Skip to Content

07 - யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V                                                                                                                                                             (சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

 

909) அநியாயம், பாரபட்சம், கோணல், தீமை, தவறு, குறை, தோல்வி ஆகியவை வாழ்வின் பகுதிகள். சாதாரணத் திறமையைவிட அதிகத் திறமையுள்ளவன் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை.  அவை அவனைப் பாதிப்பதில்லை.  சராசரிக்குக் கீழுள்ளவன் வேலை செய்ய ஆரம்பித்தால், இவை அவனைப் பாதிக்கின்றன.  (Not Self) புறம் அகத்தைவிடப் பெரியது என அவன் காண்கிறான்.

புறம் அகத்தைவிடச் சிறியவனுக்குப் பெரியது.

     மனிதன் தன் கடமைகளை நிறைவேற்ற சாதாரண காரியங்களைச் செய்யவேண்டும். பட்டம் பெறுவது, வேலைக்குப் போவது, திருமணம் செய்துகொள்வது, வீடு கட்டுவது, கார் வாங்குவது ஆகியவை அனைவரும் செய்வது. இது பலருக்கு எளிதாக முடிகிறது; சிலருக்குச் சிரமமாகிறது; ஒரு சிலருக்கு முடியாமற் போகிறது.

 • அகம், புறம் என்பவை இரு பகுதிகள்.
 • அகம் பெரியதானால், அவன் பெரிய மனிதன்.
 • அகம், புறமும் சமமானால், அவன் சாதாரண மனிதன்.
 • அகம் சிறியதானால், அவன் சிறிய மனிதன்.

     பொறாமை பொல்லாதது.  பிறர் வாழ மனம் பொறுக்காது.  பிறர் அழிய செயல்படும். கண் திருஷ்டி என்பது பொறாமை. கண்ணில் விஷயம் பட்டால் கருகிவிடும்.  ஓரூரில் எந்த வீட்டில், எந்த முக்கியமான காரியம் செய்ய வேண்டுமானாலும் வெகு சீக்கிரம் எழுந்து வெளியே போய் காரியத்தை முடித்துக்கொண்டு விடிவதற்குள் வீடு வந்துவிடுவார்கள்.  எவருக்கும் அவர்கள் வெளியே ஓர் காரியமாகப் போனது தெரியாது.

 • சர்க்கரை ஆலை அதிபர், மைத்துனர் பாங்கில் 40 லட்சம் கடன் கேட்டிருக்கிறார்எனக் கேள்விப்பட்டுத் தன் செல்வாக்கால் கடனை ரத்து செய்கிறார்.
 • எளிய வேலையில் உள்ளவன் திறமையைப் பாராட்டி பாங்கு பெரும் பணம் தர அவனை நாடி சாங்ஷன் செய்தால், நண்பர்கள் பாங்கை நாடி அவன் ஆபத்தானவன், வேலையிருந்து டிஸ்மிஸ் ஆனவன், சொத்து அவனுடையது இல்லைஎனப் பயம் காட்டி லோனை ரத்து செய்தனர்.
 • தோட்டம் செழிப்பாக இருப்பதை உற்றவருக்கும், உடையவருக்கும் அழைத்துப் போய்க் காட்டினால், முக்கால் பாகம் அடுத்த மாதம் பட்டுப் போகிறது.
 • செய்தி இப்படிப்பட்டவர் காதில் பட்டால், கண்ணில் பட்டால் போதும், காரியம் கெட்டுவிடும்.

     உலகில் அனைவரும் சாதிக்கின்றனர். எப்படிச் சாதிக்கின்றனர்? இவற்றை எல்லாம் மீறிச் சாதிக்கின்றனர்என்பது உண்மை. மேலும் சில உண்மைகள் உண்டு.

 • திறமை அதிகமானால் திருஷ்டி பக்காது.
 • மனத்தில் பெருமையில்லாவிட்டால், பொறாமை பொய்த்துவிடும்.
 • நல்லெண்ணம் ஏராளமாக இருந்தால், பிறர் கெட்டெண்ணம் பலிக்காது.
 • தைரியமிருந்தால், உலகம் பயம் காட்டுவதற்கெல்லாம் உள்ளே எதுவும் அசையாது. உள்ளே எதுவும் அசையாவிட்டால், வெளியே எதுவும் ஆடாது.
 • திறமை, நிதானம், நல்லெண்ணம், தைரியம் போன்றவை அகமாகும். வேலை, பணம், காரியம் போன்றவை புறமாகும்.
 • அகம் பெரியதானால், புறம் பாதிக்கப்படாது.
 • அப்பொழுதும் ஆரம்பிக்கும்வரை வெளியில் தெரியாமருப்பது நல்லது.
 • அகம் அன்னைக்குரியதானால், புறத்தில் பொறாமை செயல்படுவது தானே விலகிப்போகும்.

*****

910) பரிணாமத்தை மேற்கொண்டவன் தீமையால் மனம் விட்டுப் போவதில்லை. வாழத் தகுதியற்றவனுக்குத் தீமையின் கொடுமை தாங்குவதில்லை.

