Skip to Content

05.எங்கள் குடும்பம்

எங்கள் குடும்பம்

                            (சென்ற இதழின் தொடர்ச்சி....)

பெண் மட்டுமல்லள், மற்ற குழந்தைகளும், கணவனும் சுயநலமாக, ஆதாய நினைப்புடனிருப்பது தாயாருக்கு வருத்தம் தந்தது. இது இன்று தெரிவதில்லை. ஆரம்பத்திலிருந்து தெரிந்ததுதான். இதை மாற்ற முடியுமா? மாற்ற முயல்வது சரியா? அன்னையின் முறை என்ன என்பது நெடுநாளாகத் தாயார் யோசனை செய்த விஷயம்.

இதுவரை அவருக்குப் புரிந்தவை,

. சுபாவம் மாறாது. மாற்ற முயல்வது தவறு என்பது வாழ்வு.

. பிள்ளைகள் இதுபோல் இருந்தால் அது தம்மையும் பிரதிபலிக்கிறது.

. ஏன் பண்பான பெண்ணுக்குப் பண்பற்ற கணவன் அமைந்தார் என்பது திருமணத்தின் இயல்பு.

. கணவன் தன் ஆத்மாவுக்கு அடுத்த பக்கம் (corresponding side) என்றால், குழந்தைகள் தம்மை நேரடியாகப் பிரதிபலிக்கின்றன.

. பழக்கத்தைச் சொல்லித் தரலாம், நல்ல பயன் தரும்; சுபாவத்தை மாற்ற முடியாது.

. ஆழ்ந்து கவனித்தால் குடும்பத்தாருக்கு வீட்டு விஷயத்திலுள்ள சுயநலம் தமக்கு குடும்ப நலத்தில் உண்டு என்பதால், இரண்டும் சுயநலமே.

. தாம் மட்டும் மாறவேண்டும் என்பது அன்னை முறை.

. வருத்தம் என்பது உணர்ச்சிக்குப் புரியவில்லை எனக் காட்டுகிறது.

. மனப்போராட்டம் பக்குவமில்லாததால் எழுவது.

. தாம் மாறும்பொழுது சூழல் மாறும், மற்றவர்களும் மாறுவார்கள்.

. ஒரு பெரிய விஷயம் நடந்தால், அனைவரும் மாற சந்தர்ப்பம் உண்டு. அது பாக்டரிமூலம் வந்திருக்கிறது.

. இந்த நேரம் உள்ளும், புறமும் முடிந்தவரை செய்யலாம்.

. முடிந்தால் அதையும் சரணம் செய்வது சிறப்பு.

. சமர்ப்பணம் முடியாத அளவுக்கு வருத்தம், போராட்டம், கவலை இருக்கும்.

. மனத்தில் உள்ள உண்மைக்கு உண்மையான பலனிருக்கும்.

மறுநாள் கணவர் வந்து பார்ட்னர் லைசென்ஸ் கிடைத்துவிட்டதால் மேற்கொண்டு செய்யும் காரியங்களை ஆர்வமாகக் கூறினார். பார்ட்னருக்கும் நமக்கும் உள்ள இடைவெளியை பொருட்படுத்தாது எல்லா விஷயங்களிலும் நம்மை சமமாக நடத்தும் பாங்கு தமக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றார். அத்துடன் பெரியவன் தன் நெடுநாளைய நண்பனுடன் கோபப்பட்டதாகவும் கூறினார். நண்பன் தற்சமயம் பெரியவனுக்கு வந்துள்ள அந்தஸ்தைப் பாராட்டாமல் பழையபடி நடப்பது பெரியவனுக்குப் பிடிக்கவில்லை, அதனால் தகராறு என்றார். பெரியவன் செயலை ஆமோதித்துப் பேசினார். பார்ட்னர் நம்மைச் சமமாக நடத்துவது சரி, பெரியவனிடம் அவன் நண்பன் சகஜமாகப் பேசுவது சரியில்லை. தாயாருக்கு இதன் முக்கியத்துவம் புரிந்தது. பெரியவன் தன் நண்பனிடம் சகஜமாக இல்லை எனில் பார்ட்னரிடம் பெருந்தன்மை நீடிக்காது என்று தாயார் அறிவாள். எவரிடமும் சொல்லாமல் அன்னையிடம் மட்டும் இதைக் கூறிவிட்டு தம் மனத்தை சோதனை செய்தார். தம் பங்கில் அது போன்ற மனப்பான்மையில்லை என்று கண்டார். அதனால் இது சரிவர வாய்ப்புள்ளது என நினைத்தார். பெரியவனே வந்து நண்பன்மீது தன் குறையை அம்மாவிடம் கூறினான். அந்த நேரம் சிறியவன் ஒரு புத்தகத்தின் பகுதியைக் காட்டி அம்மாவை விளக்கம் கேட்டான்.

பெரியவனும், பெண்ணும் அது என்ன என்று கேட்டனர்.

பெரியவன் : நான் சொல்கிறேன், என்னிடம் காட்டு.

சிறியவன் : எனக்கு உன் விளக்கம் தேவையில்லை, அம்மா விளக்கம் தேவை.

பெரியவன் புத்தகத்தைப் பிரித்து குறித்த இடத்தைப் படித்தான்.

"அருளைப் பெற்றபின் தனக்கொரு சட்டம், பிறருக்கு ஒரு சட்டம் என மனம் நினைத்தால், அருள் பின்வாங்கும்'' என்றிருந்தது.

பெரியவன் : இதில் என்ன புரியவில்லை. நம்மைப் போல் பிறர் இருப்பார் என நாம் அறிய வேண்டும்.

பெண் : ஓர் உதாரணம் மூலம் சொல்லேன்.

