Skip to Content

பகுதி 9

பிரம்மாவின்சிருஷ்டி:

உலகத்தைச் சிருஷ்டித்தவர் பிரம்மா என்பது பரம்பரையாக நாம் அறிந்தது. பிரம்மா (overmental god) மனத்தைச் சேர்ந்தவர். உலகம் (supermind) சத்திய ஜீவியத்தால் சிருஷ்டிக்கப்பட்டது என்று பகவான் ஸ்ரீ அரவிந்தர் விளக்குகிறார்.

நாட்டில் சட்டசபை சட்டம் போடுகிறது. கலெக்டர் போன்ற அதிகாரிகள் சட்டசபை இயற்றிய சட்டத்தை அமுல்படுத்துகிறார்கள். கலெக்டருக்குப் பெரிய அதிகாரம் உண்டு. நாம் கலெக்டர் சட்டம் போடுகிறார் என நினைத்தால் அடிப்படையில் நம் எண்ணம் தவறானது. கலெக்டர் (order) உத்திரவு போடுகிறார். கலெக்டர் ஆர்டர் போடுவதால், அவரே சட்டம் இயற்றுகிறார் என நினைப்பது அடிப்படைக் கோளாறு என்பதைப்போல், சிருஷ்டியை நாம் புரிந்து கொள்ள சத்திய ஜீவியம் உலகைச் சிருஷ்டித்தது, மனம் சிருஷ்டியின் கருவி என்றறிய வேண்டும். அடிப்படையில் தெளிவில்லாவிட்டால், பிறகு நம் எண்ணங்கள் சிதறும் என்கிறார் பகவான்.

சத்திய ஜீவியக் காட்சியை பகவான் அலிப்பூர் ஜெயிலில் கண்டார். Each is in all and all is in each ஒவ்வொருவர் நெஞ்சிலும் நான் என்னைக் காண்கிறேன். எனவே இதே தத்துவப்படி நான் என்னுள் பார்க்கும்பொழுது அனைவரையும் என்னுள் காண்கிறேன். இதுவே சிருஷ்டியின் தத்துவம்.

நான் ஒரு ஜீவாத்மா. உலகில் மற்ற எல்லா ஜீவராசிகளையும் ஞான திருஷ்டியால் காணும்பொழுது, ஒவ்வொருவர் நெஞ்சிலும், நான் என்னைக் காண்கிறேன். எனவே இதே தத்துவப்படி நான் என்னுள் பார்க்கும்பொழுது

அனைவரையும் என்னுள் காண்கிறேன். இதுவே சிருஷ்டியின் தத்துவம்.

மனம் நாணயத்தின் இரு பக்கங்களையும் ஒரே சமயத்தில் காண இயலாதது. நாம் நாணயத்தின் ஒரு பக்கத்தைக் (தலை) காணலாம். நாணயத்தைத் திருப்பி, அடுத்த (பூ) பக்கத்தைக் காணலாம். நாணயத்தின் முதற்பக்கத்தைக் கண்டவுடன் நாணயம் புரிந்துவிட்டது என நினைத்தால், நாம் நாணயத்தின் ஒரு பகுதியையே காண்கிறோம். மனம் பகுதி (part) அதனால் ஒரு சமயத்தில் ஒரு பகுதியை மட்டுமே காண முடியும். சத்திய ஜீவிய சிருஷ்டியின் உண்மையை மனம் இரு பகுதிகளாகப் பிரித்து (each is in all and all is in each) ஒவ்வொருவர் நெஞ்சிலும் நானிருக்கிறேன் என்ற முதற்பகுதியைக் கண்டது. கண்டதும் மனம் அத்துடன் நகர்ந்து வந்தது. இதனால் ஏற்பட்டது என்ன?

நான் எல்லோரிலும் இருப்பதால் எல்லோரும் எனக்கு உதவக் கடமைப்பட்டவர் என மனம் நினைக்கிறது. அடுத்த பக்கத்தைப் பார்ப்பதில்லை. பார்த்தால் அனைவரும் என்னில் இருப்பதால் நான் அனைவருக்கும் உதவ வேண்டும் என நினைக்க முடியும். மனம் முதற் பகுதியை மட்டும் அறிந்து உலகில் இன்றுவரை செயல்படுகிறது. இதை மனிதச் சமுதாயம் உலகெங்கும் உணர்ந்து ஒரு பழமொழியாக எல்லா நாடுகளிலும் வழங்குகின்றது.

Yours is mine ;mine is mine

உங்கள் வீட்டிற்கு வந்தால் என்ன கொடுப்பாய்?

எங்கள் வீட்டிற்கு வந்தால் என்ன கொண்டு வருவாய்?

சுயநலம் என்பது எப்படி உற்பத்தியானதை பகவான் தத்துவமாக மேற்சொன்னபடி விளக்குகிறார்.

சுயநலமின்றி, பரநலமாக நினைத்தால் நாம் மனத்திலிருந்து, சத்திய ஜீவியத்திற்குப் போகிறோம். அனைவரும் நம்முள் இருக்கின்றனர், அதனால் அனைவருக்கும் என் சேவை உரியது என்ற நோக்கம், நம்மை சத்திய ஜீவியத்திற்கு அழைத்துச் செல்கிறது. சத்திய ஜீவியம் அன்னை உறையும் உலகம். தொடர்ந்து பரநலத்தால் செயல்பட்டால் நாம் சத்திய ஜீவியத்தையும், அன்னையையும் அடைவோம்.

பிரம்மமும், மனிதனும் (Absolute and man) :

பிரம்மம் அனந்தம் (infinite); மனிதன் அதன் பகுதி (part or finite). பகுதியைக் கண்டம் என்றும் முழுமையை அகண்டம் எனவும் கூறுவது வழக்கம். பகவான் மனிதனை அகந்தை என்கிறார். அத்துடன் அகந்தையை பூஜ்யம் என்கிறார் பூஜ்யம் என்ற கருத்தை உலகுக்களித்தது இந்தியக் கணித மேதை பாஸ்கராச்சாரியார் என்பார்கள்.

எது குறையாதோ, வளராதோ அதுவே அனந்தம்.

பூஜ்யத்தின் சிறப்பான குணம் ஒன்றுண்டு. 10 பூஜ்யம் சேர்ந்தாலும் முடிவு பூஜ்யமாகவே இருக்கும். எத்தனை பூஜ்யம் சேர்ந்தாலும் முடிவு பூஜ்யமே.

இறைவன் அனந்தம்; மனிதன் பூஜ்யம் என்கிறார் பகவான்.

உலகத்தைச் சிருஷ்டித்த பின், அதாவது தன்னுள்ளிருந்து உலகத்தை எடுத்த பின் இறைவன் குறைவதில்லை. மனிதனுடன் எது வந்து சேர்ந்தாலும் அதுவும் பூஜ்யமாகிவிடும்.

யோகம் என்பது பூஜ்யமான மனிதனை, அனந்தமான இறைவனாக்குவது.

இது பூரணயோகம். இதுவரை செய்த யோகங்களுக்குள்ள தகுதியன்று.

ஓரளவு இதை விளக்க முயலலாம். முழுவதும் வாதம் தெளிவாக இருக்க வழியில்லை. (It is a metaphysical representation not a metaphysical explanation) ஒரு நம்பரைப் பூஜ்யத்தால் பெருக்கினால் பலன் பூஜ்யம். எவ்வளவு பெரிய நம்பரானாலும் பூஜ்யத்தால் பெருக்கினால் அது பூஜ்யமாகும். (10x0 = 0; 475x0 = 0). ஒரு நம்பரைப் பூஜ்யத்தால் வகுத்தால் பலன் அனந்தமாகும்.

