Skip to Content

யோக வாழ்க்கை விளக்கம் IV

கர்மயோகி

 

யோகியாவதும், கிருகஸ்தனாவதும் பலராலும் முடியக் கூடியதாகும்.குடும்ப வாழ்விலிருந்து கொண்டு, யோகம் செய்வது சிரமம்.யோகி ஞானத்தை மனத்தின் மூலம் தேடுகிறான்.அல்லது இதயத்தின் மூலம் பக்தியைத் தேடுகிறான்.குடும்பஸ்தன் ஆசையின் பிடியில் வாழ்கிறான்.இவற்றைச் சேர்ப்பதற்கு வாழ்வு மையம் மனத்தையும், பிராணனையும் விட்டகன்று சைத்திய புருஷனை வந்தடைய வேண்டும்.

யோகத்தையும், வாழ்வையும், பூரணயோகம் சைத்திய புருஷனில் இணைக்கிறது.

சைத்திய புருஷன் வெளிவருதல் என்பதை நாம் ஏதாவது ஒரு வகையில் உணர முடியுமா?இறைவன் என்பதைத் தலைவன் என்று உணருகிறோம்.அன்றாட வாழ்வில் கட்டுப்பாடு, விரதம் என்பதுண்டு. சமையல்காரன் சமையல் செய்யும்பொழுது சாப்பிடுவது முறையன்று. தின்பண்டம் செய்தால் வாயைக் கட்ட முடியாமல் சாப்பிடுவதுண்டு. நல்ல சமையல்காரன் அதையும் செய்வதில்லை.வீட்டுப்பெண்கள் பக்ஷணம் செய்யும்பொழுது சாப்பிடமாட்டார்கள்.இது ஒரு கட்டுப்பாடு. பயந்து கட்டுப்படுவதைவிட, உணர்ந்த தன்னடக்கம் நாமறிந்ததே. சைத்திய புருஷன் வெளிவருதல் என்பது சுதந்திரம் உள்ளபொழுது, நாமே முன்வந்து கட்டுப்பாட்டை மேற்கொள்வதுபோலாகும்.

அம்மனநிலையுடையவர் குடும்பத்திலிருந்தாலும் யோகத்தை மேற்கொள்ளலாம்.

******

 ஸ்ரீ அரவிந்தர் நெப்போலியனாக இருந்தார்.அன்னை எலிசபெத் மகாராணியாக இருந்தார் என்பதை அன்னை விவரிக்கின்றார்.அவர்கள் தாங்கி வரும் சக்தி நெப்போலியனில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கிருந்தது, வாழ்நாள் முழுவதும் அன்று என்கிறார் அன்னை. காதரீன், லூயி, எலிசபெத் இவர்களில் ஒரு குறுகிய காலமே அன்னை சக்தியிருந்தது.சக்தி தன் காரியத்திற்கு உரியவரைத் தேர்ந்தெடுத்து அவர் மூலம் வந்த வேலையைப் பூர்த்தி செய்து விலகுகிறது.அந்தச் சக்தியுள்ள காலம் அவர்கள் வாழ்வில் பொற்காலமாகும். கருவியின் வாழ்வில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்படுவதை சமூகக் கண்ணோட்டத்தினாலோ, மனத்தின் பார்வையாலோ நாம் கணிக்க முடியாது. பொதுவாக அவற்றிற்கு எதிராகவும் இருக்கும்.பரிணாம வளர்ச்சிக்குதவும் காரியங்கள் அவை.(Eg. Louis of France played such a role in the life of Louis XIV

********* நம் ஜீவனின் பகுதிகள் வளரும்பொழுது அடியிலிருந்து நுனிவரை செல்கின்றன.ஒரு பகுதியின் வளர்ச்சி முடிந்தபிறகே அதைத் தாண்ட முடியும்.மனம், உடலின் உதவியால் வளர்ந்து, அது தீர்ந்த பின் உணர்வால் வளர்கிறது. ஒரு நிலை பூரணமாகாமல் அடுத்த நிலைக்குப் போக முடியாது.

 உடல், உணர்வு, மனம், ஆன்மா என்பவை ஒவ்வொன்றாய் வளர்கின்றன.5ஆம் வகுப்பு முடிந்தபின்னரே 6ஆம் வகுப்புக்குப் போவதுபோல் உடல் வளர்ச்சி முடிவடைந்தபின்தான் உணர்வு வளரும்.அது முடிந்தபின் மனம் வளரும்.நமக்கெல்லாம் ஆன்மீகம் தேவை.ஆனால் மனவளர்ச்சி முடியவில்லை என்பதால் ஆன்மீக வளர்ச்சி ஆரம்பிக்காது.

