Skip to Content

07.கழுத்திற்கு வந்த கத்தி

"அன்பர் உரை"

கழுத்திற்கு வந்த கத்தி

(சென்னை மாம்பலம் தியான மையத்தில் 1.3.2002 அன்று திருமதி. விஜயா

நாராயணன் நிகழ்த்திய உரை)

ஓடிப்போன கணவன், கடனால் வாரண்ட் வந்த வீடு, சம்பாதிப்பவர் திடீரென மரணமடைவது குடும்பத்தில் கழுத்திற்கு கத்தி வந்ததாகும். மனித வாழ்வில் இந்நிலைக்கு வந்தவர்களை நல்லெண்ணமுள்ளவர் கண்டால், "இதெல்லாம் ஒருவர்க்கு வரக் கூடாது. வந்துவிட்டால் அதிலிருந்து தப்ப வழியில்லை. அனுபவிக்க வேண்டும்'' என்பார்கள்.

ஆமை புகுந்த வீடு, அமீனா புகுந்த வீடு என்பவற்றுடன் ஸ்டிரைக் வந்த கம்பனி, இன்றைய நிலையில் சேர்ந்துகொள்கிறது.
 . அன்பர்கட்கு வாய்ப்புதான் வரும், கத்தி வாராது.

. கத்தி வந்தபின் அன்னையை நாடி வருபவர்கள் உண்டு.

அப்படி அன்னையை நாடி நம்பிக்கையுடன் வந்தவர்கள் ஒருவர் தவறாமல் கத்தி விலகியதைக் கண்டுள்ளனர். உயர்ந்த நம்பிக்கையுள்ளவர்கட்கு கத்தி, மலர் மாலையாகியிருக்கிறது.

கத்தி விலகிய விதங்கள் பல:

. நாமே பிரச்சினையைத் தீர்க்கும்வரை தவணை தருவது.

. கத்தியைக் கொண்டுவந்தவர் மனம் மாறி விலகுவது.

. நிலைமை மாறி, கத்திக்கு சக்தியற்றுப் போவது.

. கத்தி வருவதற்கு சற்றுமுன் சட்டம் மாறி கத்திக்கு அர்த்தம் போவது.

. எதிரிக்கு உறுதுணையானவன் எதிரியை மனம் மாறி எதிர்ப்பது.

. எதிரியின் முக்கியஸ்தர் நமக்கு சாதகமாக மாறுவது.

. நாம் கூறும் விளக்கத்தை எதிரியோ, மத்தியஸ்தரோ ஏற்பது.

. எதிரி நண்பனாக மாறுவது.

. அப்படி மாறுவதால் அதிர்ஷ்டம் வருவது.

. எதிரியின் சந்தர்ப்பங்கள் அனைத்தும் எதிரிக்கு எதிராகப் போவது.

வாழ்வில் ஏன் கழுத்துக்குக் கத்தி வருகிறது

. தொழிலில் எதிர்பாராதவிதமாக மார்க்கட் மாறுவதால்.

. கூட்டாளி துரோகம் செய்வதால்.

. பெருமைக்காக கடன் வாங்கி செலவு செய்வதால்.

. நம்பியவர் துரோகம் செய்வதால்.

. வீடு போர்க்களமாக இருப்பதால்.

. பொறுப்பற்ற குணத்தால்.

. திறமையில்லாததால்.

. அலட்சிய மனப்பான்மையால்.

. முதலாளி மானேஜருக்கோ, மனைவிக்கோ அடங்கி நடப்பதால்.

. அனைவரையும் விரோதம் செய்துகொள்வதால்.

. பொய் கணக்கு எழுதி, தான் எழுதிய பொய்யை தானே நம்பி செயல்படுவதால்.

. நட்புக்காக பொய்யை மூடி மறைக்க முயல்வதால்.

இவையனைத்தும் அன்பர்கட்கு விலக்கு. மேற்சொன்னவை உள்ள இடத்தில் அன்னையிருக்கமாட்டார். இதுபோல் திவாலானவர்களை அன்னையிடம் அழைத்துவர முயன்றால் பெரும்பாலும் அவர்கள் வர சம்மதிக்க மாட்டார்கள்.

