Skip to Content

09 - முன்னேற்றம் தரக்கூடிய சாதனை

முன்னேற்றம் தரக்கூடிய சாதனை

N. அசோகன்

 

     நாமெல்லாம் அன்னை பக்தர்கள் என்னும்பொழுது நாம் தொடர்ந்து முன்னேறிகொண்டிருக்க வேண்டும் என்று அன்னை விரும்புவார்.  முன்னேற்றம்என்ற வார்த்தையை அவர் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் பயன்படுத்துகிறார்.  அன்னையிடம் ஆரம்பத்தில் அன்பர்களாக வருகின்றவர்கள் நாளடைவில் சாதகர்களாக மாற முயல்வார்கள் என்று அவர் எதிர்பார்க்கின்றார். அப்படிச் சாதகர்களாக மாறியபின்பு நாளடைவில் திருவுருமாற்றத்திற்கான தீவிர முயற்சியில் இறங்குமளவிற்கு அவர்கள் தம்முடைய இறையார்வத்தையும் வளர்த்துக்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கிறார்.

     அன்னையிடம் வந்துள்ள எல்லா அன்பர்களும் அன்னையின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்கள்என்று சொல்ல முடியாது. அன்பர்களாக வந்துள்ள பலபேர் அந்த அன்பர்என்ற நிலையிலேயே தங்கிவிடுகின்றார்கள்.  குடும்ப வாழ்க்கையில் பிடிப்புகள் பலமாக இருப்பதால், அவற்றை மீறி ஆன்மீகத்திற்கு முழுமையாக வர பலரால் முடிவதில்லை. அன்பர்என்ற நிலையிலேயே தங்க முடிவு செய்கின்றவர்களுக்கு முன்னேறுவதற்கோ, சாதிப்பதற்கோ வாய்ப்புகள் இல்லைஎன்று சொல்ல முடியாது.  சாதாரணச் சமூக வாழ்க்கையிலும் முன்னேறுவதற்கும், சாதிப்பதற்கும் நிறைய வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் இருக்கவே செய்கின்றன. அன்னையின் அருளாற்றலைப் பயன்படுத்தி நம்முடைய வருமானம், உத்யோகம், தொழில், படிப்பு, உடல்நலம், குடும்ப வாழ்க்கை என்றெல்லா இடங்களிலும் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வரலாம்.  அன்னையின் அருளை எப்படிப் பயன்படுத்துவது, அதை நம் வாழ்க்கையில் ஆக்கபூர்வமாகச் செயல்பட வைப்பது எப்படிஎன்பதற்கான வழிமுறைகள் நமக்குத் தெரிந்தால் போதும், அவ்வறிவை வைத்துக்கொண்டு நாம் சாதித்துக் காட்டலாம்.

     முன்னேற்றம் மற்றும் சாதனைஎன்ற இரண்டு வார்த்தைகளும் ஒன்றோடொன்று நெருங்கிய கருத்துகளாக அமைந்திருப்பதால், இவ்விரண்டு வார்த்தைகளையும் இங்கிணைத்துப் பேசுகின்றேன். வாழ்க்கையில் முன்னேற விரும்புகின்றவர்கள் சாதனை புரிந்துதான் முன்னேற முடியும். எனக்குத் தெரிந்து சாதிக்காமல் வாழ்க்கையில் முன்னேற வேறு வழிகளிருப்பதாகத் தெரியவில்லை.

