Skip to Content

முரண்பாடு

நொடித்துப் போனவர் செத்து சுண்ணாம்பாக மாறுவார். அவருள் சிலருக்கு அதிர்ஷ்டம் வருவதுண்டு. அது சாதாரணமாக இருப்பதில்லை, பெரிய அதிர்ஷ்டமாக இருக்கும். அதிர்ஷ்டமும், வறுமையும் எதிரானவை. வறுமை வந்தபின் முயற்சியுள்ளவர்க்கு அதிர்ஷ்டம் நிச்சயம், அதுவும் பெரிய அதிர்ஷ்டமாகும். முயற்சியுள்ளவர் பக்தரானால் அவர் முரண்பாட்டின் உண்மையைக் காண்பார்.

முரண்பாடு என்பது வருவதை எதிராக மாற்றிக்காட்டுவது. அதிக வறுமை வந்தால் பேர் அதிர்ஷ்டம் வறுமையாக வருகிறது எனப்பொருள்.

Life Divine நூலின் அடிப்படைக் கருத்து இது. முதல்அத்தியாயத்திலேயே எழுதுகிறார். சிருஷ்டியின் அடிப்படை முரண்பாடு. ஜோதிமயமான இறைவன் தன்னை தன்னுள் மறைத்து, மறைவது முழுமையான பொழுது இருளாக மாறி, இருளின் இதயத்தினின்று மீண்டும் தன் சுயரூபத்தை தேடுவதை, தேடுவதில் பெறும் இன்பத்தை பகவான் லீலை என்கிறார்.

ஒளியும் இருளும் எதிரானவை என்பது முரண்பாடு. இதே முரண்பாடுகள்தான் நாம் வாழ்வில் எங்கும் காண்பது. முரண்பாட்டை ஏற்பதே யோகம்.
மனிதன் தன்னை வெறுப்பவனை விலக்குகிறான். தோல்விவந்தால் அதை விட்டுவிலகுகிறான். வெறுப்பவனை ஒதுக்குபவன் சாதாரண மனிதன். தோல்வியிலிருந்து அகல்பவன் எளிய மனம் படைத்தவன். வெறுப்பவனை ஏற்பவன் முரண்பாட்டை ஏற்கிறான். தோல்வியை ஏற்று மகிழ்பவன் உயர்ந்த வெற்றிக்குரியவன் என்பதே இக்கட்டுரையின் தத்துவம்.

மனித குலம் தழைக்க இயற்கையின் அமைப்பு ஆண் பெண்ணை நாடுவதாகும். இயற்கையிலுள்ள அடிப்படை முரண்பாடு இது. இதனால் மனிதகுலம் இன்று உயிருடனிருக்கிறது.

 
வாழ்வில் ஆணுக்கு அதிகபட்ச கவர்ச்சியுள்ளது பெண்.
அதுவே குலம் வளரும் வழி.
அதே போல் மனிதன் மற்ற முரண்பாடுகளை விலக்காமல்
ஏற்க முன்வந்தால் நாகரீகம் சிறந்து பண்பு உயரும்.
ஆன்மீகத்தில் அத்தனை முரண்பாடுகளையும் விரும்பி ஏற்க வேண்டும்.

 

பகலில் வேலை செய்வதும், இரவில் தூங்குவதும் எதிரானவை. தூக்கம் அடுத்தநாள் தெம்பை அளிக்கிறது. வேலைக்கு உதவுவது தூக்கம். தூக்கம் விலக்கப்படுவது தவறு. ஆளும்கட்சிக்கு எதிர்கட்சி தலைவலி. எதிர்க்கட்சியில்லாவிட்டால், ஆளும்கட்சியின் அட்டூழியம் அதிகமாகும். Nut & Bolt ஆணியும், மறையும் சேர்வதே பலம் தரும். ஆணி ஆணியுடன் சேராது, மறையுடன்தான் சேரும். இது இயற்கை விதி, நியதி.

மாஜிஸ்ட்ரேட்டும், போலீஸீம் சட்டத்திற்கு அவசியம். போலீஸ் திருடனைக்கண்டு பிடிக்கிறது. மாஜிஸ்ட்ரேட் தண்டனை தருகிறார். நாம் நிம்மதியாக தூங்கமுடியும். போலீஸீக்கு மாஜிஸ்ட்ரேட் எதிரி. திருடனைப் பிடித்துப்போனால், இவன் தான் திருடனா என கோர்ட் கேட்கும். போலீஸ் சொல்வதை மாஜிஸ்ட்ரேட் எளிதில் நம்பமாட்டார் என்பதால், போலீஸ் மாஜிஸ்ட்ரேட் இல்லாவிட்டால் தேவலை என்பார். போலீஸ் செய்யும் அட்டூழியம் ஆயிரம் என்பதால் போலீஸ் கோர்ட்டுக்கு தலைவலி. இருவரும் சேராவிட்டால் நீதியில்லை. ஒருவர் தனியே சட்டத்தை அமுல்படுத்த முடியாது. கோர்ட் உத்தரவை போலீஸில்லாமல் நிறைவேற்ற முடியாது. மாஜிஸ்ட்ரேட் என ஒருவர் இல்லாவிட்டால் போலீஸ்காரன் பிடிக்காதவனை எல்லாம் ஜெயிலில் போடுவான். இரண்டும் தேவை என்பதே முரண்பாட்டை ஏற்பதாகும்.

