Skip to Content

08.லைப் டிவைன்-கருத்து

The Life Divine - கருத்து

ஆன்மீக வாழ்வு எளிமையாகவோ, வளம் நிறைந்ததாகவோ இருக்கலாம்.

பரம்பரையாக உலகெங்கும் ஆன்மீகம் என்றால் விரதம் எனப் பெயரெடுத்துள்ளது. ஆன்மீகம் எனில்,

. பேசக்கூடாது.

. ரசித்துச் சாப்பிடக் கூடாது.

. நல்ல உடை உடுக்கக் கூடாது.

. வசதியான வீட்டில் வாழக்கூடாது.

. வாழ்வை அனுபவிக்கக் கூடாது.

. ஏழை, எளியவரை சமமாகக் கருதவேண்டும்.

. பெருவியாதிக்காரனை கண்டு அருவருப்புக் கொள்ளக்கூடாது.

. எதிரிக்கும் கருணை செய்யவேண்டும்.

. அமைதிக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்.

. பணத்தைப் பவுனைக் கையால் தீண்டக்கூடாது

என்று உலகம் அறிந்து, அறிந்ததைப் போற்றி வருகிறது. இவ்வளவும் உண்மை, ஆனால் பகுதியான உண்மை. இந்த உண்மைக்கு எதிரான உண்மையுண்டு. அதுவும் உண்மை. மாறான உண்மைகள் ஏராளமாக உண்டு. அத்தனையும் உண்மை. அத்தனை உண்மைகளும் சேர்ந்தது முழுமை. முழுமையே உண்மை என்பதால், எந்த உண்மையையும் நாம் மறுக்கக்கூடாது. தலைப்பில் எழுதிய கருத்து The Life Divineஇல் கடைசி அத்தியாயத்தின் இறுதிப் பகுதியில் வருகிறது. நாம் அறியாமையில் ஆண்டவனைக் கண்டதால், ஆண்டவனைக் காணும் சந்தர்ப்பங்கள் அதுபோல - காடு, மலை - அமைந்ததால் அந்த நேரம் இருந்த சந்தர்ப்பங்களை எல்லாக் காலங்களுக்கும் உரியனவாகக் கருதியது மனித மனப்பான்மை. செல்வம் நிறைந்த சமுதாயம் இன்று தாம் அன்றிருந்த வாழ்வைப் போற்றி திருமணச் சீதனத்தை ஓலைப்பெட்டியில் மணப்பெண்ணின் தலைமீது தாங்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். இது பழக்கம்.

சிருஷ்டி ஆனந்தமயமானது. பரிணாமம் இன்று அறியாமையிலிருந்து அறிவை நாடுகிறது. சத்திய ஜீவன் பிறந்தபின் அறியாமையிருக்காது. பரிணாமம் அறிவிலிருந்து பெரிய அறிவை நாடும் என்பது ஸ்ரீ அரவிந்தம்.

. திருவுருமாற்றம் கருவான இடம்.

. சரணாகதி அதற்குரிய கருவி.

. திருவுருமாறியபின் அறியாமை, வலி, நோய், துன்பம், மரணமில்லை.

. அது சித்தி பெற்ற நிலை.

. சித்தி பெற்ற பின் வாழ்வுண்டு.

. வாழ்வு எப்படியிருக்க வேண்டும்?

. எப்படியுமிருக்கலாம்.

. எளிமையாகவுமிருக்கலாம், வளமாகவுமிருக்கலாம்.

. அந்த வாழ்வு எளிமையை விலக்கவில்லை.

. நம் வாழ்வு வளத்தை விலக்குகிறது.

. விலக்கினால் மிஞ்சுவது பகுதி. பூரணயோகம் முழுமையைத் தேடுவதால் எதையும் விலக்கமுடியாது.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

உறவுக்கு முக்கியம் உணர்வு, திறமையில்லை.


 


 


 


 


 



book | by Dr. Radut