15 என்பதை 5ஆல் வகுத்தால் ஈவு 3; 3ஆல் வகுத்தால் ஈவு 5; ஒன்றால் வகுத்தால் 15; 1/2 பாதியால் வகுத்தால் ஈவு 30; 1/100ஆல் வகுத்தால் ஈவு 1,500. வகுக்கும் எண் சிறியதானால் பலன் (ஈவு) அனந்தமாகிறது.

பூஜ்யமான மனிதன் அடுத்தவன் தன்னை நாடி வந்தால் அவனால் தான் பெருக நினைத்துப் பெருக்குகிறான் (multiplies). அதன் பலன் அவனும், இவனும் பூஜ்யமாகிறார்கள். சுயநலம் இருவரையும் அழிக்கும்.

பூஜ்யமான மனிதன் அடுத்தவர் தம்மை நாடி வந்தால் தான் அடக்கமாக இருந்தால், அவரை வகுக்க முயன்றால், வருபவர் எவ்வளவு சிறியவரானாலும் பலன் அனந்தமாகும் (இறைவனாக்கும்).

சுயநலம் இருவரையும் அழிக்கிறது.

பரநலம் இருவரையும் இறைவனாக்குகிறது.

கருவி :

நம் செயல்களை இருவகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று நாமே விரும்பி, முனைந்து செயல்படுவது. இதற்கு அதற்குரிய

பலனோ, தண்டனையோ தவறாது கிடைக்கும், அடுத்தது நம் தொழிலால் அல்லது சூழ்நிலையால், அல்லது பிறருடைய கடந்த கால வாழ்வால் நாம் நல்லதோ, கெட்டதோ செய்ய வேண்டியிருக்கும். இது நல்லதானாலும், கெட்டதானாலும் நமக்குப் பலனோ, தண்டனையோ வாராது.

ஜட்ஜ் அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கின்றார். கான்ஸ்டபிள் அவனைக் கைது செய்கிறான். குற்றம் செய்தவனைத் தண்டிக்கும் கடமையை ஜட்ஜும் கான்ஸ்டபிளும் நிறைவேற்றுகின்றனர். பாவம் செய்தவன் தண்டனையை அனுபவிக்கிறான். அதற்குக் கருவியானவர்களை அச்செயல் - கைது செய்வது - அதே நிலையில் பாதிக்காது. ஜட்ஜ், ஜட்ஜாக இருக்கும்வரை, கான்ஸ்டபிள் போலீஸ் வேலை செய்யும்வரை அவர்கள் செயலுக்குத் தண்டனை இல்லை. சில சமயங்களில் பரிசும் உண்டு.

கான்ஸ்டபிள் தன் ஊரில் நாட்டாண்மைக்காரனாகி, நியாயம் வழங்கும் நேரத்தில், பெரிய நியாயஸ்தன் என்று பெயர் வாங்கினாலும், அவனுடைய நியாயம் பிறருக்குப் பலன் தாராது. இது போலீஸ் வேலையை விட உயர்ந்த நிலை. நேற்றுச் செய்த வேலை கைது செய்வது. இன்று செய்வது நல்ல வேலை. இந்த வேலையில் முன்னேற்றமிருக்காது. தான் கைது செய்தது - அச்செயல் - இன்று அதற்குரிய பலனைத் தரும்.

5 வயது சிறுவனாக இருக்கும்பொழுது தாயாருக்கும் மற்றவனுக்கும் சண்டை. தாயாரைத் தகாத வார்த்தையால் திட்டினான். சிறுவனுக்கு மனம் பொறுக்கவில்லை. சிறுவன் பெரியவனானான். திட்டியவன் வீட்டில் இருக்க வேண்டியிருந்தது. திட்டியவன் மனைவி திட்டியவனுக்குத் தீங்கு செய்யத் தூண்டினாள். தானே செய்யாத காரியத்தைத் தூண்டுதலால் சிறுவன் செய்தான். தவறு செய்தவன் அகப்படவில்லை; தண்டனைக்குள்ளாகவில்லை. தவறு

அவனுக்குக் குற்றமாகப்படவில்லை. பிற்கால வாழ்வில் திட்டியவனுக்குத் தான் செய்த குற்றத்தை இவன் வீட்டார் இவனுக்குச் செய்தனர். குற்றத்தைப் பொறுத்துக் கொண்டான். செயலைப் பொருட்படுத்தவில்லை. மனம் பொருட்படுத்தியது. மனத்தைக் கடந்து செல்லும் நிலையில் மனம் தான் செய்த குற்றத்தால் தடைப்படவில்லை. தனக்கு இழைத்த தீங்கால் தடைப்பட்டது. அவனால் தடையை மீற முடியவில்லை.

தாயாருக்கு இழைத்த கொடுமையைக் கர்மம் தீர்க்கும் கருவியாக அவன் செயல்பட்டதால், வாழ்க்கை தண்டனை அளிக்கவில்லை. அதே நிலையில் வாழ்வு அமைந்தால் தண்டனை என்பதில்லை. வாழ்வு நிலை அறிவால் உயர்ந்த பொழுது, அறிவின் சிகரத்தை எட்ட முயலும்பொழுது மனம் தூய்மையாக இருக்க வேண்டும். கர்மத்தின் கருவியாக இருந்ததால், கர்மம் தண்டிக்கவில்லை. பிறர் தூண்டுதலால் தவறு செய்பவன் அறிவின் கருவியாக இல்லை; அதனால் அறிவு பழி வாங்குகிறது.

மனிதன் குடும்பத்தின் கருவியாகவோ, சமூகத்தின் கருவியாகவோ, மனச்சாட்சியின் கருவியாகவோ, கர்மத்தின் கருவியாகவோ, தெய்வத்தின் கருவியாகவோ இருக்கலாம். அதே நிலையிலிருக்கும்வரை கருவிக்குத் தண்டனை இல்லை. நிலை உயர்ந்து செயல்படும்பொழுது, தாழ்ந்த நிலையின் செயல் இன்று தடையாக இருக்கும்.

மனிதன் பிறர் கர்மத்தின் கருவியாக இருப்பதற்குப் பதில், தன் அறிவின் கருவியாக இருக்க வேண்டும். அன்னையின் கருவியாக இருக்க முயன்றால், எவர் கர்மமும், நம் கர்மம் உள்பட, நம்மைப் பாதிக்காது. கருவியாக இருப்பதைவிட, சரணாகதி நல்லது. கருவியாக இருக்க வேண்டுமானால் நாம் அன்னையின் கருவியாக இருப்பதே சரி. பிறர் நமக்கிழைத்த தீங்கை மனிதனால் மறக்க முடிவதில்லை. நமக்குத் தீங்கிழைத்தவர் பாவம் செய்ய விரும்பி, அதற்குப் பயாக்கினால் அறிவுடைய முயற்சிக்குப் பலனாக நாம் அதை

மறக்க முடியும். எளிதன்று, முடியும். பிறர் நமக்கிழைத்த தீங்கு நாம் ஏற்கனவே செய்த பாவத்தின் எதிரொலியாக எழுந்தால் நம்மால் அதை மறக்க முடிவதில்லை. ஏனெனில் மனிதனால் பிறர் குற்றத்தை மன்னிக்க முடியும். தன் குறையால் எழுந்த குற்றத்தை மறக்க முடியாது. தன்னையே தான் குறைவாக நினைக்க வேண்டியிருப்பதால், இது அவனால் முடிவதில்லை.