பெரியவன் : என்னைப் பார்ட்னர் அதிக மரியாதையுடன் நடத்துகிறார். என் நண்பன் பழையபடி பேசுகிறான். இது தவறல்லவா?

பெண் : புரியவில்லை.

பெரியவன் : பார்ட்னர் பெரியவர். அவரே நம்மை அவருக்குச் சமமாக நடத்தும்பொழுது, இந்த நண்பனுக்குப் புத்தியிருக்கா, இவன் என்னைப் பழைய நண்பனாக நடத்த விரும்புகிறான். இது தவறு.

பெண் : உனக்குள்ள முக்கியத்துவத்தை பார்ட்னர் ஏற்கும் பொழுது நண்பனால் ஏற்கமுடியவில்லை என்கிறாயா? அது சரி.

கணவர் வெளியிலிருந்து வந்தார். அவர் ஆபீசில் ஒருவர் இவரிடம் சண்டைக்கு வந்ததாகவும், மரியாதையில்லாமல் பேசியதாகவும் வருத்தமாகச் சொன்னார். பெரியவன் விஷயத்தைக் கேட்டு மகிழ்ந்தார்.

சிறியவன் : அம்மா, அண்ணன் உளறுகிறான். நீங்கள் சொல்லுங்கள்.

அம்மா : பார்ட்னர் உன்னைச் சமமாக நடத்துவதுபோல் நீ உன் நண்பனைச் சமமாக நடத்த வேண்டும். சட்டம் இருவருக்கும் ஒன்றே.

சிறியவன் : அண்ணனை அவன் நண்பன் திட்டியது சரியாம்மா?

பெண் : எனக்குப் புரியவில்லை. அண்ணாவும் அம்மாவும் சொல்வது ஒன்றா? வெவ்வேறா?

சிறியவன் : எதிரானவை.

அப்பா : பெரியவன் சொல்வது சரிதானே.

சிறியவன் : பார்ட்னரும், நண்பனும் தன் பெருமையை ஏற்கவேண்டும் என்பது அண்ணன் சட்டம். அம்மா சொல்வது எதிரானது.

பெண் : எது சரி? எப்படிச் சரியென்று தெரியவில்லை?

கணவர் சற்று யோசித்து நிதானித்து அம்மா சொல்வது சரி, பெரியவன் செய்வது சரியில்லை என்றார். காலிங் பெல் அடித்தது. வெளியில் போனால் ஆபீசில் சண்டை போட்டவர் மகன் வந்து தகப்பனார் சார்பாக மன்னிப்புக் கேட்டான். கணவருக்கு சந்தோஷம், தான் நியாயத்தை ஏற்றவுடன் சண்டைக்காரன் மன்னிப்புக் கேட்பது புரியவில்லை. பெரியவன் சரி என்றவுடன் சண்டை வந்ததும் புரியவில்லை. மனைவிக்கு, கணவனுக்குப் புரியாவிட்டாலும் மனம் மாறுகிறார் என்று தெரிந்தது. பெண்ணுக்குக் குழப்பம் தீரவில்லை. அம்மாவைப் பிறகு கேட்கலாம் எனப் பேசாமலிருந்துவிட்டாள்.

பெண்ணும், சிறியவனும் அன்று மாலை அம்மாவைத் தேடிவந்து பல விஷயங்களைத் தெளிவுபடுத்தும்படிக் கேட்டனர்.

சிறியவன் : அம்மா அண்ணனை மடக்க எனக்கு வழி சொல்லுங்கள். அதற்கு அன்னை உதவுவார்களா?

பெண் : அப்படியென்ன உங்கள் இருவருக்கும் போட்டி?

சிறியவன் : உனக்கு ஓர் அக்கா இருந்தால் தெரியும். நானா அவனைச் சீண்டுகிறேன். அவன்தானே என்னிடம் வம்புக்கு வருகிறான்.

பெண் : ஏம்மா இவர்கள் இருவரும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள்? எத்தனையோ வீடுகளில் அண்ணன் தம்பி ஒற்றுமையாக இல்லையா?

தாயார் : ஒற்றுமையாக இருந்தால் காரியம் நடக்கும், நல்லது.

சிறியவன் : இப்போ, என்ன காரியம் கெட்டுப் போயிற்று? இதெல்லாம் என்ன தத்துவம்? இதெல்லாம் ஒரு சண்டையா? சும்மா போட்டா போட்டி.

தாயார் : தத்துவப்படி போட்டி ஒற்றுமையைவிட உயர்ந்தது.

பெண் : அது எப்படியம்மா?

தாயார் : மனம் மாறித் திருவுருமாறினால் போட்டி பெரிய ஒத்துழைப்பாகும். அதனால் பெரிய பலன் தரும்.

பெண் : நாமிருந்த இடம் புல் முளைத்துப் போயிருக்கும் என்பதற்கு நம்மூர் ரைட்டரை உதாரணமாகச் சொல்லலாமா?

தாயார் : இதே வார்த்தையை அவர் வாயாலே சொன்னார். அது அப்பொழுது. இப்பொழுது நிலைமை மாறிவிட்டது, மாறிப் பேசுகிறார்.

பெண் : எனக்கு அவர்கள் விஷயம் தெரியும். இருந்தாலும் ஒரு முறை கேட்கலாம் என நினைக்கிறேன்.

தாயார் : அவர்கள் கேஸ் தோற்றுப் போயிருந்தால், கல்யாணம் நின்று போயிருக்கும். அடுத்த மூன்று கல்யாணமும் நடந்திருக்குமா? ரைட்டர் சண்டைக்குப் போனார். தடுக்காவிட்டால் வேலை போயிருக்கும். அவரே ராஜினாமா செய்கிறேன் என்றார். அதெல்லாம் நடந்திருந்தால், அப்புறம் என்ன இருக்கு?

பெண் : அவரா இன்று இப்படி துரோகம் செய்கிறார்? ஏன் அது?

