Skip to Content

03.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்''

லைப் டிவைன்

கர்மயோகி

10. சித்-சக்தி

ஸ்ரீ அரவிந்தர் சிருஷ்டியை விவரிக்கவேண்டி, சத்-புருஷனை விளக்கியபின் சித்-சக்திக்கு வருகிறார். உலகம் பிரம்மாவால் சிருஷ்டிக்கப்பட்டது என்ற முன்னோர்கள், எப்படி சிருஷ்டிக்கப்பட்டது என்ற கேள்வி நமக்குரியதன்று, உலகம் உள்ளது, அதை நாம் ஏற்க வேண்டும் என்றனர். பகவான் ஸ்ரீ அரவிந்தர் சத்திய ஜீவியம் உலகத்தை சிருஷ்டித்தது, என்பதுடன் பிரம்மம் முதல் ஜடம்வரை உள்ள எல்லா நிலைகளையும் - சத், சித் ஆனந்தம், சத்திய ஜீவியம், மனம், வாழ்வு, ஜடம் - என்ன என்பதையும் விவரித்துள்ளார். Spirit ஆன்மா என்ற சொல்லை நாம் அறிவோம். அது எங்கு உற்பத்தியாயிற்று, எப்படி என்பதையும் கூறுகிறார்.

சத் என்பது சக்தி என்றவர், சக்தி என்பதென்ன, விஞ்ஞானிகளும், நாத்திகவாதிகளும், ரிஷிகளும் கூறுவதுபோல் இது தானே இயங்கும் சக்தியா, சத்புருஷனின் அம்சமாக வெளிப்பட்ட சக்தியா என்பது கேள்வி என இவ்வத்தியாயத்தை ஆரம்பிக்கிறார். தனித்து இயங்கும் சக்தி என்றால், பரிணாமம், ஆன்மீகப் பரிணாமம், லீலை என்பவை அர்த்தமற்றவையாகின்றன. சத்துடைய அம்சமாக சக்தி எழுந்தால், அது தொடர்வது பரிணாமமாகும். சக்தி, சத்திலிருந்து வெளிப்படுகிறது என்று ரிஷிகள் கூறியதை தர்க்கரீதியாக நிரூபித்து, சக்திக்கு ஜீவனுண்டு, ஜீவியமுண்டு என இந்த அத்தியாயத்தை முடிக்கிறார்.

உலகில் நாம் காண்பவை பொருள்கள், மனிதர்கள், நிகழ்ச்சிகள். இவை அனைத்திற்கும் உருவம் உண்டு. நம் பார்வை உருவத்தை ஊடுருவி, அதைக் கடந்து சென்றால், நாம் காண்பது சக்தியாகும். ஜட சக்தியாகவும், சூட்சுமச் சக்தியாகவும் அது தென்படுகிறது. ரிஷி முன்னோர்கள் இதை சமுத்திரமாகக் கண்டனர். அசைவற்ற சமுத்திரமான சக்தி அது. அதன் அசைவு, சிருஷ்டிக்கும். நாம் இச்சக்திகளில் சூட்சுமச் சக்தியைக் காண்பதில்லை. ஜடசக்தியைக் காணமுடியும். நம் மனம் மூளை எனும் ஜடப்பொருளில் வேலை செய்வதால், நமக்கு ஜடசக்தியை உணரமுடிகிறது. ஜடம் - பொருள் - என்பது இரு ஜடப் பொருள்கள் சேர்வதால் எழுவது. அப்படி எழுந்த ஜடத்தைப் பார்ப்பது எளிது. ஒரு மலை நம் கண்ணுக்குத் தெரியும். காற்று தெரியாது. ஆகர்ஷ்ண சக்தி தெரியவே தெரியாது. மனத்தால் சுலபமாக ஜடப்பொருள்களைக் காணமுடியும். நம் முன்னோர்கள், ரிஷிகள். அவர்களே இந்திய விஞ்ஞானிகள். பஞ்சபூதங்களை அவர்கள் விவரித்துள்ளனர். ஜட சக்தி என்பது பஞ்சபூதங்கட்கு ஆரம்பம். இது சற்று மாறினால் உற்பத்தியாவது சப்தம். ஜட சக்தியின் முதல் உருவம் தனித்தன்மை வாய்ந்தது. அத்தனிக் குணத்தை சப்தம் என்று வர்ணித்தனர். அதன் அடுத்த நிலை ஆகாயம். சப்தமும், ஆகாயமும் ரூபங்களை உற்பத்தி செய்ய முடியாது. ரூபங்களை உற்பத்தி செய்ய சக்தியின் ஓட்டம் தடைபட வேண்டும், உரசலிருக்க வேண்டும். உராய்வு இருந்தால் நிலையான உறவு ஏற்படும். சக்தியின் ஓட்டத்தில் தடை, உரசல், சுருக்கம், விரிவு, சக்தி மீது சக்தி உராய்வது, இருப்பது அவசியம். ஜடசக்தி தன் முதல் நிலையான ஆகாயம் என்பதைச் சற்று மாற்றுகிறது. அப்படி இரண்டாம் நிலை ஏற்படுகிறது. அதை வாயு என்றனர். இதற்குக் குறிப்பான குணம் உண்டு. சக்தி சக்தியுடன் தொடர்பு கொள்வதே அக்குறிப்பான குணம். ஜட சக்திகளுக்கு அடிப்படைத் தொடர்பு அல்லது தொடு உணர்ச்சி. அப்படியும் ஏற்படுவது மாறுபடும் சக்தியே தவிர நிலையான ரூபமில்லை. நிலையான ரூபம் ஏற்பட உறுதியான தத்துவம் தேவை. மூன்றாம் மாறுதல் முதன்மையான சக்தியில் எழுகிறது. அது நெருப்பு, உஷ்ணம், ஒளி, மின்சாரம். நமக்கு அது தெளிவாகக் காணும் நிலையாகும். சக்தியின் ரூபங்களுக்கு தனித்தன்மை, முத்திரையுண்டு, எனினும் அவை சக்தியாகவே இருக்க முயல்கின்றன. இதுவரை நிலையான ஜட உருவம் ஏற்படவில்லை. நான்காம் நிலையுண்டு. அது பரவும் தன்மையுடையது. இதுவே ஜடத்தில் முதலாக ஏற்பட்ட கவரும் நிலை. இந்நிலையை நீர் அல்லது திரவம் என்றனர். ஐந்தாம் நிலை ஒட்டக் கூடியது. இது திடம். மண். இவ்வைந்தும் பஞ்ச பூதங்கள். ஐந்து மூலப்பொருள்கள்.