மறக்க முடியவில்லை, மன்னிக்கவும் முடியவில்லை என்றால், அதன் அஸ்திவாரத்தில் நம் குறையும், குற்றம் இருக்கும்.

தன் குறையை அறிந்து, அதன் சுவடு இன்றைய நடைமுறையில் அழியும்வரை பிறர் மீதுள்ள குறையை மனம் மறக்காது.

ஒருவன் திருடியதை அவன் கர்மம் பூர்த்தி செய்ய அவன் வீட்டில் திருடு போகிறது. அதற்குக் கருவியாக மற்றொருவன் அமைகிறான். அவனுடைய கர்மம் தன்னைப் nature  இயற்கை. மறுப்பது விலக்கு. மறுத்து, நம் அறிவுக்கோ, ஆன்மாவுக்கோ, அன்னைக்கோ கருவியாகலாம். கர்மத்திற்குக் கருவியாக நம்மால் மறுக்க முடியுமானால், நமக்குக் கர்மம் கட்டுப்படும். பிறர் கர்மத்தின் கருவியாக நாமிருக்க மறுப்பது முடியும். நம் கர்மத்தின் கருவியாக நாமிருப்பதை எளிதில் மறுக்க முடியாது. முடிந்தால், நாம் கர்மத்தை வெல்கிறோம்.

படிப்பும், பயிற்சியும் :

பகவான் ஸ்ரீ அரவிந்தர் சொல்லியது என்ன என்று தெரிய ஆவலிருந்தால், படிப்பும்(reading), ஆழ்ந்து நூலைப் பயிலுவதும் (study) பயன்படும். இவற்றிற்குள்ள வித்தியாசம் புரிதல் நல்லது. படிப்பது என்றால் ஓரிரு முறை நூல்

சொல்வதை விளங்கும்படிப் படிப்பது. கதைப் புத்தகத்தைப் படித்தால் கதை புரிகிறது. இது படிப்பு. பரீட்சைக்குப் படிப்பது என்றால் அப்புத்தகத்தில் எங்கு என்ன சொல்லி இருக்கின்றது என்பதை நினைவுடன் திரும்பச் சொல்லும் அளவுக்கு அறிவது. இது ஆழ்ந்த படிப்பு. நூலை ஆழ்ந்து பயின்றவர்க்கு கீழ்க்கண்ட விஷயங்களில் தெளிவு இருக்கும்.

  • ஆன்மா எப்படி உற்பத்தியாயிற்று?
  • அகந்தை எப்பொழுது, எப்படி உருவாயிற்று?
  • ஆன்மாவுக்கும், சைத்தியப் புருஷனுக்கும் உள்ள வித்தியாசம் எது?
  • அறியாமை எங்கு உற்பத்தியாவதாக உபநிஷதம் கூறுகிறது? பகவான் அதை எப்படி மாற்றுகிறார்?
  • வித்தியாசம் என்ன?
  • ஏன் பரிணாமத்தைப் பற்றிப் பேசிய வேதாந்தம், அதை விளக்கவில்லை?
  • நாத்திகன் இறைவனுக்குச் செய்த தொண்டு எது?
  • சன்னியாசி வாழ்வை நீத்தது பூமியின் வாழ்வில் என்ன இடம் பெறுகிறது?
  • சிருஷ்டியை ஏன் எந்த மதமும் விளக்கவில்லை?
  • வேதகாலத்து ஆரியர்கள் சிறப்பென்ன?
  • பூரணயோகத்தை எப்படி அதனுடன் ஒப்பிடுவது?
  • பூரணம் என்றால் என்ன?
  • அறிவால் பிரம்மத்தை எட்ட முடியும் என்பது ஏன் முரணானதில்லை?
  • ஆன்மீகத்தில் பகவான் அளித்த புதிய ஞானம் எவை?

  • யோகத்தில் பகவான் புதியதாகச் சொல்யவை எவை?
  • ஆன்மீகம் பரிணாமம் என்பதென்ன? ( spiritual evolution)
  • அழிவும், மாற்றமுமில்லாத ஆன்மா எப்படிப் பரிணாமத்தை ஏற்கும்?
  • மனிதன் தெய்வத்தைவிட எப்படி உயர்ந்தவன்?
  • துர் அதிர்ஷ்டமே பேரதிர்ஷ்டம் என்பது எதனால்?
  • உலகில் அன்னையும், ஸ்ரீ அரவிந்தர் மட்டுமே அகந்தையை அழித்தவர் என்பது எப்படி?
  • நம் மனம் மாறினால், உலகம் மாறும் எனில் அது மாயையன்றோ?
  • சொல்லுக்கு எட்டாததை, பகவான் எங்குச் சொல்லால் விளக்குகிறார்?
  • பரோபகாரம் அகந்தையின் வெளிப்பாடு என்பது எப்படி?
  • எல்லாம் அவன் செயலானால், மனித முயற்சிக்குரிய இடம் எது?
  • உலகில் எந்த நல்லது நடக்க வேண்டும் என்றாலும், அது முதல் ஆசிரமத்தில் நடக்க வேண்டும் என்ற அன்னை, இது என் ஆசிரமம் இல்லை. இனி ஆசிரமத்தில் சேர்ந்தால் தொந்தரவு சமாளிக்க முடியாது என்றது எதனால்?
  • உலகச் சமாதானத்திற்காக ஏற்படுத்திய ஆரோவில் ஏன் சண்டையும் பூசலுமாக உள்ளது?
  • மாத்ருமந்திரில் உள்ள சூழல் சமாதி, பகவான் அறையை விடக் கனத்ததாக உள்ளது எதனால்?

  • சிருஷ்டியின் (process) முறையை பகவான் விளக்குவது எப்படி?
  • பிரம்மரிஷிக்கும், பிரம்மம் சித்திப்பதற்கும் உள்ள மாறுபாடென்ன?
  • பிரம்மம் ஆன்மாவில் சித்திப்பதும், உடல் சித்திப்பதும் ஒன்றாகுமா?
  • சத்திய ஜீவியம் உலகைச் சிருஷ்டித்தது எனில் - மனம் சிருஷ்டிக்கவில்லை என்றால் - பிரம்மா உலகைச் சிருஷ்டித்தார் என்பது ஏன்? பிரம்மா மனத்தைச் சார்ந்த கடவுளாயிற்றே?
  • அறியாமை அறிவைவிடப் பெரியது என்பதெப்படி?

இது போன்ற சூட்சுமங்கள் நூல் முழுவதும் ஏராளமாக இருப்பதை ஆழ்ந்து பயின்றால் தெரிந்து கொள்ள முடியும். இது ஞானம், யோகமில்லை. பாண்டித்தியம், தியானம், சிந்தனை, ஆராய்ச்சி, புதிய கருத்துகளைக் காணுதல், ஆகியவை ஆழ்ந்த படிப்புக்குப் பயன்படும். ஆனால், இவையெல்லாம் யோகத்தை ஆரம்பிக்க உதவா. ஒரு வேளை இப்படிப்பு இடையூறாக அமைந்தாலும், அமையலாம். நெடுநாள் முயன்றவர் முடிவு, யோகம் முடியாது என்பதுதான். இந்த ஆயிரம் வழியாக ஒரு முறையைக் கண்டுபிடித்தால், அது சமர்ப்பணம் என்று தெரியவரும். எனவே அதுவே இரகஸ்யம். நமக்காக பகவான் கண்டுபிடித்தது அது.

