Skip to Content

பகுதி 2

பேரம் பேசினர். இவர் பேரம் பேசவில்லை. வெண்டைக்காய் 1 கிலோ வாங்கினார். மறுநாள் சமையல் காய் மிகப் பிஞ்சாக, இனிமையாக இருந்ததை, இவர் கண்டார். மற்றவர்கள் வாங்கியதில் ஒரு பகுதி முற்றல், மீதியை உபயோகப்படுத்தினர். கொத்தவால் சாவடியில் கூட்டம் அதிகம். இடித்துக் கொண்டு போக விருப்பப்படாதவர் அன்னையிடம், நான் போகுமுன் நீங்கள் போக வேண்டும், என்று கேட்டபொழுது, கூட்டம் விலகி, வழி விட்டதைக் கண்டார். இவை பொதுவாக அன்னையிடம் சொல்வதன் பலன்.

நம்புபவனை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கம் உடையவரிடம் நாம் பழக வேண்டிய அவசியம் ஏற்பட்டால், நாம் எப்படி நடப்பது, ஜாக்கிரதையாக நடக்க வேண்டும் என்றால் எல்லா எச்சரிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்; பெருந்தன்மையாக நடக்க வேண்டுமானால் ரசீதில்லாமல் பணம் தரவேண்டும்; கொடுத்ததைக் கேட்கக் கூடாது; அந்தஸ்து வெளிப்படும்படி நடக்க வேண்டுமானால், எதிரியை விட அந்தஸ்துள்ளவன் மூலம் பழக வேண்டும். மாற்றத்திற்குரிய அன்னை முறை எது?

அன்னை முறை பெரிது; அன்னையை மட்டும் நம்பி நடக்க வேண்டுமென்பது. நாம் மாற்றத்தை நாடுகிறோம், சுபாவத்தை மாற்ற முயல்கிறோம் என்பதால் நம் சுபாவம் மாறும் வகையில் நாம் எதிரியிடம் பழக வேண்டும்.

எச்சரிக்கை நம் சுபாவமானால், எச்சரிக்கைக்குப் பதில் அன்னையை நம்புவதையே எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும். அவசரம் நம் சுபாவமானால் அன்னையை மட்டும் நம்புவதுடன், இவர் விஷயத்தில் பொறுமையாகப் பழக வேண்டும். எதிலும் நம் பெருந்தன்மை வெளிப்பட நடப்பது பழக்கமானால், இங்குச் சாதாரண மனிதன்போல் எல்லா ரசீதுகளிலும் கையெழுத்து, சாட்சி பெற வேண்டும்.

அன்னையின் பொது முறை காரியத்தை முடிக்கும். நம் மாற்றத்திற்கேற்ற அன்னை முறை காரியத்தை முடிப்பதுடன், அதன் மூலம் மாற்றத்தையும் தரும்.

சில அபிப்பிராயங்கள், நோக்கங்களைக் குறித்து, அவற்றிற்குரிய அன்னை முறையை எழுதுகிறேன்.

குருவுக்கு (omniscient) எல்லாம் தெரியும் என்று நினைத்து நடப்பவர்கள் உண்டு. அவதாரப் புருஷனே தன் கடமைக்குரியதை மட்டும் அறிவான் எனப் பகவான் சொல்கிறார். குருவிடம் சொல்லியதால் மட்டும் எதுவும் நடக்கும் என்ற மூட நம்பிக்கையை ஒருவர் நம்பிக்கையான நோக்கமாக்கினால் அவர் விஷயத்தில் நாம் என்ன செய்வது? அவர் மகனுக்கு அட்மிஷன் கிடைக்க, குருவிடம் சொல்லிவிட்டுத் தம்பி உட்கார்ந்திருந்தால், அண்ணன் என்ன செய்ய முடியும்? தம்பியின் எண்ணம் சரியில்லை என நினைத்தால், பிரச்சினை வளரும். தம்பி நினைப்பது தம்பிக்குச் சரி, அது எப்படிச் சரி என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்ற மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு, அன்னையிடம் சொன்னால், அட்மிஷன் கிடைக்கும், நம் புதிய நோக்கத்தில் அன்னையை அதிகமாக அறிந்து கொள்வோம், தம்பி இத்துடன் தன் மூட நம்பிக்கையை விட்டு விடுவான்.

தம்பியின் மடமையை மடமை எனக் கருதுவது உலகில் அறிவு; அன்னையிடம் அது சரியில்லை. அவனுடைய மடமை அவனுக்கு அறிவு என்று புரிந்து கொள்வது நம்மை மனித நிலையிலிருந்து அன்னை அவனை எப்படிப் புரிந்து கொள்வாரோ அந்த மனநிலைக்கு மாற்றும்.

அன்னையிடம் சொன்னால் அட்மிஷன் கிடைக்கும். ஞானம் வாராது. அவனது மடமையை அறிவு எனப் புரிந்தவுடன் எவருடைய மடமையும் நமக்கு அறிவாகத் தெரியும். அதன் மூலம் நம் மடமை அறிவாக மாறும். அது பரிணாமம். நூன் முக்கியக் கருத்து ignorance issuing knowledge ஞானம் அஞ்ஞானத்திலிருந்து எழுகிறது என்பது. நூன் கருத்து நம் வாழ்வில் செயல்படும் சந்தர்ப்பமாக நம் மாற்றம் அமையும்.

சிறுவயதில் இலட்சியம் எனக் கேள்விப்பட்டதையே வயதான பின்னும் இலட்சியம் என நம்புபவர், பணம் சம்பாதிப்பது தவறு ஆசிரியரை விட, தகப்பனாரை விட அதிகம் படிக்கக் கூடாது, கதர் உடுத்துவது தேசபக்தி போன்ற அர்த்தமற்ற கருத்தை நம்பும் மனிதருடன் எப்படி வேலை செய்வது, காரியங்களைப் பூர்த்தி செய்வது?

மகன் தன் கல்லூரி ஆசிரியர் ஊனமுற்ற பெண்ணைத் திருமணம் செய்வது இலட்சியம் என்றதால், ஊனமுற்ற பெண் வேண்டும் என்றால் தகப்பனார் என்ன செய்வார்? அதுபோல் சொன்ன ஒருவர் அன்னைச் சூழலில் சம்பந்தப்பட்ட இடத்தில் வேலை செய்தார். அவர் தம் கொள்கையை வலியுறுத்தினார். திருமணமாகும் பொழுது அழகான பெண் அமைந்தாள்.

பணம் சம்பாதிப்பது தவறு என்ற இலட்சியத்தைப் பணத்தையே சம்பாதிக்க முடியாத சிற்றப்பா பையனுக்குப் போதித்துள்ளார். இவன் இப்பொழுது ஒரே பிடியாய் நிற்கிறான் என்றால், நாம் என்ன முடிவு எடுக்கவேண்டும்? பையன் சொல்வது தவறு, சொல்லிக் கொடுத்தவரின் தவறு, ஆனால் பையன் சொல்லும் நோக்கம் இலட்சியமான நோக்கம். அவன் மனம் இலட்சியத்தை ஏற்பதை நாம் ஏற்று, அவன் போக்கில் போனால் அவன் சம்பாதிக்கக் கூடியதை விட அதிகம் சம்பாதிப்பான்.