     முதலில் முன்னேற்றம்என்ற கருத்தின் தன்மை என்ன, அதிலடங்கி உள்ள விஷயங்கள் என்னஎன்று பார்ப்போம். முன்னேற்றம்என்ற சொல்லிற்கு அர்த்தம் என்னவென்றால், தொடர்ந்து மேலே செல்வதாகும். மேலேஎன்பதை கீழ்நிலையிருந்து மேல்நிலைக்குச் செல்வதாக எடுத்துக் கொள்ளலாம்.  முன்னேற்றம்என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றா, முன்னேற்றமில்லாமல் - இருக்கின்ற நிலையிலேயே தொடர்ந்து இருக்க முடியாதாஎன்ற கேள்விகள் எல்லாம் எழுகின்றன. என்னிடம் இக்கேள்வியைக் கேட்டால் முன்னேற்றம்என்பது தவிர்க்க முடியாததென்று தான் நான் பதில் சொல்வேன். முன்னேற்றமில்லாத வாழ்க்கை பிராணிகளுக்கும், தாவரங்களுக்கும் பொருத்தமாக இருக்கலாம்.  ஆனால், மனிதனுக்கு அறிவும், ஆன்மாவும் உண்டென்னும்பொழுது வளர்ச்சி இல்லாத வாழ்க்கையை வாழ்வதென்பது அவனுக்குச் சரியில்லை.

     இப்படி வளர்ச்சிக்கு உதவக்கூடிய அம்சம் நம் உயிருக்கும், அறிவிற்கும், ஆன்மாவிற்கும் எப்படி வந்துள்ளது என்ற அடுத்த கேள்வி நமக்கு எழுகிறது.  அதற்குப் பதில் பின்வருமாறு அமைகிறது. இவை மூன்றும் சூட்சும விஷயங்களாக இருப்பதால், மூலப்பொருளான பரப்பிரம்மத்திற்கு உண்டான வரம்பற்ற தன்மை (Infinite extension) இவற்றிற்கும் இயற்கையிலேயே உள்ளது. பரிணாமத்தில் தோன்றும் ஜீவராசிகளின் வடிவங்களுக்கும், தோற்றங்களுக்கும் முடிவே கிடையாது.  பரிணாமத்தின் உச்சக்கட்டமாக இன்று மனிதன் காட்சியளிக்கின்றான். ஆனால், மனிதன்தான் பரிணாமத்தின் இறுதி கட்டம்என்று நாம் சொல்வதற்கில்லை. மனிதனுக்குப் பின்னால் சத்தியஜீவிய மனிதன் உருவாகக் காத்திருக்கின்றான். சத்திய ஜீவிய மனிதனுக்குப் பின்னால் ஆனந்தமய ஜீவன் உருவாக வாய்ப்புள்ளது.

    அறிவு அஞ்ஞானத்தினுடைய கருவியாகச் செயல்பட்டாலும், அதனுடைய வளர்ச்சிக்குக்கூட வரம்பே இல்லை. நம் வாழ்க்கையின் கடைசி கட்டம் வரையிலும் படித்தால்கூட எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு விட்டோம் என்று சொல்ல முடியாது. நாம் கற்றதைவிட நாம் கற்க வேண்டியது நிறையவே இருக்கும். நம்மறிவைத் தாண்டி மேலே செல்ல விரும்பினால், முனிவர் நிலை (higher mind), ரிஷி நிலை (illumined mind), யோகியின் நிலை, தெய்வ நிலை (overmind) மற்றும் சத்தியஜீவிய நிலை (Supermind) என்று பல கட்டங்கள் மேலேவுள்ளன.  நம்முடைய சைத்தியப் புருஷனுக்கு இயற்கையாகவே முன்னேறுவதில் ஆர்வமுண்டு. சைத்தியப்  புருஷனுக்கு வளர்ச்சி என்றால், அது முதல் அடங்கியிருக்கும் நிலையில் இருந்து வெளிவர வேண்டும். வெளிவந்த பின்னர் நம் பர்சனாலிட்டியின் மற்ற பாகங்களான அறிவு, உணர்வு, உடம்பு ஆகிய மூன்றும் அதனுடைய ஆதிக்கத்திற்குள் வரவேண்டும்.  இந்நாள் வரையிலும் அது அடங்கி உள்ளது என்றால், நம்முடைய வழக்கமான பர்சனாலிட்டிக்கு அது கட்டுப்பட்டுள்ளது என்றாகிறது.  ஆனால், இப்பொழுது நிலைமையை எதிராக மாற்றி, நம் பர்சனாலிட்டியில் சைத்தியப்புருஷன் தான் ஓங்கி இருக்கிறது என்ற நிலை வரவேண்டும்.  இப்படி முதன்மை நிலைக்கு வந்தபிறகு தன்னுடைய சக்தியை பயன்படுத்தி நம்முடைய அறிவு-உணர்வு-உடம்பு ஆகிய மூன்றையும் பரிசுத்தப்படுத்தி மேலிருந்து வரும் சத்தியஜீவிய சக்தியை ஏற்றுக்கொள்ளும்படித் தயார் செய்யவேண்டும். இம்மாதிரியான ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு ஒரு முடிவே இல்லை. நாம் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கலாம்.

