Skip to Content

03. The Refusal of the Ascetic - 3

3. சன்னியாசியின் துறவறம்.

நாம் வாழும் உலகைத் தாண்டி பிரபஞ்சத்தை எட்டினால் அங்கு ஜடமும், ஆன்மாவும் ஒன்று எனக் காண்கிறோம் எனப் பார்த்தோம். அதுவே முடிவன்று. அதைக் கடந்த நிலையில் பரம்பொருளுளது. அதன்முன் நம் உலகம் ஒன்றுமேயில்லை, சிறியது, குறுகியது. பரம்பொருள் உலகை அனுமதிக்கிறது, பொறுத்துக் கொள்கிறது எனலாம். மறுக்கவும் முடியும்.

நாத்திகனுக்கு நாம் வாழும் உலகமே முடிவானது எனில் சன்னியாசிக்குப் பரம்பொருளே முடிவானது என்பது சரியன்றோ? பூமியைத் தொடலாம், உணரலாம், மனிதர்களைப் பார்க்கலாம், பேசலாம், எனவே அவை நிஜமென அறியலாம் என நாத்திகன் நினைக்கின்றான். பிறப்பு,இறப்பு, அழிவு இல்லாத ஆன்மாவைக் கண்ட துறவி அதையே முடிவானதாகக் கொள்வதை நாம் புரிந்து கொள்ள முடியும். மனம் தூய்மையான அனந்தத்திலிருந்து விலகி தன்னுணர்வால் உலகைச் சிருஷ்டித்து அதில் மாய வாழ்வு வாழ்வதாகச் சன்னியாசி கருதுகிறான்.

ஒருவரின் தீவிரத்தை ஏற்கும் நியாயம், அடுத்தவரின் தீவிரத்தையும் ஏற்க வேண்டுமன்றோ? ஜடமான உலகை புலன்கள் உணர்கின்றன. ஜடமில்லாமல் சூட்சுமமாக உள்ள எதையும் பலன்களால் அறிய முடியவில்லை என்பதால் சூட்சும உலகமேயில்லை எனப் புலன்கள் கூறுகின்றன. தத்துவத்தின் தர்க்க ஞானம் இவ்வாதத்தை ஏற்காது. ஜட உலகிலும் புலன்கள் அறிய முடியாதவை உள்ளன. நிரூபிக்க வேண்டிய முடிவை முதலிலேயே ஏற்று வாதித்தால் வாதம் சரி வராது.

சூட்சுமமான உலகம் இருப்பதோடு, சூட்சுமமான புலன்களிருப்பதும் உண்மை. இச்சூட்சுமப் புலன்களால் ஜடப் பொருள்களை அறிய முடியும். வேறு உலகங்களை நமக்கு இவை உணர்த்த முடியும். அவை நம் அனுபவங்களினின்று வேறுபட்டவை.

மனிதன் சிந்தனை செய்ய ஆரம்பித்த நாளிலிருந்து, நம்மை மீறிய ஞானம் ஒன்றுண்டு என அறிவான். கொஞ்ச நாளாக உலகம் அதை ஏற்க முன்வந்துள்ளது. Telepathy பிறர் மனத்தை அறிவது என்பதை எளிதில் மறுக்க முடியாது. பரம்பரை ஞானமே முடிவானது எனக் கருதுபவர்கள் எவ்வளவு பெரிய அறிஞர்களாக இருந்தாலும் புதியதை ஏற்க முடியாது.

விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் சூட்சுமச் சக்திகளைக் கண்டு பிடித்த முறைகள் உலகம் ஏற்கக் கூடியதல்ல. என்றாலும் நம் புலன்கட்கு புலப்படாத உண்மைகளை அவை கண்டுள்ளன. எனவே அவற்றை மறுக்க முடியாது. ஆராய்ச்சியை முறைப்படுத்த வேண்டும் என்பது சரி, ஜடமான உலத்தின் சத்தியமும், சூட்சும உலகின் சத்தியமும் முடிவில் ஒன்றேயாகும்.

வேறு உலகங்கள் உள்ளது உண்மை. அவை தம் சட்டப்படி இயங்குகின்றன. அவை ஜட உலகின் நிகழ்ச்சிகளை நிர்ணயிக்கின்றன. உலகமும், மனிதனும், புலன்களும் நாடக அரங்கங்களே. அடிப்படை உண்மை என்பது ஜீவியம், ஜீவியம் ஏற்பதே உண்மை. தங்களை ஏற்கும்படி அவை ஜீவியத்தை நாடுகின்றன. ‘உலகம் என்றொன்றில்லை, ஜீவியம் அனுமதிப்பதே உலகம்’ என நாம் நெடுநாளாகக் கேள்விப்படுகிறோம். பதிலாக ‘உலகம் எதையும் பொருத்ததன்று, அது தானே இயங்குவது’ என்கிறார்கள். அது தத்துவம், என்றாலும் உலகம் உண்மையா என்று அது ஒரு கேள்வியை எழுப்புகிறது. மனித வாழ்வை நிர்ணயிக்க அக்கேள்விக்குப் பதில் தேவை.