தாயார் : நமக்கே துரோகம் செய்தாலும், நாம் அதில் மனதாலும் கலந்துகொள்ள வேண்டாம். அவர்கள் செய்வது அவர்களுடன்.

பெண் : பையனுக்கு polio வந்தது, மனைவி இறந்துபோனாள், இவருக்குப் பாரிச வாயு வந்தது. அன்னை தண்டித்தாரா?

தாயார் : அன்னை தண்டிப்பதில்லை. ஊரில் காலரா உள்ளபொழுது வீட்டில் எல்லாப் பாதுகாப்புகளும் தந்தால், பெற்றுக்கொள்ள மாட்டேன் என வெளியில் போய் சாப்பிட்டுவிட்டு காலரா வந்தால் அன்னை தண்டித்ததாக அர்த்தமில்லை. அன்னைப் பாதுகாப்பிலிருந்து வெளியேறி அவதிப்படுவதாக அர்த்தம்.

பெண் : ஏன் அப்படி ரைட்டர் செய்தார்? நல்லவராச்சே.

தாயார் : நாமே வலியப் போய் உதவி செய்தால் திரும்ப அவர்கள் துரோகம் செய்யவேண்டும் என்பது வாழ்வின் சட்டம். அனுபவசாலிகளை அதற்கு விதிவிலக்குண்டா எனக் கேட்கலாம்.

பெண் : அன்னை என்ன சொல்கிறார்?

தாயார் : அவரவருக்கு ஒரு போக்குண்டு. அது சக்தி வாய்ந்தது. நாம் அதைக் கர்மம் என்போம். அதை அவரே மாற்றலாம். பிறர் மாற்றக்கூடாது, மாற்ற முடியாது. அவர்கள் கேட்டால் செய்யலாம்.

பெண் : நல்லவர் எப்படித் துரோகம் செய்வார்கள்?

தாயார் : நல்லவர் என்பதற்கு அளவுண்டு. அளவை மீறினால் நல்லவர் கெட்டவராவார்.

பெண் : புரியவில்லை.

தாயார் : கர்மம் கடுமையானது. ஒருவர் கர்மத்தின் பாதையை நாம் திருப்ப முயன்றால், அது நம்மைக் கடுமையாகத் தாக்கும். உனக்குப் புரியவில்லை என்றால், உனக்கு உதவி செய்தவர்க்கு நீ என்ன செய்திருக்கிறாய் என்று பார்.

பெண் : அத்தனை பேருடனும் சண்டை.

தாயார் : நீ உதவி செய்தவர்கள்,

பெண் : அவ்வளவு பேரும் விலகிவிட்டனர்.

தாயார் : நட்பு என்பது சமூக உறவு. கர்மம் என்பது சமூகத்தைக் கடந்தது. நட்பு சமூகத்தின் வரையறைக்குள்ளிருந்தால் நீடிக்கும்.

பெண் நம் குடும்பத்தைப் பற்றிப் பேசுவோம்.

தாயார் : அது பேசக்கூடாது.

பெண் : அது தானே எனக்குப் புரியும்.

தாயார் : நான் அதைச் சொல்லக்கூடாது.

பெண் : பின், நானெப்படி அதைப் புரிந்துகொள்ள முடியும்?

தாயார் : அனுபவம் காட்டும்.

பெண் : இந்த ரைட்டர் விஷயத்தில் புரிகிற மாதிரி சொல்லக் கூடாதா?

தாயார் : அவரிடம் நமக்குப் பிரச்சினை என்பதேயில்லை. அவரே தம்மை நமக்கு எதிரியாகக் கருதி, எதிரியாக நடந்தார். நாமே அவருக்கு வலிய செய்த உதவி நமக்குப் பாதகமாகிவிட்டது.

பெண் : நினைக்கவே பயமாகயிருக்கே. அண்ணன், தம்பிக்கும் அதே சட்டமா?

தாயார் : சட்டம் அனைவருக்கும் ஒன்றே.

பெண் : எனக்குக் கல்யாணமானால் நான் அவரிடம் எப்படிப் பழகுவது?

தாயார் : நியாயப்படி, கடமையைச் செய்தால் தவறு வாராது.

பெண் : நாமே பிரியப்பட்டு நல்லது செய்யக்கூடாதா?

தாயார் : பிரியத்தைப் பிரியமாக ஏற்றுக்கொண்டால் தவறு வாராது. அல்லது நாம் செய்கிறோம் என அவர்களுக்கு புரியாவிட்டால் கஷ்டம் வாராது.

பெண் : 'நம்மை' அழித்துச் செயல்பட்டால் தவறு வாராதோ?

தாயார் : சட்டத்தின் மையமே "நாம்''தானே.

பெண் : பார்ட்னர் நமக்கு இவ்வளவு பெரிய விஷயத்தைச் செய்கிறாரே.

தாயார் : நாம் நன்றியோடு பெற்றால் நாம் அவர்கட்குத் தவறு செய்யமாட்டோம்.

பெண் : அப்படி ஒன்றிருப்பதாக யாருக்கும் தெரியவில்லையே.

தாயார் தம் மனத்தோடு போராடுவதில் பலன் தெரியவில்லை. மனத்தில் பலன் தெரியாவிட்டாலும், வெளியில் பெரும் பலன் வருவது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. கணவனும், பெரிய மகனும் வெளியில் போய் வந்தவர்கள் முகம் ஜொலிக்கின்றது. ஏதோ பெரிய காரியம் நடந்தது போலிருக்கிறது. தாயார் தாமே கேட்கக் கூடாது என்றிருந்தாலும், மனம் கேட்கிறது. மனத்தை அடக்கிக்கொள்கிறார். பிள்ளையோ கணவனோ பேசும் நிலையிலில்லை. பேசக்கூடாது என்றில்லை. அவர்களால் பேசமுடியவில்லை என்று தெரிந்து, உள்ளே போய்விடுகிறார். பெண் தன் தோழியுடன் வந்து அவளுடைய அக்கா வாழ்வில் புது மலர் பூத்திருப்பதாகக் கூறினாள். விவரம் கூறவில்லை. விபரம் கூற வந்ததாகத் தெரிகிறது. பேசும்பொழுது மற்றவர்கள் வந்துவிடுவார்கள் என்ற அச்சம். பேசப் பிரியப்படுகிறாள், ஆனால் பேசவில்லை. ஏதோ ஒரு புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தார்.

