துறவி மௌன பிரம்மத்தைக் கண்டான். செயல்படும் பிரம்மத்தாலானது நம் வாழ்வு, அவை வேறானவையில்லை. ஒன்று மாயையை ஆதரிக்கும், அடுத்தது எதிரானது என்பதில்லை. இரண்டும் ஒரே பிரம்மத்தின் இரு அம்சங்கள். இரண்டும் தேவை. எதையும் விலக்க இயலாது. சப்தம் உலகைச் சிருஷ்டித்தது என்பர். அச்சப்தம் மௌனத்தில் பிறந்தது. பிரபஞ்சத்தில் ஏராளமான அமைப்புகளுண்டு. உலகில் இறைவன் செயல் சுகந்திரமானது, சக்தி வாய்ந்தது. இந்த அமைப்புகள், சுதந்திரம், சக்தி ஆகியவை எல்லாம் மௌனப் பிரம்மத்திலிருந்து எழுபவை. இயற்கை எனும் பிரகிருதி அளவிறந்து சிருஷ்டிக்கவல்லது. சுமுகத்தால் சூழப்பட்ட நிலையில் இவை நடைபெறுன்றன. அவை மாறுபட்ட தன்மையுடையன, ஆனால் சக்தி வாய்ந்தவை. அதற்கு ஏராளமான சக்தி தேவை. அசைவற்ற பிரம்மம் எல்லா அசைவுகளையும் நடத்தி வைக்கின்றது.

மனிதன் பிரம்மத்தைத் தன்னுள்ளும் காணலாம். சலனமற்று சாந்தமானது அது. இறைவனின் பொறுமையையும் ஆனந்தத்தையும் பெற்றது. அவனது புறவாழ்வுக்கு முடிவில்லை, முழுச் சுதந்திரம் உண்டு. அகத்தினுள் உள்ள பிரம்மம் புற வாழ்வைத் தாங்கும்; அதைப் பெற்றவர் அநேகர். தவத்தால் அவர் பெற்ற சாந்தம் அது. இந்தச் சாந்தத்தில் ஏராளமான சக்தி உறைவதை அவர் அறிவார். இதுவும் மௌனமானது.. உலகம் இயங்க இது தேவை. உள்ளிருந்து எழும் சக்தி ஏராளமானது. தடையின்றி எழுவது. மௌனம் அசைவுக்கு எதிரி என நினைக்கின்றனர். அது உண்மையில்லை. மௌனமிருந்தால் அசைவில்லை; அசைவிருந்தால் மௌனமில்லை. ஒன்று அடுத்ததற்கு எதிரி என்ற கருத்துகள் தோற்றமே, உண்மையில்லை. மனம் அளவுடையது. உயர்வு, தாழ்வு; ஒளி, இருள்; ஆகியவை மனம் அறிந்த இரட்டைகள். இருளும் ஒளியும் சேர்ந்திருப்பதாக நினைக்கவும் மனம் முயலாது. பரந்த ஜீவியம் இரண்டையும் தன்னுட்கொண்டது. அது விசாலமானது, வலுவானது. அது போன்ற ஜீவியத்தைச் சிந்திக்கவும் மனத்தால் இயலாது, முடிவான உண்மை இதற்கெதிரானது. மௌனம் உலகத்தை நிராகரிக்கவில்லை, மாறாக ஆதரிக்கின்றது. உலகில் அசைவுண்டு. நிச்சலனமுண்டு. பாரபட்சமின்றி இரண்டிற்கும் தன் சக்தியை மௌனம் வழங்குகிறது எனலாம். ஆன்மா தான் சுதந்திரமாக நின்று செயலைஆதரிப்பதுபோல், அசைவின்மையையும் ஆதரிக்கிறது. ஆன்மாவின் இந்நிலையை மௌனம் ஆமோதிக்கிறது.

