Skip to Content

13 - யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

யோகசக்தி வாழ்வில் பலிக்கும்  முறைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

71. நல்லபடியாக நடப்பதை ஆழத்திற்குக் கொண்டு போ.

எல்லோரிடமும் நாம் நல்லபடியாகப் பழகுகிறோம் என்று நமக்குத் தெரியும், அனைவரும் ஏற்கின்றனர். அவ்வகையில் எந்த ஆபீஸுக்குப் போனாலும், எந்த விசேஷங்களுக்குப் போனாலும் நமக்கு வேலை நடக்கிறது, நம்மைச் சுற்றிப் பலர் சூழ்ந்து பிரியமாக விசாரிக்கிறார்கள்எனில், அங்கு நாம் மேலும் செய்யக்கூடியதுண்டு.

இதனுள் உள்ள தத்துவங்கள் சில:

 1. இது மேலெழுந்தவாரியான பழக்கம். நிலைமை உயர்ந்தபொழுது நம் பழக்கமும் உயராவிட்டால், இது எதிராக மாறும் வாய்ப்புண்டு.
 2. இந்த நல்ல பழக்கத்தை ஆழத்திற்குக் கொண்டுபோனால், அன்னை நம்மை MLAயிலிருந்து மந்திரியாக மாற்றுவதுபோன்ற மாற்றங்களைக் கொண்டுவருவார்.
 3. இந்த நல்ல பழக்கம் ஆழத்தில் எதிரான பழக்கமிருப்பதால் ஏற்பட்டதாகும்.

அனைவரும் நம் பழக்கத்தை ஏற்கும்பொழுது, நமக்கு மட்டும் இது நம் பழக்கமன்று.  உள்ளே நான் எதிராக இருக்கிறேன்எனத் தெரியும். சமயத்தில் நாம் நம் உண்மையை மறந்து, பிறர் சொல்வதையே ஏற்றுக்கொள்வோம். அதைச் செய்தால், அத்துடன் எல்லாம் முடிந்துவிடும்.

 • உள்ளே உள்ள 'பழக்கத்தை' நாம் நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கவேண்டும்.  பிரமோஷன் வந்தவரைப் பாராட்டும்பொழுது நம்மனம் அதை வெறுத்துக் கரித்துக் கொட்டும்.  வாழ்க்கை அதைக் காட்டத் தவறாது.  அந்த நேரம் ஒருவர் கதவைச் சாத்துவார். பாராட்டுப் பெறுபவர் விரல் நசுங்கும்.  இது நம் 'எண்ணத்தைப்' பிரதிபலிக்கும்.  வராண்டா வழியே பேசிக்கொண்டு போகின்றவர்கள் "இத்தனையும் வேஷம், நம்பாதே" என அவர்கட்குள் பேசிக்கொள்வார்கள்.  அது நம்மனநிலையைக் காட்டும்.
 • ஒவ்வொரு தரம் பிறர் நம்மைப் பாராட்டும்பொழுது உள்ளேயுள்ளதை நினைவுபடுத்திச் சமர்ப்பணம் செய்யவேண்டும்.  சமர்ப்பணம் உதட்டளவிலிருந்தால் வருஷம் 20 ஆனாலும் எதுவும் நகராது.  உண்மையான சமர்ப்பணம் உடலையே உலுக்கும். தொடர்ந்து செய்தால் சில நாட்களில் உள்ளே சந்தோஷம் வரும்.  அதே நேரம் அன்னை செயல்படுவார்.
 • அப்படி அன்னை செயல்படும்பொழுது கம்பனி சேல்ஸ்மேன் MLAஆகி, அடுத்த பீரியடில் மந்திரியானதுபோலிருக்கும்.
 • டிகிரியும் எடுக்காதவருக்குப் பல்கலைக்கழக சிண்டிகேட் மெம்பர் கிடைக்கும்.
 • ஆழம் அற்புதம்.
  அற்புதம் செயல்பட அன்னை கண்ணில் நம் ஆழம்பட வேண்டும்.
  ஆழத்தின் உண்மை தவறாது, அன்னை தவறமாட்டார்.
  அற்புதம் வரக்காத்திருப்பது தவறாது. அதற்குத் தவறத் தெரியாது.