முரணான போலீஸீம், கோர்ட்டும் நீதியின் உயர்ந்த கருவிகள்.

ஒருவன் செல்வம் பெற்றபின் அதைக்காப்பாற்ற வலிமை வேண்டும், அறிவால் பெற்ற செல்வத்தை அறிவால் மட்டும் காப்பாற்ற முடியாது. உடல் வலிமை தேவை. அல்லது உடல்வலிமையின் உதவி தேவை. உடலும், அறிவும் முரணானவை. நகரத்தில் அவன் வாழ்ந்தால் போலீஸ் ஆதரவு தேவை. கிராமத்தில் வாழ்ந்தால், உறவினர் ஆதரவு தேவை. அது போன்ற ஆதரவற்றவன் பெற்ற செல்வத்தைக் காப்பாற்ற முடியாது.

அறிவுக்கு, உடலின் ஆதரவு முரண்பாடு.
அம்முரண்பாட்டை ஏற்பது பகுத்தறிவு.

பொதுவாழ்வில் உள்ளவர் பெரும்புகழ் பெற்றால், பெரும்பாலும் அவர் வாழ்வில் ஏற்பட்ட அதிர்ச்சியே காரணமாகும். பிரபல நடிகனை கொலை செய்த முயற்சி, அவருக்கு திருப்பமாகி, அரசியல் தலைமையைத் தந்தது.

1000 கோடி கம்பனி முதலாளி ஒருவர் அடிக்கடி சொல்லும் சொல், 'நஷ்டப்படாமல் அறிவு வாராது'.

சரித்திரத்தில் போர் என்பது பெரிய அழிவுக்குரிய காரியம், இதுவரை நடந்த போர்கள் முடிந்த பின் பெரு முன்னேற்றத்தை சரித்திரம் கண்டது. UNDP-ன் ரிப்போர்ட்படி கடந்த 50 ஆண்டுகளில்-போருக்குப்பின்-உலகம் பெற்ற முன்னேற்றம் அதற்கு முன் 500 ஆண்டுகளின் முன்னேற்றத்தை விட அதிகம்.

போரும் முன்னேற்றமும் எதிரானவை.
போர் மூலமே முன்னேற்றம் வருகிறது என்பது சரித்திரம்.

தொடர்ந்து தோல்வியுற்றவரே பெரிய அதிர்ஷ்டத்திற்குரியவர்.

ஸ்ரீ அரவிந்தர் தம் சிந்தனை மணிகளில், அளவுகடந்து கொடுமைக்காரனைக் கண்டு, ''எனக்கு அந்த அதிர்ஷ்டமில்லையே'' என ஏங்குகிறார்.

ஜெயிலுக்குப் போகாமல் அரசியல் தலைவராக முடியாது. திவாலை சந்திக்காமல் பெருஞ்செல்வம் பெறமுடியாது. ஆபத்தைத் தவிர்த்து வெற்றிக்குப் போக முடியாது. பிணக்கொழிந்த பிரியம் வளராது.

பிள்ளைகட்கு பெரும்பாலும் பெற்றோருக்கு எதிரான குணமிருக்கும். எதிர்ப்பை பெற்றோர் பாராட்டினால், அல்லது பிள்ளைகள் பாராட்டினால் முன்னேற்றமில்லை. எதிர்ப்பை ஏற்கும் மனப்பான்மை ஏற்பட்டால், எதிர்ப்பின் இரகஸ்யத்தை அறியமுனைந்தால், எதிர்ப்பு ஆதரவாகும்.

பெற்றோரும், பிள்ளைகளும் சேர்ந்து முன்னேற முடியும்.

எந்த ஒரு ஆபத்தும், திவாலும், நஷ்டமும் வரும்பொழுது சிரமங்கள் மட்டும் கண்ணுக்குத் தெரியும். அதனால் வாய்ப்பு என ஒன்றுள்ளதா என ஆராய்ச்சி செய்தால், நிச்சயமாக ஒன்றிருக்கும். அதன் தன்மையை மேலும் ஆராய்ந்தால், இது போன்ற வாய்ப்பு இது வரை வாழ்வில் வந்ததில்லை என்று அறிவோம்.