இப்பொழுது நமக்கு ஆன்மீகமேயில்லையா?என்று தோன்றும். 5ஆம் வகுப்பில் பூகோளம் 5 கண்டங்களைப் போதிக்கிறது.10வது வகுப்பில் விவரமாகப் படிக்கலாம் என்பதுபோல் நாம் பெறும் ஆன்மீக அனுபவங்களை outline போல அறிகிறோம்.

**********

ஆன்மா, உடல், உணர்வு, மனத்தின் உதவியால் வளர்ந்து அவை தீர்ந்தபின் சொந்தமாக வளர ஆரம்பிக்கின்றது.இதை பகவான் "ஆன்மா தன் பிரச்சினைகளை மறப்பது'' என வர்ணிக்கின்றார். மனத்தைக் கடந்தபொழுது ஆன்மா தன் பிரச்சினையை மறக்கின்றது.

ஆன்மா "தன் பிரச்சினைகளை மறப்பது' என்பதை பகவான் விசேஷமாக எழுதுகிறார்.அப்படி மறந்தவுடன் பிரச்சினைகள் மறைந்து விடுகின்றன எனவும் கூறுகிறார்.புதியதாக நாம் ஒன்றைப்பெற்றால் - உ-ம் வீடு கட்டினால் - அது மனதிலிருந்த படியிருக்கும்.நாளானால் அது மறந்து போகும்.முதல் தலைமுறையில் குழந்தைகள் படிக்கும்பொழுது வீட்டில் அனைவரும் பரீட்சை எழுதுவதுபோல் பரீட்சையில் அக்கறை கொள்வார்கள்.பரம்பரையாகப் படிப்புள்ள குடும்பத்தில் அந்த ஆரவாரமிருக்காது.

மனவளர்ச்சி முடியாவிட்டால் மனம் சுறுசுறுப்பாக இருக்கும். ஆன்ம வளர்ச்சி முடியாத நேரம் ஆன்மா தன் கடமைகளை நினைவு வைத்திருக்கும்.நினைவு இருப்பதால், பிரச்சினை தீராது.நினைவு போய்விட்டது, மறந்துவிட்டது என்றால், ஆன்ம வளர்ச்சி முடிந்துவிட்டது என்று பொருள்.முதிர்ச்சி ஏற்பட்டால் பிரச்சினை மறந்துவிடுகிறது. பிரச்சினையை மறப்பதால், அது தீர்கிறது.எனவே பிரச்சினை தீர இது ஓர் உபாயமாகப் பயன்படும்.

*********

ஒவ்வொரு பகுதியின் வளர்ச்சிக்கும் இரு பிரிவுகளுண்டு.ஒன்று ஜீவாத்மாவின் வளர்ச்சி. அடுத்தது பிரபஞ்சத்தைச் சேர்ந்தது. வளர்ச்சிக்கு இரு பகுதிகளுண்டு.தனித்தது, பொதுவானது என இரண்டு.

ஜீவன் 4 பகுதிகளாலானது.அதன் இரு பகுதிகளைப் பிரகிருதி, ஆன்மா (Nature, soul) என்கிறோம்.பிரகிருதி என்பதை இயற்கை, உலகம், பிரபஞ்சம் எனவும் குறிப்பிடுவோம்.உதாரணமாக மனம் என்பது ஒரு பகுதி.அதனுள் உள்ள ஆத்மா மனோமயப் புருஷன். பிரகிருதி, இயற்கை, உலகம் என்ற அதன் பகுதியை நாம் அறிவு, எண்ணம், மூளை என்கிறோம்.உணர்வு என்பது அடுத்த பகுதி. பிராணமயப் புருஷன் என்பது ஆத்மா, உணர்வு, நரம்பு என்பவை பிரகிருதியாகும்.உடலில் உள்ள ஆத்மா அன்னமயப்புருஷன், கை, கால், தலை, உடம்பு, வயிறு போன்றவை இயற்கைக்குரிய பகுதிகளாகும்.

 ஜீவனின் பகுதி - ஆத்மாவுக்குரியவை - பிரகிருதி, இயற்கை எனப்படுபவை மனம் - மனோமயப் புருஷன் - அறிவு, மூளை

உணர்வு - பிராணமயப் புருஷன் - உணர்வு, நரம்பு

உடல் - அன்னமயப் புருஷன் - செயல், உடலின் பகுதிகள்.

 ஆன்மா (soul) வளரும்பொழுது (soul) பரமாத்மாவின் துணையை நாடுகிறது.இதிலும் இரு பகுதிகளுண்டு. (Immutable and involved souls) அழியாத ஆத்மா, வளரும் ஆத்மா என அவை இரண்டாக இருக்கின்றன. ஆத்மாவுக்கும் இரு பகுதிகள் உண்டு.அழியாத ஆன்மா, வளரும் ஆன்மா என இரண்டாகும்.

