Skip to Content

பகுதி 1

Attitudes நோக்கம்:

இது பெரிய தலைப்பு. எந்த உளநூல் புத்தகத்திலும் ஒரு பகுதி நோக்கத்தைப் பற்றியிருக்கும். இதைப் பற்றி தனியே ஒரு புத்தகம் எழுதலாம். நான் இங்கு அதன் அம்சங்கள் யோக வாழ்வில் தட்டுப்படும் இடங்களில் சிலவற்றைக் குறிக்கின்றேன்.

மனிதன் தன் அபிப்பிராயப்படியே நடப்பதால், அபிப்பிராயமே அவன் வாழ்வை நிர்ணயிப்பதால், அபிப்பிராயமே மனிதன். Opinion makes the man என்பது கருத்து. உணர்வு அபிப்பிராயத்திற்கு எதிராக இருந்து, வலுவாகவுமிருந்தால், அபிப்பிராயத்தை விலக்கி, உணர்வு செயல்படும். நாலு பேர்கள் எதிரில் மரியாதையாகப் பேச வேண்டும் என்ற அபிப்பிராயம் கோபம் வந்தால் மாறி விடும். நம் உணர்வை அபிப்பிராயம் ஏற்றுக் கொண்டால், அவை இரண்டும் சேர்ந்து நோக்கமாகும். அங்கு முரண்பாடில்லை. அதனால் நோக்கத்திற்கு சக்தி அதிகம். விருந்தாளியை மரியாதையோடு வரவேற்பது நல்லது என்பது அபிப்பிராயம்; விருந்தினரை வரவேற்க ஆசையாக இருக்கிறது எனில் அபிப்பிராயமும், ஆசையும் சேருகின்றன. அவர்களைப் பற்றி மற்றவர்கள், விருந்தாளிகளை மரியாதையாக நடத்துவது தங்களுக்குக் கௌரவம் என்பது

அவர்கள் நோக்கம் என்று சொல்வார்கள். நோக்கம் நல்லதாக, கெட்டதாக, உயர்ந்ததாக, தாழ்ந்ததாக இருக்கலாம். அவரவர்கள் தங்கள் பாணியில் நோக்கங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள். யார் நோக்கம் எதுவானாலும், பலன் அவர்களாலோ, அவர்கள் நோக்கத்தாலோ வருவதில்லை. உலகம் நோக்கத்திற்குத் தக்கவாறு, மனிதருக்கு ஏற்ப பலன் தருகிறது.

என்னால் முடிந்ததை எனக்குச் சௌகரியமாகச் செய்து கொள்வேன். யார் எது கேட்டாலும், அவர்களுக்குரிய பதில் சொல்ல என்னால் முடியும் என்பவர், இப்படிப் பதில் சொல்வதால், உலகம் தன்னை ஏற்கும் என நினைக்கிறார். கொஞ்ச நாட்கள் கழித்து, அனைவரும் அவரைப் பற்றி, செய்வதைச் செய்து விடுவார், கேட்டால் பதில் சொல்லிச் சமாளிப்பார் என்று பேசுவார்கள். சில நோக்கங்களுக்கு வாழ்வு பலன் தரும். வேறு சில நோக்கங்களுக்கு எதிர்மாறான பலன் வரும். மற்றதற்கு எதிர்பாராத நல்லதோ, கெட்டதோ வரும்; சிலவற்றிற்கு மனநிம்மதி ஏற்படும்; மற்றவை நம்மைக் கேலிக் கூத்தாகும்; சில நாமறியாத நல்ல குணங்களை வளர்க்கும். மாற்றம் தேடுபவர்கள் இவற்றை மாற்றத்தின் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளவேண்டும். சில நோக்கங்களையும் அவற்றை உலகம் ஏற்கும் வகை, வாழ்வு தரும் பலன் போன்றவற்றைக் குறிப்பிடுகிறேன். சிலவற்றிற்கு விளக்கம் தேவைப்படாது.

  • "என் பணத்தை நான் எப்படிச் செலவு செய்கிறேன் என எவரும் அறிவதை நான் விரும்பவில்லை", என்ற நோக்கமுடையவர் பிறர் தம்மைப் பற்றி, அறிவதை விரும்பவில்லை எனப் பொருள் கொள்ளலாம். பொதுவாக இப்படிப்பட்டவர் பிறருக்கு இடைஞ்சலான காரியங்களைச் செய்யும்பொழுது, தாம் தொந்தரவு செய்கிறோம் என அறிய மாட்டார்.
  • "தம்முடைய தந்திரங்கள் எவர்க்கும் தெரியாது " என்று நினைப்பவர், அத்தனையும் தெரிந்து வேறு காரணத்திற்காக அவரைப் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாதவர்.
  • "அது சரி, நான் செய்வது சரி" என்ற நோக்கம் பலருக்குண்டு. இவர் செய்வது பெரும்பாலும் தவறாக இருக்கும். வேறு வசதியிருப்பதால் தவறு தண்டனை அளிப்பதில்லை. வசதியுள்ள அளவுக்கு முன்னேற முடியாதவர் இவர்.
  • என் விஷயங்களை நான் சொல்லவில்லை எனில் எப்படி வெளியில் தெரியும் என்று நம்புபவர் சிறிய விஷயங்களில் முழு வெற்றி பெறுவார். பெரிய விஷயங்களில் முழு விஷயமும் அனைவரும் தெரியும்படிப் பரவும். பரவிய பின் பரவுவது உண்மையாக இருக்காது.

பொதுவாக எல்லா விஷயங்களிலும், குறிப்பாக மேற்சொன்னவற்றிலும், மெய் பக்தருக்குப் பலிக்கும். நேர்மையும், மெய்யும் மாற்றத்தைக் கொடுக்கும்.

  • முதலாளி தாம் செய்வதை எவரும் குறை சொல்லவில்லை என்பதால், தாம் செய்வது சரி என நினைக்கிறார். இது போன்று நினைத்த ஒருவர் கம்பனியையே இழந்தார். குறை சொல்லப் பயப்படுவதால் குறை சொல்லவில்லையே தவிர குறையில்லாததால், குறை சொல்லாமல்லை.
  • தான் சொல்லும் பொய் நிலைக்கும் என்பவர் பொய் எக்காலத்தும் நிலைத்ததில்லை என அறிய வேண்டும். பொய் மட்டுமே சொன்னவர், இனி முதலாளியை நெருங்கி மெய்யும் சொல்ல முடியாத நிலைக்கு வந்தார்.
  • நம் மரியாதையை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது ஒரு நோக்கம். மரியாதை உலகம் பார்த்துக் கொடுப்பது, காப்பாற்றப்பட வேண்டியதில்லை.

போற்றப்பட வேண்டியது, காப்பாற்றப்பட வேண்டிய நிலையிலிருப்பது மரியாதையாகாது.

  • பெரும்பலனை இனாமாக நிரந்தரமாக அனுபவிப்பவர், சிறு பலன் பெறும் இடத்தில் அதற்குப் பதிலாக மாற்றுச் செய்தால் கடமை முடிந்துவிட்டது, தாம் பெறும் பெரிய இனாம் தெரியாது என்று நினைப்பது, தம்மையே ஏமாற்றிக் கொள்வதாகும்.

பலனுக்குரிய பிரதிபலன், அல்லது நன்றி செலுத்தப்படல் முறை.

  • எனக்கு அளிக்கப்படும் சலுகைகள் எனக்கு உரியவை என்று நினைத்தவர், பிறருடைய பண்பால் தமக்கு அது கிடைக்கிறது என்று அறிய முடியவில்லை. 20 வருஷங்கள் அதுபோல் அவர் பெற்ற சலுகை சிறியது. பின்னர் தாம் பெற்றதைப்போல் 5 வருடங்கள் பிறருக்கு 100 மடங்குகள் அவர் செய்ய வேண்டிதாயிற்று. செய்த பிறகும் அவர் அதை அறியவில்லை.
  • மாணவர்களைக் கண்டிக்காவிட்டால், மாணவர்களால் தொந்தரவு வாராது என 1935இல் முடிவு செய்த தலைமை ஆசிரியர் அதன்பின் 30 ஆண்டுகள் பள்ளியில் ரிஸல்ட் 10% வருவதைக் கண்டார். இவை தொடர்புடையவை என அவரால் அறிய முடியவில்லை.
  • கேட்காவிட்டால், நாம் செய்வது சரி என முதலாளியின் நல்ல குணத்தைப் பயன்படுத்தி, அட்டூழியம் செய்தவர் சொந்தத் தொழில் ஆரம்பித்து சீக்கிரம் திவாலானார்.

