Skip to Content

01.யோக வாழ்க்கை விளக்கம் IV

யோக வாழ்க்கை விளக்கம் IV

கர்மயோகி

726) சிந்தனை எழுமிடத்து அதைச் சரண் செய்தால் எண்ணம் அழியும். எண்ணத்தின் அமைப்பைக் கண்டு (structure) அதிலிருந்து மன எழுச்சியின் சக்தியை அகற்றினால், அமைப்பு கரையும். அடுத்த நிலையில் அதேபோல் மனம் கரையும்.

சிந்தனையை அழித்து, அமைப்பையும் அழித்து, மனத்தை அழிக்க வேண்டும்.

செயல் ஆசையால் தீவிரப்படுதல்போல் எண்ணம், மன எழுச்சியால் சக்தி பெறுகிறது. எண்ணம் அழியாது. அதை விலக்கினால் மௌனம் எழும். அதற்குரிய முறைகள் பல. பூரண யோகத்திற்குரிய முறை சரணாகதி. தகப்பனாருக்குக் கடிதம் எழுத வேண்டும் என்பது ஓர் எண்ணம். இதை அகற்ற நாம் அதைச் சரணம் செய்ய முயல்கிறோம். கடிதம் எழுத வேண்டும் என்ற வேகத்தைவிடச் சரணம் செய்வது தீவிரமானால், எண்ணம் சரணமாகும். இல்லையெனில் சரணம் செய்ய முடியாது. சரணம் செய்தால் மனம் மௌனத்தால் நிறையும். இது பெருநிலை எனினும், முதல் நிலை. அடுத்த நிலை மௌனம் பெற எண்ணத்தின் அமைப்பைக் கரைக்க வேண்டும்.

எண்ணத்தின் அமைப்பு எனில் என்ன?

நாற்காலியின் அமைப்பு நான்கு கால்கள். மனித உடலின் அமைப்பு எலும்பு, நரம்பு, தசை, உறுப்புகளாகும். எண்ணத்திற்கு அவைபோன்ற அங்கங்கள் எவை? மொழி மேலெழுந்தவாரியான அமைப்பு. தகப்பனாருக்குச் செய்தி அனுப்ப நினைக்கும் உணர்வு உள்ளுறை அமைப்பு. இவை இணைவது எண்ணத்திற்கே உரிய அமைப்பு. இவற்றை நாம் காண முடியும். மொழி, உணர்வு, அவை இணையும் பாணி ஆகியவற்றை நினைத்து ஒவ்வொன்றாய் அவற்றைச் சரணம் செய்ய முனைந்தால், பலிப்பது கடினம். பலித்தால், முதலில் எழுந்த மௌனம் கனத்து மனத்தைக் கனமாக நிரப்புவதைக் காணலாம். பேரமைதி குடி கொள்ளும். ஓர் எண்ணம் கரைந்ததால் எழுந்த அமைதி இது.

மனம் என்பதில் எண்ணம் ஒரு பகுதி. தகப்பனாருக்குக் கடிதம் எழுதுவது என்பது ஓர் எண்ணம். மனத்தின் எண்ணங்கள் ஓர் ஆயிரம். அத்தனை எண்ணங்களையும் உருவாக்கும் திறன் மனத்தினுடையது. எண்ணத்தைச் சரண் செய்ததுபோல் அத்திறனைச் சரண் செய்யலாம். அது பெரியது. அது மனத்தின் முக்கியத்திறன் என்றாலும் ஓரு திறனாகும். சிந்தனை, கற்பனை, முடிவு, நினைவு, விருப்பு, வெறுப்பு, பாகுபாடு, நடுவு நிலை என மனம் பெற்ற திறன் பல. அத்தனைத் திறன்களையும் சரண் செய்தபின் மனம் எஞ்சி நிற்கும். மனம் ஜீவனின் கருவி.

கருவியை அதன் திறனிலிருந்து பிரித்துச் சரண் செய்தால், மனம் அழியும். அது பிரபஞ்சத்தின் மனமாகும். பிறர் எண்ணம் நம் எண்ணம்போல் தெரியும்.

மனம் கரைவதுபோல் உணர்வும், உடலும் கரைவது பூரண யோகத்திற்குரிய முந்நிலைச் சித்திகளாகும்.

கர்மத்தை முறைப்படுத்தினால் அபரிமிதமான சக்தி எழும். அதன் மூலம் கர்மயோகம் பலிக்கும்; ஞானத்தின் அடிப்படையான எண்ணத்தில் நாம் நிலைத்தால் எண்ணம் சிறந்து ஞானயோகம் பலிக்கும். முழு மனத்தின் சக்தியில் நாம் நிலைத்துத் திளைத்தால் ராஜயோகமாகும் அது. ராஜயோகம் யோகங்களில் சிறந்தது. அதை மேற்கொள்ளும் தகுதியுள்ளவர் அரிது என்கிறார் பகவான்.

பூரணயோகம் எண்ணம், உணர்வு, (கர்மம்) செயல் ஆகியவற்றில் நிலைத்து அவற்றின் திறனை யோகத்திற்காகப் பயன்படுத்துவதை மாற்றி அவற்றைத் திருவுருமாற்றம் செய்கிறது. எண்ணம் ஜோதியாகவும், உணர்வு அன்பாகவும், திருவுருமாற்றம் அடைகின்றன. எண்ணம் அழிந்து ஜோதியாக மாறுவதை ஸ்ரீ அரவிந்தர் திருவுருமாற்றம் என்கிறார்.