செயலுக்கெதிரானது செயலற்ற நிலை. செயலை விட்டு விலகுவது வேறொரு நிலை.முழுமையாக விலகும் நிலையும் உண்டு. அதை நிர்வாணம் என்கிறோம். பரமாத்மா நிர்வாணத்திலிருந்து ஜனித்தார் என உபநிஷதம் கூறுகிறது, அப்படியானால் மீண்டும் பரமாத்மா நிர்வாணத்திற்கே திரும்ப வேண்டும். சத் புருஷன் உலகைத் தாங்கிப் பிடிப்பதாகச் சொல்கிறோம். நிபந்தனையின்றி ஆதரிக்கிறது. செயல் எதுவானாலும் சத் அதை ஆதரிக்கிறது. இதுவே சட்டமானால் நிர்வாணம் எதிராகச் செயல்படவேண்டும். எல்லாச் செயல்களையும் அது ரத்து செய்யவேண்டும். இது உண்மையானால் உலகம் இல்லை. இது புத்தருடைய சூன்யம். அகந்தை என்பது மாயை என்கிறார். மனம் அகந்தை என்ற ஒன்றைக் கற்பனை செய்து கொண்டது என்கிறார். பரமாத்மாவும் கற்பனையாகும். அகந்தை கரையும் பொழுது, பரமாத்மாவும் கரையும்.

மனத்தின் சிந்தனை சிறியது. சொல்லில் பேதம் காண்பது அது. உண்மையில் இல்லாத பேதத்தை சொல் ஏற்படுத்துகிறது. பேதம், வேறுபாடு என்று ஏற்பட்டுவிட்டால், மனம் அதைப் போற்றுகிறது. பேதம் முற்றி எதிர்ப்பாகிறது. இவ்வளவையும் உண்டு பண்ணுவது சொல். இது குழப்பத்தை விளைவிக்கும். இத்தவறான பழக்கத்தை பிரம்மத்தை விளக்கவும் மனம் பயன்படுத்துகிறது. சத்திய ஜீவியத்தினிடமும் மனம் இதையே செய்கிறது. வேறுபாட்டை ஏற்க முடியாத முறைகளைத் தெய்வீக சுமுகத்தை விளக்கப் பயன்படுத்துவது தவறு. நிர்வாணம் என்பது வெறுஞ்சொல். இதைப் பார்ப்போம். பரமாத்மாவை மனம் கற்பனை செய்தது என்பதுபோல் நிர்வாணமும் கற்பனையிலெழுந்ததே. சூன்யம் என நாம் எதைச் சொல்கிறோம். நாம் பிரபஞ்சத்திலிருக்கிறோம். இங்கு நாம் பரமாத்மாவை அறிவோம். மனத்தில் இந்த ஞானம் வெறுஞ்சொல்லாகிறது. ஆன்மாவில் இது சூட்சுமமாகிறது. இந்த அனுபவத்தை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள முடியும். அதுவே அதிகபட்சம். அதைக் கடந்து போக நாம் விரும்புகிறோம். கடந்த நிலையைச் சூன்யம் என்கிறோம். சூன்யம் என நாம் விவரிப்பது நம் அதிகபட்ச அனுபவத்தைக் கடந்த நிலை. நிலை என்பதால் அது சூன்யமில்லை. நாமறிந்த அனைத்தையும் கடந்து செல்ல ஏன் நாம் விழைகிறோம்? அங்குக் கடவுளிருக்கிறார். ஆனால் நம் முறை தெரிந்ததை விலக்கும் முறையாகும். எல்லாவற்றையும் விலக்குவதால் சூன்யம் என நினைக்கிறோம். அது உண்மையன்று; கற்பனை. உண்மை எது? சூன்யம் என்பது பூஜ்யம். ஆனால் அனைத்தையும் தன்னுட்கொண்ட பூஜ்யம்.

பூஜ்யம் என்பது சொல்லைக் கடந்த அனந்தம் (infinite). சொல்லைக் கடந்தது என்பதால் அது மனதையும் கடந்தது. மனம் அதை சூன்யமாகக் காண்கிறது. ஏதாவது ஒரு விஷயமானால் அது மனத்திற்குப் புரியும். எந்த விஷயமுமில்லை எனில் மனத்திற்குப் புரியாது. சத்தியம் (Existence) என்பது இப்பூஜ்யமே. அதுவும் உயர்ந்த சத்தியமாகும்.