********

குழந்தை வளரும்பொழுது உடல், மனம் என இருபகுதிகள் உள்ளன.ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டதாகவே தெரியவில்லை. அதேபோல் ஆத்மாவில் இருபகுதிகள் உள்ளன.அவை.

வளராத ஆன்மா - ஜீவாத்மா

வளரும் ஆன்மா - சைத்தியப் புருஷன்

கிருஷ்ணாவதாரம் பகவத் கீதையைக் குருஷேத்திரத்தில் உலகுக்குக் கொடுத்தது.பிருந்தாவனத்தில் கோபிகைகளுடன் விளையாடியது.உலகப் பெருநிகழ்ச்சிகள் 4இல் இவையிரண்டு என்கிறார் பகவான்.சைத்தியப் புருஷன் பிறந்தது கிருஷ்ணாவதாரத்தில்தான்.வேதமும், உபநிஷதமும் ஜீவாத்மாவை முக்கியமாகக் கருதினர்.அவர்களும் சைத்தியப்புருஷனை கட்டைவிரல் பிரமாணம் என விவரிக்கின்றனர்.ஆனால் சைத்தியப் புருஷன் பக்தி மார்க்கத்திற்குரியது என்பதால் கீதை எழும்வரை பக்தி மார்க்கம் தலை எடுக்கவில்லை.மனோன்மணியம் எழுதிய சுந்தரம்பிள்ளை திருவாசகத்தைப்பற்றி எழுதும்பொழுது அது நெஞ்சை உருக்குவதுபோல் "கனம்', "ஜடை' என வேதம் ஓதுபவர் நெஞ்சை உருக்குவதில்லை என்கிறார்.திருவாசகத்திற்குருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் எனவும் கூறுவர்.பகவான் ஸ்ரீ அரவிந்தர் "ஆழ்வார்களும், நாயனார்களும் சைத்தியப் புருஷனை விழிப்பாகப் பெற்றவர்கள்'' என்கிறார்.சைத்தியப்புருஷன் தென்னகத்தில் விழிப்புற்றிருப்பதால்தான் பகவான் புதுவை நோக்கி வந்தாரா?

 "இப்பகுதியிலிருந்தவர் சத்தியஜீவியத்தைப் பெற்றிருந்ததாகத் தெரிகிறது'' என்றும் பகவான் ஸ்ரீ இராமலிங்க சுவாமியைக் குறிப்பிட்டுக் கூறுகிறார்.

படிப்பு அறிவை வளர்க்கிறது.ஆனால் திறமையைத் தருவதில்லை.அனுபவம் திறமையைத் தருகிறது.ஜீவாத்மா ஒளியையுடையது.சாட்சியாக இருப்பது, சைத்தியப் புருஷன் நம் உடலும், உணர்விலும், மனத்திலும் வெüப்பட்டு நம் எண்ணம், செயல்மூலமாக அனுபவம் பெற்று வளருகிறது.

எண்ணமும், உணர்வும், செயலும் பிரகிருதி.பிரகிருதியின் ஆன்மா சைத்தியப்புருஷன்.எண்ணம்மூலம் மனத்தின் அறிவு வளர்கிறது.எண்ணத்திலுள்ள ஆன்மா சைத்தியப் புருஷன்.மனம் எண்ணத்தின் மூலம் அறிவு பெறும்பொழுது, மனத்திலுள்ள சைத்தியப்புருஷன் எண்ணத்தின் மூலம் ஆன்மீக அனுபவம் பெற்று வளர்கிறது.இந்த வளர்ந்த ஆத்மா அடுத்த பிறவியில் வளர்ச்சியைத் தொடர்கிறது.நினைவு என்பது மனத்திற்கில்லை.அடுத்த பிறவியில் இப்பிறவியின் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வாரா, நினைவு சைத்தியப்புருஷனுக்குண்டு.நாம் உள்ளே சென்று சைத்தியப்புருஷனை எழுப்பினால், கடந்த பிறவிகளின் நினைவு நமக்கு வரும்.

நாம் நல்லவர் என்றொருவரைச் சொன்னால், அவருடைய சைத்தியப்புருஷன் விழிப்பாக இருக்கிறது எனப் பொருள்.கவி, கலைஞன், எழுத்தாளர் போன்றவர்கட்கு சைத்தியப் புருஷன் முனைப்பாக இருக்கும்.ஜீவாத்மா நம் சொத்து போன்றது.சைத்தியப் புருஷன் அதனினின்று வரும் வருமானம் போன்றது.