எல்லை வரைக்கும் வருவது கடினம்.

எல்லையைக் கடப்பது அதனினும் கடினம்

என்றிருந்தது. தன் மனநிலையைச் சரியாகப் பிரதிபலிப்பதாக அறிந்தார். உள்ளே நிதானமேயில்லை. வெளியில் முழு நிதானத்துடன் செயல்படுகிறார். பூஜை அறையில் தியானத்திற்குப் போனால் தியானம் கூடவில்லை. அடுத்த பல நாட்களில் வழக்கமான தடையுள்ள இடங்களில் சூழல் தலை கீழே மாறிச் சாதகமாக இருக்கிறது.

1. Gas முடிந்துவிட்டால் போய் சொல்லி கேட்டு மெனக்கெட்டு காத்திருந்து வாங்கி வருவது வழக்கம். இன்று gas தீர்ந்தது. வெளியில் gas சிலிண்டர் சத்தம் கேட்கிறது. எப்படி நடந்தது எனப் புரியவில்லை.

2. போன் ரிப்பேரானால் 10 நாட்களாவது காத்திருப்பது வழக்கம். ரிப்பேர் கம்ப்ளெயிண்ட் கொடுக்கப் போனபொழுது எதிரில் போன் ஆட்கள் வருகிறார்கள். ரிப்பேர் செய்துவிட்டுப் போகிறார்கள்.

3. T.V. அடிக்கடி ரிப்பேராவது 10 நாட்களாக எந்தக் குறையுமில்லாமல் வேலை செய்கிறது.

4. சிறியவன் வாரத்தில் 2 அல்லது 3 முறைகள் எதையாவது தொலைத்துவிட்டுத் தேடுவான். 10 நாட்களாக அதுவுமில்லை.

5. கரண்ட் தினமும் 2 மணி இருக்காது. 10 நாட்களாக ½ மணி இருப்பதில்லை. முக்கிய நேரத்தில் கரண்ட் தவறுவதில்லை.

6. 3 நாட்கள் தொடர்ந்து மாத்திரை தேடாமலிருந்ததில்லை. 10 நாட்களாக மாத்திரை என்ற பேச்சேயில்லை.

7. பெரியவன், சிறியவன், கணவர், பெண், வீடு ஆகிய இடங்களிலிருந்து சிறு சிறு நல்ல விஷயங்கள் தொடர்ந்து வருகின்றன.

மனைவிக்கு பாக்டரிதான் முக்கியம். மேற்சொன்னவை மனத்திற்கு அபாரதிருப்தி. விஷயம் பாக்டரியில்லை, மனத்திலுள்ளது என்பவை மேற்சொன்ன சிறிய விஷயங்கள் காட்டுகின்றன. மனத்தை பாக்டரியிலிருந்து திருப்பி நடைமுறைக் காரியங்களில் நாம் செய்ய வேண்டியதை நாம் நிறைவாக - குறைவற - செய்தால் பாக்டரி விஷயம் தானே பூர்த்தியாகும் என்று மனம் மணியடித்தாற்போல் கூறுகிறது. இந்தத் தெளிவு அவர் மனப்பாரத்தை இறக்கி வைத்தது. பெண்ணோடு இதர பக்தர்கள் விஷயங்களைப் பேசும்பொழுது தெளிவு ஏற்படுவதையும், மனத்தால் எரிச்சல், குறைபடாமலிருந்தால் சூழல் மாறுவதையும் பார்த்தபின் பிள்ளைகளுடன், கணவருடன் மேற்சொன்ன விஷயங்களைப் பேசுவது என முடிவு செய்து முடிவை சமர்ப்பணம் செய்தார், சமர்ப்பணமாயிற்று.

தாமே போய் அதைச் செய்யக் கூடாது. அவர்கள் வந்து கேட்கும்வரைக் காத்திருப்போம் என்பது முடிவு. இம்முடிவு சற்று சந்தோஷம் தருவதையும் கண்டார். இம்முடிவை எடுத்தவுடன், கணவனும், பெரியவனும் பார்ட்னர் விஷயங்களைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டனர். பெண் அன்னையைப் பற்றி மேலும் அறிய விரும்பி அகம் - புறத்தைப் பற்றிக் கேட்டாள். தாயார் அவளுக்கு ஓர் அமெரிக்கப் பெண்மணியின் அனுபவத்தை எடுத்துக் கூறினார். காதரீன் என்ற இப்பெண் பெரிய சம்பளம் பெறுபவர். விவாகரத்து செய்து இரு மகன்களுடன் வசிக்கிறார். இரு பிள்ளைகளும் மதுவாலும், போதையாலும் பாதிக்கப்பட்டவர்கள். அன்னையை அறிந்தபின் பிள்ளைகள் வாழ்வில் தொந்தரவு குறைந்து நல்ல முன்னேற்றம் தெரிந்தது. அளவுகடந்து குடித்த காதரீன் குடிப்பதைக் குறைத்துவிட்டாள். நான்கு நாட்கள் ஒரு கம்பெனியில் ஆபீசராக வேலையை ஏற்று, வாரத்தில் மீதி 3 நாட்கள் தன் வியாபாரத்தை நடத்தினாள்.

