Skip to Content

பகுதி 6

நேர்மையாகச் சம்பாதிப்பது நன்மை (good). தொழிலில் பணத்தைத் தவறாகச் சம்பாதிப்பது தீமை (evil). தொழிலில் பணத்தை நேர்மையாகச் சம்பாதிக்க அன்னை கோட்பாடுகளைப் பயன்படுத்தினால் அது தீமைக்கெதிரான நன்மையிலிருந்து (good) தீமையொழிந்த நன்மையாக Good மாறும் திறனுடையதாகும். தவறில்லாத வாழ்வை அன்னை கோட்பாடுகளால் நடத்துவது அன்னை வாழ்வு, யோக வாழ்வு, ஆன்மீக வாழ்வு எனப்படும்.

அன்னையை, பெண்கள் அதிகமாக வழிபடுகிறார்கள். சமாதிக்கு வந்தால் பெண்கள்தான் அதிக ஈடுபாட்டுடன் இருக்கிறார்கள். ஆண்கள் அதே ஈடுபாட்டைக் காண்பிப்பதில்லை என்று ஒருவர் கூறினார். பொதுவாக எந்த நாளிலும் கோவிலுக்குப் போகும் கூட்டத்தில் பெண்களே அதிகம் என்றும் மற்றொருவர் எடுத்துக் காட்டினார். மேல் நாடுகளில் சர்ச்சில் 90% பெண்கள்தான் இருப்பார்கள் என்றார் மற்றொருவர். இது எதனால்? என்ற கேள்வி எழுகிறது.

ஆண் வலிமையானவன். பெண் அவன் ஆதரவை நாடுபவள் என்பது மனித குலத்திற்கும், விலங்கினத்திற்கும் உண்மை. ஆதரவற்றவர்க்கு ஆண்டவன் ஆதரவு தருகிறார். எனவே ஆதரவை அதிகமாகத் தேடுபவர்கள், ஆண்டவனை வழிபடுகிறார்கள். ஆண்மகன் சம்பாதிக்கின்றான். உடலில் தெம்பு அதிகமாக இருக்கிறது. இயற்கையில் பெண் தாய்மைக்கு உரியவள். விலங்கினத்திலிருந்து, பெண் குழந்தை பிறந்த பொழுது ஆணின் பாதுகாப்பை அதிகமாக நாடுகிறாள். ஆண் தன் விருப்பப்படியிருக்க அவன் சம்பாத்தியம் உதவுகிறது. அது இல்லாததால் அடிப்படையில் பெண் ஆதரவற்றிருக்கிறாள். பெண்களிலும் சொத்துள்ளவர்களில் தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் குறைவு.

அது போகப் பொதுவாக, குடும்பத்தில் எந்த முடிவையும் ஆண் தன்னிஷ்டப்படி எடுக்கிறான். பெண் தன் விருப்பம்

பூர்த்தியாக ஆணை நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. எந்த ஒரு காரியத்திற்கும் பெண் ஆணை நம்பியிருக்க வேண்டியிருப்பதால், பெண் ஆதரவற்ற நிலையிலிருக்கிறாள். ஆதரவற்ற நிலையில் ஆண்டவனை நாடுவது இயற்கை.

ஆண்களில் வசதியில்லாதவர், வசதியுள்ளவரை விடத் தெய்வ நம்பிக்கையுடையவராக இருப்பதைக் காணலாம். தொழிலதிபராக இருப்பவர்கள் பல பேரை நம்பி வாழ வேண்டியிருக்கிறது. அவர்களில் பெரும்பாலோர் தெய்வ நம்பிக்கையுடையவராக இருப்பதைக் காணலாம்.

தெய்வ நம்பிக்கையில்லாத வசதியுள்ளவர்கள் ஏதோ காரணத்தால் நம்பிக்கை ஏற்பட்டு, வழிபட ஆரம்பித்தால், சற்று அதிக வசதி வந்தவுடன் வழிபாட்டை நிறுத்தி விடுவது வழக்கம்.

வசதி இல்லாதவர், ஆதரவில்லாதவர், நிலையில்லாத வாழ்வை நடத்துபவர், வழிபாட்டை அதிகமாக ஏற்கிறார்கள். இன்று பெண்கள் நிலை அது போலிருப்பதால் பெண்கள் உலகெங்கும் அதிகமாக வழிபாட்டை நாடுகிறார்கள். ஆண்களுக்கு, பெண்களை விட நிலைமை சற்று நிலையாக இருப்பதால், அவர்கள் அதிகமாக, தெய்வத்தை நாடுவதில்லை.

வழிபாடு பலிக்கும், அடுத்த கட்ட வசதி பலிக்கும் என்று மனிதனுக்குத் தெரியாது, அது தெரிந்தால் மனிதன் தாமதமின்றி வழிபாட்டை, பூரணமாக நாடுவான் என்று பகவான் கூறுகிறார். சுமார் 30, 40 வருஷங்கட்கு முன் நகர வாழ்வை மக்கள் இன்று நாடுவதுபோல் நாடவில்லை. படிப்பையும் அதுபோல் போற்றியதில்லை. வீடு கட்ட முனைந்ததில்லை. ஏனெனில் அவர்கள் இன்று அறிந்ததை அன்று அறியவில்லை. அன்று மக்களுக்கு நகரவாழ்வு, படிப்பு, வீடு பிடிக்கவில்லை என்று பொருள் இல்லை. அன்று நகரத்திற்குப் போய் வாழ முடியும், குழந்தைகளைப் படிக்க

வைக்க முடியும், வீடு கட்ட முடியும் என்ற நம்பிக்கையில்லை, (என்று தெரியவில்லை). அதேபோல் மனிதனுக்கு இன்று வழிபாட்டால் 10 மடங்கு வருமானம் வரும் என்று தெரியவில்லை, அதில் நம்பிக்கையில்லை. 10 மடங்கு வருமானம் வழிபாட்டால் வரும் என்று மனிதன் நம்பினால், தெரிந்து கொண்டால், பெண்களைவிட அதிகமாக ஆண்கள் வழிபாட்டை நாடுவார்கள். அப்பொழுது மனிதன் க்ஷணம் பொறுக்க மாட்டான், அவனால் தாமதிக்க முடியாது என்கிறார் பகவான்.

வசதி, ஆதரவில்லாத நிலையிலும், வசதி கிடைக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக ஏற்பட்ட பொழுதும் மனிதன் தெய்வத்தை நாடுகிறான். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் நம்பிக்கை ஏற்படுவதில்லை.

நடக்காத காரியம் நடக்க வேண்டும் என்று பல மாதங்களாகப் பெருமுயற்சிசெய்து, அதற்காக இடைவிடாமல் அன்னையைப் பிரார்த்தனை செய்பவர்களுக்கு அது பலிப்பதுண்டு. அவர்களோடு நான் சில சமயங்களில் உடன் இருப்பதால், பிரார்த்தனை பலித்த நேரம், அதாவது காரியம் பூர்த்தியான நேரம், நெருக்கமாகக் கவனித்ததுண்டு. ஒரு சமயம் அது போல் 36 பேரில் 6 பேருக்கே காரியம் முடிந்த சமயம் அன்னை நினைவு வந்தது என்று காண முடிந்தது. காரியம் முடியும்வரை ஒற்றைக்காலில் நிற்பவர்களுக்கு அது முடிந்தவுடன் பலன்தான் கண்ணுக்குத் தெரிகிறது. அன்னை நினைவு வருவதில்லை, அன்னைக்கு நன்றி கூறத் தோன்றுவதில்லை. தோன்றுபவர்கட்கு 1 மணி கழித்துத் தோன்றும், 2 நாள் கழித்து தோன்றும். தோன்றாதவர்கள் 36 இல் 30 பேர். நமக்குப் பிறர் முக்கியமில்லை. பிறர் வாழ்வில் நாம் முன்னுக்கு வரப்போவதில்லை. இக்கண்ணோட்டத்தில் நம்மை நாம் அனுதினமும் எல்லாச் செயல்களிலும் கவனித்தால் 10% நினைவு வருவது அதிகம்.

