Skip to Content

03. The Materialist Denial - 3

2. நாத்திகனின் மறுப்பு

இனி அமர வாழ்வை அறிவு ஏற்க முடியும் என்று சென்ற அத்தியாயத்தில் கண்டோம். ஜடமான இருள் நிறைந்த உடலில் ஒளிமயமான உருவமற்ற ஆன்மா தன் ஆட்சியை பிரதிஷ்டை செய்வதைப் பகுத்தறிவு ஏற்க வேண்டுமானால் ஏதோ ஓர் அளவில் இவையிரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும். ஆன்மா என்ற உயிருக்கு உடலென்ற ஆடை அமைந்தது என்பதை நம்மால் ஏற்க முடியவேண்டும். அதுபோன்ற அடிப்படையின்றி தெய்வீக வாழ்வு சாத்தியம் என பகுத்தறிவு ஏற்கும் என எதிபார்ப்பது நடவாத ஒன்று.தோற்றத்தின் பின்னால் துலங்கும் ஒளி நம் புலனுக்குப் புலப்பட்டால், ஜடத்தின் உள்ளொளி ஆன்மா என உபநிஷதம் கூறுவதை நம் மனம் ஏற்குமானால், “ஜடமே பிரம்மம்” என நாமும் உணர்ந்தால், அவர்களுடைய உருவகமான, “இறைவனின் உயிருக்குப் பிரபஞ்சமே அலங்காரமான அணி” என்பதை நாம் ஏற்றால், உடலும் உயிரும் பிரியவேண்டிய நிலை, பிரித்துணர வேண்டிய அவசியம் ஏற்படாது. பகுத்தறிவு ஒரு வாதத்தை முழுமையாக ஏற்க நாம் அதன் வாதங்களுக்கெல்லாம் பதிலிறுக்க வேண்டும். ஜடமும், ஆன்மாவும் ஒன்று என்பதை ஏற்க வேண்டுமானால்,.அவற்றிடையேயுள்ள மனமும், வாழ்வும், சத்திய ஜீவியமும், இவ்விருமுனைகளான ஜடமும் ஆன்மாவும் ஒரே வகையானவை. ஆனால் பலதரத்தானவை என்றும் நாம் கொள்ள வேண்டியிருக்கும். மரமும், கிளையும், இலையும், மலரும், காயும், பழமும் நமக்கு வேறுபட்டுத் தோன்றினாலும், மைக்கிராஸ்கோப் அடியில் அவற்றின் செல்கள் எல்லாம் ஒரே அமைப்பானவை. அமைப்பு ஒன்றே, தரமும், தோற்றமும் வேறு என்பதாலேயே மரத்தில் பூ பூக்கிறது. பழம் பழுக்கிறது. மரத்தில் பேப்பர் உற்பத்தியாக முடியாதல்லவா? ஜடமும் ஆன்மாவும் ஒன்றாக இருக்கவேண்டுமெனில் அவற்றை இணைக்கும் அம்சம் அவை இரண்டிலும் இருக்க வேண்டும். அவற்றிடையேயுள்ளவற்றிலும் இருக்க வேண்டும். அது உண்மையில்லாவிட்டால் நம் வாதம் செயற்கையானதாகவோ, பொருத்தமற்றதாகவோ அமையும்.

ஆன்மாவே அனைத்தும் என்பது ஒரு வாதம். ஆன்மா என்பதே இல்லை என்பது அடுத்தவர் நிலை. உலகமே இயற்கை. அது தானே இயங்குகிறது என்பவர் கடவுளில்லை என்ற முடிவுக்கோ, வாழ்வு வேண்டாம் என்றோ சொல்லும்படியாகும். சிந்தனைக்குத் தெளிவு வேண்டும். வாழ்வுக்கு நிலை வேண்டும். எனவே ஒன்றைப் பற்றுதல் அவசியம். சிந்திப்பவனுக்கு முடிவாகத் தெய்வம் என்பது கற்பனையாகக் காட்சியளிக்கிறது. வாழ்வே முடிவெனில் அனைத்தும் மாயை என நினைக்கவேண்டியிருக்கின்றது. வாழ்வு கசந்து போகிறது. அல்லது தன்னை மறந்த தவத்தில் முழ்கி விடுகிறது. தன்னையும் தன அமரத்வத்தையும், கடவுளையும் விட்டு விலங்கு நிலைக்கு இழிகிறது. புருஷனுக்கும், பிரகிருதிக்கும் எந்த ஒற்றுமையும் காணோம். புருஷன் அசைவற்றவன். பிரகிருதி ஜடமானது. சங்கருருடைய புருஷனோ, மாயையோ ஒற்றுமைக்கு வழிகோலுவதாகத் தெரியவில்லை. அகண்டமாயை அகண்ட மௌனத்தில் முடிந்தால் ஜடம் எப்படி பிரம்மமாகும்?

நாத்திகனுக்கு அத்தனையும் சக்தி. இதையே முடிவாகக் கொள்ளமுடிவதில்லை. ஜடம் புருஷனைப்போல் முடிவான பதிலை அளிப்பதில்லை. சிந்தனை சிறந்தது. அதைக் கடைசிவரை பின்பற்றாமல், நிலையற்றதை நிலையானது என வர்ணித்தால் சிந்தனை ஏற்கப் போவதில்லை.