 

கேட்டாலும், கேட்காவிட்டாலும், நாம் செய்வது சரியாக இருக்க வேண்டும்.

  • இனிக்கப் பேசினால் நல்லவர் என்று நம்பியவர், கடைசிக் காலத்தில் பிள்ளைகள் காப்பாற்றப்படாத நிலையில், தாமே பிள்ளையைக் காப்பாற்ற வேண்டும் என்று கண்டபொழுது, இனிக்கப் பேச எதுவுமில்லை என்றறிந்தார்.

உண்மையை இனிக்கப் பேச வேண்டும்.

பொய்மையை இனிக்கப் பேசக்கூடாது.

பொய்யை இனிக்கப் பேசினால் இனிமை பொய்த்துவிடும்.

  • தவறு செய்தவர் விலகிப் போய், திரும்ப வரும் பொழுது, தம்மைத் திருந்தியவராகக் கருதுவது, அவரைப் பொறுத்து சரி வாராது. திரும்பி வந்தால் வெட்கம் கெட்டவர் எனப் பொருள்.
  • உதவி கேட்க வருபவர் வேன் எடுத்துக் கொண்டு வந்து, அதிகாரமாக உதவி கேட்கும்பொழுது, தாம் வந்த வேன் தமக்கு மரியாதை பெற்றுத் தரும் என நினைக்கிறார்.

மரியாதை வாகனத்திலிருந்து வருவதில்லை. மனிதனுடைய நடத்தையிலிருந்து வருவது. தம் நடத்தைக்காக, மருமகன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது அவர் அறியாத விஷயம்.

  • உள்ளூர் மரியாதை வெளியூரில் வேண்டும் என்பவர், ஊரை விட்டுப் போனவரில்லை என்பதைக் காட்டுகிறது.
  • உள்ளூரில் மரியாதை சொத்துக்கு. வெளியூரில் மரியாதை மனிதனுக்கு. மரியாதைக்குரிய மனிதனுக்கு மரியாதை கிடைக்கும். மற்றவருக்கன்று.
  • நல்லவன் கெட்டிக்காரன்.
  • நான் நல்லவனாக இருப்பதால், பிறரும் நல்லவராக இருப்பார்கள்.
  • எனக்குப் பணமிருப்பதால், நான் ஜாதியைப் பாராட்ட மாட்டேன்.
  • நான் என் ஸ்தாபனத்தில் தலைவராக இருப்பதால், அனைவரும் எனக்கு மரியாதை அளிக்க வேண்டும்.
  • கிராக்கி செய்வது பெருமை.
  • இல்லாதவனே கிராக்கி செய்வான்.
  • குதர்க்கமாகப் பேசுவது புத்திசாலித்தனம்.
  • என்னால் முடிந்தனவெல்லாம் நியாயம்.
  • நான் செய்வனவெல்லாம் நியாயம்.
  • ஸ்தாபனத்திற்கு அதிகாரம் உண்டு.
  • பத்து விஷயங்கள் தேவைப்படும் இடத்தில் ஒன்றைச் செய்பவர், எல்லாம் தம்மால் நடக்கின்றன என நினைக்கிறார்.
  • அழகு சீக்கிரம் திருமணத்தை முடிக்கும். பணமும் இருந்தால் முடியும். வெறும் அழகுக்கு மட்டும் அப்பலனில்லை என்பது ஆங்கிலப் பழமொழி.
  • அனைவரும் சந்தோஷமாக இருந்தால் வேலை முடிந்துவிட்டது என ஒருவர் நினைக்கிறார். வேலையே ஆரம்பிக்கப்படாது என்று அவர் கண்டார்.
  • கேட்கவில்லை எனில் கொடுக்க வேண்டாம்.
  • பணக்காரன் சொல்வது சரி.
  • எல்லோரும் என்னை நாடி வருகிறார்கள். எனவே நான் நல்லவன் என்று நம்பியவர் ஊர்க் கதையை இவர் ரசிப்பதால் அதைச் சொல்ல வருகிறார்கள் என அவர் அறியார்.
  • ஓர் அம்சமிருந்தால், முழு உரிமையும் உண்டு. எல்லா அம்சங்கள் இருந்தாலும் உரிமை பெறுவது வேறு.
  • பிறரைக் குறை சொல்வதால், நாம் நிறைவுடைய வராவோம்.
  • கொடுத்ததைச் சாப்பிட்டால் குறைந்து போகும் என நினைப்பவர் தாம் வேலை செய்வதால் தம் நிலை குறைவாக இருப்பதால் தமக்கு அந்நினைவு வருகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
  • நம் குழந்தை பிறரிடம் பழகினால் எல்லாம் போய்விடும் என்றால் உன் சிறுமைதான் போகும்.
  • நாம் தம்பியிடம் போகாவிட்டால் தம்பிக்குக் குறைவு என எண்ணினால் குறைவு உனக்கே.
  • முடியும் என்றால் செய்வேன் என்பவன் காட்டு மிராண்டி. நல்லதைச் செய்பவன் மனிதன்.
  • நாலு வருஷம் இருந்ததால், இங்கு எனக்கு உரிமையுண்டு.

உரிமை காலத்தால் வருவதில்லை. நாம் கொடுப்பதால் வருவது.

  • எவரும் திரும்பிப் பேசாததால், நான் தொடர்ந்து பொய் சொல்லலாம்.

திரும்பிப் பேசாததால், மெய் சொல்வது அவசியம்.

  • நான் செய்யும் தொழிலால் - வக்கீல், ஆசிரியர் - நான் சமூகத்திற்கு இன்றியமையாதவன்.

சமூகத்திற்கு எவருமே இன்றியமையாதவரில்லை.

  • பரிசு கொடுப்பதால் நான் தாராள மனப்பான்மை உடையவன்.

தாராள மனப்பான்மை பரிசு கொடுக்கும். அதனால் பரிசு கொடுப்பவர்க்கெல்லாம் தாராள மனப்பான்மை உண்டு என்று கூற முடியாது.

  • நான் பேசாவிட்டால் உனக்குக் குறைவு.

இந்த நினைவே குறையுடையவர்க்கு மட்டும் உள்ளது.

  • யாரிடம் பேசினாலும் அந்தஸ்து குறையும்.

அந்தஸ்து இருந்தால் பேசுவதால் அதிகமாகும்.

  • செலவு செய்தால் பணம் குறையும்.

கேட்டுப் பெறுதல் தவறில்லை.

கேட்டால் பெற முடியாது.

  • முறையைப் பூர்த்தி செய்தால் ஆன்மீகம் வளரும்.

ஆன்மீகம் நசிக்கும்.

  • நான் மறந்ததை நீங்கள் மறந்ததாகச் சொல்வது சாதுர்யம்.

அவர் பிறருக்கு அறிவில்லை என நம்பும் அறிவுடையவர்.

  • எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை எனில், நீ மட்டம் என்பார்.

இவர் தம்மை உலகுக்கு (ள்ற்ஹய்க்ஹழ்க்) அளவு கோலாக்குபவர்.

  • எதிர்க்காதவனை மட்டம் தட்டுவது வீரம் இல்லை.

கோழைத்தனம்.

  • திமிராகப் பேசுவது கௌரவம் என்றால்,

தாழ்ந்த குடும்பத்தில் பிறந்தது வெளிவருகிறது என்று பொருள்.

  • திருடாதவனை நம்ப முடியாது என்று நினைக்கும் ஒரு வகையினர் சிப்பந்திகளைத் திருட அனுமதிப்பார்கள்.

திருடாத சிப்பந்தி, தங்கள் திருட்டுத்தனத்தைக் காட்டிக் கொடுப்பார் எனப் பயப்படுவார்கள்.

  • எந்த வகையிலாவது நான் உங்களுக்குச் சமம் என்று பேச வேண்டும்.

சமமில்லாததால் அப்படி நினைக்கிறோம்.

  • பேசினால் போதும், செய்ய வேண்டாம்.

உலகம் உனக்கு அப்படியே செய்யும்.

  • காரியம் முடிந்தபின், உறவை நீடிப்பது மடமை.