 • குறுக்குவழி நல்ல வழி.
 • பணத்தால் சாதிக்கலாம்.
 • என்னை எவரும் கேட்க மாட்டார்கள்.
 • எனக்கு உங்களைத் தெரியும் என்பதால், நீங்கள் எனக்கு உதவ வேண்டும்.
 • எப்படியாவது எவராவது மாட்டுவார்களா?
 • நாலு பேர் சேர்ந்தால் அவரை அழிக்கலாம்.
 • கொட்டினால்தான் தேள்.
 • மட்டமாக மற்றவரைப் பேசினால் நான் உயர்ந்தவன்.
 • நான் உனக்குச் செய்த கெடுதலை மறந்து, நீ எனக்கு உதவ வேண்டும்.
 • உன் வீட்டை எனக்கு இனாமாகக் கொடு.
 • ஒரு நாளாவது மருமகன் ஜெயிலுக்குப் போக வேண்டும்.
 • நாலு பேர் ஏற்பதை மட்டும் நான் ஏற்பேன்.
 • எவ்வளவு பெரிய சாதனையானாலும் எதிரி சாதனையை ஏற்க முடியாது.

இது போன்ற நோக்ககங்களுள்ளவர்களிடம் பக்தர்கள் மாட்டிக் கொள்வதில்லை. அன்னை அவர்களை விலக்குவார். விலக்காவிட்டால், இது நமக்கு ஒரு நல்லது செய்ய வந்த

சந்தர்ப்பம் என அறிய வேண்டும். இப்படிப்பட்டவர் அதிகாரியாக இருந்தால் கட்டுப்படப் போவதில்லை. வெறும் மனிதனாக மடையனாக இருந்தால் புரியாது. கட்டுப் படாவிட்டாலும், புரியாவிட்டாலும், நாம் சந்தர்ப்பத்தில் நம் மாற்றத்திற்குரிய நோக்கத்தை ஏற்றால் நல்லது.

குறுக்கு வழி உனக்கு நல்லது, பணத்தால் நீ சாதிக்கலாம் என்பதை நான் ஏற்றால் நான் சாதிக்கலாம், உன்னை நானும் கேட்கப் போவதில்லை, நீங்கள் எதிர்பார்ப்பதால் நான் உதவுகிறேன், நீயே மாட்டிக் கொள்வாய், நாற்பது பேர் சேர்ந்தாலும் பக்தரை அழிக்க முடியாது, நான் கொட்டப் போவதில்லை, நீ மட்டமாகப் பேச என்னுள் ஏதோ சம்மதிக்கிறது, கெடுதல் செய்த பின்னும் நான் உதவுவேன் என நீ நினைக்கிறாய், என் வீடு நீ நினைப்பதுபோல் பெற்றது, போன்ற நோக்கங்களை நாம் மேற்கொள்வது நல்லது.

அன்னையின் எல்லா முறைகளும் (short cut) சுருக்கு வழிகளாகும். சரியான இடத்தில், சரியான பக்தரிருந்தால், இது சரி. மேற்சொன்ன மாற்றத்திற்குரிய முறைகளுக்கும், சாதாரண முறைகட்கும் என்ன வேறுபாடு எனலாம்?

நாம் ஒரு கிராமத்தில் பொதுச் சேவை செய்து கொண்டிருந்தால் அங்கு, போன், பஸ் வசதியில்லாவிட்டால், அவற்றைப் பெற இரு வழிகள் உண்டு. கிராமம் நம் சேவையால் முன்னேறி, கல்வி, விவசாயம், வியாபாரம் பெருகித் தானே போன் வேண்டும், பஸ் வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டு, அவை வருவது பொதுமுறை.

பொதுச் சேவைக்குப் போன் அவசியம். சேவையால் நாம் அதிகாரிகளை நன்கு அறிவதால், சேவைக்குப் போன் முன் கூட்டி அளிக்க சட்டம் இருப்பதால், அம்முறையால் போன் பெறுதல் சுருக்கு வழி.

 • மாற்றம் எல்லா வழிகளையும் சுருக்கு வழிகளாக்குவது,
 • மாற்றத்திற்குரிய அன்னை வழி அதற்கும் சுருக்கு வழியாக அமைவது.

அகங்காரம் என்று தலைப்பிட்ட அத்தியாயம், நூல் 7ஆம் அத்தியாயம். வலி ஏற்பட்டால் நாம் வலியை உணர்வது அவசியமில்லை எனப் பகவான் அதில் எழுதுகிறார். இதன் கருத்தென்ன? நாம் பின்பற்ற முடியுமா?

வலி எல்லோருக்கும் உள்ளது, அதிலிருந்து தப்ப முடியாது என்றால் அதை அனுபவித்தே தீர வேண்டும். உணர்ந்தால்தான் வலி, உணர்பவர்க்கே வலி என்பதை நாமறியும் நிகழ்ச்சிகளில் சில காட்டும்.

முள் குத்தினால் காட்டு மனிதனுக்கு வலிப்பதில்லை. கால் குத்திய முள் பாதத்தை ஊடுருவி மேலே வந்தபின், சைக்கிள் ஓட்டிக் கொண்டு அவன் வந்தான். வலிக்கவில்லை என்கிறான் எனில், வலி என்பது தவிர்க்க முடியாதது என்பதில்லை என்று நாம் அறிகிறோம்.

மரியாதையில்லை எனச் சிலர் கோபித்துக் கொண்டால், அதே சொற்கள் மற்றவர்கட்குக் கோபம் ஊட்டுவதில்லை. கோபம் நம் மனநிலையிலிருந்து எழுகிறது; வார்த்தையால் அல்ல என்று தெரிகிறது.

கோபப்படுவது மனம் என நாம் நினைக்கிறோம். அது உண்மையானால் ஒருவருக்குக் கோபமூட்டும் சொல், அனைவருக்கும் கோபமூட்ட வேண்டும். கோபப்படுவது மனம் இல்லை; அகந்தை. அகந்தை அழியும் மார்க்கம் நம்முடையது. ஆதலால் ஏன் கோபப்பட வேண்டும்? ஆபீஸில் நண்பர் திட்டினால் கோபம் வருகிறது. அதேபோல் பிச்சைக்காரன் திட்டினால் கோபம் வருவதில்லை. கோபம் சொல்லிலில்லை;

சொல்பவரிடமிருந்து எழுகிறது; நாம் சொல்வபவரோடு கொண்டுள்ள தொடர்பில் கோபமிருக்கிறது.

கோபப்படுவது தவறு என முடிவு செய்தால் கோபம் குறைவது தெரியும்; குறைந்து மறைவது தெரியும். வலிக்கும் சட்டம் அதுவே. அதை அறிவது சற்று அதிகமான சிரமம்.

எச்சில் டம்ளர் வடநாட்டானுக்குக் கோபமூட்டுவதில்லை. நமக்குக் கோபம் வரும். கோபம் டம்ளரில் இல்லை. நம் மனப்பான்மையிருக்கிறது.

சொரணையில்லாமல் கோபப்படாமலிருப்பதற்குப் பதிலாக, சொரணையைக் கடந்த உயர்ந்த மனநிலையில் கோபப்படாமலிருக்க முடியும். அதுவே மாற்றம்.

பெரிய சொத்து போன பின், அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆசிரம வரிசையில் நின்று கொண்டிருந்தவருக்கு பிரசாதம் என அன்னை தொட்டு ஆசீர்வாதம் செய்த பாதம் அல்வாவில் ஒரு சிறிது நண்பர் ஒருவர் கொடுத்தார். அதற்கு முன் 15 வருடங்களாக நடக்காதது. சொத்து திரும்பி வரும் என்று புரிந்து கொண்டார். அது வந்து விட்டது.