வேலையில் ஆபீசராகச் சேர்ந்தார். இவர் கீழே வேலை செய்யும் பெண் ஒருத்திக்கு $85,000 சம்பளம். இது பெரிய சம்பளம். இக்கம்பெனியில் யூனியன் உண்டு. யூனியன் உள்ள கம்பெனி தலைவலி. வேலை செய்யாவிட்டாலும் ஆட்களை அனுப்ப முடியாது. அனுப்புவதானாலும் செலவு அதிகம், நாளாகும். $85,000 சம்பளம் பெற்று வேலை செய்யாத பெண்மணியை யூனியன் இருப்பதால் அனுப்ப முடியவில்லை. காதரீன் வேலையில் சேர்ந்தபொழுது முதலாளி அவருக்குக் கொடுத்த முதல் வேலை அப்பெண்மணியை வேலை நீக்கம் செய்வது. அந்த நிபந்தனை பேரில் காதரீன் வேலையை ஏற்றார். முதலாளி, "யூனியனிருப்பதால் எங்களால் இப்பெண்ணை வேலையிலிருந்து எடுக்க முடியவில்லை. அப்படி எடுக்க முடிந்தால், சட்டதிட்டங்களைப் பின்பற்ற 18 மாதங்கள் ஆகும். உங்களால் செய்ய முடிந்தால் நன்றியுடனிருப்பேன்'' என்றார். காதரீன் ஒத்துக்கொண்டார்.

காதரீன் அப்பெண்மணியுடன் பேசினார். ரொம்ப நாள் யோசனை செய்தபின் புறத்தை அகத்தால் வெல்ல முடிவு செய்தார். அப்பெண்ணின் குணங்கள் தனக்கிருப்பதைக் கண்டார். அவற்றை விலக்க முடிவு செய்து உள்ளே வேலையை மேற்கொண்டார். 3,4 வாரங்கள் கழித்து அப்பெண் காதரீனிடம் வந்து தானே வேலையை விட்டுப்போகிறேன் என்றாள். அதை முதலாளியிடம் காதரீன் கூறியபொழுது அவரால் நம்பமுடியவில்லை.

புறவெற்றி அகக்கட்டுப்பாட்டில் உள்ளது.

இதைக்கேட்ட பெண் தாயாரை வியந்தாள். மேலும் மேலும் அன்னையைப் பற்றி அறிய விரும்பினாள். அதுபோல் தம் வீட்டில் எவற்றைச் செய்யலாம் எனக் கேட்டாள். பெண் ஆர்வமாகக் கேட்பது தாயாருக்குச் சந்தோஷம். பெரியவன் பார்ட்னருக்கு ஒரு சட்டம், நண்பனுக்கு ஒரு சட்டம் - இரண்டும் தனக்கு சாதகமானவை - எனப் பேசுகிறான். அறிவில்லாதவனில்லை. சுயநலத்தைச் சரி எனப் பேச அறிவைப் பயன்படுத்துகிறான். இவனுக்கு எதைச் சொல்ல முடியும்? அது சரி என அப்பா பேசுகிறார். மனமாற்றத்திற்கு இங்கு வழி ஏது? என்பது தாயாரின் சிந்தனை. அந்த அளவுக்குத் தாயார் மனம் மாற வேண்டுமானால், அது முழு யோகமாகிறது. யோகமும், யோக வாழ்வும் ஒரே மாதிரியானவை. ஒரு டிபார்ட்மெண்டில் கிளார்க் கடைசி வேலை. செக்ரடரி, இலாக்கா தலைவர் என்றாலும் ஊழியருக்குண்டான சட்டம் இருவருக்கும் பொது. இரண்டு பேருக்கும் வருஷத்தில் 12 நாட்கள் casual leave. தலைவருக்கு அதிக நாளும், குமாஸ்தாவுக்கு குறைந்த நாளும் இல்லை. நிலை மாறுபட்டாலும் செக்ரடரியும், குமாஸ்தாவும் சர்க்கார் ஊழியர்களே. அதேபோல் மனித வாழ்விலிருந்து விலகி அன்னை வாழ்வுக்கு வந்தால் - பிரைவேட் கம்பெனி வேலையிலிருந்து சர்க்கார் வேலைக்கு வந்தால் - வாழ்வின் தரம் மாறும். யோக வாழ்வு என்பது கிளார்க் வேலை போன்றது. யோகம் செக்ரடரி வேலை போன்றது. வாழ்விலிருந்து அடிப்படையில் மாறாமல் அன்னை வாழ்வுக்கு வர முடியாது. தாயார் யோக வாழ்வை அடியில் ஏற்கத் தயார், சிகரத்தில் ஏற்பது சிரமம்.

சிறியவன் தாயாரிடம் வந்து நம்மூருக்கு ஜனாதிபதி வரப்போகிறார் என்று கூறினான். ஜனாதிபதி இங்கு வருவது இதுவே முதல் முறை. தாயாருக்கு "அன்னை நமக்கு அதிர்ஷ்டமாக வருவதை, ஜனாதிபதி நம்மூருக்கு வருவது காட்டுகிறது'' என்று புரிந்தது. எவரிடம் இதைக் கூறினாலும் சிரித்துவிடுவார்கள்.

. சூட்சுமச் செயலை சூட்சும உடலின் நன்றியால் வரவேற்று,

. செயலால் ஆதரவு அளித்து,

. மனத்தின் உணர்வால் போற்றினால்

வருவது பலிக்கும், நிலைக்கும்.

. பராமுகமாக இருந்தால் வந்தது சொல்லாமல் போய்விடும்.

. கடுமையாகப் பேசினால் அதன்மீது அடி விழும்.