பெற்ற பிள்ளை அதையே பின்பற்றுவான்.

  • ஊர்க்கதை தெரியவில்லை என்றால் உதவாக்கரை.
  • பணக்காரனுக்காக மற்றவனை விட்டு விலகுவது நியாயம்.

மந்திரியான பின், மற்றவரை மறக்க வேண்டும் என்றால் சீக்கிரம் பதவி உன்னையே மறந்து விடும்.

  • பணம் வந்தபின் நண்பனையும் மரியாதையோடு நடத்த வேண்டும்.

நல்லெண்ணம் :

அன்னை மனிதனுள் முழுவதும் செயல்படுவது உண்மை (sincerity) மூலம். ஒருவரிடம் உண்மையிருந்தால் அன்னையின் சக்தி அவரை முழுவதும் ஆட்கொள்ளும். உண்மைக்கு அடுத்தபடியாக சக்தியுள்ளது நல்லெண்ணம். நம்மைப் பொறுத்தவரை நல்லெண்ணம் சாதிக்க முடியாததில்லை எனலாம்.

தலைமுடி கொட்டுவதால் மனம் தளர்ந்த குழந்தை, அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனைகள் பெரும்பாலும்

பலிக்கும் பொழுது தலைமுடி கொட்டக் கூடாது என்ற பிரார்த்தனை சிறிதளவே பலிப்பதாகக் கண்டாள். இரவு பகலாக மனம் முடியை நினைப்பதால், மனத்தின் குறுக்கீடு அன்னை சக்தி பலிப்பதைத் தடுக்கிறது. மனம் முடியை நினைக்காவிட்டால், பிரார்த்தனை பலிக்கும். மனம் கட்டுப்படும் நிலையில்லை. அத்துடன் தான் முடி வளரச் செய்த பிரார்த்தனையால் தன்னுடன் உள்ள மற்றொருவர் முடி அபரிமிதமாகவும், கறுத்தும் வளருவது குழந்தைக்கு விந்தையாக இருந்தது. பொதுவாக நல்லெண்ணம் உள்ளவர், அல்லது உன் மீது நல்லெண்ணம் உள்ளவர் ஒருவர் உன் வாழ்விலிருந்தால், அவரிடம் இதைச் சொன்னால், முடி வளரும், கொட்டுவது நிற்கும் என்று குழந்தை கேட்டதை நம்ப முடியவில்லை. சொல்வது என்றால் நேரே பேசிக் கொள்வது. அதற்கும் பலன் உண்டு. இங்கு சொல்வது, அவருக்குத் தெரியாமல் மனதால் அவரிடம் சொன்னால் போதும். பலன் பூரணமாக இருக்கும். சொல்ல ஆரம்பித்த அன்றே முடிகொட்டுவது நின்று விட்டது. குழந்தைக்கு ஆச்சரியம். நேரடியாகச் சொன்னால் கேட்பவர் மனம் குறுக்கிட முடியும். மனதால் சொல்லும் பொழுது அந்தக் குறுக்கீடு இருக்காது.

வேறொருவர் இதே சோதனையை அவர் மீது நல்லெண்ணம் உள்ளவரிடம் செய்து பார்த்து, பலன் உடனுக்குடனிருப்பதைக் கண்ட பொழுது, ஒரு நாள் போன் சில மணி நேரம் வேலை செய்யவில்லை. அவர் வழக்கமாகச் செய்யும் கம்ப்ளெயிண்ட் போன்றவைகள் செய்தார். பலனில்லை, பிரார்த்தனையும் பலிக்கவில்லை. திடீரென ஏன் அவரிடம் சொல்லக் கூடாது என நினைத்தவுடன் போன் வேலை செய்ய ஆரம்பித்து மணி அடித்தது.

நல்லெண்ணம் சக்தி வாய்ந்தது. அதனால் செய்ய முடியாதது இல்லை. நல்லெண்ணமுள்ளவர்கள் நம் வாழ்வில் குறைவு.

நாம் அதை ஏற்க முன் வருவதில்லை. இது போன்ற ஒருவரிடம் சொல்வதற்குப் பதிலாக ஏன் அன்னையிடம் சொல்லக் கூடாது என்று கேட்கலாம். அன்னையிடம் சொன்னால் தவறாது பலிக்கும். அம்முறையை ஏற்று பின்பற்றுபவர் இருவர். அன்னையிடம் சொல், பல முறை ஒரு காரியம் பலித்தவுடன், நம் மனம் சிந்திக்க ஆரம்பிக்கிறது. அது குறுக்கிடும். நம் மனம் குறுக்கிடாவிட்டால், அது பலிக்கும். நம் மனம் நல்லெண்ணத்தால் நாம் பிரார்த்தனை செய்யும் விஷயத்திலாவது நிரம்பியிருந்தால், நாம் பிரார்த்திக்க நினைத்தவுடன் பலிப்பதைப் பார்க்கலாம். நம் மனத்தின் நல்லெண்ணத்திற்கு அப்பலன் உண்டு. பக்காத நேரத்தில் நம் மனத்தில் நல்லெண்ணம் குறைவு என்பதை ஏற்க மனத்தில் உண்மை (sincerity) தேவை.

நாம் அன்னையை ஏற்றுக் கொண்டாலும். வேண்டியவர்களிடம் உள்ள (emotional closeness) நெருக்கம் அன்னையிடம் இருப்பதில்லை என்பதே உண்மை. அன்னை மீது பக்தி. நம்மவர் மீது பிரியம். நம் பக்தி பிரியத்தைப்போல் ஆழ்ந்திருப்பதில்லை. ஆழ்ந்துள்ளவருக்கு அப்பிரச்சினை இல்லை.

(Values) நெறி, பண்பு :

பிரம்மம் என்பது அனந்தம் (infinite). ஆன்மா மூலம் பிரம்மத்தை அடைய முடியும், ஏனெனில் ஆன்மாவுக்கு அனந்தமுண்டு. தவம் செய்பவர் நிஷ்டையில் ஆன்மாவைக் கண்டால், ஆன்மா முடிவற்றது, அனந்தம் என்று கண்டால், ஆன்மா மூலம் பிரம்மத்தை அடைய முடியும்.

மனம், வாழ்வு, ஜடம் ஆகியவற்றிற்கும் அனந்தம் உண்டு. ஆன்மாவில் அனந்தத்தைக் காண்பதுபோல் மனத்தில் காண முடியாது. இங்கு அது சிரமம். மேலும் கீழே போய் வாழ்வு, உடலை எட்டினால் அது மேலும் சிரமம். வாழ்விலும்,

உடலும் அனந்தத்தைக் காண நெறி, முறை, பண்பு என நாம் கூறுபவை உதவும்.

கற்பு ஒரு நெறி. இதன் உச்சகட்டத்தில் கற்பால் பிரம்மத்தை எட்ட முடியும். கற்பு ஒரு நெறி என்பதால், கற்புடையவர் பிரம்மத்தை நாடாமல் கற்பையே முடிவாகப் போற்றலாம். அப்பொழுது அந்த நெறிக்குரிய சக்தி எழும். கற்பு மூலம் மேலே போக முடியும். அதுபோல் அனுசுயா கற்பு மூலம் பரம்பொருளை எட்டியதால், திருமூர்த்திகள் அவளுக்குக் கட்டுப்பட்டனர்.

கற்பு, நாணயம், விஸ்வாசம், உண்மை, நல்லெண்ணம், நெறி, முறை, பொறுமை, பக்தி, நம்பிக்கை ஆகியவை பண்புகள். அவற்றில் ஏதாவது ஒன்று முழுமையாக (100%, 99% அல்ல) இருந்தால் அதன் மூலம் நளாயினிபோல் காலத்தைக் கட்டுப் படுத்தலாம்.