அன்னை தம் யோகானுபவங்களாக எழுதியுள்ளவற்றில்,

என் மனம் அழிந்துவிட்டது.

என் உணர்வு (vital) அழிந்துவிட்டது.

என் உடலே சிந்திக்கின்றது.

என் உடலே உணர்கிறது.

நான் ஆன்மா மூலம் அருளைப் பெறவில்லை.

என் உடல் அருளை ஆன்மாமூலம் பெறாமல் நேரடியாகப் பெறுகிறது.

என் உடல் அருளை (inner being) உள் மன ஜீவனாலும் பெறவில்லை.

என் உடல் அருளை சைத்திய புருஷனாலும் பெறவில்லை, நேரடியாகப் பெறுகிறது,

என்றெல்லாம் எழுதியுள்ளார். சிந்தனை சிறந்தது. அதில் லயித்து (concentrate) அதன் மூலம் யோகப் பலனைப் பெறலாம் என்பதற்குப் பதிலாகச் சிந்தனையை அழித்து யோகப் பலனைப் பெறுதல் சிறந்தது என்பதே அன்னை மேற்கொண்ட தவம்.

சட்டத்தை கோர்ட் அமுல் செய்கிறது. எனவே நியாயம் தேடி கோர்ட்டுக்குப் போய் சட்டத்தைச் செயல்பட வைப்பது ஒரு முறை. அது பலிக்கும். சட்டத்தை நாடாமல் நியாயம் தேடி, கோர்ட்டுக்கு வெளியில், கோர்ட் அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் நியாயத்தை எடுத்து எதிரியிடம் சொல்லி ஜயிப்பது. சட்டத்தை நாடுவதைவிட உயர்ந்த முறை என்பதுபோல், எண்ணத்தை அழித்து யோகப் பலனைத் தேடுவது.

எண்ணத்தைச் சட்டத்திற்கு உதாரணமாகச் சொன்னால், மனத்தை கோர்ட்டிற்கு உதாரணமாகச் சொல்லலாம். கோர்ட் என்றும் உண்டு. நாம் சட்டத்தைத் தேடி கோர்ட்டுக்குப் போகாமலிருந்தாலும் கோர்ட் செயல்பட்டுக்கொண்டிருக்கும். சமூகம் நாகரீகமடைந்து சட்டமும், கோர்ட்டும் தேவையில்லை என பண்பட்டு கோர்ட்டை எடுத்துவிடுதல் (abolish) மனத்தை அழிப்பது போலாகும். அன்னை மனத்தையும், உணர்வையும் அதுபோல் அழித்தார்.

****

727) மனம் விழிப்பானது என்பதால் இதைச் செய்வது முடியும். உணர்வும் உடலும் விழிப்பற்றவை என்பதால் அங்கு இதுபோல் எளிமையாகச் செயல்பட முடியாது.

மனம் அழிய இசையும், உடல் மறுக்கும்.

சரணாகதியைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் பேசும்பொழுது "இது கடினம்'' என்கிறார். மௌனம் எத்தனைச் சிரமமானது என்றறிந்து அதைச் சாதித்தவர்கள் எண்ணத்தைச் சரணம் செய்தால் அதன் சிரமம் தெரியும். மௌனம் என்பது எலக்ஷனில் ஜெயித்து, மெஜாரிட்டி பெற்று முதன் மந்திரியாவது என்றால், எலக்ஷனில் நிற்காமல் ஒருவரை அரசியல் கட்சிகள் அழைத்து ஏகமனதாக முதன் மந்திரியாக்குவது சரணாகதிக்கு ஒப்பாகும்.

அதுவே அடுத்த கட்டத்தில் உணர்வில் பலிப்பது என்பது அதேபோல் பிரதமராவதாகும். உடல் அசைவுகளை, பகவான், அன்னைக்கு முன் எவரும் சமர்ப்பணம் செய்ய முயன்றதில்லை. இன்று உலகில் ஒரு சர்க்கார் உலகை ஆட்சி செய்யவில்லை. அது ஏற்பட்டு, அதன் தலைமை மேற்சொன்னதுபோல் அழைத்து அமைப்பது, உடலைச் சமர்ப்பணம் செய்வதாகும்.

பொதுவாக இவை நம் வாழ்வுக்கு அப்பாற்பட்டவை. இவற்றை அறிய ஒருவர் விரும்பினால் அவர் ஓர் எண்ணத்தை சமர்ப்பணம் செய்து பார்க்கலாம். சமர்ப்பணம் பலித்துவிட்டால், உலகமே நமக்கு அடங்கியது போலிருக்கும். இதுவரை அதைச் செய்தவர்களை நான் சந்தித்ததில்லை. சமர்ப்பணம் செய்ய முயன்றவர்களை அறிவேன்.

எண்ணம் சமர்ப்பணமானவர், எல்லா எண்ணங்களையும் சமர்ப்பணம் செய்தால் உணர்வைச் சமர்ப்பணம் செய்ய முன்வரலாம். அடுத்த கட்டத்திற்கும் அதே சட்டம்.