காரியம் பூர்த்தியான உடன் அடுத்தது என்ன? என்று தோன்றுகிறது. மாற்றத்தை நாடுபவர்கள் இதை ஒர் இலட்சியமாக்கி 100% அன்னை நினைவு வேண்டும், காரியம் பூர்த்தியான பின் உடனே தாமதமில்லாமல் அன்னைக்கு நன்றி சொல்ல வேண்டும், பூர்த்தியானதற்கு (explain away) வேறு காரணம் கற்பிக்காமல் அருளின் செயலென அறிய வேண்டும் என்று முயன்றால் இது மாற்றத்தைக் கொடுக்கும்.

  • வாரம் ஒரு முறை மிகத் தொலைவிலிருந்து சமாதி வந்தவர், தம் அபிலாஷை பூர்த்தியான பின், வந்து சமாதியில் நன்றி தெரிவித்தார். தம் பல ஆண்டு கோரிக்கை அபரிமிதமாகப் பூர்த்தியானதாக நெகிழ்ந்து பேசினார். பிறகு மாதம் ஒரு முறையும் வரவில்லை. தரிசனங்களுக்கு வந்தார். அடுத்தாற்போல் தரிசனங்களுக்கும் வருவதில்லை. சமாதியும், பகவானும் அடியோடு மறந்து விட்டது. மறந்து விட்டது என்பதே அவர் அறியாததொன்று.
  • 40 வருஷங்களுக்கு முன் இலட்சரூபாயை, புரோக்கர் சாதுரியத்தால் இழந்தவர், அதன் மூலம் பெரிய தொல்லையில் மாட்டிக்கொண்டதை அறிந்தார். வாரா வாரம் 100 பேர் கூடி அவரை ஆபாசமாகத் திட்டும் நிலைக்கு வந்து விட்டார். பணம் இழந்ததைப் பற்றி அவர் நினைக்கவேயில்லை. தொந்தரவு போக வேண்டும் என விரும்பினார். தொந்தரவு உடனே போய் விட்டது. சில ஆண்டுகளில் பணம் முழுவதும் வந்தது. பணம் வந்த 6 ஆண்டுக்குப் பின் நடந்த உரையாடலில் அவர் ஆரம்பநிலை அடிபட்டது. அப்பொழுது அவர் சொல்லியது, எனக்குப் பணம் வந்தவுடன் அன்னை நினைவு வரவில்லை. பிறர் சொல்லும்பொழுதுதான் நினைவு வரவில்லை எனத்

தோன்றுகிறது. மேற்சொல்லியது போன்ற சுமார் 400 அல்லது 500 உதாரணங்கள் நான் நேரிடையாக அறிவேன். அவை நமக்குப் புரிய உதவும். மாற உதவா. நாம் மறப்பது மட்டுமே நமக்கு மாற உதவும். இதை அடிப்படையாக வைத்து 10 ஆண்டுகட்கு முன் நான், ஒரு பிரச்சினை தீராமல் தடையாகவுள்ள நேரம், நமக்கு அதுவரை ஏற்பட்ட நன்மைக்கு நன்றி கூறினால், அப்பிரச்சினை தீர்ந்துவிடும் என எழுதினேன்.

  • இதுவரை நடந்த நன்மைகட்கு நன்றி கூறினால் தீராத பிரச்சினை தீரும்.
  • இதுவரை நடந்த நல்லது, கெட்டது இரண்டுக்கும் நன்றி கூறினால் யோகம் பலிக்கும்.

பிரச்சினையைத் தீர்க்க மனிதன் முனைகிறான். அவர் வாழ்வு சிறியது. அதில் பிரச்சினை பெரிய தொந்தரவு. யோகம் பெரியது. வாழ்வு அதில் ஒரு பகுதி. பிரச்சினை என்பது யோகத்தை மேற்கொண்டவர்க்குத் தொந்தரவில்லை. ஒரு நிகழ்ச்சி. அதனால் யோகி பிரச்சினையைத் தீர்க்க முனைவதைவிட புரிந்துகொள்ள முயல்கிறான். பிரச்சினையை அளித்ததும் அன்னை. அதற்கும் அவருக்கு நன்றி சொல்லுபவன் யோகி. சாதாரண மனிதன் அதைச் செய்ய முடியாது. செய்யக் கூடாது, ஆபத்து. பிரச்சினை என்பது infinity முடிவில்லாதது. யோகி உலகில் அனைத்தையும் முடிவற்றதாக அறிவான். அதுபோல் பிரச்சினையும் அவனுக்கு எண்ணிறந்தது, முடிவற்றது. கிருகஸ்தன் பிரச்சினை போனால் போதும் என்றிருப்பவன். அவன் யோகியைப்போல், பிரச்சினைக்கு நன்றி கூறினால், முடிவில்லாமல் பிரச்சினைகள் வரும். அது அவனுக்குப் பொருந்தாது. சாவித்திரி காவியத்தில் பகவான் இந்த எச்சரிக்கையை எழுதுகிறார்.

தியானத்தில் உட்கார்ந்தாலும், தூங்கப் போனாலும் நாம் உடலைக் கவனிக்க முடியும். மனத்தில் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். லேசாக அவை அடங்குவதைக் காணலாம். சீக்கிரம் அடங்க வேண்டும் என நினைத்தால் அவை வேகமாக ஒடும். நாம் சும்மா இருந்தால் எண்ணங்கள் மெதுவாகத் தானே அடங்கும். எண்ணங்கள் அடங்கிய பின் நரம்பின் படபடப்பு கவனிப்பவர்களுக்குத் தெரியும். அதுவும் அடங்கிய பின் உடல் அதே படபடப்பு தெரியும். உடலும் அடங்கிய பின் தூக்கம் வரும். சிந்திப்பவர்களுக்கு மனம், நரம்பு, உடல் என்ற வரிசையில் ஜீவன் அடங்கும். உடலால் உழைப்பவனுக்கு உடல், நரம்பு, மனம் என்ற வரிசையில் கரணங்கள் அடங்குவது தெரியும். ஆசனம் பயிற்சி செய்பவர்கள் சவாசனம் என்பதைக் கடைசியாகச் செய்வார்கள். தூக்கத்தில் ஜீவன் தானே அடங்குவதை சவாசனம் பயிற்சியாகக் கொள்கிறது. சவாசனம் முறையாகச் செய்தால் கடைசி நிலையில் நாம் நம்மை மறந்து விடுவோம் (will loose consciousness). அது சில நிமிஷமானாலும், ஆசனம் தெளிந்து எழுந்தால் உடலும் மனமும் அளவு கடந்த புத்துணர்வோடு இருக்கும்.

பகவான் உடலின் படபடப்பைத் (restlessness of the physical being) தெளிவாக விவரிக்கின்றார். மனித வாழ்வின் சுறுசுறுப்புக்கு அடிப்படை உடலின் சுறுசுறுப்பாகும், ஆன்மிகப் பாஷையில் உடலின் படபடப்பாகும். இப்படபடப்பிலிருந்தே, நமக்கு அன்றாடம் தேவையான சுறுசுறுப்பும், சக்தியும் எழுகின்றன. மேல் மனத்திற்குரியது இது. நம் வாழ்வுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் மற்றோரிடம் நம் ஜீவனில் உள்ளது. படபடப்புக்குக் கீழே quiet அமைதியுள்ளது. படபடப்பு அடங்கினால் ஜீவனின் அமைதி ஆழத்திலிருந்து எழுந்து மேல்மனத்தை ஆட்கொள்ளும். படபடப்பு மேல் மனத்திற்குரியது. அவசரக்காரனைப் போன்றது. அமைதி ஆழ்ந்த

ஜீவனுக்குரியது. பொறுமைசாலி, சாது என்பவரைப் போன்றது.