பேச்சைச் சமர்ப்பணம் செய்து பார். அது நம்மை மீறி எழும். ஒரு முறையும் சமர்ப்பணமும் கூடி வாராது. ஒவ்வொரு தரம் பேசும்பொழுதும் சமர்ப்பணம் தவறிவிடும். தவறிவிட்டது என்றறிய நாளாகும். அதை அறிவது - தவறிவிட்டது என்றறிவது - பெரிய வெற்றி. இங்குச்

சமர்ப்பணம் பலித்தால், பிறர் உன் மனதிலுள்ளதைப் பேசுவர். இந்த வேலையை தாமே மற்றவர் செய்வர்.

வாழ்வு உனக்கு அடங்கும் என்பதே அதன் சுருக்கம்.

சமர்ப்பணம் செய்ய அதற்குரிய concentration ஒரு நிலைப்பட்ட மனம் வேண்டும். எண்ணம் அடங்கிய நிலை முதலில் ஏற்படும். புலன் அவிந்த நிலை அடுத்தது. புலன் அவிந்து மனம் விழிப்பானது மூன்றாம் கட்டம். கடைசி கட்டம் துரிய நிலை. எண்ணம் அடங்கிய நிலையில் எண்ணத்தினுள் உள்ள ஒளியை நம் தியானம் எட்ட வேண்டும். மனம் அடங்கி அமைதியுற வேண்டும். மனத்தைக் கடந்த அமைதியானால் சிறப்பு. இந்த அமைதியே நம்மை, சூழ்நிலையைக் ( observe) கவனிக்க உதவுகிறது. கவனமில்லாமல் சரணாகதி எழாது.

ஜீவன் அடங்கி, மனத்தைக் கடந்த அமைதி ஏற்பட்டு சூழ்நிலையைக் கவனித்தால், சமர்ப்பணத்திற்கும், சரணாகதிக்கும் உரிய ஆன்மீகத் திறன் ஏற்படும்.

எவ்வளவு உயர்ந்த, சிறந்த, ஆழ்ந்த படிப்பானாலும், அது நாம் நாடும் மாற்றத்திற்குதவாது. எவ்வளவு சிறிய முயற்சி ஆனாலும், சமர்ப்பணமும், சரணாகதியும், மாற்றத்திற்குதவும்.

உயர்ந்த ஞானத்திற்கும் செயலாற்றும் திறனில்லை.

சிறிய பயிற்சிக்கும் வாழ்க்கைப் பலன் தரும் திறனுண்டு.

தொழிலாரம்பிக்க முதல் வேண்டும், முதல் சேர்ப்பது சிரமம். அதுவும் சம்பளம் வாங்குபவர்கள் முதல் சேகரம் செய்வது மிகவும் கடினம். முதல் சிறிதளவு சேர்ந்த பிறகு, அதைத் (risk) தொழிலில் போட்டுச் சோதனை செய்ய மனம் வராது. யோகத்தை மேற்கொள்ள தியானம் வேண்டும், மனம் ஒரு நிலைப்பட வேண்டும். (concentrate) ஒரு நிலைப்பட்டால், செய்யும் தொழில் சிறப்பாகும். பிறகு அதைவிட்டு,

தியானத்தை அனைவரும் நாட மாட்டார்கள். சமர்ப்பணம் செய்ய அளவு கடந்து மனம் ஒரு நிலைப்பட வேண்டும். பெரிய தொழில் ஆரம்பிக்க நெடுநாள் முதல் சேகரம் செய்ய வேண்டும், நம்மைத் தயார் செய்ய வேண்டும் என்பதைப் போல், சமர்ப்பணம் ஆரம்பிக்க நாம் நெடுநாள் தயாராக வேண்டும், கண்மூடித் தியானம் செய்வதிலுள்ள செறிவு (concentration) கண் திறந்து வேலை செய்யும் பொழுதிருக்க வேண்டும். இது நாள் முழுவதும் நீடித்தால், சமர்ப்பணம் செய்யலாம். சமர்ப்பணம் செய்தால், ஒரு நாள் முழுவதும் தயாரானது ஒரு நிமிஷத்தில் செலவாகும். மாற்றத்திற்கு அடிப்படை சக்தி. நாம் நம் சக்தியைப் பல வழிகளிலும் செலவு செய்கிறோம். அவ்வாறின்றி சக்தியை முழுவதும் சேகரம் செய்ய வேண்டும். இது மூச்சுவிடுவதை நிறுத்துவது போன்றதாகும். அளவுகடந்து வாழ்வில் ஈடுபட்டுள்ள நாம், அளவு கடந்து அன்னையில் ஈடுபட்டால்தான், சக்தி சேகரமாகும். அதுவே சமர்ப்பணத்திற்கு அவசியம். அந்நிலை எய்தியபின் மாற்றம் முடியும்.

தியாக உணர்வோடு சர்க்கார் வேலையை ராஜினாமா செய்து, சுதந்திர இயக்கத்தில் சேர்ந்து, மண வாழ்வை விலக்கி, அரசியலுக்கு முழுநேர ஊழியரானவர், நாட்டில் நிலைமை மாறி, கட்சி உடைந்து, கட்சி செல்வாக்குப் போய், வருமானமில்லாமல், சொந்தச் சாமர்த்தியத்தால் குடும்பம் நடத்த வேண்டும் என்ற நிலையில், காலம் கடந்து கட்சி ஊழியரை மணந்து, இலட்சிய வாழ்வுக்கும், வாழ்க்கை வசதிக்கும், மரியாதைக்கும் தொடர்பில்லை என்று கண்டார். பணக்கார நண்பர்கள் உதவியால் முழு வாழ்வும் நடத்த வேண்டியபொழுது பணம் மட்டுமே கண்ணுக்குத் தெரியும் என்ற நிலைக்கு வந்தார்.

பழைய கட்சி ஊழியன் தலைவன் மீதுள்ள பிரியத்தாலும், அனுதாபத்தாலும், இலட்சியமான நல்லெண்ணத்தாலும், அவருக்குச் சிறு சிறு உதவிகள் செய்ததைப் பணம் என்ற அளவில் வந்து, அவருடன் நட்பை நெருக்கமாக்கி, உயிருக்குயிரானவராகப் பாவித்து, புதிய சூழ்நிலை ஏற்பட்டவுடன் வாங்கிய பெருந்தொகையை ஏமாற்றி, மேலும் அடாவடியாகப் பணம் பறித்து யார் நேற்றுவரை உயிராக இருந்தாரோ, அவருக்குத் துரோகம் செய்தால் இலாபம் என பூரண நம்பிக்கைக்குத் துரோகம் செய்து, அவதூறு கிளப்பி, ஊரைவிட்டுத் துரத்தவும் முயன்று தோல்வியுற்று, மனைவியை இழந்து மரணப்படுக்கையிலிருக்கும்பொழுது, உதவி செய்தவருடைய நண்பரிடம், இவரைத்தான் மலைபோல் நம்பியிருந்தேன். என்னைப் பணம் கொடுத்து வாங்கி விட்டார் என்று கூறினார்.