ஜடம் ஓர் உருவமாக இல்லை. பல ரூபங்களில் உள்ளது. மரம் ஒரு வகை, மண் அடுத்த வகை, மலையும் கல்லும் வேறு, அட்டை, வைரம், பொன் என்ற பல ரூபங்களுண்டு. எல்லாப் பொருள்களும் இப்பஞ்சபூதங்கள் - 5 மூலப்பொருள்கள் - கலந்தவையே. எல்லா ஜடப்பொருட்களுக்குரியதும் இச்சட்டம். சூட்சுமப் பொருள்களுக்கும் இச்சட்டம் பொருந்தும். நம் புலன் உணர்வுகள் அனைத்தும் இந்த ஜடப்பொருள்களால் நிர்ணயிக்கப்படுபவை. சப்தத்தால் நாம் அதிர்வையும், அவற்றின் அலைகளையும் உணர்கிறோம். தொடு உணர்ச்சிப் பொருள்கள் ஒன்றையொன்று தொடுவதால் ஏற்படுகிறது. உலகில் உள்ள பொருள்கள் சக்தியின் சலனத்தாலும், அதிர்வாலும் ஆனவை. பார்வை ஒளியின் செயல். ஒளி, நெருப்பு, சூடு ஆகிய சக்திகளால் வடிவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டது பார்வை. நான்காம் புலன் ருசி. ஐந்தாவது வாசனை. சக்திகள் அசைந்து, அலையாக நகர்ந்து ஒன்றையொன்று சந்திப்பதால் ஏற்படுபவையே புலனுணர்வு. தூய்மையான சக்தி தன்னைப் பல கட்டங்களில் மாற்றியமைக்கிறது. சக்தியின் ஆரம்பத்தையும், முடிவான புலனுணர்வான ருசியையும் இந்தியத் தத்துவ மேதைகள் இவ்வாறு இணைத்தனர். சாதாரணமான மனிதன் இந்த ரூபங்களைத் தன் உணர்வால் அறிகிறான். உணர்வு இவற்றை உறுதியானதாகவும், நிலையானதாகவும் காண்கிறது. எப்படி இவை அழியக்கூடிய தற்காலிகமானவை என ஆச்சரியப்படுகிறது. சுத்த சக்தி உணர்வுக்குப் புலப்படாதது. கையால் தொடவல்லதன்று, மனத்தால் நம்பமுடியாததும்கூட. அதுவே பிரபஞ்சத்தின் சத்தியம் என்கின்றனர். பெரிய மனிதனுக்கு முன்னோர் உரைத்தது தெளிவு தருகிறது. அவனுக்கு அது வேதவாக்கு.

நாம் சக்தி என்ன என்று கூறினோம். கட்டுரையின் தலைப்பு சித்-சக்தி. சித், ஜீவியம் என்றால் என்ன என்று கூறவேண்டும். வேறொன்றும் உண்டு. சக்தியின் இரு சலனங்கள் சந்திக்கின்றன. அவை உணர்வை எழுப்புகின்றன. எப்படி எனத் தெரியவில்லை. சாங்கியம் என்ன சொல்கிறது? அவர்களுடைய சிந்தனை ஆராய்ச்சியுள்ளது. சாங்கியம் என்றால் எண்ணுதல் என்று பொருள். பஞ்சபூதங்களின் பின்னால் இரு தத்துவங்கள் உண்டு என்றனர். அவை மகத், அகங்காரம் எனப்படும். மகத் என்பது சக்தி. அகங்காரம் என்பது பிரிவினைக்குரிய அகந்தை. அவை ஜடமான சக்திகளில்லை. சக்தி எனில் சாதாரணமானதன்று. பிரபஞ்சம் முழுவதும் பரவிய சக்தி. புத்தியை மூன்றாவதாகச் சேர்த்துக்கொள்கிறார்கள். இம்மூன்றும் சித் எனும் ஜீவியத்தில் செயல்படுகின்றன. இம்மூன்றும் சக்தியால் செயல்படவில்லை. ஆன்மாவால் - ஜீவனுள்ள ஆன்மா - அவை செயல்படுகின்றன. இம்மூன்று தத்துவங்களின் செயல்களும் ஆன்மாவில் பிரதிபலிக்கின்றன. இப்பிரதிபலிப்பை நாம் ஜீவியம் என்கிறோம்.

சாங்கியம் சொல்வதும், நாத்திகர்கள் கூறுவதும் கிட்டத்தட்ட ஒன்றுபோல் உள்ளது. சாங்கியம் இந்தியப் பரம்பரையில் முக்கியத் தத்துவம். உயிரும் ஜீவனுமில்லாமல் இயற்கையில் சக்தி செயல்படுகிறது என்பது அதன் கூற்று. இந்தியச் சிந்தனை கூர்மையானது. இந்த அளவு தத்துவ விளக்கத்தை மேற்கொண்டாலும், அதைக் கடக்கவில்லை. இந்த விளக்கத்தில் குறையிருக்கலாம், ஆனால் அதன் கருவில் உண்மையுண்டு. அதனால் பொதுவாக இவ்விளக்கத்தை ஏற்றனர். இயற்கைக்கு ஜீவன் உண்டா இல்லையா என்பது நம் கேள்வி. ஜீவனிருந்தாலும் இல்லாவிட்டாலும் இயற்கை என்பது சக்தி. சக்தி ரூபம் தாங்கி அசைவதே சட்டம். ரூபமற்ற சக்திகள் சந்தித்தால் ரூபம் எழுகிறது. ரூபம் ஒன்று மற்றதுடன் சந்திப்பது உணர்வை எழுப்புகிறது. இது நம் அனுபவம். நாம் இங்கிருந்து ஆரம்பிப்போம்.

விஞ்ஞானம் ஜடத்தை ஆராய்ந்தது. அதன் முறைகளும் ஜடமானவை. அதுவும் இதே முடிவுக்கு வந்துள்ளது. சில ஐயப்பாடுகள் மிஞ்சுகின்றன. ஞானமும், ஆத்மானுபவமும் விஞ்ஞானம் கூறுவதை ஏற்கின்றன. விஞ்ஞானமும், தத்துவமும் ஏற்பதை ஞானமும், ஆத்மானுபவமும் உறுதி செய்கின்றன. பகுத்தறிவுக்கு இம்முடிவு முழுதிருப்தி தருகிறது. அதன் அடிப்படைகள் இதன்மூலம் பூர்த்தியாகிறது. உலகம் என்பது ஜீவியத்தின் செயல் என்றோர் கருத்துண்டு. அதுவே உண்மை என்றாலும், செயல் என்பதுண்டு. செயல் எனில் சக்தி அசைய வேண்டும். சக்தியின் செயல்பாடாக இருக்கும். நம் சொந்த அனுபவத்தைக் கருதுவோம். அங்கும் செயல் உலகின் அடிப்படை எனக் காண்கிறோம். பழைய தத்துவங்கள் ஆதி சக்தியைப் பற்றிப் பேசுகின்றன. ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி எனபவை ஆதி சக்தியிலிருந்து எழுபவை. ஐக்கியத்தாலான சக்தியது. நாம் அசைவற்றுள்ள நிலையையும் அவை விவரிக்கின்றன. சலனம் இருபுறத்தால் சமநிலைக்கு வருவதே அசைவற்ற நிலைக்கு அவர் தரும் விளக்கம்.