அமைதியில் அதிக சக்தி அபரிமிதமாக உற்பத்தியாகிறது.

படபடப்பு அடங்கி, நாம் அதன் மூலம் மேல் மனத்தை விட்டகன்று, ஆழ்மனத்தின் அமைதியை அடைந்தால், நம் திறன் பல மடங்கு உயரும். அளவு கடந்து உயரும். இது நான் சொல்லும் மாற்றத்திற்கு உதவும். அவசியமும்கூட. வேறு வகையில் மாற்றம் ஏற்பட்டால், படபடப்பு அழிந்து அமைதி எழுவதைக் காணலாம்.

சாதாரண மனிதனை அறிவுள்ள விலங்கு (thinking animal) என்று எழுத்தாளர்கள் விவரிப்பதுண்டு. தவத்தை மேற்கொள்பவனை, சாதாரண மனிதனோடு ஒப்பிட்டால், அவன் மலை போன்றவன். மனிதன் ஒரு கூழாங்கல். ஆசனம், பிராணாயாமம், மந்திரம், ஜபம், தியானம், தவம் போன்றவை உலகுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம். சாதாரண மனிதனால் நினைக்க முடியாது. அவற்றின் திறன் பெரியது. குடும்பத்திலுள்ளவனுக்கு அவை எட்டாக்கனி என்பதால், அது போன்ற சிறு பலனையும் வாழ்வில் அனுபவிக்க அவனுக்கு விரதம், பூஜை, ஸ்தோத்திரம், நோன்பு, பக்திப் பாடல்கள், கோயில், திருவிழா, இராகுகாலம், சுப, அசுப முகூர்த்தங்கள், பஞ்சாங்கம், நியம நிஷ்டைகள். ஆசாரம் போன்றவைகளை ஏற்படுத்தினார்கள். அவை மனித சமுதாயத்திற்கு அளித்த பலன் அளவிறந்தது.

அன்னை உலகை ஆயிரம் மடங்கு உயர்த்த வந்தவர்கள். அவரை ஏற்பவர்கள் ஆயிரம் மடங்கு உயரவில்லை என்றாலும், ஆயிரம் வகைகளில் அன்னை சக்தி செயல்படுவதைக் காணலாம். நடந்து போன மனிதனுக்குக் குதிரைச் சவாரி, வண்டி பல மடங்கு பலன் தந்தன. ரயிலும், பஸ்ஸும், காரும், லாரியும், விமானமும் வந்த பின் குதிரைச்

சவாரிக்கு உபயோகமில்லை. வண்டியில் சரக்கை 200 மைல் கொண்டு போக இன்று முயல்வதில்லை, 20 மைலுக்கும் லாரியைத் தேடுகிறோம். தபால், தந்தி, போன், courier கொரியர் வந்த பின் ஒலை எழுதி ஆள் மூலம் நாம் அனுப்புவதில்லை. அன்னை சக்தி இவை போன்றது. மாற்றம் அதிலும் உயர்ந்த நிலை. மாற்றம் ஏற்பட்ட பின் விரதம், ஜாதகம், சுப வேளைக்கு அர்த்தமில்லை. தொடர்ந்து பயன்படுத்தினால் டெல்லிக்கு வண்டியில் போவது போலிருக்கும்.

பழைய பழக்க வழக்கங்களை நம்மால் விட முடியவில்லை என அடிக்கடி சொல்கிறோம். ஏழைக்கு வசதி வந்தால் தன் ஏழ்மையை விட முடியவில்லை என்று சொல்வதில்லை. Gas காஸ் அடுப்பு வந்தபின், விறகு அடுப்பை விடமுடியவில்லை என்பவர்கள் மிகச் சொற்பம். ரேடியோ, பஸ், ரயில், கார், T.V. போன், புது வீடு போன்றவை உலகில் பரவும்பொழுது மனிதர்கள் அவற்றை ஆர்வமாக ஏற்றுக் கொள்கிறார்கள். பழைய பழக்கத்தை விட முடியவில்லை என்று சொல்வதில்லை. அத்துடன் இந்த புதிய வசதி வந்து இரண்டு நாள் கழித்து ஒரு நாள் அது இல்லாமல் முடிவதில்லை.A.C.யில் இரண்டு மாதம் பழகியவர் ஒரு வாரம் அது ரிப்பேர் ஆனால் படாத பாடுபடுவதைப் பார்த்து, A.C.யில் பிறந்து வளர்ந்தது போல் பேசுகிறாயே' ' என்கிறோம். நாம் பழைய பழக்கங்களை விடமுடியவில்லை என்று சொல்வது, முடியவில்லை என்று பொருளில்லை. அவற்றை விடப் பிடிக்கவில்லை, புதியதின் வசதி புரியவில்லை என்று பொருள்.

விடமுடியவில்லை எனில் புதியது புரியவில்லை என்று பொருள்.

The Life Divine லைப் டிவைனிலுள்ள 150 கருத்துகளை 'பேரொளியாகும் உள்ளொளி' கட்டுரையோடு இணைத்து இருந்தேன். அந்நூல் 1070 பக்கம் கொண்டது. முதற் புத்தகம்

288 பக்கம். அதிலிருந்து எடுத்த கருத்துகளே இவை. ஹாலந்தில் Ph.D படித்து கேம்பிரிட்ஜில்D.Sc படித்து உலகப் பிரசித்தி பெற்ற விஞ்ஞானி அந்நூலில் அவர் subject பாடத்தைப் பற்றியுள்ள ஒரு அத்தியாயத்தைப் படித்துப் பார்த்து, 'இது கடினமான நூல்'''என்றார். இது அனைவருடைய அனுபவம். இந்நூலிலுள்ள கருத்துகள் பலவற்றை S.S.L.C படித்தவர்களில் சிலருக்கு நான் சொல்ல முயன்றிருக்கிறேன். பக்தி, நம்பிக்கையுள்ளவர்கள் அவற்றுள் சில கருத்துகளை உடனே முழுமையாகப் புரிந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன். நூல் கடினமானது என்பது உண்மை. பக்தியுள்ளத்திற்குப் புரியும் என்பதும் உண்மை. நூலில் உள்ள சுமார் 10 கருத்துகளை வாழ்வுடன் இணைத்து விளக்க முயல்கிறேன்.

  1. இரண்டாம் அத்தியாயத்தில் பகுத்தறிவு வாதம், நாத்திக வாதம் ஆகியவற்றை, பகவான் விளித்து, பல கேள்விகள் எழுப்பி, பல்வேறு கோணங்களில் பதில் சொல்லி, முடிவாக ஒரு கேள்வி கேட்கிறார். அறிவுக்குப் புரியவில்லை, கடவுள் பகுத்தறிவுக்குப் புலப்படவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று சொல்வது எப்படிப் பொருந்தும்? அறிவே முடிவானது எனில் இந்த வாதம் சரி. அறிவுக்குப் புலப்படாத ஒன்றுக்குப் பதில் தேவை எனில் அறிவின் உற்பத்தி ஸ்தானத்தை நாடி அங்குத் தேடுவது முறை அல்லவா? என்கிறார். அறிவு ஜீவியத்திலிருந்து உற்பத்தியாகிறது. பகுத்தறிவுவாதியை அறிவை விட்டகன்று ஜீவியத்திற்கு அழைக்கிறார். அங்கு வந்தால் என்ன விளங்குகிறது என்றும் கூறுகிறார். இவையெல்லாம் தத்துவம், நூல் கடினமானது என்பது சரிதான் என்று தோன்றுகிறது. இதைச் சாமானிய மனிதனுக்குப் புரியும்படி விளக்கமுடியுமா?

