Skip to Content

03. The Human Aspiration - 3

இதயத்தின் எழுச்சி.

இதய ஜோதி இறைவன். இறைவன் மனிதனாகப் பிறந்தான். சிருஷ்டியை சிறப்பிக்க பிறந்தவன் மனிதன். மனிதன் சிருஷ்டியில் இறைவன். சச்சிதானந்தம் ஜடமாகவடிவமைத்து ஜடத்திற்கு மனித உடலென்ற உருவமளித்து, அவ்வுருவத்தினுள் உயிரையும், உயிரின் உள்ளே ஜோதியாகவும் இறைவன் தங்கி, சிருஷ்டியில் தான் மலர்வதை காண விழைவதே மனித வாழ்வின் புற உருவம்.

இதயத்துள்ளுறையும் ஒளி புற உலகை ஜோதியாகக் காண்கிறது. உள்ளிருந்து உடல் மூலம் மலர்ந்து புற உலகின் ஜோதியோடு கலக்கும் பாதையை அது நாடுகிறது. தன்னை அதற்குரிய சுதந்திரமாகக் கருதுகிறது. ஜடமான உடல் மலர முடிவதில்லை. மரணத்தை நோக்கிச் செல்லும் உடலால் அழிவை ஏற்க முடிகிறது. அமர வாழ்வை அறிந்து, தன்னுள் உள்ள இருளை ஒளியாக மாற்ற அதனால் முடியவில்லை. அதன் இயலாமையை இதய ஜோதி ஏற்கவில்லை.

புற உலகின் ஒளி முழுமையான ஜோதியல்ல. இருள் கலந்த நிலையே அதனிருப்பிடமாகும். ஒளியில் கலந்த இருள், இதய எழுச்சியின் பாதையில் தடையாக வெளிப்பட்டு, சுதந்திரமில்லை என அறிவிக்கிறது. சுதந்திரமே சுய உருவம். நானே சுதந்திரம். நானே ஜோதி. நானே அமரத்துவம். நானே இறைவன் என உள்ளொளி எழுகிறது.

அன்றெழுந்த ஆர்வக்கனல், மனித குலத்தை இன்றும் அலங்கரிக்கிறது. இறைவனே மனிதனாக இங்கு எழுந்தருளியிருப்பதால், புற உலகின் இருளும், சூழ்நிலையின் தடையும், உடலின் இயலாமையும், அவனுக்கு தடையில்லை. தடையை மீறி, திரையை விலக்கி, இருளை அழித்து வாழ்வில் சுதந்திரத்தையும், உடலில் ஒளியை அமரத்துவமாகவும், இதய கமலத்தை இறைவனின் இருப்பிடமாகவும் மாற்றி அமர வாழ்வை அமைக்க அவன் முனைந்து உள்ளான்.

இறைவனும், ஜோதியும், சுதந்திரமும், அமர வாழ்வும் ஆதி மனிதனுக்கு இலட்சியங்களாக அமைந்தன. ஆதி மனிதன் இவற்றை இலட்சியமாக ஏற்ற பொழுதும், இவை அவதார புருஷனுக்கே உரியவை. அவதாரத்திற்குரியதை ஆதி மனிதன் ஏற்றால் அது அவன் மனதில் நிற்பதில்லை. இவை மனித குல இலட்சியங்களானதால் ஒருவன் மறந்தால், குலம் மற்றொருவர் மூலம் இதை நினைவுபடுத்துகிறது.

அந்தகாரத்தில் அனைவரும் மூழ்கிய நிலையில் ஒருவர் தம் தபோவலிமையால் அமர வாழ்வு பெற்றாலும்,பெற்றவர் சமூகத்தின் எதிரியாகி புரட்சி எழும். அனைவரும் உணர்ந்து அமர வாழ்வை ஏற்றால் அமைதியான மாற்றம் ஏற்படும்.

ஆன்மா ஏற்பதைச் சமூகம் ஏற்காது, எதிர்க்கும், பகுத்தறிவு ஏற்காது, கேலி செய்யும். அறிவு ஆன்மாவுக்கு உள்ள நிலையை சுட்டிக்காட்டி உறுத்தும். அழியும் உடலை எப்படி அழியா ஜீவனாக்க முடியும்? துன்பத்தையே உரிமையாகப் பெற்ற வாழ்வை எப்படி பிறவா இன்பத்தை அனுபவிக்கச் செய்ய முடியும்? இருளை மட்டும் அறியக் கூடிய மனத்தை எங்ஙனம் சத்திய ஜோதியை வெளிப்படுத்தச் சொல்ல முடியும்? என்று அறிவும் சிந்தனையும் பகுத்தறிவின் பார்வையில் ஆன்மாவுக்கே சவால் விடும்.

சாமானியன் சாதாரணமானவன். அவன் ஆன்மாவை உணர்வதில்லை. அவன் அறிவு அனைவரும் பெற்ற அறிவு. பகுத்தறிவின் பார்வையைப் பவித்திரமாக அவன் கொள்வான். உலகம் உச்சகட்டத்தை எட்டியதாக அவன் அறிவான். இந்நிலையை மாற்ற முடியும் என அவனுக்குத் தோன்றாது. தோற்றமே முடிவு என்றவனுக்கு புதியது தோன்ற வழியில்லை.