சக்திக்கு அசைவுண்டு என்பதை நாம் ஏற்கலாம். அசைவே பிரபஞ்சத்திற்கு இயற்கை, அதனியல்பு எனவும் கொள்ளலாம். இரண்டு கேள்விகள் எழுகின்றன. இவ்வசைவு எழுந்தது எங்ஙனம்? அசைவு என்றுமுளது எனக் கூறலாம். அசைவே சிருஷ்டிக்கு அடிப்படை எனவும் கூறலாம். அப்படிக் கூறினால் அடுத்த கேள்வியில்லை. இது தவறு என ஏற்கனவே நிரூபித்துள்ளோம். சத் என்பதொன்றுண்டு. அது பிரம்மம் என நாம் நிரூபித்தோம். அது சலனத்தால் கட்டாயப்படுத்தப்படவில்லை என்றோம். பின் எப்படிச் சலனம் வந்தது? காரணம் என்ன? எப்படி இது சாத்தியமாயிற்று? இது என்ன புதிரான அசைவு?

ஆதி நாட்களில் இந்தியர் ஏற்ற முடிவு ஒன்றுண்டு. சக்தி என்பது சத்திற்குடையது என்பது அக்கருத்து. சிவனும், காளியும்; பிரம்மமும், சக்தியும் ஒன்றே. அவற்றைப் பிரிக்க முடியாது. சத்தில் உள்ள சக்தி நிலையாகவோ, ஓட்டமாகவோ இருக்கலாம். எப்படியானாலும், சக்தி என்பது உள்ளது. சக்தி குறைவதில்லை, மாறுவதில்லை, அழிக்கப்படவில்லை. அசைவில்லாததால் சக்திக்கு எந்த மாற்றமுமில்லை. இவ்விளக்கம் அறிவுக்குகந்தது. நாம் காண்பவை விளக்கும் வகையிலுள்ளது. இதை ஏற்க நாம் தயங்க வேண்டாம். சத் என்பது ஒன்றே, அனந்தமானது. அப்படிப்பட்ட சத்தினுள் வெளியிலிருந்து சக்தி நுழைந்தது என்பதை ஏற்பது கடினம். இது பகுத்தறிவுக்கு ஏற்றதன்று. சக்தி என்பது முதலிலில்லை, பிறகு ஏற்பட்டது எனவும் நாம் கூற இயலாது. மாயை என்ற நோக்கில் இக்கருத்தை ஆராய்வோம். பிரம்மம் தானே தன்னை மாயையில் மறைக்கிறது என்பது மாயாவாதியின் விளக்கம். மாயை என்றும் உள்ளது, அது பிரம்மத்திலேயேயிருக்கிறது என்கின்றனர். அப்படியானால் கேள்வி என்ன? ஒரே ஒரு கேள்வியுண்டு. வெளிப்படுமா, இல்லையா என்பதே கேள்வி. சாங்கியம் சொல்வதென்ன? பிரகிருதியும், புருஷனும் என்றும் இணைந்துள்ளன என்கிறது. இயற்கை, ஆன்மா என அவற்றை அழைக்கிறது. சலனமும், அமைதியும் மாறி மாறி வரும் நிலைகள் பிரகிருதி, புருஷன் என்பவை என்ற விளக்கம் கொடுக்கிறது சாங்கியம்.

சக்தி சத்தினுள் இயற்கையில் இயல்பாகவுள்ளது. சக்திக்கு இருநிலைகள் உள்ளன. ஒன்று அமைதி; அடுத்தது சலனம். சக்திக்கு தன்னுள் செறிந்துறையும் திறனும், தன்னைப் புறத்தே, பரவவிடும் திறனும் அமைதியாகவும், சலனமாகவும் தோன்றுகின்றன. இதுவே உண்மையானால், ஏன் சலனம் ஏற்படுகின்றது என்ற கேள்வி எழாது. எப்படிச் சலனம் ஆரம்பிக்கிறது, சலனத்தை உந்துவது எது என்ற கேள்விகட்கு வழியில்லை. வித்தான இத்திறனே சீரான அலைகளாக மாறுகிறது. அது மாறிவரும் அமைதியும், சலனமுமாகும். ஒன்றை அடுத்தது தொடர்ந்து வரும். அல்லது சலனமற்ற சத்தில் என்றும் சக்தி செறிந்து தன்னிறைவு பெறும் நிலையாகவுமிருக்கலாம். மேலெழுந்தவாரியான சலனமாகவுமிருக்கலாம். அது ரூபம் பெறும் மாற்றமாகும். கடலின் மேற்பரப்பில் எழும் அலைகளாகும். நாம் பயன்படுத்தும் சொற்கள் நம் கருத்தைத் தெரிவிக்கவல்லதன்று. இது மேலோட்டமான நிலை. தானே செறிந்து நிறையும் நிலையுடனிருக்கும் அசைவு என்றாலும், அதுவும் என்றும் உள்ளதாகும். அல்லது காலத்தால் கட்டுண்டு ஆரம்பம், முடிவு உள்ள சலனமாகவுமிருக்கும். மீண்டும் தானே எழும் சீரான அலைகளாகவுமிருக்கும். அப்படியானால், தொடர்ந்த அசைவால் அவை நிரந்தரமாக இல்லை; தொடர்ந்து மீண்டும் மீண்டும் எழுவதால், நிலையாகவுள்ளதாகும்.

சலனம் எப்படி ஏற்பட்டது என்பதற்குப் பதில் சொல்லியாகிவிட்டது. ஏன் இச்சலனம் ஏற்பட்டது எனக் கூறவேண்டும். சக்தியில் சலனத்தின் பாங்கு இப்படி மாறுகிறது என்கிறோம். ஏன் மாற வேண்டும் என்பது கேள்வி. சத் என்பது செறிவுடையது, அது முடிவற்றது, மாற்றம், ரூபமற்றது. அப்படியானால் ஏன் அப்படியேயிருக்கக் கூடாது? சத் என்பது ஜீவனற்றது, ஜடசக்தியிலிருந்தே ஜீவியம் எழுகிறது என்று நாம் கொள்ளலாம். நாம் சக்திக்கு ஜடத்தன்மையில்லை எனத் தவறாகக் கொள்கிறோம். அது உண்மையானால், கேள்வியில்லை. இது சக்தியின் தன்மை எனக் கூறி முடிக்கலாம். ஏன் நாம் காரணம் தேட வேண்டும்? இயற்கையில் என்றும் இயல்பாக உள்ளது அது. காரணமோ, தேடுதலோ, முடிவான இலட்சியமோ தேவையில்லை. சுயமான சத், சுயமான சக்தி என்று கூறினால் அது எப்படி வந்தது எனக் கேட்பது தெளிவுள்ள செயலன்று. ஏன் சுயமாகச் சலனத்தைப் பெற்றுள்ளது எனக் கேட்பதும் பயனில்லை. அக்கேள்வியை நாம் கேட்க முடியாது. எவ்வகையாக சக்தி வெளிப்படுகிறது என்றறிய முற்படலாம். அதன் சலனத்தின் சட்டம், ரூபத்தின் சட்டம், பரிணாமம் இவற்றை அறிய முயலலாம். சத்தும், சக்தியும் இதன்படி ஜடமானவை. அதன் நிலைமை ஜடம், உந்துதலும் ஜடம். இரண்டும் அறிவற்றவை, ஜடமானவை. இதை நாம் ஏற்றால், பரிணாமத்திற்கு முடிவு, இலட்சியம் இருக்க முடியாது. ஆதியில் எந்த நோக்கமும் இருந்திருக்க முடியாது.

