Skip to Content

09.புலன்களுக்குப் புலப்படாதது

"அன்னை இலக்கியம்''

 புலன்களுக்குப் புலப்படாதது

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

 இல. சுந்தரி  

அன்றும் அப்படித்தான். வீட்டுப்பாடம் எழுத பாட்டியின் முன் (ஸ்ரீ அன்னை திருவுருவப்படத்தின் முன்) உட்கார்ந்து கொண்டாள். பாட்டி, நல்லாக் கவனி. இப்போ நான் கேள்வியை ஒண்ணு ஒண்ணாப் படிப்பேன். நீங்க பொறுமையா பதில் சொல்லித்தரணும் தெரியுமா? என்று நிமிர்ந்து பேசிவிட்டு, குனிந்து கேள்வியைப் படிக்கிறாள். பிறகு நிமிர்ந்து பாட்டியைப் பார்க்கிறாள். அவர் சொல்லும் விடையை நோட்டில் எழுதுகிறாள்.

மறுநாள் வகுப்பில் அவள் தான் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான விடை எழுதியிருந்தாள். மிஸ் அவளைப் பாராட்டினார்.

மீராவின் வளர்ப்பு மகள் அவள் என்று மிஸ் அறிந்திருந்தார். மீராவின் அறிவும், திறமையும் அந்த வட்டாரம் நன்கறியும். எனவே, குழந்தை, மீராவின் உதவியால் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான விடை எழுதியுள்ளாள் என்று மிஸ் நினைத்துக் கொண்டாள்.

அன்றிரவு மீரா வீட்டிற்கு வந்ததும் வழக்கம்போல் சிறுமியை சாப்பிட்டாயா? பள்ளி சென்றாயா? விளையாடினாயா? என்று பரிவுடன் விசாரித்தாள்.

இப்போதெல்லாம் பாட்டியைப் பற்றிய ஏக்கம் ஏதுமில்லை சிறுமிக்கு. அவர்கள் படம் என்று காணும் ஸ்ரீ அன்னையை அவள் தன் பாட்டியாகவே கண்டு உணர்ந்து மகிழ்ந்து கொண்டிருந்தாள். எனவே, எப்போதும் உற்சாகமாய் இருந்தாள்.

! பள்ளிக்கூடம் போனேன். சாப்பிட்டேன். விளையாடினேன். மிஸ் கொடுத்த கேள்விக்கெல்லாம் சரியான பதில் எழுதினேன். மிஸ் கூட இன்று என்னை ரொம்பப் பாராட்டினாங்க என்றாள் உற்சாகம் பொங்க.

எதற்குப் பாராட்டினார்கள்? என்று மேலும் விசாரித்தாள் மீரா.

நேற்று G.K. கிளாஸில் சில கேள்விகள் கொடுத்து வீட்டிலேயே ஆன்ஸர் எழுதி வரச் சொன்னாங்க. நான் மட்டும் தான் எல்லாக் கேள்விகளுக்கும் சரியான விடையெழுதியிருந்தேன் என்று மிஸ் பாராட்டினாங்க என்றாள்.

"அட! அப்படியா? எங்கே உன் நோட்புக்கைக் கொண்டு வா'' என்றாள் மீரா ஆவலுடன்.

அவளும் ஆர்வத்துடன் கொண்டு வந்து காட்டினாள். நோட்புக்கைப் பார்வையிட்ட மீரா அசந்து போனாள். ஓரிரு கேள்விகளுக்கு அவளுக்கே விடை தெரியாது. இதெல்லாம் எப்படி இவள் எழுதினாள் என்று வியந்து, மிஸ் எல்லாக் கேள்விகளுக்கும், முன்பே விடை சொல்லிக் கொடுத்துவிட்டார்களா? என்றாள் மீரா.

இல்லையில்லை. இது ஹோம் ஒர்க். வீட்டில் கேட்டுத்தான் எழுதமுடியும். மிஸ் சொல்லமாட்டாங்க! என்றாள்.

பாட்டிதான் எல்லாம் சொல்லித் தருவாங்களே. அவங்ககிட்டே கேட்டுதான் எழுதிப்போனேன் என்றாள்.

மிஸ் இந்த விடைகளெல்லாம் யாரைக் கேட்டு எழுதி வந்தாய்? என்று கேட்கவில்லையா? என்றாள் வியப்புடன்.

ஒன்றும் கேட்கவில்லையே. மீராவின் வளர்ப்பு மகள் தானே நீ? என்று மட்டும் கேட்டார்கள் என்றாள் சிறுமி.

என்ன விந்தை. மிஸ்ஸும் சொல்லித்தரவில்லை, என்னிடமும் கேட்கவில்லை. இவள் ஸ்ரீ அன்னையைத் தன் பாட்டி என்று பூரணமாய் நம்பி அன்பு செய்வது உண்மைதான். ஆனால் இவள் கூறுவது பகுத்தறிவு வாதத்திற்குப் பொருந்தாதே. பெரிதும் குழம்பினாள்.

 தொடரும்...

****

Comments

09.புலன்களுக்குப் புலப்படாதது

09.புலன்களுக்குப் புலப்படாதது

para 1, line 3 - சொல்லி த் - சொல்லித்

para 8,   do.  - சரியானவிடையெழுதியிருந்தேன் - 

                      சரியான விடையெழுதியிருந்தேன்

para 15,  do. 1 - சொல்லி த் தரவில்லை - சொல்லித் தரவில்லை

  do.        do. 3 - இவள்கூறுவது - இவள் கூறுவது



book | by Dr. Radut