  • இலட்சியத் தியாகம் செய்ய மனிதனால் முடியும்.
  • காரியம் தோற்றால் இலட்சியம் மறந்து போகும்.
  • இலட்சியத்திலிருந்து மட்டமான பழக்கத்தையும் ஏற்க முடியும்.
  • எதை எதிர்த்தாரோ, அதையே இலட்சியமாக ஏற்க முடியும்.
  • நட்பை, நன்றியை, உதவியை, பணமாக மட்டும் கருத முடியும்.
  • அதையும் இலாபத்திற்காகத் துரோகம் செய்ய முடியும்.
  • அயோக்கியத்தனமாக நடந்தால் இலாபம் என்றால் அதையும் செய்ய முடியும்.
  • எல்லாம் தோற்றால் அவனிடமே திரும்பி வர முடியும்.
  • அவனை மீண்டும் இலட்சியமாகக் கருத முடியும்.
  • தாம் எவருக்குத் துரோகம் செய்தாரோ, அவரையே துரோகத்திற்குக் காரணம் என வர்ணிக்கவும் முடியும்.

ஊரில் பெரிய மனிதர், நாட்டில் கட்சித் தலைவரான இவர் போன்றவர் செய்த செய்கையிது. இதைவிட மட்டமாக மனிதன் இருக்க முடியாது. நாம் இறைவனுடன் கொண்ட தொடர்பில் இவற்றுள் ஓரிழையாவது உண்டா என்று பரிசோதிப்பது நல்லது. பலரிடம் ஓரிழை இருக்கலாம். ஒரு சிலரிடம் முழுவதும் இருக்கும்.

அன்னை மனித குலத்தை (asuric humanity) அசுரகுலம் என்று விவரித்துள்ளார். கல்கியின் கூரிய வாளால் மட்டுமே மனிதன் தீண்டுதலுக்குரியவர் என்கிறார். அசுரன் நல்ல குணங்களால் நிரம்பியவன். இராவணனுடைய நல்ல குணங்களைக் கம்பர் எழுதுகிறார். அசுர குணம் ஒன்று தவிர அசுரனுக்கு மற்ற குணங்கள் நல்ல குணங்கள். அசுரகுணத்தை முன்வைப்பதால், எல்லா நல்ல குணங்களும் அசுர குணத்தை வலுப்படுத்துகின்றன. அதை வலுப்படுத்தாத எதையும் அசுரன் ஏற்பதில்லை.

மனிதன் அகந்தையை அதுபோல் முன் வைக்கிறான். அகந்தை அடியோடு அழிக்கப்பட வேண்டியது என்பது அன்னை. அகந்தையை அழிக்க முன்வந்தால், மற்ற குணங்களின் நல்லது வெளிப்படும். அகந்தை அழியாதவரை மற்ற குணங்கள் தீமைக்குத் துணையாகும்.

மாற்றம் என்பது அகந்தையுள்ள இடத்தில் அன்னையை வைப்பதாகும்.

அன்னை அங்கு வந்தபின் கல்கியின் கூரியவாளுக்கு வேலையில்லை.

நல்லவன் வல்லவனாக இருந்தால் யோக வாழ்வு பலிக்கும். யோகத்திற்கு அது போதாது. பூர்வஜன்ம புண்ணியமும், ஆண்டவனின் அழைப்பும், வீரனின் உறுதியும், சத்தியத்தின் பிடிப்பாகவுமிருக்க வேண்டும்.

இறைவன் எதிர்பார்ப்பவை இரண்டு!

  1. வாழ்வு எனும் போர்க்களத்தில் இறைவன் கட்சிக்காக வீரமரணத்தை எதிர்கொள்ளுதல்.
  2. இறைவனின் கோயில் உழவாரப் பணி செய்தல்.

வீரனின் தைரியமும், அடிமையின் பணிவும் அன்பரின் அணிகலன்களாகும்.

  • எல்லோர்க்கும் உரியது பிரார்த்தனை.
  • உயர்வை உறுதியாய் நாடுபவர்க்குரியது யோகவாழ்வு.
  • ஆண்டவனுக்கேயுரியவர்க்குரியது யோகம்.



குற்றம் :

மன்னிக்க முடியாத குற்றம் என்றொன்றில்லை என்றார் அன்னை. அத்துடன் வேண்டுமென்றே செய்யும் குற்றம் தவறாது செய்தவர்க்கே பலன் தரும் என்று கூறினார். அன்னைக்கு மனக்கசப்பேற்படுத்தியது ஆதாயத்திற்காக நடிப்பவரின் இலட்சியம்.

மனிதன் தன் குறையை உணராதவன். நெடுநாளைக்குப் பின் அதை உணருபவருண்டு. தனக்குப் பொறாமை இருக்கிறது, வக்ர புத்தியுண்டு, நிதானமில்லை, கெட்ட எண்ணம் உண்டு என்று மனம் ஏற்றுக் கொள்ளும். இது பெரிய காரியம். இதைக் கண்ட பின், சமர்ப்பணத்தால் இதை அகற்ற முன்வருவது வழக்கமில்லை. இப்படிப்பட்டவர்கள் சொல்வதுண்டு, நினைப்பதுண்டு, நான் பல வருஷமாக பொறாமையைச் சமர்ப்பணம் செய்கிறேன். பலன் இல்லை என்பார்கள். இதில் ஓர் உண்மையை அவர்கள் அறிவதில்லை.

ஒருநாள் தீவிரமாக நினைத்துச் சமர்ப்பணம் செய்ய முனைந்தால் அரை மணி, ஒரு மணி நேரம் முயன்று, பலன் தாராத பொழுது அத்துடன் அதை விட்டுவிடுவார்கள்.

அதுபோல் சில மாதத்திற்கொருமுறை பல வருஷம் செய்தால், அது பல வருஷம் செய்ததாகப் பொருள். அது நிச்சயமாகப் பலன் தாராது. செய்ய வேண்டியது வேறு. முதலில் பொறாமை அழிய வேண்டும் என்ற எண்ணத்தைச் சொல்லால் சொல்வது போதாது. மனம் ஏற்க வேண்டும். ஏற்றுக் கொண்ட எண்ணம் முடிவு (decision) என்ற உருவம் பெற வேண்டும். இது தெளிவாக இருப்பதில்லை. இது தெளிவாகும்வரை அடுத்த முயற்சிக்கு வேலையில்லை.

மனம் புரிந்து, அதை முடிவாக்கிய பின், உணர்வு அதை ஏற்றால்தான் முடிவு முழுமை பெறுகிறது. மேற் சொன்னவர்கள் இந்தக் கட்டத்தைப் பூர்த்தி செய்வதில்லை. இது முதல் நிபந்தனை. இந்நிபந்தனை பூர்த்தியான பின் 3 நாள் இடைவிடாத பிரார்த்தனையை மேற்கொண்டால் பொறாமையை அழிக்க உள்ளே எதுவும் ஒத்துழைக்காது. அதற்கு நாளாகும். மனம் தயாராக இருந்தால் நாளாக வேண்டியதில்லை. 6 மாதத்திற்கு ஒரு முறை அரை மணி முடிவில்லாமல் சிந்தனை செய்தால் 10 வருஷத்தில் 10 மணி நேர முயற்சி. அதுவும் அடிப்படையில்லாத முயற்சி. 3 நாள் பிரார்த்தனையில் 36 மணி நேரம் தொடர்ந்த பிரார்த்தனை, மனம் 72 மணியும் பிரச்சினை மீதிருக்கும். எனவே இதுபோன்ற முயற்சியை மேற்கொள்பவர்,

  • 1. மனதைக் கலந்து தெளிவைப் பூர்த்தி செய்து,
  • 2. தெளிவை முடிவாக்கி,
  • 3. மனத்தின் முடிவை, உணர்வை ஏற்கச் சொல்லவேண்டும்.
  • 4. பின்னர் இடைவிடாத பிரார்த்தனையை மேற் கொண்டால், பொறாமையுணர்வு அடங்கி, தம் குணம் மாறி, விசால புத்தியாக மாறி நாமே புனர்ஜென்மம் எடுப்பது தெரியும்.

