Skip to Content

06.அன்பர் கடிதம்

 அன்பர் கடிதம்

ஸ்ரீ அன்னை அவர்களுக்கு,

       நமஸ்காரம். ஸ்ரீ அன்னையை ‘அமுதசுரபி’ பத்திரிக்கையின் வாயிலாக 15 ஆண்டுகளாக அறிவேன். ‘அன்னை’யை ஏற்றுக் கொண்டவுடன் என் வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் நடந்தேறின. 12 ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரத்தில் ஒரு தொண்டு நிறுவனத்தில் பணி செய்தேன். அப்போது மதிப்பூதியமாக ரூ. 400 மாதா மாதம் அளித்தார்கள். கிராமங்களுக்குச் சென்று தொண்டுகள் செய்ய வேண்டும். அப்படி ஒரு கிராமத்திற்கு சென்று திரும்பும்போது பேருந்தைத் தவறவிட்டேன். 4 கி.மீ. நடந்து வந்துதான் பேருந்துகள் தொடர்ச்சியாக செல்லும் சாலையை அடைய வேண்டும். அச்சமயம் சாலையில் நடந்து கொண்டிருந்தபோது கட்டுவிரியன் பாம்பு ஒன்று சாலையில் கிடந்ததை நான் பார்க்கவில்லை. சாலையில் நடந்து  கொண்டிருந்தேன். எதிர்ச்சாலையில் வந்து கொண்டிருந்த வேனின் ஹெட்லைட்டின் ஒளி பாம்பின் மீது பட்டது. பாம்பு சீறிக் கொண்டிருந்தது. வேனில் இருந்தவர்கள் இறங்கி பாம்பை அடித்துவிட்டார்கள். நல்லவேளை, அப்பாம்பை நான் மிதித்திருந்தால் என் நிலைமை என்ன ஆகியிருக்கும்? மனதிற்குள் அன்னைக்கு நன்றி செலுத்தினேன்.

       நிரந்தரமான வேலை இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய துர்ப்பாக்கியம் என்பதை உணர்ந்தேன். அன்னையிடம் நிரந்தரமான வேலையைத் தாருங்கள் என்று மனதில் வேண்டினேன். சில நாட்கள் கழித்து ஒரு தனியார் பள்ளியில் இருந்து ‘இண்டர்வியூ’ வந்திருந்தது. அன்னையின் அருளால் அப்பள்ளியில் அதே 400 ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது. அப்போது பி.எட். தபால் வழியில் படித்துக் கொண்டிருந்தேன். பிராக்டிகல் வகுப்பிற்காக 1 மாதம் விடுப்பு எடுத்தேன். விடுப்பு முடிந்து வந்தவுடன், சோதனையாக... நிர்வாகி என்னை அப்பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மாற்றம் செய்வதாகக் கூறினார். அன்னையை மனதிற்குள் வேண்டினேன். அன்னையை நம்பினோர் கைவிடப்படார் என்பது அனுபவ உண்மையாயிற்றே! அப்பள்ளியில் இருந்து மாறுதல் கிடைக்காமல், அப்பள்ளியிலேயே தலைமை ஆசிரியராக பதவி உயர்வு செய்யப்பட்டேன். தற்போது 10 ஆண்டுகளாக அப்பள்ளியில் அரசு ஊதியம் பெறும் ஆசிரியராக பணியாற்றி வருகின்றேன். அன்னையின் கருணையை என்னென்பது?

       இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமாதக் குழந்தையான என் பையன் ஹரிஷுக்கு வயிற்றுப்போக்கும், வாந்தியும் ஏற்பட்டது. டாக்டரிடம் சென்று காண்பித்தும் எந்தப் பயனுமில்லை. நிமிடத்திற்கு நிமிடம் வயிற்றுப்போக்கும் வாந்தியும் அதிகமாகிக் கொண்டே வந்தது. டாக்டரிடம் நானும், என் மனைவியும் அழுதுவிட்டோம். டாக்டரின் மேஜையிலும் அன்னை படம் இருந்தது. அவரும் அன்னை பக்தர். அவர் ஆறுதல் கூறினார்.

       மதுரையில் உள்ள பிரபல டாக்டருக்கு எழுதிக் கொடுத்தார். மதுரைக்குக் காரில் நான் சலைன் பாட்டிலை பிடித்துக் கொள்ள மனைவி மற்றும், தாயார், ஓர் உதவியாளருடன் சென்றோம். வழி முழுக்க மனைவியின் கண்ணீர் நின்றபாடில்லை. மதுரை டாக்டர் கைராசிக்காரர். அவரும் ஓர் அன்னை பக்தர். அன்னையின் புன்னகை தவழும் படம் அந்த மருத்துவமனையில் இருந்தது. அப்போதும் அன்னையிடம் பிரார்த்தித்துக் கொண்டேன்.

       இரவில் தூங்கிக் கொண்டிருந்தேன். மங்கலான வெளிச்சம். திடீரென்று எழுந்தேன். அறை வாசலுக்கு அருகில் ஓர் உருவம் ஆசீர்வதிப்பதுபோல் எதற்கும் கவலைப்படாதே... நான் இருக்கின்றேன் என்று கூறுவதுபோல் தோற்றம். அன்னையின் திவ்ய தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றேன். அன்னையின் அருளால் என் மகனின் நோய் 3 நாட்களில் முற்றிலும் குணமானது. நாங்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினோம். என் மகனை மருத்துவமனையில் சேர்த்த மறுநாள் என் தங்கைக்குக் கேரளாவில் வளைகாப்பு. என் பெற்றோர் போயாக வேண்டிய சூழ்நிலை, என் மாமியாரைப் போனில் தொடர்பு கொண்டு அழைத்தவுடன் அவர் கும்பகோணத்தில் இருந்து உடனே மருத்துவமனை வந்துவிட்டார். என் பெற்றோர்கள் வளைகாப்பிற்காகக் கேரளா சென்றனர்.

       நான் வேலை பார்க்கும் பள்ளியில் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கும் போது... அன்னையிடம் சரணாகதி அடைந்தால் அப்பிரச்சினைகள் சூரியனைக் கண்ட பனிபோல விலகிவிடும் என்பது அனுபவ உண்மை.

       தற்போது என் குடும்பம் மட்டுமன்று, என் மாமியார் குடும்பமும் அன்னையை ஏற்றுக் கொண்டது. நம்பினோரைக் கைவிட மாட்டார் ஸ்ரீ அன்னை. இப்போது எச்செயலைச் செய்ய ஆரம்பித்தாலும் அன்னையிடம் வேண்டிக் கொண்டே செய்கிறேன். அன்னை வழி நடத்திச் செல்வார் என்ற பரிபூரண நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

       அன்னைக்குச் சமர்ப்பணம்!

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

 

கட்டுப்பாட்டைத் தானே கற்றுக் கொள்வதில்லை. கட்டாயப்படுத்தினால் மட்டுமே நாம் அதை ஏற்கிறோம். கடுமையாகவோ, மென்மையாகவோ கட்டுப்பாட்டை வலியுறுத்த வேண்டும். வலியுறுத்தாவிட்டால் நாம் அதை ஏற்க மாட்டோம்.

 

கட்டுப்பாடு தானே கட்டுப்படாது.

 

 

 



book | by Dr. Radut