Skip to Content

அஜெண்டா

Vol III P. 230 While reading the history books at 12, Mother could know what had happened during those times

12ஆம் வயதில் அன்னை படித்த சரித்திரப் புத்தகங்களை அன்னை சூட்சுமவாயிலாகக் கொண்டு அன்று நடந்தவற்றை நிதர்சனமாகக் "கண்டார்'

புதுவை வந்து ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்குமுன் அன்னை சத்தியஜீவனைக் கண்டார். ஆப்பிரிக்காவிலிருக்கும்பொழுது, உடலைவிட்டுப் பிரிந்து பாரிஸ் வந்து ரயில் ஏறி இறங்கினார், மாலை தொடுத்தார், பென்சிலை எடுத்து எழுதினார் என்பவை வாசகர் அறிவதே.

"புதுவை வருமுன் அன்னை பௌத்தமத யோகத்தையும், கீதையினுடைய யோகத்தையும் சிறப்பாக அறிவார்'' என்று பகவான் கூறியுள்ளார். "சத்தியஜீவியத்தினுள் அன்னை நேரடியாக நுழைந்தார். நான் கொல்லைப்புறமாக நுழைந்தேன்'' எனவும் பகவான் கூறியுள்ளார்.

"பூமியின் சரித்திரம் சூட்சும உலகில் ஓரிடத்தில் உள்ளது'' என்று அன்னை கூறுகிறார். இதுவரை யோகத்தை மோட்சத்திற்காகச் செய்தனர். எனினும் சிருஷ்டியின் சூட்சுமங்கள், இரகஸ்யங்களை யோகிகள் அறிவார்கள். அப்படி யோகிகள் இதுவரை அறியாத சூட்சுமங்களே இல்லை எனலாம். கல்லூரியில் படிக்க மாணவன் சென்னை செல்கிறான். அவன் வேலை படிப்பு, குறிக்கோள் பட்டம். ஆனால் சென்னையிலுள்ள ஏராளமான செய்திகள் அவன் காதில் விழுகின்றன. பெரிய ஆபீசர்கள், பணக்காரர்கள், சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகள், நகரத்தின் முக்கிய செய்திகள், இரகஸ்யங்கள், மூலைமுடுக்குகள் ஆகியவற்றை மாணவர்கள் அறிவதுண்டு. சர்க்கார் நகரத்தைப்பற்றிய monograph ஆய்வு ஒன்றை எழுதமுயன்று அதனுள் அத்தனை விஷயங்களையும் சேகரித்தால், 5,6 வருஷம் படிக்கப்போன மாணவர்கள் காதில் விழாத செய்திகள் அதனுள் எத்தனை இருக்கும்?

ஸ்ரீ அரவிந்தர் வாழ்வனைத்தும் யோகம் என்பதால், வாழ்வு, யோகம், சிருஷ்டி ஆகியவற்றில் எல்லா விவரங்களையும் சட்டப்படி அறிய முயன்றார். அவற்றை அறியாமல் பூரண யோகம் பூர்த்தியாகாது. அப்படி அவரறிந்த புதுமைகளில் எதுவும் முன்னோர் அறியாததில்லை. அறிவது வேறு. அவற்றைப் பெறுவது வேறு.

பிறர் மனத்து எண்ணங்களை அறியமுடியும் என்று தெரிவதால் அதை அறியமுடியாதன்றோ? ஜீவன் மலர்ந்தால், அதாவது ஆன்மா மனத்திலுதித்தால், உலகம் தன்னை யோகிக்கு அறிவிக்கும். அப்படி பிறப்பதே மேதா விலாசம் genius. ஐன்ஸ்டீனுக்கு E=Mc2 என்ற சூத்திரம் தெரிந்தது அதுபோன்ற முறையால்தான்.

விவேகானந்தர் ஒரு புத்தகத்தை எடுத்து முதல் வரியைப் படித்தால் அதன் எல்லா பக்கங்களிலுமுள்ள எல்லா விஷயங்களும் க்ஷணத்தில் அவர் மனதில் நுழையும். ஸ்ரீ அரவிந்தருக்கு அது போல் அவர் படித்த புத்தகங்கள் வரி, வரியாய், பக்கம், பக்கமாய் மனதில் பதிந்ததுண்டு. சரித்திரப் புத்தகங்களைப் படிக்கும்பொழுது அன்னையின் கண்முன் அந்நிகழ்ச்சிகள் பவனி வரும். அது அன்னை பெற்ற ஆன்மீகப்பேறு.

  • நாடி ஜோஸ்யம் அது போல் எழுதப்பட்டதாகும்.
  • ஆபத்து நேரத்தில் அபயக்குரல் அதுபோல் பிறர் காதில் விழும்.
  • பூர்வஜென்ம ஞானம் புலப்படும் முறைகளைச் சேர்ந்தது இத்திறன்.
  • அன்பர் கண்முன் வெளியூரிலுள்ளவர் செய்வது "தெரிவதுண்டு''.

********



book | by Dr. Radut