சோதனையாக ஓர் உணர்வைச் சமர்ப்பணம் செய்தால் அதன் அம்சங்கள் - சிரமம், வலிமை, கடுமை - தெரியவரும். பலிப்பது அரிது. பலிக்கும் போலிருந்தால் யானை பலம் வரும். சில சமயங்களில் உடல் சில்லிடும். உலகமே அசைவற்று நின்றது போலிருக்கும்.

உடல் அசைவுகளைச் சமர்ப்பணம் செய்ய முயல்பவர்கள் subconscious movement தன்னையறியாமல் செய்பவற்றை - தலையைச் சொரிவது, கைகளை ஆட்டிப் பேசுவது, வலக் காலை முன் வைத்து நடப்பது - போன்ற எளிய செயல்களைக் கவனித்து மாற்ற முயன்றால், அதன் முக்கியத்துவம் புரியும்.

தினமும் தலையில் வாகு எடுத்துத் தலை சீவுவதைச் சற்று மாற்றிப் பார்த்தால், கை, நினைவு, சுபாவம், உணர்வு எப்படி "ஒத்துழைக்கின்றன'' என அறியலாம்.

உடலில் இதயம், நாடித்துடிப்பு, ஜீரணம், ரத்த ஓட்டம் போன்றவற்றை நாம் அறிந்து "சமர்ப்பணம்'' செய்யும் செயல்களாகும் நிலை உடலைச் சமர்ப்பணம் செய்வதாகும். அது அரிய நிலை.

Punctuality குறித்த நேரத்தில் செயல்படுவது நல்லது, அழகு, பயன்தரும் என்று மனம் பூரணமாக ஏற்றுக் கொள்கிறது. அதை உடலோ, உணர்வோ செயல்படுத்துவதில்லை. மனம் விழிப்பானது என்பதால் இதன் உட்கருத்தை அறிகிறது. யோகத்தில் முதிர்ச்சியடைந்து வேதகாலத்திலிருந்து இன்றுவரை முன்னோடிகளான முனிவர்கள், தபஸ்விகளைப் பற்றி அன்னை, அவர்கள் ஜோதிமயமானவர்கள், அவர்கள் உடலைத் தாங்கி அன்று இந்தியாவில் வாழ்ந்ததால், இன்று அனைத்து இந்தியருடல்களும் ஒளி பெற்றுள்ளன என்கிறார். இவர்கள் உலகத்தில் மகா புருஷர்கள். அவர்கள் பெற்றது ஆத்ம ஞானம், அடைந்தது சச்சிதானந்தம், பரப்பிரம்மம். அவர்களுள் பலர் கோபமுற்று சபித்துள்ளனர். பரப்பிரம்மத்தை ஆன்மா எட்டினாலும், அதற்குரிய சித்தியைப் பெற்றபொழுதும், அதன் ஜோதியின் சாயல் அவருடல் மூலம் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் நாட்டு மக்களுடலுள் ஒளியைப் பொதித்து வைத்தாலும், ஆன்மாவுக்கு அடுத்த மனம் பக்குவப்படுவதில்லை. அதன் கீழுள்ள உணர்ச்சி கோபத்தால் பொங்கி எழத் தவறியதில்லை. இது முனிவர்களின் குறைபாடில்லை. கோபத்தின் வேகம், உணர்வின் இருண்ட தன்மையை விளக்குவதாகும்.

கோபப்படாத சாந்த சொரூபியாக இருந்தவர் அநேகர். விஸ்வாமித்திரர், துர்வாசர்போல் கோபத்திற்குப் பேர் போனவர்களும் உண்டு. உணர்வு கட்டுப்பட பரப்பிரம்ம சித்தியை ஆன்மா பெற்றால் போதாது. உணர்வு திருவுருமாறுவது மேலும் சிரமம். பூரண யோகம் உடலைத் திருவுருமாற்ற முனைகிறது. பகவான் ஸ்ரீ அரவிந்தர் கோபப்பட்டதில்லை. ஒரே ஒரு முறை HE was annoyed பகவான் முகத்தைச் சுளிக்கும்படியாயிற்று. அதையும் அவர் உடனே மாற்றிக்கொண்டார் என அன்னை கூறுகிறார்.

பகவான் அன்னை விரும்பியது எதையும் மறுத்ததில்லை. ஆனால் அன்னை அவரை உடற்பயிற்சியை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டதை மறுத்துவிட்டார். உடலில் வேறு ஒரு சித்திக்காக - உத்தாப்பானா - தினமும் 7 மணி நேரம் நடந்ததாக ஒரு குறிப்பு வெளியாகியுள்ளது. உடல் திருவுருமாற்றத்தை அவர் மேற்கொள்ளவில்லை. அன்னை அதை மேற்கொண்டார். முதல் நிலை பலித்து பூர்த்தியாயிற்று. உடலின் ஜீவியம், சத்திய ஜீவியமாகத் திருவுருமாறியது.

அடுத்த நிலையில் (substance) உடலின் பொருள் திருவுருமாற வேண்டும். அது அன்னைக்கு மரண வேதனையைக் கொடுத்தது. "இந்த யோகத்தை நான் எவர்க்கும் சிபார்சு செய்யமாட்டேன்'' என்று அன்னை கூறினார்.