ஒரு பிரச்சினை அன்னையிடம் வந்து விட்டால், அது தீர்ந்துவிட்டது என்று அர்த்தம் என்பதை முழுமையாக நாம் ஏற்றுக் கொள்வதில்லை. ஆஸ்பத்திரிக்குப் போக கம்பனி மானேஜர் 2 மணி அனுமதி கேட்பதற்காக, தன் மகளுக்கு ஆப்பரேஷன் என்றுச் சொன்னார். அதைக் கேட்ட முதலாளி, பிரச்சினை இங்கு வந்து விட்டதால், ஆப்பரேஷன் இனி இல்லை எனப் புரிந்து கொண்டார். தம் மகள் தியேட்டருக்குள் போகும் நேரம் என்றும், அவசரமாகத் தாம் போக வேண்டும் எனவும் கூறிய மானேஜர், முதலாளியின் நம்பிக்கையை ஏற்றார். ஆப்பரேஷன் இல்லாமல் போய்விட்டது.

அன்னையிடம் செய்தி வந்த பின், பிரச்சினை பூரணமாகத் தீரும். அதன் அளவைக் குறைப்பது நம் நம்பிக்கையின் எல்லை.

பெரிய மகான்கள், பெரிய மகான்களால் எழுப்பப்பட்ட ஸ்தாபனங்கள், பெரிய இடங்கள் என நாமறியும் இடங்களில் நெருக்கமாக இருப்பவர்கள், அவற்றால் முழுப் பலன் பெறுவதில்லை. பலனே பெறுவதில்லை என்பதே பொது. யாரோ ஒருவருக்குச் சிறு துளி பலன் ஏற்படும். அத்துளியிருந்தால், இது போன்ற நம்பிக்கைகள் ஏற்படும். கல்கத்தாவிலிருந்து இருதய ஆப்பரேஷனுக்காக ஒருவர் வேலூர் வந்தார். வேலூர் போகுமுன் ஆசிரமம் வந்து தங்கினார். இவருக்கு ஆப்பரேஷன் இல்லை என்பது அவர் என்னைச் சந்திக்கும் பொழுதெல்லாம் எனக்குத் தெரிகிறது. அவருக்குத் தெரியவில்லை. ஆப்பரேஷன் நல்லபடியாக முடிவது அருள் என்று அவர் புரிந்து கொண்டார்.வேலூர் போனார். ஆப்பரேஷன் தேவையா என்று அடுத்த பரிசோதனையில் முடிவு செய்யலாம் என்றனர். அவர் மனம் ஆப்பரேஷனில் இருந்தது. மூன்று முறை அவருக்கு ஆப்பரேஷனைத் தவிர்க்கும் சந்தர்ப்பங்கள் எழுந்தன. கடைசியாக ஆப்பரேஷன் செய்து கொண்டார். நல்ல முறையில் முடிந்ததற்குப் பெரிதும் நன்றி தெரிவித்தார். தாம் ஆப்பரேஷனைத் தவிர்த்திருக்க முடியும் என்று அவருக்குத் தோன்றவில்லை.

பிரச்சினை எந்த அளவில் தீரும் என்பதை நம் நம்பிக்கை நிர்ணயிக்கிறது. அது முடிந்தால் அருள் என அதை நினைக்கிறோம்.

 • அருள் அளவற்றது.
 • நம் நம்பிக்கை அதற்கு அளவேற்படுத்துகிறது,

என்பதை அறிந்து, அந்த அளவைச் சற்று அதிகப்- படுத்துவது, மாற்றத்திற்குதவும். இதுவரை நடந்தவைகள் போனாலும், இனி வரும் பிரச்சினைகளில் நாம் இந்த மாற்றத்தைத் தேட வேண்டும். எங்கும் தவறு செய்யலாம். எவரும் தவறு செய்யலாம். நம் அறியாமையும், பேராசையும் அருள் என்ற பெயரில் உள்ளே வரும். சர்க்கார் வேலையிலிருப்பவர் தொழில் செய்யலாம் என்ற சந்தர்ப்பத்தை அருள் எனப் புரிந்து கொள்ளலாம். நம்மால் தொழில் முடியும் என்று எனக்கு நம்பிக்கை வந்ததே அருள் என அவர் அறியலாம். 3 கோடி மூலதனம் பெற வழியுண்டு என்றால், அவ்வளவு எதிர்பார்ப்பது பேராசை என நினைக்கலாம். மனம், பேராசையிலிருக்கிறதா, இல்லையா எனத் தெளிவாக சொல்லும். பேராசை மனத்திருந்தால், அதை ஏற்பது தவறு. பேராசையிலிருந்து அதை அருள் என மறைத்து நினைத்தால், காரியம் கெட்டுப் போகும். பேராசை மனதில்லாவிட்டால், அதை ஏற்பது நல்லது. பெரியவர்களிடம் நெருக்கமாக இருந்து, அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்வதுண்டு. இவற்றை அன்னை அனைவரும் அறியும்படி விளக்கமாக எழுதுகிறார்.

பல வருஷமாக முதுகு வலியுண்டு. பாண்டிக்கே வரும் வாய்ப்பு வந்தது. முதுகு வலி போய்விட்டது. இரண்டு வருஷம் கழித்து அன்னை அல்லது சாந்தியைக் கூப்பிட்டால் போய்விடும். தவறாதும் போய்விடும். பிறகு சில சமயங்களில் குறையும், ஆரம்பத்தில் எதுவும் பலிக்கும். நாளானால் பலிக்காது என்பது உண்மைதானே என மனம் ஆறுதல் கூறும். அடுத்த முறை வலி வந்தது. வலி அதிகமாக இருந்தது. அன்னைக்குப் பிரார்த்தனை செய்ததில் பொறுக்க முடியும் அளவுக்குக் குறைந்தது, இந்த நிலையில் ஏன் நம்பிக்கையை அதிகப்படுத்தக் கூடாது? என்று நினைத்த பொழுது மணி 6.30. அன்னையை மட்டுமே நம்பி எந்த முறையையும் நம்பாமல், பிரார்த்தனையையும் ஒதுக்கி விட்டுக் கேட்போம் எனத் தோன்றியது. வீட்டிற்குப் போய், அம்மா, இந்த வலி

எனக்கு வேண்டாம் எனப் பல தடவை வலி விடும்வரை சொல்லுவோம் எனப் போனவர், அதுபோல் சொல்ல ஆரம்பித்தார். ஆரம்பத்திலேயே வலி பூரணமாக விட்டுவிட்டது.

பூரணமாகப் போய்விட்டது எனில் அது அருளின் செயல்.

99% போய்விட்டது எனில் அது நம் நம்பிக்கையால் நடந்தது.

சாந்தியை அழைப்பதும் ஒரு முறை. அதுவும் அன்னையை விட்டு ஒரு படி எட்ட இருப்பதுதான். நேரே அன்னையைக் கேட்கும் பொழுது நாம் நெருங்கிவருகிறோம். அதனால் பலன் உண்டு.

நம்பிக்கை :

நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை என இரண்டாகப் பிரிக்கலாம். நம்பிக்கை (faith) என்பது ஆன்மாவுக்குரியது. நம்பிக்கையுள்ளவர் ஆன்ம விழிப்புள்ளவர். நம்பிக்கை என்பது மனத்திலிருந்தால்தான், தெய்வ நம்பிக்கை ஏற்படும். நம்பிக்கையில்லாதவருக்குத் தெய்வ நம்பிக்கை ஏற்பட வழியில்லை.