நிர்வாணத்தில் பரமாத்மா பிறந்தார் என்கிறோம். பரமாத்மாவும், நிர்வாணமும் காலத்தைக் கடந்தவை. நாம் காலத்தில் வாழ்பவர்கள். காலத்திற்குரியவர்கள் காலத்தைக் கடந்ததைப் பற்றிப் பேசினால் எந்த முடிவும் எழாது. எதையும் விலக்காமல், எல்லாவற்றையும் அணைக்கும் தத்துவத்தை நாம் நாடுகிறோம். அதன் சுமுகம் அனைத்துக்கும் உரியது. நிர்வாணம் என்பது இல்லை எனும் முறை. எதையும் இல்லை என்று கூறும் முறை. இந்த முறையால் நம் இலட்சியத்தை அடைய முடியாது, சத், அசத் என்பவை ஒன்றன் பின் ஒன்றாய்ச் செல்பவை அல்ல. உலகத்திலுள்ள அனைத்தையும் நாம் ஏற்கிறோம். நமக்கு ‘சத்’, அசத்’ இரண்டும் தேவை. இரண்டும் ஒரே சமயத்திலிருப்பதாகக் கருதினால்தான் அது முடியும். சத் என்பது ஒரு குறிப்பிட்ட தேதியில் ஏற்பட்டது. அடுத்த மறு குறிப்பிட்ட நாளில் சத் அசத்தால் விழுங்கப்படும் என்று கூற முடியாது. இது காலத்திற்குரிய சொல். இரண்டும் காலத்தைக் கடந்தவை என்பதே பொருத்தம். ஒன்றை ஏற்று, அடுத்ததை மறுக்க முடியாது.

புருஷன், ஈஸ்வரன், பிரம்மம், பரமாத்மா என நாம் எதைக் கூறுகிறோம்? பிரபஞ்சம் உள்ளது. அதற்கு அடிப்படையுண்டு. பிரம்மம் என்பது அறிய முடியாதது. அறிய முடியாத பிரம்மம் பிரபஞ்சத்தின் அஸ்திவாரம். அந்த அடிப்படையாக இருக்க பிரம்மம் சம்மதிப்பது புருஷன் எனப்படுவதாகும். இத்துடன் பிரம்மம் முடியவில்லை. இதைக் கடந்தும் பிரம்மம் உண்டு. பிரபஞ்சத்தின் அடிப்படையான பிரம்மம், அதைக் கடந்தும் உள்ளது. இக் கடந்த நிலையை நிர்வாணம் என்கிறோம். நிர்வாணம் என்பது பிரம்மத்தின் ஒரு நிலைக்கு – அடிப்படையைக் கடந்த நிலை – நாம் அளிக்கும் பெயர். பிரபஞ்சத்தில் ஜீவியம் தனக்கு உருவம் அளித்துக் கொள்ளும், அந்த உருவம் சொல்லாக இருக்கலாம், சொல்லக் கடந்த நிலையாகவுமிருக்கலாம். உருவகப்படுத்த மறுக்கும் நிலைக்கு நிர்வாணம் என்று பெயர். உருவகத்தை நிர்வாணம் தடுக்கவில்லை. ஆனால் உருவகங்கட்கு நிர்வாணம் கட்டுப்பட மறுக்கிறது. மௌனம் அசைவுக்கு ஆதாரம் என்பது போல் நிர்வாணம், உருவகத்திற்கு, புருஷனுக்கு, பரமாத்மாவுக்கு ஆதாரம். மனிதன் கண்மூடி வாழ்கிறான். விழிப்புப் பெறவில்லை. புருஷனை, நிர்வாணத்தை அவன் காண முடியும். இரண்டையும் அவனால் காண முடிவதில்லை. அதுவும் ஒரே சமயத்தில் காண முடிவதேயில்லை.

ஆத்மா விழிப்புற்றால் அவனால் இரண்டையும் காணமுடியும், இல்லை என்பதும், உண்டு என்பதும் நம்மைப் பொறுத்தவரை எதிர்மறையானவை. ஒன்று மற்றதை எதிர்க்கும். அது உண்மையன்று. இல்லை என்பதும் உண்டு என்பதும் ஒரே சமயத்திலிருப்பவை, ஒன்றையொன்று ஆதரிப்பவை, ஒன்றை மற்றது பூர்த்தி செய்யக் கூடியது. விழிப்புற்ற ஆன்மாவே அதைக் காண முடியும். புருஷனையும், அதைக் கடந்த நிலையையும் விழிப்புற்ற ஆன்மாவால் காண முடியும். புருஷன் என்பது அவனுக்குப் பரமாத்மா. கடந்தது என்பது பிரம்மம். புத்தர் எய்திய நிர்வாணம் இது போன்றதே. புத்தர் நிர்வாண நிலையை எய்திய பின் ஏராளமான சக்தி பெற்றார். அகத்தில் அவர் பிரபஞ்சத்திற்குரியவர். இதுவரை உலகில் அவதரித்த புருஷர்களில் அதிக வல்லமை படைத்தவர் புத்தர். உலகில் பெருங் காரியங்களை அவர் சாதித்தார்.