****

728) இதுபோன்ற தவமுயற்சியை மேற்கொள்ளும் முன் அந்நிலைக்குரிய அகந்தையை அழிப்பது அவசியம்

  • அழியும் கரணங்கள் தவம் சித்திப்பது.
  • அகந்தையை அழித்து, கரணங்களை அழிப்பது தவப்பயன்.

அகந்தை என்பது மனத்திலும், உணர்விலும், உடலிலும் உள்ளது. இந்த யோகத்தின் அடிப்படை அகந்தை அழிவது. அகந்தையின் வேர் மனதிலும், சிக்கல் உணர்விலும் உள்ளதாக பகவான் கூறுகிறார்.

மோட்சம் அடைவதை வேதரிஷிகள் அகந்தையை அழித்து சரணாகதி மூலம் செய்தனர். அகந்தையை அழித்தாலும், அழிக்காவிட்டாலும், மோட்சம் பெற முடியும் என்பது அனுபவம்.

நல்லவன், கெட்டவன், உயர்ந்தவன், உன்னதமானவன், தறுதலை, சூதாடி, திருடன் ஆகியவர் பட்டம் எடுக்க முயன்றால், கல்லூரி நல்லவனுக்கு மட்டும் அனுமதி தருவேன் என்று கூறுவதில்லை. கல்லூரிப் படிப்பை நாடுபவன் பொதுவாக நல்லவனாகவும், சில சமயங்களில் உயர்ந்தவனாகவும், ஓரிருவர் உன்னதமானவராகவும், உத்தமராகவும் அமைவதும் உண்டு. அதனால் பட்டம் பெற்றால் அவர் உன்னதமானவர் என்று கூற முடியாது. குணம் எப்படியிருந்தாலும், அறிவிருந்தால் பட்டம் பெறலாம் என்பது உண்மை. தவம் நிஷ்டையின் வலிமையைப் பொருத்தது. நிஷ்டை பலித்தால் தவம் பலிக்கும். தவம் பலித்தால் மோட்சம் கிட்டும். தவம் பலிப்பதற்கும் அகந்தை அழிவதற்கும் நேரடியான தொடர்பில்லை.

  • பூரண யோகத்தின் அடிப்படை அகந்தை அழிவது.
  • அதன் கருவி சரணாகதி.
  • சரணாகதி அகந்தைக்கு நேர் எதிரானது.

Mental ego, vital ego, physical ego, மனம், உணர்வு, லின் அகந்தைகள் கரையும்பொழுது தலையே அகன்று விரிவது போலிருக்கும். Vital ego உணர்வின் அகந்தை கரையும்பொழுது இனிமையான உணர்வு நம்மிலிருந்து எழுந்து பரவும்.

உடலின் அகந்தை அசைய ஆரம்பித்தால் துணி கிழிவது போன்ற சப்தம் கேட்பது சாதர்களுடைய அனுபவம். எந்த நிலையில் பூரண யோகத்தை மேற்கொள்ள விரும்பினாலும், அந்நிலைக்குரிய அகந்தை அழியாமல் அதை ஆரம்பிக்க முடியாது.

சிந்தனையை அழிப்பது, மனத்தைக் கரைப்பது, உணர்வை உருவில்லாமல் செய்வது, உடலின் இருளை அழிப்பது ஆகியவை தவத்தின் உயர்ந்த நிலைகள். இதுவரை தவசிகள் மேற்கொள்ளாதவை.

அன்னையை அறிந்து தீவிரமாக அவர் எழுதியவற்றைப் படித்த பரம்பரை ஆசாரச் சீலர் சொன்னதாவது : "இதுவரை அன்னை யாருமே சொல்லாததைச் சொல்லியிருக்கிறார். மனிதன் மாற வேண்டும் என்று எவருமே சொல்லவில்லை. என்ன மந்திரம், பூஜை, யக்ஞம் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று சொன்னார்களே தவிர, நாமே மாற வேண்டும் என்பதை எந்த புத்தகத்திலும் சொல்லவில்லை.''

மனிதனுடைய அகந்தை கரைய வேண்டும், மனிதன் மாற வேண்டும் என்று சொல்லாத பெரியவர்களே இல்லை. எல்லா மதங்களும், எல்லாச் சாஸ்திரங்களும் அதைத் தவறாமல் சொல்கின்றன. நடைமுறையில் நாம் புரிந்து கொள்வதில்லை. பூஜை செய்தால் போதும் என்று நினைக்கக் கூடாது. அது தவறு. உண்மையான உணர்வையே கடவுள் ஏற்கிறார் என்பதை விளக்க ஏராளமான கதைகளும் உண்டு.

மனிதன் எப்படி மாற வேண்டும் என்பதை, கதை எல்லா இடங்களிலும் சொல்கிறது. அன்னை அகந்தைக்குக் கொடுக்கும் விளக்கம் அவர்கள் எல்லாம் சொல்லியதைக் கடந்தது. அன்னை முதலிடம் கொடுப்பது அகந்தையை அழிப்பது. அகந்தையின் ஆதி, இன்றைய உருவம், ஆதிக்கம், வெளிப்பாடு, அமைப்பு ஆகியவற்றை அன்னை விளக்கமாகக் கூறுகிறார். அன்னையின் விளக்கத்தைக் கேட்டபின், நம்மை நாம் சோதனை செய்தால், அகந்தை தவிர நம்மிடம் என்ன இருக்கிறது என்ற கேள்வி எழும்.

