Skip to Content

07.அபரிமிதமான செல்வம்

அபரிமிதமான செல்வம்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

குறைவாகச் சம்பாதிப்பவன் அதிகமாகச் சம்பாதிப்பது அவனுக்கு அதிக வருமானம். சமூகத்தில் உள்ள பணத்தின் அளவு அதனால் மாறாது. சமூகத்தில் உள்ள பணத்தின் அளவு பெருகுவது சமூகத்தின் வருமானம் அதிகரிப்பதாகும். அதையே பணம் பெருகுவது எனலாம்.

  • என்றும்போல் வாழ விரும்புபவர்க்கு அதிக வருமானத்தால் பெரும் பலனில்லை.
  • முன்னேற விரும்புபவன் முன்னேற்றத்திற்குரிய அதிக சக்தியை உற்பத்தி செய்வான். அதிக சக்தியை உற்பத்தி செய்ய லிமிட் கிடையாது. சக்தி பணம், அதிக சக்தி அதிகப் பணம். அவனால் அளவுகடந்த பணத்தை உற்பத்தி செய்ய முடியும்.
  • பணம் சரக்கன்று. சரக்குக்குப் பயன் உண்டு. வேறெதுவும் கிடையாது. பணம் சமூகத்தை மாற்றும் கருவி. எந்தச் சரக்காலும் சமூகத்தை மாற்ற முடியாது.

இன்றுவரை உலகில் பணம் பெருகியுள்ளது. இது நம்மையறியாமல் நடந்தது. கல்வி 1900 வரை தானே பரவியது. அதன்பின் உலகம் கல்வி முக்கியம் எனக் கருதி முயன்று கல்வியைப் பரப்பியது. தானே நடந்தது (unconscious) நாமே முனைந்து நடந்தால் (conscious) அளவு கடந்து பெருகும். இதுவரை தானே பெருகிய பணத்தை இனி நாமே முனைந்து பெருக்க முயன்றால், பணம் பெருகுவதற்கு அளவில்லை.

மனிதன் முன்னேறியுள்ளான். உழைத்தவன் இன்று சிந்திக்கின்றான். உடலிலிருந்து அறிவுக்கு முன்னேறியுள்ளான் என்று கொள்கிறோம். இந்த முன்னேற்றம் உண்மை என்றாலும், இது பூர்த்தியாகிவிட்டதா? இதனால் பெறவேண்டிய முன்னேற்றத்தில் நாம் இதுவரை பெற்றது சிறு பங்கு. மிகச் சிறிய பங்கு. இது உடலுக்கும், அறிவுக்கும் மட்டும் உள்ள நிலையில்லை. கார் வந்து 120 வருஷமாகிறது, போன் வந்து 140 வருஷமாகிறது. இரயில் வந்து 180 வருஷமாகிறது. இவை மேல் நாட்டார் நமக்குக் கொடுத்தது. கல்வி 1000 ஆண்டிற்கு முன் தெரிந்தது. கலை அது போல் நாம் முன்னரேயறிந்தது. குடும்பம் அதற்கு முன் ஏற்பட்டது. நிலத்திற்கு உரம் 60 வருஷமாக உள்ளது. இன்ஸுரன்ஸ் நாட்டில் 100 ஆண்டாகப் பழக்கம். சத்தியம் ஏற்பட்டு எவ்வளவு நாளாகிறது? இவற்றையெல்லாம் நாம் முழுவதும் பயன்படுத்துகிறோம் எனக் கூற முடியுமா? நாட்டின் கோணத்தில் பார்த்தால் இவற்றை 30% முதல் 1% வரைப் பயன்படுத்துகிறோம். போனும், கல்வியும், மருந்தும், நாணயமும் இனி ஏராளமாகப் பரவ இடம் உண்டு. அதேபோல், நாம் பணத்தை ஆயிரமாயிரமாண்டாக அறிவோம். அதை முழுவதுமாக இன்னும் அறியவில்லை.

பணத்தை நாடு பெருக்க முனைந்தால் ஏராளமாகப் பெருக்கமுடியும். அதற்கு முடிவில்லை.