அறிவைக் கடந்து செல்வதென்றால் என்ன? அறிவு எனில் சிந்தனை, எண்ண ஒட்டம். சிந்தனை செய்யும் பொழுது அறிவைப் பயன்படுத்துகிறோம். அறிவைப் பயன்படுத்தாமல் இருக்கச் சிந்திக்கக் கூடாது. சிந்திக்காவிட்டால் மனம் மௌனமாகிறது. மௌனமான நிலை ஜீவியத்தை எட்ட உதவும். அறிவைக் கடந்த ஜீவியத்தை எட்ட உதவும். அறிவைக் கடந்து ஜீவியத்தைத் தொடு என்ற தத்துவத்தை, சிந்தனையை விட்டு மௌனத்தை நாடு என்றால் புரியலாம் அல்லவா? மௌனம் நாம் அறிந்தது. ஆனால் நமக்கு மௌனம் நிலையாக இல்லை. சிந்தனை நாம் அறிந்தது. எப்பொழுதும் பயன் படுத்துவது, யோசனை செய்தால் அறிவு கருவியாகிறது. யோசனை நின்று மௌனத்தை நாடினால் ஜீவியம் கருவியாகிறது. அதுவே அறிவை விட்டு ஜீவியத்தை நாடுவதாகும்.

  1. சைத்தியப் புருஷன் வெளிவர வேண்டும்:

இது பூரண யோகத்தின் உட்கரு, இரகஸ்யம். இதைக் கண்டுபிடிக்க பகவான் பத்து ஆண்டுகள் முயன்றார். இதை எப்படிச் செய்வது, எங்கு சைத்தியப் புருஷன் உரைகிறான், சைத்தியப் புருஷன் என்பவன் யார்? என்ற விவரங்களே அவர் எழுதிய யோக நூல்களாகும். புரிகிறது, என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை என்பவர் பலர். ஜீவாத்மாவின் பிரதிநிதியாக ஆழ்ந்த மனதில் ஆன்மிக அனுபவச் சாரங்களைச் சேர்க்கும் ஆன்மிகச் சக்தி சைத்தியப் புருஷன். நெஞ்சுக்குப் பின்னாலுள்ள குகையின் அடியில் ஒளிந்து கொண்டுள்ளான் என பகவான் இதை விவரிக்கின்றார். The Life Divine நூல் முதலில் எழுதிய பொழுது இச்சொல் அங்கு பயன்படுத்தப்படவில்லை. அந்நூல் எழுதி முடிந்தபின் அன்னை வந்தார். அவருக்கு psychic being சைத்தியப் புருஷன் என்ற சொல் பிடிக்கும். எனவே பகவான் நூலை மீண்டும் இச்சொல்லைப் psychic being பயன்படுத்தித் திருத்தினார்.

நெஞ்சுக்குப் பின்னால் தியானம் ஒருநிலைப்பட்டால், தீவிரம் அதிகமான நிலையில் சைத்தியம் கிட்டும் என்கிறார். தியானம் பலிப்பதே பலருக்குக் கஷ்டம். இந்தத் தியானம் எவர்க்கும் பலிப்பதில்லை. என்ன செய்வது? என்பது கேள்வி.

சைத்தியப்புருஷன் ஆழ்மனத்தில் (subliminal) இருக்கிறான். இதை உள்மனம் எனவும் சொல்வதுண்டு. நாம் மேல் மனத்தில் (surface mind) செயல்படுகிறோம். மேல் மனம் அறியாமை மனம். மேல்மனம் எண்ணத்தால் செயல்படுவது. எண்ணம் இயற்கை எனும் பிரகிருதியைச் சேர்ந்தது. சைத்தியம் பிரகிருதியின் ஆன்மா. எண்ணம் தோன்றினால் நாம் அதை வெளிப்படுத்துகிறோம். வெளிப்படும் எண்ணம் பிரகிருதியின் வெளிப்பாடு. பிரகிருதி வெளிப்பட்டால் மனிதன் மனிதனாக வளர்வான். பிரகிருதியின் ஆன்மா வெளிப்பட்டால் மனிதன் சத்திய ஜீவனாகும் பாதையில் செல்வான். எண்ணம் தோன்றியவுடன், அதை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக அதைச் சமர்ப்பணம் செய்தால், எண்ணம் உள்ளுறை சைத்திய ஜீவனை நாடிப்போகும். அதன் மூலம் எண்ணத்திலுள்ள ஆன்மா வெப்படும். எண்ணத்தின் ஆன்மா சைத்தியப் புருஷனின் சாயல் என்பதால், அது சைத்தியப் புருஷனை எளிதில் அடையும். இம்முறை மறைந்துள்ள சைத்தியப் புருஷன் வெளிவர உதவும்.

சைத்தியப் புருஷன் வெளி வர வேண்டும் என்ற தத்துவத்தை, சமர்ப்பணத்தை மேற் கொள்ள வேண்டும் என்று மாற்றிச் சொன்னால் புரிந்துகொள்ள உதவும். 'மேல்மனத்திலிருந்து உள்மனத்திற்குப் போ' என்ற தத்துவத்தை, 'சமர்ப்பணம் செய்' என்று சொல்லலாம்.

  1. சைத்தியப் புருஷன் வெளி வரவேண்டும் என்பதை மற்றொரு

வகையாகவும் சொல்லலாம். யோகநிலைகளை விவரிக்கும் பொழுது பகவான்,

ஆசையழிந்தால்

-->

பிராணமயப்புருஷன் வெளிப்படுவான்

அகந்தையழிந்தால்

-->

சைத்தியப்புருஷன் வெளிப்படுவான்

சைத்தியப்புருஷன விடுதலை அடைந்தால்

-->

அது பிரபஞ்சத்தின் ஆத்மாவாகும்

பிரபஞ்சத்தின் ஆத்மா உயர்ந்தால்

-->

பரமாத்மாவைத் தேடும் சத்திய ஜீவியனாகும்,

என்று எழுதுகிறார். சைத்தியப்புருஷன் வெளிப்பட அகந்தை அழிய வேண்டும். அகந்தை எல்லாச் செயல்களிலும் வெளிப்படுவது. ஒவ்வொரு செயலுக்கும் இரு பாணியுண்டு. ஒன்று அகந்தையின் பாணி, அடுத்தது அகந்தையொழிந்த போக்கு. உதாரணமாக ஒரு கோவாப்பரேட்டிவ் சொசைட்டி, சங்கம், வக்கீல் சங்கம் போன்றவற்றின் தலைவர் விழாக் கொண்டாடினால் தலைவர் பெயர் முன் வரும், அவர் தலைமை தாங்குவார், அனைவரும் அவரைப் பற்றிப் பேசுவார்கள். அவரை முன் வைத்து, அதாவது அகந்தையை முன் வைத்துச் செய்வது இது. விழாவில் சங்கத்தை முன் வைத்து, தலைவர் தம்மை ஒதுக்கி, சங்கத்தின் பெயரால், வேறொருவரைத் தலைமை தாங்கச் செய்து, தலைவரைப் பற்றி எவரும் பேசாமல் விழாக் கொண்டாடினால் இது அகந்தையொழிந்த போக்காகும். எல்லாக் காரியங்களையும் இதுபோல் செய்வது அகந்தையை அழிப்பது. அகந்தை அழிந்தால் சைத்தியப் புருஷன் வருவான். அகந்தையொழிந்த போக்கை மேற் கொள் என்று சொன்னால் போதும்.

4. அகந்தை அழிதல் வேண்டும்.

அகந்தையை அழிக்க என்ன செய்ய வேண்டும்? அன்னை அகந்தை என்று சொல்வது மிகப் பரந்த ஒன்றாகும். கர்வம், திமிர், சுயநலம் ஆகியவற்றை நாம் அகந்தை என்கிறோம்.