சைத்தியப் புருஷனை அனைவரும் அறிவார்கள் என்றாலும், அதற்கு பகவான் வரும்வரை எவரும் முக்கியத்துவம் தரவில்லை. முதல் முதலில் ஜீவாத்மாவையும், சைத்தியப்புருஷனையும் பிரித்து உலகிற்கு எடுத்துக் கூறியது ஸ்ரீ அரவிந்தராகும்.அவரும் Life Divine எழுதும் பொழுது psychic என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் soul என்றே குறிப்பிட்டார்.அன்னை வந்தபிறகு soul என்ற சொல் Life Divineஇல் psychic என மாற்றப்பட்டது.

ஜீவாத்மா விடுதலை பெற்றால் அது மோட்சத்தை நாடும். சைத்தியப்புருஷன் விழிப்புற்றால் அது பூலோகச் சொர்க்கத்தை விழையும்.

எல்லா அதிகாரங்களும் பெற்ற ஜனாதிபதி எந்த அதிகாரத்தையும் செலுத்தாமலிருக்கும் நிலையை ஜீவாத்மாவுக்கும், எல்லா அதிகாரங்களையும் ஜனாதிபதியிடமிருந்து பெற்றுச் செலுத்தும் பிரதம மந்திரியை சைத்தியப்புருஷனுக்கும் உதாரணமாகச் சொல்லலாம்.ஒரு வீட்டிலிருந்து கல்லூரிக்குப் போய் பட்டம் பெற்று, உத்தியோகம் பெற்று நகரத்திலேயே குடியிருந்து கிராமத்திலுள்ள வீட்டை மறந்தவரை மோட்சம் தேடும் ஜீவாத்மா எனவும், கல்லூரிப் பட்டம் பெற்றபின் கிராமத்திற்கு வந்து தான் பெற்ற அறிவை கிராமத்தாருக்குக் கொடுக்க முயன்று அவர் வாழ்வை உயர்த்த முயலும் இளைஞனை சைத்தியப்புருஷனுக்கும் உதாரணமாகச் சொல்லலாம்.

அன்பானவர், சுறுசுறுப்பானவர், வேலைகளைச் சிறப்பாகச் செய்பவர், அதிர்ந்து பேசமுடியாதவர், பிறர் மனம் புண்படப் பேசாதவர், நடக்காதவர், பிறர் குறைக்குத் தாம் பொறுப்பேற்கும் பாங்குடையவர், இசை, கலை, நாட்டியம், சிந்தனை, கவி, எழுத்து வல்லமை படைத்தவர், தன்னை நோக்கிப் பலரைக் கவரும் திறனுள்ளவர், பொய் சொல்லாதவர், சாந்தமானவர், பிறர் வாடும் பொழுது மனம் வாடுபவர், ஆடம்பரம் நாடாதவர், ஆர்ப்பாட்டம் செய்ய முடியாதவர், தனக்கு வரும் தீங்கை அருள் எனக் கொள்பவர், அசுத்தத்தைக் கண்டு மனம் புழுங்குபவர், நன்றியுள்ளவர், இயற்கை எழிலைக் காணுபவர் ஆகியோர் விழிப்பான சைத்தியப் புருஷனையுள்ளவராவார்.

இயற்கையாக சைத்தியப்புருஷனுக்கு நல்லது எது எனத் தெரியும். இயல்பாக சைத்தியப்புருஷன் அன்னையை நாடும் தன்மையுடையது. குழந்தைகள் அவரை விரும்புவர்.அவர் கண்களில் ஆன்ம விழிப்பு ஒளியாகத் தெரியும்.முகம் தேஜஸ் நிறைந்திருக்கும்.எதையும் சடங்காகச் செய்ய மனம் இசையாது.சைத்தியப்புருஷனுக்குத் தெளிவுண்டு.திறனில்லை.எதைச் செய்வது நல்லது எனச் சிந்திக்காமல் அறியும் திறன் அதற்குண்டு.மனத்தை அதன் வழி நடத்தும் அதிகாரம் சைத்தியப் புருஷன் பெறவில்லை.

**********

அகம் புறத்தை நிர்ணயிப்பதை ஆன்மா தன் பிரச்சினைகளை மறப்பதென்கிறோம்.ஆன்மா பிரச்சினையால் பீடிக்கப்பட்டது, புறம் அகத்தை ஆளும் நிலையாகும். புறம் அகத்தை நிர்ணயித்தால் ஆன்மாவுக்கு பிரச்சினையுண்டு.

ஆன்மீகத்தை நாடியவர்க்கு அகம், புறம் என்ற பாகுபாடு அவசியம்.அகமே அனைத்தும், புறம் அதற்குட்பட்டது என்பது சட்டம். ஆன்மா தன் பிரச்சினைகளை மறந்தால், அகம் எளிதாகப் புறத்தை நிர்ணயிக்கும் என்கிறோம்.நாம் பிரச்சினையால் பீடிக்கப்பட்டுள்ளோம் எனில் அகம் மறந்துவிட்டது, புறம் ஆட்சி செய்கிறது எனப் பொருள்.

