Skip to Content

12.எது நியாயம்

அன்னை இலக்கியம்”

எது நியாயம்

இல. சுந்தரி

       “அப்படீன்னா? உனக்கு எம்மேல அன்பில்லையா?” என்றான்

       நெறய இருக்கு. அத்தோட நம்பிக்கையுமிருக்கு, எம் புருஷன் நல்லவரு.நேர்மையானவரு. அவருக்கு சாமி துணையிருக்கும்னு” என்றாள்.

       “எனக்கு இந்த சாமி பூதமெல்லாம் நம்பிக்கையில்ல. சாமியிருக்குன்னா அக்கிரமங்களை ஏன் வேடிக்கை பாக்குது?” என்றான்.

       மேலேழுந்தவாரியா பார்த்து எதையும் முடிவு செய்யக்கூடாது. அக்கிரமம்னு நாம் எதை நினைக்கிறோம். ஏன் நெனைக்கிறோம்னு எல்லாம் பாக்கணும்” என்றாள்

       “அது சரி. கூலி வேலை செய்ய இருபது ரூபா பேசி பத்து ரூபா கொடுத்து இதுதான் முடியும் ஒன்னால் ஆறத பாத்துக்கன்னு ஒத்தன் மனசை சீண்டறது தப்பில்லையா?” என்றான்.

       அதான் சொன்னேனே. மேலோட்டமா பாத்து தப்பு, தப்பு இல்லைங்கறத முடிவு செய்யக்கூடாது.

       “இதுல மேலோட்டம் என்ன? சொன்னது 20 ரூபா. கொடுத்தது 10 ரூபாய. தப்பில்லையா?” என்றான்.

       “சரி சரி. ஒங்க மனசுக்கு நியாயம்னு தோண்றத நீங்க செய்யறீங்க. அது தன்னலம் இல்ல. அதனால் அது தப்பில்ல. அவ்வளவுதான்.”

      ஆக என் செயல நீ ஒத்துக்கலையா?”

      “ ஒங்களுக்காக சாமியை வேண்டுறதுதான் என் தர்மம். அதை நான் தவறாமல் செய்வேன்” என்றாள்.

       எப்படியோ, என் மீது வருத்தமில்லை உனக்கு அது போதும் எனக்கு என்றான்.

       மறு நாளிரவு. மணி ஒன்பதாகியும் வரவில்லை. அம்மா புலம்பினாள். வேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறின கதைதான் என்றாள்.

       நாலு பேர் அவனைக் கைத்தாங்கலாய்ப் பிடித்து வந்து வீட்டில் சேர்த்துவிட்டு புள்ளய பாத்துக்கம்மா என்று சொல்லிப் போனார்கள். அம்மா பதறினாள். கண்ணம்மா பதறவில்லை. நிதானம் இழக்கவில்லை. அவனைத் தாங்கிப் பிடித்து கட்டிலில் படுக்க வைத்தாள். காயத்தைக் கழுவி மருந்திட்டாள். குடிக்க சூடாய் ஏதோ கொடுத்தாள். இதமாயிருந்தது. பிறகு சோறு கலந்து வந்து உண்ணச் செய்தாள். படுக்க வைத்துக் கால் பிடித்து விட்டாள். எதுவும் பேசவில்லை. சுகமாக உறங்கிப் போனான்.

       அம்மா தவித்தாள். என்னைக் கலக்கியதோடு இந்தச் சின்னப் பெண்ணையுமல்லவா கலக்குகிறான் என்று புலம்பினாள். அவளோ சிறிதும் பதறாமல் வாய் பேசாது தன் வேலைகளைச் செய்த வண்ணமிருந்தாள்.

       “ஒம் புருஷனுக்குப் புத்திமதி சொல்லக்கூடாதா?” என்றாள் கடுமையாக.

       அவள் அதற்கும் வாய் பேசவில்லை.

       கணவன் காலையில் கண் விழித்தான். சோர்வு நீங்கியிருந்தது. வழக்கம்போல வேலைக்குப் புறப்படத் தயாரானான். மனைவி நேற்றிரவு நடந்ததை மனதில் வைத்து ஏதேனும் கோபமாய்ப் பேசுவாளோ என்று எண்ணினான். இல்லை புன்னகை மாறாது அனுப்பி வைத்தாள். என்ன இது வியப்பாயிருக்கிறது. மறுநாளும் அப்படியே நடந்தது. அவள் மருந்திட்டாள், உணவூட்டினாள். கால் பிடித்தாள்.