கண்ணுக்குத் தெரியாததை நம்புவதே நம்பிக்கை. நம்பிக்கையின் உருவங்கள் அனந்தம். 10 வருஷமாக ஆபீசில் இன்ஸ்பெக்ஷன் வந்து விட்டால், பயம் வரும். இத்தனை வருஷமாக இன்ஸ்பெக்ஷன் நல்ல முறையாக நடந்தாலும், இன்றும் நம்பிக்கை வாராதவர் உண்டு. ஒரு முறை பலித்தால், அதன் மூலம் நம்பிக்கை வருவதும் உண்டு. முதல்முறை வெளிநாடு போகும்பொழுது, அனுபவமே இல்லையென்றாலும் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்புபவர்க்கு நம்பிக்கையிருக்கிறது. அது hope அல்லது faith ஆக இருக்கும். நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற ஆசை பூர்த்தியாகும்

என்பது hope, நல்லபடியாக நடக்கும் என்ற தெளிவு faith ஆகும். இரண்டையும் நம்பிக்கை என்றால் குழப்பம் வரும்.

ஒரு விஷயத்தில் நம்பிக்கையுள்ளவர்க்கு அடுத்த விஷயத்தில் நம்பிக்கை இருக்காது. நம்பிக்கை பொதுவானது மட்டுமன்று, குறிப்பானதும் கூட, ஒவ்வொரு விஷயத்திலும் நம்பிக்கையைக் குறிப்பாக வளர்க்க வேண்டும். நம்பிக்கை என்பது அதன் குறிக்கோளையடைய இலட்சம் பிறவிகளுக்குப் பின்வரும் மோட்சத்திற்குக் காத்திருக்கும் பக்தன்போல, பொறுமையுடன் காத்திருக்கக் கூடியது.

நம்பிக்கையுள்ளவர்க்கு அபாரப் பொறுமையுண்டு

அவசரப்படுபவர்கள் நம்பிக்கையில்லாதவர்கள்.

காத்திருக்கும் பொறுமை காலத்தைக் கடந்தது. ஆனால் கண்டவுடன் கணம் தரியாது. கணம் தரியாமல், கேள்வி எழுப்பாமல், யோசனை செய்யாமல், எந்த யோசனையும் எழுந்து விலக்காமல், உடனே ஏற்கவல்லது.

பொறுமையாகக் காத்திருப்பதும், யோசனை

செய்யாமல் க்ஷணத்தில் ஏற்பதும் நம்பிக்கையின்

ஆன்மீக இலட்சணங்களாகும்.

நான் என் ஊரை விட்டுப் பாண்டிக்குக் குடி போகிறேன் என்றால், மனம் அன்னை மீதும், பாண்டி மீதும் இருக்கிறது. சந்தர்ப்பம் வந்தவுடன் அதைச் செய்துவிட்டேன். யார் என்ன சொல்வார்கள், ஏன் பாண்டிக்குப் போகிறீர்கள்? அங்கே யார் இருக்கிறார்கள்? எதற்காக அங்குப் போக வேண்டும்? என்று கேட்டால் என்ன சொல்வது என்றெல்லாம் நினைக்கவில்லை. முதல் இதைச் செய்வோம். மற்றவையெல்லாம் பிறகு என வந்துவிட்டேன் என்பவர் அவசரமாக நடப்பவரில்லை, ஆர்வமாக நம்பிக்கையால் செயல்படுபவர். தம்மை அன்னையிடம் அதுபோல்

ஒப்படைப்பவருண்டு. அது நம்பிக்கை, அன்னை மீது நம்பிக்கை.

அது இல்லாமல் யோசனை எழுகிறது, பிறர் என்ன சொல்வார்கள்? இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது? என்றெல்லாம் யோசனை எழுந்தால், அதற்குச் சிந்தனை என்று பெயரில்லை, அதற்கு நம்பிக்கை எனப் பெயரில்லை, நம்பிக்கை இல்லை எனப் பெயர்.

அன்னை மீது நம்பிக்கையுடையவருக்கும், தம்மை அன்னையிடம் அப்படி ஒப்படைத்தவர்க்கும் வேறு விஷயங்களில் இதே நம்பிக்கை இருப்பதில்லை. அவ்விஷயங்கள் அவர்களுக்கு முக்கியமானவையாக இருக்கும். தம்மைவிட முக்கியமானவையாக இருக்கும். தம்மை அன்னையிடம் நம்பிக்கையோடு விட்டவர், தம் இலட்சியத்தை அதுபோல் விடமுடியாது என்று காண்பார். அவருக்குக் கட்சி என்றால் உயிர், தம் விஷயத்தை விட்டுக் கொடுப்பார்; கட்சியை விட மாட்டார் என்கிறோம். அது போன்றவர் தம்மை அன்னையிடம் ஒப்படைப்பதைப்போல் கட்சியின் விஷயங்களை அன்னையிடம் ஒப்படைக்கச் சம்மதிக்க மாட்டார். சிலருக்குப் பணம் அதுபோன்றது. வாழ்க்கையையே அர்ப்பணம் செய்தவர்கள், பணத்தின் மீது கருத்தானவர்கள் ஆனால் அன்னையைப் பண விஷயத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது என அறிவார்கள். பாசம் அதுபோன்றது. எல்லோருக்கும் பாசம் எழுவதில்லை. பாசமுள்ளவரை உயர்ந்தவராக அறிகிறோம். சாதாரண மனிதனை விடப் பாசமுள்ளவன் இலட்சியப் புருஷன். பாசம் உள்ளவர்கள் தங்களை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்த பின்னும் பாசமுள்ளவர் விஷயத்தில் அன்னையை நம்பாமல், தாமே செய்ய வேண்டும் என நினைப்பார்கள். பாசம் உயர்ந்தது. நம்பிக்கை அதனினும் உயர்ந்தது. நம்பிக்கையுள்ளவரும், பாசமுள்ள இடத்தில் நம்பிக்கை பெறுவது சிரமம். பாசத்தை

மீறி நம்பிக்கை ஏற்பட்டால், பலன் - பாசத்தைப் பெறுபவரின் பலன் - அதிகமாகும். பாசத்தால் பிள்ளைக்குப் செய்யக் கூடியதைவிட நம்பிக்கையால் பிள்ளைக்கு அதிகம் செய்ய முடியும். பாசத்தை மீறி நம்பிக்கை எழுந்தால், நமக்கு நம்பிக்கை முழுமையாகி ஆன்மீகப் பலன் ஏற்படும். நம்பிக்கையுள்ளவர் குறைவு; பாசமுள்ளவர் குறைவு; பாசத்தை மீறி நம்பிக்கை எழுவது, மனித நிலையைத் தாண்டி மனம் வருவதைக் காட்டும்.

மடமையின் மகத்துவம் :

பிறர் செய்வதை நாம் புரிந்து கொள்ள முடியும், அடுத்தாற்போல் என்ன செய்வார்கள் என எதிர்பார்க்க முடியும். பொதுவாக நம் விஷயங்களை அறிவதாலும், அறிவுடையவர்கள் எப்படிச் செயல்படுவார்கள், குறிப்பிட்ட பழக்கமுள்ளவர்கள் எப்படியிருப்பார்கள் என அறிவதாலும், நடக்கப் போவதை நாம் எதிர்பார்க்கலாம். அதுவும் அதுபோல் நடக்கும்.

மகன் 95% மார்க் வாங்கிவிட்டால், பணமுள்ளவர் இன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்க்க முயல்வார்; ஆபீசில் பிரமோஷன் ஆர்டர் கிடைத்தவுடன் இவர் பக்திமான் ஆனதால் பிள்ளையார் கோவிலுக்கு அர்ச்சனை செய்வார்; மாணவன் பந்தயத்தில் ஜெயித்து விட்டவுடன் நண்பர்கள் ஓடி அவனைத் தூக்கிக் கொள்வார்கள்; வீட்டிற்குச் சம்பந்தி வந்தவுடன் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு அவரைக் கவனிப்பார்; அவர் மனைவி உபசாரம் முடிந்தவுடன் விருந்து சமைக்கப் போய் விடுவாள்; குழந்தை வந்தவுடன் சாக்கலேட் கேட்கும் என நாம் பொதுவாக அடுத்தது என்ன என்று எதிர்ப்பார்க்கலாம்.