சங்கரருடைய மாயையையோ, நாத்திகனுடைய இயற்கையையோ மனம் முடிவாக ஏற்றுத் திருப்தியடையப் போவதில்லை. ஞானம் உதித்து, ஜடமே பிரம்மம், பிரம்மமே ஜடம் என்பதுபோன்ற முடிவு தேவை என்பது சிந்தனையின் இலட்சியம். ஞானத்திற்குரிய முடிவு முரண்பாடற்றது. மேல்மனத்தில் வாழும் மனிதனுக்குரியதல்ல அது. உள் மனத்தெளிவை நாடினால் அது கிட்டும். வாழ்வையும், மனத்தையும் தெளிவுற ஆராய்ந்தால் ஞானம் உதயமாகும். அல்லது உள்ளுறை உணர்வில் அவற்றைக் கருதினால் அவை ஒன்று சேர்வதைக் காணலாம்.உலக நிகழ்ச்சிகள் ஆயிரம். பல முகங்கள் கொண்ட பரம்பொருளை நாம் முகத்தைப் பார்த்தறிய முடியாது. ஆயிரம் முகங்களும் அவனுடையன என்பது தெளிவு தரும். உபநிஷதம் கூறும் பிரம்மம் சிருஷ்டியின் லீலைக்குப் பின்னணியில் ஜோதிமயமாய், ஆனந்தரூபமாய், ஏகனாய், அநேகனாய் நிற்கிறது. எண்ணம் சிந்தனையால் அவனைக் காணும். ஏகனான பிரம்மம் அநேகனாகக் காட்சியளிப்பதைச் சிந்தனைகண்டு மகிழும்.

வேதம் இறைவனை உலகமாகவும், உலகத்தை இறைவனாகவும் கண்டது. அதற்கு வேறுபாடு தெரியவில்லை. சிந்தனை எழுந்து, ஆராய்ச்சியை எழுப்பி, உலகம் இரு கூறுகளாகப் பிரிந்துவிட்டது. ஆன்மிகத்திற்குரிய சந்நியாசி ஒருபுறமும், இயற்கையின்றி எதுவுமில்லை என்ற நாத்திகன் மறுபுறமும் நிற்கிறார்கள். இறைவனையும், இயற்கையையும் எதிமுனையில் நிறுத்திவிட்டார்கள். நாமும் அதை ஏற்கலாம். ஒன்றை ஆராய்ந்து பின் அடுத்ததைக் கருதலாம். சிந்தனை இதுவரை தோற்றால், அடுத்த கட்டத்தில் வீரியமாகச் செயல்படும். முனைந்து முடிப்பதே சிந்தனையின் பாங்கு. முடியாது என்பதை ஏற்பது அதற்கில்லை. எண்ணத்தின் கற்பனையையும் உணர்ச்சியின் மாயையையும் ஒரு நேரம் சிந்தனை ஏற்றால், சிந்தனைக்கு அவை முடிவல்ல.

சிந்தனையின் ஆதி பரம்பொருள். நாத்திகனின் கருவியாகச் செயல்பட்டாலும், சிந்தனை தன் ஆதியை மறப்பதில்லை. உலகத்தில் தான் சஞ்சாரம் செய்யும்பொழுது திரைமறைவில் தன் பின்னால் இறைவன் இருப்பதை அது உணரக்கூடியது. தாகூர், மகரிஷி தேவேந்திரன் மகன். கீதாஞ்சலி பாடியவர். நோபல் பரிசு பெற்றவர். ஆனால் ஆங்கில நாகரீகம் தலைதூக்கிய காலமாதலால் தாம் மதத்தைப்பற்றி எழுதிய நூலை ‘Religion of Man’ என்று தலைப்பிட்டார். ஐன்ஸ்டீன் விஞ்ஞான மேதை. அவர்கள் சந்தித்த பொழுது, ‘உங்கள் கொள்கையின் கரு என்ன?” என்றார். “என் மதத்தின் மையம் மனிதன்” என்றார் தாகூர். “அப்படியானால் உங்களைவிட எனக்கு அதிக தெய்வ நம்பிக்கை இருக்கிறது. தெய்வம் மையமில்லாத மதத்திற்கு ஜீவனில்லை”” என்றார் ஐன்ஸ்டீன். அவர் சிந்தனையின் சிகரம். ஆனால் சிந்தனையைக் கடந்த நிலையில் உள்ளதை மறப்பதில்லை.

1946இல் கல்கத்தாவில் பெருங் கலவரம். போலீஸ் அடக்கியது. I.G. பெருமிதத்துடன் போலீஸ் சேவையை விவரித்தார். அடுத்த ஆறு மாதத்தில் போலீஸ், இராணுவம் உள்பட செயலற்றபின் நிலைமை மீறியது. மகாத்மா வந்தார். கலவரம் அடங்கியது. அதே I.G. இது இராணுவத்தால் அல்ல, ஒரு மனிதனால் நடந்தது என்றார். அளவு கடந்த ஆர்ப்பாட்டத்தின்பின் அமைதியான ஆன்மா ஆண்டவனாக இருப்பதை நாம் உணர முடியும்.

ஜடத்தை ஆராயும் விஞ்ஞானம் முடிவைக் கண்ட திருப்தி படலாம். சச்சிதானந்தத்தை எட்டிய தவசி ஆன்ம திருப்தி அடையலாம். இடைப்பட்ட தத்துவங்கள் இந்த அளவும் அறிவைத் திருப்தி செய்ய முடியாது.