கல்விக்குத் தடையிருந்த காலம் உண்டு. இனி அது இல்லை. லைப்ரரி என்பது பரவி வரும் காலம். தினசரிப் பத்திரிகைகளும், வார இதழ்களும், எளிய புத்தகங்களும் ஏராளமாக வெளிவருகின்றன. Internet கல்வியை உலகில் எங்கிருந்தும் பெறலாம் என்ற நிலையைத் தருகிறது. எந்தக் கல்லூரியிலும், எந்த நாட்டு கல்லூரியிலும் எவரும் பயிலலாம் என்பது இன்றைய நிலை.

படிக்க அளவில்லாத வாய்ப்புண்டு.

மனத்திற்கு இரு பகுதிகள் உண்டு. ஞானம், உறுதி எனப்படும். கல்விக்குரியது ஞானம். பணத்தை உற்பத்தி செய்வது உறுதி. அளவில்லாமல் படித்து ஞானத்தை உற்பத்தி செய்யமுடியும் என்றால், அளவில்லாமல் உறுதி பெருகும். இவை கூறுவது,

அளவில்லாமல் பணம் உற்பத்தியாகும்.

மனம் ஜடத்தை உற்பத்தி செய்தது என்பது ஸ்ரீ அரவிந்தம். வாழ்வு ஜடத்தின் பகுதி. பணம் வாழ்வில் கடுகளவு, மனம் பணத்தை உற்பத்தி செய்ய முனைந்தால், அதற்களவில்லை. மனிதன் தெய்வமாவது யோக இலட்சியம். ஸ்ரீ அரவிந்தரது சிஷ்யர்கள் கடவுளாகாவிட்டால், யோகத்தில் தோல்வியடைந்தவராவோம். குறைந்தபட்சம் பணத்தையாவது அபரிமிதமாக உற்பத்தி செய்து யோகத்தில் தோல்வியை ஏற்கலாம்.

இந்தச் சட்டம் பணத்திற்கு மட்டும் உரியதன்று. அளவுகடந்து பெருக்கும் அனைத்திற்கும் உண்டு. நாம் அளவு கடந்து (infinite) பெருகுவதைச் சில விஷயங்களில்தான் பார்க்க முடிகிறது. அப்பெருக்கம் உள்ள இடங்களிலெல்லாம் காண்பதில்லை. Internet உம்.,e-mailம் ஒரு நாளைக்கு 10 லட்சம் செய்திகளை 100 கோடிச் செய்திகளாக மாற்றியது. விமானப் பயணம் அதுபோல் வளர்கிறது. கலைக்களஞ்சியத்தைப் படிப்பவர் எண்ணிக்கையும் அதுபோல் வளர்கிறது. இவை வளர்ச்சியின் முடிவுக்கு முன்னுள்ள கட்டங்கள். அதைக் கடந்து போனால் அபரிமிதம், அனந்தமாகும். பணவளர்ச்சியை நாம் அதுபோல் தொடரலாம்.

வாழ்வு, காலத்தில் ஏற்பட்டது. நவீனச் சாதனங்கள் காலத்தைச் சுருக்குகின்றன. காலம் சுருங்கினால் வாழ்வு பெருகும். வாழ்வு பெருகினால் பணம் பெருகும். இதன் பலனை அடைபவர் பலர். அவர்கட்கு என்ன நடக்கிறது எனத் தெரியாது. 55 வயதில் ஓய்வு பெற்றவர் மேலும் 10 வருஷமிருப்பதில்லை. அது அரிது. அமெரிக்காவில் ஓய்வு பெற 65 வயதாக வேண்டும். 20 வருஷம், 25 வருஷம், 30 வருஷம் என சர்வீஸுண்டு. 45 வருஷ சர்வீஸும் உண்டு. 20 வருஷம் வேலை செய்து ஓய்வு பெற்றவர் 85 வயதில் 20 ஆண்டு பென்ஷன் பெறுகிறார். நிலைமை மாறுகிறது. 20 ஆண்டு சர்வீசில் பெற்ற தொகையை விட 20 ஆண்டு பென்ஷன் தொகை பெரியதாக இருக்கிறது. நிலைமை மாறி சம்பளத்தை விடப் பென்ஷன் அதிகமாக வருகிறது. சமூகம் காலத்தைச் சுருக்குவதால் பென்ஷன் அதிகமாக வருகிறது என்பதை விளக்குவது கடினம்.

தொடரும்....

****  

Comments

07.அபரிமிதமான செல்வம்para

07.அபரிமிதமான செல்வம்

para no.3, line 1 - உடலிருந்து - உடலிலிருந்து



book | by Dr. Radut