. கேள்வி எழுப்பினால், பதில் சொல்லாமல் போய்விடும், அந்தக் கேள்வியை நம்மிடம் ஆயிரம் பேர் அடுத்த 10 ஆண்டிற்குக் கேட்பார்கள்.

. அவசரப்பட்டால், தள்ளிப்போகும்.

. கேலி செய்தால், நாம் கேலிக்குரியவராவோம்.

அதனால் இந்த அற்புதமான எண்ணத்தை வெளியிட நம் வீட்டில் எவரும் இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கும்பொழுது கணவர் வந்து இதே செய்தியை மீண்டும் கூறி, இது நமக்கு எதைக் காட்டுகிறது என்றார். மனைவிக்கு ஆச்சரியம், சந்தோஷம். அதுவே நல்ல நேரம் எனப் பேச ஆரம்பித்தால் அடுத்தாற்போல் கணவர் என்ன சொல்வார் என்று தெரியாது என்பதால், "ஊருக்கு அதிர்ஷ்டம்'' என்பதுடன் நிறுத்த முயன்றார். 'அதைக் கேட்கவில்லை, நமக்கு என்ன சொல்கிறது எனக் கேட்கிறேன்' என்றார். 'நமக்கும் அதிர்ஷ்டம்' என்று பதில் கூறினாள். 'ஊர் அதிர்ஷ்டம் நமக்கு வருகிறதா? நம் அதிர்ஷ்டம் ஊருக்கும் வருகிறதா?' என்று கணவர் கேட்டபொழுது இவருக்குப் புரிய ஆரம்பிக்கிறது என்று நினைத்து, 'அன்னை விஷயம் பெரியதல்லவா?' என்றாள். அதன்பின் அவரிடம் இதுவரை சொல்லாத செய்தியைச் சொல்ல முயன்றார்.

கணவர் : பார்ட்னர் என்னையும், பெரியவனையும் அவர் நண்பர் ஒருவர் வீட்டிற்கு அழைத்துப் போய் அறிமுகம் செய்தார். அங்கு மத்திய சர்க்கார் அதிகாரி ஒருவரிருந்தார். அவரையும் அறிமுகப்படுத்தினார். இருவரும், 'நீங்கள் எங்கள் ஊருக்கு - பம்பாய், டெல்லி - வந்தால் என்னை வந்து பாருங்கள்' என்றார். இதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாதது. அதன்பின் ஒரு வாரம் எனக்கு மனம் ஒரு நிலையிலில்லை. உன்னிடமும் என்னால் பேசமுடியவில்லை. இதெல்லாம் பெரிய விஷயம். நல்லபடியாக நடக்க நான் என்ன செய்ய வேண்டும்?

மனைவி : என்னவோ பெரிய காரியம் நடந்ததாக அறிந்தேன்.

கணவர் : நான் கேட்டதற்குப் பதில் சொல்லவில்லையே.

மனைவி : அன்னை, இதுபோன்ற நேரத்தில் நாம் நன்றியுடையவராக இருக்கவேண்டும் என்கிறார்.

இந்தச் சமயம் பெண் வந்து தாயாரை வேறு வேலையாக அழைத்துப் போய்விட்டாள். தாம் கேட்ட கேள்விக்கு மனைவி சரியான பதில் சொல்லவில்லை என கணவருக்குக் கோபம். கணவர் கேட்ட கேள்விக்குச் சரியான பதில் சொன்னால் சண்டை வரும் என்று மனைவிக்குத் தெரியும். இப்பொழுது செய்யக்கூடியது சமர்ப்பணம் மட்டுமே. அது மட்டும் தனக்குப் பிடிபடாதது என மனைவி அறிவார்.

பெண் மீண்டும் வந்து அம்மாவிடம் அன்னையைப் பற்றிக் கேட்டாள். ஏன் அப்பா கோபமாக இருக்கிறார் என்றாள். தாயார் பெண்ணிடம் பேசும்பொழுது, சிறிய கடைக்காரனை மந்திரி பெரிய மனிதனாக்கியதை விளக்கிக் கூறினார். கடைக்காரன் கொஞ்ச நாளில் பெரிய மனிதனாகி, எல்லோரையும் அதிகாரம் செய்ய ஆரம்பித்து அனைத்தையும் இழந்தது பெண்ணிற்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றாள். ஏன் இப்படி நடக்கிறது எனத் தாயாரைக் கேட்டாள்.

தாயார் : இது யார் விஷயத்தில் நடக்கவில்லை?

பெண் : ஏன் என்பதே என் கேள்வி.

தாயார் : அளவுக்கு மீறி அதிகாரம் வந்தால் நிலைகுலைவது இயற்கையல்லவா?

பெண் : இதுவரை வாழ்வில் உயர்ந்தவர்கள் எப்படி உயர்ந்தார்கள்?

தாயார் : 1) பரம்பரையாக வந்த அந்தஸ்து.

2) பெரிய படிப்பும், பண்பும் உள்ளவர்க்குத் திடீரென உயர்ந்த அந்தஸ்து வந்தால் அப்பண்பு காப்பாற்றுகிறது.

3) அடக்கத்தின் உயர்வை எக்காரணத்தாலோ அறிந்தவர்க்கு அடக்கம் படிப்பு, பண்பு ஆகிய இரண்டும் செய்வதைச் செய்யும்.

பெண் : நமக்கு எதுவுமில்லையே. இந்த பாக்டரி நமக்கு நிலைக்குமா?

தாயார் : நமக்கு அன்னையிருக்கிறார். அவரை ஏற்றால் காப்பாற்றுவார்.

பெண் : அன்னையை ஏற்பது என்றால் என்ன?

தாயார் : அடக்கம், பணிவு, பண்பு சேர்ந்தது அன்னையாகும். நாம் நம்மை மீறிச் செயல்பட வேண்டிய நேரங்களில் அன்னை சந்தர்ப்பத்தை மாற்றிக் காப்பாற்றுவார்.