அறிவால் வாழ்வின் பகுதிகளைத்தான் பார்க்க முடியும். அறிவின் கருவி மொழி. மொழி செயல்பட வேண்டுமானால் முழுமையை விலக்கி பகுதியை விளக்க வேண்டும். மனிதனை, சொல் முழுமையாக விளக்க முடியாது. மனிதனை, தோற்றம், உருவம், குணம், படிப்பு எனப் பல பகுதிகளாகப் பிரித்தால், ஒவ்வொன்றையும் தனித்தனியாகச் சொல் விளக்கும். அதேபோல் வாழ்வு பல ஆயிரம் பகுதிகளாலானது. சொல் ஒரு பகுதியை மட்டும் கூறக்கூடியது. சிந்தனை தன விளக்கத்திற்குச் சொல்லை நாடுவதால், சிந்தனை முழுமையை அறிய வழியில்லை. எனவே அத்தனைப் பகுதிகளுக்கும் பொதுவான ஒன்றைக் காண முயல்வது சிந்தனை. இம்முயற்சி மிகப் பெரியதானதால், தன்னால் முடிந்ததை மட்டும் அறிய ஏதாவது ஒன்றை மனம் நாடுகிறது. இதைத் தவிர்த்து சிருஷ்டியின் முழுமையை மனமும், அறிவும் தழுவினால், மனம் தன்னை மறந்து, தன் நிலையைக் கடக்கும். அல்லது தன் இயலாமையையும் மீறி, உலகில் உள்ள அத்தனைக் கூறுகளையும், மனம் சந்தித்து, சிந்திக்க முடியுமானால், மீண்டும் தன்னைக் கடந்து, “முடிவானது அது” என்ற முடிவுக்கு வரும்.

பாதை எதுவானாலும் முடிவு “அது”வேயாகும். பிரயாணத்தை முடிக்காவிட்டால் அவனுக்கு “அது” புலப்படுவதில்லை.

ஆஸ்திகனும், நாத்திகனும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாதம் செய்தனர். நாத்திகனுடைய விஞ்ஞானம் நடத்தாத சோதனைகளில்லை. தபஸ்வி, ஞானி, முனிவர், யோகி, மதகுரு, அவதாரங்கள், தத்துவ ஞானி, சந்நியாசி ஒரு வகையில் உலகைத் தங்கள் தபோபலத்தால் ஆண்டவர்கள். அவர்கள் வாதமும் வலுவானது. இன்றைய நிலை என்ன? மனிதகுலம் எதை ஏற்றது? ஒன்றை விலக்கி அடுத்ததை ஏற்றதா? இரு கூறுகளாகப் பிரிந்து நிற்கிறதா? உலகம், மனிதன், மனித வர்க்கம் என்பது எதையும் ஏற்கவில்லை. இவை இரண்டையும் ஏற்க மறுத்தது நாம் செய்த பாக்கியம். ஐரோப்பா விஞ்ஞானிக்குரியது. இந்தியா சந்நியாசியினுடையது. விஞ்ஞானம் வெற்றி பெற்ற ஐரோப்பாவில் ஆன்மிகம் தோல்வியடைந்தது. ஆன்மிகம் தழைத்த இந்தியாவில் வாழ்வு வறண்டது. சிந்தனையும் அடங்கவில்லை, திருப்தியும் படவில்லை.

ஜடத்தையும், ஆன்மாவையும் தழுவிய கொள்கை, முழுமையின் அடிப்படையில், மனித வாழ்வின் பூரணத்துவத்தின் அடிப்படையில் முழுமையுள்ள வளமாக வர்ணிக்கும் நேரம் இது.

ஆன்மாவுக்கும், பரம்பொருளுக்கும் உள்ள தொடர்பும், ஜடத்திற்கும் பரம்பொருளுக்கும் உள்ள தொடர்பும் வேறுபட்டவை. அதேபோல் அவர்கள் மறுப்பும் வேறுபட்டவை. விஞ்ஞானி வேகமாக இறைவனை மறுப்பதை உலகம் விரும்புகிறது, விரும்பி ஏற்கிறது. இருந்தாலும் இதற்கு வலுவில்லை. தவசியின் மறுப்பு ஆபத்தானது. விஞ்ஞானியின் மறுப்பை அவன் வாதமே ஏற்க முடிவதில்லை.

(Agnosticism)எதையும் நம்பமுடியாது என்ற பகுத்தறிவு, அப்படிச் சொல்லும்பொழுதே, நம்புவதற்கொன்றுளது, இது அது அல்ல என்று கூறுவதாகும். நீ சொல்வது பொய் என்றால், மெய்யென்று ஒன்றுளது என்று ஆகுமல்லவா? கண்களால் கண்டதை நம்பலாம், காதால் கேட்டதை ஏற்கலாம், புலனுக்குப் புலப்படுவதே உண்மை என்பது பகுத்தறிவு. அப்படிப் பேசினால், அவர்கள் எல்லை குறுகியதாகவே இருக்கும். தனக்குத் தெரிந்தது மட்டுமே உண்மை. தனக்குத் தெரியாதது இல்லை என்றால், அவர்களுக்கு ஆன்மாவின் உண்மை மட்டுமல்ல, எந்த உண்மையையும் உணர்த்த முடியாது.

இக்கூற்றை அஸ்திவாரமாகக் கொண்டவருக்கு மற்றவர்கள் தண்டனை கொடுக்கத் தேவையில்லை. அவர்கள் சிறுமதியே அவர்கட்குச் சிறந்த தண்டனையாகும். பரந்த உலகம், விரிந்து பெருகும் கல்வி ஞானம், புதிய உன்னதமான திறமைகள் ஆகியவை இந்நோக்கால் விலக்கப்படும். ஆவி உலகத்தை ஏறெடுத்துப் பார்க்கமாட்டார்கள். தன வாழ்வுக்கும், அறிவுக்கும் உட்பட்ட அளவுக்கே இவற்றைக் கருத அவர்கள் சம்மதிப்பார்கள்.