அதுவே முடிவல்ல. மனம் விசாலமடைந்தால், அறிவு உயரும். உயர்ந்த அறிவின் பார்வைக்கு முரண்பாடுகள் தெரியா. எதிர்க்கும் இரு முனைகள் வளரும் பாதையின் இரு கிளைகளாகத் தெரியும். எதிர்ப்பால் இரு முனையை ஏற்படுத்தி வளர்ச்சியை வகுப்பது பிரகிருதியின் போக்கு என்று பரந்த மனம் காணும். இது சிருஷ்டியின் இரகசியம். சூட்சுமமும் கூட.

அறிவின் விரிவு ஆன்ம விளக்கமாகும். அறிவுக்கு இயற்கையே முடிவானது. ஆன்மா, இயற்கையைத் தன் பகுதியாக அறிவதால், அறிவுக்குள்ள தடை ஆன்மாவுக்கில்லை.

முரண்பாடு இயற்கை நியதியாதலால், புறவாழ்வை நிரப்புவதைப்போல் அது அகவுணர்விலும் நிறைந்துள்ளது. மனிதனுக்கு முரண்பாடு விலக்கு, பிரச்சினை தலைவலி. இயற்கைக்கு முரண்பாடு வளரும் முறை, பிரச்சினை வாழ்வின் வரப்பிரசாதம்.

சென்ற நுற்றாண்டு மனிதன் ஒருவன் இன்று வந்து அவன் விட்டகன்ற உலகத்தைக் கண்டால், அது பூலோகமாக அவனுக்குத் தோன்றாது, பூலோகச் சுவர்க்கமாக இருக்கும். தேவேந்திரன் கொலுவாகக் காட்சியளிக்கும். விஞ்ஞானம் நம்மை வியப்பில் ஆழ்த்தியவாறுள்ளது. நாம் விலக்குவதுபோல் இயற்கையும் முரண்பாட்டை விலக்கியிருந்தால் இது நடந்திருக்காது. உணர்வின் உந்தலே உச்சகட்டமென வாழும் மனிதனை, தெளிவின் சிறப்பைப் பெற்ற மனம், தடுத்து, நிறுத்தி, சிந்திக்கச் செய்து, உணர்வே முடிவல்ல, உணர்வும் மனமும் இணைந்து செயல்பட வேண்டும், முரண்பாட்டை விலக்காதே, ஏற்காதே, உடன்பாடாக மாற்று என்றதன் விளைவு விஞ்ஞானம். அறிவுப்பிழம்பான மனம் இருண்ட உணர்ச்சியால் ஓடும் பிராணனை நிறுத்தி அத்துடன் இணைந்து செயல்பட்டு, முரண்பாட்டை மாற்றி உடன்பாடாக்கியதால், விஞ்ஞானம் ஏற்பட்டு, உலகை அற்புதங்களால் நிறைத்துள்ளது.

விலங்கு உடலுக்கு முரண்பாடு தெரிவதில்லை. மனம் முரண்பாட்டைக் காண்பதுடன், அதை உடன்பாடாக்கும் உபாயத்தை அறிவதால், மனம் மனிதனை முன்னேற்ற முடிகிறது. முரண்பாடு முதிர்ச்சி அடைந்தால் மனம் தன் முயற்சியை உயர்த்தி, சிறப்பான உடன்பாட்டை நாடுகிறது. முரண்பாடு முதிர்ந்தால் உடன்பாடு சிறக்கும். ஜடமான உடல் அசைய விரும்பாத இருள். அதி வேகத்தையே இயல்பாகப் பெற்றது பிராணன் எனும் உயிர். இயற்கை இவற்றை இணைக்க விரும்பியது. உடல் அசைய இசைந்தது. உயிர் வேகத்தை விட்டுக் கொடுக்க முன் வந்தது. அதன் விளைவாக எழுந்தது தமோகுணம். மந்தம், மடமை என நாம் இழிப்பது இயற்கையின் சிகரமான வெற்றி. இயற்கை தேவதை உடலையும், பிராணனையும் சுமுகமாக இணைக்க பட்டபாட்டின் பலன் வெற்றி பெற்று தமோகுணம் உற்பத்தியாயிற்று. இம்முயற்சியின் அடுத்த கட்ட வெற்றியே விஞ்ஞான அற்புதம்.

தொடர்ந்து இயற்கை தன முயற்சியைத் தொடர்கிறது. உயிரையும், உடலையும் சுமுகமாக இணைந்து செயல்பட வைத்தது போல், அடுத்த நிலையில் மனத்தையும் உடலையும் இணைக்கும் முயற்சியை இயற்கை மேற்கொண்டுள்ளது. இது பலித்தால் சத்தியஜீவன் பிறப்பான். பொய்யான காயம் மெய்யான திருவுடலாக திருவுமாற்றமடையும். அதன் நினைவு செயலாக மாறும். நினைத்தது நடக்கும். அதுவே அடுத்த கட்டம்.