சொல் எழுந்ததால் அதற்குச் சக்தியுண்டு. அது தன்னை வலியுறுத்தும். அது கடுமை பெறும். கருத்துகளைச் சொற்கள் பிரிக்கும் விதம் வினோதமானது. அது குழப்பம் விளைவிக்கும். நம் மனம் சிறியது. ஒரு சமயத்தில் ஒரு பகுதியை மட்டும் காண மனம் ஏற்படுத்தப்பட்டது. மனம் தன குணத்தைப் பிரம்மத்திடமும் செயல்படுத்துகிறது. ஒரு பக்கத்தை மட்டும் பார்த்தால், மற்ற பக்கங்களை எல்லாம் இல்லை என மறுத்துவிடுகிறது. பிரம்மத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டுமோ அப்படிப் புரிந்து கொள்வதில்லை; நம்மால் எப்படிப் புரிந்து கொள்ள முடியுமோ அப்படிப் புரிந்து கொள்கிறோம். பரமாத்மாவே முடிவு என நாம் கூறவேண்டும், ஏனெனில் எல்லாவற்றுடனும் இணைந்தது அது. மனம் தனக்குத் தெரிந்தவரையில் அதைச் செய்கிறது. அகங்காரம், பிரித்துணர்தல், உணர்ச்சி வேகம் நமக்குரிய முறைகள். பரமாத்மாவுக்கு இம்முறைகள் உதவா. அது வேகமின்றி சாந்தமானது, அகந்தையற்றது, எதையும் விலக்காமல் அனைத்தையும் தன்னுட்கொண்டது. நம் அனுபவம் முழுமையானதன்று. மற்றவர்கள் அனுபவமும் முழுமையானதன்று. இரண்டும் முழுமையுடையதன்று. நம் அனுபவம் உண்மை. அடுத்தவர் அனுபவம் பொய் என்கிறோம். பரம்பொருளை அறிய இம்முறை உதவாது. பொறுத்திருந்து, அனுபவப்பட்டு, அறிவால் வளர்ந்து, பூரணத்தை நாம் தேட வேண்டும். அதைச் சாதிக்க பரம்பொருளை உணர வேண்டும். மனிதன் அறிந்த மொழிகளால் அதைச் செய்ய முடியாது. நாம் கூறுவது பரந்ததாக இருக்க வேண்டும். எவரையும் அது மறுக்கக்கூடாது. உலகத்தையே தன்னுட்கொள்ளக் கூடியதாகவும், எதையும் தான் விரிந்து ஏற்றுக் கொள்வதாகவுமிருக்க வேண்டும். அதன் பேரில் சுமுகத்தை நிலைநாட்ட வேண்டும். அகன்ற, அனைத்தையும் அணைக்கும் சுமுகமாக அது அமைய வேண்டும்.