மனத்தையும், சத்திய ஜீவியத்தையும் ஆராய்ந்தால், நாம் அறிவது வேறு. புலனறிவுக்கு உட்பட்ட கருத்தையே கருதுவேன் என்ற தடையை மனதிலிருந்து விலக்கினால், ஏராளமான உண்மைகள், கருத்துகள், நிகழ்ச்சிகள், அனுபவங்கள் வெளிப்படும்.

பிரபஞ்சத்தின் புலனுக்குப் புலப்படாத ஏராளமான விஷயங்கள் உள்ளன என்பதும் தெளிவாகும். அவற்றை நாம் அறியலாம், புலனே, ஜடமே உலகை நிர்ணயிக்கின்றது என்று நாம் நம்பும்பொழுது, நாமறிந்த புதிய விஷயங்கள் புலனையும், ஜடத்தையும், உலகத்தையும், நிர்ணயிக்கின்றன எனவும் அறியலாம்.

இவ்வனுபவம் பகுத்தறிவின் அஸ்திவாரத்தைத் தகர்த்து விடுகிறது. அதைவிட உயர்ந்த அறிவைத் தேட நாம் தயாராகிறோம்.

பகுத்தறிவு உலகை ஆண்டது குறைந்த காலமே. ஆனால், மனித குலத்திற்கு இதனால் ஏற்பட்ட பலன் அதிகம். பகுத்தறிவைக் கடந்து எழும் அனுபவங்களும், நிகழ்ச்சிகளும் ஏராளம். அவற்றால் பயன் பெற பயிற்சியால் பக்குவமான புத்தி தேவை. பக்குவமில்லாத அறிவு அதைப் பாழ் செய்யும். விபரீதக் கற்பனைக்கும், ஆபத்தான விளக்கங்களையும் அவரால் உற்பத்தி செய்ய முடியும். சத்தியத்தின் வித்திலிருந்து கோணல் மடமையை அவர்கள் உற்பத்தி செய்வர். இவருடைய அர்த்தமற்ற போக்கு ஞானம் வளரத் தடையாக நிற்கும். உண்மைகளைச் சேர்த்து அறிவிலிகளிடமிருந்து மறைக்க வேண்டிய நேரமிருந்தது. அந்நேரம் ஏற்பட்ட குறைகளை அகற்ற பகுத்தறிவு செய்த சேவை பெரியது.

புலனறிவு மனிதனுக்கு விளக்கமானது, தெளிவானது. புலன்களைக் கடந்த நிலையிலுள்ள சக்திகள் உடலில் செயல்படும் பொழுது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயன்றால், அவை உண்மையை உறுதிப்படுத்துவதற்கு பதிலாக, உபத்திரவத்திற்குத் தெளிவளித்து, விபரீதத்தை விளைவிக்கவல்லவை. பக்குவமற்றவர்கள், கட்டுப்படாத உணர்வு உடையவர்கள், ஆன்மிக உலகை எட்டும் பாதையில் காலடி எடுத்து வைத்தால், இது ஆபத்தை விளைவிக்கும்.

முன்னேற்றத்தை நாடும் அறிவு தெளிவாக, தூய்மையாக, கட்டுப்பட்டதாக இருப்பது அவசியம். நடைமுறையை நாடி தன் குறைகளை அறிவு நிறைவு கொள்ள வேண்டிய நேரமும் உண்டு. சூட்சும உலகின் அறிவையும், ஆற்றலையும் நாடுபவன் கால் தரையில் பலமாக ஊன்றியிருப்பது அவசியம். தரையில் பலமாக நிற்பவனாலேயே சூட்சும உலகச் சக்தியை வெல்லமுடியும் எனவும் கூறலாம். உபநிஷதமும் அதையே கூறுகின்றது. முதலிடமும், முடிவானதும், பூமாதேவியே. பிரபஞ்சத்தின் ஆத்மாவை வர்ணிக்கும்பொழுது உபநிஷதம் தரையில் நிற்பதாகவே வர்ணிக்கிறது. பூவுலகில் எந்த அளவு நாம் பறந்து செயல்படுகின்றோமோ, அந்த அளவு உயர்ந்த ஞானமும் விரிந்து நிற்கும். பிரம்ம வித்தைக்குட்பட, இதுவே சட்டம்.

பகுத்தறிவின் ராஜ்யத்தைக் கடந்து வருமுன், புதிய திறமைகள், சக்திகள் நம்மை முழுமையாக வந்தடையுமுன், நாம் ஒரு சிறிய சக்தியையும் எறிந்துவிடக்கூடாது. புதிய திறமைகள், நம்முள் வந்து, பழைய திறமைகளை மாற்றும்வரை காத்திருப்பது முறை. நாத்திக வாதம் உலக அறிவை ஆயிரம் மடங்கு விரிவுபடுத்தி இறைவனுக்குச் சேவை செய்ததை நாம் போற்ற வேண்டும். மனிதன் வாழும் இவ்வுலகில் குறையும், தவறும், கோணலும், வக்கிரமும், சத்தியத்திற்கு வழிகாட்டும் தேவதைகளாகும். தவறு என்பது சத்தியத்தில் பாதி. முழுமையில்லாததால், தடம் புரளுகிறது. சத்தியம் மாறுவேடம் பூண்டு குறையின் உடை அணிந்து நம்மையறியாமல் இலட்சியம்வரை வரும் தன்மையும் உடையது. நாம் கடந்து செல்லும் இக்காலம் ஒரு வகையில் பொற்காலமாகும். தவறு கண்மூடித்தமான, கர்வமான கோணலாகவுமிருக்கலாம். அல்லது பாதி உண்மையாகவுமிருக்கலாம். அப்படியிருந்தால்,அதன் வரையறைக்குள், நியாய மனப்பான்மையுள்ள, கண்டிப்பான, சுத்தமான, நம்பிக்கையான சேவகனாகத் தவறு அமைய முடியும்.