       மாமியார் பதறினாள். “சரிதான் நீ ஏதாவது சொல்லித் திருத்துவேன்னு பாத்தா நீ வேற ஆதரவாயில்ல நடக்கிற?” என்றாள் அம்மா.

       “அவரே துன்பப்பட்டு வரும்போது நானும் அவரைத் துன்பப்படுத்த வேண்டுமா? கடவுளை அவருக்காகத் துணையிருக்க வேண்டுகிறேன்” என்றாள் கண்ணம்மா.

       “அது சரி. புருஷங்காரன் அடியும் உதையும் பட்டு வரானேன்னு உனக்குக் கவலை இருந்தாத்தானே? நீ சொகமா வீடு வாசல் கெடச்சுதுன்னு உண்டு ஒறங்கிற” என்று ஆத்திரப்பட்டாள்.

       அவள் பதிலேதும் கூறாமலிருந்தாள். குமரனுக்கு சங்கடமாயிருந்தது. பாவம் கண்ணம்மா. என் செயலுக்கு அவள் என்ன செய்வாள். அவளையேன் அம்மா பேசவேண்டும் என்று தவித்தான். மனைவிக்கு எதிரே தாயை அடக்கினால் தான் தாயை விட்டுக் கொடுத்துவிட்டு மனைவி பக்கம் சேர்ந்து கொண்டேன் என்று கற்பனை செய்து துன்புறுவாள் என்று பேசாதிருந்தான்.

       கண்ணம்மாவிடம் தனியாக, “அம்மா சுபாவம் அது, நீ ஒண்ணும் மனசில் வச்சுக்காத” என்றான்.

       “அவங்க வேதனை அவங்க பேசறாங்க. அவங்க நெலல நா இருந்தா நானும் இப்படித்தான் பேசுவேனோ என்னமோ, இதுல வருத்தப்பட என்னயிருக்கு. அவங்க ஒங்களுக்கு மட்டும் அம்மாயில்ல. எனக்கும்தான் அம்மா” என்றாள்.

       இவளுக்கு உணர்வேயில்லையா? கல்லும் மண்ணும் கலந்து செய்யப்பட்டவளா? யார் எது சொன்னாலும் பொறுத்துப் போகிறாளே. இந்தப் பொறுமையில்லாமல்தான் நான் துன்பப்படுகிறேனா என்று ஒரு கணம் நினைத்தான். சரி சரியென்று வெளியேறினான்.

       மறுநாள் நோயாளிக் குழந்தையுடன் தவித்த தாய்க்கு உதவி செய்யப்போய் விடிய விடிய வரவில்லை. இவன் தாய் புலம்பி நின்றாள். கண்ணம்மா கலங்காது கடவுளை நினைத்தவண்ணம் உறங்காது விழித்திருந்தாள்.

       காலை 6 மணிக்குத்தான் வந்தான். “கண்ணம்மா!” என்றான்.

       வாங்க என்று எழுந்து வந்தவள் அவனுக்குக் காபி கலந்து எடுத்து வந்து கொடுத்தாள்.

       அம்மாவுக்குக் கோபம். “லேட்டா வரவனை ஏன்னு ஒரு வார்த்தை பேசாம ஏன் காபி கொடுத்து உபசாரம் பண்ற. இவன் இப்படி இருக்கானே. திருந்தணும்னுதான் ஒன்னைக் கட்டி வச்சேன்” என்றாள்.

       அதற்கும் கண்ணம்மா ஒன்றும் பேசவில்லை. கணவன் கொடுத்த காலி டபரா டம்ளரைப் பரிவுடன் பெற்று எடுத்துப் போனாள்.

       ஏன் கண்ணம்மா? என்னாலதானே ஒனக்கு இந்தப் பேச்சு என்று ஆறுதலாகக் கேட்டான்.

 

தொடரும்...

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

 

சக்தி, திறமை, உரிமை, செல்வம், சந்தோஷம் ஆகியவற்றிற்காக மனம் ஆர்வம் கொள்வதைவிட ஆசை, மரியாதை, புகழுக்காக மனித மனம் அதிகமாகத் துடிக்கும். இவை அகந்தையின் அம்சங்கள்.

 

பலனை விட மனம் தோற்றத்திற்காகத் துடிக்கும்.

 

 book | by Dr. Radut