பெண் : விளக்கமாகச் சொல்லுங்களேன்.

தாயார் : அசம்பாவிதமாகப் பேசுபவர் தம் காரியத்தைத் தாமே கெடுத்துவிடுவார். அவர் பேச ஆரம்பிக்குமுன் அன்னை வேறொருவரை வரச் சொல்லி நிலைமையைக் காப்பாற்றுவார்.

பெண் : அதைவிட நாமே அடக்கமாக இருப்பது நல்லது.

தாயார் : அதை யாரிடம் சொல்ல முடியும்? பாக்டரி வருவதற்குள் நண்பனைப் பெரியவன் அதிகாரம் செய்கிறான். அது ஆபீசில் சண்டையாக வருகிறது.

பெண் : அண்ணனைக் கூப்பிட்டு கண்டிக்க வேண்டும்.

தாயார் : அவனால் முடிந்த விஷயத்தைக் கண்டித்தால் செய்வான். இது அவன் சுபாவம், அவனுடைய கட்டுப்பாட்டிலில்லை.

பெண் : அதற்காக பாக்டரி கெட்டுப்போனால், அப்பா சொல்லக் கூடாதா?

தாயார் : தம்மால் முடியாததைப் பிள்ளையைச் செய்யச் சொன்னால் நடக்குமா?

பெண்: அப்பாவே அண்ணாபோலத்தானிருக்கிறார்.

தாயார் : மதர்கிட்டேதான் சொல்லணும்.

பெண் : நீங்கள் சொல்வதைப் பார்த்தால், அதிர்ஷ்டம் வர பண்புதான் முக்கியமா?

தாயார் : உழைப்பு, சாமர்த்தியம், சாதுர்யம், உஷார் இருந்தால் பணம் வந்துவிடும். அதைக் காப்பாற்ற பதம், பக்குவம், அடக்கம், பண்பு வேண்டும்.

பெண் : இவையெல்லாம் இல்லாதவர்க்குப் பணம் ஏராளமாக வருகிறதே.

தாயார் : வந்த காலத்தில் இந்த அடக்கம் இருந்திருக்கும். பணம் வந்தபின் அடக்கம் போய்விடும். அது போனால், பின்னாலேயே பணமும் போகும்.

பெண் : அதனால்தான் 30 ஆண்டு வாழ்ந்தவனில்லை என்றார்களோ? எப்படி ஒருவர் மட்டும் 100 கோடிக்கு மேல் சம்பாதித்தார்?

தாயார் : இந்தக் குடும்பம் பரம்பரையாகச் சில நல்ல குணங்களை உடையது.

1) எவரையும் மறுத்துப் பேசாத பழக்கம் பரம்பரையானது.

2) அவர்கள் ஊர் சற்று பண்பான ஊர். சுயநலம் குறைவான மக்கள். பிறரை உதவி கேட்கமாட்டார்கள். திறமையான உழைப்பாளிகள். மலர்ந்த முகம் உடையவர்கள்.

3) அக்குடும்பம் 100 காணி நிலம் உடைய குடும்பம்.

4) இரவு பகலாக உழைப்பவர்கள்.

5) முக்கியமாக தமக்குரிய உரிமையைக் கேட்டுப் பெறமாட்டார்கள். தானே வந்தால் பெற்றுக் கொள்வார்கள்.

முதற்குணம் அடக்கம், பரம்பரையில் பண்புள்ளது, சொத்துள்ளது, உழைப்பு. எல்லாவற்றிற்கும் மேலாக உரிமையைக் கேட்பதில்லை என்றால் உரிமையில்லாதது எல்லாம் வரும்.

பெண் : நம் வீட்டிலுள்ள நல்ல குணம் ஏதாவது கூறமுடியுமா?

தாயார் : அன்னை வருவதை முயன்று எதிர்க்கமாட்டார்கள்.

பெண் : அப்படியும் மனிதர்கள் உண்டா?

தாயார் : ஏராளம். "இந்த மதர் எனக்கு வேண்டாம்'' என்பது மந்திரம்போல் ஒலிப்பது.

பெண் : எனக்குத் தெரியாதே.

தாயார் : ஜெர்மனியில் பயிற்சியான தொழில் அதிபர் 11 இலட்ச வியாபாரம் 50 இலட்சமானபின், வண்ணான் மனையை எடுத்துக்கொண்டு போனது திரும்பிவந்தபின், இரண்டு கண்களும் பார்வையிழந்து டாக்டர் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றபின் பார்வை வந்தபின், அன்னை disciplineகளைக் கேட்டு, "இப்படி தெரிந்திருந்தால் நான் வந்திருக்க மாட்டேன்'' என்று போனவர்தான்.

பெண் : என்னால் நம்பமுடியவில்லை.

தாயார் : மதரிடம் வந்து ஆபத்து விலகியபின் அல்லது 5 மடங்கு சொத்து பெருகியபின், நடக்காதது நடந்தபின், "இந்த மதர் வேண்டாம்'' என்று சொல்லாதவரில்லை.

பெண் : ஏன்?

தாயார் : அன்னைச் சூழல் மனிதர் மாறாமல் ஓர் அளவுக்குச் சாதிக்கும். பொதுவாக இது இரண்டு முதல் 10 மடங்காக இருக்கும். படிப்பு, பண்பு, அடக்கத்தைப் பொருத்து ஒரு கட்டத்தில் மேலும் அருள் பெற அல்லது வந்ததைக் காப்பாற்ற மனிதன் மாற வேண்டும். அக்கட்டத்தில் இதைச் சொல்லாதவரில்லை.

பெண் : அப்போ, மனிதன் மாற சம்மதிக்க மாட்டான் என்றாகிறது.

தாயார் : ஆமாம்.

பெண் : இதற்கு வழி என்ன?