எதையும் நம்ப மறுப்பதை (agnosticism) அறிவுக்குரிய முடிவான சட்டமாகக் கருதலாம். பிரபஞ்சம் என்பது நாம் ஏற்கும் பண்புகளின் பின்னல் எனலாம். நாம் வகுப்பதே நம் வாழ்வு என்பதை நாம் அறிவோம். ஒரே ஊரில் ஒரே திறமையுள்ள பலர் பல நிலைகளில் வாழ்வதைக் காணலாம். நியாயம் பேசும் வக்கீலாகவும், வரி கட்டாத முதலாளியாகவும், சேவைக்குரிய தலைவனாகவும் அவர்கள் மாறி வாழ்வது ஊரால் அல்ல; அவர்கள் உளப்பாங்கால். எந்த வகையில் வாழ்வை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ, வாழ்வு அவ்வகையில் அவர்கட்கு வாகை சூட்டுகிறது. நாம் தபஸ்வியாகவோ, விஞ்ஞானியாகவோ, நாத்திகனாகவோ, அறிவாளியாகவோ, தத்துவஞானியாகவோஇருந்தால், பிரபஞ்சம்வாழ்வாகமாறி,தவமாகவும்,விஞ்ஞானமாகவும், நாத்திகமாகவும், அறிவாகவும், தத்துவமாகவும் நம்மை வந்தடையும்.

“அது” நமக்குக் காட்சி அளித்தால், “அது” சொல்லுக்கு அப்பாற்பட்டது எனத் தெரியும். சொல்லுக்கு அகப்படாதது, எண்ணத்திலும் அகப்படாது. மனத்தையும் தாண்டியது எனவும் புரியும். மாயாவாதிகள்போல் அதை மிகைப்படுத்தியும் கூறலாம். நம்மால் அறிய முடியாததை மனிதனால் அறியமுடியாதது என்றும் சொல்லலாம். சொல்லுக்கும், அறிவுக்கும் புலப்படவில்லை என்பதை நாம் அப்பாற்பட்டது, அப்பாலுக்கும் அப்பாலானது என்கிறோம். எண்ணத்திற்குப் பிடிபடாதது, எதற்குமே பிடிபடாது என்பதில்லை. ஜீவியத்தின் பெரு முயற்சிக்கு பிடிபடமுடியுமல்லவா? உயர்ந்த நிலையில், இரண்டறக் கலக்கும் நிலையில் ஒரு ஞானம்உண்டு. அந்த ஞானத்திற்கு “அது” புலப்படும். ஆனால் அதைச் சொல்லாலோ, எண்ணத்தாலோ எடுத்துச் சொல்லமுடியாது. அது சித்தித்தபின், நாம் அதை நம் நிலைக்குரிய வகையில் மனதால் மாற்றி அறிகிறோம். நம்முள் அது ஒரு புரட்சியை ஏற்படுத்துகிறது. அதன்மூலம் நம் புறவாழ்வு புரட்சிகரமாக மாறுகிறது.

சமூகத்தில் இது போன்ற புரட்சிகள் பல முறைகள் நடந்துள்ளன. ஆடு மாடு ஆகியவற்றை உணவுப் பண்டமாகக் கருதியவர்கள் அவற்றிற்கு ஆன்மா உண்டு என்றபின் பெற்ற மனமாற்றம் பெரிய அகப்புரட்சி. இன்று நாம் காய்கறிகளைச் சாப்பிடுகிறோம். மலர் கொய்வதையும், பழம் பறிப்பதையும், ஆட்டைக் கொலை செய்வது, மீன் பிடித்துச் சாப்பிடுவதாகக் கருதினால் அகத்தினுள் ஏற்படும் மாறுதல் எத்தகையது? அதனால் ஏற்படும் புறவாழ்வின் மாறுதலை இன்று கற்பனைசெய்யமுடியுமா? சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மனிதனுக்கு, தீண்டாதவன் வேதம் படிப்பது கொலைக் குற்றம். பெண்கள் யோகம் செய்வது யாகசாலையில் பீடி பிடிப்பது போல். பெண் சம்பாதிப்பது, ஆண்மைக்கு அவமானம். இன்று அவன் வந்தால், அவன் அகவுணர்வை நாம் அறியமுடியுமா? மனம் மாறி இன்று அவன் நம்போல் வாழ வேண்டுமானால், அவன் மனம் ஏற்கும் புரட்சி பெரியது.

இன்று நாம் சுத்திக்கு உயிருண்டு, வேலைக்காரனும் அண்ணனும் சமம், பணத்தைவிட மனிதன் உயர்ந்தவன் என ஏற்றுக்கொண்டால், எப்படி மனம் மாற வேண்டும்? அதனடிப்படையில் செயல் எப்படி மாறும்? சுத்தியைத் தரையில் குழந்தைபோல் வைக்க வேண்டும், வேலைக்காரன் நம் உடன் உட்கார்ந்து சாப்பிட வேண்டும், உதவாக்கரை மனிதனுக்கு உயர்ந்த செல்வனுக்குரிய மரியாதை செலுத்த வேண்டும்.