     இப்படி உயிர், அறிவு மற்றும் ஆன்மா ஆகிய மூன்றும் இயற்கையாகவே முன்னேறும் தன்மையுடையன என்பது நமக்குப் புரியும் பொழுது, நாமும் இப்படி ஓர் இடையறா முன்னேற்றத்தை நாடும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளும்பொழுதுதான் வாழ்க்கையின் அணுகுமுறையும், நம்முடைய அணுகுமுறையும் ஒன்றாகிறது.  இப்படி இல்லாமல் வாழ்க்கையின் அணுகுமுறையிலிருந்து நாம் வேறுபட்டு வளர்ச்சியை நாடாமல் இருக்கின்ற நிலையிலேயே இருப்பதாக முடிவு செய்தால் என்னவாகும் என்றொரு கேள்வி எழுகிறது.  இப்படி வளராமலும், அதே சமயத்தில் கீழேயும் போகாமலும், இருக்கின்ற நிலையிலேயே தொடர்ந்து இருக்கும்படியான அமைப்பு வாழ்க்கையில் இல்லைஎன்று அன்னை தெளிவாகக் கூறுகின்றார்.  ஒன்று, முன்னேறிக்கொண்டிருக்கலாம்; அல்லது, முன்னேற்றத்தை நிறுத்தினால் கீழே போகவேண்டி வரும்.

     இடைப்பட்ட நிலையென்று ஒன்றில்லைஎன்பது அவருடைய தெளிவான கருத்து. அன்னை தம்முடைய புத்தாண்டுச் செய்திகள் ஒன்றில் இக்கருத்தைச் சுருக்கமாக, அதே சமயத்தில் தெளிவாகவும் வெளியிட்டு உள்ளார். "மானிடர்களே! தேசங்களே! கண்டங்களே! உண்மை அல்லது பாதாளம்" என்று குறிப்பிட்டுள்ளார். உண்மை என்ற இடத்தில் நாம் முன்னேற்றம் என்ற சொல்லைப் பயன்படுத்தினாலும் அர்த்தம் மாறாமல் பொருத்தமாகவே இருக்கும்.