தன்னுடைய தவறு இல்லாமல் அல்லது தன்னையறியாமல் நடந்த தவறுதலால் தொழில் திவாலாகியிருந்தால், அவர்கள் அன்னையை நாடி மனம் மாறி நடக்க முன்வந்தால், அவர்கள் சிரமம் விலகத் தவறியது இல்லை.

அன்பர்கட்கு வீண் தொந்தரவு செய்தவர் அழியத் தவறியதில்லை.

. ஊரில் உள்ள எல்லாக் கடைகளையும்விட புதியதாக, நவீன பாஷனில் ஒருவர் கடை ஆரம்பித்தார். அவருக்கு ஏற்கனவே நல்ல வியாபாரம் ஆகும் ஜவுளிக்கடையுண்டு. அதனால் ஏகபோகமாக மற்றொரு கடை ஆரம்பித்தார். அன்பர் ஒருவரை வாடிக்கையாக நாடினார். அன்பர் வாடிக்கையானதிலிருந்து கடை அமோக வெற்றி பெற்றது. அன்பர் பாக்கி வைத்திருந்தார். நாலு பேர் மத்தியில் பாக்கியைக் கேட்டால்தான் சொரணை வரும் என கடைக்காரர் அன்பரை அவமானப்படுத்த எண்ணினார். பேசினார். அவருடைய கடை அமோக வெற்றியிலிருந்து திவாலாயிற்று.

. பெருமுதலாளி மீது பொய்க் கேஸ் போட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச்சொன்னால், முதலாளியிடம் ஏதாவது இலாபம் பெறலாம் என்ற புரோக்கர் எண்ணத்தை செயல்படுத்தினார். முதலாளி பக்தர். அன்னையை நினைத்து ஸ்டேஷனுக்குப் போனார். கேஸ் கொடுத்தவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை, ஸ்டேஷனில் முதலாளியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்.

. யார் செய்த தவறோ தெரியவில்லை, கம்பனிக்கு சிரமம் வந்துவிட்டது. இப்பொழுது ஆராய்ச்சி செய்ய நேரமில்லை. முதலில் நிலைமையை சமாளித்துவிட்டு பிறகு ஆராய்ச்சியை ஆரம்பிக்கலாம் என்றபொழுது, பலரும் பல வகையாகப் பேசினார்கள்.

. இனி வழியில்லை. நாமே கோர்ட்டில் போய் நிலைமையைச் சொல்ல வேண்டும்.

. பணம் போவதுடன், மரியாதையும் போகும்முன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

. யாராவது பெரும் தொகை கொடுத்தால் நிமிர்ந்துவிடலாம்.

. பெரும் தொகை கொடுக்க வருபவர்கள் பெரும் கமிஷனை முன்கூட்டிக் கேட்கிறார்கள்.

. குடும்பமே எதிராகிவிட்டது. .

காதில் நல்ல வார்த்தை விழவில்லை.

. ஆனால் ஏராளமான பேர், "அன்னையை நாடவும்'' என்றனர். எல்லாப் பக்கங்களிலிருந்தும் அன்னை கண்ணுக்குத் தென்பட்டார்.

. சிறுவயதில் அன்னையை தரிசனம் செய்தது நினைவு வந்தது.

இதுபோன்ற நிலையில் ஒரு கடன்காரர் சவால்விட ஆரம்பித்து கடுமையாகப் பேசினார்.அவர் டெல்லியிலிருக்கிறார். "நான் உங்களை நேரில் வந்து பார்த்து எவ்வளவு தொந்தரவு கொடுக்க முடியுமோ, அத்தனையும் செய்யும் முடிவுடன் வருவேன்'' என்றார். வந்தார். முதலாளி நடந்ததைக் கூறி, "என்னால் எதுவும் செய்ய முடியாது. நிலைமை மாறினால் பணம் தருகிறேன்'' என்றார். வந்தவர் போனில் பேசிய வேகமில்லாமல் நிதானமாகக் கேட்டுக்கொள்வது முதலாளிக்கு வியப்பாக இருந்தது. முதலாளி தன் நிலைமையைக் கூறியதுடன், இச்சிரமம் வந்தபின் அன்னையைத் தான் ஏற்றதாகவும், இனி கம்பனி தம்முடையதில்லை, அன்னையுடையதே எனவும், சிரமம் வந்த சில மாதங்களாக அன்னை தம்மை எப்படியெல்லாம் காப்பாற்றுகிறார் எனவும் கூறினார்.