இங்கு சொல்லப்படும் ஞானம் இது போன்றது, ஆனால் நம் மனத்தைத் தாண்டிய சட்டத்தில் உள்ளது. ஓரளவு இது புரிய உதவும் கற்பனைகள் சில.

  1. நரசிம்ம அவதாரம் ஹிரண்யனை கிழித்தபோழுது அவன் பெற்ற ஆன்மிகப் பேரின்பத்தை நாம் அறிய வேண்டும்.
  2. துரியோதனன் தொடையில் பீமன் அடித்ததை சூட்சும உலகின் வீரம் என உணர்ந்து போற்ற வேண்டும்.
  3. கோபிகைகள் கிருஷ்ணனோடு இணைந்ததால் அவர்கள் கற்புநிலை மனித விஸ்வாசத்திலிருந்து தெய்வ உறவுக்கு உயர்ந்ததை அறிந்து நாமும் அதை விழைய வேண்டும்.

மேலும் அந்த ஞானம் இறைவனின் திருவுருவத்தை சிருஷ்டி மூலம் வெளிப்படுத்துவதை நாம் இறைவனை நம்மிடமிருந்து ஒளிக்கும் உபாயமாகக் கருதுகிறோம். ஆண்டவனின் அருட்கொடையை வாழ்வு அளித்த கர்ம தண்டனையாக நாம் கருதும் மனப்பான்மையை இங்கு பகவான் குறிக்கிறார். இது உச்சகட்ட ஞானமில்லை. நம் நிலையிலிருந்து ஒரு படி உயர்ந்த ஞானம். நாத்திகவாதம் நம்மை ஜடத்தோடு இணைக்கிறது. அதிலிருந்து விடுபட்டு உயர்ந்தவுடன் கிடைக்கும் பலன் இது.

நாம் அறியாதது, அறியமுடியாததல்ல. அறியும் முயற்சியை மேற்கொள்ள மறுத்தாலன்றி, இது அறிய முடியாததல்ல. இன்று நாம் உலகில் அறியமுடியாதவற்றை எல்லாம் அறியும் வகை பிரபஞ்சத்திலுண்டு. மனிதனுக்கு அத்திறன் மறைந்த நிலையிலுள்ளது. அதை வெளிக்கொணரமுயன்றால் அவை வெளி வரும். நாம் அவற்றை வளர்க்க விரும்பாமலிருக்கலாம். வளர்த்தால் வளரும். அடிப்படையில் பிரபஞ்சத்திலுள்ள ஞானமெல்லாம் மனித அறிவுக்குப் புலப்படக் கூடியதேயாகும். இயற்கையின் பரிணாம உந்தல் மனிதனுள் இருப்பதால், மனிதச் செயலை அறிவு தடுத்து நிறுத்த முயன்றால், அது பலிக்காது. ஜடத்தை நாம் ஆராய்கிறோம். விஞ்ஞானம் பிறக்கிறது. விஞ்ஞானம் `பிறக்கும்வரை இருளில் தூங்கி சுகம் பெற்ற அறிவு விழித்துக்கொண்டால், இதுவரை பெற்றச் சுகத்தை மறந்து, அது புதிய அறிவைத் தேடும். “புறப்படு, மற்ற அரங்கங்களைத் தேடு” என்று வேதம் அன்று கூறியது நடக்கும். எந்த அறிவு ஜடத்தில் முடங்கி, முன்னேற்றத்தை எதிர்த்ததோ, அதே அறிவு நம் கட்டுக்கடங்காமல் வீறு கொண்டு எழுந்து ஞானத்தை தேடும். அதைத் தடுக்கும் சக்தி உலகிலில்லை.

விஞ்ஞான வளர்ச்சியெனில் அளவு கடந்து பெருகும் வாழ்க்கை வசதிகளும், நவீன சாதனங்களும் ஆனால், முன்னேற்றம் அளவு கடந்து தாமதமாகும். விஞ்ஞானம், பகுத்தறிவு, நாத்திகம், எதையும் நம்ப மறுக்கும் மனநிலை (agnosticism) என்பவை ஞானத்தின் கரு. ஞானம் என்பது ஜோதி வடிவானது. ஜோதியின் ஆதி பிரம்மம். அறிவு என்பது மனித மூலையில் எழுவது. மூளை உடலின் பகுதி. உடல் ஜடமான மண். ஜடத்தை உற்பத்தி செய்தது ஜோதியின் ஆதி. ஜடமான மூளையில் உதித்த அறிவு, பிரம்மத்தில் பிறந்த ஜோதியின் எழுச்சியைத் தடுக்கவல்லதல்ல.

புலனறிவைத் தாண்டும் மனம் பகுத்தறிவையடைய தன்னுள் பெரு வேகத்தைக் கிளப்பியது. அவ்வேகம் தணியாத ஒன்று. வளரக் கூடியதுமாகும். அதைக் கட்டுத்தறியினின்று அவிழ்த்த பின் தடுக்க முடியாது. வளர்வதையும் தடுக்க இயலாது. அதே வேகம் அடுத்த எல்லையைத் தடுக்க உதவும். முதல் எல்லையைக் - புலனறிவு – கடந்த பின், அவ்வேகம் அடுத்த எல்லையை – பகுத்தறிவை – கடக்கும் எல்லையைத் தாண்டி, நாம் மேற்சொன்ன ஞானத்தை அடைய உதவும். அதன் ஆரம்ப அறிகுறிகள் உலகில் ஏற்கனவே தென்படுகின்றன.