  • பலிக்காத முயற்சி அடிப்படையில்லாதது.
  • உணர்வும், மனமும் சேராமல் முயற்சி பலிக்காது.
  • முடிவும், உணர்வும் ஏற்றபின் தொடர்ந்த முயற்சி தேவை. 3 வருஷப் பலனை, 3 நாள் பிரார்த்தனை தவறாது தரும்.

மனிதனுடைய நிலையை அன்னை வர்ணிப்பது நாம் அறிந்தது. அவற்றை வரிசையாக இன்னொருமுறை நினைவு கூர்ந்தால், மனிதன் விலங்கு, ஆசையால் அலைக்கழிக்கப் பட்டவன், தவற்றையே இலட்சியமாகக் கொண்டவன், தவற்றுக்கும் நல்லதற்கும் வித்தியாசம் தெரியாதவன், தவறு இருக்கிறது எனத் தெரிய நாளாகும், எது தவறு? என அறிய நெடுநாளாகும், தெரிந்தால் விடப் பிரியப்படமாட்டான், பிரியப்பட்டால் தவற்றை விடாமல் விட வேண்டும் எனப் பேசுவான், விட முடிவு செய்தால் உடனே மாறுவான்.

அலிப்பூர் ஜெயில் :

கைதிகள் நெஞ்சில் பகவான் கருணையைக் கண்டதாக எழுதியுள்ளார். அன்னையின் அருள் நம்மையும் அதைக் காண வைக்கும். பக்தர்கள் காண்பதில்லை.

சில தொழில்கள் நயமான பழக்கத்திற்குப் பேர் போனவை. வேறு சில தொழில்கள் நாணயத்திற்குப் பேர் போனவை. இவற்றிற்கு எதிரான தொழில்களும் உண்டு. காரில் விட்டுப் போன காமிராவை டாக்சி டிரைவர் கொண்டு வந்து கொடுத்தது; உயிருக்கு ரோட்டில் போராடும் மனிதனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போன ஆட்டோ டிரைவர்; நேர்மையான ரிக்ஷாக்காரன் ஆகியவரை உலகம் அறிந்தாலும், கூலி வாங்குவதில் அவர்கள் பழக்கம் உலகெங்கும் ஒன்றே.

அரைகுறையாக இந்தி தெரிந்த தமிழ்ப் பக்தர் ஹைதராபாத் ரயில்வே ஸ்டேஷனில் போர்ட்டரைக் கூப்பிட்டு, சென்னை ரயிலுக்குப் போக வேண்டும் என்றார். 4 பெட்டிகளுக்கு ரூ.10 கூலி கேட்டார் போர்ட்டர். 3ஆம் பிளாட்பாரத்தில் பெட்டிகளை வைத்துவிட்டுப் போனார். அன்று ரயில் 4ஆம் பிளாட்பாரத்திற்கு வருகிறது. போர்டரைக் காணோம். பக்தர் நிலை இக்கட்டானது. அன்னையை அறிந்த புதிது. எதற்கும் அன்னையைப் பழக்கமாக அழைப்பதைப் போல் அன்னையை அழைத்தார். போர்ட்டர் வந்தார். 4ஆம் பிளாட்பாரத்திற்குப் பெட்டிகளுடன் அழைத்துப் போனார். பக்தருக்கு ரிஸர்வ் சீட் இல்லை. எப்படியோ போர்ட்டர் இடமும் பிடித்துக் கொடுத்தார், இந்தியிலும் பேசுகிறார். பாஞ்ச் என்ற சொல் அடிக்கடி கேட்கிறது. ரூ.5 அதிகம் கேட்பதாகத் தெரிகிறது. புரியவில்லை அருகிருந்த தெலுங்கு பெண்ணைக் கேட்டதில், அவர் போர்ட்டர் ரூ.5 கேட்கிறார் என்றார். பக்தருக்கு மேலும் ரூ.5 கொடுக்க விருப்பமில்லை. தெலுங்கர் மூலம் பேசியதில் அவர், போர்ட்டர் 5 ரூபாய் தான் கேட்கிறார். ரூ.10 வேண்டாம் என்கிறார். 3ஆம் பிளாட்பாரத்திலிருந்து 4ஆம் பிளாட்பாரம் வரும் சிரமத்தை தாம் கொடுத்ததால் பாதி கூலி போதும் என்கிறார் என்று விளக்கினார். போர்ட்டர் சரித்திரத்திலேயே இல்லாத ஒன்றை அன்னை நிகழ்த்தினார்.

போர்ட்டர் அதிகமாகத்தான் கேட்பார் என்ற மனநிலையை மாற்றிக் கொண்டால் சரித்திரத்தில்லாததுபோல் நிகழ்ச்சிகள் நிகழும். அதுவே மாற்றம் எனப்படும். இந்த பக்தர் அன்னையை அழைத்தார். பக்தர் மனம் மாறவில்லை. அன்னை சக்தி பக்தர் மூலம் போர்ட்டர் மனத்தை மாற்றியது. நாமே முனைந்து மனம் மாறுவது மாற்றமாகும்.

அடிக்கடி அன்னை சொல்வது இது. என் சிஷ்யர்கள் என் அருளைப் பெறுவதைவிட, அவர்கள் மூலம்,

என்னையறியாதவர் பெற்று மாறுவது அதிகம் என்று அன்னை கூறுவார். ஆப்ரேஷன் கூடாது என்று அன்னை நேரடியாகச் சொன்னதை மறுத்து சிஷ்யர் ஆப்ரேஷனுக்குப் போன பொழுது, டாக்டர் ஆப்ரேஷன் செய்ய மறுத்ததுடன், வந்தவர் பூர்வோத்திரத்தை முழுவதும் அறிந்து அதன் மூலம் அன்னையை அறிந்து, உங்கள் Mother அன்னை அனுமதித்தால் ஆப்ரேஷன் செய்கிறேன் என்ற பொழுதும் அன்னை இதையே கூறினார்.

அன்னை நம்மை மாற்ற விரும்புகிறார். நாம் (unconscious) கண்மூடியாக இருக்கிறோம். அதனால் நாம் யாரோடு தொடர்பு கொள்கிறோமோ அவர்கள் மூலம் அன்னை செயல்படுவதுண்டு. எனவே மாற்றத்திற்கு புது விளக்கம் தரலாம்.

  • பிறர்மூலம் அருள் நம்மால் செயல்படுவதற்குப் பதிலாக,
  • நேரே அருளை நிரந்தரமாகப் பெறுவதை மாற்றம் எனலாம்.

அருள் அதுபோலச் செயல்படும்பொழுது, அடுத்தவர் மூலமாகவும், நம்மை அறியாதவர் மூலமாகவும், நம் எதிரி மூலமாகவும், நம் எதிரியின் செயல் மூலமாகவும், தோல்வி மூலமாகவும் வருவதுண்டு.