தாயார் : 100 வருஷத்திற்கு முன் படிப்பு வந்தபொழுது உடனே ஏற்ற ஏழைக் குடும்பங்கள் அனைத்தும் இன்று டெல்லி, வாஷிங்டன், சென்னையில் முதல் வரிசையில் உள்ளனர். அன்று படிப்பை ஏற்காதவர்கள் இன்று கடை வியாபாரி, விவசாயி, குமாஸ்தா என உள்ளூரில் இருக்கின்றனர்.

பெண் : காலம் மாறும்பொழுது, மாற மறுப்பவருக்குக் காலத்தால் பயனில்லை.

தாயார் : அன்னை யுகத்தை மாற்றிவிட்டார்.

பெண் : அதற்கேற்ப மாற முடியவில்லை.

தாயார் : வரப்போகும் பலனுக்காக இன்று மாறுவது சுபாவமில்லை.

பெண் : நம் வீடு எப்படி?

தாயார் : விலக்கன்று.

பெண் : எதுவும் செய்ய முடியாதா?

தாயார் : தங்கம் கட்டியாக வழியில் விழுந்தபின், கண்ணை மூடிக்கொண்டால் என்ன செய்வது?

பெண் : ஏதாவது செய்யாமலிருக்கக் கூடாது.

தாயார் : எது செய்வதானாலும் உள்ளே - அகத்தில் - செய்ய வேண்டும்.

பெண் : இதில் ஏதோ பெரிய சிரமம் உண்டு போலிருக்கிறது. அதைச் சொல்லுங்களேன்.

தாயார் : அடக்கம், படிப்பு, பண்பு எல்லாம் சத்தியத்தில் அடங்கும்.

பெண் : நாமெல்லாம் பொய் சொல்கிறோமா?

தாயார் : நாம் சொல்லும் மெய் எல்லாம் பொய்.

பெண் : புதிர்.

தாயார் : திருட்டுக் கும்பலில் உண்மை என்றால் என்ன?

பெண் : எவரையும் காட்டிக் கொடுக்காமலிருப்பது.

தாயார் : திருடர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாயிருப்பது திருட்டைக் - பொய்யை - காப்பாற்ற.

பெண் : நாம் என்ன அப்படித் தவறு செய்கிறோம்?

தாயார் : சிறிய விஷயத்திலும், மிகச் சிறிய விஷயத்தில் அது வெளிப்படாமலிருக்காது.ஆனால் அங்கு அது புரியாது. மிகைப்படுத்திக் கூறினால் புரியும்.

பெண் : இரண்டையும் சொல்லுங்க.

தாயார் : ஒரு கத்தரிக்கோலை எடுத்து பேப்பரில் ஒரு துண்டு வெட்டியபின் அண்ணன் என்ன செய்வான்?

பெண் : வெட்டியதை எடுத்துக் கொண்டு மீதிப் பேப்பரை அங்கேயே கத்தரிக்கோலுடன் வைத்துவிட்டுப் போய்விடுவார்.

தாயார் : மனிதனுக்கு choice எந்த நேரமும் உண்டு. அண்ணன் செய்வது பொய். கத்தரிக்கோலுக்கு, பேப்பருக்கு, வேலைக்கு, தனக்குப் பொய். பேப்பரை மடித்து இடத்தில் வைத்துவிட்டு, கத்தரிக்கோலை எடுத்த இடத்தில் வைப்பது தனக்கும், பொருள்கட்கும் மெய்.

பெண் : இதுதான் choice என்பதா?

தாயார் : 1 இலட்சத்திற்கு வாங்கிய சொத்து, 6 வருஷத்தில் 9 இலட்சமாயிற்று.

பெண் : அது அருளால் நடந்ததா?

தாயார் : நான் பேசுவன எல்லாம் அருளின் செயல்கள்தாமே. அவசரப்பட்டு 3¾ லட்சத்திற்கு விற்றார். எந்த நிர்ப்பந்தமுமில்லாதபொழுது அவசரம் உள்ளிலிருந்து வருகிறது. உலகமே தடுத்தது. விற்றார். அடுத்த 11 வருஷத்தில் 76 இலட்சமாயிற்று. உழைத்தவர் பெறவில்லை. ஏன்? அவர் குடும்பத்தில் உழைப்பின் பலன் பிறருக்குப் போகும் என்ற சாபம். சாபத்தை மாற்றும் அன்னை வந்தபின் அவசரம் செயல்பட்டது.

பெண் : யோகக் காரணம் உண்டா?

தாயார் : இவருக்குப் பணத்தைவிட மனைவி தம்மைப் பணக்காரன் என நினைக்கவேண்டும் என்பது முக்கியம்.

பெண் : எந்தப் பெண்ணும் அந்தப் பெருமையைக் கணவனுக்குத் தரமாட்டாள்.

தாயார் : இந்தப் பெண்ணும் தரவில்லை. நீ ஏழை எனச் சுட்டிக் காட்டினாள்.


 

தொடரும்....

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஒரு நிலையில் அன்னையை ஏற்றுக்கொண்டால், அந்நிலையிலுள்ள அறிவு, பூரணம் பெற்று ஞானமாகும். அடுத்த நிலைகளில் (உயர்ந்தது அல்லது தாழ்ந்தது) உனக்குள்ள அறிவையும் இந்நிலையில் தெளிவுபடுத்தும்.

. எங்கு அன்னையைப் பூரணமாக ஏற்றாலும் அங்கு அன்னை எல்லா

ஞானத்தையும் பூர்த்தி செய்வார்.

. பூரணமாக அன்னையை நாடினால், ஞானம் அந்நிலையில் பூரணம்

பெறும்.

. ஞானத்தையும் பூர்த்தி செய்வார்.


 


 

 


 


 



book | by Dr. Radut