சிறிய முறை, பெரிய காரியம் :

சமர்ப்பணம் பெரியது. அதையே மனதில் ஏற்காமல் வாயால் மட்டும் சொல்வதுண்டு. வாயால் நான் என் பிரச்சினையைச் சமர்ப்பணம் செய்கிறேன் என்று திரும்பத் திரும்பச் சொன்னால், பல பிரச்சினைகள் தீர்வதைப் பார்க்கலாம். வாழ்க்கைப் பிரச்சினையாக ஒருவருக்கு அமைவதை வாயால் சொல்லும் சமர்ப்பணம் தீர்க்காது. குடும்பத்திலுள்ளவர் மட்டமான போக்கு, சொல், செயல் மனதில் கசப்பு நிறைந்த வெறுப்பை எழுப்பும். அதைச் சமர்ப்பணம் செய்தால் தீரும் என்று சிறிய முறையான வாயால் சொல்லும் சமர்ப்பணத்தை நாடினால் அது பலிப்பதில்லை. சிறிய முறை பெரிய காரியத்தை நிறைவேற்றாது. கசப்பிலுள்ள ஒளி எழுந்து வந்து தன்னை சமர்ப்பணம் செய்ய வேண்டும். அது பலிக்க சமர்ப்பணத்தை ஆரம்பிக்கும் முன் மனத்தைத் தியானத்தில் ஆழ்த்தி கசப்பைத்

தொடச் செய்தல் வேண்டும். ஆழ்ந்த தியானம் கசப்பைத் தொட்டால், பிறகு சமர்ப்பணம் பலிக்கும். எத்தனை நாள் வாயால் சொன்னாலும் நாம் கசப்பைத் தொட முடியாது. வாழ்வில் பலருக்கு நல்லதே நடப்பதில்லை. சிலருக்குக் கெட்டதே நடப்பதில்லை. ஒரு சிலர் வாழ்வில் உயர்ந்த நல்லதும், மற்ற சிலர் வாழ்வில் வாழ்வே வெறுத்துக் கசந்து போகும் நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. சில சமயங்களில் அது பிறருக்குத் தெரியும். பல சமயங்களில் வெளியில் தெரிவதில்லை. ஆனால் அவர்களைப் பொறுத்தவரை ஆன்மாவின் அஸ்திவாரங்கள் கரை படிந்துவிடும். அவர்கள் அன்னையிடம் வந்து சமர்ப்பணத்தை மேற்கொண்டால், மற்ற பிரச்சினைகள் கரைவதைப்போல் கசப்பு கரைவதில்லை. கசப்பைச் சமர்ப்பணம் செய்ய முடிவதில்லை. இதன் அம்சங்கள் ஆயிரம். ஏனெனில் வாழ்வின் ஆழத்தில் உள்ள அந்தரங்கங்கள் அனைத்தும் பங்கு கொள்ளும் இடத்தில் புற்று நோய் ஏற்பட்டு புழுத்துவிட்டிருக்கும். இதன் ஆன்மிக அர்த்தம் வேறு. இவ்விடம் சமர்ப்பணமானால் யோகம் பலிக்கும் என்று பொருள். அதனால் சமர்ப்பணம் எளிதில் இவ்வாழத்தைத் தொடாது. அன்னையிடம் அவர்கள் எதையும் பெறலாம். ஆனால் இதை அன்னையிடம் முழுவதும் கொண்டு வர ஜீவன் சம்மதிக்காது. இக்கசப்பும் ஒரு முறை சமர்ப்பணமானால், அது கரைந்து புது வாழ்வு மலரும் என்று தெரிந்தாலும், அந்த ஒரு சமர்ப்பணம் பல ஆண்டுகளாகப் பலிக்காது. சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்ற முடிவைச் சோதனை செய்தால் அதில் உள்ள குறை தெரியும்.

புது வீட்டைப் பார்த்தவுடன் இங்கு குடிவர வேண்டும் என்ற ஆசை எழுகிறது. மனம் குடிவர வேண்டும் என்று முடிவு செய்கிறது. அன்னையோ, சமர்ப்பணமோ அந்நேரம் நினைவு வருவதில்லை. சில சமயங்களில் தாமதித்து ஓரிரு நாட்கள் கழித்து சமர்ப்பணம் நினைவு வரும். அப்பொழுது சமர்ப்பணம் செய்தால் நேற்று உணர்வு செய்த சமர்ப்பணம்

பலமாகவும், இப்பொழுது மனம் செய்யும் சமர்ப்பணம் ஒப்புக்காகவுமிருப்பது தெரியும்; ஆசை அழியவில்லை. ஆசை ஆரம்ப நாட்களிருந்ததைப் போலிருக்கிறது. சமர்ப்பணம் என ஏற்றுக் கொண்ட முறை, முறையாகவே இருக்கிறது. ஆசையின் முன் அதற்கு வலு இல்லை என்பது தெரியும். இடமாற்றம் வேண்டும். சமர்ப்பணம் ஆசைக்கு முன்னால் வர வேண்டும். ஆசை அழிதல் அவசியம். அழியாவிட்டாலும், சமர்ப்பணம் ஆசையைவிட வலுவானதாக இருக்க வேண்டும். சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்ற முடிவு தீர்க்கமானதாக இருக்க வேண்டும். அப்படியில்லை, ஆசையே முன்னிற்கிறது என்பதை நாம் காணலாம். சமர்ப்பணம் ஆசையைவிட வலுவாக முன் வருதல் உண்மை (sincerity). அப்படியில்லாத நேரம், அப்படியில்லை என்பதை மனம் ஏற்பது உண்மை. இந்த நேரம் அதிகபட்ச உண்மை என்பது நமக்கு உண்மையில்லை என்றறிவது. சமர்ப்பணத்தை மீறி எழும் impulse ஆசையின் வேகம் கண்ணுக்குத் தெரியும். அந்த வேகத்தைச் சமர்ப்பணம் செய்ய முன் வந்தால், அது சமர்ப்பணமாகாது. நம் வெற்றியோ, தோல்வியோ அதைப் பொருத்தது.

சமர்ப்பணம் தவறுவதில்லை. அதன் சக்தி முடிவானது. சாப்பாடு, தூக்கம், பேச்சு, செயல் ஆகியவை சமர்ப்பணமாக வேண்டும். சாப்பாடு, தூக்கம் சமர்ப்பணமானாலும் பேச்சும், செயலும் நழுவும். பேசும் முன் சமர்ப்பணம் பலிப்பது சிரமம். பலித்தால் நாம் அடுத்த உயர்ந்த யோகக் கட்டத்தை அடைகிறோம். உணர்வு மையம் முழுவதும் அடங்கும். செயல் சமர்ப்பணமானால், ஜீவன் அடங்குவது தெரியும். மாற்றம் மட்டும் தேடுபவர்கட்கு இவை தேவையில்லை. யோகாரம்பத்திற்கு இவை அத்தியாவசியமாகும். இங்கு முடிவுக்கே அதிக வலுவுண்டு. ஒரு பக்தருக்கு அபரிமிதமாக வாய்ப்பு வந்தது, மீண்டும் மீண்டும் வந்தபடியிருந்தது. தாம் சம்பாதிப்பதைப்போல், 40, 50 மடங்கு வாய்ப்பு வருகிறது.

ஒவ்வொரு சமயமும் அந்த வாய்ப்பு வரும்பொழுது, தாயார் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. ஒரு முறை அந்த வாய்ப்பை ஏற்கலாம் என்று நினைத்த பொழுது, தாயாருக்கு மாரடைப்பு எனச் செய்தி வந்து புறப்பட்டுப் போய்விட்டார். பிறகு நெடுநாள் அதை மறந்துவிட்டார். வாய்ப்பை ஏற்க முடியவில்லை. விட முடியவில்லை. பல மாதங்கள் கழித்து, இந்த வாய்ப்பை ஏற்க முடிவு செய்து 24 மணி நேரம் நடப்பதைக் கவனித்து, அதன்படி நடப்பது சரி என்று நினைத்தார். இதுநாள்வரை வாய்ப்பு சமர்ப்பணம் ஆகவில்லை, அதைச் சமர்ப்பணம் செய்ய முடியவில்லை என்பதால் இந்த முடிவுக்கு ஒரு நாள் மாலை வந்தார். அடுத்த நாள் காலையில் தாயாருக்கு மாரடைப்பு என்று ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போன இடத்தில் தாயார் இறந்துவிட்டார். முடிவு வலுவானது. சமர்ப்பணம் பாதிக்காது. சமர்ப்பணம் முடியவில்லை என்பதைக் கண்டு, வாழ்வைக் கவனிக்கலாம் எனச் செய்த முடிவு இந்தப் பலனைக் கொடுத்தது. ஜாதகப்படி தாயாருக்கு 70 வயது. தாயார் அன்னையை வணங்க ஆரம்பித்தார். 70 கடந்தது. 74உம் வந்தது. வாய்ப்பும், தாயார் உடல்நிலையும் முரணாக இருந்ததால், வாய்ப்பை ஏற்க முடியவில்லை. இந்நிலையில் சமர்ப்பணம் முழு நல்ல பலனைத் தரும். சமர்ப்பணம் முடியாத நிலையில், முடிவு இப்பலனை உடனே கொடுத்தது.