‘நம்மை விட வசதியான உறவினர். நாம் தாழ்ந்திருப்பதால் அவர்கட்கு ஆரம்பத்திலிருந்தே சந்தோஷம். பிரியமாகப் பழகுவார்கள். அவர்களை ஒத்தவருடன் கிடைக்காத மரியாதை நம்மிடம் கிடைப்பதால் நம் மீது பிரியம். முழு சுயநலம். சமயத்தில் நாம் வெளியில் சொல்ல முடியாத ஆபத்து, அவமானம் வரும். அவை அவர்கள் மனதைத் தொடாது. நாமும், அவர்களும் அன்னையிடம் வந்தோம். அவர்மூலம் நான் வந்தேனா, என் மூலம் அவர் வந்தாரா என இருவருக்கும் நினைவில்லை. அவருக்கு வாழ்க்கையில் பிரச்சினையே இல்லை. அன்னையிடம் வந்தபின் அன்றாட சிறு காரியங்கள் அபரிமிதமான வெற்றியுடன் நடப்பதால் ஏராளமான சந்தோஷம். நமக்கு பழைய தொந்தரவுகள் சில வளர்ந்து பெரிய நஷ்ட மேற்பட்டது. அது அவர் கண்ணிலோ, மனதிலோ படவில்லை. வந்த பெரிய ஆபத்துகளை அருள் சமாளித்தது. ஒரு கட்டத்தில் ஆபத்து நீங்கி, சிறு புது சௌகரியங்கள் வந்தன. உறவினருக்கு அளவு கடந்த பொறாமை எழுந்தது.'

என் நிலைமாறினால் அவர் நிலையை எட்டி விடுவேன் என்ற பயம் பொறாமையாக எழுந்தது. இன்றும் அவர் வசதிக்கும், என் வசதிக்கும் ஏணிவைத்தாலும் எட்டாது. ஆனால் அவர் மனம் பொறாமையால் வெந்தது. அவர் வந்தால் வீட்டில் சிறுசிறு அபசகுனமாக விஷயம் நடக்கிறது. புதியதாக நல்லது வரப்போகிறது எனில் அவர் காதில் விழுந்தால், உடனே ரத்தாகிறது. தம் 'வெற்றி' அவருக்குப் பூரண திருப்தியை அளித்தது. மேலும் பல 'வெற்றி' களை நாடினால், வேண்டுமென பிறருக்கு தீங்கிழைக்க முயன்றால், அது தவறாமல் நமக்கே வரும் என அன்னை கூறியதை அவர் மறந்துவிட்டார்.

எனக்கு வந்த பெரிய கஷ்டங்கள் அவருக்குப்பெரிய அளவில் வந்தன. நாங்கள் ஒன்றாக ஒரே வீட்டிலிருக்கிறோம். அவர் சொத்தை இழந்து, வாரண்ட்வந்து, அவமானம், ஆபத்து வந்து ஊரைவிட்டு வெயேறினார். அந்நேரமும் நாங்கள் ஒன்றாக ஒரே இடத்தில் குடியிருந்தோம். எனக்கு அன்றாடம் நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளும் அபசகுனமாகின்றன. ஆபீஸ் போனால் பாட்டு. குடும்பத்தில் தகராறு. மனைவியுடன் கசப்பு. பிள்ளைகட்கு அதிருப்தி, நான் தெளிந்து எழுந்து வரும்போது இந்த நிலை. இச்சமயம் இதுவரை வாராத 5,6 பெரிய பெரிய வாய்ப்புகள் வந்தன. ஏதாவது தவறி இவர் கண்ணில் பட்டுவிட்டால் போய்விடும். நான் இவரைவிட்டு அகலமுடியாது. இவருள்ள வரை நல்லது நடக்க இவர் பொறாமை விடாது. என் நிலை தர்மசங்கடம்.

மேலே சொன்ன சட்டப்படி நான் வந்த சூழ்நிலையை ஆழ்ந்து ஆராய்ந்தேன். எனக்கு சில கேள்விகள் எழுந்தன. 1) இவருள்ளபொழுது இத்தனை பெரிய வாய்ப்புகள் வந்ததெப்படி? 2) அப்படி வருவது இவர் அம்சம் எனக்கொள்ளலாமா? 3) இதுவரை வராத வாய்ப்பு இவருள்ளபொழுது வருகிறதெனில் நான் படித்தது நினைவுக்கு வந்தது.

வரும் பெரிய வாய்ப்பு, அருள் தருவது. அது தலைகீழாக ஆபத்தாக வருவது
என் குணத்தால். என் குணம் சரியானதானால், அது நேராக வரும். 

என்று நான் புரிந்துகொண்டு, நான் வருத்தப்பட வேண்டியது இவர் மீதில்லை, என்மட்டமான குணத்தின் மீது என அறிந்தேன். அறிந்தவுடன் ஒன்றிரண்டு அபசகுனங்கள் சுபசகுனமாயின.

என் மட்டமான குணத்தை மாற்ற அன்னை பெரிய வாய்ப்புகளை
மட்டமானவர் மூலம் அளிக்கின்றார் 

என்று விளங்கியவுடன் மனம் லேசாயிற்று. அதன்பின் அவரால் என் வாய்ப்புகளை ரத்து செய்ய முடியவில்லை. இந்த அனுபவம் எல்லா அன்பர்கட்கும் உண்டு. சரியாகப் புரிந்து கொள்வது பலன்தரும்.

***book | by Dr. Radut