Skip to Content

லைப் டிவைன் கருத்து

P.81. The force is anterior, not the physical instrument

 

சக்தி முந்தையது, கருவி பிந்தையது

தலையிருக்க வால் ஆடலாமா என்று நாம் அடிக்கடி கேட்கிறோம். உலகத்தின் அமைப்பு வால் ஆடுவதாக அமைந்துள்ளது. அதைச் சாதாரண மனிதன் செய்தால் உலகம் முன்னுக்கு வரமுடியாது, ஆனால் கெட்டுப்போகாது. தலைவர்களே செய்தால் உலகம் பின்னுக்குப் போகும். இராமனை நம்பிய தேரைக்குப் போக்கிடமில்லையன்றோ?

எது முதல்? கோழியா? முட்டையா? என்ற கேள்வியை மனிதன் கேட்டுக்கொண்டேயிருக்கிறான். பதில் தெரியவில்லை. அதனால் கேட்பது நிற்கவில்லை. பணம் முதலில் வந்ததா, மனிதன் முதலில் வந்தானா என எவரும் கேட்பதில்லை. கேட்டால், பதில் எளிதில் வரும். ஆனால், நடைமுறையில்

மனிதனைவிட பணமே முக்கியம் என்று நாம் நினைக்கிறோம்.

பணத்தைப் பேர் அளவில் சம்பாதித்தவர்கள் பணத்தை மிக முக்கியமாகக் கருதுகிறார்கள். ஆனால் அவர்கள் பணத்தைச் சம்பாதித்தபொழுது, பல இக்கட்டான கட்டங்களில் இந்தக் கேள்வி எழுந்ததுண்டு. மனிதனை முக்கியமாகக் கருதியவர்கள் மட்டுமே ஜெயித்தனர் என்பதும் உண்மை. வாழ்க்கை ஆரம்பத்தில் நண்பர்கள், குடும்பம், கூட்டாளிக்குத் துரோகம் செய்தவர்களில் 10இல் 9 பேர் விருத்திக்கு வருவதில்லை. பணத்தைவிட குடும்பம், கூட்டாளி முக்கியம் என நினைப்பவர்கட்குப் பணம் சம்பாதிக்கும் திறமையுண்டு. பணமே முக்கியம் எனக் கருதியவர்கள் அப்படிச் சம்பாதிப்பதில்லை. பணம் கருவி, விஸ்வாசம் சக்தியாகும்.

உலகம் சக்தியால் இயங்குகிறது. சக்தி தனக்குரிய கருவிகளைத் தயார் செய்து கொள்கிறது என்பது ஆன்மீகம். விஞ்ஞானி தலைகீழாகப் பேசுகிறான். கருவியியங்குவதால் சக்தி உற்பத்தியாகிறது என்பது விஞ்ஞானியின் வாதம். மின்சாரம் உள்ளே வருவதால் மோட்டார் இயங்குகிறது. மோட்டார் இயங்குவதால் மின்சாரம் உற்பத்தியாகிறது என நாம் எப்படிக் கூற முடியும் என ஸ்ரீஅரவிந்தர் கேட்கிறார். இந்த விஷயத்தில் விஞ்ஞானி மாறினால், விஞ்ஞானமும், ஆன்மீகமும் இணையும் வாய்ப்புண்டு.

படிப்பு முடிந்ததன் அடையாளமாக டிகிரி வருகிறது. டிகிரியைக் கையில் கொடுத்தால் படிப்பு வாராது என்ற சிறு விஷயத்தை அன்பர்கள் ஏற்றுக்கொண்டால், அதன்படி நடக்க முற்பட்டால் அருள் அபரிமிதமாகச் செயல்படும்.

அருள் அதிகமாகச் செயல்பட இம்மனமாற்றம் தேவை. உதாரணமாக நாம் வேலை செய்யும் ஆபீஸ் நமக்கு எல்லா வசதிகளையும் செய்யக் கடமைப்பட்டுள்ளது என நினைப்பவருண்டு. அவர் இதை ஏற்றால் ஆபீசுக்காக நாமிருக்கிறோம். நமக்காக ஆபீசில்லை என்று உணர்ந்து, தம் செயல்களை அதற்கேற்ப மாற்றிக்

கொண்டால், 30ஆம் நாள் அவர் வருமானம் இருமடங்காகும். இதேபோல் மனம் மாற வேண்டிய இடங்கள் ஏராளமானாலும், இந்த ஒரு மாற்றத்திற்கு இப்பெரும் பலனுண்டு.

கணவன், மனைவி இதே போன்ற மனமாற்றத்தை ஏற்றால் நரகமாக இன்றுள்ள வீடுகள் சுவர்க்கமாக மாறும். நாம் ஏற்க வேண்டியது அன்னையை. அவர் ஏற்படுத்திய ஸ்தாபனத்தை நாம் அன்னையாகக் கருதுவது தவறாகும். அன்னை வேறு, ஸ்தாபனம் வேறு. அன்னையை மட்டும் ஏற்றால் அருள் செயல்படும். ஸ்தாபனம் வேறு, அதன் போக்கு வேறு. நமக்கு அது உதவாது. இந்த வித்தியாசத்தை நாமறிதல் அவசியம்.

**********



book | by Dr. Radut