சமர்ப்பணம் முடியாத நிலையில், நாம் நம் மனதைச் சோதனை செய்தால், மனம் சமர்ப்பணத்திற்கு இசையாது. இசையாத மனத்தைக் கட்டாயப்படுத்தினால் விபரீதம் நடக்கும். இதுபோன்ற நேரத்தில் பிரச்சினைக்குரியவர் கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்பார். புதியதாகக் கேட்பதுபோல் கேட்பார். என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை எனக் கேட்பார். தெரியாமல்லை. ஆழ்ந்த நிலையில் அவர் மனம் பிரச்சினையை விட்டு அகல மறுக்கிறது. அதைத் தொட அவர் இசையவில்லை. தம் மனம் இசையாத இடத்தில்,

அதற்கெதிராகப் பலன் வேண்டும் என மனத்தின் மறுபகுதி கேட்கிறது. மனம் வலுவாகப் பிரச்சினையை ஆதரிக்கிறது. ஒரு சிறிது பாகம் மனத்திலிருந்து பிரிந்து எதிரான பலனை விழைகிறது. தான் பெற மறுக்கும் பலனை, தன்னை எதிர்த்து அன்னை பெற்றுத் தரவேண்டும் என ஒரு பக்கம் மனம் சொல்வது எடுபடாது. பெருங்கடன் வாங்கியவர், ஏன் என் கடன் தீரவில்லை என்றார். கடன் எதற்காக வாங்கினீர்கள்? எப்படிச் செலவாயிற்று? இந்த ரூபம் வந்தது எப்படி? என்று கேள்விக்கு 3 வருடங்களாகப் பதில்லை. பதில் சொல்ல மனமில்லை. கடன் ஏற்பட்ட வழியைச் சமர்ப்பணம் செய்தால், கடன் கரையும் என்றால், என்ன செய்ய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்பவர், தாம் சமர்ப்பணத்தை மேற்கொள்ளாவிட்டாலும், அன்னை கடனைக் கரைக்க வேண்டும் என்கிறார். இதுபோன்ற கடன் பெற்றவர்கள் வாழ்வில் அதைத் திருப்பித் தந்ததில்லை. அன்னையை ஏற்றுக் கொண்டவர், ஒரு சிலரால் அதைத் திருப்பித் தர முடிந்துள்ளது. அது உண்மையாலும், சமர்ப்பணத்தாலும் நடந்தது. உண்மை இல்லாமல், சமர்ப்பணம் செய்யாமல், கடன் கரைய வழி கேட்பவருண்டு. இதற்கு மாற்று வழியில்லை. மனத்தில் உண்மையில்லாததால், மாற்று வழிக் கேட்பார்கள். அப்படி ஒரு வழி சொன்னால், அது வேண்டாம், வேறு சொல்லுங்கள் என்பார்கள்.

75,000ரூபாய் வாங்கி அதை 15 இலட்ச ரூபாய்க் கடனாக வளர்த்தவர் ஒருவர். இவர் தகப்பனார் கடன் என்று வாங்கியதில் ஒரு ரூபாயும் திருப்பிக் கொடுத்ததில்லை. பாட்டனாரும் அப்படியே. கர்மம் வாழ்வில் கரையாது. அன்னையிடம் கரையும். கடந்தகாலத் தகப்பனார், பாட்டனார் கர்மத்தைச் சமர்ப்பணம் செய்தால் கர்மம் கரையும். ஆனால் இவரால் அதை ஏற்க முடியவில்லை. கடன் வளர்ந்து பூதாகாரமாய் விட்டது.

ஒரு சமயம் சந்தர்ப்ப விசேஷத்தால் அன்னைக்கு இரண்டு நாட்கள் சேவை செய்ய நேர்ந்தது. அந்தச் சேவையில் அச்சிடுவது ஒரு பகுதி. அதை நன்கு செய்து முடித்தார். அடுத்த நாள், இவருக்கு இல்லை என்ற பிரமோஷனை, இவரைக் கூப்பிட்டு மானேஜ்மெண்ட் கொடுத்தது. அது சேவையின் மகத்துவம். அதில் அச்சிடும் வேலை ஒரு பகுதி. அச்சிடுவதைத் தவறின்றிச் செய்வது நம் நாட்டில் இதுவரை நடக்காதது. அன்னைக்கு அது முக்கியம். தவறில்லாமல் செய்து விட்டால், அதன் மூலம் அன்னை செயல்படுவார். இந்த விஷயம் அவர் அறிந்ததே. அதனால் அன்னை சம்பந்தமாக அச்சிடும் வேலையை ஏற்று அதைத் தவறில்லாமல் செய்தால், இவர் செய்யாத சமர்ப்பணத்தையும் மீறி, பிரச்சினை தீரும் என நெடு நேரம் விவாதமிட்டு முடிவு செய்தார். சில நாள்களுக்குப் பின், அது சரி வாராது என்று கைவிட்டார்.

மனம் நாத்திகமானது என்றறியாதவர் பெரிய பக்தராக தம்மை நினைத்துக் கொண்டிருந்தார். நாத்திகத்துடன், மனம் துரோகமானது. துரோகம் பிறப்பிலேயே ஏற்பட்டது. முந்தைய தலைமுறைகளிலிருந்து வருவது. இவர் வாழ்வு பரம்பரையாக (organised falsehood ) வலுவான பொய்யின் அமைப்பின் பேரில் எழுந்தது. நேர்மையான பிரமோஷன் நேர்மைக்குப் பேர் போனவருக்கு நெடு நாள் பிரார்த்தனையால் கிடைக்கவில்லை என்றால், அவர் வாழ்வின் அஸ்திவாரம் ஜீவனுள்ள பொய் எனப்படும். பிரார்த்தனை முடிவதற்குள் பலிக்கும். பல வருடங்கள் பலிக்கவில்லை எனில் என்ன பொருள்? நாத்திக மனமுடையவர் தங்களை ஆஸ்திகராகப் பாவித்தால் இதுபோல் நடக்கும். இதை அவர் அறியவில்லை. அறிய விரும்பவில்லை. சமர்ப்பணம் செய்ய முடியவில்லை. அந்தத் துரோகமான அடிப்படை, நாத்திகமான ஆழ்ந்த மனநிலையை மீறி அருள் அவர் வாழ்வில் செயல்பட்டு பல நல்ல காரியங்களைச் செய்தபொழுது, பிரமோஷனும் வந்தது.

வந்தவுடன் பிரமோஷன் தம் நிலையை மீறி அருளால் கிடைத்தது என்பதை மாற்றி, தம் நிலைக்கு கிடைத்ததாகப் புரிந்து கொண்டார். அதாவது தம் துரோகமான மனப்பான்மையை, நாத்திகமான ஜீவனுக்கு அதன் மூலம் உயிர் கொடுப்பதை அவர் அறியவில்லை. அவர் விஷயம் தடம் புரண்டது. அதன் வழியாகச் செய்த சேவைக்கும், செயல்பட்ட அருளுக்கும் ஆபத்து வந்தது. உயிருக்கும் ஆபத்து வருகிறது. உயிர் போவது மேல் என மனம் நினைக்கிறதே தவிர, சமர்ப்பணம் நினைவு வருவதில்லை. தம்மையறிய, தம் பிறப்பின் இரகஸ்யத்தை அன்னை மாற்ற முனைவதற்குத் தாம் தடையாக இருப்பதையறிய அவர் முன் வரவில்லை.

தம் அபிப்பிராயப்படி அன்னை செயல்பட வேண்டும் என நினைக்கிறார். அந்த மனநிலையில் என்ன செய்ய வேண்டும் என்று கேட்பவர்கள், செய்ய வேண்டியதைச் செய்ய மாட்டார்கள். தாம் மாறாமல், நிலைமை மாற வேண்டும் என்பார்கள். இது உண்மையில்லை insincerity இதை வலியுறுத்தினால் அது hostility தீயசக்தியாகும். தீயசக்தியை விரும்பி நாடுபவர்கள் சர்வ நாசத்தை வலியத் தேடுபவர்கள்.