இதற்கு நேர் எதிரான கொள்கையை நாம் ஏற்போம். சத் என்பது ஜீவனுள்ளது என்போம். கேள்விகள் எழுகின்றன. ஜீவனுள்ளதானாலும் தன்னுடைய சக்திக்கு உட்பட்டு இருக்கலாம். சக்தி வெளிப்பட வேண்டுமா இல்லையா என்று முடிவு செய்யலாம். தந்திர யோகிகட்கு பிரபஞ்சத்திற்குரிய கடவுளுண்டு. அது இவ்வண்ணமான தெய்வம். மாயவாதிகளும் அவர்கள் தெய்வத்தை சக்திக்கு - மாயை - உட்படுத்துகின்றனர். மாயைக்குட்பட்ட புருஷன் சக்தியால் ஆளப்படுகிறான் என்பது அவர் வாதம். நாம் பிரம்மம் என்று ஆரம்பித்தோம், பிரம்மம் அப்பாற்பட்டது, அனைத்திற்கும் அப்பாற்பட்டது என்றோம். எந்த சக்தியாலும் கட்டுப்படுத்தப்படாதது என்பதே நம் பிரம்மம். பிரம்மம் என்பது உயர்ந்தது, அளவு கடந்தது, சத் என்பது என்றோம். மாயை அல்லது சக்தி என்பது என்ன? பிரம்மம் பிரபஞ்சத்தில் தன் உருவங்களை எழுப்புவது மாயை, சக்தி எனப்படும். மாயை, சக்தி என்பவற்றிற்கு முந்தையது பிரம்மம். பிரம்மம் என்பது மாயையின் ஆதி, மாயையைக் கடந்த நிலை. மாயை தன் வேலையை முடித்த பின் பிரம்மத்தை அடைகிறது. நாம் கடவுள் என்று கூறுவது புருஷன், எதனாலும் கட்டுப்படாதது, எவற்றாலும் விவரிக்க முடியாதது. எதையும் பிரம்மம் நம்பியில்லை. அதன் உருவங்களையும் நம்பியில்லை. பிரம்மம் அதன் செயல்களாலும் கட்டுப்பட்டதன்று. அப்படிப்பட்ட கடவுளுக்கு அடிப்படையான சுதந்திரம் உண்டன்றோ? தன்னை சிருஷ்டியாக வெளிப்படுத்த வேண்டுமா, இல்லையா என்ற முடிவை அதுவே எடுக்கும் திறனுடையது. பிரகிருதிக்குட்பட்ட பிரம்மம் பிரம்மமாயில்லை. அது ஜடமான அனந்தம் என நினைக்கத் தோன்றுகிறது. பாத்திரத்தைவிட சக்தி வாய்ந்த எழுச்சியை அது தன்னுட்கொண்டிருக்கலாம். அது ஓரு சக்தியை வைத்திருக்கலாம். வைத்திருப்பதை அது அறியலாம். அச்சக்தி இதைவிட சக்தி வாய்ந்ததாக இருக்கலாம். பிரம்மம் அதன் இயற்கைக்குட்பட்டதென நாம் வாதிக்கலாம். இது பிரச்சினையைத் தீர்க்காது. அது நம் ஆரம்ப கொள்கைக்குப் புறம்பானது. நாம் சத் என்பது சக்தி என முடிப்போம். அது அமைதியான சக்தியாகவோ, அசையும் சக்தியாகவோ அமையலாம். முடிவான சக்தி எனவும் கூறலாம். முடிவான ஜீவன் என்று கூற முடியாது.

அடுத்தாற்போல் சக்திக்கும், ஜீவியத்திற்கும் உள்ள தொடர்பை ஆராயவேண்டும். ஜீவியம் என்றால் என்ன? மனம் விழிப்பாக உள்ள நேரத்தை நாம் ஜீவியம் என்கிறோம். பெரும்பாலான நேரம் மனிதனுக்கு அவ்விழிப்புண்டு. தூங்கும் பொழுதும், திகைத்த பொழுதும், மருந்தால் மயக்கமுற்ற நேரமும் மனிதனுக்கு விழிப்பிருப்பதில்லை. இது மேலெழுந்தவாரியான உடல் உணர்வு. ஜட உலகத்திற்கு இவ்விழிப்பில்லை. ஏதோ ஒரு சமயம் இருப்பதுண்டு. ஜட வாழ்வுக்கு இது விலக்காக வருவது, இயல்பானதன்று. மனிதனுக்கு எப்பொழுதும் தவறாது இவ்விழிப்புண்டு என்று கூற முடியாது. எளிய மக்கள் அறியாமையால் நம்பும் கருத்து இது. தத்துவம் உயர்ந்தது. உலகம் எப்படி சிருஷ்டிக்கப்பட்டது என்பது அதன் கேள்வி. மனித நம்பிக்கை மேலெழுந்தவாரியான அர்த்தமற்ற நம்பிக்கை. நாம் அதைக் கருத வேண்டாம். நம் அன்றாட எண்ணங்கள் இதுபோன்ற கருத்துகளைக் கொண்டன. நம் வாழ்வும், செயலும், உறவும் இதைப் போன்றது. நம் தூக்கத்தில் உயிர் உண்டு. நாம் தூங்கும்பொழுது நம்முள் ஒன்று விழிப்பாக உள்ளது. மயக்கம், மருந்தால் மயக்கம், திகைப்பு ஆகிய நேரங்களிலும், அது நம்முள் விழிப்பாக உள்ளது. நாம் unconscious ஜீவியமற்ற நேரம் என்று இது போன்ற நேரங்களைச் சொல்கிறோம். அவை நம் உடலுடைய வாழ்வு. இதன் மூலம் நம் முன்னோர்கள் நம் ஜீவனுடைய அடிப்படை உண்மையைக் கூறினர். நாம் விழித்திருக்கும்பொழுது, தெம்பாக இருக்கிறோம். நாம் விழித்திருக்கும்பொழுதும், நம்முள் விழிப்பான பாகம் சிறு முனை போன்றது என்கிறார்கள். இது நம் ஜீவனில் மேலெழுந்தவாரியான பாகம். நம்மை முழுவதும் அறிய இவ்விழிப்பான பாகம் மிகச் சிறியது என்று முன்னோர்கள் கூறுகின்றனர். இதன்பின் அடிமனமும் ஆழ்மனமும் உள்ளன. நம் ஜீவனில் இவை பெரும்பகுதி. நம் ஜீவனின் சிகரங்களும், பெருமைகளும் அங்குள்ளன. அவற்றை எவரும் அளக்கவில்லை, ஆழங்காணவில்லை. இவற்றை அறிவது சக்தியையும் அதன் செயல்களையும் அறிய பெரிதும் உதவும். நாம் ஜட உலகால் சூழப்பட்டுள்ளோம். நாம் கண்ணுக்கு முன்னாலிருப்பதை உண்மை என நம்புகிறோம். அடி மனத்தை அறிவதால் நம் வரையறை, சிறுமை மறைகின்றன.