நாத்திகத்தை முடிவாக எடுத்துக் கொண்டால், வாழ்வு என்பது ஓர் அவசியம். அதன் நிர்பந்தங்கள் பல, “இதை வாழ்ந்தாக வேண்டுமன்றோ?” என்ற நிலையைக் கண்டு முடிந்த வரை இவ்வாழ்விலுள்ள சந்தோஷத்தை அனுபவிப்போம் என முடிவு செய்ய வேண்டியிருக்கும். அல்லது மனிதனாய்ப் பிறந்து விட்டோம் நம்மாலான நல்லதை உலகுக்கு முடிந்தவரை செய்து, இருந்தவரை இருந்துவிட்டு நேரம் வரும்போது போய்ச் சேருவோம் என்று நினைக்கத் தோன்றுகிறது. என்ன இருக்கிறது, உடலில் தெம்பு இருக்கும்வரை உழைப்போம். செய்வதை நல்லதாகச் செய்வோம். மனம் என்று ஒன்றுண்டன்றோ? நல்லதும் கெட்டதும் மாயைதானே என்று பேசுகிறோம். துறவிக்கு வாழ்வு மாயை என்றால் நாத்திகனுக்கு வேறு வகையில் வாழ்வு மாயையாகிறது. வாழ்விலிருந்து தப்ப முடியாது, வாழ்ந்தாக வேண்டும். இன்றிருக்கிறது, நாளைக்கில்லை. எல்லாமே தோற்றம்தானே? உலகை அநித்தியம் என்றால், மனிதனும், மனித வாழ்வும் அர்த்தமற்றதாகத் தெரிகின்றன. மனம் நிர்வாணத்தை நோக்கிச் செல்கிறது. அல்லது பிரம்மத்தை நாடி வாழ்வை விட்டுப் பிரிகிறது.

தர்க்கமும், சிந்தனையும் பலன் தாரா. எந்தப் பாதையாகச் சென்றாலும் முடிவு தெரிவதில்லை. பிரபஞ்சமோ, சத்திய ஜீவியமோ உடலால் கட்டுப்படுத்தப்படாதவை. அவற்றிற்குத் தெளிவுண்டு. உடலில் வாழும் மனிதனுக்கு அத்தெளிவு இல்லை. உடல் அழியும் பொழுது தானும் அழிவதே உயிரன்றோ? தொன்றுதொட்டுள்ள இப்பிரச்சினையைத் தீர்க்க வழி என்ன? ஒன்று நம் ஜீவியம் வளர வேண்டும் அல்லது மனமும் உடலும் அளவு கடந்து மாற வேண்டும்.

ஜீவியம் வளர்வது எனில் என்ன? உடலில் வாழும் மனிதன் விரிந்து தன்னைப் பிரபஞ்சத்தின் ஆத்மாவாக உணர வேண்டும். சாட்சி என்பது மனிதனில்லை. சாட்சி என்பது பிரபஞ்சத்தின் ஆத்மா. அது மனித மனமன்று. அமைதியாக, அனாதி காலம் தொட்டு உலகிலும், மனிதனிலும் வாழும் அது பிரபஞ்சத்தின் தலைவனாகும். மனமும் புலன்களும் அதன் கருவிகளே.

இன்றைய உளவியல் பிரபஞ்சத்தை ஏற்கிறது. ஏற்கிறது எனில் அதன் செயல்களையும், சக்திகளையும் கண்ணால் காண முடிகிறது. என்றாலும் அதை ஒரு மாயை, பிரமை என்றே கொள்கிறது. இந்தியர்களுக்குப் பிரபஞ்சம் என்றுமே நிதர்சனம். அகந்தையைக் கடந்து அடைய வேண்டிய இலட்சியம் என்பதை நாம் நெடுநாளாக உணருவோம்.