நம் உண்மை தவறக்கூடாது.

72. உன்னை அழிக்க விரும்புபவன் தரும் பெரிய பரிசை மறுத்துவிடு.

உன் சொத்தைப்போல 10 மடங்கு சொத்தை வலிய உனக்குத்தர அன்புடன் ஒருவர் கூறுவதை எப்படி மறுக்க முடியும்?

உனக்கு வரஇருக்கும் உலகப்புகழை அச்சொத்து அழிக்கும்என்று தெரிந்தால் அதைப்பெறலாமா? பெற முடியுமா?

அதை ஏற்க மறுக்கும் எண்ணம் அருள்.

வாழ்க்கையில் இதை மனிதன் தெரிந்து செய்வது குறைவு.

தானே நடப்பதைத் தலைவிதிஎனக் கொள்கிறான்.

தகுதிக்கு மேல் வரும் பரிசை, அதிர்ஷ்டம்என ஏற்பது வழக்கம்.

பெறும்பொழுது மனத்தைச் சோதனை செய்தால் பின்னால் வரப்போகும் பெரிய நஷ்டத்தை மனம் தன்உணர்ச்சியால் வெல்லும்.

அதேபோல் அன்னையிடமிருந்து வருவதைப் பெரும்பாலோர் அடக்கமாக மறுத்துவிடுவர்.  அதை ஏற்பது ஆத்ம விளக்கம் தரும்.

மனிதன் மறுக்க வேண்டியதை ஏற்பான்; ஏற்க வேண்டியதை மறுப்பான்.

பிரதம மந்திரி பதவி, முதலமைச்சர் பதவி சிறிய மனிதர்களை அழித்தது உண்டு. பாரம் தாங்கும் பர்சனாலிட்டி வேண்டும்.

வாழ்வில் இப்படி எவரும் நடப்பார்என எதிர்பார்க்க முடியாது.

தகப்பனார் மத்திய மந்திரியாக இருந்தவர்.  மகன் முனிசிபல் சேர்மனாக ஆசைப்பட்டு, பிரம்மப்பிரயத்தனப்பட்டு  ஜெயித்தான்.  கவுன்சில் நடைமுறையில் அவனுக்குக் கேவலமான திட்டு கிடைத்தது . ராஜினாமா செய்தான்.

கொடுத்தால் பெறக்கூடாததை இந்த அப்பாவி தேடிக் கண்டுபிடித்து எதிர்காலத்தை நாசம் செய்து கொண்டான்.

இந்தநிலைமை இலட்சியவாதிக்கு வருவதற்கும், சாமான்யனுக்கு வருவதற்கும், ஆத்ம விளக்கம் பெற்றவனுக்கு வருவதற்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்த்துப் புரிந்துகொள்ளுதல் பலன் தரும்.

ஒரு படி உயர வாழ்நாள் முழுவதும் காத்திருக்கவேண்டிய உயர்வை 6 படி உயர்த்தித் தேடிவந்து வாழ்வு தருகிறது.  அது இலட்சியவாதியின் நிலை.

சாமான்யனுக்கு 100 மடங்கு சொத்தாக வருகிறது.

இறைவனே சாவித்திரிக்கு அதுபோன்ற பெரிய பரிசை சொர்க்கலோக வாழ்வாக அளித்தார். அவள் மறுத்துவிட்டாள்.

இது எல்லோருக்கும் நடப்பதில்லை.

அடுத்த லோக அற்புதம் ஆண்டவனால் அனுமதிக்கப்பட்டபின், வாழ்வு அப்படிப்பட்டவர்க்கு இதை அளிக்கும்.

சிறியவர், பெரியவர், நல்லவர், கெட்டவர், அனைவருக்கும் சட்டம் ஒன்றே.

73. ஒரு குறையை அடிபட்டவர் திருப்திப்படும் அளவுக்கு அகற்று.