முதலாளி மேனேஜரிடம் அதிகாரத்தைக் கொடுப்பது, மனைவி அதிகாரம் செய்யும் வீடு, தலைவர் தொண்டருக்குட்பட்ட கட்சி ஆகியவை புறம் ஆட்சி செய்யுமிடங்கள்.அகம் தெளிவாக இருந்தால் மேனேஜர் கொட்டம் நடக்காது.கம்பனி ஒழுங்காக நடக்கும்.கணவன் தெளிவுள்ளவனானால் வீடு அமைதியாக, அழகாக இருக்கும். கணவன் மனைவிக்குட்பட்டவனானால் மனைவி பலர் எதிரில் கணவனை அதிகாரம் செய்வாள்.பிரச்சினை மனைவியின் ஆர்ப்பாட்டம் போன்றது.தெளிவு கணவனுடைய தெளிவைப் போன்றது.கருத்தரங்குகளில் கலந்து கொள்பவரைப் பேசச் சொல்வதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற முறை (consensus) இன்று பரவி வருகிறது.50லட்சம் செலவு செய்து 5 நாள் 24 பேர் சேர்ந்து மாநாடு நடத்தியபின் என்ன முடிவு என்று அனைவரும் பிறரைக் கேட்கின்றனர்.24 பேரும் அறிவாளிகளானால் எதையாவது பேசலாம்.அந்தஸ்து மட்டும் உள்ளவர்க்கு அறிவு இருப்பதில்லை. மாநாடுகள் நடக்கும்.முடிவு வாராது.சொந்த எண்ணம் என்பது அகம்.அது உள்ளவர் பிறருக்குச் சொல்லமுடியும்.அனைவரும் கற்றுக்கொள்ளலாம்.புறம், அகத்தை ஆள, புறம் அகத்தின் அளவுக்கு முதலில் உயரவேண்டும்.அதுவரை அகமே ஆட்சி செய்யவேண்டும்.

*********

உலகத்தின் செயலை நிர்ணயிக்கும் அமைப்பு ஒன்றுண்டு.(physical organisation) மூன்று துப்பாக்கி வீரர்கள் போன்றவர்கள் (The Three Musketeers) இதற்கடுத்த நிலையிலுள்ள அமைப்பை (life knowledge, emotional organisation) அறிவார்கள்.

இலக்கிய பாத்திரங்களுக்கு வாழ்வை அறிய முடியும்.

பூமி சுழலுகிறது.பகல், இரவு அதனால் ஏற்படுகிறது.இந்த ஆண்டு எவ்வளவு மழை பெய்யும் என்பதை முன் கூட்டிச் சொல்லும் விஞ்ஞானமும், சாஸ்திரமும் உண்டு.வெப்பம், தட்பம், மழை, ஆகர்ஷணம், பகல், இரவு, சூரிய கிரகணம் போன்றவை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவை.பண்டைய வான சாத்திரமும், இன்றைய விஞ்ஞானமும் அவற்றை அறியும்.They constitute the laws of physical organisation.அவை ஜட உலகின் சட்டங்கள்.

வாழ்வு சூட்சும உலகைச் சேர்ந்தது, வாழ்வுக்குரிய நியதியை இந்தியர் கர்மம் எனவும், மேல்நாட்டார் (rewards & punishments) சொர்க்கம், நரகம் செல்லும் பழக்கங்களெனவும் பகுத்துள்ளனர். அவற்றுள் பெரும்பாலும் உண்மை.முழுவதும் உண்மையாகாது. இந்தச் சட்டங்களை வாழ்வு நியதிகள் (rules of life) எனலாம்.உலகப் பேரிலக்கியங்களும், அங்கு வரும் நாயகர் மூன்று துப்பாக்கி வீரர் போன்றவர்களும் அச்சட்டங்களை அறிவர்.அன்னை அவற்றைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.அன்னை நம் பிரச்சினைகளைப் பெரும்பாலும் அச்சட்டங்கள் மூலமாகவே தீர்க்கின்றார்.