அகந்தையைக் கடந்து அவ்வுலகத்தில் நுழைந்தால், பிரபஞ்சத்தைக் காண்கிறோம். அங்கு நாம் மாறுவது தெரியும். புலனுணர்வே அடிப்படையாக மாறுகிறது. கல்லும், மண்ணும், பூமியும், ஜடமும் எல்லாம் ஒன்றே என்ற உணர்வு ஏற்படுகிறது. ஒன்றேயான ஜடம் பல மனிதர்களாகவும், பல பொருள்களாகவும் பிரிந்து நிற்பதையும், பிரிந்தவை ஒன்று மற்றதுடன் உறவாடத் தொடர்பு கொள்வதையும் காண முடிகிறது. அதைப் போல் மனமும், வாழ்வும், பொதுவாக ஏற்பட்டு பலவாகப் பிரிந்து நிற்பது தெரிகின்றது. மேலும் போக நினைத்தால் போகலாம். பல கட்டங்களைத் தாண்டிச் சென்றால் சத்திய ஜீவியத்தைக் காணலாம். அதுவே மையம், உலகை சுழலச் செய்வதும் சத்திய ஜீவியமே. இப்பிரபஞ்சம் நமக்குத் தெரிவதோடு மட்டுமன்று, மேலே படும் காற்றை உணருவதுபோல் உணரமுடியும். இதுவரை மனிதன் என நாம் உணர்ந்ததுபோல, இன்று பிரபஞ்சத்தை உணர முடியும். நம் மனத்தை அறிவது போல் பிறர் மனத்தை அறிய முடியும். நம் உடல்போல பிறருடல் தெரியும். பிறர் மனத்தை நம் எண்ணத்தால் செயல்பட வைக்க முடியும். இதுவரை நம்மால் முடியாத காரியங்களையும் செய்ய முடியும். உலக நிகழ்ச்சிகளின் போக்கை மாற்ற முடியும்.

அறிவைவிட்டகன்று ஜீவியத்தை அடைந்தால், பிரபஞ்சத்தைக் காண்கிறோம். நாமறிந்த உலகை விட, பிரபஞ்சம் என்பது உண்மை. அதன் சக்தியும் உண்மை. நாம் அதை உணர்வதும் உண்மை. நாம் எப்படி உலகை உண்மை என அறிகிறோமோ, அதே போல் உலகம் பிரபஞ்சத்தை உண்மை என்றறிகிறது. உலகம் தான் பிரபஞ்சத்தின் பகுதி என்று புரிந்து கொள்கிறது. வேறு என்று காணவில்லை. ஜீவன் வேறு ஜீவியம் வேறு என்றில்லாமல் உணரும் அனுபவம் பிரபஞ்சத்தை இதுபோல் காண முடியும். கனவு, மாயை, புதிய சிருஷ்டி என்ற எண்ணங்கள் மறைந்து, “இது உண்மை,சத்தியம், என்ற தெளிவு எழுகிறது. ஜீவியத்தில் வாழ்வதால் தான் உலகமிருக்கிறது. ஜீவியத்தின் சக்தி – ஜீவனோடு ஒன்றிய சக்தி – உலகைச் சிருஷ்டித்தது என்பதால் உலகம் ஜீவியத்தின் உண்மையாகும்.

ஜடம் நித்தியம். உலகம் ஜடத்தின் உருவம். அது பொய்யன்று என்பதை மனிதன் காண முடிகிறது. இந்த ஜீவன் சத்திய ஜீவியத்தின் உயிர். இது பிரபஞ்சத்தைக் கடந்தது. இது பிரபஞ்சத்தை நம்பி வாழவில்லை. தானே, தன்னளவில், தன சுய சக்தியால் சுமுகமாக வாழ்வதாகும். நாம் ‘அது’ –‘THAT’ என்பது இதுதான். உலகம் இதை நம்பி வாழ்கிறது. இது உலகத்தை நம்பி வாழவில்லை. பிரபஞ்சத்தினுள் நுழைவதைப் போல் பிரபஞ்சத்தைக் கடந்து நிற்கும் இதனுள்ளும் நாம் நுழைந்து நிலைக்கலாம். அந்நிலையில் நாம் பிரபஞ்சத்தைக் கடந்து, அது தேவையில்லை என்ற நிலைக்கு வருகிறோம், என்றால் நாம் பிரபஞ்சத்தை உதறி விடவேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. பிரபஞ்சத்திற்கும், அதைக் கடந்து நிற்கும் இதற்கும் என்ன தொடர்பு?