இறைவன் நினைவு தவிர நம்முள் செயல் எழுவதெல்லாம் அகந்தை என்பது அன்னையின் விளக்கம். இறைவன், பிரகிருதி தவிர நம்முள் உள்ள அனைத்தும் அகந்தையாகும். ஜீவாத்மா, மற்ற ஜீவாத்மாவிலிருந்து பிரிவது அகந்தையால் எனில், பிரிந்த நிலை அகந்தைக்குரிய நிலை.

கர்வம், திமிர், சுயநலமில்லாதவர்கள் அன்னையிடம் வந்து நான் புனிதமாகவே செயல்படுகிறேன்'என்பார்கள். 'நான் செயல்படுகிறேன்'' என்று கூறும்பொழுது 'நான்' அகந்தை ஆகும் என்று அன்னை சுட்டிக் காண்பிப்பார். அப்படி எனில் எப்படிச் செயல்படுவதெனத் தெரியவில்லை என்பது சிலர் நிலை. எனக்கு அகந்தையேயில்லை'என்பது பலர் நிலை. யோகத்தைப் பயிலுபவர்கட்கு இது என்றுமே ஒரு புதிர். இதற்கு மேல் புரியாது என்று கைவிட்ட சித்தாந்தங்களில் இதுவும் ஒன்றாகும்.

அகந்தை மனத்திற்குரியது, உணர்வுக்குரியது, உடலுக்குரியது (mental,vital.physical ego). எளிய வாழ்வில் பயன்படும்படி இவற்றை விளக்க முயல்வோம். பிறர் கண்ணோட்டத்தில் விஷயங்களைப் பரிசீலனை செய்தால், (mental ego) மனத்தின் அகந்தை செயல்பட முடியாது. பல சமயங்களில் பிறர் கண்ணோட்டத்தில் விஷயத்தை ஆலோசனை செய்தால், நாம் கோபப்பட்ட இடத்தில், நாம் பாராட்ட வேண்டிய செயல் அது என விளங்கும். கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாததால் முதலாளி கோபப்பட்டுக் கடிந்தால், தொழிலாளி மனத்தில் என்ன இருக்கிறது? என்ற ஆராய முயன்றால், "அவருடைய கேள்விக்கு என்னிடம் நல்ல பதில் இல்லை. 'இல்லை என்று பேசுவது அவமரியாதை எனப் பேசாமலிருந்து விட்டேன் என்ற பதில் அவன் பாராட்டுக்குரியவன் என விளக்கும். அகந்தையை அழிக்க வேண்டும் என்பதை,

  • பிறர் கண்ணோட்டத்தில் சிந்தனை செய்.
  • தவறு என் மீதுள்ளது எனக் கொள்.
  • எவருடைய தவற்றுக்கும் நானே பொறுப்பு,

என்பன போன்றவற்றை நோக்கங்களாகக் கொள்ள வேண்டும் என்று சொல்லலாம். அல்லது பரந்த மனப்பான்மையுடன் நடந்து கொள் எனலாம். இது புரியக் கூடியது.

5. ஜடம் ஆன்மாவுக்குக் கட்டுப்பட வேண்டும்.

ஜடம் புற நிகழ்ச்சியைக் குறிக்கும். ஆன்மா உள்ளே இருப்பது. நம்மை ஊருக்கு வரச் சொல்லிக் கடிதம் வந்தால், ஊரில் என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுவது புற நிகழ்ச்சிகளால் நாம் செயல்படுவதாகும். நாம் போகும் வேலையின் பலன் இவற்றால் நிர்ணயிக்கப்படும். அது நல்லதாகவும் இருக்கும், மற்றதாகவும் இருக்கும். பலன் நம் கையில் இல்லை. கடிதம் வந்தவுடன், மனம் சிந்திக்காமல், உணர்வு படபடக்காமல், ஊருக்குப் போக ஆயத்தம் செய்யாமல், ஆன்மா சமத்துவமாக இருக்கிறதா என்று பார்த்தால், அது இருக்காது. அதைச் சமநிலைக்குக் கொண்டு வருவது ஆன்மிக முயற்சி. அது பலித்தால், புறப்பட்டுப் போகலாம். நல்ல பலன் வரும். பலனை நம் மனம் நிர்ணயிக்கும். ஜடம் ஆன்மாவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதை மாற்றிப் புற நிகழ்ச்சிகளிலிருந்து அகவுணர்வுக்கு மாற வேண்டும் என்று சொல்லலாம்.

6. பிரம்மத்தை வாழ்வில் காணுதல்

பிரம்மத்தை உலகில் காணுதல் எனில் உலகம் தெரியும், பிரம்மம் தெரிவதில்லை. பகவான் ஐரோப்பியரைப் பற்றி எழுதும்பொழுது, 'அவர்கள் பிரம்மத்தை ஜடத்தில் கண்டவர்கள்' என்றார். அவரவர் நிலையில் அடுத்த உயர்ந்த நிலை பிரம்மத்தைக் குறிக்கும். முனிவருக்கு இறைவன்

'ஆண்டவன்' எனில் நிலத்தில் வேலை செய்பவனுக்கு நிலத்துச் சொந்தக்காரன் 'ஆண்டே' ஆகிறான். 'உன் முதலாளி (boss) உனக்கு அன்னையாவார்' என்று பகவானும், அன்னையும் சொல்வது இதுவே. ஒரு செயல் பலன் தாராவிட்டால், பல முறையும் தவறினால் ஆண்டவனுக்கு விருப்பமில்லை போலும் என்கிறோம். நம் முயற்சி குறைவான பொழுதும் ஒரு காரியம் கூடி வந்தால், 'என் முயற்சியில்லை, தெய்வச் செயல்''என்கிறோம். காரியம் கூடிவருவது இறைவனுக்கு உகந்தது, தவறுவது அவனுக்கு விருப்பம் இல்லாதது என்ற கருத்து நம்மிடையேயுண்டு. செய்யும் காரியம் பலன் தந்தால், அங்கு இறைவனுள்ளான், அதுவே பிரம்மம் என்பது கருத்து. காரியம் தவறுவது (lack of organisation) முறைகள் போதாது என்பதால்; காரியம் கூடி வரும்பொழுது (well organised ) முறைகள் சிறந்துள்ளன என்று கூறுகிறோம். எனவே வாழ்வில் பிரம்மத்தைக் காண செயல் பலனைக் காண வேண்டும். பலன் பெறக் குறைவான முறைகளை நிறைவான முறைகளாக்க வேண்டும்.

செயல் முறைகளை உயர்த்துவது வாழ்வில் பிரம்மத்தைக் காண்பதாகும்.

7. ஞானம் அஞ்ஞானத்திலிருந்து எழுகிறது.

நூலின் மையக் கருத்து இது. ஞானம் தன்னை வலிய அஞ்ஞானமாக்கிச் சிருஷ்டித்தது. அஞ்ஞானத்திலிருந்து ஞானம் வெளிவருவது பரிணாமம். எத்தனை முறை பயின்றாலும் இக்கருத்து ஒரு புதிராகவே இருக்கும். அஞ்ஞானத்திலிருந்து அஞ்ஞானம் எழலாம். ஞானம் எப்படி அஞ்ஞானத்திலிருந்து எழும்? என்பது கேள்வி. ஞானமும், அஞ்ஞானமும் பரம்பொருளிலிருந்து உற்பத்தியாகின்றன என்று உபநிஷதங்கள் கூறுகின்றன. பகவான் கூறுவது

மாறுபட்டது. ஞானம் தன்னையே தன்னுள் கிரகித்துக் கொண்டு (self absorption) தன்னை அழித்து, மறந்து அஞ்ஞானமாகி சிருஷ்டி ஏற்படுகிறது என்கிறார். இவை நூலின் கடினமான பகுதிகள்.