வந்தவர் முதலாளியின் நாற்காலியில் அன்னை படமிருப்பதைக் கண்டார். பிறகு பேசினார், "நான் ஆசிரமப் பள்ளியில் படித்தேன். சிறு குழந்தையாக அன்னையுடன் விளையாடுவது வழக்கம். உங்களுக்குள்ள நம்பிக்கை அன்னைமீது எனக்கில்லை. என் கணவரை இந்த 20 ஆண்டுகளாக அன்னையை ஏற்றுக்கொள்ளச் சொல்ல முடியவில்லை. இக்குறுகிய காலத்தில் உங்கள் நம்பிக்கை நடத்தும் அற்புதங்களை என்னால் நம்பமுடியவில்லை. இனி நீங்களாகத் தரும்வரை பணத்திற்காக நான் தொந்தரவு செய்ய மாட்டேன்'' என்று முடித்தார்.

ஒருவர் திவாலாகும்பொழுது கடன் கொடுத்தவர்கள் மட்டும் நெருக்குவதில்லை. சாதுரியமான புரோக்கர்கள் நெருக்கடியைப் பயன்படுத்தி, தங்கள் கைவசம் உள்ள தஸ்தாவேஜுகளை தவறாகப் பயன்படுத்த முனையும் நேரம் அது.

அன்பர் ஒருவரை அதுபோன்ற புரோக்கர் ஒருவர் பொய் கேஸ் போட்டு மிரட்டினான். கேஸ் கோர்ட்டுக்கு வரும்முன், வேறு ஒரு விஷயமாக அவன் அரெஸ்டாகிவிட்டான். தவறாது துஷ்டர்கள் பெறும் தண்டனை இது. இது அன்னை கொடுக்கும் தண்டனையில்லை. அவன் செய்ததின் பலனை அவனே அனுபவிப்பது.

அன்பருக்கு கஷ்டம் வராது.

அப்படி வருகிறதெனில் கஷ்டப்படுபவரிடம் உண்மையிருந்தால்,

கஷ்டம், கஷ்டப்படுத்தாது.

பணம் கொடுத்தவர்கள் வசூலுக்கு வரும்பொழுது முரடர்களுடன் வருவதுண்டு. இப்பொழுதே கொடுத்தால்தான் ஆயிற்று என மிரட்டுவதும் உண்டு. அப்படி மிரட்ட வந்த 10 பேர்கள் அன்பரிடம் சாதுவாகப் பேசிவிட்டு, அவர் கூறியதை ஏற்றுச் சென்றனர்.

. பல கோடி ரூபாயை பல நூறு பேரிடம் பெற்றவர் திவாலானால் நிலைமையை நாம் கற்பனை செய்யலாம். அவரிடமும் உண்மையிருந்தால், அவர் அன்னையை நாடினால், மாறும் நிலைமை அற்புதமாக இருக்கும். பொய் சொல்பவர்கட்கு அன்னை பலிக்காது.

. கழுத்தை நெறிக்க வந்தவர், பக்தர் கூறியதைக் கேட்டு மனம் மாறி, மேலும் பெரும் பணம் தர முன்வந்த நிகழ்ச்சியும் உண்டு.

. "ஏன் என் தொழில் நசிந்தபின் எனக்கு கடன் கொடுக்க முன் வருகிறீர்கள்'' என விவரமறிந்து வலிய கடன் தர வந்தவரை பக்தர் கேட்டபொழுது "உங்களுக்கு தோல்வி வாராது. என் பணம் பத்திரமாக இருக்கும்'' என பதில் வந்தது.

கத்தி வாராது, பூமாலை வரும்.

****

 


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

வளரவோ, வாழவோ தேவையானது மேல் மனத்தின் திறனைவிடப் பெரியதானால், ஆழ்மனம் அப்பொறுப்பை ஏற்கும்.

வளரவோ, வாழவோ தேவையானதை ஆழ்மனம் பொறுப்பை ஏற்கும். 

ஸ்ரீ அரவிந்த சுடர்

அடிப்படையில் மனிதன் சோம்பேறி. அதிகபட்ச முன்னேற்றத்தைப் பெறக்கூடியவனுமாகும்.

முழு முன்னேற்றம் காத்திருந்தாலும் மனிதன் முழு சோம்பேறி.


 


 book | by Dr. Radut