ஒரு பாங்க் ஏஜெண்ட். நல்ல மனிதருக்குச் சிறந்த உதாரணம். ஊரில் மோசடி செய்பவர்கள் உதவி கேட்டார்கள். விபரம் தெரியாமல் ஏஜெண்ட் இசைந்துவிட்டார். இந்த நேரம் அன்னைக்குச் சூன்யம் வைக்கும் மனநிலையுள்ளவர் தம் எதிரிகளோடு போட்டியிட்டுக் கொண்டிருந்தவர், எதிரி இந்த பாங்க்கில் கணக்கு வைத்திருக்கிறார், அவருக்கு ஏஜெண்ட் மூலம் தொந்தரவு கொடுக்கலாம் என ஏஜெண்ட்டை அணுகி, பாங்கில் டெபாசிட் போட்டார். ஏஜெண்ட் நல்லவர். அவருக்கு இவரைத் தெரியாது. டெபாசிட் போட வந்ததால் அவரைப் பிரியமாக நடத்தினார். அடுத்த வாரம் காரில் குடும்பத்தோடு போகும்பொழுது விபத்து ஏற்பட்டு மகன் இறந்தான். மனைவி

படுக்கையானாள். 6 மாதத்தில் மோசடிக்காரன் குட்டு வெளிப்பட்டு அது ஏஜெண்ட் தலையில் விடிந்தது. வேலை போயிற்று. நல்ல மனிதன், நம்பி மோசம் போனார். தீயசக்திகளுடன் மறைமுகமான சம்பந்தமிருந்தாலும் நாசம் வரும். நேரடியாக அவற்றை அழைப்பது சர்வநாசம் தரும். அம்மனநிலையுள்ளவர்க்கு முறைகள் எதுவும் பயன்படாது. சமர்ப்பணம் முடிவானது. அன்னைக்கு சமர்ப்பணம் செய்து பலன் தரவில்லை என்பதில்லை. சமர்ப்பணம் செய்ய முடியவில்லை என்றால், மனம் சமர்ப்பணத்திற்கு இசையவில்லை எனப் பொருள். அந்நிலையில் மேற்கொண்டு போராடுவது அர்த்தமற்றது. மனத்தை மாற்றிக் கொள்ள முன் வர வேண்டும். மனத்தை மாற்ற பிரியமில்லை எனில் வேறு வகைகளில் நம் போக்கை வலியுறுத்தினால் தவறு நடக்க நாம் உடந்தையாக இருக்கிறோம் என்று அறிய வேண்டும்.

முயற்சியில்லாதவர் பெரிய வாய்ப்பு பலிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார். மனம் கறுப்பாக இருக்கும். அது தெரியாமல் எல்லாமும் கூடி வருவதைக் கண்டு, புதிய வேலைகளை ஏற்பார்கள். கறுப்பு வழியில் வந்து அதன் வேலையைச் செய்யும். நமக்கு உதவி செய்பவர்கட்குக் கெட்டது நடக்கும், ஆபத்து வரும். பல சமயங்களில் தெரியாது, தெரிந்தாலும் பிறருக்கு வரும் தொந்தரவு நம்மைத் தொடாது. கறுப்பை மாற்றாமல் இவர்களுக்கு எதுவும் நடக்காது. அருளால் அபரிமிதமான வாய்ப்பு எழும். அது செல்வாக்காகவோ, செல்வமாகவோ, வாழ்வின் சிறப்பாகவோ இருக்கும். கிடைத்ததற்கரிய ஞானம் கிடைக்கும் வாய்ப்பாக இருக்கும். கிராக்கி செய்யும் பழக்கமுள்ளவர்கள் அருளிடமும் கிராக்கி செய்வார்கள். அருள் முதல் முறையிலேயே மறைந்துவிடும். பேரருள் பெறுபவர்கள் உண்டு. இதுவும் கிராக்கி செய்பவர்களிடம் பக்காது. பேரருள் மீண்டும் மீண்டும் வரும். ஒரு முறை பேரருள்

பெரிய ஆத்ம ஞானத்தை அளிக்க முயன்ற பொழுது கிராக்கி குறுக்கே வந்தது. இருபது முறை முயன்றும் வெற்றி கிராக்கிக்குக் கிடைத்தது. பேரருள் தோற்றது.

பொன்னொளி அனைவருக்கும் தெரிவதில்லை. அது சத்திய ஜீவிய ஒளி. பொன்னாக ஸ்ரீ அரவிந்தர் நெஞ்சிலும், வெளியிலும் தத்ரூபமாகப் பல முறை வந்து தூய்மையான பக்தனை அழைத்தார். தொடர்ந்தும் அழைத்தார். அழைப்பு பக்தனுக்குப் புரியவில்லை. அவன் பாணி சில்லரை. சில்லரையான மனப்போக்கு ஆத்ம சித்தி தேடி வருவதைத் தடுக்கும். இவர்கள் தவறிய காரியங்களைத் தங்கள் போக்கில் சரி செய்ய முயல்வார்கள். சமர்ப்பணத்தை நாட மாட்டார்கள். சில சமயங்களில் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் புரிவதைப் பின்பற்றாமல் கேட்ட கேள்வியை மீண்டும் மீண்டும் நூறு றை கேட்பார்கள். இவர்கள் பக்குவம் கேட்கும் நிலைக்கு வந்துள்ளது. பின்பற்றும் நிலையை அடையவில்லை. இந்த மனநிலை நமக்கிருந்தால் கேட்பதை நிறுத்தி, நம் பழக்கத்தில் மாற வேண்டிய இடத்தைக் காண வேண்டும்.

சமர்ப்பணம் தவற முடியாது. சுபாவமும், மனமும் போட்டியிட்டால், சுபாவம் ஜெயிக்கும். சுபாவம் மனத்தைவிட வலுவானது. ஆனால் மனம் சத்திய ஜீவியத்திலிருந்து பிறந்ததால், மனம் தன் ஆதியை உணர்ந்ததால், சுபாவத்தை வெல்ல முடியும். மேலோடு மனம் விரும்புபவை, சுபாவத்தை எதிர்த்தால் மனம் தோற்கும், சுபாவம் வெல்லும். மனத்திற்கும் சுபாவத்திற்கும் போட்டி எழுந்தால், மனம் தயாராக இல்லாத பொழுது சமர்ப்பணத்தை மேற்கொள்ள முயன்றால் சமர்ப்பணம் மறந்து போகும். வந்து சமர்ப்பணத்தை நாடினால், சமர்ப்பணம் செய்ய முடியாது. இது அரிது. இதன் உட்கருத்தை விளக்க முடியும். விளங்குவதால் பலன் பெற முடியும். ஆனால் அது மனத்தின் உண்மையைப் (mental sincerity ) பொருத்தது.

ஆழ்ந்த உறவில் திடீரென்று கடுஞ்சொல் எழுந்து உறவு இனி நடந்ததை மாற்ற முடியாது. நடந்தது, நடந்ததுதான், நெடுநாள் உறவு, இனிய உயர்ந்த உறவை, இதை இழப்பது அறிவீனம். என்ன செய்வது, வாய் தவறி வந்த சொல், எதிரி மனத்தை ஆழ்ந்து புண்படுத்திவிட்டது என்று நாம் அறியும் நேரம் உண்டு. வாழ்வில் இதுவே முடிவாகும். பார்ட்னரானால் தொழில் முறியும். தாம்பத்தியமானால், இனி ஒருவர் முகத்தில் அடுத்தவர் விழிக்க முடியாது. நட்பெனில் அதுவே கடைசி சந்திப்பு என இருக்கும். இதுபோன்ற நேரம் சமர்ப்பணம் ஒருவருக்கு நினைவு வந்தது. நடந்ததைச் சமர்ப்பணம் செய்தார். சமர்ப்பணமாயிற்று. அடுத்த நாள் நடந்ததின் சுவடில்லாமல் பழைய இனிய உறவு தொடர்ந்தது. இந்த ஆச்சரியம் பக்தருக்குத் தாங்கவில்லை. இது முடியுமானால், எதுவும் முடியும் என்று தோன்றியது. ஆனால் அது சமர்ப்பணமாகவில்லை. கடந்தகாலச் சமர்ப்பணம் தவறாது பலன் தரும் என பிரச்சினை ஆரம்பித்ததிலிருந்து சமர்ப்பணத்தை ஆரம்பித்தார். வருஷங்கள் பல. அதற்கு முன் சென்றன. நடுரோட்டில் அகஸ்மாத்தாகச் சந்தித்தவர் வாழ்க்கைப் பிரச்சினையை ஆரம்பித்தார். பெரிய காரியத்தைப் பேசும் இடம் இல்லை என்பதை மறந்து, பேசியது தவறு என்பது இப்பொழுது நினைவு வந்தது. அதைச் சமர்ப்பணம் செய்தால், சமர்ப்பணம் முழுமையாக இல்லை. பலன் தெரியவில்லை என்ற பொழுது, தம் வாழ்வில் குறையை இதர இடங்கள் சமர்ப்பணம் பூர்த்தியாவதைத் தடுப்பதை உணர்ந்தார். நிகழ்ச்சிகள் நினைவு வந்தன. வாய் சமர்ப்பணம் செய்கிறது. மனம் இப்பொழுதும் அன்று செய்தது தவறு என ஏற்க மறுக்கிறது. மனம் மறுத்தால், சமர்ப்பணம் அங்கேயே நின்று விடும். கர்மம் நினைவுக்கு வந்தது. கர்மம் பலிக்குமல்லவா? என மனம் சமாதானமடைந்தது. அப்படிச்