ஆன்மாவும், பிரகிருதியும் தவிர அனைத்தும் அகந்தை என்பது அன்னை நிலை. உடலுறுப்புகள், அவற்றின் செயல்கள் பிரகிருதியைச் சேர்ந்தவை. நாமே விரும்பி செய்வன அனைத்தும் அகந்தையின் செயல்கள் என்பது அன்னையின் விளக்கம்.

சிந்தனையை அழித்து மௌனத்தை நிலைநாட்டுவது, மனத்தை அழித்து அதன் கடமையை உணர்வைச் செய்ய வைப்பது, உடலின் இருளைப் போக்கி ஒளிமயமாக்குதல் ஆகியவை அகந்தையைக் கடந்த நிலையில் உள்ள செயல்கள். சிந்தனை அழிந்தால் பிரபஞ்சத்தின் சிந்தனை மனத்தைத் தழுவும். மனம் அழிந்தால் பிரபஞ்சத்தின் மனம் நம்மை ஆட்கொள்ளும். இயல்பாக அகந்தை அழிந்தபின் மேற்கொள்ளும் விரதங்கள் இவை. எனவே இவற்றை மேற்கொண்டால், முதலில் அகந்தையை அழிப்பது அவசியம்.

அகந்தை ஒரு கூடு, தடை. இம்முயற்சிகள் பரந்து விரியும் தன்மையுடையன. அதற்குத் தடையும், கூடும் இருத்தல் கூடாது.

****

729) நாம் கண்மூடியாக விழிப்பற்ற நிலையில் இருந்தாலும் ஜீவியம் வளர்ந்தபடியிருக்கிறது. நாம் அறியாத நிலையிலும் பின்னணியில் ஆன்மீக அனுபவங்கள் நிகழும். மேல் மனம் அறியாத நிலையில் சைத்தியப் புருஷன் வளரும். அனுபவம் சேரும். ஜீவியம் மலரும். அதற்கெல்லாம் ஓரு வரையறையுண்டு. இதுவே பொதுவான முடிவான சட்டமாகாது.

விழிப்பற்ற நிலையிலும் ஜீவியம் விழிப்பாக வளரும்.

மனிதனுக்கு அவன் குறை தெரிவதில்லை என அனைவரும் கூறுகிறோம். மனிதனுக்கு அவன் நிறைவு தெரிவதில்லை என்பது ஆன்மீகத்துறையில் முக்கியக் கருத்து. இவையிரண்டையும் சேர்த்து,

மனிதன் தன்னையறியவில்லை

என்று நாம் கொள்ளலாம். பெருநகரங்களில் உள்ள மாணவர்கட்கு வாய்ப்பு அதிகம். மற்ற நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் உள்ள மாணவர்களை அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்பவே புரிந்துகொள்வார்கள். பெரிய தொழிற்சாலைகளில் நிபுணனாகப் பேர் வாங்கியவர்கள் expert workers முக்கால்வாசிப் பேருக்கு மேல் கிராமத்து இளைஞர்கள். இவர்கள் பாக்டரியில் வந்து சேரும்வரை எவருக்கும் இவர்களுடைய திறமை தெரியாது. இவர்கட்கே தெரிய வழியில்லை. Aptitude test மூலம் இதைக் கண்டுபிடிப்பது வழக்கம். சிறந்த மொழியறிவுள்ள மாணவனுக்கு கட்டை குரலிருந்தால், அனைவரும் அவனை அவன் குரல் போலக் கருதுவார்களே தவிர அதைக் கடந்து அவனுக்கு மொழியில் சிறப்பான திறமையுள்ளது எனக் காணமாட்டார்கள். Mechanical ability, linguistic tune மெஷினறிவு, மொழிப்பயிற்சி, இதுபோல் எனில், பையனுடைய புத்திசாலித்தனம் பலசமயங்களில் வெளிவருவதில்லை. நல்ல சிறந்த புத்திசாலிகளை மக்கு எனவும் கருதுவதுண்டு.

மேலெழுந்தவாரியான திறமைகளை நாம் அறிய முடியவில்லை என்றால் ஆத்மா மறைந்துள்ளது, புதைந்துள்ளது, அதைப் பிறர் அறியவில்லை, நாமே அறியவில்லை என்பது ஆச்சரியமில்லை.

மேதை, அவதாரப் புருஷன், புத்திசாலி, திறமைசாலி, ஆன்ம விளக்கம் பெற்றவர்கள் சில சமயங்களில் முளையிலே தெரிவதுண்டு. பல சமயங்களில் தெரிவதில்லை. அன்னை பக்தர்கள் அதுபோல் தங்களுள் வளரும் ஆன்மீகப் பலனைப் பொதுவாக அறிந்தாலும், விவரமாக அறிவதில்லை. சமூக அந்தஸ்து உயர்வது, மன நிம்மதி வளர்வது, குணம் சிறப்படைவது, மனிதன் உயர்ந்த மனிதனாக மாறுவது, ஆன்மா விழிப்படைவது, வசதி பெருகுவது, இல்லாத வாய்ப்பு வந்து பலிப்பது, ஆபத்தான கண்டங்கள் நம்மையறியாமல் விலகுவது, நம் சூழ்நிலையிலுள்ள விரோதிகள் தாங்களாகவே வெளியூர் போவது, புதிய நல்ல சூழலுக்கு நாம் போய்ச் சேர்வது, ஆரோக்கியம் பெருகுவது அன்பர்கள் தவறாது பெறுவது. பெரும்பாலும் "எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை'' என்பவர் பலர். நினைத்துப் பார்த்தால் பெற்றது பேர் அளவு, முடிவற்றது எனத் தெரியும்.