உள்ளுணர்வு இறைவனை கண்டுவிட்டது. அதன் ஆர்வம் எழுந்து முனைப்பாக நிற்கிறது. ஆனால் சாதிக்கப் போவது உள்ளுணர்வில்லை. ஆழ்ந்து புதைந்திருப்பதால் அதனால் வாழ்வில் சாதிக்க முடியாது. வாழ்வில் மேலெழுந்தவாரியாக இருப்பது மனமும், பகுத்தறிவும். உள்ளுணர்வுக்குப் புரிந்தததை, பகுத்தறிவு புரிந்துகொண்டால் செயலாற்ற முடியும்.

ஏன் இந்த அற்புதம் நடக்கும்? எப்படி நடக்க முடியும்? என்பது பகுத்தறிவின் கேள்வி. பரிணாமம் அதற்கு விடையளிக்கிறது. உடலிலிருந்து உயிரும், உயிரிலிருந்து மனமும் பரிணாம வளர்ச்சியால் எழுகின்றது என்பது பரிணாமம். இதை நாம் அறிவோம். எப்படி, ஏன் என்ற கேள்விகளுக்குப் பதிலில்லை என்பதால் பகுத்தறிவு ஏற்காது.

வேதம் கூறுவது நமக்கு வேதவாக்கு. வேதாந்தம் பரிணாமம் சொல்வதை ஆமோதிக்கிறது. வேதாந்தம் கூறுவதை நாம் ஏற்கலாம். உடலிலிருந்து உணர்வும், உணர்விலிருந்து மனமும் எழுகிறது என்று ஏற்றுக் கொண்ட பின், மனத்திலிருந்து சத்திய ஜீவியம் பிறப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியும்.

மனிதனுடைய இறையார்வம் தணியாதது என்பதை நாம் இப்பொழுது காண்கிறோம். சச்சிதானந்தம் ஜடமாகி, ஜடம் விலங்காகி, விலங்கு மனிதனானதால், வெளி வரும் சச்சிதானந்த எழுச்சி மனிதன் மூலம் காண்பதால், மனித இதயம் கட்டுக்கடங்காதது என அறிகிறோம்.

மனிதன் இறைவனின் வெளிப்பாடாகிறான்
என்பது தெளிவு

எழுச்சியுள்ள சச்சிதானந்தம் மீண்டும் தன் இருப்பிடத்தை அடையும்வரை தணியாது என்பதால், அதன் கருவியான மனிதன் முயற்சியை மேற்கொள்வது முறை. இறைவனை நாடுவது இயல்பு.

காயகல்பம், அமர வாழ்வு என்ற ஆதி நாள் புதிருக்கு பகுத்தறிவு விடை பெற்றுவிட்டது. மனித குலம் கை விட்டதை மீண்டும் எழுப்ப வேண்டாம் என்பது ஒரு வாதம். இந்த வாதம் நிலைக்காது. இன்று கைவிட்டதை நாளை தீவிரமாகத் தேடுவது மனத்தின் இயல்பு. இதுவே பழைய மதங்களை அழித்து, புதிய மதங்களை ஸ்தாபித்தது. அறிவுக்குப் புரிந்த பின் ஆராய்ச்சி சிரமமாக இருப்பதால் கைவிடுவோம் என்பது ஒருவகை மூடநம்பிக்கை.

நாம் கைவிடலாம். பிரபஞ்சம் இம்முயற்சியைக் கைவிடப் போவதில்லை. பராசக்தியின் திருவுள்ளம் அதுவே என்பதால் நாம் அதைப் பூர்த்தி செய்ய முயல்வதே அறிவுடைமை.

சுருக்கம்:

பிறந்ததிலிருந்து மனிதன் இறைவனைத் தேடுகிறான்.

இறைவன் மனிதனை சுதந்திரமாகவும்,ஜோதியாகவும், அமர வாழ்வாகவும் அறிகிறான்.

முரண்பாட்டை உடன்பாடாக்கி உயர்வதே இயற்கையின் நியதி.

மனமும் உடலும் இணைந்தால் சத்திய ஜீவன் பிறப்பான். வேதாந்தக் கருத்தான இதை நாம் ஏற்றுப் பூர்த்தி செய்வது முறை.

பரிணாமத்தின் அடுத்த கட்டத்தை எட்டுவது உயர்ந்த மனித இலட்சியமாகும்.

The instinct of humanity and the intuition of MAN have seen the inevitability of the emergence of Superman. For it to be realized, the REASON of man should be convinced and his full energies released for the quest.

மனித குலத்தின் பிறவி இயல்பும், தனி மனிதனின் உள்ளுணர்வும் கண்டுகொண்ட அமர வாழ்வு பலிக்க பகுத்தறிவு அதை ஏற்று, முழு ஜீவனும் ஆர்வமாக முயல வேண்டும். முழு ஜீவனின் சத்திய வேட்கையைப் பூர்த்தி செய்ய ஜடம் சச்சிதானந்தத்தை வெளிப்படுத்துகிறது.

********



book | by Dr. Radut