பகுத்தறிவு பேசுகிறது. ஜடத்தில் ஜீவியமுண்டு என வலியுறுத்திக் கூறுகிறது. ஜடம் மாறி ஜீவியமாகிறது எனவும் கூறலாம். நம் உடலுறுப்புகளும், ஜீவியமும் பகுத்தறிவுவாதிக்குப் பிரிக்க முடியாத ஒன்றாகும். உடலுறுப்புகள் செயல்படுவதால் ஜீவியம் எழுகிறது, ஜீவியம் வெளிப்பட உறுப்புகளில்லை என்றனர். இது பரம்பரை நம்பிக்கை. புதிய அறிவு வேகமாகப் பரவுகிறது. புதிய அறிவு பழைய நம்பிக்கைகளை அழிக்கும். புது அனுபவமும், அறிவும் வளர்வதால் பழைய நம்பிக்கை ஆட்டம் காண்கிறது. பழைய விளக்கங்கள் தெளிவை இழக்கின்றன, பழைய விளக்கங்களை நிலை நாட்ட ஒவ்வொரு முறையும் அதிகச் சிரமப்பட வேண்டியிருக்கிறது. மனிதனுடைய சாதனை அவனது திறமையை மீறியது எனக் காண்கிறோம். அவன் நகர்த்தும் பாரமும், தலையில் தூக்கும் பாரமும் அவனது உடலின் எடையைவிட அதிகமாக இருப்பதுண்டு. நம் உறுப்புகள், புலன்கள், நரம்பு, மூளை எல்லாம் சேர்ந்து நாம் நிர்மாணித்த நகரங்களை நிர்மாணிக்கும் திறனுடையவை அல்ல.அணுசக்தியை வெளிப்படுத்தும் திறனவைகட்கில்லை. நம் சாதாரண எண்ணங்கட்கும், ஜீவியத்திற்கும், இவ்வுறுப்புகள் கருவிகளேயாகும். மூளை ஜீவியத்தை உற்பத்தி செய்கிறது. விபரீத நிகழ்ச்சிகள் சில உண்டு. அவற்றால் இதயம் போன்ற உறுப்புகள் தேவையில்லை என அறிகிறோம். இதயம் நிற்கலாம், ஆனால் உயிர் நீடிக்கும். மூச்சும் தேவையில்லை. மூளையில் உள்ள அணுக்களும் எண்ணத்திற்குத் தேவையில்லை. ஓர் இன்ஜினைச் செய்கிறோம். அது நீராவி அல்லது மின்சாரத்தால் இயங்குகிறது. நீராவி எப்படி உற்பத்தியாகிறது என்பதை இன்ஜின் செய்முறை சொல்வதில்லை. இன்ஜினால் நீராவி உற்பத்தியாகவில்லை. அதேபோல் நம் உடலுறுப்புகள் நம் எண்ணங்களையோ, ஜீவியத்தையோ உற்பத்தி செய்யவில்லை. சக்தி முன்னே, கருவி பின்னால்.

இம்முடிவு ஏற்கப்படுமானால், பிரம்மாண்டமான கேள்விகள் எழுகின்றன. ஜடப்பொருள்கட்கு உயிருண்டா என்பது முதற்கேள்வி. தமஸுக்குப் பின்னால் மனமிருப்பதைக் காண்கிறோம். உயிரற்றவையிலும் நாம் மனம் செயல்படுவதைக் காண்கிறோம். ஜடப்பொருளுக்கு மனம் உண்டா என நாம் கேட்கலாம். அது ஆழ்மனமா? அது பிரபஞ்சம் முழுவதும் பரவியதா? மனத்தால் செயல்பட முடியவில்லை எனக் கூற முடியுமா? ஆழத்திலிருப்பதால், மேலே செயல்பட முடியவில்லை. தன்னை வெளிப்படுத்த தகுந்த கருவியில்லாததால், ஆழம் மேல்நிலைக்குத் தன்னைத் தெரிவிக்க முடியவில்லையா? ஜடத்தில் ஜீவியமில்லையா, அல்லது தூங்குகிறதா? பரிணாமக் கண்ணோட்டத்தில் அது ஆழ்ந்த தூக்கமாகும், தற்காலிகமான தூக்கமாகாது. மனிதர்களாகிற நாம் தூங்குவதே உதாரணம். இதிலிருந்து தூக்கம் ஜீவியத்தை ரத்து செய்யவில்லை என அறிகிறோம். ஜீவியம் உள்ளே ஓர் புள்ளியில் சேருகிறது. உடலுறுப்புகளால் புறச்சூழலுக்குப் பதிலளிக்க முடியாத அளவுக்கு ஜீவியம் உள்ளே போகிறது. புறத்தே பொருத்தமான கருவியில்லாமல், சத் தன்னையும், தன் இரகஸ்யத்தையும் வெளிப்படுத்த முடியவில்லை. உலகத் தொடர்பேற்கும் கருவிகளில்லை. புருஷன், ஜீவனுள்ள ஆத்மா ஒவ்வொரு பொருளிலும் உண்டு. எந்நேரமும் எல்லாப் பொருள்களிலும் விழித்துள்ளது புருஷன்.