ஒரு குறை நமக்குக் குறையெனத் தெரிய அக்காரியம் கெட்ட பிறகே தெரியவரும். பிரமோஷன் தகுதியுள்ளவரை விலக்கி, தகுதியற்றவருக்குக் கொடுத்தது மனத்தில் படாது.  காரியம் கெட்டுப்போய், தகுதியற்றவன் நிலை தடுமாறும்பொழுதுதான் அது தெரியும்.  ஒரு பையனைத்தான் படிக்கவைக்க முடியும்என்றால், படிப்பு வரும் பையனை விட்டு,  நமக்கு வேண்டிய பையனைக் காலேஜில் சேர்த்து, அவன் முடிக்காமல் வந்தபின்தான் தவறு தெரியும்.  அப்பொழுதும் அது தெரியாதவருண்டு. அவனுக்குத் திசை சரியில்லை, இல்லாவிட்டால் டிகிரியுடன் வந்திருப்பான் என்பார்கள்.  புத்திசாலிப் பையனைப் படிக்க வைக்கவில்லை.  அவன் சர்க்காரில் குமாஸ்தாவாக இருக்கிறான்.  படிக்க வைத்தவனுக்குப் படிப்பு வரவில்லை. வருடம் 4 போயிற்று.  இந்த நிலையில் குறையை ஒருவர் உணர்ந்தால், செய்வதற்கு ஒன்றில்லை. அடிபட்ட மகனுக்கு, "இப்பொழுதாவது என்னைத் தகப்பனார் நினைக்கிறாரே" என்று ஆறுதல் வரும்.

அன்பர்கட்கு முழுநிலைமையும் சீரடையும்; சற்று உபரியும் வரும்.

அதற்குரிய முக்கிய நிபந்தனை: தவற்றை மனம் உணர வேண்டும்.  தவற்றைச் செய்தவர் உணர்ந்தால் நஷ்டப்பட்டவருக்கு ஆறுதல் வரும்.  நஷ்டப்பட்டவர் மனம் திருப்திப்படும் அளவு தவறு செய்தவர் உணருவது - சொல்லை விலக்கி, செயலையும் விலக்கி, மனத்தால் மாறினால் - sincerity உண்மை. அந்த உண்மை பூரணம் பெறும்வரை மனம் அமைதியாக இருக்கும்.  பலன் வாராது.  பூரணமான அதே நேரம் நிலைமை மாறும்.  சர்க்காரில் குமாஸ்தாவாக வேலை செய்பவனுக்கு special selection புதுச் சட்டப்படி டிகிரி எடுத்திருந்தாலும் எது கிடைக்காதோ அந்த வேலை தேடிவரும்.  இது தவறாது நடக்கும். ஆசிரியராக ஓய்வு பெற்றவர்க்கு பாங்க் ஏஜெண்ட் வேலை தேடிவந்தது.  முதல் வருஷம் கல்லூரிப் பரீட்சையில் பெயிலானவர் டெபுடி கலெக்டர் ஆனார்.  அவை வாழ்வில் நடந்தவை. அன்னையிடம் அன்னை முத்திரையுடன் நடப்பவை நடந்தபின்னும் நம்ப முடியாது. 

 • குறையைக் குறையாக உணர்வது reversal  தலைகீழ் மாற்றம்.
 • அறிவு மனநிம்மதி தரும்.
 • உணர்வு சூழலை மாற்றும்.
 • அடிபட்டவர் மனம் திருப்திப்படுவது சூழல் நிலைமையை மாற்றும் அளவுக்குத் திறன் பெறும்.
 • மனம் மாறும் நேரமும், நிலைமை மாறும் நேரமும் ஒன்றாக இருக்கும்.
 • தெரியாமல் செய்த தவற்றால் ஏற்பட்ட குறை ஒன்று.
 • வேண்டுமென்றே செய்த தவற்றால் ஏற்பட்டது வேறு குறை.
 • மனமாற்றம் செயலுக்குத் தகுந்தாற்போலிருக்க வேண்டும்.
 • அப்படி மாறும் நேரம் அற்புதம் நிகழும் தருணம்.
 • மனத்தின் ஆழ்ந்த உணர்வு, சூழல் செயலை மாற்றும் திறனுடையது.
 • அவை சந்திக்குமிடம் சூட்சும வாழ்வு. 

74. அழிச்சாட்டியத்தை ஆதரிக்க வேண்டும்.