அது ஜீவியத்தின் உயர்ந்த நிலை. அதனுள் நாம் நுழைந்தால் நம் வாழ்வு கரையும், பரமாத்மாவும் அந்நிலையை விளக்கப் போதாது. நாம் அதை அடைய முடியும். மௌனம் நாம் அறிவோம். அதைக் கடந்த நிலையில் மேலும் ஒரு மௌனமுண்டு, அங்கும் நாம் போகலாம், இதுவும் முடிவானதன்று. எல்லா உண்மைகளையும் அரவணைக்கும் நிலை இது அன்று. இது நிர்வாணம், பரமாத்மா இங்கு கரையும். ஆன்மாவுக்குப் பூரணச் சுதந்திரத்தையும், பூரண அமைதியையும் அது அளிக்கிறது. அமைதியானாலும் செயல்பட அது அனுமதிக்கும். புறச் செயலை அது தடுப்பதில்லை. அங்கு அசைவில்லை. மனிதன் எந்த உருவிலுமில்லை. அசைவற்ற பிரபஞ்சம் அது. சத்தியம், அன்பு, நேர்மையின் கடமைகளைச் செய்கிறது அது. இது புறத்தில், அகத்தில் அமைதியாக இருக்கிறது. இதுவே புத்தர் உபதேசத்தின் சாரம். அகந்தையினின்றும், கர்மத்தினின்றும் இது விடுதலையளிக்கிறது. மனத்தின் எண்ணத்துடன் நாம் ஐக்கியமாவதால் கர்மம் எழுகிறது. பிறவிச் சுழலிலிருந்து விடுபடுவதும், துன்பத்தை அழிப்பதும் அந்நிலைக்குச் சிறிய லட்சியமாகும். உழைப்பவனோ, இலட்சியவாதியோ பூரண மனிதனில்லை. உள்ளத்து அமைதியுடன் உலகில் உழைப்பவன் பூரணமான மனிதன். விழிப்புற்ற ஆன்மா அதேபோல் நிர்வாணத்தின் சுதந்திரத்துடன் உலகில் அயராது செயல்படுகிறது. தெய்வீக வாழ்வின் புறநிலை அற்புதம் அது. அப்படியிருந்தும், அந்நிலைக்கும் அவன் கட்டுப்பட்டவனில்லை, தன் செயலைக் கடந்த நிலை அவனது நிலை. செயலைக் கடந்ததைப் போல் தன்னையும் கடந்தவன் அவன். இதற்கு எதிரான அனுபவமுண்டு. இங்கு மனிதன் நிர்வாணத்தை முதன்மையாகக் கருதுகிறான். எல்லாச் செயல்களிலிருந்தும் தானே விலகுகிறான். தன்னை மறந்து, உலகை மறந்தவனாகிறான். இருந்தும் பரமாத்மாவில் அவன் வாழ்கிறான்.

பரமாத்மா என்பது ஆன்மா. நிர்வாணம் என்பது ஜடம். இரண்டும் இதற்கடுத்த நிலையில் இணைகின்றன. இது சச்சிதானந்தத்தில் ஜடமும் ஆன்மாவும் இணைவதாகும். ஏற்கனவே அவை பிரபஞ்சத்தில் இணைந்தன. மீண்டும் பிரபஞ்சத்திற்கு அடுத்த உயர்ந்த நிலையில் அவை இணைகின்றன. எனவே நாம் வலியுறுத்துவது பகுதியில்லா முழுமை. இந்த முழுமையுள் நிர்வாணமும் உள்ளது. முடிவாக, தெய்வீகச் சமுகத்தில் எதையும் விலக்காமல், எல்லாவற்றையும் சேர்த்து நாம் ஒரு முழுமையைக் கண்டுள்ளோம். அப்பாலுக்கப்பாலுள்ளது, பிரம்மம் எனபடுவது இதுவே. நாம் இங்கு வலியுறுத்துவது பிரம்மத்தில் ஒரு நிலை. அந்நிலையைச் செயலாகவும் கொள்ளலாம். உண்டு என்பதற்கு எதிராக இல்லை என்பதும் உண்டு. நாம் இங்கு இல்லை என்பவை, பிரம்மத்தில் உண்டு என்பதைக் குறிக்கும். அப்பாலுக்குரியது என்பது முடிவானது, அற்புதமானது, சொல்லைக் கடந்தது. அது நம்மை நாடி வந்து நமக்குரியதைக் கொடுத்துவிட்டு மறைந்து விடுகிறது. நாம் அதனிடமிருந்து எதையாவது பெற விரும்புகிறோம்.பெற்றுக் கொண்டேயிருக்க விரும்புகிறோம். பிரம்மம் அதை நமக்குத் தருகிறது. இதற்கு உருவகம் என்று பெயர். இதைக் கெட்ட எண்ணத்தாலோ, மந்திரக்காரன்போலவோ, துஷ்டதேவதைபோலவோ அது செய்வதில்லை. நம்மைப் பொய்யை நோக்கி அழைத்துப் போவதில்லை. எதையும் மறுக்கச் சொல்வதில்லை. விவேகமாக அது செயல்படுகிறது. நாமறிந்த விவேகத்தைவிட உயர்ந்த விவேகம் அது. சத்தியத்திலிருந்து பெரிய சத்தியத்திற்கு நம்மை அழைத்துப் போகிறது. முடிவுக்கு வரும்வரை அது தொடர்ந்து இதே போல் செயல்படுகிறது. முடிவில் மிகப் பரந்த சத்தியத்தை அடைகிறோம். அது எங்கும் நிறை பரம்பொருள். அங்கு மாயையில்லை, மறுப்பு இல்லை, பிணக்கில்லை.