இதுவே முடிவன்று. நாம் ஆழ்மனத்தைப் பற்றிப் பேசுகிறோம். இதன் பொருளென்ன? இது நம் மனப்பான்மையிலிருந்து வேறுபட்டதா? இது ஆழத்தில் மட்டும் செயல்படுமா? இது மனிதன் விழிப்பில் அறியாததா? நம் மனப்பான்மையே இதுவா? அதன் வீச்சு மட்டும் அதிகமா? அடிமனத்திற்கு ஒரு குணம் உண்டு. நம்மால் விளக்க முடியாத அளவுக்குத் திறனுள்ளது அடிமனம். அதன் திறன் பெரியது, அளவு கடந்தது. மனப்பான்மை என்பது விழிப்புக்குரியது. அடிமனம் விழிப்பிலிருந்து அளவு கடந்து மாறுபட்டது. நாம் ஆழ்மனம் உண்டு என்று பேசினால், அதற்கெதிரானதும் உண்டு என்றாகும். அதுவே பரமாத்மா. மேலே பரமாத்மா (superconscient) கீழே ஆழ்மனம் (subconscient) உண்டென்றால் இடையே பல நிலைகள் இருக்க வேண்டும். நம் மனம் ஒரு நிலை. இது மேலே போகும் பொழுது தன் நிலையை உயர்த்துகிறது. உயர்ந்து பரமாத்மாவை அடைகிறது. அதைச் செய்வது அடி மனம். அதேபோல் அடி மனம் உள்ளே போய் ஆழ்மனத்தைத் தொடுகிறது. நாம் நம் நிலைகளை, பிராணன், உடல் என அழைக்கிறோம். அவை மனப்பான்மையின் பகுதிகள். இது உண்மையானால், தாவரத்திலும், உலோகத்திலும் சக்தியிருக்கலாம். நாம் அதையும் ஜீவியம் என்கிறோம். அது மனித மனப்பான்மை, விலங்கு மனப்பான்மையாக இருக்காது. இதுவரை நாம் ஜீவியம் என்ற சொல்லை மனித மனப்பான்மைக்கு மட்டும் பயன்படுத்தினோம்.

இது உண்மை. ஆராய்ந்தால், இது உண்மை எனத் தெரியும். நம்முள், பிராணனுண்டு. அது செல்லில் செயல்படுகிறது. தானே இயங்கும் செயல்களில் அது வெளிப்படுகிறது. அவசியமான காரியங்களை அது செய்ய உதவுகிறது. கவர்ச்சி, அதன் எதிர்ப்பை மனம் பொருட்படுத்துவதில்லை. தானே இயங்குபவை அவற்றை ஏற்றுக் கொள்கின்றன. இது விலங்குகளிலுள்ளது. விலங்குக்கு இது நம்மைவிட அவசியம். தாவரத்தில் இவ்வுணர்வு இயல்பாகவுள்ளது. சமீபத்தில் ஓர் இந்திய விஞ்ஞானி, தாவரத்தின் வினோதமான செயல்களை விஞ்ஞானமுறைப்படி விளக்கினார். தாவரம் சுருங்குகிறது, எட்டித் தாவுகிறது. அதற்கு வலியும் இன்பமும் உண்டு. தூங்கும், விழிக்கும். இவையெல்லாம் ஜீவியத்தின் செயல்கள். நாம் காணும்வரை இவற்றை மனப்பான்மை எனக் கூற முடியாது. மனத்தின் பகுதியான ஜீவியமிருக்க வேண்டும். அதைப் பிராணன் எனலாம். அதுவும் ஆரம்பத்தில் மனம் போலவே செயல்படும். ஆனால் அது அமைப்பில் வேறுபட்டது; வேறு வகையாகத் தன்னை அறிகிறது. அதுமட்டுமன்று. மேலே பரமாத்மாவுள்ளது. அதன் அமைப்பு பரமாத்மாவுக்கேற்றது. அது தன்னைத் தனக்கேற்றவாறு அறியும். அதுவும் மனித மனத்திலிருந்து வேறுபடும்.

பல நிலைகளில் ஜீவியம் உள்ளது. இது தாவரத்துடன் முடிகிறது என்று கொள்ளலாமா? விலங்குக்குள்ள உணர்ச்சியின் பகுதி தாவரத்திலிருப்பதைக் காண்கிறோம். இது உண்மையானால், அடுத்ததும் உண்மையாக இருக்கவேண்டும். ஜடத்தில் வாழ்வின் சக்தியும், ஜீவியமுமிருக்க வேண்டும். அது ஜடத்திற்குப் புறம்பானதாக இருக்க வேண்டும்; ஜடத்துள் வெளியிலிருந்து நுழைந்து அதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க வேண்டும். அது அடுத்த உலகத்திலிருந்து வந்ததா? வேறெங்கிருந்து வந்திருக்க முடியும்? அதுபோன்ற உலகங்களிருந்ததாக முன்னோர்கள் கூறுகிறார்கள். நம் உலகில் அவை வாழ்வையும், ஜீவியத்தையும் ஆதரிக்கலாம். உள்ளிருந்து எழும் அழுத்தத்தால் ஜீவியத்தை எழுப்புவதாக அமையலாம், ஆனால் ஜீவியத்தை உலோகத்தினுள் உற்பத்தி செய்ய முடியாது. உள்ளே முதலிலேயே இல்லாதது ஜடத்தினின்று வெளிவர முடியாது.

நாம் மனிதனிலுள்ள ஜீவியத்தைத் தாவரத்திலுமிருப்பதாகச் சொன்னோம். ஏன் அதுபோல் உலோகத்திலுமிருப்பதாகச் சொல்லக் கூடாது? ஏன் தாவரத்துடன் நிறுத்த வேண்டும்? உலோகம் அதிகமாக ஜடத்தன்மையுடையதென்பதால் நாம் நிறுத்துகிறோமா? நாம் தாவரத்துடன் நிறுத்த எக்காரணமுமில்லை. சமீபகால ஆராய்ச்சியில் புதிய விஷயங்கள் புலப்படுகின்றன. உலோகத்திலும் ஏதோ ஓர் அளவு உயிருண்டு என்கிறார்கள். உலோகத்திலும், மண்ணிலும் ஜீவியம் அடக்கி ஒடுக்கப்பட்டு ஜடமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அது ஜீவியமாக இல்லாவிட்டால், ஜீவியமாக மாறக் கூடியதாக இருக்கலாம். ஆரம்பத்தில் அப்படித்தானே மனித ஜீவியம் எழுந்தது. தாவரத்தில் உயிருள்ளது என ஓரளவு தெரிகிறது. ஸ்ரீ அரவிந்தர் அப்படிக் கூறுகிறார். தாவரத்தில் உள்ளது பிராணன் எனலாம். ஆனால் ஜடத்தில் - உயிர் - ஜடமாகவேயுள்ளது. அதை ஜீவியம் என்று ஏற்றுக் கொள்வது கடினம். நமக்குப் புரியாததை, இல்லை என்பது நம் பழக்கம். மனிதனிலிருந்து தாவரம்வரை ஜீவியத்தைத் தொடர்ந்து வந்தோம். உலோகத்திற்கு வந்தபொழுது இல்லை என்று கூறுகிறோம். இடையில் வெளியிலிருப்பதைக் காண்கிறோம். உயிரும், வாழ்வும் எங்குமுள்ளது என அறிவோம். எங்கும் ஐக்கியமுண்டு, எல்லாம் ஒன்றே என நினைக்கும் உரிமை எண்ணத்திற்குண்டு. மற்ற எல்லா இடங்களிலும் இந்த ஐக்கியம் தென்படுகிறது. உலோகத்தில் மட்டும் அவ்வைக்கியம் இல்லை என்கிறோம். அதை முழுவதும் இல்லை என்று கூறுவதில்லை. அது மறைந்துள்ளது. ஐக்கியம் உண்மை என நம்புவதாகக் கொள்வோம். அப்படிக் கொண்டால், விஷயம் மாறும். அதை ஏற்றுக் கொண்டால், ஜீவியம் எங்கும் உள்ளது, உலோகத்திலுமுள்ளது என்று பொருள். அதை ஜீவனுள்ள புருஷன் என்று சொல்ல முடியாதிருக்கலாம். அதைப் பரமாத்மா என்று கூற முடியாது எனலாம். இருப்பினும், ஜீவனின் ஜீவனுள்ள சக்தியின் ஓர் உருவம் அது எனலாம். அதன் புறத்தோற்றங்கள் உலோகத்தில் வெளிப்படலாம். வெளிப்பாடு வெளிப்படையாக ஜடமாக இருக்கலாம்.