இந்த முறை வாழ்க்கைக்குரியதன்று. வாழ்வைக் கடந்தது.  இவை வாழ்வில் வரக்கூடாது.  வந்தால் அதற்கு முடிவில்லை.  அதற்கும் அன்னையிடம் முடிவுண்டு என்பது இம்முறை.

தமிழ்நாட்டிலேயே முதன்மையான செல்வர் 1960இல் "நான் எதுவும் சம்பாதிக்கவில்லை.  தகப்பனார் கொடுத்ததைக் காப்பாற்றினேன்" என்றார்.

அவர் மகன் உலகில் ஒரு பெருநகரம் தவறாமல் ரேஸ் நடத்துகிறான்.

50ஆம் வயதில் 6 பிள்ளைகளை விட்டுவிட்டு 3 பிள்ளைகள் உள்ள பெரிய மனிதன் மனைவியைத் திருமணம் செய்து பகிரங்கமாக வாழ்கிறார் ஒருவர்.

பெரிய முழுச் சொத்தையும் அதிவிரைவில் அழித்து ஆனந்தப்படுகிறான் ஒரு சிறுவன்.

எந்த எந்தக் குற்றங்களைச் செய்யக்கூடாதோ, அத்தனையும் கணவர் ஒன்றுவிடாமல் செய்து பெருமைப்படுகிறார்.

இதுபோன்ற செய்திகளை 50 ஆண்டில் ஒன்று கேள்விப்படுகிறோம். அவற்றைத் தீர்க்க முடியாது.

அவர் செயல் அருணகிரிநாதர் செயல் போன்றது.

இப்படிப்பட்ட சிக்கல் உள்ளவர் அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவர்மூலம் பிரச்சினையைத் தீர்க்க முன்வந்தால் முதற்காரியமாக "நமக்கு இது தவறு. ஆண்டவனுக்கு இது தவறில்லை" என்பதைப் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன்பின் அவர் செய்வதை மனதாலும் வெறுக்காமல், ஏற்று ஆதரிக்க வேண்டும். அதே நிமிஷம் மனம் மாறும், நிலைமை மாறும், அனைத்தும் மாறும். என்அனுபவத்தில் இப்படிப்பட்ட நிலைமைகள் பல எழுந்துள்ளன. அவை எனதுவாழ்வுக்குள் ஏற்பட்டவையல்ல.  என் பார்வையில், பொறுப்புக்கு வெளியில் எழுந்தவை.  ஒரு விஷயத்தில் நான் அதை ஏற்று மனதால் ஆமோதித்துக் கடிதம் எழுதினேன். பதிலுக்கு வாழ்க்கையை தலைகீழே மாற்றி, வாழ்வின் பாதைக்குள் வந்துவிட்டதாகச் செய்தி வந்தது. நான் ஏற்றவை அத்தனையும் சிறிது காலம் அல்லது நீண்ட நாளில் மாறிவிட்டன.  பிறருக்குக் கொடுமை செய்வதையே ஆனந்த அனுபவமானவர் உறவை - தேவையில்லாததை - யோகப்பயிற்சியாக ஏற்றேன். பலன் உடனே தெரிந்தாலும், முழுப்பலன் எழ 14 வருஷமாயிற்று. அவர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் உலகம் வியக்கத்தக்க மாற்றம். 

 • இதையும் கடந்த பொய்யின் இருள் உண்டு.
 • அதை mean, perverse, falsehood கயமையான குதர்க்கத்தின் இருண்ட பொய் எனலாம்.
 • அவை வாழ்வில் வருவதில்லை. யோகத்தில் ஒரு கட்டத்தில் வரும்.
 • அவர்கள் தங்களை அறிவார்கள். பிறரைப் பொறி வைத்துப் பிடித்து கொடுமைப்படுத்துவார்கள்.  அவர்களை மாற்றுவது யார் கடமையும் இல்லை. அவர் பிடியில் சிக்கியவர் விடுதலை பெறும் வழி அவரை மனம் ஆமோதித்து ஏற்பது.
 • அநியாயம் ஆண்டவன் நியாயம் என்பது இச்சட்டம்.  

தொடரும்....