ஞானம் முடிவில் அனைத்தும் ஒன்றே – சர்வம் பிரம்மம் – என்றறியவல்லது, என்பது மட்டுமல்ல, எந்தப் பாதை வழியாகச் சென்றாலும், ஞானத்தின் பெருவழிகள் அனைத்தும், ஒரே இலட்சியத்தில் சேர்வதைக் காணலாம்.

வேதாந்தம் என்பது உபநிஷத காலத்தியது. பிற்காலத்தில் தத்துவ ஞானம் ஏற்பட்டு அத்துவைதம், துவைதம், விசிஷ்டாத்துவைதம் ஏற்பட்டபொழுது, அவற்றை வேதாந்தம் என உலகம் அறியும். வேதம் முந்தைய காலத்தது. உபநிஷதம் பிற்காலத்தில் ஏற்பட்டது. வேதம் ஆரம்பித்தத்தை முடித்தது உபநிஷதம் என்று அதை வேதாந்தமென்றனர். வேத காலத்தில் ரிஷிகள் சச்சிதானந்தத்தை கண்டனர். அதை “சத்” என்றனர். அதைக் கடந்து அசத் –Non-being, - நிர்வாணம் – என்பதை உபநிஷதம் நமக்குணர்த்தியதுடன் சத், அசத், என்ற இரண்டும் பகுதிகளே. இவையிரண்டும் சேர்ந்த முழுமை இவற்றுக்கப்பாலுள்ளது என்றது. அதைப் பிரம்மம் என்றனர். உலகமும், மனிதனும் அதையே பிரம்மம் என்று கூறி அனைத்தும் ஒன்றே என்று முடித்தனர். ஆத்மாவை நாட அவர்கள் முடிவில் கண்டது அனைத்தும் ஒன்றே என்பதாகும். விஞ்ஞானி ஆத்மாவை ஏற்கவில்லை. ஜடத்தை நாடினான். அவற்றின் தன்மையை அறிய முற்பட்டான். கரி, உப்பு, தங்கம், ஆகியவற்றை ஆராய்ந்து அவை அணுக்களுடன் கூட்டத்தால் (molecules) அமைந்தவை என்றான். அதன் அடிப்படை அணு என்று முடிவு செய்தபின்னும், ஆராய்ச்சி தொடர்ந்தது. அணுவைப் பிரித்துச்செய்த சோதனையில் அது ஒரு சக்தி (energy)என்று முடிவான முடிவுக்கு விஞ்ஞானி வந்துள்ளான். அனைத்தும் சக்தி என்பது இன்றைய விஞ்ஞானம். அன்றைய உபநிஷதம் அனைத்தும் ஒன்றே என்றது. ஆன்மிகத்திற்கெதிரான வேறு பாதையின் முடிவும், ஆன்மிகப் பாதையின் முடிவும் ஒன்றே.

அனைத்தும் ஒன்றே.

என்ற ஒரே முடிவை, ஆன்மிகமும், விஞ்ஞானமும், வெவ்வேறு பாதைகளில் சென்று கண்டன.

விஞ்ஞான முடிவை, உபநிஷதத்தின் சொற்களோடு ஒப்பிட்டால், உபநிஷதம் கூறியதன் அர்த்தபுஷ்டி விளங்கும், பிரபஞ்சத்தின் சக்தி ஒரே விதையை எண்ணிலடங்காத பொருட்களாகச் செய்துள்ளது என்ற உபநிஷத சொல்லை இன்றைய விஞ்ஞான முடிவு வேறு பாஷையில் கூறுகிறது. கூறியபின் அதன் உயர்ந்த உட்கருவை நாம் ஆழ்ந்து கருத வேண்டும் என்று சொல்வதுபோல் அமைகிறது.

நாமறியாத சக்தியாக ஜடத்தைக் காண்கிறோம்.வாழ்வு ஒரு புதிர். தேவைக்குக் கட்டுப்பட்ட உணர்வின் உருவமாக நாம் வாழ்வைக் காண்கிறோம். வாழ்வையும், ஜடத்தையும் பிரிக்கும் அறியாமை விலகினால், அவையிரண்டும் சக்தியின் அலைகளாகத் தெரியும். மனமும் அது போலிருக்கும். வேதம் கூறிய உண்மை புலப்படும். கல்லான ஜடத்திலிருந்து மனம் பிறந்தது என்ற கருத்தும் ஆட்டம் கொடுக்கும். உலகத்தைச் சிருஷ்டித்த சக்தி (energy)திறனெனப்படும் will உறுதியாகவே நாம் அறிவோம். உறுதி என்பது ஜீவியம் செயல்படுதலேயாம்.