வெள்ளொளி ஏழு வர்ணங்களையும் பிரதிபலிக்கிறது. பச்சையொளி பச்சையை மட்டும் பிரதிபலித்து மற்றதைக் கிரகித்துக் கொள்கிறது. அதையும் தன்னுள் கிரகித்துக் கொண்டால் பச்சை கருப்பாக மாறுகிறது. நாம் வெள்ளை என்பது பிரகாசமான ஒளி. அதனுள் ஒளி செறிந்து அமையவில்லை. நாம், கறுப்பு என்பதில் ஏழு வர்ணங்களையும் கிரகித்துக் கொள்வது. அதனால் அதனுள் அதிகபட்ச ஒளியுள்ளது. கறுப்பு, இருள் என்பன அடர்ந்த ஒளியாகும். ஒளி தன்னை, தன்னுள் முழுவதும் மறைத்துக்கொள்ளும் பொழுது அது இருளாக மாறுகிறது. அதேபோல் ஞானம் தன்னை முழுவதும் தன்னுள் மறைத்துக் கொள்வதால் அஞ்ஞானம் எழுகிறது. மறைந்த ஞானம் மீண்டும் வெளிவருவது (ascent) பரிணாமம் எனப்படும். நாம் ஒரு வேலையைச் செய்தால், அதன் பகுதிகளைக் கற்றுக்கொள்கிறோம். வியாபாரம் செய்தால், மார்க்கட், பணம், வாடிக்கை போன்றவற்றை அறிகிறோம். அதன் எல்லாப் பகுதிகளையும் அறிந்த நிலையில் அச்செயல் பலன் தருகிறது. கற்றுக் கொள்ளுதல் எனில் தொழிலில் புதைந்துள்ள ஞானம் வெளிவந்து பலன் தருகிறது. செயல் பலன் பெறுவது செயலை முழுவதும் கற்றுக் கொள்வதாகும். தொழிலைப் பற்றிய அறிவு தொழிலில் மறைந்துள்ளது. அது வெளி வந்தால் பலன் தரும். ஞானம், அஞ்ஞானத்திலிருந்து வெளிவருவது எனில் நாம் செய்யும் காரியங்களைப் பூரணமாகக் கற்றுக் கொள்வது எனலாம்.

பலன் தரும்படிச் செயலைப் பூர்த்தி செய்வது ஞானம் அஞ்ஞானத்திலிருந்து எழுவதாகும்.

8. ஜீவியம் பரிணாம வளர்ச்சியுற வேண்டும். விலங்கு பரிணாமத்தால் மனிதனாயிற்று. மனிதன் பரிணாம வளர்ச்சியால் சத்திய ஜீவனாக வேண்டும் என்பது யோக தத்துவம்.

இதைச் செய்யும் முறைகளை, பகவான் மிகவும் தெளிவாக எழுதுகிறார். அவற்றை 22 வகைகளாகச் சொல்லலாம் என்று 'முதற்கட்டம்' என்று கட்டுரையில் எழுதியுள்ளேன். இங்கு பொருத்தமான வகையை, படிப்படியாக எழுதுகிறேன்.

  1. ஆசை அழிதல்
  2. பிராணமயப்புருஷன் சித்திப்பது
  3. அகந்தை அழிதல்
  4. சைத்தியப்புருஷன் வெளிப்படுதல்
  5. மௌனம், திருஷ்டி, ஞானம் படிப்படியாகச் சித்திப்பது.
  6. சத்தியஜீவியத்தை அடைதல்

இதை வேறு வகையாகச் சொன்னால், நாம் உள்ள நிலையிலிருந்து ஒரு படிதான் முன்னேற முடியும் என்பதால் நாம் அகந்தையற்றவரானால் சைத்தியப்புருஷன் மூலம் மௌனத்தை அடைய முடியும். அகந்தையற்றவர் சமர்ப்பணத்தை மேற்கொண்டால் சைத்தியப் புருஷனுடன் தொடர்புள்ளவராக இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தகட்டம் மௌனம். மௌனம் என்பதைப் பேசாமலிருப்பது என்றறிவது வாழ்வுக்குரிய விளக்கம்.

மனத்தால் செயல்படும் மனிதன் அறிவால் -- சிந்தனையால் -- புரிந்துகொள்கிறான். மௌனத்தால் செயல்படும் முனிவர், சிந்திக்காமல் மௌனமாகப் புரிந்துகொள்கிறார். மௌனமாகப் புரிந்துகொள்வது என்றால் என்ன? ஒரு பாடப்புத்தகத்தைப் படிக்கும்பொழுது, அது கடினமாக இருந்து

புரியவில்லை என்றால், பல முறை படித்துப் பார்க்கின்றோம், அல்லது யோசனை செய்கிறோம் அல்லது தெரிந்தவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறோம். இவை மனத்திற்குரிய மனிதனின் செயல்கள்.

அதற்குப் பதிலாக புத்தகத்தை வைத்து விட்டு மனத்தை எண்ணமற்ற மௌனத்தை நாடச் செய்தால், மௌனம் ஓரிரு நிமிஷம் பலித்தாலும், மீண்டும் புத்தகத்தைப் படித்தால் புரியும். இது மௌனத்தால் புரிந்து கொள்வது எனப் பொருள். மௌனம் ஞானத்திற்குத் தியானம் மூலம் மனத்தை உயர்த்த முடியும் என்பதால், இம்முறையைக் கையாளலாம். புரிந்துகொள்ளச் செய்த முயற்சி என்றாலும், மனம் உயர் மனத்திற்கு இதன் மூலம் உயருகிறது. இது ஜீவியம் மனத்திலிருந்து ஒரு படி உயர்வதாகும். எனவே ஜீவியம் பரிணாம வளர்ச்சியுற வேண்டும் என்ற யோகத் தத்துவத்தை நம் போன்றவர்க்குச் சொல்லும்பொழுது சிந்திக்காமல் புரிந்துகொள்ள வேண்டும் எனலாம்.

9. உனது உண்மையான ஜீவனைக் காண வேண்டும்.

ஜீவாத்மாவே நாம். நம் ஆசையை நாம் ஆன்மா (desire soul) என்று அறிகிறோம். ஆசை உண்மையான ஆன்மா இல்லை. ஜீவாத்மா உண்மையான ஜீவன். அதன் பிரதிநிதியான சைத்தியப்புருஷன் நம் உண்மையான ஆன்மாவாகும். எனவே நாம் சைத்தியப்புருஷனைக் கண்டுகொண்டால் அது உண்மையான ஆன்மாவைக் கண்டுகொண்டதாகும். இதை மேலும் எளிமையாகச் சொல்ல முடியுமா?

ஆசைக்குக் கண்ணில்லை, வெட்கமும் இல்லை. ஆசை மனிதன் கண்ணையும் மறைக்க வல்லது. அறிவு unconscious) கண்மூடிச் செயல்படுவதாக பகவான் எழுதுகிறார். சைத்தியப் புருஷன் (conscious) தன்னையறியும் திறனுள்ளது, பிறரை

அறியும் தன்மையுடையது, நிகழ்ச்சிகளையும், செயல்களையும், அவற்றின் தன்மையையும் அறியக் கூடியது. நம்மைச் சுற்றி நடப்பவற்றையும், நம்முடனிருப்பவரையும் நாம் அறிந்தால் அது நம்முள் சைத்தியப்புருஷனை அறிந்ததாகும்.