கடந்த நிலையை உபநிஷதம் விளக்குகிறது. அதன் வாயிலில் ஆண்டவன் நிற்கிறான், (self, Spirit)ஜோதிமயமாய் சுத்த சிவமாய் உலகைக் காத்து, அதனுள் வதியும் ஆத்மா, ஆண்டவன் இதுவே. அசைவால் நகராமல், இரண்டாகப் பிரியாமல், சுதந்திரமாய், ஒன்றாய், கடந்த நிலையில் மௌனம் அங்கு காத்திருக்கிறது. படிப்படியாக வாராமல், நேரடியாக மனம் தன்னிலையிலிருந்து அங்கு வந்தவுடன், தன்னை இழந்து தவிக்கின்றது. அசைவு அங்கு இல்லை. மோனத்திலிருக்கிறது இவ்வுலகமென மௌனம் குடிகொண்டிருப்பதால், மனம் செயலற்றுப் போகிறது. மனம் ஆழ்ந்து பெறும் ஆன்மீக அனுபவம் அது. நிர்வாணம் இதன் பின்னேயுள்ளது. பகுத்தறிவுவாதி இறைவனை மறுத்ததைப்போல் சன்னியாசி முடிவான மௌனத்தில் காலை எடுத்து வைத்துவிட்டபின் உலகைத் துறக்கிறான். பகுத்தறிவுவாதிக்கு மாற்றுண்டு. சன்னியாசி கண்டது பெரியது என்பதால் அவனால் மாற முடியாது. மாற்றம் எளிதன்று.

ஆத்மா வாழ்வைத் துறக்கும் இந்நிகழ்ச்சி ஒரு புரட்சி. 2000 ஆண்டுகளாக புத்தர் செய்த இப்புரட்சி இந்நாட்டை ஆட்கொண்டுள்ளது. மாயை என்றாலும், மற்றதை நம்பியவர்கள், சொல்லப் போனால் எல்லா ரிஷிகளும் சன்னியாசியின் துறவறத்தை எதோ ஒரு ரூபத்தில் ஏற்றுக்கொண்டனர். எனவே “சொர்க்கம் இங்கில்லை, சொர்க்கத்தை நாடினால் உனக்கு இங்கு வேலையில்லை” என்ற குரல் எல்லாத் திசைகளினின்றும் எழும்பியது. பிருந்தாவனமும், பிரம்ம லோகமும் நிர்வாணத்திற்குரியவை என்பதை உலகம் ஏற்றது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ரிஷிகளும், மகான்களும், ஏற்றது ‘உலகைத் துறத்தல் அவசியம், ஆண்டவனின் அழைப்பை ஏற்க பிறப்பை அழிக்க வேண்டும்’ என்பதே.

மனிதகுலம் தன் பெருநெறியிலிருந்து வழிதவறி இதுபோல் இறங்கிவிட்டது என நினைப்பது இயல்பு. உண்மையில் பெருநெறி பூர்த்தியாக மனித குலத்தின் முழுமுயற்சியின் ஒரு கட்டமாக இது அமைகிறது.

நம்முடைய நிலை என்ன? நாம் நாடுவது பகுதியன்று, முழுமை. உலகம் ஒரு பகுதி எனில், ஆத்மாவும் ஒரு பகுதியே. ஆத்மாவும் உலகமும் சேர்ந்த முழுமையை நாம் நாடுகிறோம். வேதாந்தம் அனைத்தும் ஒன்றே என்று கூறியதுடன் சர்வம் பிரம்மம் என்றும் கூறியது. ஏகன், அநேகன் என்ற இவ்விரண்டையும் பொருத்திப் பார்ப்பது அவசியம். மனிதனுடைய பக்தி ஆர்வத்தை நன்கு அறியும் நாம், இறைவன் நம்மை நாடி வருவதை அதுபோல் தெளிவாக அறிய முயலவில்லை. ஆன்ம விளக்கம் பெற்ற பேறு ஜடத்திற்குக் கிடைக்கவில்லை. தபஸ்வி ஆன்மாவின் அனைத்து நிலைகளையும் அறிந்ததைப்போல் அறிவியல் உலகையும், வாழ்வையும், ஜடத்தையும் ஆராய்ந்து முடிக்கவில்லை. சன்னியாசி ஆத்மாவை உணர்ந்த தெளிவை நாம் வேதாந்தம் அறிந்ததைப்போல் அறியவில்லை. நாத்திகன் உலகத்திற்குச் செய்த தொண்டு பெரியது என்ற நாம் சன்னியாசியின் சேவையின் உயர்வையும் அறிய வேண்டும். விஞ்ஞானம் பெருநெறி, ஆனால் அதன் முறைகள் குறுகியவை. குறுகிய முறைகளை மறுத்து அதன் உட்கருவை நாம் ஏற்க வேண்டும்.

ஆரிய முன்னோர் அடைந்த ஒருமை இயற்கையோடிணைந்த வாழ்வு. அதற்கடுத்த உயர்ந்த நிலை – இறைவனோடிணைந்த வாழ்வு – எது, எப்படி அடைவது என்ற ஆன்மீகப் பொறுமையுடன் நாம் அதை நாட வேண்டும்.

********



book | by Dr. Radut