     நாம் வளர்வதை நிறுத்தும்பொழுது நம்மைச் சுற்றியுள்ள மற்றவை எல்லாம் வளர்வதை நிறுத்தினால், அப்பட்சத்தில் நாமொரு static வாழ்க்கையை வாழ்ந்து காட்டலாம்.  ஆனால், நாம் வளர்வதை நிறுத்தும் பொழுது நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கை வளர்வதை நிறுத்துவதில்லை.  நாம் நிறுத்தினாலும் சுற்றுப்புற வாழ்க்கை தொடர்ந்து வளரத்தான் செய்கிறது.  இதனால் தான் நாம் வளர்ச்சியை நிறுத்தும்பொழுது பின்னிற்கு தள்ளப்படுகிறோம்.  ஒரு பறவைக் கூட்டம் தொடர்ந்து மேலும், மேலும் உயரத்தில் பறக்க முயல்வதை நாம் கற்பனையாக வருவித்துக்கொள்ள வேண்டும். அந்தப் பறவைக் கூட்டத்தில் சில பறவைகள் களைப்படைந்து, ஓய்வெடுத்துகொள்ள நினைப்பதாக வைத்துக்கொள்வோம். நடுவானத்தில் சிறகடிப்பதை நிறுத்தினால், இருக்கின்ற உயரத்தில் தொடர்ந்து இருக்க முடியாது.  பறப்பதை நிறுத்தினால், மீண்டும் தரைக்குத்தான் இறங்க வேண்டும். மிகவும் சிரமப்பட்டு 500 மீட்டர் உயரத்தை எட்டியிருந்தாலும், பறப்பதை நிறுத்திய உடன் ஐந்தே நிமிடத்தில் பறவை தரைக்கு வந்துவிடும்.  வாழ்க்கையில் முன்னேறுவதும் இப்படிப் பறப்பதைப் போன்றதுதான்.  நம்முடைய முன்னேற்றம் தொடர்ந்து நீடித்துக் கொண்டேவிருக்கவேண்டும். முன்னேறுவதை நிறுத்தினோம்என்றால், உடனடியாகக் கீழிறங்க ஆரம்பித்துவிடுவோம்.  பறப்பதை நிறுத்தும் பறவை தரைக்கு வருவதைப்போல நாமும் அடி மட்டத்திற்குச் செல்லவேண்டி வரும்.

     முன்னேற்றம்என்பது தவிர்க்க முடியாதவொன்றுஎன்பதை நாம் இப்பொழுது ஏற்றுக்கொள்ளும்பொழுது, இம்முன்னேற்றத்தை விரைவு படுத்தக்கூடிய அம்சங்கள் என்னென்னஎன்பதை இனி நாம் ஆராய வேண்டும். அதற்குமுன் சாதனைஎன்றால் என்னவென்று, சிறிது விளக்க விரும்புகின்றேன்.

     சாதாரண சமூக வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் சாதனையென்றால் பணம் சம்பாதிப்பதுதான் என்று பெரும்பாலானோர் எடுத்துக்கொள்கின்றார்கள்.  ஆனால், இதுவொரு குறுகிய கண்ணோட்டமாகும். வாழ்க்கையின் மற்ற சூழ்நிலைகளில் இப்படியொரு கண்ணோட்டத்தை வைத்துப் பார்த்தால், அது பொருத்தமாக வாராது. வியாபாரத்தில் லாபம் சம்பாதிப்பதைக் குறிக்கோளாக வைத்துக்கொண்டு தாம் சாதிக்க நினைத்த லாபத்தை எட்டுகின்றவர்களுக்குமட்டும் இது பொருந்தும்.

     ஆனால், வாழ்க்கையில் பல பேருக்குப் பல விதமான லட்சியங்கள் உள்ளன.  இவையெல்லாமே பணம் சம்பந்தப்பட்டதென்று நாம் சொல்லமுடியாது.  கல்லூரியில் படிக்கின்ற மாணவனுக்குச் சாதனைஎன்பது அந்தப் படிப்பிற்கு உண்டான பட்டத்தைப் பெறுவதாகும். தேர்தல் நிற்கின்ற வேட்பாளருக்கு அத்தேர்தல் வெற்றிபெற்று எம்.பி.யாகவோ, எம்.எல்.ஏ. ஆகவோ வருவதுதான் சாதனையாகும்.  ஓர் எழுத்தாளருக்குத் தாம் எழுதுகின்ற நாவல் அல்லது இலக்கியப் படைப்பை எழுதி முடித்துப் புத்தகமாக வெளியிடுவதுதான் சாதனையாகும்.  கல்யாணமாகாத இளவயது பெண்ணிற்குச் சாதனைஎன்பது தான் எதிர்பார்க்கின்ற நிலையில் மணமகன் கிடைத்துத் திருமணம் செய்துகொள்வதாகும்.