நாமும் வாழ்வைக் கவனித்தால் அவற்றை அறியலாம்.அந்த ஞானம் அன்னையை மேலும் அறிய பெரிய அளவில் உதவும். இலக்கியத்தினின்றும், வாழ்விலிருந்தும் அச்சட்டங்கள் வெüப்படும் சில நிகழ்ச்சிகளைக் காண்போம்.அதன் சட்டங்கள்:

 1. ஒருவர் பயன்படுத்திய பொருளுக்கு அவர் இராசியிருக்கும்.
 2. மகான்கள் பிறந்த இடத்திற்கு புண்ணியம் உண்டு.
 3. நல்லது செய்தால் நல்லது விளையும் என்ற பொதுக் கருத்தை பகவான் மாற்றி நல்லதிலிருந்து நல்லதோ, கெட்டதோ எழும் என்கிறார்.
 4. பாரபட்சமாக ஒருவர் உரிமையை அடுத்தவருக்குக் கொடுத்தால், பலன் பெற்றவரிடம் போவதற்கு பதிலாக, உரிமையுள்ளவருக்குப் போகும்.
 5. வாழ்வு பலன் தரும்பொழுது நாம் செய்த செயலைப் புறக்கணித்து நம் மனநிலைக்குரிய பலனைத் தரும்.
 6. தான் ஆழ்ந்து விரும்பியதைப் பெறும் திறன் மனிதனுக்குண்டு.
 7. ஆழ்ந்த ஆசைகள் என்றாவது ஒரு நாள் தானே பூர்த்தியாகும்.
 8. நமது பொறாமையால் நமக்கு வர வேண்டியவை நாம் பொறாமைப்பட்டவர்க்குப் போய்ச் சேரும்.
 9. வலிமையுள்ளவனுடைய குறைக்கும், தவற்றுக்கும், தண்டனையில்லை.
 10. எளியவனுடைய நல்ல செயலுக்குப் பரிசு அவனுக்கில்லை.
 11. மனம் பலனை எதிர்பார்த்தால் வாராது.அல்லது தள்üப்போகும்.
 12. இச்சையற்றவர்க்குச் சித்திக்கும்.
 13. அநியாயத்தைத் தொடர்ந்து அனுபவித்தவனுக்கு முடிவில் நியாயம் உண்டு.
 14. மனம் உணர்வை அளவு மீறிக் கட்டுப்படுத்தினால் மரணம் விபத்து மூலம் வரும். 
 1. ஒருவர் செய்த புண்ணியத்தால் அவர் அடுத்தவருக்கு மோட்சம் தரமுடியும்.
 2. ரமணமகரிஷி பழனிசாமிக்கும், தாயாருக்கும் மோட்சம் அளித்தார்.
 3. இறைவனை பூஜிப்பதைவிட எதிர்த்தால் மோட்சம் விரைவில் கிடைக்கும்.இரண்யனும், இராவணனும் இதுபோல் மோட்சமடைந்தார்கள்.
 4. அறியாமல் செய்த பாவமும் அதன் பலனைத் தசரதனுக்கு புத்ர சோகம் தந்ததுபோல் தரும்.
 5. ஏகலைவன்போல் குருவின் வித்தையை அவர் ஆன்மாவுடன் தொடர்பு கொண்டு அறியலாம்.
 6. உலகில் ஓரிடத்தில் ஒரு ஞானம் எழுந்தால், அதுதானே பரவும் தன்மையுடையது.

அன்பர்கள் அன்னை எழுதியவற்றை ஊன்றிப் படித்தும், வாழ்வை கூர்ந்து பார்த்தும் இதுபோன்ற எல்லாச் சட்டங்களையும் அறியலாம்.

**********

அடுத்த உணர்வு நிலையை அறிபவர்களுக்கு வாழ்வு எப்பொழுதும் முழுவதுமாக ஒத்துழைத்து வெற்றியை மட்டும் தரும். உணர்ச்சியை அறிந்தால் காரியம் முடியும்.

நாம் அறிவால் செயல்படுகிறோம்.அடுத்தது emotions உணர்வு. அறிவு ஏற்றதை உணர்வும் ஏற்றால் செயல் தடையின்றிப் பூர்த்தியாகும்.ஆபீஸ் வேலையைக் கடனே எனச் செய்கிறோம். பலன் அரை குறையாக வருகிறது.அக்கரையாகச் செய்தால் அரைகுறைப் பலன்கள் முழுப் பலன்களாக மாறும்.வாழ்வில் நெடுநாளாகப் பூர்த்தியாகாத பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிகளில் இதுவும் ஒன்று.

 

 • 6,7 வருஷமாக பெண்ணுக்குத் தேடும் வரன் அமையவில்லை.
 • தொடர்ந்து 4 எலக்ஷனில் நிற்கிறேன்.வெற்றி கிடைக்கவில்லை.
 • பிரபலமான தலைவருக்குப் பொற்கிழி சேர்த்தோம்.வசூலாகவில்லை.
 • 80 ஏக்கர் நிலம்.எவ்வளவோ பாடுபட்டும் ஓராண்டும் அத்தனையும் பயிர் செய்ய முடியவில்லை.
 • 4 தலைமுறையாகப் பல பாக்டரிகளிருந்தும் செல்வம் சேரவில்லை.
 • வக்கீலாக 30 வருஷ சர்வீஸில் 10 கேசும் ஜெயிக்கவில்லை என்பவை நாம் அறிந்த பிரச்சினைகள்.