குழந்தை பள்ளியில் சேர்ந்து படிக்கும்பொழுது தினமும் தான் எதைக் கற்றுக்கொள்கிறது எனப் புரிந்து கொள்கிறது. அது பெற்றோருக்குப் புரியும். ஆனால் 3 வயதுக்குமுன் குழந்தை ஒவ்வொரு நிமிஷமும் கற்றுக் கொண்டபடியேயிருப்பதை நாமும் அறிவதில்லை, குழந்தையும் கவனிப்பதில்லை. சிறு வயதில் குழந்தை பேசக் கற்றுக் கொள்வதுபோல் பல ஆயிரம் விஷயங்களைப் பெற்றோர் மூலம் கற்றுக் கொண்டாலும், பல ஆயிரம் விஷயங்களைத் தன்னை அறியாமல் கற்றுக்கொள்கிறது. அதேபோல் ஆன்மா ஒவ்வொரு நிமிஷமும் ஓர் அனுபவத்தைப் பெறுகிறது. நாமே முயன்று அறிவதை மட்டுமே நாம் அறிகிறோம். மற்றதை நாம் அறிவதில்லை. இவ்விஷயத்தில் நாமும் குழந்தை போலிருக்கிறோம் என்று அன்னை அடிக்கடி சொல்வார்கள்.

ஆசிரமத்தில் வந்து சேர்ந்து பல ஆண்டுகளாகியும் தாம் யோகம் செய்யவில்லை, தமக்கு யோக அனுபவங்களில்லை, யோகம் பலிக்கவில்லை என்று அன்னையிடம் முறையிட்டும், அதனால் ஆசிரமத்தை விட்டுப் போகவேண்டும் என்று சிலர் கேட்டதுண்டு. அவர்களுக்கு அன்னை மேற்சொன்னது போன்ற பதிலைச் சொல்வதுண்டு. இதில் உள்ள முறையையும், உண்மையையும் நம் மரபு அறியும்.

கணவனுக்குப் பணிவிடை செய்யும் மனைவிக்குக் கணவனுடைய சாதனையின் புண்ணியத்தில் பங்குண்டு. சிஷ்யன் குருவிடமிருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் யோகச் சாதனையைப் பெறுகிறான். நேரடியாக அவர் கூறும் மந்திர உபதேசங்களாலும், மறைமுகமாக அவர் ஆன்மாவோடு அவர் இணைந்திருப்பதாலும் சிஷ்யன் பலன் பெறுகிறான்.

அன்னை பக்தர்கள் மற்றோர் அம்சத்தையும் காணலாம். அதுவும் நம் மரபில் உண்டு. ஒரு பக்தர் யோக முன்னேற்றமடைந்தாலும், வாழ்வில் முன்னேற்றமடைந்தாலும், சில சமயங்களில் அவர் எதிரிக்கு அதே பலன் ஏற்படுவதுண்டு. ஏனெனில் எதிரி என்பதால் எந்த நேரமும் பக்தரை அவர் வெறுப்பாக நினைத்துக் கொண்டிருப்பதால் மனத்தளவில் தொடர்பு ஏற்பட்டு, அதன் மூலம் இவர் செய்யும் யோகப் பலன் எதிரிக்குப் போகிறது. இது பொது விதியாகாது. விலக்காகச் செயல்படுவதாகும்.

தான் வளர்த்து ஆளாக்கிய சிறுவன் தன்னைவிட்டுப் போய் எதிரியாகி பக்தரின் எதிரிக் கூட்டத்தில் ஒருவனானதை மனம் பொறுக்காமல் ஒரு மாதம் தொடர்ந்து அவனை மனதால் கரித்துக் கொட்டியவர், ஒரு நாள் அவன் தெருவில் போகும்பொழுது அவன் முகம் அளவு கடந்து பிரகாசமாக இருப்பதைக் கண்டு வியந்தார். வெறுப்பால் கடிந்ததால் இவர்மூலம் அவன் பெறுவது இவ்விஷயத்தில் அன்னையின் சக்தி என்பதால், அவன் முகம் ஒளி வீசியது.

****

730) சமூக மாறுதல், மனநிலை மாறுதல், ஜீவியம் மாறுதல் ஆகியவற்றை மேல் மனம் ஏற்றுக்கொள்ள விரும்பினால், உடனே ஏற்றுக்கொள்ளும். ஆழ்ந்த மனம் அதுபோல் ஏற்றுக்கொள்ளாது.

மேல்மனம் ஏற்பதை ஆழ்மனம் மறுக்கும்.

வெளிநாட்டில் போய் விரும்பித் தங்கியவர்கள் அநேகர். வயதானபின் உடல் தான் பிறந்த மண்ணுக்குப் போக விரும்பும். அதைத் தடுக்க முடியாது. J.R.D.டாட்டாவின் தாயார் பிரான்சில் பிறந்தவர், பிரெஞ்சுக்காரர். அவர் இறந்தபின் அவருடல் பிரான்சில் அடக்கம் செய்யப்பட்டது.