நாம் தேடுவது சுமுகம், எல்லாவற்றையும் சேர்ப்பது சுமுகத்திற்குரிய நல்ல அஸ்திவாரம். சுமுகத்திற்கு நல்லது மட்டுமே அஸ்திவாரமாக முடியும். பரம்பொருளைப்பற்றி பல கருத்துகளுண்டு. ஒவ்வொன்றும் பெரிய கருத்து; மனத்தைக் கடந்தவை; ஆனால் அவை ஒன்றோடொன்று மோதுகின்றன. ஒன்றை மற்றதின் கண்ணோட்டத்தில் நாம் அறிய வேண்டும். ஒன்று மற்றதை எப்படிப் பாதிக்கிறது என நாம் கருத வேண்டும். அவற்றைத் தனித்தனியே புரிந்து கொள்ளுதல் பயன் தாராது. அது முரண்பாட்டை எழுப்பும்.ஒன்று மற்றதை அழிக்க முயல்வதை ஆதரிக்கக் கூடாது. அத்துவைதம் என்றால் என்ன? அனைத்தையும் அரவணைப்பது அத்துவைதம். எதையும் அத்துவைதம் புறக்கணிக்காது. நாம் பிரம்மத்தை இரண்டாகப் பிரிக்கின்றோம். சத்தியம்; பொய்; பிரம்மம், மற்றதும்; புருஷன், மற்றது; புருஷன், மாயை என்று பிரிக்கின்றோம். பிரித்தால் ஒன்றை விலக்குவோம். நாம் எதையும் விலக்கக்கூடாது. எல்லாவற்றையும் சேர்க்க வேண்டும். அதற்கே அத்துவைதம் எனப் பெயர். புருஷனே எல்லாம் எனில், அனைத்தும் புருஷனே. எப்படி மற்றதை விலக்குவது?

பிரம்மம் என்பது கடவுள். அதுவே எல்லாம். அது தன்னையறியும். எனவே அது தன்னை அறிந்த எல்லாம் ஆகும். அதன் செயலாற்றும் திறன் அளவு கடந்தது. அச்சக்தி அளவுக்குட்பட்டதன்று. அது திறனற்றதன்று. சிருஷ்டித்தால் அதற்குக் காரணம் இருக்க வேண்டும். அது நல்ல காரணமாக இருக்க வேண்டும். நாம் அதைக் கண்டுபிடிக்க வேண்டும். சிருஷ்டிக்க அங்குச் சத்தியம் தேவை. அது சக்தியுள்ளது, திறனுள்ளது, விவேகமானது என நாம் அறிய வேண்டும். தீமையை நாம் எப்படி ஏற்பது? அது உள்ள இடத்தில் உள்ளபடி நாம் அதைத் தீமை எனலாம். நம்மை விட தீமை பலமானது என ஏற்க முடியாது. மனித குலத்திற்கு உள்ளுணர்வுண்டு. நல்லதும் கெட்டதும் அது அறிந்ததே. தீமையை மனித குலம் நாடவில்லை. நல்லதையே நாடுகிறது, அதுவும் விவேகமாக நாடுகிறது. சிருஷ்டியில் நல்லதே முடிவானது.

உலகம் மாயையில் முடியவில்லை. அது கேலிக்கூத்தாகும். அதுவே இரகஸ்யம் இரகஸ்யம் என்பது வெற்றிதரும் நல்லது.வலுவான தீமையில் இரகஸ்யமில்லை. அது ஆன்மா ஏற்றுக் கொண்டது. ஆன்மா தன்னைப் பூர்த்தி செய்ய முயல்கிறது. ஏமாற்றத்தை நாடவில்லை.