மனம் ஈடுபட்டு, அக்கரையும் ஆர்வமும் கொண்டு காரியம் செய்யாமல் கடனே என செயல்படுவதால் மேற்சொன்ன நிலை ஏற்படுகிறது.வக்கீல் கட்சிக்காரன் விஷயத்தில் தம் சுயநலத்தால் அக்கரையில்லாமலிருக்கிறார்.80 ஏக்கரும் பயிரிட்டால் 4 பேர் உடன் பிறந்தவரும் பங்கு கொள்வார் என்பதால் பயிரிடுபவர்க்கு ஆர்வமில்லாமலிருக்கும்.இவற்றை அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.பெண்ணுக்கு வரன் அமையவில்லை.பாக்டரி பலன் தரவில்லை.இவர்கள் தங்கள் சொந்த நலனுக்கு உழைப்பவர்தாமே எனக் கேட்கலாம்.

பெண்ணுக்கு வரன் தேடும்பொழுது, தேடுவதை முக்கியமாகக் கருதி உழைத்தால், உழைப்பு பல சமயங்களில் பலன் தரும், சில சமயங்களில் தாராது.தாராத சமயம் மனத்தைச் சோதனை செய்யத் தோன்றாது.மனம் பெண் திருமணத்தை நாடுவது உண்மை. ஓடியாடித் தேடுவதும் உண்மை.ஆனால் பலனில்லை எனில் மேற்சொன்ன சட்டம் பலன் தரும்.அடுத்த உணர்வு நிலை என்பது இங்கு என்ன?பெண்ணுக்கு வயதாகிறது.அவள் திருமணம் தடைப் படுவதால் அவள் மனம் எப்படி வேதனைப்படும் என்று கருதினீர்களா? என்றால், இல்லை எனப் பதில் வரும்.6,7 வருஷமாகத் தேடுவது உண்மைதான்.ஆனால் மகளுக்குத் திருமணமாகவில்லையே என மனம் புழுங்கியதுண்டா?எனில் நான்தான் தேடிக்கொண்டிருக்கிறேனே எனப் பதில் வரும்.அந்நிலையில் உணர்வு குறைவு என்று கண்டு, அதைப் பூர்த்தி செய்தால் - ஆழ்ந்துணர்ந்தால் - அடுத்த நாள் வரன் அமையும்.அதுபோன்ற உணர்வில்லாதவர் அன்னையை அழைத்தால், அன்னை நம் அம்சங்கள் அத்தனையையும் தீவிரமாக்கும்பொழுது, உணர்வும் ஆழ்ந்து சென்று அவ்வுணர்வு நிலையை நிரப்புகிறது.அது பலன் தருகிறது.

பாக்டரியில் பலன் வரவில்லை என்றால் "இவர் உழைப்பதில் குறையில்லை.ஆனால் மனம் ஈடுபட்டு உழைப்பதில்லை'' என்பதை இவர் சிப்பந்திகள் அறிவர்.

தம் உளநிலையை உணர்ந்து மாறினால் பலன் உண்டு. அன்னையை விவரம் தெரியாமல் இதுபோன்றவர் நாடினாலும், பாக்டரிக்காகப் பிரார்த்தனை செய்யாவிட்டாலும், தானே பாக்டரி அன்னை ஜீவியத்தால் நிரப்பப்பட்டு, மனம் அடுத்த நிலை உணர்வால் நிரம்பும்.பலன் தானே எழும்.

*********

பிறப்பில் தாயை விட்டுப் பிரிக்கும் இனம் போலவோ, செடியைப் போலவோ மனிதன் வளருவதில்லை. உணர்வால் குடும்பமும், வாழ்வில் சமூகமும் அதன் ஸ்தாபனங்களும், மனிதனுக்கு உயிரையும், உதவியையும் அளிக்கின்றன. ஏதோ ஒரு சமயம் ஒரு சமூகத்தினருக்கு அல்லது ஓர் ஊரிலிருப்பவருக்கு உலகிலில்லாத ஆதரவு வரும்.தனி மனிதரோ, ஸ்தாபனமோ முன் வந்து உதவுவதுண்டு. தம்மை நாடி வருபவர்க்கு அன்னை இந்த விசேஷ ஸ்தாபனங்கள்போல் உதவுகிறார். தாமே அவர்களுடைய இஷ்ட தேவதையாகி அன்பையும், ஆதரவையும் வழங்குகிறார்.