புது கம்பெனி ஆரம்பிப்பவர் மானேஜரை நியமித்து, இலாபத்தில் ஒரு சிறு பங்கு incentive ஊக்குவிக்கக்

கொடுத்தால், புது மானேஜர் 4 வருஷம் கழித்து கம்பனியைத் தமக்கே கொடு என்ற பொழுது, முதலாளி அதை எதிர் பார்க்கவில்லை. அதுவரை அவர் ஆரம்பித்த கம்பனிகளில் இல்லாத அனுபவம், அவருடைய தொழில் அனுபவத்தில் கேள்விப்படாத ஒன்று. பரீட்சை முடிந்து 10 நாள் ஆன பிறகு, ஹால் டிக்கட் வாங்க வந்த மாணவியின் செயலை எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. நன்கொடை கொடுப்பதாகச் சொன்னவுடன், சொன்னதை உடனே கொடு என கேஸ் போட்டு, கொடுக்காவிட்டால், அரெஸ்ட் செய்வேன் என வாரண்ட் பிறப்பித்த பொழுது, இந்த ஜில்லா கோர்ட் ஏற்பட்ட 100 வருஷமாக நடக்காதது என்றனர். அறிவுடையவன் மனம் எப்படிச் சிந்திக்கும் என அனைவரும் அறிவோம். அறிவில்லாதவன் அடுத்தபடியாக எதைச் செய்வான் என அறியும் அறிவு நமக்கில்லை. ஒரு மேதையிடம் மேற்சொன்ன நிகழ்ச்சிகளைச் சொன்னால், அதில் நாமறிந்ததை ஆதியிருந்து சொன்னால், அவருக்கு உலகம் தெரியும், உலகத்தைத் தாண்டி பிரபஞ்சத்தை அறிவார், அறிவுடைமையை அறிவதுபோல் அறியாமையின் ஆதியை அறிவார். அவர் உடனே இவன் கம்பெனியைக் கேட்பான், இந்தப் பெண் பரீட்சைக்குப் போகமாட்டாள், இந்த ஸ்தாபனம் வம்புக்கு வரும் என்று சொல்வார்.

மடமை செயல்படும் வகையறிய மேதையின் அறிவு தேவை.

அந்த மேதையாலும் தன் சொந்த அறியாமையை உணர முடியாது. தன் மடமையை அறிய ஆத்ம ஞானம் வேண்டும். ஆத்ம ஞானம் ஆத்மாவை அறிய உதவும். ஆத்மாவை அறிய உதவும் ஞானமும், மடமையை அறிய உதவாது. ஆத்மா உயர்ந்தது, அதை எளிதில் புரிந்து கொள்ளலாம். மடமை தாழ்ந்தது. உயர்ந்ததை அறிய உதவும் ஞானம், தாழ்ந்ததை அறிய உதவாது. தாழ்ந்ததை அறிய ஆத்ம ஞானத்திற்கு அடுத்த உயர்ந்த ஞானம் தேவை. ஞானியும் ஆத்மாவை மட்டும்

அறிகிறான். ஜீவனை முழுமையாக அறிந்தால், அதனுள்பட்ட மடமை புரியும். ஜீவனை முழுமையாக - புருஷப் பிரகிருதி உள்பட்ட ஜீவனை - அறிய ஜீவனைக் கடந்த அறிவு தேவை. அது ஜீவனுக்கில்லை. இறைவனுக்குண்டு. சொந்த அறியாமையை அறிய ஒருவன் இறைவனாக இருக்க வேண்டும். அறியாமையிலிருந்து, அறிவு வெளிப்படுதல் பரிணாமம். பரிணாமம் எனில் மனிதனுடைய பரிணாமமில்லை. அதற்கு அந்தச் சக்தியோ, ஞானமோ இல்லை. ஆன்மா பரிணாம வளர்ச்சியடைந்தால் * அதாவது மனித ஜீவன் இறைவனானால்,  சொந்த மடமை புரியும்.

மேதையின் அறிவும் சொந்த மடமையை அறியாது.

சொந்த மடமையை அறிய மனிதன் இறைவனாக வேண்டும்.

மனிதனை இறைவனாக்கும் மகத்துவம் மடமைக்கு உண்டு.

உலகில் உற்பத்தியானவற்றுள் உயர்ந்தது மடமை (ignorance) என்கிறார் பகவான். மடமை ஞானத்தைவிட உயர்ந்தது. ஞானம் தன்னை, தன்னுள் ஒளித்து உயர்ந்த நிலையில் ஏற்படுவது மடமை என விளக்குகிறார்.

இதே பொருள்பட பகவான் நூல் முழுவதும் பல இடங்களிலும், இதர நூல்களிலும் திருடன், விபசாரி, காட்டுமிராண்டி, வெட்கமற்றவன், சமூக விரோதி, துன்பமே உருவானவன், சிந்திக்க மறுப்பவன், நாத்திகன், சன்னியாசி, துரோகி ஆகியவர்களைப் பற்றி எழுதுகிறார். நூலை யோகத்திற்காகவோ, ஆத்ம ஞானத்திற்காகவோ, படிப்பவர் பெறும் பாக்கியம் இது. மாற்றத்தைத் தேடுபவர் பக்தனுடைய

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- This Yoga is Yoga of Spiritual Evolution ஆன்மிகப் பரிணாம பூரணயோகம்.

நிலையை விட்டு ஒரு படி உயர முடிவதால் அவர்களுக்கு இக்கருத்துகள் பயன்பட வேண்டுமானால், அவர்கள் உள்ள நிலையில் எப்படி நடப்பது என்றறிவது பயன்படும்.

 • திருடனின் அடி திருவடி.
 • எந்த ஆன்மாவும் ஏற்க முன்வாராத பெரிய சேவையை, பெரிய ஆன்மா ஏற்று விபசாரியாகிறது.
 • விஞ்ஞானியின் அறியாமையைக் காணும் அறிவுடையவன் காட்டுமிராண்டி.
 • இறைவனை மிக நெருங்கியவன் வெட்கமற்றவன்.
 • சிறுமைக்கு அடிபணிய மறுப்பவன் சமூக விரோதி.
 • தன் இலட்சியமே குறியானவன் துன்பத்திருப்பவன்.
 • சிந்தனையைவிட உயர்ந்தவன் சிந்திக்க மறுப்பவன்.
 • ஆன்மீகத்திற்கு அற்புத சேவை செய்தவன் நாத்திகன்.
 • உலகத்தின் ஆன்மீகப் பொறுப்பை ஏற்க குடும்பப் பொறுப்பை உதறியவன் சன்னியாசி.
 • விஸ்வாசத்தை விரைந்து நாடுபவன் துரோகி.

என்ற கருத்துகள் மாற்றத்தைத் தேடுபவர்க்கு எப்படி உதவும்?

 • திருடு போனால், திருடன் வந்த வழி, சுவடு, பாணிகளை ஆராய்ந்தால் நம் மனநிலையில் உள்ள குறைகள் தெரியும்.
 • வீட்டில் எவரும் ஏற்க மறுக்கும் கடமையை ஏற்றுச் செய்ய முனைந்தால் விபசாரியின் ஆத்ம ஞானம் வரும்.
 • நாம் அறிவுள்ளது எனப் பெருமைப்படுபவற்றிலுள்ள அறியாமையை அறிய முனைய வேண்டும்.