பத்துவருஷம் பழகிய பிரின்சிபாலும், பேராசிரியரும் பிரிந்தனர். ஒருவர் போக்கு மற்றவருக்கு விந்தையாக இருந்தது. அதாவது ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவில்லை. எஸ்டேட் கணக்குப்பிள்ளையை முதலாளி பார்த்தார். தம் மகனிடம், 'அவனை நம்பாதே' என்றார். கணக்குப்பிள்ளை ஊரில் பிரபலமானவன். அவனுக்குக் கட்டுப்படாத செயலில்லை. மகனுக்குக் கணக்குப்பிள்ளை மீது அபாரப்பிரியம். இருப்பதிலேயே உயர்ந்த ஒரே மனிதனை நம்பக் கூடாது எனச் சொல்லும் தகப்பனார் விவரம் தெரியாதவர் என்று நினைத்தான். 5, 6 வருஷம் கழித்து, கணக்குப் பிள்ளையால் மட்டுமே தொந்தரவுகள் வருகின்றன. பல இலட்சம் நஷ்டமாயிற்று என்று மகன் அறிய முடிந்தது. பிறரை அறியும் இந்த அறிவு பெரும்பாலோர்க்குண்டு. பிறரை அறிய நாம் நம்மை அறிய வேண்டும். இவ்வெண்ணங்களையும், உணர்ச்சிகளையும் உள்ளதுபோல் அறிபவர்க்கு இந்தத் தெளிவுண்டு.

தன்னையும், தன்னுணர்வையும் தவறாது அறிதல் தன்

உண்மையான ஆன்மாவை அறிவதாகும்.

 

விலங்குடம்பில், தெய்வீக வாழ்வு

விலங்குடலில், தெய்வீக வாழ்வு என்பது நூலின் அடிப்படை. அதுவே நூலின் பெயர். கடைசி அத்தியாயம் அதே தலைப்பில் முடிகிறது. உடம்பு ஜடம் (matter). தெய்வீக வாழ்வு என்பது ஆன்மீக வாழ்வு. விலங்குடம்பில் அது முடியாது என முன்னோர்கள் உடலை விலக்கி, ஆன்மாவை

மேலே எடுத்துப் போய் சொர்க்கத்தில் ஆன்மீக வாழ்வு பெற்றனர். இம்மைக்கு மரணம், மறுமைக்குச் சொர்க்கம். பூவுலகில் சொர்க்கமில்லை என்பது மரபு. ஜடமும் ஆன்மா என அறிந்தால் இம் முரண்பாடு இல்லை. எனவே இக்கருத்தை மாற்றி,

ஜடமும் ஆன்மாவும் ஒன்றே

என்று சொன்னால் தத்துவம் மாறி மக்களுக்குப் புரியும் மொழியில் கருத்து எழுகிறது.

ஐன்ஸ்டீன் தத்துவம் ஆரம்ப நாட்களில் உலகில் 10 பேருக்குத்தான் புரியும் என்று பேசினர். பெரிய தத்துவங்களைப்பற்றி இது போல் உலகில் (legend) செய்திகள் உலவுவதுண்டு. அடுத்த நூற்றாண்டில் அவை அனைவருக்கும் புரியும். நூலின் கருத்துகளை வரும் காலத்தில் அனைவரும் எளிதில் விளங்கி ஏற்றுக் கொள்வார்கள் என்பதால், இன்று ஒரளவு அந்நிலையை, கற்பனை செய்து பார்க்கலாம். நூலில் முதற் பகுதியிலிருந்து 150 கருத்துகளை எடுத்துள்ளேன். எவரும் இதிலிருந்து 20 அல்லது 25 கருத்துகளைப் புரிந்து பின்பற்றலாம் 10 கருத்துகளைப் பின்பற்றினாலும், அவை மாற்றம் தரும். வேறு வகையில் மாற்றம் பெற்றவர்கள் இக் கருத்துகளில் பல தங்கள் முயற்சியின்றி தங்கள் வாழ்வில் பலித்ததைக் காணலாம்.

நூலின் கருத்தையும், அவற்றை நாம் புரிந்து கொள்ளக்கூடிய வகையையும் கீழே எழுதுகிறேன்.

நூல் கூறுவது

நாம் அறியும் வகை

1. எண்ணத்திலிருந்து ஜீவியத்திற்கு போவது

மௌனத்தை மனம் நாட வேண்டும்

2. மேல் மனத்திலிருந்து உள் மனத்தையடைய வேண்டும்

சமர்ப்பணம் செய்

3. சைத்தியப்புருஷன் வெளி வரவேண்டும்

அகந்தையை அழிக்க வேண்டும்

4. அகந்தையை அழிக்க வேண்டும்

பரந்த நோக்கம் தேவை

5. ஜீவியம் பரிணாம வளர்ச்சி பெற வேண்டும்

சிந்தனையின்றி மௌனமாகப் புரிந்துகொள்ள வேண்டும்

6. வாழ்வில் பிரம்மத்தைக் காணவேண்டும்.

செயலில் வெற்றி காணவேண்டும்

7. ஜடம் ஆன்மாவுக்குக் கட்டுப்படவேண்டும்

புறநிகழ்ச்சிகளை விட்டு அகவுணர்வைத் தேடு

8. அஞ்ஞானத்திலிருந்து ஞானம் எழவேண்டும்

பலன் தரும்படி, செயலைப் பூர்த்தி செய்

9. உன் உண்மையான ஆன்மாவைத் தேடு

தன்னை அறிதல் தேவை

10.விலங்குடம்பில் தெய்வீக வாழ்வு

ஜடமும், ஆன்மாவும் ஒன்று

 

மனிதன் சராசரிக்குக் கீழேயும், மேலேயும் இருக்கிறான், சராசரியை ஒரு கோடு எனக் கொண்டால் கோட்டிற்கு மேலேயுள்ளவரைப் பற்றியே இக் கட்டுரையில் எழுதுகிறேன். கோட்டிற்குக் கீழேயுள்ளவர் இம் மாற்றத்தை விழைந்தால் முதலில் அவர்கள் கோட்டிற்கு மேலே வரவேண்டும்.

மாற்றம் என்பது கோட்டிற்கு மேலே வந்து, நல்லவராக இருந்து, உயர்ந்த இலட்சியங்களுக்காக வாழுதல் எனக் கூறலாம்.

கோட்டிற்கு மேலே போவது என்பதை முரண்பாடுகளை விட்டகலுதல் எனக் கூறலாம். நாம் எதிரி என நினைப்பவரின் கருத்தும், நம் கருத்தும் எதிர் மறையாக இருக்கும்பொழுது, அவர் கோணத்தில் நாம் பிரச்சினையைப் புரிந்து கொள்ள

முயன்றால், அப்பரந்த மனப்பான்மை நம்மைச் சிறிய முரண்பாடுகளிலிருந்து உயர்த்தி, கோட்டிற்கு மேலே அழைத்துச் செல்லும். அந்நிலையில் நம் மனத்திண்மை உயரும். எதிரியின் பக்கமுள்ள நியாயம் விளங்கும். அதன் மூலம் பிரச்சினையும் தீரும்.

கோபம் கூடாது என்பதைக் குறள், செல்லாத இடத்துச் சினம் தீது, செல்லும் இடத்திலும் அதைப் போன்ற தீமையில்லை என்று கூறுகிறது. ஒருவர் மீது குறையிருந்தால், அதைச் சொல்வதால் அவர் மனம் புண்படும் என்பதால் சொல்லக் கூடாது. இல்லாத குறையைச் சொல்வது பொய்யாகும். எனவே குறையை எக்காரணத்தை முன்னிட்டும் சொல்லக் கூடாது என்றாகும். ஏன் குறையுள்ளவர் மீது குறை சொல்லக் கூடாது? இருப்பதைச் சொல்வதில் என்ன தவறு என மனம் நினைக்கலாம்?

சைத்தியப்புருஷன் வெளி வருதலைப் பற்றி அன்னை எழுதிய கட்டுரையில் (Psychic Education) அதற்குரிய 10 சட்டங்களைக் கூறுகிறார். அதில் 4 - ஆம் சட்டம்,

'உன்னால் குறையுடைய ஒருவரைத் திருத்த முடிந்தால் திருத்த வேண்டும். முடியாவிட்டால் அவர் மீது குறை சொல்லக்கூடாது'' என்பதாகும்.