 

உலகிலுள்ள எல்லா அமைப்புகள் போலவும் அன்னை நம் வாழ்வில் செயல்படுகிறார்.

********

மனிதன் தனியாய், தானே வளருவதில்லை.வளரமுடியாது. குடும்பம் அவனுக்கு எல்லாம்.குடும்பத்திற்கு சமூகமே எல்லாம். சமூகத்தை விட்டு குடும்பம் விலக முடியாது.தனிமனிதன் குடும்பமில்லாமல் மொட்டை மரமாகிவிடுவான்.

ஏதோ ஒரு சமயம் ஓர் ஊருக்கு பேர் உதவி வருவதுண்டு. அது வந்தால் அவ்வூர் பெரிய அளவில் முன்னேறும்.இதை எதிர்பார்க்க முடியாது.அனைவருக்கும் கிடைக்காது.

மகாராஷ்ட்ராவில் ஓர் ஊருக்கு இதுபோல் ஏரிக்கரை வந்தது. ஆனால் நீர் மட்டம் தரைக்கடியில் உயர்ந்தது.போர் கிணறுகள் வந்தன.வளம் செழித்தது.பாங்க் கிராமங்களைச் சுவீகாரம் எடுத்துக் கொள்வதுண்டு.பொதுவாக இதைப்போல் ஊருக்கு அதிர்ஷ்டம் என்று வந்தால் அது பள்ளிக்கூடமாக இருக்கும்.

பள்ளிக்கூடம், போர்க்கிணறு, ஏரிக்கரை, கோவாப்பரேட்டிவ் சொஸைட்டி, ரோடு, சர்க்கார் திட்டம், T.V. centre, போன் வசதி, கடன் உதவி, பாங்க் என எந்தக் கிராமத்திற்கும் எல்லா உதவிகளும் வருவதில்லை.அன்னையை அறிந்த மனம், அவர் அவதார அம்சம் என்ன என்று புரிந்து கொண்டு தம் அறிவாலும், உணர்வாலும், செயலாலும், குடும்பத்தாலும், தொழிலாலும், நல்ல குணத்தாலும், முயற்சியாலும், கட்டுப்பாட்டாலும் அன்னையிடமிருந்து பெறக்கூடியவை எவை என அறிந்து பெற முயன்றால், அவருக்கு அத்தனையும் கிடைக்கும்.அன்பர்கள் வாழ்வில் அனைவருக்கும் ஒன்றிரண்டு அம்சங்கள் தவறாது கிடைத்துள்ளன.சிலருக்குப் பலவும் கிடைத்துள்ளன.அத்தனையும் பெற்றவர் மிகச் சொல்பம்.சிறப்பான ஒருவர் வாழ்வில் தொடர்ந்து நடந்தவற்றைக் குறிப்பிடுகிறேன்.

 

 • நிலையற்ற வருமானம் மாறி நிரந்தர வருமானம் வந்து பெருஞ் செல்வர் என அச்சிற்றூர் கருதும்படி மாறியது.
 • ஆண்டுக்கு ஒரு பஸ் ரூட் வாங்கினர்.
 • ஒதுக்கப்பட்ட குடும்பம் மரியாதை பெற்றது.
 • பிளாக் சேர்மன் பதவி வந்தது.
 • MLA பதவி வந்தது.
 • ஒரு பாக்டரி வாங்கினர்.
 • மந்திரி நண்பரானார்.முதல்வர் வேண்டியவரானார்.
 • பெருந்தொழில் அமைந்தது.
 • விலகி ஒதுங்கியவர், நெருங்கிவந்து உதவிகேட்டுப் பெற்றனர்.
 • பிள்ளைகள் வெளிநாட்டுப் படிப்புக்குப் போனார்கள்
 • பெரிய இடத்துச் சம்பந்தம் வந்தது.
 • பெருஞ் செல்வம் உண்மையிலேயே தேடி வந்தது.

நம்மையும், நம் குணங்களையும், திறமைகளையும், சந்தர்ப்பங்களையும், குறைகளையும், போக்கையும் உணருவது எளிதன்று.அன்னை எவற்றையெல்லாம் கொடுப்பார், எப்படிக் கொடுப்பார், எப்பொழுது கொடுப்பார், ஏன் கொடுப்பார், எப்பொழுது கொடுக்கமாட்டார் என்றறிவது எளிதன்று.இவையிரண்டையும் அறிந்து அவற்றைப் பெற்றுப் பயனடைய முயல்பவர் தவறாது முழுப் பலனைடைவர்.

*********

ஜீவிய மணி

மனிதனுக்கு இறைவன் பிடிபடமாட்டான்.

இறைவனுக்கு மனிதன் உட்படுவான்.book | by Dr. Radut