 

அருள் செயல்படும் வகை

 

மனிதனுக்குப் பிடிக்காதவற்றுள் தலையானது அருள்.  பொதுவாக மனிதன் அருளைவிட்டு விலகுவான். அருள் பொருட்படுத்தாது. போன ஜென்மத்தில் ரிஷியாக இருந்தவர், புண்ணியம் செய்தவர், தன் நல்ல குணத்தைத் தாமே அறியாதவரை அருள் தொடரும்.  மனிதன் முயன்று விலகுவான்; கோபப்படுவான்; அருள் தனக்குத் துரோகம் செய்கிறது என்பான். அவன் விலகும்பொழுது ஏதாவது ஒரு வகையில் அருள் தொடர்பை நீடிக்கும்.  அதையும் முயன்று துண்டிப்பாருண்டு.

அன்பருடைய தொடர்பு அருள்

என்பதை உறவும், நட்பும் அறியாது. அன்பரை உறவாக நடத்தி வம்பு செய்வார்கள். அப்படிப்பட்ட தொடர்பு ஒன்று, உறவு நெருக்கமாக இருந்த நாளில் அன்பருக்கு ஜாமீனாக ஒருவர் சொத்து வந்தது.  அவ்விவகாரம் முடிந்தவுடன் சொத்திற்குரிய பத்திரம் உடையவருக்குப் போனால், அருள் தொடர்பு அறும்.  பத்திரம் கையிலிருந்திருந்தால், அச்சொத்து பல லட்சங்கட்கு, பல ஆண்டுகட்கு முன்பாக விற்கப்பட்டு இருக்கும்.  இன்று அதன் மதிப்பு பல கோடி. இது அருள் செயல்படும் வகை. 

 • உறவு பத்திரம் மூலமாக வருவது physical relation கடைசி நிலை.
 • உறவு உணர்வாக எழுவது உயர்ந்தது.
 • மனம் உறவின் பொருளை அறிந்து ஏற்பது அதனினும் சிறந்தது.
 • ஆன்மாவில் உறவு என்பது நன்றியறிதல்.
 • நன்றியறிதல் இருப்பது உண்மையானால், பத்திரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒன்றே. இல்லாதபொழுது உள்ளுணர்வு உயர்வாக இருக்கும். 

******

உப வருமானம்

 

     கணவனும், மனைவியும் ஆபீஸ் வேலை செய்கின்றனர். கணவர் திறமைசாலி. ஒரு வேன் இருந்தால் வாடகை வருமானம் வரும்என, வேன் வாங்க முயன்றார். அதன் விலை 6 இலட்ச ரூபாய்.  பாங்க் 3 இலட்சம்வரை கொடுக்க முன்வருகிறது. பலனில்லை. இருவரும் கலந்து ஆலோசித்தனர். வழி புரியவில்லை. கொஞ்ச நாட்கள் கழித்து பெண் ஆபீஸில் Secretயைப் பற்றிப் பேச்சு நடந்தது.  வீடு வாங்கப் பிரியப்பட்டவர் வீட்டைப் படமாக எழுதினார்.  பல ஆண்டு கழித்து அவர் வாங்கிய வீடு படத்தின் வீடாக அமைந்தது.   1 மில்யன் டாலர் சம்பாதிக்க ஆசைப்பட்டவர் அதுபோல் ஓர் உபாயம் கைக்கொண்டார் என்றெல்லாம் பேசினார்கள்.  அதன் தத்துவம் "நாமும், பிரபஞ்சமும் ஒன்றே.  நாம் அதனின்று பிரிந்து உள்ளோம். நமக்கு முடியாதது பிரபஞ்சத்திற்கு முடியும். அதைக் கேட்டால் தரும். அதற்குரிய உபாயம் உதவும்".

     "எனக்கு 6 இலட்சம் வேண்டும். பிரபஞ்சம் தருமா?  தரும்எனில் என்ன உபாயம்?" எனக் கணவர் கேட்டார்.  ஒரு செக்கில் 6 இலட்சம் என எழுதி வைத்தார்.  ஒரு சில வாரம் கழித்து, இப்படிப்பட்ட அன்பர்கட்கு உதவும் ஸ்தாபனம் ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டு அவர்களை அணுகினார்.

அவர்கள் 6 இலட்சம் தர இசைந்தனர்.

******book | by Dr. Radut