தீமையின் கொடுமை திறமையற்றவனுக்கு.
திறமை தீமை தரும் அனுபவம்.
தீமை திறமை.

     இரு சிறுவர்களில் ஒருவன் பள்ளிக்குப் போகிறான்.  அடுத்தவன் போகவில்லை எனில் அவன் சுதந்திரமாக விளையாடுவான்.  அடுத்தவன் அழுதுகொண்டே பள்ளிக்குப் போவான். இது அவனுக்குக் கொடுமை. பல ஆண்டுகள் கழித்துப் பள்ளிக்குப் போனவன்  ஆபீசராக இருப்பான். சுதந்திரமாக விளையாடியவன் ஒன்றுமில்லாமல் நிற்பான்.

 • தீமையென மனிதன் அறிவது பள்ளிக்கூடம் போகும் கொடுமை போன்றது.
 • வாழ்வின் உயர்மட்டங்களை எட்டும் இலட்சியம் உடையவனுக்குப் பள்ளிக்குப் போவது கொடுமையில்லை, பயிற்சி.
 • பள்ளி, சமூகத்தில் உயர்வைக் "கொடுமை" மூலம் தரும் "தீமை".
 • தீமை வாழ்வில் மோட்சம் தரும் கடுமை.
  வாழ்வில் மோட்சம்என்பது வெண்கலம்போன்ற உடல்நலம், அபரிமிதமான சுபிட்சம், அமிர்தமான ஆனந்தம் தரும் மனித உயர்வு, அனைத்திலும் ஆண்டவனின் புன்னகையைச் சந்திக்கும் அற்புத திருஷ்டி.

     கிரிக்கெட் விளையாடும் பையனுக்கு வெய்யில் தெரியாது. அக்னி நட்சத்திர வெய்யிலும் அவனுக்குப் பொருட்டில்லை.  விளையாட அனுமதிக்காவிட்டால் அவன் நெஞ்சு கொதிக்கும். விளையாடும்பொழுது விளையாட்டுத் தெரியுமே தவிர, வெய்யில் தெரியாது.

 • எந்தச் செயலும் சிரமத்தைக் கடந்து சாதிக்க வேண்டிய அவசியம் உண்டு.
 • சாதிப்பவனுக்குச் சாதனை தெரியும்; சிரமம் தெரியாது.
 • சாதிக்க முடியாதவனுக்குச் சிரமம் மட்டும் தெரியும்.
 • பிரபலமான அரசியல் தலைவரை இரவு நெடுநேரம்வரை மக்கள் வந்து சந்திக்கிறார்கள். காலையில் அவர் எழுவதற்குமுன் கூட்டம் வந்துவிடுகிறது.
 • மக்களைச் சந்திக்கவும், அவர் பிரச்சினைகளைத் தீர்க்கவும் ஆசைப்படு கிறவர்க்குத் தூக்கமில்லைஎன்ற கஷ்டம் தெரியாது. ஏராளமான பேர் தம்மைத் தேடிவருவது சந்தோஷம் தரும்.                                                                                           அவருக்குத் துணையாக இருப்பவருக்கு கண் விழிப்பது கஷ்டமாக இருக்கும்.
 • இலண்டனில் பிங்கியைச் சந்திக்க வேண்டிவரும்என்ற பேச்செழுந்த பொழுது அந்தச் சந்தர்ப்பம் எழாதுஎன எலிசபெத் விளக்கம் கூறும் வாயிலாக,
  "கிரேஸ் சர்ச்தெரு மட்டமான இடம்.  பிங்லி உள்ளது க்ரோஸ்வினர் தெரு; உயர்ந்தவர் வாழும் பகுதி.  டார்சிக்கு இந்தத் தெரு இருப்பதே தெரியாது.  தவறி அந்தத் தெருவுக்கு வந்துவிட்டால் ஒரு மாதம் பிராயச்சித்தம் செய்ய வேண்டிவரும்.  டார்சியில்லாமல் பிங்லி வெளியே கிளம்பமாட்டார்" என்று கூறுகிறாள்.

     கிரேஸ் சர்ச்தெரு மத்தியதர மக்கள் வாழுமிடம்.  கிழக்கு மூலை என்பது குடிசை வாரியம்; ஏழைகள் வாழுமிடம். டியா அங்குப் போய் மறைந்திருந்தாள்.  அதுவே லிடியாவுக்கும், விக்காமுக்கும் உரிய குகை. அவர்களைத் தேடி டார்சி எலிசபெத்திற்காக அங்குப் பல முறை செல்கிறான்.  தானே கிரேஸ்சர்ச்க்குப் போகமாட்டான்.  கிழக்கு மூலையுள் அவனால் கால் எடுத்து வைக்க முடியாது.