உயர்ந்ததும், தாழ்ந்ததும் :

உலகத்தின் முன்னேற்றம் உயர்ந்தவர்களால் ஏற்படும் என்பது நம் நம்பிக்கை. ஒரு காலத்தில் உயர்ந்தவர் தொடர்ந்து உயர்ந்து கொண்டேயிருப்பார், அவரே முன்னோடி. எதிர்காலச் சிறப்புகள் நிகழ்கால முன்னோடிகள் மூலம் வரும் என்பது பொது நம்பிக்கை. சரித்திர அனுபவம் இதன்று. இதனுள் ஓர் ஆன்மிக உண்மையுண்டு. அந்த உண்மை நூலின்

முக்கியக் கருத்தில் ஒன்றாகும். உதாரணமாக இனி பூமிக்கு வரும் பெருமை அறியாமையிலிருந்து வெளிவரும் என்கிறார். இன்றைய உயர்ந்த அறிவிலிருந்து வரும் என்று நாம் எதிர்பார்ப்பது இயற்கை. நூல் அதற்கு எதிர்மாறான கருத்தை வெளியிடுகிறது.

நம் நாட்டில் வயதுக்கு மரியாதையுண்டு. வயதானவர் பெரியவர் என்பது அபிப்பிராயம். வயதானவருக்கு அதிக அறிவுண்டு என்பது நம் நாட்டுக் கொள்கை; மேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் வயதிற்கு மரியாதையில்லை. வளரும் தலைமுறைகளுக்கு அதிக மரியாதையுண்டு. நாகரீகமில்லாத நாடு என நாம் கருதுவோம். என்றாலும் அதிலும் ஓர் உண்மையுண்டு. நாட்டில் தொடர்ந்து அறிவு பெருகுகின்றது. புதிய தலைமுறைகள் புதிய அறிவைப் பெற்று வாழ்வை ஏற்கும் பொழுது, முந்தைய தலைமுறை உலகம் கைவிட்டதை விட முடியாமல் பின்தங்கி இருக்கிறதால், புதிய தலைமுறைக்கு வயதானவர்களிடம் மரியாதை இருப்பதில்லை. நான் சொல்லும் சட்டத்தில் இந்த அம்சம் ஒரு சிறு பகுதியேயாகும்.

இன்று நாட்டில் இலஞ்சம் அதிகமாகி வருகிறது. 30 ஆண்டுகட்குப் பின் இருக்கும் நிலையில் இன்று நாடு சுத்தமானது என்று சொல்லும் அளவுக்கு இருக்கும். 50 ஆண்டுகட்கு முன் பகவான் சுதந்திரம் வந்தால் ரௌடிகள் ராஜ்யம் நடத்துவர் என்றார். இலஞ்சம் பெருகி வருவதை அனைவரும் அறிவர். அதன் அஸ்திவாரம் எது என்று கண்டால், ஏன் இது பரவுகிறது என்று பார்த்தால், இந்த முறையில்தான் அறிவு, வியாபாரம், பணம், பதவி, போன்றவை இதுவரை வளர்ந்துள்ளன. இது உலகத்தில் எல்லா நாடுகளுக்கும் பொது என்று தெரியும். அரசியல் பதவி, சேனைத்தலைமை, படிப்பறிவு, ஆன்மீகச் சித்தி,

வியாபாரவளம், விவசாயச் செல்வம், ஊருக்குத் தலைமையான நாட்டாண்மை, பெற்றோருடைய நிலை, விவரம் தெரிந்த தொழில் அனுபவசாலிகள், பணம் பெற்றவர்கள் கையில் பெரிய பொறுப்பைச் சமூகம் அளிக்கிறது. அவர்கள் சத்தியத்தின் தர்மகர்த்தாக்கள் (trustees of truth). அன்று முதல் இன்றுவரை இப்படிப் பெற்ற பதவியை அநியாயமாக, அக்கிரமமாக, அட்டூழியமாக, அனுபவித்ததே அதிகம். அனுபவிக்காதவர்கள் விதிவிலக்கு. பதவியில் உள்ளவர்கள் தாங்களே முன்வந்து நேர்மையாக இருக்க வேண்டும். அப்படியிருப்பதில்லை. அதற்கு நேர்மாறாக இருந்தார்கள். அதனால் சத்தியத்தின் பொறுப்பை ஏற்றவர்கள் பொய்யின் பெருங்கருவிகள் ஆனார்கள். அதனால், first cycle ஆரம்ப காலத்துடன் அவர்கள் சமூக விரோதிகள் ஆனார்கள். சமூகம் அவர்களை நூறாண்டில், அல்லது இருநூறாண்டில் அவர்கள் வகிக்கும் ஸ்தானத்தை விட்டு இறக்கிவிடுகின்றது. அதன் பின் நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டுமானால் இந்த முன்னோடிகள் மூலம் வருவதில்லை. அது பொதுவாக அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர் மூலமாகவும் அதிகமாக வருவதில்லை. முன்னோடிகளால் தாழ்த்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டவர்களாலேயே பெரும்பாலும் வருகிறது. இதுவே முடிவான சட்டமில்லை. முன்னோடிகள் சத்தியத்தின் பாசறையாகி, தொடர்ந்து முன்னோடிகளாக இருக்க முடியும் என்றாலும், நடைமுறையில், விலக்கான நிகழ்ச்சிகள் தவிர, அப்படியிருப்பதில்லை.

இதுவரை பதவியை அநியாயமாகப் பயன்படுத்தியதை நாம் அறிவோம்.

  • சேனைகள் நாட்டைக் கொள்ளை அடித்தன.

  • அரசன் எதிரி என நினைத்தவர்களை நிர்மூலம் ஆக்கினான்.
  • உலகெங்கும் அந்தப்புறம் பெண்களால் நிறைந்திருந்தது.
  • பெற்றோர்களில் பலர் தங்கள் ஸ்தானத்தைப் பயன்படுத்தி குழந்தைகளிடம் அளவுகடந்த பொய் சொல்வதுண்டு.
  • மதகுருமார்கள் அட்டூழியம் செய்தனர். அரசனையும் கட்டுப்படுத்தினர்.
  • எவர்கள் கையில் எந்த (power) சக்தி கிடைத்ததோ அவர்கள் தங்கள் சமுதாயம் தவிர மற்றவர்களுக்கு அதைத் தர மறுத்தனர்.
  • வியாபாரம் வளர்ந்தவுடன் அது ஏகாதிபத்தியமாயிற்று.
  • பெரும் பல்கலைக்கழகங்கள் மேதைகளையும் (genius) புறக்கணித்தன, அலட்சியம் செய்தன.
  • விஞ்ஞானி தான் கண்டுபிடித்ததை தன் உடமையாக்கிக் கொண்டான்.
  • தங்கம் தென் அமெரிக்காவில் கிடைத்தபொழுது, அதை முதலில் கண்டவர் தம் சொத்தாக்கினார்.
  • பெட்ரோல் கிடைத்த இடத்திலுள்ளவர் அதை தம் உடமையாக்கிக் கொண்டனர்.