நேருவுக்கு ஆங்கிலமே "தாய்மொழி' என்ற அளவில் அவர் வாழ்விருந்தது. தாம் கனவு காண்பதும் ஆங்கிலத்தில் என்று ஒரு சமயம் கூறினார். ஆனால் அவர் ஹிந்தியில் பேசும்பொழுது எழும் ஆர்வம், வேகம், உணர்ச்சி ஆங்கிலத்திலிருக்காது.

குழந்தைகள் மம்மி, டாடி என்று இன்று பெற்றோரை அழைக்கின்றனர். அம்மா என்றழைக்கும்பொழுதுதான் தாய்க்கு அது தன் குழந்தை போலிருக்கும். பழைய நாள் கதை ஒன்று;

வடநாட்டிலிருந்து சென்னை வந்தவர் பல மொழிகளைச் சரளமாகப் பேசுகிறார். தமிழ் கொச்சையாகப் பேசுவதுபோல், பெங்காலியும் கொச்சையாகவும், தெளிவாகவும் பேசுகிறார். அவருடைய சொந்த ஊர் எது என்று கேட்க தைரியமில்லாத சில சிறுவர்கள் அதை அறிய முடியாமல் தவித்தபொழுது ஒருவன் மட்டும் "இரண்டு நாளில் கண்டுபிடிப்பேன்'' என்றான். 2 நாள் கழித்து வந்து அவர் தமிழர் என்றான். எப்படிக் கண்டுபிடித்தான் என சிறுவர்கள் அறிய விரும்பினர். அவர் பகல் தூங்கும்பொழுது வெந்நீரைக் கைதவறி கொட்டியதுபோல் பையன் கொட்டினான். "யார்ரா அவன்'' என்று அலறினார். இயல்பாக எழுவது தாய்மொழி, அது ஆழ்மனத்திற்குரியது.

30 ஆண்டு அமெரிக்காவிலிருந்து வீடு திரும்பியவர் வத்த குழம்பும், சுட்ட அப்பளமும் சாப்பிட்ட பிறகு "இன்றுதான் சாப்பிட்டது போலிருக்கிறது'' என்றாராம்.

தகப்பனாரைப் பார்க்கமாட்டேன் எனச் சிறு வயதில் சபதம் செய்தவர், மனைவி முகத்தில் விழிக்க மாட்டேன் என்று அதுபோல் பலகாலம் சொல்லியவர்கள் மரணப்படுக்கையில் விழைவது "அப்பா வரமாட்டாரா?'', "அவள் எங்கே?'' என்பது. ஆழ்மனம் உடலுக்குரியது. உடல் தன் ஆயுள் முடிந்தபின் மேல்மனம் வைராக்கியமாகக் கருதியவற்றை எல்லாம் மறந்து ஆதிநாளில் தான் முதலில் கற்றதை, ஆழ்ந்து விரும்பியதை, ரத்த பாசத்தை விழையும். அது ஆழ்மனத்தின் தன்மை.

  • ஆழ்மனம் எளிதில் ஏற்றுக்கொள்ளாது.
  • ஏற்றுக்கொண்டதை எளிதில் மறக்காது.

சுபாவம் ஆழ் மனத்திற்குரியது. பாஷன் என நாம் கற்பது மேல் மனத்திற்குரியது. Blood is thicker than water. ரத்தபாசம் ஆழ்ந்தது என்பது ஆங்கிலப் பழமொழி. ஆங்கிலக் கவியான சரோஜினி நாயுடுவுக்கும், அதுபோன்ற மற்றவர்க்கும் உணர்வு எழும்பொழுது தாய்மொழியில் ஏற்படும் செறிவு அந்நிய மொழியில் வாராது.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் அழியா இலக்கியமாக எழுதிய உலகப் பெரும் காப்பியம், காவிய வடிவம் பெற்றது அவரது தாய்மொழியில் அன்று, ஆங்கிலத்தில்.

அரசியலிலும், யோகத்திலும் விதிவிலக்காக இருந்ததைப்போல் அமர காவியம் இயற்றியதிலும் பகவான் விதிக்கு விலக்கானவர்.

Fashion பாஷன் மாறினால் சிறுவர்கள் உடனே அதைப் பிடித்துக்கொள்வதைப்போல் பெரியவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அறிவு ஏற்பதைப்போல் உணர்வு எளிமையாக ஏற்றுக்கொள்ளாது. புதிய கருத்துகளை நாட்டில் உயர்ந்த படிப்பாளிகள், தலைவர்கள், செல்வர்கள் ஏற்பதைப்போல் பொதுமக்கள் சீக்கிரம் ஏற்க முன்வருவதில்லை. மாற்றம் ஏற்படுவதுண்டு. எல்லா நிலைகளும் மாற்றத்தை ஒரே அளவில் ஏற்பதில்லை. ஆண்கள் நாட்டின் புதிய நிலைக்கேற்ப மாறுவதைப்போல் பெண்கள் மாறுவதில்லை. நகரம் மாறுவதைப் போல் கிராமம் மாறுவதில்லை. அதேபோல் மேல் மனம் சீக்கிரமும், ஆழ்ந்த மனம் மெதுவாகவும் மாறுவது மனித இயல்பு.