  • நாம் பிறரைத் திருத்த ஏராளமான பொறுமையும், திறனும், சக்தியும் தேவை. அப்படி நம் பொறுப்பில் உள்ளவரை மட்டும் திருத்தும் உரிமை நமக்குண்டு. குறையை வெளியிடாவிட்டால், இந்தச் சக்தியை நாம் இழப்பதில்லை. வெளியிட்டால், அதை நாம் இழந்து விடுகிறோம். அவரைத் திருத்தும் வாய்ப்பை இழப்போம். அத்துடன் குறை சொல்லும் பழக்கம் நம்மிடம் நிலைத்துவிடும்.

  • குறையில்லாதவர்க்குப் பிறர் குறை கண்ணில் படுவதில்லை. நமக்குள்ள குறையை நாம் பிறரிடம் கண்டால், அது நமக்குப் புரியும். பிறர் குறை தெரிகிறது, அதைச் சொல்ல முனைகிறோம் எனில், அதே குறை நம்மிடம் இருக்கும். அல்லது அது போன்ற வேறு குறையிருக்கும்.
  • பொறாமைப்படுபவர் பிறர் மீது இல்லாத குறையைச் சொல்கிறார். உண்மையில் ஒருவருக்குக் குறையிருந்து, அவர் மீது நமக்குப் பொறாமை ஏற்பட்டால், நாம் அக்குறையை விரும்பிச் சொல்கிறோம். உண்மையில் நாம் சொல்வது குறையில்லை. 'எனக்கு அவர் மீது பொறாமை' என மறைமுகமாக அறிவிக்கின்றோம்.
  • பெருந்தன்மை நல்லதை மட்டும் சொல்ல முனையும். அதனால் கெட்டதைச் சொல்ல முடியாது. பிறர் குறை எனினும் பெருந்தன்மையால் அதைச் சொல்ல முடியாது. நம்மிடம் உள்ள சிறிய புத்தியால் மட்டுமே அதைச் சொல்ல முடியும். குறை சொன்னால் நம்மிலுள்ள சிறிய புத்தி வளரும்.
  • வாழ்வில் சாதிக்க முடியாதவருண்டு. அவரால் தம்மைக் குறைகூற முடிவதில்லை. அதனால் சாதிக்க முடியாதவர்கள், பிறரைக் குறை கூறுவார்கள்.
  • கெட்டிக்காரர்கள் வாழ்வில் ஒரு குறையிருந்தால், அவர்கள் பிறரைக் குறை கூற மாட்டார்கள். ஏனெனில் அதன் மூலம் பிறர் இவர்கள் குறையை வெளிப்படுத்துவார்கள். தம் மீது குறையிருந்தும், பிறர் அதைச் சுட்டிக் காட்டுவார் என அறிய முடியாதவர், பிறர் குறையைச் சொல்லி வம்பில் மாட்டிக் கொள்வார்கள். தற்காப்புக்காகவாவது இப்படிப் பட்டவர்கள் பிறரைக் குறை சொல்லக்கூடாது.

 

  • மனம் நல்லதை, பெரியதை நினைத்தால் அது வளரும். குறை நம்முடையதானாலும், அதையே நினைத்தால் அது வளரும். பிறர் குறையை நினைத்துக் குறையை வளர்ப்பது சரியில்லை.
  • நெருங்கிய நேரம் இதுவரை வெளியிடாத இரகஸ்யங்களை முக்கியமானவரிடம் வெளியிடுவதுண்டு. அப்படிச் செய்தாலும், அதன் பின் அவர்களைப் பார்க்குந்தொறும் தாங்கள் சொல்லிய இரகஸ்யம் நினைவுக்கு வருவதால், அவர் மீது துவேஷம் ஏற்படும். அதனால் குறை சொல்வதுண்டு.
  • நம் குறையை மீறி அருள் செயல்பட விரும்பினால், நம்மை நிறைவு மூலம் அருள் நாட முடியாது. குறை மூலமே நாடி வர முடியும். குறை நம் கண்ணில் பட்டால், அருள் நம்மை நாடி வருகிறது என இது போன்ற சந்தர்ப்பத்தில் அறிய வேண்டும். வருவதைக் குறையாகக் கண்டால், அருள் விலகும். அருளாகக் கண்டால் பலிக்கும். அதனால் குறை சொல்லக் கூடாது.

மனம் குறையுடையது.

மனம் குறையை உணரக் கூடியது.

மனம் உடையவரால், குறை சொல்லாமலிருக்க முடியாது.

மனத்தைக் கடந்து, ஆன்மாவைத் தொட்டவராலேயே குறை சொல்லாமல் இருக்க முடியும்.

பூரணயோகத் தத்துவப்படி நம் மனத்தில் குறையில்லாமல் பிறர் மீது குறை சொல்ல முடியாது.

சூன்யம் வைத்த உடன்பிறந்தவர், துரோகம் செய்த மனைவி, கொலை செய்ய முனைந்த பெற்றோர், மானத்தை வாங்கிய நண்பன், நன்றி கெட்ட குழந்தைகள்,

வெட்கப்படாமல் கழுத்தறுக்க முன்வரும் முதலாளி, அவருக்குத் துணை நிற்க ஆசைப்படும் சக ஊழியர், பிறரை அழிப்பதில் சுவை கண்ட ஊரார், கைவிட்ட கணவன், நல்லது கெட்டதை அடியோடு மறந்து தம் ஆசையைத் தவறாகப் பூர்த்தி செய்யும் ஊழியர், சௌகரியத்தை மட்டும் பாராட்டும் உறவினர் மீதும் குறை சொல்லும் மனம் குறையுடையதாகும்.

அன்னை சமாதியடைந்தபொழுது அவருடல் தியான மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஆசிரமத்தில் வசித்த பக்தர் ஒருவர் வரிசையில் அங்கு வந்தபொழுது தம் உடல் உள்ளிருந்து பொன்னாகப் பூரிப்பதைக் கண்டார். வரிசையை விட்டு வெளி வந்து அன்னை முன் அமர்ந்தார். உடலெங்கும் தேனால் நிரப்பப்படும் உணர்வு பெற்றார். உடல் அங்கிருந்த மூன்று நாளும் அவர் அதனெதிரில் அமர்ந்து அந்த ஆன்மீகப் பூரிப்பை அனுபவித்து (as if i am covered with warm honey all over) தேனின் தீஞ்சுவையால் தாம் சூழப்படுவதாகச் சொன்னார். விழிப்புற்ற ஆன்மா, அகந்தையால் தீண்டப்படாத நிலையில் உணரும் அனுபவம் இது. அன்னையைக் கட்டி அணைத்துக் கொள்ள ஆசைப்படும் பக்தை அதுபோல் பிரார்த்தனை செய்வது வழக்கம். ஒரு நாள் வீட்டில் அழைப்பை மேற்கொண்ட பொழுது அன்னையின் கை தம் கையைக் கெட்டியாகப் பிடித்து வருடிக்கொடுப்பதை அவர் நெடுநேரம் உணர்ந்தார். சூட்சும உடலோடு அன்னை தொடர்பு கொள்ளும் நேரம் இது. நான் சொல்லும் மாற்றம் அன்னை நம் வாழ்வோடு தொடர்பு கொள்வதால் ஏற்படுவது. சூட்சுமம் அனைவருக்கும் கிட்டாதது. வாழ்வு அனைவருக்கும் உள்ளது.

நாம் பிறருடன் வாதாடும் நேரம் உண்டு. பலன் பலவிதமாக ஏற்படும். நேரடியாக ஒருவருக்கு விளக்கம் சொல்லி பதில் எதிர்பார்ப்பதை விட அதே விஷயத்தை அவரிடம் சொல்வதற்குப் பதிலாக அன்னையிடம் சொன்னால்



book | by Dr. Radut