சமாதானமடைந்தால், அன்னை கர்மத்தைக் கரைப்பார் என்பது என்ன ஆயிற்று? அன்னை கர்மத்தைக் கரைக்க அதற்குரிய நம்பிக்கை, அந்த அளவுக்கு பற்றற்ற மனம், சட்டத்தை நம்பாத மனநிலை வேண்டும். அது இப்பொழுதும் இல்லை என மனம் சொல்கிறது.

சமர்ப்பணத்தின் சக்தியை ஒரு பெரிய இடத்தில் பார்த்த பின், வாழ்க்கைப் பிரச்சினையைச் சமர்ப்பணத்தால் தீர்க்கலாம் எனில், நம்பிக்கைக்கு எதிரான எண்ணங்கள் வரிசையாக மனத்தில் எழுந்து, இவையெல்லாம் முடியாது, சும்மாயிரு என்றும், நாளான பிரச்சினை தீராது எனவும், இது இயற்கை, எவரால் மாற்ற முடியும் என்று பேசுகின்றன. இன்றும் நான் அன்று போல்தானிருக்கிறேன், அன்றுபட்ட அவசரம் இன்றும் போகவில்லை, பெரிய காரியத்தைச் சிறிய மனப்பான்மையால் செய்யும் போக்கு மாறவில்லை, அவற்றை மாற்றாமல், அன்றைய நிகழ்ச்சி எப்படிச் சமர்ப்பணமாகும் என்று மனம் கேட்கிறது. இவற்றையெல்லாம் செய்ததால் கசப்பு சற்றுக் குறைகிறது. பாரம் ஓரளவு இறங்கியதாகத் தோன்றுகிறது. தொடர்ந்து முயல முயற்சியில்லை. கிடைத்த சிறு பலன்களுடன் மனம் திருப்தி அடைகிறது. பிரச்சினை, பிரச்சினையாகவே நிற்கிறது. ஆனால் பழைய கடுமையில்லை என்பது ஒரு திருப்தி.

  • இதற்கு முடிவான முடிவில்லையா?
  • முடிவான முடிவை மனம் நிலையாகத் தேடினால், அது கிடைக்கும்.
  • மனித வாழ்வில் இல்லாத ஒரு நிலை.
  • அன்னை சக்தியும், சமர்ப்பணமும் அதைப் பெற்றுத் தரும். அது தேடுபவர்க்குக் கிடைக்கும், தேடுவதாக நினைப்பவர்க்கு இல்லை.

அதற்கான சில வகைகள் :

மனம் மூலம் குறுக்கிட்டு முடியாது என வாதாடும் மனப்பாங்கையெல்லாம் பொறுமையாக விலக்க வேண்டும். முடிவு வேண்டும் என முடிவாக ஒற்றைக்கால் நிற்க வேண்டும். இது உண்மையானால் நாம் எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும், அது முடிந்த நேரம் இது நினைவு வரும். அதுபோல் தவறாது நினைவு வந்தால், மனம் தீர்வை உண்மையிலேயே நாடுகிறது என்றறியலாம். இது நெடுநாளில் பலன் தரும். இந்நேரம் அன்னையை அழைத்தால், நம் முயற்சி எளிமையாகும் என்று காணலாம். நெடுநாள் முயற்சிக்குப் பதிலாக, பலன் உடனே வரும். பலன் வரும்வரை அழைப்பைத் தொடர வேண்டும்.

சமர்ப்பணம் செய்ய முடியவில்லை என்று ஆரம்பத்தில் தெரியும்பொழுது, சமர்ப்பணத்திற்கு அளவு கடந்த சக்தி தேவை, அது இல்லாமல் முடியாது. அது வேண்டுமானால், இடைவிடாது அழைப்பை மேற்கொண்டால், அந்தத் தேவையான சக்தி கிடைக்கும். கிடைத்து விட்டால், சமர்ப்பணம் செய்ய முடியும். பலன் தெரியும். அது முடியாத நேரம் மேற்சொன்ன முறை பயன்படும்.

  • முறைகள் முதன்மையானவை அல்ல.
  • மனத்தின் உண்மை முதன்மையானது.

வெளிநாட்டு வியாபாரி. நம் சொசைட்டிக் கூட்டத்திற்கு வந்து தொழில் பற்றி, இரண்டு நாட்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டார். தொழிலை இரட்டிப்பது என்ற கருத்தின் சுருக்கம் 2 நாளில் விவாதம் செய்த விதம் அவரைக் கவர்ந்தது. ஓராண்டில் தொழில் 2 1/2 மடங்காகியது. அதிலிருந்து அவருடன் தொடர்புண்டு. சமீபத்தில் அவர் தொழிலுக்கு இரு நாட்டுக் கழகத்தின் தலைவராக அவரைத்

தேர்ந்தெடுத்தார்கள். நாட்டில் அவர் தொழில் முடக்கம். பலர் தொழிலை மூடிவிட்டனர். இவர் தொழில் சுருங்கியது. அடிக்கடி நம்மைச் சொந்த விஷயமாகவும், தொழில் சம்பந்தமாகவும் கலந்து ஆலோசிப்பார். நண்பர்கள் பதில் சொல்வார்கள். இவரிடம் (organisation) நிர்வாக அமைப்பு பூஜ்யம். உற்சாகமாக எதையும் கேட்டுக் கொள்வார். நடைமுறையில் எதையும் செய்வதில்லை நாட்டில் தொழில் சுருங்கினாலும், அன்னை பக்தர் அன்னையை ஏற்றது சரியானால், அவர் தொழில் சுருங்காது, விரியும் என்பது சட்டம். நம் அனுபவம். நம் அனுபவம் அவர் அறிந்ததாகும். நிர்வாக அமைப்பில்லாமல், புதிய முறைகளை அனுசரிக்காமல், ஆரம்பத்தில் இவர் தொழில் 21 மடங்கானதை இவர் அறிவார். இன்று கடுமையான மார்க்கெட்டில் தாம் எதுவும் செய்யாமல் தொழில் விரிவுபடும் என விரும்புகிறார். தொழில் முதலாளி தலைவராக இருக்க வேண்டும். இவருக்குச் சேல்ஸ் பயிற்சி. அது நிர்வாகத்திற்கு பயன்படாது. மார்க்கெட் நிலவரம், திறமையில்லாதது, தலைமையில்லாதது போக இவருக்குப் பணம் செலவு செய்ய முடியாது. அளவு கடந்த கடுமை. பண விஷயம் என்றால் சுருக்கம் அதிகம். கருமி என்பதற்கு எடுத்துக்காட்டு. இவரிடம் வேலை செய்யும் 5 மானேஜர்களில் ஒருவருக்கு வருஷம் 60,000 டாலர் சம்பளம். கம்பனி சுருங்கும்பொழுது, நல்ல ஊழியர்கள் விலகுகிறார்கள். மற்றவர்கள் நிலைமை தெரிந்தாலும், சம்பள உயர்வு கேட்டபடியிருப்பார்கள். அவருள் ஒருவர் சிறப்பான பெயர் வாங்கியவர். அவர் முதலாளியிடம் வந்து, கம்பனி நிலைமையைப் பற்றிப் பேசிவிட்டு, தம் சம்பளத்தில் 10% குறைத்துக் கொள்வதாகவும், கம்பனி வியாபாரம் அதிகமாகத் தாம் உழைப்பதாகவும், கம்பனி மீண்டும் உயர்ந்து வரும்பொழுது தாம் இன்று விட்டுக் கொடுத்த சம்பளத்தைப் படிப்படியாக மீண்டும் தரவேண்டும் என்றார்.