 • வெட்கப்படாமல் பெரிய காரியத்தைச் செய்ய நினைத்துப் பார்த்தால் வெட்கத்தின் திறன் வெளிவரும்.
 • சமூகத்தை எதிர்க்க வேண்டிய தைரியத்தைக் கற்பனை செய்வது உதவும்.
 • இலட்சியத்தை இலட்சியமாகப் பின்பற்ற முயலுதல்.
 • எண்ணத்தை நிறுத்திப் பார்.
 • வழிபாட்டை விட்டு ஆன்மிகத்தை நாடினால் நாத்திகம் விளங்கும்.
 • நம் விஸ்வாசம் ஆரம்பித்தது எப்படி என்ற ஆராய்ச்சி உதவும்.

மாற்றத்தை நாடுபவர்கள்,

 • இதுவரை எடுத்த நோன்பை நிறுத்த முனைந்தால் மனம் கசங்குவதை அறிவார்கள். மனம் கசங்குவதற்குப் பதிலாக பெருமைப்பட வேண்டும் என்பதே மாற்றம் என அறியவேண்டும்.
 • பலரையும் உதவி கேட்பவர், அதை நிறுத்திய பின், தானே வரும் உதவி தடைப்பட்டபொழுது, அந்த இலட்சியத்தைக் காப்பாற்ற முயல வேண்டும்.
 • எதை மேலதிகாரியிடம் சொன்னால், அவர் ஆதரவு போகுமோ, அதை நியாயத்திற்காக, ஆதரவு போகாத வண்ணம் சொல்ல முயன்று வெற்றி பெறுவது நல்லது.
 • குப்பையாக உள்ள வீட்டை முணுமுணுக்காமல் சுத்தமாக எவர் உதவியுமின்றி தான் மட்டும் சுத்தமாக வைக்க முயலவேண்டும்.

சத்வா :

வெளிநாட்டு வாலிபர் புதுவை வந்து அன்னை சேவையில் ஈடுபட்டு 6,7 வருடங்கள் கழித்துத் திரும்பிப் போய் ஒரு பாங்கில் வேலையில் அமர்ந்தார். புதுவையில் அவரிருக்கும்பொழுது ஊதுவத்தி புதியதாகத் தயார் செய்து கொண்டு புதுப்புது வாசனையுள்ள வத்திகள் தயார் செய்தார். Orange blossom என்ற வாசனையுள்ள வத்திகள் தயார் செய்தார். இதற்கு சத்வகுணம் என்ற பொருளில் சத்வா எனப் பெயரிட்டனர். அதை இவர் செய்ததால், இவர் நண்பர்களில் சிலர் இவருக்கே சத்வா எனப் பெயரிட்டனர். இன்று 15 வருடங்களாக இவர் சத்வா என அழைக்கப்படுகிறார்.

இவர் மிகவும் உயரமானவர். இவர் 6'- 7' உயரமுள்ளவர். இன்று 40ஆம் வயதில் இவர் திருமணமாகாதவர். சிறு வயதிலிருந்து இவருக்கு நண்பர்கள் இல்லை. ஒரே ஒருவர் நண்பர். அவர் அன்னை பக்தரானதால், இவரும் அன்னையை ஏற்றுக் கொண்டார். இவருக்கு ஓர் அம்சம் உண்டு. யார் மீதாவது இவர் பார்வை பட்டால், உடனே அவர் இடறி விழுவார். ஓடும் கார் மீது கண்பார்வை பட்டால், அது இடித்துக் கொள்ளும். இது இளவயதிலிருந்து இவர் அம்சம். இவருக்கு இது தெரியும்.

இவர் தம் நாட்டுக்குப் போனபின், இவர் பெயருக்கு ஒரு கடிதம் வந்தது. கடிதத்தை எடுத்து வந்த தபால்காரர் உடையெல்லாம் நனைந்திருந்தது. என்ன விசேஷம் என்று விசாரித்ததில், தபாலாபீஸிலிருந்து வரும்பொழுது, வழியில் உள்ள வாய்க்கால் இடறி விழுந்து விட்டதாக அவர் சொன்னார். தபால்காரர் போனபின், கடிதம் அனுப்பியது யார் என்று பார்த்தபொழுது, Waterman &Co வாட்டர்மேன் கம்பெனி என இருந்தது. இந்தியாவிலிருந்து திரும்பிப் போய்

பாங்கில் கடைசி நிலை வேலையில் சேர்ந்தவர், இவர் நண்பர்கள் ஓரிரு பிரமோஷன் பெற்ற பொழுது, இவர் அவர் வேலை செய்யும் பகுதிக்கு ஆபீசராகி விட்டார். இதைப் பெற 5, 6 நிலைகளைத் தாண்டி வர வேண்டும். இவரிடம், அன்னையைப் பற்றி நீங்கள் அறிந்ததென்ன? என்று கேட்ட பொழுது,

அன்னையை அழைத்தால் எதுவும் நடக்கும் என்பதே

என் அனுபவம்

என்று கூறினார். அன்னையை அழைத்து, காரியங்கள் கூடி வருவதை அனைவரும் பார்த்திருக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே அனைத்துக் காரியங்களும் கூடி வருவதைக் கண்டவர்கள். இவரும் அவருள் ஒருவர்.

இவரைப் போன்ற அம்சம் உள்ளவரைப் பற்றி அன்னை, இவர்கள் தங்கள் அம்சத்தை அறிந்து, அதைத் திருவுருமாற்றம் செய்யப் பிரியப்பட்டு என்னை நாடி வருபவர்கள். இவருக்கு அது தெரியும். பலருக்குத் தெரியாது. அவர்கள் எதைப் புரிந்து கொண்டாலும், எதை நினைத்து வந்தாலும், உண்மையிது தான். மற்ற பலன்களை அவர்கள் கருத மாட்டார்கள் என்று கூறுகிறார்.

அகங்காரம் :

அகங்காரம், அகந்தை என நாம் சொல்வதை ego என ஆங்கிலத்தில் கூறுவார்கள். நூலில் ஏழாம் அத்தியாயம் இதைப் பற்றியது. பகவான் தம் யோக நூல் கர்மயோகப் பகுதியிலும், ஞானயோகப் பகுதியிலும், பூரணயோகப் பகுதியிலும் அகந்தையைப் பற்றி ஒவ்வோர் இடத்திலும் ஓர் அத்தியாயம் என மொத்தம் 4 அத்தியாயங்கள் எழுதியுள்ளார்.

அகந்தை, மகத்(சக்தி) இவையிரண்டும் ஆதியில் உற்பத்தியானதாகச் சாங்கியம் கூறுகிறது. பொதுவாகச் சாஸ்திரங்கள் சொல்பவை குறைவு. சொல்லும் ஒரு சில விஷயங்களையும் சுட்டிக் காட்டுவதே மரபு. நீண்டு நெடிய பரந்த ஐயம் திரிபு அறும் விளக்கம் கொடுப்பது சாஸ்திரமன்று. பகவான் இம்மரபுக்கு எதிரானவர். எதையும் ஆதியில் ஆரம்பித்து, உற்பத்தியான வகை, செயல்படும் முறை, இருக்கும் நிலை, உச்சகட்ட உயர்வு, அதன் தன்மைகள் ஆகியவற்றை ஐயம் திரிபு அறக் கூறுவார், விளக்குவார். நமக்குத் தோன்றாத ஐயங்களை எழுப்பி, பதில் கூறுவார். அத்துடன் அந்த ஐயம் ஏன் எழுந்தது எனவும் கூறுவார். ஆன்மா எப்படி உற்பத்தியாயிற்று என்று நமக்குத் தோன்றுவதில்லை. ஆன்மா என்றால் இருக்கிறது எனக் கொள்வோம். நம் பரம்பரையில் சந்தேகம் கேட்டால், அதை விளக்க முன் வரமாட்டார்கள், அதிகப் பிரசங்கி என்பார்கள்; கோபம் வந்தால் குரு சபிப்பார். எவரும் சந்தேகம் எழுப்புவதில்லை. விஷயம் உயர்ந்ததால் சந்தேகம் எழ அதிக தீட்சண்யம் தேவை. சொல்வதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு முடிவதில்லை. எப்படிச் சந்தேகம் எழும்?