உலகத்திற்கு ஜீவியம் எனில் விழிப்புள்ள மனிதனின் மனப்பான்மை, உணர்வு. இது மேல் மனத்திற்குரியது. உலோகத்தின் ஆழத்தில் புதைந்து விழிப்போடிருக்கும் ஒன்றைப் பற்றி நாம் இப்பொழுது பேசுகிறோம். இக்கோணத்தில் பார்த்தால் ஜீவியம் என்ற சொல்லுக்குப் புதிய அர்த்தம் வருகிறது. இன்னும் அதை மனப்பான்மை என்ற பழைய அர்த்தத்தில் சொல்ல முடியாது. சிருஷ்டியில் தன்னை என்றும் அறியும் சக்தியாக அதைக் கூறுகிறோம். இப்படிப் பார்த்தால் மனித மனப்பான்மை நடுவில் அமைகிறது. கீழே உயிருக்கும், உடலுக்கும் அது பரவும். நாம் அவற்றை ஆழ்மனம் எனக் கூறுகிறோம். மனப்பான்மை பரமாத்மாவுக்கும் உயர்ந்து செல்லும். அது சத்திய ஜீவியமாகும். மனப்பான்மை என்றாலும், ஆழ்மனம் என்றாலும், பரமாத்மா என்றாலும், எங்கும் உள்ளது ஜீவியம். அதைப் பொருத்தவரை எல்லாம் ஒன்றே. வெவ்வேறு நிலைகளில் ஜீவியம் வெவ்வேறு வகையாக வெளிப்படுகிறது. இந்தியர்கள் சித் என்றது இதுவேயாகும். சித் எனில் சக்தி, அது உலகை சிருஷ்டித்தது என்றனர். இது ஏற்கப்படுமானால் சக்தியின் ஐக்கியம் உண்மையாகிறது. விஞ்ஞானம் பேசுவது பகுத்தறிவுவாதம், நாத்திகவாதம். மனம் ஜடத்திலிருந்து வேறுபட்டதில்லை என விஞ்ஞானம் கூறுகிறது. இந்திய யோகப் பரம்பரையில் ரிஷிகள் அதை வேறு வகையாகக் கூறினர். மனமும், ஜடமும் ஒரே சக்தியின் வெவ்வேறு நிலைகள் என்றனர். ஒரே சக்தியை வெவ்வேறு அமைப்பில் காண்பதால் மனமும், ஜடமும் வேறுபட்டுத் தெரிகின்றன என்றனர். அதை சத் என்றும் கூறினர்.

இங்கு ஒரு கேள்வியை எழுப்பி விடையிறுக்க வேண்டும். ஜீவியத்திற்கும் சக்திக்கும் உள்ள தொடர்பை நாம் ஆராய ஆரம்பித்தோம். ஜீவியம் என்றால் தன்னையறியும் சத்துடைய சக்தி எல்லா ஜீவராசிகளிலும், ஜடப்பொருள்களிலும் விழிப்பாக இருப்பது எனக் கூறுகிறோம். இதை சித்-சக்தி எனலாமா? இந்தக் கேள்வியைக் கேட்டுப் பதில் சொல்வோம். ஜீவியம் எனில் சில முக்கியக் குணங்கள் இருக்க வேண்டும். புத்திசாலித்தனம், இலட்சியம், தன்னையறியும் பாங்கு, ஏதாவது ஒரு ரூபத்தில் அவையிருக்க வேண்டும். நமக்குத் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. இதன்படியும் நம் அனுபவம் பிரபஞ்சத்திற்குரிய சக்தியிருப்பதாகச் சொல்கிறது. விலங்கு வாழ்வைக் கவனிப்போம். அதன் இலட்சியம் அங்குத் தெளிவாகத் தெரிகிறது. விலங்கின் அறிவு நுணுக்கமானது, விஞ்ஞானரீதியில் தவறவே முடியாதது. நாம் விலங்கில் காணும் அறிவு, விலங்குக்கு அப்பாற்பட்டது. மனிதன் விலங்கின் இத்திறமையைக் கற்க முயன்றால் நெடுநாள் கற்று, நீண்ட நாள் பயில வேண்டும். கற்று முடிந்த பின்னும் விலங்குபோல் துல்லியமாக அவனால் செயல்பட முடியுமா என்பது சந்தேகம். அது அவனால் முடியாது. இது பொதுவான உண்மை. இவ்வுண்மை ஜீவனுள்ள சக்தி என விலங்கின் திறனை நிரூபிக்கிறது. இத்திறன் விலங்கிலும், புழு பூச்சியிலும், காணப்படுகிறது. உலகில் அதிகபட்ச புத்திசாலித்தனம் மனிதனில் வெளிப்படுவதை நாம் அறிவோம். விலங்கின் திறன் அதைவிட உயர்ந்தது. விலங்கின் குறிக்கோளும், எண்ணமும் அவற்றைவிடத் தெளிவானவை. அதன் உபாயங்களும், கருவிகளும், நிபந்தனைகளும் நாமறிந்த மனித அறிவைவிட உயர்ந்தவை. உயிரற்ற ஜடமான இயற்கையின் சக்தியில் நாம் இந்த அறிவின் சிறப்பைக் காண்கிறோம். மறைந்துள்ள உச்சகட்ட ஞானத்திற்கு ஓர் அடையாளம் உண்டு. தன் செயலினுள் மறைந்துள்ள ஞானம் என அதைக் கூறுகின்றனர். அதை நாம் விலங்கில் காண்கிறோம்.