எல்லா மானேஜர்களும் அதிகச் சம்பளம் கேட்கும்பொழுது ஒருவர் தம் சம்பளத்தைக் குறைக்க முன்வருவது ஆச்சரியமான விஷயம். ஆனால் இந்த முதலாளிக்கு மானேஜர் மீது சந்தேகம்! ஏன் இந்த மானேஜர் சம்பளத்தைக் குறைக்கச் சொல்கிறார்? அதன் இரகஸ்யம் என்ன? என்று இந்த முதலாளிக்குத் தோன்றியது. சம்பளத்தைக் குறைப்பதன் மூலம் மானேஜர் தம்மிடம் அதிகப் பணம் எதிர்பார்க்கிறார் என நினைத்தார். மீண்டும் அதைத் திருப்பித் தரவேண்டும் என்கிறாரே எனச் சந்தேகப்பட்டார்! கருமித்தனத்திற்கும் ஓர் எல்லையுண்டு.

நோக்கம் சந்தேகப்படுவதென்றால் அவர் எப்படி வாழ்வில் முன்னேற முடியும்? இவரால் வாழ்விலோ, வியாபாரத்திலோ, அன்னையிடமோ முன்னேற முடியாது. நமக்குச் சந்தேகம் எழும் இடங்களைக் கவனித்து, சந்தேகத்தின் தரம் என்ன என்று சிந்தனை செய்ய வேண்டும். நம் சந்தேகம் எந்தக் குணத்தை வெளிப்படுத்துகிறது என்று புரிந்தால், நாம் எப்படி மாற வேண்டும எனத் தெரியும்.

கணம் தரியேன் நின் ஆணையிது :

இறைவனை நாடும் ஆன்மா கணம் தரிக்காது, காண விழையும். காலமெல்லாம் காத்திருக்கும். கண்டால், சிந்தனை பிறக்காது, இதற்குத்தானா நாம் காத்திருந்தது என்ற கேள்வி எழாது. யோசனையும், ஆராய்ச்சியும் பிறக்கா. கண்டதும், கணம் தரியாமல் ஏற்கும். அவசரமின்றி அனாதி காலத்திற்கும் காத்திருப்பதும், கண்டதும் தரிக்காமல் ஏற்பதும் ஆன்மாவின் பாங்கு. மாற்றத்தை நாடுபவர்கட்கு மாற்றம் இதுபோல் ஏற்படும். வேண்டும் என்பதையும் இதுபோல் ஏற்கும். வேண்டாம் என்பதையும் இதேபோல் நீக்கும். இது மாற்றத்திற்குரிய மனநிலை.

ஆறஅமர ஆராய்ச்சி செய்து, சிந்தனை செய்து, பலரைக் கலந்து நல்லது கெட்டதை யோசனை செய்து முடிவுக்கு

வருவது வாழ்க்கை. வாழ்க்கை காலத்திற்குட்பட்டது. சிந்தனை காலத்திலானது. மாறிய பின் ஓரளவு காலம் நமக்குக் கட்டுப்படும். வாழ்வும் அதுபோல் கட்டுப்படும். காலமும் வாழ்வும் கட்டுப்படுவதால், அந்நிலை வாழ்வின் நிலையிலிருந்து மாறுபடும். ஆன்மாவின் சாயலிருக்கும்.

உன்னைக் கண்டேன், உனக்கே நான்

உரியவனானேன், என்பது ஆன்ம விழிப்பு.

மாற்றம் ஆன்ம விழிப்பால் ஏற்படுவது.

தரியாமல் செயல்படுவது அதன் முத்திரை.

அறிவு வளர்ந்தால் திறமை வளரும். அனுபவம் வளர்ந்தால் விபரம் தெரியும். அறிவும், அனுபவமும் உள்ளவர்கள் பிறர் ஆடி, ஓடி, மெதுவாகச் சாதிப்பதைச் சிரமமில்லாமல் சீக்கிரம் சாதிப்பார்கள். இதுபோல் சாதிக்க ஆரம்பித்தபின் அதுவே ஓர் அபிப்பிராயம், நோக்கமாக மாறிவிடும். அடுத்த தலைமுறை ஆரம்பத்திலிருந்து பயன்பெறும்.

தொழில் அதிக இலாபம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், அனுபவமில்லாதவன் பார்ட்னரை விலக்குவான். தொழில் நசித்துப் போகும். அனுபவமுள்ளவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள். 20 வருஷம் கழித்துப் பார்த்தால், அனுபவமுள்ளவன் ஒரு பாக்டரியை 4, 5 பாக்டரிகளாக வளர்த்தபொழுது, அனுபவமில்லாதவன் முதல் பாக்டரி கடனில் மாட்டியிருப்பதைக் காண்பான்.

அறிவும், அனுபவமும் கொடுப்பது நோக்கம். இந்த நோக்கம் சாதிக்கும். அறிவும், அனுபவமும் உள்ளவர்க்கு ஒரு நோக்கம் இருப்பதைப்போல் இல்லாதவனுக்கு அவன் அளவில் ஒரு நோக்கம் ஏற்படுகிறது. உதாரணமாகக் கொடுப்பார் எனில் கேட்டு வாங்க வேண்டும் என்ற நோக்கம் உள்ளவரைப் பார்த்தால், சிறு வயதில் கொடுப்பவர்களிடம்

எல்லாம் கேட்டு, பெறக் கூடியவற்றைல்லாம் பெற்ற பின் அவனுக்குத் திறமைக் கேட்பதில் ஏற்படும். சொந்தமாகக் காரியம் செய்து சாதிப்பதில் திறமையிருக்காது. கேட்டால் கொடுப்பார் எனில், ஓரளவுக்குக் கொடுப்பார்கள். எல்லாவற்றையும் கொடுக்கமாட்டார்கள், எல்லா அளவுகளிலும் கொடுக்கமாட்டார்கள் என்று புரிவதற்குள் அவனுக்கு வயது கடந்துவிடும். இந்த நோக்கம் அவனை அவனுடைய சமூகத்தில் மட்டமான நிலையில் இருத்தும். நண்பர்கள் எல்லாம் ஆபீஸர்களாக இருக்கும்பொழுது, தான் கிளார்க்காக இருந்து முதல் பிரமோஷன்கூடப் பெற முடியவில்லை என 45இல் தெரியும். பிரமோஷனைக் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன், கொடுக்கவில்லை! என்று வாழ்வு முடிந்துவிடும். வாழ்வில் அனைவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. நமக்குப் பொருந்தினால் நம்மால் வேலை செய்யமுடியும். பொருந்தாத நோக்கமுள்ளவரை நாம் நம் மாற்றத்திற்கேற்ப எப்படிப் புரிந்து கொள்வது? அவரிடம் எப்படிப் பழகுவது? எப்படி வாழ்க்கை நடத்துவது? என்று நாம் அறிய வேண்டும்.

பொதுவாகப் பிறர் நோக்கம் எதுவானாலும், பழக்கம் எதுவானாலும், நம் விஷயம் இவர்களுக்குப் புரியாது என்பதால், நம் நோக்கத்தை இவர்களிடம் சொன்னால் விளங்காது. யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம், அன்னையிடம் சொல், என்று நாம் நடந்தால், காரியம் நடக்கும், அவர்கள் ஒத்துழைப்பார்கள், நம் மாற்றத்திற்கு உதவும். இது பொது முறை. குறிப்பான முறை எந்த அளவுக்கு ஒருவர் முறையிலிருந்து மாறிக் குறைவாக இருக்கிறாரோ, அந்த அளவு நாம் முறையிலிருந்து உயர்ந்திருந்தால் பலன் பெரிது.

காய்கறி வாங்க கொத்தவால் சாவடிக்குப் போன பெண்மணி சில நண்பர்களுடன் சென்றார். எல்லோரும்



book | by Dr. Radut