இராகு காலத்தை இனி நம்ப வேண்டியதில்லை என முடிவாக நாம் அதை விட்டுவிட்டபின், பல ஆண்டுகட்குப்பின் ஒரு முக்கியமான காரியம் இராகு காலத்தில் அமைந்துவிட்டால், எங்கிருந்தோ உள்ளிருந்து ஒரு கேள்வி, சந்தேகம், பயம் எழுவதுண்டு. அந்த பயத்தை எழுப்புவது ஆழ்ந்த மனம்.

வேறு ஜாதியில் ஆர்வமாகத் திருமணம் செய்துகொண்டவர், பிள்ளைகட்குத் திருமணம் செய்யும் நிலையில் தம் ஆழ்ந்த மனம் எழுப்பும் கேள்விகளை அறிவார். எத்தனை முறை ஒதுக்கினாலும், எங்கிருந்து இக்கேள்விகள் எழுகின்றன, எப்படி எழுகின்றன என்று தெரியவில்லையே என்று நினைப்பார். விதவையானபின் திருமணம் செய்துகொண்டவருக்கு இதுபோன்ற கேள்விகள் எழுவதுண்டு.

எல்லோரும் பணம் வாங்கும் ஆபீசில் கடைசியாகத் தாமும் பணம் வாங்கலாம் என முடிவு செய்தவருக்குப் பல ஆண்டுகள் கழித்து ஆழ்ந்த மனம் பல பிரச்சினைகளை எழுப்பும். அதே ஆபீசில் பணத்தைத் தொடக்கூடாது என முடிவு செய்தவருக்கும் ஓய்வு பெறும் நிலையில் நாம் செய்தது சரியா என உள்ளிருந்து குழலோசை போல் குரல் எழும்.

1920இல் ஆசிரமம் வந்து பகவானைத் தரிசித்தவருக்கு பகவானைவிட அவர் வசித்த அறை மனதில் ஆழமாகப்பட்டது. பலமுறை தம் கனவில் யாரோ தம்மைத் தூக்கி ஒர் அறையில் வீசுவதைக் கண்டிருக்கிறார் அவர். பகவானைத் தரிசிக்க வந்தபொழுது அவர் வசித்த அறையே தான் கனவில் கண்ட அறை என்று பார்த்தவுடன், இனி நமக்குரிய இடம் ஆசிரமம் என இங்கு வந்து மனைவியுடன் சேர்ந்துவிட்டார். 30 வருஷங்களுக்கு மேல் இங்கிருந்து காலமானார். காலையில் எழுந்து சிவானந்தலகரி சொல்வதையோ, மாலையில் இராமாயணம் படிப்பதையோ அவரால் விடமுடியவில்லை. தாம் காலமாகுமுன், அன்னையின் கோட்பாட்டுக்கு நேர் எதிராகத் தம் பரம்பரைப் பழக்கப்படித் தம் உடலைத் தகனம் செய்யச் சொன்னார். மேலும் அஸ்தியைக் கங்கையில் கரைக்கச் சொன்னார். அவர் விரும்பி ஏற்றுக்கொண்ட பகவானும், அன்னையும், அவர் மேல் மனம் ஏற்றுக்கொண்டவை. ஆழ்ந்த மனத்தில் அவரால் பழைய பழக்கங்களை விடமுடியவில்லை. ஒரு சமயம் இவர் அன்னையிடம் சென்று, "நீங்கள் சொல்வதையெல்லாம் நான் செய்கிறேன். ஏன் எனக்கு யோகம் பலிக்கவில்லை'' என்றார். அன்னை தமக்குத் தெரியாது என்று கூறினார். யோகம் பலிக்க ஆழ்ந்த மனம் மேல் மனம் ஏற்பதை ஏற்க வேண்டும்

****

தொடரும்....

 

ஜீவிய மணி

பரமாத்மா ஜீவாத்மாவாக மாற அகந்தை வழி செய்கிறது.

*****

Comments

730para 1, line 2 - J.R.D

730

para 1, line 2 - J.R.D டாட்டாவின் - J.R.D. டாட்டாவின்

do.   3 - lines 2 and 3 - are to be joined.

do.  6, line 5 - முதல் - முதலில் 

do.  9, do.  1 - அரசியலும் - அரசியலிலும்

 

01.யோக வாழ்க்கை விளக்கம்

01.யோக வாழ்க்கை விளக்கம் IV

727 (Contd.)

para 11, line 6 - from அடுத்த to கூறினார். - separate paragraph.

728

para 4, line 3 - 3rd and 4th lines are to be joined.

do.  11, line 2 - உடன் - உடலின்

729

para 1, line 8 -  expert workersமுக்கால்வாசிப் -

expert workers முக்கால்வாசிப்

para 1 - lines 11 and 12 are to be joined.

 

 

 

01.யோக வாழ்க்கை விளக்கம்

01.யோக வாழ்க்கை விளக்கம் IV

726

para no.8, - 1st and 2nd sentences are to be joined.

para no.10, line no.4 - சொல்லிஜயிப்பது - சொல்லி ஜயிப்பது

727

para no.5, line no.4 - போருக்கும்.- போலிருக்கும்.

para no.6, line no.2 - movementதன்னையறியாமல் - 

movement தன்னையறியாமல்

para no.9, line no.1 - The word Punctuality - missing

para no.11, line no.3 - உடல் - உடலில்

 

 



book | by Dr. Radut