புத்திசாலித்தனம், இலட்சியம், தெளிவு, திறமையுடைய சக்தி தன்னையறியுமானால், அதன் திறன் உச்சகட்டமானது. அது உண்மையானால், நாம் இயற்கையில் காண்பது அதற்கு எதிரான விரயம். ஏராளமான விரயத்தை எப்படி விளக்க முடியும்? இதற்குப் பதில் தேவை. நாம் பெற்ற மனம், மனித மனம், அளவுக்குட்பட்டது. பகுதியை மட்டும் காணவல்லது. எல்லா வகைகளிலும் வரையறுக்கப்பட்டது. இதைப் பகுத்தறிவு என்கிறோம். இதன் அறிவு இதனுடைய காரியங்களைச் சாதிக்கவல்லது. அத்துடன் தன் குறைகளைப் பிறர்மீது திணிக்கும் திறனுடையது மனம். தன் அறிவின் இயல்பையும், அளவையும், உலக சக்திகள் மீது ஏற்றிப் பேசுகிறது மனம். நாம் இயற்கையின் முழுமையைக் காண்பதில்லை. அதில் பகுதியைக் காண்கிறோம். நாம் காண்பதில் அர்த்தமற்றதாகத் தோன்றுவதை, விரயம் என்கிறோம். மேலும் ஓர் உண்மையுள்ளது. நம் செயல்களில் ஏராளமான விரயத்தை நாம் காண்கிறோம். நமக்கு, நம் கண்ணோட்டத்தில் அப்படித் தோன்றுகிறது. நமக்கு விரயம் என்பது உலகத்தின் காரியத்திற்கு உதவுகிறது. அதேபோல் இயற்கையில் விரயமாகத் தோன்றுவது பிரபஞ்சத்தில் காரியங்களைப் பூர்த்தி செய்கிறது. பிரகிருதி எனும் இயற்கை தன் இலட்சியத்தைப் பூர்த்தி செய்து கொள்கிறது. விரயமிருந்தாலும் இந்த இலட்சியம் பூர்த்தியாவதாகக் கூறலாம். ஸ்ரீ அரவிந்தர், “இந்த விரயமே பிரபஞ்சத்தில் இறைவனின் காரியங்களைப் பூர்த்தி செய்கிறது” எனக் கூறப் பிரியப்படுகிறார்.

விலங்கு, தாவரம், உயிரற்ற ஜடப் பொருள்களில் நாம் ஓர் இலட்சியத்தை நோக்கிப் போகும் பாதையைக் காண்கிறோம். இது கண்மூடித்தனமான போக்கு எனத் தெரிகிறது. ஆனால் இப்போக்கு தன் இலக்கை விரைவாக உடனே அடைகிறது. இதுவரை விஞ்ஞானம், ஜடத்தையே எல்லாம் எனக் கொண்டது. உயிருள்ள வாழ்வும், ஜீவியமும் அதன் பார்வையிலில்லை என்று நாம் காண முடிகிறது. ஸ்ரீ அரவிந்தர் இப்போக்கை நியாய மனப்பான்மை என்று கூறுகிறார். ஜடத்திற்கு ஜீவனில்லை. ஜடத்தில் புத்திசாலித்தனமோ, அதன் சாயலோ இல்லை. ஜடத்தில் ஜீவியத்தைத் தாங்கும் பொருளுமில்லை. ஜடமான பொருள்களிலிருந்து ஜீவியம் எழுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இது நைந்த பழங்கதை. உலகம் மாறிய நேரம் இதற்கெல்லாம் நேரமில்லை. மனித ஜீவியம் விலங்கின் ஜீவியத்தின் மற்றொரு ரூபம் என பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். மனத்தைவிடத் தாழ்ந்தவற்றில், இந்த ஜீவியம் மறைந்து காணப்படுகிறது. அது மனத்தில் வெளிப்படுகிறது. மனத்தைவிட உயர்ந்த ஜீவியமாக அது உருப்பெறும். உலகை நிர்மாணிக்கும் சக்தி ஜீவனுள்ள சக்தியாகும். இந்த ஜீவனுள்ள சக்தியை வெளிப்படுத்தும் சத் ஒரு ஜீவனுள்ள ஜீவன். இந்த ஜீவனுக்கு ஆன்மீகத் திறன் அதிகம். அது மறைந்துள்ளது. மறைந்துள்ள அவ்வான்மீகத் திறன்களுக்கு ஒரே இலட்சியம் வெளிவருவது. வெளிவரும்பொழுது ரூபம் பெற்று வருகிறது. அந்த ரூபங்கள் சிறப்புடையதாக இருக்க வேண்டுமென்பதே அதன் இலட்சியம். இவ்வுலகம் ரூபத்தாலானது என்பதால் ரூபத்தின் சிறப்பை நாடுவது அதற்கு இயல்பானதே.

****

Comments

03.லைப் டிவைன்para 9, line 9

03.லைப் டிவைன்

para 9, line 9 - முதல்லை - முதலிலில்லை

do.    10, do.  10 - கடன் - கடலின்

do.     11, - aftter line 6 - extra space

do.     11, -     do.      13 -    do.

do.     12 -      do.       4 -     do.

do.     12 -       do.      11 -    do.

do.     13 -       do.       7 -     do.

do.     18, line 2 - தாவரத்திருப்பதைக் - தாவரத்திலிருப்பதைக்

do.     19, line 4 - நிறுத்துகிறேமா? - நிறுத்துகிறோமா?

do.     19, do. 14 -  வெளியிருப்பதைக் - வெளியிலிருப்பதைக்

do.     20, After line 12 - extra space.

do.     21, line 9 - அதன்ó - அதன்

do.     21, line 14 - துல்யமாக - துல்லியமாக  

do.     21, line 22 -  செயனுள் - செயலினுள் 

do.     22 - after line 9 - extra space.

do.     23,line 5 - பார்வையில்லை - பார்வையிலில்லை 

do.     23, do. 8 - பொருள்களிருந்து - பொருள்களிலிருந்து

do.      23 - after line 14 - extra space

 

 

 03.லைப் டிவைன்para 1, line 7

 

03.லைப் டிவைன்

para 1, line 7 - Spiritஆன்மா - Spirit ஆன்மா

do.  3, line 6 - காண்பதில்லை. and ஜடசக்தியைக் - to be joined.

do. 3, do. 24 - ரூபமில்லை. and நிலையான - to be joined

do. 4, do. 16 - உறுதியானதாகவும், and நிலையானதாகவும் - to be joined.

do.5, do. 6 - என்றனர். & அவை - to be joined

do.    do. 13 - பிரதிபலி க்கின்றன  - பிரதிபலிக்கின்றன

do.7, do. 7 - என்பதுண்டு.  & செயல்    - to be joined.

 

do. 8,      do.     6 - அது & சலனத்தால் - to be joined.

 

 

 

 

 



book | by Dr. Radut