     சாதனையென்பதை மாஜிக் மற்றும் வித்தை காட்சிகள் போல நிகழ்த்த முடியாது.  அதற்குப் பின்னொரு முறையிருக்கின்றது. அதை நம்மால் புரிந்து கொள்ளவும் முடியும்; பின்பற்றவும் முடியும். எனர்ஜியை ஆர்கனைஷேஷன் மற்றும் சிஸ்டங்களுக்கு ஆட்படுத்தி, அதையொரு சாதிக்கும் திறனாக (productive power) மாற்றும்பொழுது, இறுதியில் பலனாக நமக்குச் சாதனை கிடைக்கிறது.  இப்படி எனர்ஜி சாதிக்கும் திறனாக மாறும்பொழுது, நம்முடைய ஸ்கில் அந்த எனர்ஜியை பலனாக மாற்றித் தருகிறது.

     பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளை வைத்து நாமிந்தச் செயல் முறைகளை விளக்கலாம்.  பள்ளியில் சேர்வதன் முன்னர் குழந்தைகளின் எனர்ஜி ஒழுங்குபடுத்தப்படாமல் உள்ளது.  அதன் காரணமாக அது பெரும்பாலும் விளையாட்டில் விரயமாகிவிடுகிறது.  படிப்பதன் பொருட்டுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கும்பொழுது படிக்க வேண்டுமென்ற அந்த நோக்கம் ஒழுங்குபடாமருந்த அவர்களுடைய எனர்ஜிக்கு ஒரு டைரக்க்ஷன் கொடுத்து, அந்த எனர்ஜியை ஒரு forceஆக மாற்றுகிறது.  பள்ளிக்கூடத்தை நாமொரு ஆர்கனைஷேஷனாகப் பார்க்கும் பொழுது அதற்கென்று சில ஸிஸ்டங்கள் மற்றும் வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.  இந்த ஸிஸ்டங்களையும், விதிமுறைகளையும் மாணவ, மாணவியர்கள் ஏற்கின்றார்கள். ஆசிரியர்கள் பாடம் புகட்டுவது, படிப்பதற்காகக் கொடுக்கப்படும் பாடப் புத்தகங்கள், பள்ளியின் working hours, பரீட்சை மற்றும் மதிப்பெண்கள் என்றெல்லாவற்றையும் அவர்கள் ஏற்கிறார்கள். இவை எல்லாம் மாணவர்களின் ஒழுங்குபடுத்தப்படாத எனர்ஜியை ஓர் ஆக்கப்பூர்வமான productive forceஆக மாற்றுகிறது. பிள்ளைகளின் கற்கும் திறனும் (learning ability), ஆசிரியர்களின் போதிக்கும் திறனும் இந்த ஆக்கப்பூர்வமான எனர்ஜியைப் பயன்படுத்தி, அதை அறிவாக (knowledge) மாற்றித் தருகின்றன. பள்ளியாகவோ, மருத்துவமனையாகவோ, தொழிற்சாலையாகவே, அரசாங்க அலுவலகமாகவோ, எதுவாக இருந்தாலும் அடிப்படையாகச் சாதிக்கும் முறை மேற்கண்டவாறுதான் அமைகிறது. மருத்துவமனை வியாதி நிவாரணத்தைப் பலனாகத் தருகிறது. தொழிற்சாலைகள் பொருட்களை உற்பத்தி செய்து தருகின்றன. அரசாங்க அலுவலகம் அலுவலக வேலைகளைச் செய்கிறது. ஸ்தாபனம் எதுவாக இருந்தாலும், முக்கிய அம்சங்களான எனர்ஜி, டைரக்ஷன், சக்தி, ஸிஸ்டங்கள், திறமை மற்றும் பலன் என்று எல்லாம் தவறாமல் இருக்கும்.

தொடரும்.....

ஸ்ரீ அரவிந்த சுடர்

நெடுநாளாக நீ அறிந்ததை பேப்பரில் எழுதினால் உடனே அவ்வறிவைப் பெற்று, காரியத்தை நிகழ்த்தும் திறன் பெறுகிறது.

எழுத்திற்கு உயிருண்டு



book | by Dr. Radut