உறுதி உண்டென்றால் அதற்கென்ன வேலை? எப்படிச் செயல்படுகிறது? செயல்படாமலிருக்க உறுதியால் (will) முடியாதல்லவா? தான் சிருஷ்டித்த உலகில் தான் மறைந்து (involution)பின்னர் வெளிப்படுவதே (evolution) வேலை. மனிதனில் அவ்வுறுதி என்ன செய்யும்? முடிவற்ற வாழ்வு, எல்லையற்ற ஞானம், அளவில்லாத சக்தியைத் (power)தேடுவதே மனிதனில் அவ்வுறுதி செயல்படும் வகையாகும். விஞ்ஞானம் மரணத்தை அழிக்க முயல்கிறது. அதன் அறிவுத் தாகத்திற்கு அளவில்லை. எதையும் மனிதனால் செய்ய முடியும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. காலத்தையும், தூரத்தையும் விஞ்ஞானம் பெரிய அளவுக்கு சுருக்கிவிட்டது. ஆயிரம் வகைகளில் மனிதனை, வாழ்வைடவிடச் சக்தி வாய்ந்தவனாகச் செய்ய முயல்கிறது. கடந்தகால கர்மங்களையும், அதன் பலன்களையும் அவனைப் பாதிப்பதினின்று விஞ்ஞானம் அவனை விடுவிக்க முயல்கிறது. வரையறை, அளவு என்பதும், முடியாது என்பதும் தங்கள் சக்தியை இழக்கின்றன. எதை மனிதன் உறுதியாக நாடுகிறானோ அதை முடிவில் அவன் சாதிப்பதுபோல் தெரிகிறது. மனித குலம் ஒன்றை நாடினால் எப்படியும் சாதிக்கிறது. இது தனி மனிதனுடைய திறனல்ல. சமுதாயத்தின் திறனாகும். மனித குலத்தின் எண்ணமே, தனி மனிதனில் செயல்படுகிறது. கவனித்தால் இது மனித சமுதாயத்தின் எண்ணமாகத் தெரியவில்லை. இறைவனின் திருவுள்ளம் மனித சமுதாயத்தை ஓர் அரங்கமாக்கிச் செயல்படுவதாக நாம் அறியவேண்டும்.

இறைவன் மனிதனில் இயங்குவதல்லாது வேறென்ன இது? அனந்தன், ஏகன், அநேகன், எல்லாம் வல்லவன், எல்லாம் உணர்ந்தவன் மனிதனை நரனிலிருந்து நாராயணனாக்கி, அவன் மூலம் செயல்படுவதல்லவா? தன்னை அநேகனாகவும், எல்லாம் உணர்ந்தவனாகவும், எல்லாம் வல்லவனாகவும் அறிந்த இறைவன், மனிதனை தன்னைப்போல் மாற்றும் செயலல்லவா இது? ரிக் வேதம், “அழியும் மனிதனுள் அழியாதது இறைவன். தன்னை மனிதனுள் பிரதிஷ்டை செய்து தெய்வச் சக்தியை மனிதனுள் இறைவன் எழுப்புகிறான்” என்று கூறிற்று.

இன்றைய உலகம் தன்னை அறியாததுபோல், இறைவனின் திருவுள்ளத்தையும் அறியாது. தன்னிச்சையாகச் செயல்படுவதாக நினைத்துச் செயல்படும்பொழுது, தான் இறைவன் திருவுள்ளத்தை அறியாமல் பூர்த்தி செய்வதை அறியவில்லை.

ஒரு வரையறை, தடை என்பதுண்டு. அறிவு செயல்பட அரங்கம் தடை. அவன் சக்தி (power)செயல்பட குறுக்கே நிற்பது ஜடமான கருவியாகும். இதிலும், சமீப காலத்து நிகழ்ச்சிகள் சுதந்திர உலகத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. விஞ்ஞான அறிவின் வளர்ச்சி ஜடத்திற்கும், வாழ்வுக்குமுள்ள தூரத்தைக் குறைக்கிறது. பெரும் பலன் தரும் மெஷின்களை மறையும் அளவிற்கு விஞ்ஞான தொழில் நுணுக்கம் மாற்றி அமைக்கிறது. கம்பியில்லா தந்தி இயற்கையின் எண்ணத்தை செயலில் பிரதிபலிக்கிறது. ஜடமான மின்சாரச் சக்தி செல்லும் கம்பியை விஞ்ஞானம் விளக்கியது. இரு முனைகளிலுமே ரேடியோ எனும் இயந்திரம் உள்ளது. அதுவும் காலப்போக்கில் அழியும். சூட்சும உலகின் சட்டங்களை நாம் சரிவர அறிந்தால், ஜடசக்தியை – மின்சாரம் போன்றவை –(physical energy)பற்றும் முறையைக் காணலாம், வேண்டிய இடத்திற்கு அனுப்பலாம். அது புரிந்தால் பெரிய கதவு திறக்கும்.

ஜடத்தையும், அதையொட்டியுள்ள சக்தியையும் வென்றாலும், தடை, அளவு, லிமிட் என்பதிருக்கும். அகந்தை என்பது அகத்திற்குரிய கருவி. அது கரைந்து மறைவதே கடைசி தடை. இன்று பலவாகவுள்ள நாம் ஒன்றோடொன்று ஒத்துழைக்க முயல்கிறோம். அது நம் இலட்சியத்தை எட்டப் பயன்படாது. நாமும், பிறவும் ஒன்றே (unity)என்ற சட்டம் நடைமுறையில் இயங்க வேண்டுமானால் அகத்தின் தடையான அகந்தை, புறத்தில் மறைந்த கம்பிபோல மறைந்து, மனிதகுலம் அனந்த கோடி மனிதகர்களாலானதல்ல, ஓரே மனித ஜீவியம் பல ஆயிரம் மனிதர்களாகக் காட்சியளிக்கிறது என்ற மேலுலகச் சட்டம் நடைமுறையில் அமுலுக்கு வர வேண்டும்.

பிரபஞ்ச ஞானத்தின் சிங்காசனம் தன் பரந்த சாம்ராஜ்யத்தின் மையத்தில் வீற்றுள்ளது. மனித குலம் ஒரு குலம், உலகம் ஓன்று என்ற இராஜ்யத்தின் அதிபதி அகந்தை அழிந்த நான் எனும் மனிதன்.

இறைவனின் சுபாவம் மனித வாழ்வில் செயல்பட்டு முழுமுதற் கடவுள் முழுமுதற் ஜீவனாகும் லோகம் அது.

*********



book | by Dr. Radut