பிரம்மம் என்பது மட்டுமே உலகம். அதைத் தாண்டி எதுவும் இல்லை. வெளியிலிருந்து பிரம்மத்தை வற்புறுத்துவது எதுவுமில்லை. தன்னுள்ளே பகுதியானது தன்னையே வற்புறுத்துகிறது எனவும் நாம் கூற முடியாது. எதிரான சக்தி பிரம்மத்தினுள் பகுதியாக இருந்து பிரம்மத்தைக் கட்டாயப்படுத்துகிறது எனக் கூற முடியாது. ஏற்கெனவே விலக்கிய முரண்பாட்டை தோட்டத்து வழியாக மீண்டும் உள்ளே கொண்டு வருவதாகும். பிரம்மமே எல்லாம் எனில், வெளியிலிருந்தோ, உள்ளிருந்தோ பிரம்மத்தை வலியறுத்துவது ஒன்றுள்ளது என எப்படிச் சொல்ல முடியும்? புருஷன்பொறுத்துக்கொள்கிறான் எனலாம். இந்த முரண்பாட்டையும் புருஷன் பாரபட்சமின்றி பொறுத்துக் கொள்ளலாம். இந்தச் சிருஷ்டி வேண்டும் என்றது எது? அது பிரம்மம் தவிர வேறு ஒன்றாக இருக்க முடியாது. பிரம்மம் துண்டாடப்படுவதில்லை. அதனால் பகுதி என்பதில்லை. உலகில் எது நடந்தாலும் அதை வேண்டுவது பிரம்மமே. நம் ஜீவியம் பகுதியானது. அது தீமையைக் கண்டு பயப்படவில்லை. தான் உற்பத்தி செய்த தீமையிலிருந்து பிரம்மத்தைக் காக்க நாம் முயல்கிறோம். அதற்காக நாம் எதிராக ஒன்றைக் கற்பனை செய்கிறோம். மாயை, மாறன், தீமை, பிசாசு என்கிறோம். இது ஒரே கடவுள், புருஷன், ஜீவாத்மாக்கள். அவன் சிருஷ்டி. எனவே ஜீவாத்மா அவன் பிரதிநிதியே.

உலகம் மாயை, கனவு, தவறு என்கின்றனர். அதைச் சிருஷ்டித்தது பிரம்மமே, சிருஷ்டித்தது மட்டுமன்று, காப்பதும் பிரம்மமே. இக்கனவு எங்கிருக்கிறது? அது பிரம்மத்திலிருக்கிறது. எதனாலானது அது? அது பிரம்மத்தாலானது. இவ்வுலகின் அடிப்படை எது? பிரம்மமே இவ்வுலகைத் தன்னுட் கொண்டுள்ளது.தங்கத்தால் செய்யப்பட்ட பாதத்திரம்; தங்கம் உண்மையானால், பாத்திரம் உண்மையில்லை என எப்படிச் சொல்வது? கனவு, மாயை என்பவை சொற்கள், வெறுஞ் சொற்கள்; அவை பேச்சுப்பாணி. இச்சொற்களைப் பயன்படுத்துவது நம் வழக்கம். இச்சொற்கள் ஓர் உண்மையை பிரதிபலிக்கின்றன. சில சயமங்களில் அது பேருண்மை. ஆனால் இச்சொற்கள் ஓர் உண்மையை மாற்றியும் கூறவல்லவை. நிர்வாணம் பூஜ்யமில்லை என்றோம். அதேபோல் கனவும் பிரமையில்லை. கனவு என்பது உண்மையின் உருவம்.

பரம்பொருளை நாம் அறிந்தோம். உலகமும்,நிர்வாணமும், அதன் இரு முனைகள். அவை எதுவும் பரம்பொருளை ரத்து செய்யவில்லை. இரண்டும் பரம்பொருளின் இரு நிலைகள். அதிகபட்சம் பரம்பொருளை நாம் அறிந்ததெப்படி? இப்பரம்பொருள் புருஷன், சக்தி, ஆனந்தம். உலகின் பிரச்சினைகளை நாம் உணர்வால் அறிவதற்குப் பதிலாக, ஞானத்தால் அறிய முயலுவோம். முரண்பாடு விலகும், விலகி சுமுகம் ஏற்படும். பிரச்சனை வந்த பொழுது நாம் என்ன செய்வது? ஞானம் வரும்வரை நம்பிக்கை வேண்டும். பரம்பொருளைத் தேடிப் போகும் புனித யாத்திரைக்கு இறைவன் நமக்களித்த ஊன்றுகோல் இக்கொள்கை.

********



book | by Dr. Radut