Skip to Content

10.யார் சாதகர்?

"அன்னை இலக்கியம்''

யார் சாதகர்?

                                      (சென்ற இதழின் தொடர்ச்சி....)                        

                                                                                                        இல. சுந்தரி

ஒருநாள் 'கோல்கொண்ட்' கட்டட வேலை நடக்குமிடத்திற்கு வேலை முடியும் நேரத்தில் சாதகரை அனுப்பி, நேரே ஆட்களுக்குக் கூலி கொடுத்துவரச் சொன்னார். சாதகருக்கு உள்ளூர மகிழ்ச்சி. யாரோ ஒரு சிறுவன் அன்னைக்குத் தன் உழைப்பைச் சமர்ப்பணம் செய்வதாகக் கூறினார்களே, அச்சிறுவனுக்கு முன் தான் அன்னையால் பிரத்யேகமாய் அனுப்பப்பட்டவன் என்பதை உணர்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.

ஆட்கள் வேலை கலைந்து கூலி பெற வழக்கமாய் கூடும் இடத்தில் கூடினர். தலைமை பொறுப்புடைய மேஸ்த்திரி, அவர்களிடம் இன்று அன்னையிடமிருந்து சாதகர் வந்திருப்பதால் அவரிடம் வரிசையாகச் சென்று கூலி பெறலாம் என வரிசைப்படுத்தி அனுப்பிக் கொண்டிருந்தார். வரிசையாகச் சென்று ஆட்கள் கூலி பெற்றனர். சித்தாள் எண்ணிக்கை 30 ஆக இருந்தது. 29 பேரே கூலி பெற்றனர். இன்னும் ஓர் ஆள் குறைவதாகச் சாதகர் கூறவே தலைமைக் கொத்தனார், "மாணிக்கம் மட்டும் கூலி பெற மறுத்துவிட்டான்'' என்று கூறினார். சாதகர் அவனை அழைத்து, "அன்னை கொடுக்கும் கூலியை மறுக்கிறாயே, அது குற்றமில்லையா?'' என்றார். எப்படியாவது இவனைப் பணம் பெறச் செய்யவேண்டும் என்று எண்ணினார் சாதகர்.

சிறுவன் அடிபட்டதுபோல் துடித்துப்போனான். "ஐயய்யோ! அப்படிச் சொல்லாதீர்கள். அன்னை கொடுப்பதை நான் மறுக்கவில்லை. என்னிடம் அர்ப்பணம் செய்ய எதுவுமில்லாததால் என் உழைப்பைச் சமர்ப்பணம் செய்தேன். அன்னையின் ஆணையை நான் மீறமாட்டேன்'' என்றான் பணிவாக.

"இந்தா பெற்றுக்கொள்'' என்று கூலியைக் கொடுக்கச் சிறுவன் பணிந்து பெற்றுக்கொண்டான். அதை அவன் என்ன செய்கிறான் என்பதையும் அந்தச் சாதகர் கண்காணித்தார். அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டதும் மேல்நாட்டுப் பொருட்கள் விற்பனையாகும் இடத்திற்குச் சென்று அழகிய சிறிய பெண்கள் பயன்படுத்தும் குடையொன்று சிறுவன் வாங்கினான். அதைப் பாதுகாப்பாய் எடுத்துப் போனான். இதைக் கண்ட சாதகர் "யாரோ ஒரு பெண்ணுக்குப் பரிசளிக்க இந்தக் குடையை வாங்கிப் போகிறான். இப்படித் தேவையுள்ள இவன் எதற்காகக் கூலிவேண்டாமென நடிக்கிறான்'' என்று எண்ணியவண்ணம் ஆஸ்ரமம் திரும்பினார்.

"சிறுவன் ஏதோ ஒப்புக்குச் சமர்ப்பணம் என்கிறான். காசைக் கண்டதும் பெற்றுக்கொண்டான். இதைப்போய் எல்லோரும் பெரியதாய் பேசுகிறார்களே. உண்மையில் அவன் சமர்ப்பணம் சிறந்ததானால் அன்னை என்னை அனுப்பி கூலி தரும் பணியை என்னிடத்து ஒப்படைத்திருப்பாரா?'' என்றார் பெருமிதமாக. அன்னை தம் அறையில் இருந்தவண்ணம் சிரித்துக்கொண்டார். உடன் வெளியே வந்தார். இவரைக் கண்டதும் சாதகர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

அன்னை குறும்பாக மேற்படி சாதகரின் பெயரைக் கூறி, "அவனைத்தான் நான் மிகவும் நம்பியிருப்பதாகச் சொல்கிறானா?'' என்றார்.

ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. மறுநாள் நல்ல உச்சி வெயில் நேரத்தில் அன்னை திடீரென்று மேற்படி சாதகரையும் அழைத்துக்கொண்டு 'கோல்கொண்ட்' கட்டட வேலைப் பகுதிக்குச் சென்றார். "இந்த வெயில் நேரத்தில் ஏன் அன்னைப் புறப்படுகிறார்? வேலை முடிந்தபிறகு மாலையில் என்றாவது வேலையின் வளர்ச்சியைக் காணச் செல்வார். இன்று இந்த வேளையில் ஏன் திடீரென்று புறப்படுகிறார்?'' சாதகருக்குப் புரியவில்லை.

காரை விட்டு இறங்கி அன்னை வருவதைக் கண்டதுமே சிறுவன் ஓடிவந்தான். அந்தச் சிறிய மடக்கப்பட்ட குடையை பத்திரமாகத் தன் இடுப்பில் கட்டி வைத்திருந்தான். அதைப் பிரித்து எடுத்துவந்தான். அன்னையின் பாதங்களைப் பணிவுடன் வணங்கி அழுக்குப்படாமல் பத்திரமாகப் பாதுகாத்து வைத்த அந்த அழகிய பூவேலைப்பாடுமிக்க வண்ணக்குடையை தன் இரண்டு கைகளிலும் ஏந்திப் பணிவுடன் நிற்கிறான். அன்னை புன்முறுவலுடன் அதைப் பிரித்துப் பிடித்துக்கொண்டவுடன் சிறுவன் மகிழ்ச்சி ததும்பப் பார்த்துவிட்டு ஓடிவிட்டான் சிமெண்ட் 'கலவை' தூக்க. அன்னை தன் பக்கத்தில் வரும் சாதகரைப் பார்த்தார். இந்த அன்பிற்குமுன் தான் தோற்றுப்போனதை அவர் முகம் பறைசாற்றியது. "இப்பொழுது என்ன சொல்கிறாய்?'' என்பதுபோலப் பார்த்தார். அந்தத் தெய்வத்தின் திருவிளையாடல் யாருக்குத் தெரியும்? அன்றே அவர் நாட்குறிப்பில், என்ன எழுதினார் தெரியுமா?

"சாதனையில் முன்னேற்றமோ, உயர்ந்த திறமையோ, ஒருவன் அன்னைக்கு அருகில் இருக்கிறானா, அவரை அடிக்கடி சந்திக்கிறானா என்பதைச் சார்ந்திருக்கவில்லை என்ற பகவானின் சொல் விளங்கியது. அன்னையின் அருகேயிருந்தும் அகங்காரம் அழியாத என்னைவிட, எங்கோ இருந்துகொண்டு பூரணச் சமர்ப்பண உணர்வுடன் நடந்துகொண்ட கூலி வேலை செய்த சிறுவன் பெருஞ் சாதகன் என்பதை உணர்ந்தேன்'' என்ற செய்தியை நாட்குறிப்பில் எழுதினார் அந்தச் சாதகர்.


 

முற்றும்.

****


 



book | by Dr. Radut