பகவானும் அகந்தை உற்பத்தியானதை எந்த இடத்திலும் நேரடியாக, விவரமாக எழுதியதாக, எனக்கு நினைவில்லை. மேற்சொன்ன அத்தியாயங்களை இந்நோக்கோடு ஒரு முறை படித்தேன். என்னால் அவ்விளக்கத்தைக் காண முடியவில்லை. பல சமயங்களில் ஓர் அத்தியாயத்தின் கருவை பகவான் வேறு சம்பந்தமில்லாத இடத்தில் குறிப்பிடுவதுண்டு. Index குறிப்பின் மூலம் அவற்றிலும், பார்க்க முனைந்தேன். எனக்குக் கிடைக்கவில்லை. எனக்குக் கிடைக்கவில்லை என்பதால் பகவான் எந்த இடத்திலும் எழுதவில்லை என்று சொல்ல முடியாது. இருக்கும் விளக்கங்களைச் சேர்த்து அகந்தை உற்பத்தியான வகையைக் கண்டு கொள்ள முயன்றேன். அகந்தையைப் பற்றி பகவான் எழுதியதில்

பெரும்பாலானவற்றைத் தேவைப்படும் அளவுக்கு எழுதி, மாற்றத்தில் அதன் பங்கு, நம் கடமையை விளக்கமாகக் கூறுகிறேன். விளக்கம், தத்துவம், நூல், பகவான் எழுதியது, மாற்றம் எல்லாம் ஒருபுறமிருந்தாலும், அகந்தை செயல்படும் போது மனம் முனைப்பாக இருக்கும். அகந்தை விலகி நின்றால் மனம் அடங்கி சில் என்ற உணர்வு தோன்றும். முனைப்பை மாற்றுவதே மாற்றம். இது முக்கியம். மற்றவை தத்துவார்த்தங்கள். பேசும்பொழுது, நான் முக்கியம் என்ற உணர்வோ, நினைவோ இருந்தால் முனைப்புத் தெரியும். அது இல்லை எனில் அகந்தை விலகும். சைத்தியப் புருஷனுடைய சாயல் தெரியும், அது cool feeling சில் என்று தெரியும். பகவானைப்பற்றிப் படித்தவர் 50 பக்கம் படித்தவுடன் உடல் சில் என்றது, குளிரிற்று என உடனிருந்தவர்களைக் கேட்ட பொழுது, வெய்யில் அதிகமாகத் தகிக்கிறது, புழுங்குகிறது என்றனர்.

பிரபஞ்சம் என்ற பிரகிருதி (இயற்கை) தன்னை ஆண்டவனில் பூர்த்தி செய்து கொள்ள விழைந்தபொழுது, தான் பரந்து அகன்றிருப்பதால், பரம்பொருளை நாடி பூர்த்தி பெறத் தேவையான செறிவு, அடர்த்தி தன்னிடமில்லை என அறிந்து, அவ்வடர்த்தியைப் பிரபஞ்சம் முழுவதும் உடனே ஏற்படுத்த முடியாது என அறிந்து, பல இடங்களில், சில ஆயிரம், செறிவான புள்ளிகளையாவது முதற்படியாக ஏற்படுத்த முடிவு செய்தது. இந்நோக்கோடு பிரபஞ்சம் செயல்பட்டபொழுது, தன் எல்லைகளிலிருந்த மையத்தை நோக்கி விரைந்து வந்து பல இடங்களை மையமாக்கி அடர்ந்த புள்ளிகளை ஏற்படுத்தியபொழுது, அவை பிரகிருதி போல்லாமல், பிரகாசமான விரலளவு மையங்களாகக் காணப்பட்டன. அவை ஜீவாத்மாக்கள். இந்த ஜீவாத்மாக்கள் தங்களைப் பரம்பொருளில் பூர்த்தி செய்யும் திறனுடையன. பூர்த்தி செய்வது என்றால் ஆதியில் கொண்ட குறிக்கோளை நிறைவேற்றுவது. ஒரு குடும்பம் தன் 7 பிள்ளைகளையும் படிக்க

வைத்து, குடும்ப அந்தஸ்தை உயர்த்தி பெருமை பெற்றால் குடும்பம் தன்னைப் பூர்த்தி செய்து கொள்கிறது. 7 பிள்ளைகளிலும் முடியாவிட்டால் அனைவரும் சேர்ந்து ஒருவனைப் படிப்பாலும், அந்தஸ்தாலும் உயர்த்தினால், பிறகு அவன் தன் புதிய பதவியால் முழுக் குடும்பத்தையும் உயர்த்துவான். அதேபோல், பிரபஞ்சம் ஜீவாத்மாக்கள் தங்கள் ஆன்மீக வளர்ச்சியால், பிரபஞ்சம் முழுவதும் பரவினால், பிரபஞ்சம் பூர்த்தியாகிறது. இதை பகவான்,

பிரபஞ்சம் செறிந்து ஜீவாத்மாவில் தன்னைப் பூர்த்தி செய்கிறது. ஜீவாத்மா வளர்ந்து பிரபஞ்சம் முழுவதும் பரவி தன்னைப் பூர்த்தி செய்கிறது.

என்கிறார். முடிவானது இது அன்று. பிரபஞ்சம் முழுவதும் வியாபித்த ஜீவாத்மா தன்னை, பிரபஞ்சத்தின் மூலம் பரமாத்மாவுக்கு உயர்த்துவது முடிவு.

பிரபஞ்சம் செறியும் நேரம் ஜீவாத்மா ஏற்படும்பொழுது பிரபஞ்ச சக்திகள் புள்ளியை நோக்கி விரைந்து வருவதால் ஜீவாத்மா ஏற்பட்ட பின் பிரபஞ்சம் ஜீவாத்மாவை எல்லையாகச் சுற்றி வலுவாகக் கவ்வுகிறது. இதுவே உற்பத்தியான ஜீவாத்மா வலுவிழந்து கரையாமல் தடுப்பது. கரையாமல் தடுக்கும் கூடு அகந்தையாகும். ஜீவாத்மா இளமையான நிலையில் அகந்தை எனும் கூடு தேவை. ஜீவாத்மா வளர்ந்து முதிர்ச்சியடைந்த நிலையில் பிரபஞ்சம் ழுவதும் பரவ தயாரானபொழுது அகந்தை எனும் கூடு தடையாக இருக்கும். இதை நம்மவர்கள் ஆணவ மலம் என்கிறார்கள். (ஜீவாத்மா வளர்ந்து முதிர்வது ஆன்மிக வளர்ச்சி, ஆன்மிகப் பரிணாமம்) இது ஸ்ரீ அரவிந்தர் உலகுக்குக் கொண்டு வந்த ஆன்மிக இலட்சியம்.