ஒரு நாட்டில் ஓர் அறிஞர் உற்பத்தியானால், அந்த நாடு முழுவதும் அறிவிற் சிறந்து பெற்ற பலன் அது. ஒருவரில் அது மிளிருவதால் அது அவருக்குச் சொந்தமாகாது. சமூகத்திற்குரியதைத் தனி மனிதன் தனக்கே எடுத்துக் கொண்டான். அதனால் அவன் தவிர மற்ற அனைவரும் அதன் பலனைப் பெற அதிக விலை கொடுத்தனர். தவத்தால் பயன்பெற்ற முனிவர் பெற்ற சித்தி, நாட்டின் ஆன்மீக உயர்வை

அவர் மூலம் தெரிவிக்கிறது. அது அவருடைய தனி உடமையன்று. எந்த நாட்டிலும் ஆன்மீகச் சித்தியைப் பெற்றவர் அனைவருக்கும் தர முன் வரவில்லை. பிறரிடமிருந்து அதை மறைத்தனர். பிறரை விலக்கினர். தாங்களே ஏகபோக உரிமையாக அனுபவித்தனர். அதனால் நடைமுறையில் அவர்கள் பொய்யின் உறைவிடமானார்கள். இருள் அவர்கள் வாழ்வைக் கவ்வியது. இனி அவர்கட்குக் கதி மோட்சமில்லை என்ற நிலை ஏற்பட்டது. இதுபோன்ற முன்னோடிகள் அரசியல், நாகரீகம், பண்பு, கல்வி, ஆன்மீகம் ஆகியவற்றுள் முதலில் எந்த நாட்டில் சிறந்து விளங்கினார்களோ, அடுத்த the next cycle or period in history 'தலைமுறை'க்கு அவர்கள் விலக்கானார்கள். கீழ்க்கண்ட உதாரணங்கள்.

  • 1. எகிப்திய நாகரீகம்
  • 2. கிருஸ்து பிறந்த நாடு
  • 3. இஸ்லாம் உற்பத்தியான இடம்
  • 4. கிரேக்க நாட்டின் அறிவின் மலர்ச்சி
  • 5. ரோமாபுரி சாம்ராஜ்யம், கடல் கடந்த வாணிகம்
  • 6. இங்கிலாந்தின் சாம்ராஜ்யம்
  • 7. முடியாட்சி விளங்கிய நாடுகள்
  • 8. இந்துமதத் தலைவர்கள்
  • 9. ஐரோப்பிய விஞ்ஞானம்
  • 10. அமெரிக்கச் செல்வம்
  • 11. ஐப்பானின் தொழில் முன்னேற்றம்
  • 12. சோவியத் கம்யூனிசம்

ஒரு படி உயர்ந்தால் மாற்றத்திற்குப் போதும். முழுமையாக ஜீவன் ஒருமித்துச் செயல்படுவதெனில், ஆழ்ந்த தியான நிலையில் சமர்ப்பணம் செய்து செயல்பட்டால், ஜீவன் முழுமையாகச் செயல்படும். ஆழ்ந்தநிலை அனைத்தும் ஒன்றிய

நிலை. சமர்ப்பணம் செய்வது, அன்னையையும் ஆழ்ந்த நிலைக்கு உட்படுத்துவதாகும். எனவே ஜீவனின் எப்பகுதியும் விலகாது.

ஆழ்ந்த தியானமும், சமர்ப்பணமும் ஜீவனின் முழுமையைத் தரும்.

அன்றாட வாழ்வில் இது செயல்படும் வகைகளைக் காண்போம். அளவுகடந்து படித்த ஒருவர், தம் படிப்பை ஆபீஸ் வேலைக்கும், குடும்ப நிர்வாகத்திற்கும் புறம்பாக வைத்திருப்பதுண்டு. படிப்பு என்பது படிப்பிற்காக. அதற்கும் ஆபீஸ் வேலைக்கும் சம்பந்தமில்லை. குடும்பம் என் படிப்பால் பயன் பெறாது. இது வேறு, அது வேறு என அவர் நினைப்பதுண்டு. அது இயல்பு. இதைச் சற்று மாற்றலாம். தாம் படித்த பெரிய படிப்பால் தம் ஆபீஸ் வேலை எப்படிச் சிறப்படைய முடியும் என்று அவர் யோசனை செய்தால் ஆபீஸ் வேலை அளவு கடந்து பரிமளிக்கும். அதேபோல் என் படிப்பால் குடும்பம் எப்படி வளரமுடியும் என்று யோசனை செய்தால், குடும்பம் அவர் படிப்பால் பெறக்கூடியவை அநேகம் என அறியலாம். இவற்றைச் செய்பவர் அரியர். செய்வது மாற்றம் எனப்படும். இதை அவர் வெற்றிகரமாகச் செய்ய, அறிவின் பலனை உணர்வும், செயலும் பெறும்படி நடக்க வேண்டும்.

உலகச் சரித்திர வரலாறு, முன்னோடிகள் அடுத்த கட்டத்தில் பின்னோடிகளாவார்கள். பின்னோடிகளிலிருந்து தான் முன்னோடிகள் எழுகிறார்கள் என்று நமக்குச் சொல்கிறது. உலகத்திலேயே அறிவின் மலர்ச்சி சாக்ரடீஸ் மூலம் கீரிஸில் எழுந்தது. அன்றிலிருந்து இன்றுவரை கிரீஸ் பெயரே உலகத்திற்குத் தெரியவில்லை. விஞ்ஞானம் ஐரோப்பாவின் உற்பத்தியாயிற்று. கடந்த 100 ஆண்டுகளாக

ஐரோப்பாவிற்கு அந்தத் தகுதி கிடைக்கவில்லை. ஆன்மீகம் வேத உபநிஷத காலத்திற்குரியது. அதன்பின் ஆன்மீகம் பின்னணிக்குப் போய் மதம் வளர்ந்தது.

இரண்டாம் கட்ட முன்னேற்றம் முதற்கட்ட முன்னோடிக்கில்லை என்பது உலக நாகரீகத்தின் சரித்திரம். பொய் சொன்ன பெற்றோர்கட்குக் குழந்தைகளிடம் மரியாதையில்லை. ஆன்மீகச் சிறப்பைப் போலியாகப் பயன்படுத்தியவருக்கு அத்துடன் ஆன்மீகம் போய்விட்டது. இது நாம் கவனிக்க வேண்டியது. அன்னை சரித்திரத்தை மாற்ற வந்தவர். அதனால் அவர் சரித்திரத்தின் போக்கை மனிதனில் மாற்றும் யோகத்தை நமக்களிக்கிறார்.

உடலால் உழைத்த மனிதனுக்கு இனி உடல் இருள்; மனத்தால் வளர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு, ரிஷிகள் உடலைத் தூர எறிந்தனர். அன்னை, உடலை விலக்க வேண்டாம். அதுவே பொக்கிஷம் என்கிறார். இதன் சிறு அம்சத்தை நான் மாற்றம் என்ற பெயரில் வாழ்வில் எழுப்ப வேண்டும் என்கிறேன். அன்னை உடலுக்கும், வாழ்வுக்கும், முக்கியத்துவம் அளிக்கிறார். உலகம் ஒதுக்கும் உடலையும், வாழ்வையும் அன்னை முதன்மையாகக் கருதுகிறார். பண்பு, மனத்தூய்மை, வீட்டுவேலை, தாழ்ந்த கடமைகளை முக்கியமில்லாததாகக் கருதுகிறோம். மாற்றம் என்பது பணமும், அறிவும், அந்தஸ்தும், பண்பு, தூய்மை, தாழ்ந்த கடமைகட்கு ஊழியம் செய்ய வேண்டும்.

 

  • பண்புக்குப் பணம் கட்டுப்படுவது,
  • தூய்மைக்கு அறிவு அடங்குவது,
  • தாழ்ந்த கடமைக்கு அந்தஸ்து கீழ்ப்படிவது,
  • மாற்றத்தை நாடும் பக்தனுக்குரிய நடைமுறை.

 



book | by Dr. Radut