 • எலிசபெத்திற்காக அதையும் செய்கிறான்.
 • லிடியாவைத் தேட விக்காமைச் சந்திக்கிறான்.
 • தனக்குச் சகலபாடியாகும்படிக் கெஞ்சிக் கேட்கிறான்.
 • தான் கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொள்ள வேண்டும் என்கிறான்.
  அங்கெல்லாம் போவது, அதையெல்லாம் செய்வது அசிங்கம்; ஆபாசம்; நரக வேதனை.  எலிசபெத் மீதுள்ள காதல் பூர்த்தியாக அவற்றையும் அவனால் செய்ய முடிகிறது.
  அது வேதனையன்று; காதல் சாதனை.

******

911) உலகத்தை அற்புதமாகக் காண பரிணாமத்தைவிட உயர்ந்த நிலையிருக்க வேண்டும்.

நிலையைக் கடந்தால் நிகழ்ச்சி மலரும்.

அதுவே அற்புதம்.

 • குழந்தைகள் விளையாட்டை ரசிக்க நாம் பெரியவர்களாக இருக்க வேண்டும்.
 • டென்னிஸ், பாட்மின்டன் கற்கும்பொழுது முதல் பந்து பேட்டில் படாது; அனைவரும் சிரிப்பார்கள். பந்து அப்படிப்  பட ஆரம்பித்தால் கோர்ட்க்கு வெளியே போகும்; நெட்டில் விழும். நேராகப் பந்தை அடிக்க நாளாகும்.  (Coach) டிரெயின் தரும் கோச், அப்படி தடுமாறும் இளைஞர்கள் மெல்ல மெல்லக் கற்றுக்கொள்வதைக் காண்பார். அவருக்கு எப்படிக் கற்பதுஎனத் தெரியுமாதலால், ஆரம்பச் சிரமங்கள் புரியும்.

கற்றுக்கொள்பவன் படும் அவதி கற்பிப்பவனுக்கு முன்னேற்றமாகப்                     புரிவதால், அதன் சிறப்பு அவனுக்கு விளங்கும்.

 • குழந்தையின் மழலையை அடுத்த குழந்தை ரசிக்க முடியாது; தாய் ரசிப்பாள். எந்த நிலைச் செயலும் புரிய, ரசிக்க, அற்புதம் என அறிய நாம் அடுத்த உயர்ந்த நிலையிலிருக்க வேண்டும்.
 • நாம் வாழ்க்கையுள்ளே வாழ்வின் பகுதியாக இருப்பதால் அதன் சிறப்பு புரியவில்லை. வாழ்வைக் கடந்த உயர்ந்த நிலையிருந்தால், அது அற்புதம் என விளங்கும்.
 • 1950, 1960இல் சுதந்திரத்திற்காகப் போராடிய இளைஞர்கள், தலைவர்கள் நாட்டின் நிலையைக் கண்டு பரிதாப்பட்டனர்.  மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை; ஸ்டிரைக் செய்கிறார்கள்; இலஞ்சம் தலையெடுத்து விட்டது; எந்த பாக்டரியும் ஓடுவதில்லை; கார் யார் மீது மோதினாலும் கூட்டம் கூடி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்; (Statistics) புள்ளிவிவரம் சேகரித்தால் வீட்டிருந்து பாரத்தைப் பூர்த்திசெய்து பொய்யாக எழுதுகிறார்கள்; இப்படியிருந்தால் நாட்டின் எதிர்காலம் என்ன ஆகும் எனக் கவலைப்படாதவரில்லை.

     .இந்தியா ஜனநாயகம் மூலம் நாட்டை முன்னுக்குக் கொண்டுவர முயலுவதால் உலகம் நம்மை அதிகமாகக் கவனித்தது.

 • நமக்கிருந்த சிரமங்களெல்லாம் எல்லா நாடுகட்கும் ஆரம்பத்திலிருந்தது என அவர்கட்குத் தெரியும்.
 • இந்தியா போல் புள்ளிவிவரம் நிறைந்த நாடு ஆசியா, ஆப்பிரிக்காவில் இல்லை.
 • இராணுவ ஆட்சியில் நாடு முன்னேறும்; மக்களாட்சியில் முன்னேற்ற முயல்வது மிகவும் சிரமம். அதுவும் இந்தியா பெரிய நாடு.
 • இன்று இந்தியா சொற்ப காலத்தில் எல்லா ஐரோப்பிய நாடுகளையும் கடந்து முன்னேறும் என்று அனைவரும் கூறுகின்றனர்.
 • நாம் உள்ளேயிருந்து பார்ப்பதால் சிரமம், குறை மட்டும் தெரிகிறது.

     வெளியிலிருந்து பார்ப்பவர்கட்கு, மற்ற நாட்டு வரலாற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதால், இந்திய முன்னேற்றம் அற்புதமாகத் தெரிகிறது.
 

அருமை புரிய அடுத்த கட்டப் பார்வை வேண்டும்.

******

தொடரும்.....

ஜீவிய மணி

உள்ளம் அறிந்தால் உவகை பூக்கும்.book | by Dr. Radut