ஜீவாத்மா, வளர பிரபஞ்சத்தின் ஆன்மிகச் சக்தி (இயற்கையில் உள்ள ஆன்மா) வளர வேண்டும். அதற்கு,

சைத்தியப் புருஷன் எனப் பெயர். மீண்டும் ஒரு முறை சொன்னால், அகந்தை எனும் கூட்டில் உள்ள ஜீவாத்மா பிரபஞ்சத்தின் ஆன்மிக வளர்ச்சியால் முதிர்ந்து, கூட்டை இழந்து, சைத்தியப் புருஷனாகி, பிரபஞ்சம் முழுவதும் பரவுகிறது. இதை, சைத்தியத் திருவுருமாற்றம் என்கிறார். இதுவே ஜீவாத்மா, அகந்தை, சைத்தியப் புருஷன் உற்பத்தியாகும் முறை.

 • பிரபஞ்சம் செறிந்து ஜீவாத்மாவைப் புள்ளியாக ஏற்படுத்துகிறது.
 • ஜீவாத்மாவைச் சுற்றி அகந்தை கரையாக, கூடுபோல் இருந்து பாதுகாக்கிறது.
 • ஜீவாத்மா பரிணாம வளர்ச்சியால் முதிர்ச்சிடைகிறது.
 • இதனால் சைத்தியப் புருஷன் ஏற்படுகிறான்,
 • பிரபஞ்சத்தின் உள்ளுறை ஆன்மிகம் தன்னிலையில் உயர்கிறது.
 • வளர்ந்த ஜீவாத்மாவுக்கு ஏற்கனவே பாதுகாப்பாக இருந்த அகந்தை இப்பொழுது தடையாக இருக்கிறது.
 • அகந்தை அழியும் நேரம் வந்துவிட்டது.
 • அகந்தை அழிகிறது.
 • ஜீவாத்மா சைத்தியப் புருஷனாக பிரபஞ்சம் முழுவதும் பரவுகிறது.

இந்த எட்டு நிலைகள் மாற்றத்தால் பிரபஞ்சம் தன் குறிக்கோளைப் பூர்த்தி கொள்கிறது. ஜீவாத்மா சைத்தியப் புருஷனாக, பிரபஞ்சம் முழுவதும் பரவினால், பிரகிருதியான பிரபஞ்சம் ஆன்மிக உயர்வடைந்து, ஆன்மிகத்தில் பூர்த்தியைக் காண்கிறது. யோகத்தைப்

பொருத்தவரை இது அகந்தை அழியும் பாதை. இதன் மற்ற யோக அம்சங்கள் எவை?

சிருஷ்டியில் ஆதியில் (One) ஒன்று பலவாக (many) மாறியது அகந்தையால். ஒன்றான பிரம்மம் பல ஜீவாத்மாக்களாகப் பிரிந்தது அகந்தையால். எனவே அகந்தை அழிந்த பின் பல (many souls), ஒன்றாக (பிரம்மமாக) ஆகிறது. இது ஆன்மாவின் வளர்ச்சி. ஜீவாத்மாக்கள் பரமாத்மாவை (One) நோக்கிச் செல்லும் பாதை. அதற்கு அகந்தையின் அழிவு உதவுகிறது.

மனம் சத்திய ஜீவனின் சிறுநிலை (subordinate plane). மனத்தின் ஆதி சத்தியஜீவன். மனம் உற்பத்தியாகி, செயல்படும்பொழுது, ஆதியுடன் தனக்குள்ள தொடர்பு குறைகிறது. ஒரு நிலையில் தொடர்பு அறுகிறது. தொடர்பு அறுபடும் நிலை அகந்தை வளர உதவும் இருண்ட நிலை. அந்நிலையில் அகந்தை எழுகிறது.

அகந்தை மனத்தில் எண்ணத்தின் மூலம் செயல்படுவதால், மனம் எண்ணத்தை விட்டு, ஜீவியத்தை (consciousness) நாடினால், அகந்தைக்குரிய அரங்கம் மறைவதால், அகந்தை மறைகிறது.

ஜீவாத்மா, பிரபஞ்சத்தின் ஆத்மாவாகி, பரமாத்மாவை அடையும் நேரம், பெரிய நேரம். பரமாத்மாவே மோட்சம் என்பதால், அதற்கு மேல் போக நினைப்பதில்லை. பூரண யோகம் மோட்சத்தை நாடவில்லை, இறைவனின் பூரணத்தை நாடுகிறது. சச்சிதானந்தம் மகுடம். அதை எட்டியவர் பெரிய ஆத்மா. பூரண யோகத்தில், சச்சிதானந்தமும் அதற்கடுத்த அசத் என்ற நிர்வாண நிலையும் பகுதிகளே. பூரணமானவை அல்ல. சச்சிதானந்தப்பேறு பெற்றவருண்டு. அதைக் கைவிட்டு, அசத் என்ற நிர்வாணத்தை எய்தியவருண்டு.

சச்சிதானந்தமும், அசத்தும், பிரம்மத்தின் absolute) பகுதிகள் என்பது ஸ்ரீ அரவிந்தம். இங்காவது அல்லது அங்காவது (அசத்) இருக்கலாம் என்பது மகுடமான சித்தி பெற்றவர் நிலை என்பதை ஸ்ரீஅரவிந்தர் மாற்றி இங்கு (சச்சிதானந்தம்) ஊன்றிய காலை எடுக்காமல், அங்குப் போய், இரு பகுதிகளையும் தன்னுட் கொண்ட முழுமையை (Absolute, பிரம்மம்) அடைவதே பூரணம் என்கிறார். பூரணத்தை நாடுபவனுக்குப் பகுதி போதாது. முழுமை வேண்டும் என்பது அவர் நிலை. அதையடைய முனைபவருக்கு முதல் நிலையில் அகந்தையும், அடுத்த நிலையில் மனமும், கடைசி நிலையில் அஞ்ஞானமும் தடை என்கிறார்.*

மனிதன் மேலுக்கும், கீழுக்கும் இடைப்பட்டவன். மேலேயுள்ளது ஜகத்ஜோதியான (superconscient) ஒளி. கீழேயுள்ளது இருண்ட விலங்கு நிலை (subconscient). மனிதன் தன்னை அறியும் (conscient) ஜீவன். தன்னையறியும் மனிதனுள் உடல் என்ற இருண்ட கீழ்ப்பகுதியும், ஆன்மா என்ற ஜோதியான மேற்பகுதியும் தனித்தனியே இருக்கின்றன. தன்னையறிக்கூடிய மனிதனில் செயல்படும் அகந்தை அவனை ஆன்மாவை அறிய முடியாமல் தடுக்கிறது. அகந்தை அழிந்தால் தன்னையறிந்து தன் ஜீவாத்மாவில் மேலுள்ள ஜோதியையும் கீழுள்ள இருளையும் இணைக்க முடியும்.

மேலும் ஒரு வகையாக, பகவான் அகந்தை அழிவதை விளக்குகிறார். அகந்தை மனத்திலும், உணர்விலும், உடலும்


* இப்படி பிரம்மத்தை அடைந்தால் ஆன்மா, பிரம்மத்தை அடைகிறது. அடுத்த அடுத்த கட்டங்களில் மனமும், வாழ்வும், உடலும் அதே சித்தியைப் பெறுவதே, பூரணத்தின் முடிவு. ஆன்மா பெற்றது பூரணத்தின் ஆரம்பம், உடல் பெறுவது முடிவு. ஸ்ரீஅரவிந்தர் முடிவான சித்தியைப் பெற்றார். அன்னை பிறகு அதைப் பெற்றார். அதையும் கடந்து போனார். இந்தத் தத்துவமும், சித்தியும் ஆன்மிக உலகுக்குப் புதியன.book | by Dr. Radut